Monday 29 May 2023

எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்”

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில்

எடுக்கப்பட்ட 84-85 வது வார வகுப்பு – 21-05-2023 & 28-05-2023  )

 எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்என்கிற இந்த கேள்வி-பதில் வடிவிலான சிறுநூல், மார்க்சுடன் சேர்ந்து எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற ஆவணத்துக்கு முன்பு எழுதியதாகும்.

 "நீதி கோருவோர் சங்கம்" என்ற பெயரில் இயங்கிய இயக்கம் பின்பு "கம்யூனிஸ்ட் கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தக் கழகத்தின் சார்பாக ஒரு ஆவணத்தைத் தயாரிக்கும்படி மார்க்சையும் எங்கெல்சையும் கேட்டுக் கொண்டது. பாரிஸ் கிளையின் நெறிமுறைப்படி எங்கெல்ஸ் கேள்வி-பதில் வடிவில் "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் ஒரு வரைவு வேலைத்திட்டத்தை தயாரித்தார்.

 வேலைத்திட்டத்தை கேள்வி-பதில் வடிவில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதை எங்கெல்ஸ் உணர்ந்தார். கேள்வி-பதில் வடிவத்தில் எழுதியதை கைவிட்டு அறிக்கை போல் எழுதுவதே சரியாக இருக்கும் என்று 1847ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-24 தேதியில் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

 

"நேரில் பேசுவது போல எழுதப்பட்டுள்ளது இது, மிகவும் மோசமாகவும் அவசரமாக சரிபார்க்கப்பட்டதாகவும் இருக்கிறது. கம்யூனிசம் என்பது என்ன என்ற பிரச்சினையிலிருந்து தொடங்கிய உடனே, பாட்டாளி வர்க்கப் பிரச்சினைக்கு வந்துவிடுகிறேன், இவ்வர்க்கம் தோன்றிய வரலாறு, பிந்திய உழைப்பாளர்களுக்கும் இவ்வர்க்கத்தினருக்கும் இடையில் உள்ள வேறுபாடு, முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வாக்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு வளர்ந்து வருவது, நெருக்கடிகள், முடிவுகள் என்று தொடர்கிறேன், இடையில் பல்வேறு விதமான இரண்டாம் பட்சமான விசயங்கள் வருகின்றன."

 வேலைத்திட்டத்துக்கு அறிக்கை வடிவம் பொருத்தமாக இருக்கும் என்றாலும், இந்தக் கேள்வி-பதில் வடிவமானது, நமக்கு சுருக்கமான வடிவத்தில் பலவற்றை எளிதாகப் புரியவைக்கிறது. "கம்யூனிசத்தின் கோட்பாடுகளில்" காணப்படும் பல கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அறிக்கையில் வெளிப்படுத்தாத சில கருத்துக்களை "கம்யூனிஸ்ட் கோட்பாடுகள்" பேசுகின்றன. குறிப்பாக தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு சிறப்பாக இதில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

       இந்தக் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் பற்றிய இரண்டு வரைவை (Draft) எங்கெல்ஸ் எழுதியதாகத் தெரிகிறது. "ஒரு கம்யூனிஸ்டின் நம்பிக்கை ஒப்புதல் வாக்குமூலத்தின் வரைவு" (Draft of a Communist Confession of Faith) இதுதான் முதன்முறையாக 1847ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுதப்பட்டது. இதை திருத்தி அக்டோபர்-நவம்பவர் மாதங்களில் "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" (Principles of Communism) என்ற பெயரில் எழுதப்பட்டது.

 இன்று நாம் இந்தத் திருத்தியப் பகுதியையே பார்க்கப்போகிறோம்.

 "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்கிற கேள்வி-பதில் வடிவில் அமைந்துள்ள இந்த சிறு நூலானது 25 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது. கேள்வி-பதில் வடிவம் பிரச்சினைக்கு உரியதாக இருந்தாலும் இதில் பேசப்பட்ட விஷயங்கள் வேறு இடங்களில் இதுபோல ஒரே இடத்தில் தொகுப்பாகப் பேசப்படவில்லை. அதனால் இதில் கூறப்பட்ட கருத்துக்களை நாம் கவனமாகப் படிக்க வேண்டும். “கம்யூனிஸ்ட் கடசி அறிக்கை”யை எப்படி கவனமாகப் படிக்கிறோமோ அதைப் போலவே இதையும் படித்தறிய வேண்டும்.

 இந்த "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்கிற சிறுநூல் தோழர் கதிரவன் அவர்களால் ஏற்கெனவே நமது “செங்கொடி மையம்” வகுப்பில் எடுக்கப்பட்டதுதான். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை இந்த நூலைப் பார்ப்போம்.

       முதல் கேள்விக்கான பதில் சுருக்கமாகவும், சூத்திரம் போன்றும் கூறப்பட்டுள்ளது.

 முதல் கேள்வி 1) கம்யூனிசம் என்றால் என்ன?

 -இதற்கான பதிலாக எங்கெல்ஸ் கூறுகிறார், “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிலைமைகளைப் பற்றிய போதனை தான் கம்யூனிசம்.”

       சுரண்டலுக்கு ஆளான பாட்டாளி வர்க்கம், இந்த மோசமான நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், தமது விடுதலைக்கான கோட்பாட்டை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

       கம்யூனிசத்தின் கோட்பாடானது, போதனையின் மூலம் அறிவதும் பிறருக்கு போதிப்பதும் ஆகும். கம்யூனிஸ்டுகள் நூல்களிலும் தோழர்களிடமும்தான் கம்யூனிசக் கல்வி பெற வேண்டும். பாட்டாளிகள் நூல்களின் மூலம் பெறலாம், ஆனால் அனைத்து தொழிலாளர்களும் நூலின் வழியே கம்யூனிசத்தை அறிவார்கள் என்று கூறிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களின் அனுபவங்களின் மூலம் கம்யூனிசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்கள் வேலை செய்கின்ற இடங்களில் ஏற்படுகிற பிரச்சினைகளின் அடிப்படையில் அவர்களுக்கு கம்யூனிசத்தைப் போதிக்க வேண்டும். பொதுவாக தொழிலாளர்களிடம் “நூல்களைப் படி, நூல்களைப் படி” என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அனுபவத்தின் மூலம் நாம் அவர்களுக்கு கற்பிக்கும் போது, அவர்களை நூல்களைத் தேட வைக்கும்.

       அடுத்த மூன்று கேள்விகள் மிகமிக முக்கியமானது ஆகும், 2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?, 3) பாட்டாளி என்பவர்கள் எப்போதுமே இருந்ததில்லையா?, 4) பாட்டாளி வர்க்கம் எப்படி உருவானது?

       இந்த மூன்று கேள்விகளுக்கான எங்கெல்சின் பதிலை பலமுறைப் படித்து நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளிக்கும் பாட்டாளிக்கும் (workers and Proletarians) இடையே மார்க்சியம் வேறுபாடு காண்கிறது. இந்த வேறுபாட்டின் அடிப்படையில்தான் கம்யூனிச போதனை அடங்கியிருக்கிறது. அதனால் இந்த வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

       தொழிலாளிக்கும் - பாட்டாளிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, நம் நாட்டில் உள்ள பல கம்யூனிஸ்டுகளுக்கும் பல தொழிலாளர்களுக்கும் அறியாமல்தான் இருக்கின்றனர். இந்த அறியாமை பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் மார்க்சியத் தத்துவத்தையோ, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையோ உள்ளதுஉள்ளபடி அறிந்து கொள்ள முடியாது.

 பல தத்துவங்களும் மதங்களும் ஒரே நேரத்தில் அனைவருக்கும் விடுதலை என்பதாகப் பேசுகிறது. ஆனால் மார்க்சியம் அவ்வாறு பேசவில்லை. வளர்ச்சி அடைந்த உற்பத்தி முறையோடு, நெருங்கிய தொடர்புடைய பாட்டாளிகள் தங்களை முதலில் விடுவித்துக் கொள்வர், விடுதலைப் பெற்ற நிலைமைகளை தக்க வைக்க வேண்டுமனால் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டிய சூழ்நிலையில், பாட்டாளிகள் அனைவரையும் படிப்படியாக விடுவிப்பர்.

 2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

 எந்த வர்க்கம் தமது வாழ்க்கைக்குத் தேவையானதை, மூலதனத்தின் லாபத்தில் இருந்து பெறாமல், தமது உழைப்பை விற்பதின் மூலம் மட்டுமே பெறுகின்றதோ அந்த வர்க்கம் தான் பாட்டாளி வர்க்கம்.

 இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. ஒரே சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது. இதனை வேறுவிதமாகவும் கூறலாம்.

 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய, தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் ஆலைத் தொழிலாளர்களையே மார்க்சியம் பாட்டாளி என்ற கூறுகிறது.

 3) அப்படி என்றால், பாட்டாளி என்பவர்கள் எப்போதுமே இருந்ததில்லையா?

 “இல்லை” என்று எங்கெல்ஸ் நேரடியாக இதற்கு பதிலளித்துள்ளார்.

 வர்க்க சமூகம் அனைத்திலும் தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் மேலே கூறப்பட்ட ஆலைத் தொழிலாளர்கள், வாழ்ந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் பழையத் தொழிலாளர்கள் வாழ்ந்திருக்கவில்லை.

இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற வணிகப் போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதே போல இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை.

 முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த போது பாட்டாளிகள் தோன்றினர். பணம் ஒரு வரலாற்று வளர்ச்சி அடைந்த நிலையில் மூலதனமாக மாறுகிறது, அதே நிலையில்தான் தொழிலாளி வர்க்கம் ஒரு வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கமாக மாறுகிறது.

 4) பாட்டாளி வர்க்கம் எப்படி உருவானது?

 நான்காவது கேள்வியில் எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி சற்று விரிவாகக் கூறியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சி ஏற்பட்ட போது பாட்டாளி வர்க்கம் தோன்றியது.

 நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி ஏற்பட்டது. விலை உயர்ந்த இந்த இயந்திரங்களை, மூலதனம் உள்ள முதலாளிகளால்தான் வாங்க முடியும். இந்த நவீன இயந்திரம் முந்தைய உற்பத்தி முறையை மாற்றியமைத்ததோடு பழைய உற்பத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் வெளியேற்றியது.

 முதலாளிகள் தொழிற்சாலைகளை தொடர்ந்து நிறுவியதால், அதனோடு போட்டி போட முடியாமல் சிறு முதலாளிகள் அதிகமான அளவுக்கு தூக்கி எறியப்பட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறு முதலாளிகள் ஒழிக்கப்பட்டனர்.

       பின்பு, சிறு உற்பத்தியாளர்கள் உடைமைகளை இழந்து, தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர்.

       தொழில் புரட்சியினால் ஏனைய வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக தன்னோடு இணைத்துக் கொண்டு, இறுதியில் இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின. ஒன்று பெருமுதலாளிகளின் வர்க்கம், மற்றொன்று பாட்டாளிகளின் வர்க்கம். நவீன உற்பத்தி முறையில் இந்த இரண்டு வர்க்கமே பிரதான வர்க்கமாக மாறியது.

 நீராவி எஞ்சின், நூற்பு எந்திரங்கள், விசைத்தறி ஆகியவற்றைப் பயன்படுத்துகிற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நுழைந்தது.

 5) முதலாளிகளுக்கு பாட்டாளிகளின் உழைப்பு விற்கப்படுவது, எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?

 முதலாளித்துவ உற்பத்தி முறையில், உழைப்பு என்பது மற்ற சரக்குகளைப் போலவே ஒரு சரக்காகும். மற்ற சரக்குகளின் விலையை நிரிணயிக்கும் அதே விதிகளின் அடிப்படையில்தான் உழைப்பின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

 இந்த நூலில் எங்கெல்ஸ் உழைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளார். மார்க்ஸ் தமது பொருளாதார ஆய்வின் முடிவில் இந்த உழைப்பு என்கிற பொதுவான சொல்லுக்கு பதிலாக உழைப்புச் சக்தி என்ற சரியானச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார். இதுவெறும் சொல் வேறுபாடுகிடையாது. உழைப்புச் சக்தி என்பது மார்க்சின் புதியக் கண்டுபிடிப்பாகும். இது பற்றி இங்கே விரிவாக பேசப்போவதில்லை, மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றி பேசுகிற இடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

 ஒரு சரக்கின் விலை எப்போதும், சராசரியாக அந்தச் சரக்கின் உற்பத்திச் செலவுகளுக்கு சமமாக இருக்கும். அதே போல உழைப்பின் விலை, இங்கே நாம் உழைப்புச் சக்தியின் விலை என்று மாற்றிக் கொள்வோம். உழைப்புச் சக்தியின் விலை, உழைப்புச் சக்திக்கு ஆகிற உற்பத்திச் செலவுக்குச் சமமானதே ஆகும்.

 தொழிலாளியை, வேலை செய்யத் தகுதி உள்ளவனாக ஆக்கவும், தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து கிடைப்பதற்கும் ஆகிற செலவுகள்தான் உழைப்புச் சக்தியின் விலையாகும். இப்படிக் கூறியவுடன் தொழிலாளி சிறப்பாக வாழ்வதற்குத் தேவையானது அனைத்தும் கிடைத்துவிடுகிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. தொழிலாளியின் குறைந்தபட்ச வாழ்வாரத்தையே கணக்கில் கொள்ளப்படுகிறது.

 தொழிலாளியின் வாழ்வாதாரத்துக்குத் தேவைப்படுகிற குறைந்தபட்ச உற்பத்திச் செலவைக் காட்டிலும், மிக அதிகமாகவோ அல்லது மிகமிகக் குறைவாகவோ தொழிலாளி பெறுவதில்லை. ஏன் என்றால், அதிகமாகக் கொடுக்க முதலாளி விரும்புவதில்லை, இதைவிட குறைவாகக் கொடுத்தால் தொழிலாளி அழிந்துவிடுவர். அதனால்தான் மிக அதிகமாகவோ அல்லது மிகமிகக் குறைவாகவோ தொழிலாளிக்கு கொடுப்பதில்லை.

 அடுத்து வருகிற ஐந்து கேள்விகள் என்னவென்றால், 6) தொழில்புரட்சிக்கு முன்பு எப்படிப்பட்ட தொழிலாளி வர்க்கங்கள் இருந்தன?, 7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?, 8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்? 9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்? 10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?

 இந்த ஐந்து கேள்விகளும் பாட்டாளி வர்க்கம் தோன்றுவதற்கு முன்பு உள்ள தொழிலாளர்களைப் பற்றியதாகும். முன்பு உள்ள தொழிலாளர்களுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இதில் பேசப்பட்டுள்ளன. இதனை நன்றாகப் புரிந்து கொண்டால், பாட்டாளி வர்க்கம் எப்படி மற்ற தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து வேறுபடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

 6) தொழில்புரட்சிக்கு முன்பு எப்படிப்பட்ட தொழிலாளி வர்க்கங்கள் இருந்தன?

       தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமூக வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.

 வர்க்க சமூகம் தோன்றி போது அடிமை உழைப்பாளர்கள் வந்தனர், அவர்களுக்கு அடுத்து நிலப்பிரபுத்து சமூகத்தில் பண்ணையடிமை உழைப்பாளர்கள் இருந்தனர். மத்தியக் காலத்திலும், தொழிற்புரட்சி ஏற்படும் காலம் வரையிலும் நகரங்களில் குட்டி முதலாளியிடம் கைவினைப் பணியாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளின் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தனர்.

       அடுத்து வருகிற கேள்விகளில் பாட்டாளிகள், அடிமைகளிடம் இருந்தும், பண்ணை அடிமைகளிடம் இருந்தும், கைவினைப் பணியாளர்களிடம் இருந்தும், பட்டறைத் தொழிலாளர்களிடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறார் என்பதை ஒவ்வொன்றாக எங்கெல்ஸ் விளக்குகிறர்.

 7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?

 அடிமையானவன் எஜமானனுக்கு முற்றிலும் விற்கப்பட்டவனாவான். அதாவது எஜமானனுக்கு முற்றிலும் அடிமையாக இருக்கிறான். அடிமையானவன் தன்மீதான சுதந்திரம் எதுவும் இல்லை. பாட்டாளி தன்னை நாள் கணக்கில் விற்கிறான். ஒவ்வொரு தனிப்பட்ட அடிமையானவன் ஒரே ஒர் எஜமானனின் சொத்தாவான். எஜமானனின் நலனை முன்வைத்து அடிமையின் வாழ்க்கை மோசமானதாக இருப்பினும், அது உறுதியாக கிடைக்கும் வகையில் இருந்தது. அதாவது எஜமானனுக்கு அடிமைத் தேவை, அதனால் அடிமை உயிரோடு இருக்கும் வகையில் அவர் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒவ்வொரு தனிப் பாட்டாளியும் ஒரு வகையில் முதலாளி வர்க்கம் முழுவதன் உடைமை ஆகிறார். பாட்டாளிகளின் உழைப்பு எந்த முதலாளிக்குத் தேவையோ அப்போது மட்டுமே விலைக்கு வாங்கப்படுகிறார். எனவே அந்தத் தனி பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை.

 அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திலும், அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே, தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

       பாட்டாளியானவன் தனிச் சொத்தை ஒழிக்காமல் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்கம் நடத்துகிற வர்க்கப் போராட்டமே சொத்துடையோடு நடத்துகிற இறுதி போராட்டமாகும். பாட்டாளியின் இறுதி வெற்றியோடு வர்க்க வேறுபாடு முடிவுக்கு வருகிறது.

  8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?

 பண்ணையடிமையானவன், உற்பத்தி சாதனமான ஒரு சிறு துண்டு நிலத்தை உடைமையாகக் கொண்டுள்ளான், அதைப் பயன்படுத்திக் கொள்கிறான். இதற்குப் பதிலாக தனது உழைப்பை வாரத்தில் சிலநாட்களுக்கு, பண்ணை எஜமானனுக்கு கூலி பெறாமல் உழைக்கிறான். அதாவது தன்னுடைய துண்டு நிலத்தில் வாரத்தில் முதல் மூன்று நாட்களும், எஜமானனுடைய நிலத்தல் அடுத்த மூன்று நாட்களுக்கும் வேலை செய்கிறான்.

 முதலாளிக்கு சொந்தமான கருவிகளைக் கொண்டு பாட்டாளி வேலை செய்கிறான். இதற்குப் பதிலாக உற்பத்தியில் ஒரு மிகச் சிறு பகுதியைப் பெறுகிறான்.

 பண்ணையடிமைக்கு வாழ்க்கை உத்திரவாதம் இருக்கிறது, பாட்டாளிக்கோ அது இல்லை.

 9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து (handicraftsmen) எந்த வகையில் வேறுபடுகிறார்?

 இந்த ஒன்பதாவது கேள்விக்கு திருத்தப்பட்ட வரைவில் பதில் எழுதாமல் எங்கெல்ஸ் இடம் விட்டிருந்தார், ஆனால் பழைய வரைவில் அதற்கான பதில் எழுதப்பட்டிருந்தது. அந்த பதிலை இங்கே பார்க்கலாம்.

 பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் 18ஆம் நூற்றாண்டு வரையில் இருந்தவன். பிற தொழிலாளர்களைச் சுரண்டி மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே இவனது குறிக்கோள். ஆனால், முதலாளித்துவ தொழில்போட்டி முழுமையாக செழுத்தோங்கிய உடன், பாட்டாளியாக்கப்படுகிறான். அதாவது முதலாளித்துவத்தில் நடைபெறுகிற தொழிற்போட்டியின் விளைவாக தன்னிலை இழந்து பாட்டாளியாகிறான். தனது பழைய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதின் மூலமே தன்னை விடுத்துக் கொள்ள முடியும்.

 10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து (manufacturing) எந்த வகையில் வேறுபடுகிறார்?

 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த பட்டறைத் தொழிலாளி தனது உற்பத்திக் கருவிகளையும், குடும்பத்து நூற்பு ராட்டினடத்தையும், ஓய்வு நேரத்தில் பயிர் செய்ய சிறுதுண்டு நிலத்தையும் வைத்துள்ளான்.

 பாட்டாளியிடம் இவைகள் எதுவும் இல்லை.

 முதலாளித்துவத்தின் பெரும் வளர்ச்சியின் விளைவாக, பட்டறைத் தொழிலாளி தனது சொத்துக்களை இழந்து, இதன் வழியாக பாட்டாளியாக்கப்படுகிறான்.

 11) தொழிற்புரட்சியாலும், முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்கிற வகையில் சமூகப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன?

 தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டினால் பொருட்களின் விலைகள் இடைவிடாமல் குறைந்தது. உடல் உழைப்பை ஆதாரமாகக் கொண்ட பட்டறைத் தொழிலின் பழைய முறை, உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழிக்கப்பட்டது.

 பழைய முறையில் இயங்கிய நாடுகள் இங்கிலாந்தின் குறைந்தவிலையிலான பொருட்களை வாங்கியதினால் அந்நாட்டு பட்டறைத் தொழில்கள் படிப்படியாக அழிந்தன. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இயந்திரம் ஒர் ஆண்டுக்குள்ளாக பல லட்சம் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்தது. அனைத்து உள்ளூர்ச் சந்தைகளையும் இணைத்து ஒரே உலகச் சந்தையாக மாறியது.

 தொழிற்புரட்சியினால், முதலாளிகள் வளர்வது போலவே பாட்டாளிகளும் வளருகிறார்கள். மூலதனத்தால் பாட்டாளிகளை மட்டுமே வேலை, வாங்க முடியும், பாட்டாளியை வேலைக்கு அமர்த்துவதின் மூலமே மூலதனத்தை பெருக்க முடியும். இதனால் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியானது மூலதனத்தின் வளர்ச்சி உடன் இணைந்திருக்கிறது.

 பெருந்திரளான உழைப்பாளர்கள் ஒரே இடத்தில் வேலை செய்வதனால், பாட்டாளிகள் தங்களது சொந்த பலத்தை உணரும்படி செய்கிறது. 

 முதலாளித்துவத்தில் புதியப்புதிய இயந்திரங்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்படுவதினால், தொழிலாளர்கள் வேலை இழக்கவும் குறைந்த கூலியில் வேலை செய்யவும் நேர்கிறது. இவ்வாறாக பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாக மாறுகிறது. பாட்டாளி வர்க்கத்திடம் அதிருப்தி பெருகிவருகிறது, அதிருப்தியானது பாட்டாளி வர்க்கத்தை சமூகப் புரட்சியை நோக்கி தள்ளப்படுகிறது.

       முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு சமூக புரட்சியை ஏற்படுத்துகிறது.

 12) தொழிற்புரட்சியின் இதர விளைவுகள் என்ன?

 பல எண்ணிக்கையிலான முதலாளிகள் தொழிற்துறையைப் பயன்படுத்தியதால், சரக்குகள் மிகையாக உற்பத்தி செய்யப்பட்டன. அனைத்துச் சரக்குகளையும் விற்பதற்கான சந்தையில்லாது போனது. அதனால் வணிக நெருக்கடி ஏற்பட்டது. மிகை உற்பத்தியினால் ஆலைகள் செயல்படாமல் போயின, தொடர்ந்து செயற்படாமையினால் பல ஆலைகள் மூடப்பட்டன. ஆலை முதலாளிகள் திவாலாயினர். இந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் தொழிலாளர்கள் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டனர்.

 நெருக்கடியில் தப்பிப்பிழைத்த தொழிற்சாலைகள் அடுத்த செழுமைக் காலத்து வளர்ச்சியை நோக்கி சென்றது, ஆனால் அது மீண்டும் மிகை உற்பத்தியினால் மற்றொரு வணிக நெருக்கடியில் சிக்கியது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே, ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நெருக்கடியால் உழைக்கும் மக்கள் மிகவும் துன்பதத்துக்கு ஆளாயினர், இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்பு முழுவதற்கும் மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பை பலவீனப்படுத்தியது.

 13) மீண்டும் மீண்டும் ஏற்படும் வணிக நெருக்கடிகளைத் தொடர்ந்து என்ன நிகழும்?

 பெருவீதத் தொழில், தனது தொடக்க காலத்தில் சுதந்திரப் போட்டையை உருவாக்கிய போதிலும், தற்போதைய நிலையில் சுதந்திரப் போட்டியைவிட அதிகமாக வளர்ந்துவிட்டது. போட்டியானது, தொழில் உற்பத்தியில் தனி நபர்கள் நடத்தி வரும் பெருவீதத் தொழிற்துறை விலங்கிடப்பட்டது. அந்த விலங்கை உடைத்தால் மட்டுமே பெருவீதத் தொழில் தொடர்ந்து நடத்த வழிகிடைக்கும்.

 ஆனால் வணிக நெருக்கடி ஏழாண்டுகளில் மீண்டும் ஏற்படுகிறது. இந்தக் குழப்பத்தின் ஊடேயே பெருவீதத் தொழில் நடைபோடுகிறது. ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் தொழிலாளர்களுக்கு பெரும் துயரத்தை தருவதோடு, முதலாளி வர்க்கத்தையும் நாசம் செய்கிறது. இந்த பிரச்சினையில் இருந்துவிடுபட பெருவீதத் தொழிலை கைவிட வேண்டும், ஆனால் இதை முதலாளித்துவ வர்க்கம் செய்யாது.

 இந்தப் பொருளாதார நெருக்கடி முழுமையான ஒரு புதிய சமூக அமைப்பின் அவசியத்தைக் கோருகிறது.

 அப்படிப்பட்ட முற்றிலும் புதிய சமூக அமைப்பில், ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு வளரும் தொழிற்சாலை அதிபர்கள் இருக்க முடியாது. இப்புதிய சமூக அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்களைப் போல் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமூகமே உற்பத்தியை முறைப்படுத்தும்.

 இந்த சமூகத்தை கம்யூனிச சமூகம் என்று இங்கே எங்கெல்ஸ் பெயரிட்டு குறிப்பிடவில்லை என்றாலும், நமக்குத் தெரிகிறது இப்படிப்பட்ட உற்பத்தி முறையானது கம்யூனிச சமூகத்துக்கே உரியது.

 14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?

 தனிநபர்களால் நடத்தப்படும் தொழில் தவிர்க்க முடியாத வகையில் தனியார் உடைமைக்கு இட்டு செல்லும். மேலும் தனிப்பட்ட தனிவுடைமையாளர்களால் நடத்தப்படும் தொழில்களில், போட்டி தவிர்க்க முடியாது. அதனால் தனி நபர்களின் கைகளில் இருந்து தொழில்துறை நிர்வாகத்தையும் உற்பத்தியின் அனைத்து பிரிவுகளையும் பறித்துக் கொள்ளப்படும். தனிநபர் உடைமை ஒழிக்கப்படும்.

 பொருளுற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளும், சமூக முழுவதின் சார்பாகவும், சமூகத் திட்டத்துக்கு ஏற்பவும், சமூகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நிர்வாகம் மாற்றப்படும்.

 தனிச் சொத்துடையின் ஒழிப்பும், பொதுவுடைமையின் தீர்வும் அவசியம் என்னும் போது, இது போன்ற தீர்வை முன்பே கண்டுபிடித்து செய்திருந்தால் சமூகத்தில் சமத்துவ நிலை எப்போதோ ஏற்பட்டிருக்கும் என்று சிலர் நினைக்கக்கூடும். இதற்குதான் அடுத்தக் கேள்வியை எழுப்பி பதிலையும் எங்கெல்ஸ் தந்துள்ளார்.

 15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருந்ததா?

 “இல்லை” என்கிறார் எங்கெல்ஸ்.

 சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்திச் சக்கிகள் வளருவதற்கு முன்பாக தனியார் சொத்துடைமை ஒழிப்பதென்பது சாத்தியம் இல்லை. சமூகம் வளருவதற்கும், மாறுவதற்கும் உற்பத்திச் சக்திகளே அடிப்படை.

 இன்றைய நிலையில் உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ளது அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மென்மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றனர்.

 முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது. இறுதியாக, விரிவானதும், வலிமை மிக்கதுமான இந்த வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ உற்பத்திச் சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துவிட்டன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைப்பதற்கும், கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிடவும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமைகளில்தான் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது சாதியமாகிறது. அதுமட்டுமல்லாது ஒழிப்பது அவசியமும் ஆகிறது.

 முதலாளித்துவ ஒழிப்பும், சமூக மாற்றமும் சமாதான முறையில் ஏற்படுமா? புரட்சியின் மூலம் ஏற்படுமா? என்பதற்கான பதிலை அடுத்த கேள்வியின் பதிலில் எங்கெல்ஸ் தருகிறார்.

 கம்யூனிசத்தை வெறும் வன்முறையானதாக மட்டும் கருதுகின்றவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு எங்கெல்சின் இந்த பதில் சரியானப் புரிதலைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 16) அமைதியான முறையில் தனியுடைமை ஒழிப்பை நிறைவேற்ற முடியுமா?

     தனியுடையின் ஒழிப்பு அமைதியான முறையில் நடந்தால் அது விரும்பத்தக்கதே ஆகும். இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். எங்கெல்சின் பதிலின் முதல் பகுதி இப்படித்தான் இருக்கிறது.

 சதித்திட்டங்கள் அனைத்தும் பயனற்றவை, கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள்.

 புரட்சிகள், திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை. புரட்சிகள் எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் சாராமல் முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவாகவே இருக்கிறது. இதை கம்யூனிஸ்டுகள் மிக நன்றாகவே அறிவார்கள்.

 அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி, அனைத்து நாகரிக நாடுகளில் பலாத்காரமாக ஒடுக்கப்படுகிறது. இதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் எதிரிகள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி புரட்சியை நோக்கி ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை நாம் காண முடிகிறது.

 கடைசியாக பாட்டாளி வர்க்கம், புரட்சியை நோக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுமனால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் லட்சியத்துக்கு இப்போது சொல் மூலம் எதைச் செய்து வருகிறோமோ அதைச் செயல் மூலமும் செய்வோம் என்று கூறி எங்கெல்ஸ் பதிலை முடிக்கிறார்.

 அமைதி வழியோ, புரட்சி வழியோ அதை சூழ்நிலைமையே தீர்மானிக்கின்றது. ஆனால் கம்யூனிஸ்டுகள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எதையும் ஒரே நாளில் திடீரென்று செய்திட முடியாது. தொழிலாளர்களின் சீர்திருத்தப் போராட்டத்தையே, அரசாங்கம் சட்ட வழியில் மட்டுமல்லாது, சட்டத்துக்கு புறம்பான வழியிலும் ஒடுக்குகிறது என்பதை தொழிலாளர்களோ தொழிலாளர்களின் தலைமையோ மறந்திடாது. பாட்டாளிகளின் முன்னணிப் படையான கட்சி அனைத்தையும் எதிர்கொள்ளும்.

 அடுத்தக் கேள்வியும் முக்கியமானதே. நம்மில் பலபேர் புரட்சி முடிந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கனவு கண்டு வருகின்றனர். அனைத்துக்கும் மாறும் கட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதை கடப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதன் வெற்றியிலேயே முழு வெற்றி அடங்கியிருக்கிறது

 17)  ஒரே அடியில் தனியார் சொத்துடைமையை ஒழித்துவிட முடியுமா?

 இதற்கு “இல்லை” என்றே எங்கெல்ஸ் பதிலளிக்கிறார்.

 ஒரு பொதுவான கூட்டுச் சமூகத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்திச் சக்திகளை உடனடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை. நாம் விருப்பப்படி உற்பத்திச் சக்திகளை வளர்திட முடியாது, அதற்கான காலத்தை அது எடுத்துக்கொள்ளவே செய்யும்.

 பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றி, போதுமான அளவுக்கு உற்பத்திச் சாதனங்களை உருவாக்கப்பட்ட பிறகே தனியுடைமையை முழுமையாக அழிக்க முடியும் என்கிறார் எங்கெல்ஸ்.

 பலர் கம்யூனிசத்தை விஞ்ஞான வழியில் புரிந்து கொள்ளாமல், புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தாலேயே அனைத்தையும் சாதித்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். சமூகத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்த பிறகே தனியுடைமையை முற்றிலும் அழிக்கமுடியும்.

 மார்க்சியத்தை விஞ்ஞான வழியிலேயே புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே சென்ற வார வகுப்பில் நாம் பார்த்தோம். அதை என்றும் நினைவில் கொள்வோம்.

 18) இந்தப் புரட்சியின் போக்கு என்னவாக இருக்கும்?

       முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்திய புரட்சின் போக்கு என்னவாக இருக்கும் என்பது மிகமிக முக்கியமான கேள்வியாகும். ஒவ்வொரு புரட்சியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே குறிக்கிறது.

 இந்த புரட்சி, முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு, ஏதுவான ஆட்சியை வீ‘ழ்த்திய பிறகு, தொழிலாளர்கள் தங்களது ஆட்சியை நிறுவுவார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது எப்படிப்பட்ட ஆட்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

       எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஆட்சி ஒரு ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும், (Establish a Democratic Constitution) என்கிறார் எங்கெல்ஸ். இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் நேரடி அல்லது மறைமுக மேலாதிக்கம் ஏற்படும் என்று எங்கெல்ஸ் கூறுகிறார். வளர்ச்சி அடைந்த நாட்டில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பார்கள் அங்கே பாட்டாளி வர்க்கத்தின் நேரடி ஆட்சி ஏற்படும். இதற்கு அன்றைய நிலையில் எங்கெல்ஸ் இங்கிலாந்தைக் குறிப்பிடுகிறார்.

 பாட்டாளி வர்க்கம் குறைவாக கொண்டுள்ள நாட்டில், சிறு விவசாயிகள், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் பாட்டாளிகளைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இத்தகைய நாட்டில் பாட்டாளிகளின் ஆட்சி மறைமுகமாக செலுத்தும். இப்படிப்பட்ட நாடாக அன்றைய நிலையில் ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறார். புரட்சி நடைபெற்றாலும் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதோ அதற்கு ஏற்பவே ஆட்சி செய்ய முடியும். நீனைத்ததை எல்லாம் உடனே சாதித்துவிட முடியாது.

 எங்கெல்ஸ் புரட்சியை அடுத்து அமைக்கப் போகும் அரசானது ஒரு ஜனநாயக அரசியலமைப்பாக, (Establish a Democratic) இருக்கும் என்று கூறியுடன் சர்வாதிகாரம் பற்றி இங்கே குறிப்பிடவில்லை என்று சிலருக்குத் தோன்றும். பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு இந்த ஜனநாயக அரசு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இருக்கும் என்று மார்க்சும் எங்கெல்சும் அறிவித்துள்ளனர்.

 இந்த கேள்வி-பதில் பகுதியிலேயே தொழிலாளர்களின் ஜனநாயக அரசின் கடமையாக சொல்வது பாட்டாளி வர்க்க சர்வாதிகார செயல்பாடுதான். அதை முதலில் பார்த்துவிடுவோம்.

 ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியமாகும், இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும்.

 மேலும் இந்த ஜனநாயக அரசு செய்ய வேண்டியதை, எங்கெல்ஸ் பட்டியல் இட்டுக்காட்டியுள்ளார். அதில் உள்ள சிலவற்றை மட்டும் பார்ப்போம், அதை சர்வாதிகார அரசல்லாமல் வேறு எவற்றாலும் நிறைவேற்ற முடியாது.

 நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

 நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

 அரசின் மூலதனத்தோடு ஒரு தேசிய வங்கியை நடத்தி, அதன்மூலம் கடன் மற்றும் நிதிமுறையை அரசின் கைகளுக்கு கொண்டுவந்து, மையப்படுத்த வேண்டும், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி உடைமையாளர்கள் ஆகியோரை ஒடுக்க வேண்டும்.

 எங்கெல்ஸ் குறிப்பிடுகிற இவைகளை, ஆட்சி பிடித்து “தூய ஜனநாயக” முறையில் சட்டம் போட்டால் இவற்றை நிறைவேற்றிட முடியுமா என்ன? இதை நிறைவேற்ற வேண்டுமானால் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவை.

 அரசு என்பதே வர்க்கம் சார்பான சர்வாதிகரம்தானே. அப்படியிருக்க பாட்டாளி வர்க்கத்தின் அரசு என்றால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சர்வாதிகாரம் தான்.

 19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா?

 அன்றைய சூழ்நிலையில் எங்கெல்ஸ் இதற்கு “இல்லை” என்றே பதிலளித்துள்ளார். பெருவீதத் தொழில் உருவாகி, உலகச் சந்தை தோன்றிய பிறகு கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக இருக்காது. அது நாகரீகம் அடைந்துள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் நிகழும் என்கிறார் எங்கெல்ஸ்.

 முதல் பார்வைக்கு இது பிற்காலத்தில் லெனின் கூறிய கருத்துக்கு எதிராக இருப்பதாக சிலர் நினைக்கக்கூடும். அதனால் அதை சற்று பார்ப்போம்.

 வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று அன்றைய மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தையே கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது.

 ஆனால் ஏகாதிபத்தித்தின் சீரற்ற வளர்ச்சியின் காரணமாக, ஏகாதிபத்திய சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்கிற அடிப்படையில் லெனின் ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்த முடியும் என்று கணித்தார், அதை செய்தும் காட்டினார்.

       எப்போதும் வடிவத்தை அதாவது முடிவை மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. அந்த முடிவு எடுக்க அணுகப்பட்ட வழிமுறையே மார்க்சியமாகும். சூழ்நிலைமைக்கு ஏற்ப முடிவுகள் மாறுபடும் அதே நேரத்தில் அதன் அடிப்படையில் மார்க்சியம் மேம்படும். வடிவத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது, உள்ளடக்கத்தையே நாம் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

 20) தனிவுடைமையை இறுதியாக ஒழித்த பின்பு ஏற்படும் விளைவுகள் எத்தகையதாக இருக்கும்?

 தனிச்சொத்துடைமையை ஒழிப்பதே தொழிலாளர்களுடைய அரசின் முதல் வேலையாகும். தனியார் முதலாளிகள் பயன்படுத்திய உற்பத்திச் சக்திகள் அனைத்து பறிக்கப்படும். இருக்கின்ற வளங்களை சமூகத்தில் உள்ளவர்கள் அனைவரின் தேவைப்படுவதின் அடிப்படையில் ஒரு திட்டமிட்டு, அவற்றை சமூகமே நிர்வகிக்கும். முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தியால் ஏற்பட்ட மிகை உற்பத்திக்கு மாறாக திட்டமிட்ட உற்பத்தி முறையை புதிய அரசு கையாள்வதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாது.

 கம்யூனிச அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு சமூகமானது, அதன் உறுப்பினர்களுக்கு பல வகைகளில் வளர்ச்சியை பயன்படுத்த வாய்ப்பளிக்கும். இந்நிகழ்வின் மூலம் பழைய உழைப்புப் பிரிவினையும் அதனால் உருவான வர்க்க நிலையும் அவசியமற்று மறைந்து போகும். இதுபோன்றே நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு படிப்படியாக மறைந்து போகும்.

 21) குடும்பத்தின் மீது கம்யூனிச சமூகம் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும்?

 ஆண், பெண் ஆகியோர்களுக்கு இடையேயான உறவானது, அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கருதி அதில் சமூகம் தலையிடாது.

 தனிவுடைமை நீக்கப்பட்டதன் விளைவாக, குழந்தைகளுக்கு சமூகக் கல்வி அளிப்பதன் மூலமும் இவற்றின் விளைவாக குழந்தைகள் தங்களது பெற்றோரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை நீக்கப்படும். அதே போல மனைவி தனது கணவனைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை இருக்காது.

 முதலாளித்துவ சொத்துடைமையின் போது அனைத்ததையும் பொருளாகப் பார்க்கப்பட்டது. அதனால் பாட்டாளி வர்க்க அரசானது, தனிச்சொத்துடைமை ஒழித்து அனைத்தையும் பொதுவுடைமை ஆக்கும், என்று கூறியவுடன், முதலாளித்துவ சிந்தனையாளர்கள் கம்யூனிச சமூகத்தில் அனைத்தும் பொதுவுடைமையாகும் போது பெண்களும் பொதுவுடைமை ஆக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.

 கம்யூனிச சமூகத்தில் பெண்கள் பொதுவுடைமையாக ஆக்கப்படுவார்கள் என்று ஒழுக்கம் பற்றி பேசும் அற்பவாதிகளுக்கு எங்கெல்ஸ் மிகச் சரியான பதிலை அளித்துள்ளார்.

 பெண்கள் பொதுவுடைமையாக ஆக்கப்படும் நிலையானது முற்றிலும் முதலாளித்துவ சமூகத்திற்கே உரியதாகும். விபச்சாரமானது தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்தது, அந்த அமைப்போடே அதுவும் மறைந்து போகும். எனவே கம்யூனிச சமூகத்தில் பெண்களை பொதுவாக்கிக் கொள்வதற்கு மாறாக அந்த முறைக்கு முடிவு கட்டப்படும் என்று எங்கெல்ஸ் ஒழுக்கசீல அற்பவாதிகளுக்கு பதிலளித்துள்ளார். இது போதுமான பதில்தான் இருந்தாலும் அற்பவாதிகள் இந்தக் கேள்வியை இன்றும் எழுப்பாமல் இல்லை.

 எங்கெல்சின் இந்தக் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்கிற நூல் 1847ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ருஷ்யப் புரட்சி 1917ஆம் ஆண்டு நடைபெற்றது. எங்கெல்ஸ் நூல் எழுதப்பட்டு, 70 ஆண்டுகளுக்குப் பிறகு ருஷ்யப் புரட்சி ஏற்பட்டது. அப்போது ஒழுக்கசீல அற்பவாதிகள் ருஷ்யாவின் புரட்சி அரசு, பெண்களை பொதுவுடைமையாக்கிவிட்டது என்று பொய்ப் பிரச்சாரத்தை உலகு முழுதும் பரப்பியது. அதை மறுத்து அன்று பாரதியார் ஒரு கட்டுரை எழுதினார்.

 நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

 “போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு, ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.’ ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டு விடும்.

 ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக்கொண்டிருக்க முடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

 அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது. ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக்கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்.

 பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது.”

 இன்றும் கம்யூனிச சமூகம் என்றால், பெண்களை பொதுவுடைமையாக்கப்படும் என்று பொய்ப்பிரச்சாரத்தை செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாரதியாரைப் போன்று உண்மை உணர்ந்தோர் இப்படி பேச மாட்டார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது மற்றவர்களையும் இப்படி பேச வைக்கும் அளவுக்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

 22) தற்போதுள்ள தேசியமக்களைப் (nationalities) பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

 இந்தக் கேள்விக்கும் இதற்கு அடுத்துள்ள கேள்விக்கும் இந்த வரைவில் நேரடியாக எங்கெல்ஸ் பதிலளிக்கவில்லை. பதில் பகுதியில் “மாற்றப்படவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. பழைய வரைவில் இருப்பதை மாற்றவில்லை என்று எங்கெல்ஸ் இங்கே குறிப்பாக எழுதியுள்ளார். நாம் பழைய வரையில் இருந்த பகுதியை பதிலாகப் பார்ப்போம்.

 பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள், அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது தேசியப் பிரச்சினை மறைந்து போகும்., கூட்டுச் சமூகக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட தேசிய மக்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும் என்று எங்கெல்ஸ் பதிலளித்துள்ளார்.

 இது ஒரு சுருக்கமான பதில்தான் அதனால் இதில் சுயநிர்ணய உரிமை பற்றி எங்கெல்ஸ் குறிப்பிடவில்லை.

 23) தற்போதுள்ள மதங்களின் மீதான அணுகுமுறை என்னவாக இருக்கும்?

 தற்போதுள்ள மதங்களின் மீதான புரட்சிகர அரசின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதே கேள்வி ஆகும்.

 அனைத்து மதங்களும் தனிப்பட்ட மக்கள் அல்லது மக்கள் குழுக்களுனுடைய வளர்ச்சியின் வரலாற்று நிலைகளின் வெளிப்பாடே ஆகும். கம்யூனிசம் என்பது வரலாற்று வளர்ச்சியின் உச்ச கட்டமாகும். இது தற்போதுள்ள அனைத்து மதங்களையும், வரலாற்று வழியிலான வளர்ச்சிக் கட்டமான கம்யூனிச சமூகத்தில் தேவையற்றதாக்கி, அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கும்.

 24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்?

 இங்கே எங்கெல்ஸ் மூன்று வகையான சோஷலிஸ்டுகளைப் பற்றி பேசுகிறார். 1) பிற்போக்குச் சோஷலிஸ்டுகள், 2) முதலாளித்துவ சோஷலிஸ்டுகள், 3) ஜனநாயக சோஷலிஸ்டுகள்.

 முதலில் பிற்போக்குச் சோஷலிஸ்டுகள் பற்றிப் பார்ப்போம்.

 நிலப்பிரபுத்துவ தந்தை வழிச் சமூகத்தை ஆதரிப்பவர்கள்தான், இந்த பிற்போக்கு சோஷலிஸ்டுகள். பெருந்தொழில் அமைப்பாலும், உலகச் சந்தையாலும், அவற்றால் உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ சமூகத்தால் இந்த சோஷலிஸ்டுகள் நாள்தோறும் நசுக்கப்படுகிறார்கள்.

 இந்த முதலாளித்துவ சமூகத்தின் தீமைகளில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் முன்வைக்கும் முடிவு என்னவென்றால், முதலாளித்துவத்தில் காணப்படும் தீங்கு இல்லாத நிலப்பிரபுத்துவ, தந்தை வழிச் சமூகத்தை திரும்பவும் நிலைநாட்ட வேண்டும்.

 இவர்கள் முதலாளித்துவ சக்தியால் அழிவுக்கு உள்ளானாலும், பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமாக மாறுவதைக் காணும் போது இந்த பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறார்கள்.

 அடுத்து, முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்.

 முதலாளித்துவ சமூகத்தின் ஆதரவாளர்களான இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகள், இந்த முதலாளித்துவ சமூகத்தில் உள்ள தீமைகளை போக்குவதற்கு நல்வாழ்வு போன்ற சீரமைப்பு நடவடிக்கையின் மூலம் நீக்க முடியும் என்று கருதினர். உண்மையில் இவர்கள் மறுசீரமைப்பு அதாவது சீர்திருத்தவாதத்தின் மூலம் முதலாளிதுவ சமூக அமைப்பை பாதுகாப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

 முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்தே முதலாளித்துவ தீமையை போக்குவது என்பது நடக்காதகாரியம். இந்தத் தீங்குகள் முதலாளித்துவ உற்பத்தியுடன் சேர்ந்தே பிறந்தவை, முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறியாமல் இந்த தீங்கை நீக்க முடியாது.

 அதனால், முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை கம்யூனிஸ்டுகள் எதிர்த்து போராட வேண்டும். ஏனென்றால் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்பவர்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய விரும்பும் சமூகத்தை நிலைநிறுத்த முயற்சிப்பவர்கள்.  கம்யூனிசத்துக்கு எதிரான இந்தகைய சீர்திருத்தவாதப் போக்கை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். கம்யூனிசம், தனக்கு எதிரான போக்கை விமர்சிக்காமல் தன்னை நிலைநிறுத்துக் கொள்ள முடியாது.

 மூன்றாவதாக, ஜனநாயக சோஷலிஸ்டுகள்.

 கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். ஆனால் கம்யூனிச சமூகத்துக்கு மாறிச் செல்வதற்கான போக்காக அல்லாமல், முதலாளித்துவ சமூகத்தினுள்ளேயே அதை செயல்படுத்த முயலுக்கின்றனர். கம்யூனிஸ்டுகளுக்கு இது சாத்தியமல்ல என்பது தெரியும்.

 ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அதே நேரத்தில் போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். அதாவது இந்த ஐனநாயக சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவானது முதலாளிகளை எதிர்க்கும் போது இணைந்து செயல்படலாம், இவ்வாறு செயல்படுவதினால் அவர்களை விமர்சிப்பதை விலக்கவில்லை என்று சேர்த்து எங்கெல்ஸ் கூறியுள்ளார்

 25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன?

 எடுத்தயெடுப்பிலேயே எங்கெல்ஸ் இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதை சொல்லிவிடுகிறார்.

 முதலாளித்துவ வர்க்கம் ஆட்சி செய்யும் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். இக்கட்சிகள் எந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரிக்கிறார்களோ, அந்தளவுக்கு கம்யூனிஸ்டுகள் அவர்களுடன் நெருக்கமாக செயல்படவேண்டும்.

 இந்த கேள்வி-பதில் பகுதியை எங்கெல்ஸ் எழுதி வரும் காலத்தில் ஜெர்மனியில் இன்னும் முதலாளித்துவம் வெற்றி பெறவில்லை. முடியாட்சிக்கும் முதலாளிக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நாடுகளில், கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் மீது போராட்டத்தை நடத்த முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர, அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, பழைய அரசுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளையில், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி, பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு எங்கெல்ஸ் கூறுகிறார் என்றால், பழைய அரசை எதிர்க்கும் போராட்டத்தில், முதலாளித்துவத்தை ஆதரிக்கும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது.

 முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் என்று எங்கெல்ஸ் இரண்டைக் குறிப்பிடுகிறார்.

 1) கம்யூனிஸ்டுகள் தமது கோட்பாடுகளை ஆதரிக்கவும், விவாதிக்கவும், பரப்பவும் செய்கிற பணிகளை, முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி எளிதாக்கும். இதன் வழியில் பாட்டாளி வர்க்கத்தை ஒருங்கிணைந்த வர்க்கமாக இணைவதற்கு வாய்ப்பளிக்கும்.

 2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நேரத்தில் ஏற்கெனவே முதலாளித்துவம் ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையே கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக ஏற்கும்

 இத்துடன் எங்கெல்சின் சிறிய நூல் முடிவடைகிறது.

      நமது நாட்டு முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதற்கான கொள்கையாக கம்யூனிசமே இருக்கும். உலகத் தொழிலாளர்களின் விடுதலைக்கு வழிகாட்டும் கம்யூனிசமே நமது நாட்டு தொழிலாளர்களின் கோட்பாடாகும்.

       கம்யூனிச கோட்பாட்டு வழியில் செல்வோம் புதிய உலகைப் படைப்போம்.

No comments:

Post a Comment