Sunday 16 July 2023

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (முதல் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 91- வது வார வகுப்பு  – 16-07-2023  )

ஸ்டாலின் 1905-1906 ஆம் ஆண்டுகளில் “அராஜகவாதமா? சோஷலிசமா?” என்கிற நூலை ஜார்ஜியாவில் இருக்கின்ற போது எழுதியானார். ஜார்ஜிவாயில் அன்று காணப்பட்ட அராஜகவாதிகள் கம்யூனிசத்தை எதிர்த்து பரப்புரை செய்துவந்தனர். இதனை எதிர்த்து ஸ்டாலின் பத்திரிகையில் தொடராக எழுதினார். மறுப்பதிப்பு செய்யும் போது ஸ்டாலின் அதில் சில திருத்தங்களையும் மொழி நடையை வெகுமக்கள் புரிந்து கொள்ளும் விதமாகவும் மாற்றினார்.

இந்த நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே கீழைக் காற்றில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ஜே.வி.ஸ்டாலின் படைப்புகளில் தொகுதி – 1ல் இடம் பெற்றுள்ளது. தொகுதி-1ல் முதலில் திருத்திய எளிய வடிவத்திலும் இறுதியில் பத்திரிகையில் வந்ததையும் சேர்த்தே வெளியிட்டுள்ளனர். இந்த நூல் மிகவும் சிறியதாகும் 100 பக்கத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

அராஜகவாதமா? சோஷலிசமா? என்கிற தலைப்பில் சுமார் 5 பக்கத்திற்கும், இயக்கவியல் முறை, சுமார் 17 பக்கத்திற்கும், பொருள்முதல்வாதக் கோட்பாடு சுமார் 22 பக்கத்திற்கும், பாட்டாளி வர்க்க சோஷலிசம் சுமார் 48 பக்கத்திற்கும் எழுதப்பட்டுள்ளது.

இதனை நாம் இரண்டு அல்லது மூன்று வகுப்பாக பார்க்கலாம்.

நவீன சமூக வாழ்வின் மையம் வர்க்கப் போராட்டமாகும். அதாவது இன்றைய சமூகம் வர்க்கப் போராட்டத்தையே அடிப்டையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள் ஒரு வர்க்கமாகவும் பாட்டாளிகள் மறு வர்க்கமாகவும் இருக்கின்றது. இரண்டு வர்க்கமும் தமக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்தம் தாராளவாதம் (liberalism) பாட்டாளிகளின் சித்தாந்தம் சோஷலிசம் ஆகும். முதலாளித்துவ தாரளவாதச் சித்தாந்தம் பல போக்குகளைக் கொண்டுள்ளது அதே போல சோஷலிசமும் பல போக்குகளை உடையதாக இருக்கிறது.

முதலாளித்துவ தாராளவாத சித்தாந்தத்தைப் பற்றி ஸ்டாலின் இந்நூலில் பரிசீலிக்கவில்லை. சோஷலிசத்தில் காணப்படும் பலப் போக்குகளையே பரிசீலிக்கிறார். தொழிலாளர்கள் இதனை அறிவதற்கு கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள் என்று ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சோஷலிசமானது மூன்று முக்கியப் போக்களைக் கொண்டுள்ளது. 1) சீர்திருத்தவாதம், 2) அராஜகவாதம், 3) மார்க்சியம்.

இந்த மூன்று சித்தாந்தங்களும் தொழிலாளர்களிடையே காணப்படுகிறது. அதனால் சீர்திருத்தவாதம் அராஜகவாதம் ஆகிய இரண்டையும் ஸ்டாலின் விமர்சித்து மார்க்சியத்தை நிலைநிறுத்துகிறார். தொழிலாளர்களின் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தையே பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

ஜெர்மனியைச் சேர்ந்த பெர்ன்ஸ்டைன் போன்றோர்கள் சீர்த்திருத்தவாதத்தை தூக்கிப்பிடிக்கின்றனர். இந்த சீர்திருத்தவாதமானது சோஷலிசத்தை அமைதியான வழிமுறைகளில் அடைய முடியும் என்று நம்புகிறது. இந்தப் போக்கு வர்க்கப் போராட்டத்தை மறுத்து வர்க்க சமரசத்தை ஆதரிக்கிறது. இந்த சீர்திருத்தப் போக்கானது நாளுக்குநாள் கெட்டழிந்தும், சோஷலிசத்தின் அனைத்து சாயலையும் இழந்தும் காணப்படுகிறது. இங்கே இந்த சீர்த்திருத்தவாதத்தைப் பற்றி ஸ்டாலின் அதிகமாக எழுதவில்லை. ஏன் என்றால் சீர்திருத்தவாதம் என்பது சோஷலிசம் அல்ல என்பதை அன்று சரியாகப் புரிந்து கொண்டனர்.

ஆனால் அராஜகவாதத்தை சோஷலிசமாக அன்று கருதப்பட்டதால் அராஜகவாதத்துக்கும் சோஷலிசத்துக்கும் உள்ள வேறுபாட்டையே ஸ்டாலின் இந்த நூலில் விரிவாக பரிசீலிக்கிறார். அராஜகவாதிகள் பாட்டாளிகளிடம் தங்களது சித்தாந்தமே சோஷலிசம் என்று முன்னிலைப்படுத்தப் படாதப்பாடுபடுகின்றனர். அதனால் ஸ்டாலின் இங்கே அராஜகவாதத்தையும் சோஷலிசத்தையும் விளக்குவதின் மூலம் அதன் வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறார்.

அராஜகவாதிகளின் சித்தாந்தத்தை அதிகமானோர் பின்பற்றவில்லை என்று ஒதுக்காமல், பாட்டாளிக்கு எந்த சித்தாந்தம் சரியானது என்பதை விளக்க வேண்டியது அவசியமானது என்று ஸ்டாலின் கருதினார். அதனால் இரண்டையும் இந்நூலில் ஒப்பிடுகிறார்.

அராஜகவாதமும் மார்க்சியமும் ஒரே அடிப்படையைக் கொண்டுள்ளதாக சிலர் கருதுகின்றனர். செயல்தந்திரம் பற்றியதில் மட்மே வேறுபாடு காணப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். இது மாபெரும் தவறு என்கிறார் ஸ்டாலின்.

அராஜகவாதிகள் மார்க்சியத்தின் எதிர்கள் என்று ஸ்டாலின் அறிவிக்கிறார். அதனால் மார்க்சியவாதிகள், எதிரிகளான அராஜகவாதத்துடன் கடுமையான சித்தாந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்கிறார். அதனால் இந்த நூலில் ஸ்டாலின் அராஜவாதத்தை அடி முதல் முடிவரை அதாவது முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்.

மார்க்சியமும் அராஜகவாதமும் எதார்த்தத்தில் சோஷலிசக் கொடியின் கீழ் போராட்ட அரங்கத்துக்குள் வந்துள்ளது. ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அராஜவாதத்தின் ஆதாரம் தனிமனிதன் ஆகும். தனிமனிதனின் விடுதலையில் அனைத்து மக்களின் விடுதலை அடங்கி இருக்கிறது. அராஜகவாதத்தின் கோட்பாட்டின்படி தனிமனிதன் விடுவிக்காத வரையில், பரந்துபட்ட மக்களின் விடுதலை சாத்தியம் இல்லை. இதன் அடிப்படையிலேயே அராஜகவாதத்தின் முழக்கம் காணப்படுகிறது. “ஒவ்வொன்றும் தனிமனிதனுக்கே” என்பதே அராஜகவாதத்தின் முழக்கம்.

மார்க்சியம் இதற்கு மாறுபட்டதாகும். மக்களின் விடுதலை அடையாதவரை தனிமனிதனின் விடுதலை என்பது சாத்தியமில்லை என்று மார்க்சியம் கருதுகிறது. அதாவது பரந்துபட்ட மக்களின் விடுதலையே தனிமனித விடுதலைக்கு முன்நிபந்தனை என்கிறது. இதன் அடிப்படையில் “ஒவ்வொன்றும் பரந்து பட்ட மக்களுக்கே” என்கிற முழக்கத்தை இடுகிறது மார்க்சியம்.

அராஜகவாதமும் மார்க்சியமும் அடிப்படையிலேயே வேறுபாடு காணப்படுகிறது. அதனால் இரண்டுக்கும் செயல்தந்திரத்தில்தான் வேறுபாடு என்று கருதுவது மிகப்பெரும் தவறு என்பது தெளிவாகிறது.

மார்க்சியமும் அராஜகவாதமும் எதிரெதிர் கோட்பாடுகள் என்பதை நிறுவுவதே இந்த நூலின் நோக்கமாகும். இந்த நூலின் அமைப்பைப் பற்றி ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

 

மார்க்சியத்தைப் பற்றிய விளக்கத்துடன் தொடங்கி, அதையடுத்து மார்க்சியம் பற்றிய அராஜகவாதிகளின் கருத்தை கூறிவிட்டு, இறுதியாக அராஜகவாதத்தைப் பற்றி விமர்சிக்கப்படும்.

இதனை எவ்வாறு செய்யப்படும் என்பதையும் ஸ்டாலின் அடுத்து கூறுகிறார். இயக்கவியல் முறை பற்றி முதலில் விளக்கப்படும். இதற்கு அடுத்து இயக்கவியல் பற்றி அராஜகவாதிகளின் கருத்து முன்வைக்கப்படும். அடுத்து அவர்களின் கருத்து மார்க்சிய வழியில் விமர்சிக்கப்படும்.

இதற்கு அடுத்ததாக பொருள்முதல்வாதம் விளக்கப்படும். பொருள்முதல்வாதத்தைப் பற்றிய அராஜகவாதிகளின் கருத்தையும் அதற்கு அடுத்து அதன்மீது மார்க்சிய வழியில் விமர்சனமும் வைக்கப்படும்.

இறுதியாக அராஜகவாதிகளின் சோஷலிசமும் அதன்மீதான மார்க்சிய விமர்சனத்தையும் வைத்து, பட்டாளிகளுக்கு மார்க்சிய சோஷலிசமே சரியான வழி என்று நிறுவப்படும்.

அராஜகவாதிகள் சோஷலிஸ்டுகளே அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதியே ஸ்டாலின் இந்த நூலை எழுதியுள்ளார்.

இயக்கவியல் முறை

இந்த இயக்கவியல் முறை என்கிற அத்தியாயத்தை ஸ்டாலின் தொடங்கும் போது, “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் மார்க்ஸ் எழுதியதை மேற்கோளாகக் கொடுத்துள்ளார். இந்த திருந்தியப் பதிப்பில் சிலவரிகளை விட்டுவிட்டார். முதன்முறையாக பத்திரிகையில் எழுதிய போது இருந்த சில வரிகளை மறுபதிப்பில் விட்டுவிட்டார். இருந்தாலும் அது மார்க்ஸ் வார்த்தைத்தானே அதை நான் முழுமையாகவே பார்க்கலாம்.

 

“உலகில் உள்ள அனைத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறது…. வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது, உற்பத்திச் சக்திகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது, பழைய உற்பத்தி உறவுகள் தகர்ந்து கொண்டே இருக்கின்றன… நிலைத்த இயக்கம், நிலைத்த அழிவு மற்றும் உருவாக்கம் …. இதுவே வாழ்க்கையின் சாராம்சம்.”

(மார்க்ஸ்)

மக்களுடைய வாழ்க்கையின் சாரத்தை இயக்கவியல் அடிப்படையில் மார்க்ஸ் இங்கே விளக்கி உள்ளார். உற்பத்திச் சக்திகளே சமூகத்தை இயக்குகிறது, வளர்க்கிறது, மாற்றுகிறது என்பதை இந்த மேற்கோள் நமக்கு போதிக்கிறது.

மார்க்சியம் என்பது சோசலிசத்தின் கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டம், ஒரு தத்துவ முறை. இந்தத் தத்துவ முறை இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இந்தத் தத்துவத்தில் இருந்தே மார்க்சின் பாட்டாளி வர்க்க சோஷலிசம் தர்க்கவழியில் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்கவியல் முறை என்றால் என்ன என்பதை முதலில் ஸ்டாலின் விளக்குகிறார்.

சமூக வாழ்க்கை தொடர்ச்சியான இயக்கத்திலும் வளர்ச்சியிலும் இருக்கிறது. இயக்கத்தில் இருக்கும் வாழ்க்கை, அப்படியே செல்வதில்லை, ஒரே மட்டத்தில் செல்லாது மாறிக் கொண்டு இருக்கிறது.

நிலைத்த இயக்கத்தில் உள்ள வாழ்க்கை அழிவையும் ஆக்கத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே வாழ்க்கை எப்போதும் புதியதையும் பழையதையும், வளர்ந்து கொண்டு இருப்பதையும், அழிந்து கொண்டு இருப்பதையும், புரட்சியையும், எதிர்ப்புரட்சியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வாழ்க்கை எதார்த்தத்தில் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதை பார்க்க வேண்டும் என்று இயக்கவியல் முறை நமக்குச் சொல்லித்தருகிறது. அதாவது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அறிய வேண்டும். நமது சிந்தனையை அதில் திணிக்கக்கூடாது. அப்படி வாழ்க்கையை உள்ளது உள்ளபடி நாம் காணும்போது, வாழ்க்கை எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

நிலைத்த இயக்கத்தில் உள்ள வாழ்க்கை அழிவிலும் ஆக்கத்திலும் பயணிக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆக வாழ்க்கையில் அழிவும் ஆக்கமும் நிகழ்கிறது என்றால், எது அழிகிறது என்பதையும் எது உருவாகிறது என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

பரிசீலிக்கப்படும் போது நமக்குக் கிடைக்கும் புரிதல் என்னவென்றால், பழைய போக்குகள் அழிகிறது புதிய போக்குகள் வளர்கிறது.

வாழ்க்கையில் எது அழிந்து கொண்டு இருக்கிறது, எது உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் ஒரு எடுத்துக்காட்டின் மூலம் இதை விளக்குகிறார்.

பாட்டாளி வர்க்கம் இன்று சிறியதாகவும் பலவீனமாகவும் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் எதிர் காலத்தில் இந்த பாட்டாளி வர்க்கமே முதலாளித்துவ உற்பத்தியின் காரணமாக வளர்ந்து கொண்டு, தனது பலத்தை பெருக்கிக் கொண்டு, முன்னேறும். இதனை நாம் இயக்கவியல் முறையினால் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு மாறாக முதலாளித்துவம் இன்று பலம்பெற்றுக் காணப்பட்டாலும் அதன் உற்பத்தி முறையினால் நெருக்கடிக்கு உள்ளாகி, பலம் இழந்து, அழிவுக்கு உள்ளாகும் என்பதை இயக்கவியல் முறை நமக்கு கற்றுத் தருகின்றது.

இன்று பாட்டாளி வர்க்கம் பலம் குன்றி இருந்தாலும் தவிர்க்க முடியாமல் தன்னை அது பலப்படுத்திக் கொள்ளும். இதற்கு மாறாக முதலாளித்துவ வர்க்கம் இன்று பெரும் பலம் பெற்றதாக இருந்தாலும் இறுதியில் தவிர்க்க முடியாமல் பலம் குன்றி அழிந்தே போகும்.

இயக்கவியலானது முதலாளித்துவம் நாள்தோறும் அழிந்து வருவதையும் பாட்டாளி வர்க்கம் வளர்ந்து வருவதையும் எடுத்துக் காட்டுகிறது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டை ஸ்டாலின் வைக்கிறார்.

1880ஆம் ஆண்டுகளில் ருஷ்யாவின் விடுதலை குட்டிமுதலாளித்துவத்தின் கைகளில் இருக்கிறது என்று நரோத்னிக்குகள் கூறினர். கிராமப்புறத்திலும் நகர்புறத்திலும் குட்டிமுதலாளிகளே பெரும்பான்மையினராக இருக்கின்றனர். மேலும் இவர்கள் ஏழ்மையில் உழல்பவர்களாக இருக்கன்றனர் என்று நரோத்னிக்குகள் கூறினார்.

நரோத்னிக்குகளின் இந்தக் கருத்தை ருஷ்ய மார்க்சியவாதிகள் மறுத்து பதில் அளித்தனர். அந்த பதிலைப் பார்ப்போம்.

குட்டிமுதலாளிகள் இப்போது பெரும்பான்மையாகவும் ஏழைகளாகவும் இருக்கின்றனர் என்பது உண்மையே. ஒன்றை முடிவு செய்வதற்கு பெரும்பான்மை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியுமா? முடியாது என்பதைப் பார்ப்போம்.

குட்டிமுதலாளி வர்க்கம் வெகுநாட்களாக பெரும்பான்மை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் இதுவரையில் விடுதலைக்கானப் போராட்டத்தில் அது எத்தகைய முன்முயற்சியையும் எடுக்கவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் உதவி இல்லாது எதையும் செய்திடவில்லை. ஏன் என்றால், குட்டிமுதலாளித்துவ வர்க்கம் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கவில்லை. இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவ வர்க்கம் நாள்தோறும் உருகுலைந்து வருகிறது, அவர்களில் சிலர் முதலாளிகளாகவும் பலர் பாட்டாளிகளாகவும் மாறிவருகின்றனர். அழிந்து போகும் வர்க்கத்தை புரட்சிகரமானதாகக் கொள்ள முடியாது.

இதற்கு அடுத்து ஸ்டாலின் கூறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை நம்நாட்டில் உள்ள இடதுசாரிகளில் பெரும்பான்மையினர் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அது என்னவென்றால், “..புரட்சியை நடத்துவது என்பதைப் பொறுத்தவரையில், ஏழ்மை என்பது தீர்மானகரமான முக்கியத்தும் வாய்ந்ததல்ல.”

நம் நாட்டில் உள்ள சில புரட்சிக்காரர்கள் உழைப்பாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தந்தால், அவர்களின் போராட்ட குணம் மழுங்கிவிடும் என்கிற நினைப்பில் இருக்கின்றனர். இது மிகமிக தவறான ஒன்றாகும். முழுநாள் உழைத்தும் அதற்கான கூலி பெற்றும் உழைப்பாளிகளின் வாழ்வு முன்னேற்றம் காணாததற்குக் காரணத்தையே முதன்மைப்படுத்துகிறது மார்க்சியம். ஏழ்மையையும் வறுமையையும் மார்க்சியம் கவனத்தில் கொள்ளாமல் இல்லை. ஆனால் உழைத்தும் வாழ வழியில்லாது போனவர்களையே முதன்மையாகக் கொள்கிறது.

இன்று நம் நாட்டில் வறுமையில் அதிகம் வாடுவது விவசாயிகளே. ஆனால் அவர்கள் புரட்சிக்குத் தயாராகவில்லை. பாட்டாளிகளே இன்று ஒரளவுக்கு சம்பளம் அதிகம் பெற்றாலும் இச்சம்பளம் வாழ்க்கைத் தேவைக்கு போதுமானதாக இல்லை. எதிர்காலத்தில் இதையும் இழக்க வேண்டிவரும் என்பதை முன்னறிந்து கொள்வது பாட்டாளி வர்க்கமே. பாட்டாளி வர்க்கம் இன்றைய உற்பத்தி முறையோடு நெருக்கமாக இருப்பதினால் அதற்கு வாழ்வும் கிட்டுகிறது எதிர்கால அச்சமும் ஏற்படுகிறது. இதனை தெளிவாகப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்டுகளால்தான் பாட்டாளிகளை வழிநடத்த முடியும். சிந்தனையில் பாட்டாளி வர்க்கத்தைவிட கீழாக இருந்தால், அப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு தலைமைத்தாங்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

. இன்று எந்த வர்க்கம் பெரும்பான்மையாக இருக்கிறது, எந்த வர்க்கம் ஏழையாக இருக்கிறது என்பது முக்கியமான விசயம் அல்ல, எந்த வர்க்கம் வலுப்பெறுகிறது, எந்த வர்க்கம் அழிந்து கொண்டு வருகிறது என்பதே முக்கியமானது ஆகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது, பலம் பெற்று வருகிறது, அதுதான் சமூக வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்று கொண்டும், புரட்சிகர சக்திகள் அனைத்தையும் அணி திரட்டிக் கொண்டும் இருக்கின்ற வர்க்கம் ஆகும். அதனால்தான் பாட்டாளி வர்க்கத்தை இன்றைய சமூகத்தின் தலையாய சக்தியாக மார்க்சியம் கருதுகிறது.

பாட்டாளி அணிவரிசைகளில் நாம் சேர்ந்து அதனுடைய முற்போக்கான முயற்சிகளை நம்முடைய முயற்சியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

இதையே மார்க்சியவாதிகள் நரோத்னிக்குகளுக்கு பதிலாகத் தருகின்றனர்.

இந்த பதில் மூலம் நமக்கும் என்ன தெரிகிறது, மார்கசியவாதிகள் வாழ்க்கையை இயக்கவியல் வழியில் பார்க்கிறார்கள், நரோத்னிக்குகளோ இயக்க மறுப்பியல் வழியில் வாதிடுகிறார்கள். சமூகம் மாறாத ஒன்றாக அதே பாதையில் தொடர்ந்து செல்லக்கூடியதாக நரோத்தினிக்குகள் கருதுகின்றனர்.

இயக்கவியல் முறையானது வாழ்க்கையை வளர்ச்சிப் போக்காகவும் மாற்றம் அடையக்கூடியதாகவும் காண்கிறது.

இயக்கவியல் முறை விஞ்ஞான வழியிலானது என்பதை விஞ்ஞானத்தின் வரலாறு காட்டுகிறது. இந்த உலகில் அழியாதது என்று ஒன்றும் இல்லை, ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும், முன்னேறிக் கொண்டும் இருக்கிறது. சமூகத்தில் காணும் இயக்கவியலே இயற்கையிலும் காணப்படுகிறது. இன்றைய விஞ்ஞானம் முழுவதிலும் உயிரோட்டமாக இயக்கவியல் இருக்கிறது.

இயக்கவியலின் விதி என்ன கூறுகிறது என்றால், சிறிய அளவிலான மாற்றங்கள் படிப்படியாக பெருகி பண்பு மாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. இயற்கையிலும்சரி சமூகத்திலும்சரி அளவு மாற்றங்கள் கண்ணுக்குத் தெரியாமல் சிறிது சிறியதாக நிகழ்ந்து, ஒரு அளவைத் தொட்டவுடன் பண்பு மாற்றத்தை அடைகிறது. பண்பு மாற்றத்தை அடையும் போது மாற்றம் நம் கண்ணுக்குத் தெரிய தொடங்குகிறது.

இயக்கவியலை எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்கிற நூலில் விரிவாக போதுமான அளவுக்கு விளக்கி உள்ளார் என்று ஸ்டாலின் கூறுகிறார். மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தையும் நாம் ஒரே நூலில் காணுவதற்கு வாய்ப்பளிக்கும் நூல் “டூரிங்குக்கு மறுப்பு” ஆகும்.

அடுத்து ஸ்டாலின் இயக்கவியல் முறையை அராஜகவாதிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை விளக்குகிறார்.

இயக்கவியல் முறையின் தந்தை ஹெகல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஹெகலின் இயக்கவியல் முறையை, மார்க்ஸ் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் சரிபடுத்தி மேம்படுத்தினார். அராஜகவாதிகளுக்கு நிச்சயமாக இது தெரியும். ஹெகல் ஒரு பழமைவாதி என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், எனவே, இதைப் பயன்படுத்தி, அவர்கள் “பழமைமீட்பு” ஆதரவாளர் என்று ஹெகலை வெறித்தனமாக சாடுகின்றனர். இதனை நிரூபிக்க கடும் முயற்சி செய்கின்றனர்.

ஹெகல் ஒரு புரட்சியாளர் அல்ல என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். மார்க்சும் எங்கெல்சும் ஏற்கெனவே ஹெகலை விமர்சித்துள்ளனர். அப்படி இருந்தும் பழமையைமீட்பை ஹெகல் ஆதரிப்பவர் என்று அராஜகவாதிகள் இடையறாது கூறிவருகின்றனர். ஹெகல் மீது அவநம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இப்படி செய்கின்றனர்.

ஹெகலின் கருத்துமுதல்வாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் எதிர்க்கும்போது அராஜகவாதிகள் இயக்கவியலையும் சேர்த்து எதிர்க்கின்றனர். இந்த கபடமான வழிமுறையினால் அராஜகவாதிகள் தமது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகின்றனர். அவர்களால் தம் கருத்தை மெய்பிக்க முடியாது என்கிறார் ஸ்டாலின்.

இங்கே ஸ்டாலின் ஒரு பழமொழியை கூறுகிறார், “உனது பாவங்களுக்கு அடுத்தவன் மீது பழிபோடு.” இந்த பழமொழிக்கு ஏற்ப, இயக்கவியல் முறையே இயக்கமறுப்புதான் என்று அராஜகவாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

இயக்கமறுப்பியல் அனைத்தையும் நிலையானதாகக் கருதுகிறது. ஆனால் இயக்கவியல் அனைத்தையும் நிலையற்றவை என்று கூறுகிறது. இதனை ஸ்டாலின் எழுத்துக்களிலேயே பார்ப்போம்.

 

“உலகில் நிலையானது எதுவும் இல்லை, உலகில் உள்ள ஒவ்வொன்றும் நிலையற்றதும் அழியக்கூடியதுமாகவே உள்ளது. இயற்கை மாறுகிறது, சமூகம் மாறுகிறது, பழக்கவழக்கங்கள் மரபுகள் ஆகியவையும் மாறுகின்றன. நீதி-அநீதி பற்றிய கருத்துக்கள் மாறுகின்றன. ஏன் உண்மை என்று சொல்லப்படுவதும்கூட மாறுகிறது. இதனால்தான் இயக்கவியலானது அனைத்தையும் விமர்சனவழியில் பார்க்கிறது. இதனால்தான் இயக்கவியலானது அனைத்துக் காலத்துக்கும் ஒரேயடியாகப் பொருந்தக்கூடிய நிரந்தரமான உண்மை என்று சொல்லப்படுவதை அடியோடு மறுக்கிறது.”

            அடுத்து இயக்கமறுப்பியலைப் பற்றி ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

 

“இயக்கமறுப்பியல் முற்றிலும் வேறானவற்றை நமக்குச் சொல்கிறது. அதனுடைய நிலைப்பாட்டின்படி உலகம் என்பது நிலையானது, மாறுதலற்றது, உலகம் எவராலோ அல்லது எதனாலோ முன்கூட்டியே நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒன்று. இதனால்தான், இயக்கவியல் மறுப்பாளர்கள் “நிலையான நீதி” அல்லது “மாறாத உண்மை” என்பதை எப்போதும் மந்திரம் போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.”

      அராஜகவாதத்துக்கு புருதோன் தந்தை ஆவார். அவர் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான, ஏற்கெனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட, மாறாத நீதி உலகில் இருக்கிறது. அதுவே எதிர்கால சமூகத்தின் அடிப்படையாக இருந்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால்தான் புருதோன் இயக்கவியல் மறுப்பாளர் என்று அழைக்கப்படுகிறார். புருதோனின் இயக்க மறுப்பியலை மார்க்ஸ் விமர்சித்துள்ளார். 

மார்க்ஸ் கூறுகிறார், உலகில் உள்ள ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருப்பதால், “நிதி” என்று சொல்லப்படுவதும் ஒரு காலத்துக்குப் பிறகு மாறுகிறது, இதன் விளைவாக “மாறாத நீதி” என்பது வெறும் இயக்கவியல் மறுப்புவாத முட்டாள்தனமே என்று அறுதியிட்டுக் கூறினார். புருதோனின் இயக்கமறுப்பியலை மார்க்ஸ் “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் விமர்சித்துள்ளார்.

புருதோன் சீடர்களான அராஜகவாதிகள் “மார்க்சின் இயக்கவியலே இயக்கமறுப்பியல்தான்” என்று அடித்துச் சொல்கின்றனர்.

இயக்கமறுப்புவாதிகள் வறட்டுத் தத்துவங்களை ஆதரிக்கின்றனர். “அறிய முடியாதது” “தானேயாகிய பொருள்” என்கிற தத்துவக் கருத்துக்களை ஆதரிக்கின்றனர்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, ஹெகலின் இயக்கவியல் மறுப்புவாத சிந்தனா முறையுடன் அவருடைய இயக்கவியல் முறையை இணைத்து அராஜகவாதிகள் குழப்பிக் கொள்கின்றனர்.

ஹெகலின் பரமகருத்து என்கிற தத்துவக் கட்டமைப்பு தொடக்கத்தில் இருந்து முடிவு வரை இயக்கமறுப்பியலாக உள்ளது, ஆனால் அனைத்தும் மாறாது என்கிற கருத்துத்தை மறுத்து ஒதுக்கும் ஹெகலின் இயக்கவியல் முறை என்பது தொடக்கம் முதல் முடிவுவரை விஞ்ஞான வழிப்பட்டது, புரட்சிகரமானது என்பதில் ஐயமில்லை என்கிறார் ஸ்டாலின்.

ஹெகலின் பரமகருத்து என்கிற கருத்துமதல்வாதத் தத்துவத்தை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார், அதே நேரத்தில் ஹெகலின் இயக்கவியல் முறையை புகழ்ந்தார். மார்க்சும் எங்கெல்சும் ஹெகலின் கருத்துமுதல்வாதத்தை கடுமையாக எதிர்த்தனர், இயக்கவியலை ஹெகல் ஏற்றதை புகழ்ந்தனர். தொடக்கக்கால கிரேக்கத் தத்துவத்தின் தர்க்கவியல் என்கிற வழியில் இயக்கவியல் இருந்தது. பின்பு அதை பின்பற்றாமல் போயினர், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹெகல் மீண்டும் இயக்கவியலை கொண்டுவந்தார். அதனால் ஹெகலின் இயக்கவியலை இருவரும் கொண்டாடினர்.

அராஜகவாதிகள் ஒரே நேரத்தில் ஒரு பொருள் நல்லதாகவும் கெட்டதாகவும் இருப்பது சாத்தியமில்லை என்கின்றனர். ஆனால் இயக்கவியல் இதனை மறுக்கிறது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டை ஸ்டாலின் வைக்கிறார்.

ஒரு ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்று மார்க்சியர்கள் கோருகிறார்கள். ஒரு ஜனநாயகக் குடியரசானது அனைத்துத் தன்மைகளிலும் நல்லது என்றோ அல்லது அனைத்துத் தன்மைகளிலும் தீயது என்றோ நம்மால் கூறிமுடியுமா? அப்படி கூறிவிட முடியாது. ஒரு ஜனநாயகக் குடியரசானது பிரபுத்துவ கட்டமைபை அழித்துக் கொண்டிருக்கும் போதுதான் நல்லதாக இருக்க முடியும். ஆனால் முதலாளித்துவம் வலுபெற்ற பிறகு அது தீயதாகிறது. ஆக ஒன்று சில விசயங்களில் நல்லதாகவும் சில விசயங்களில் தீயதாகவும் இருக்க முடியும்.

மார்க்சியர்கள், ஜனநாயகக் குடியரசின் நல்ல தன்மைகளுக்காக ஆதரிக்கின்றனர் தீய தன்மைக்காக எதிர்க்கின்றனர்.

மற்றொரு எடுத்துக்காட்டை ஸ்டாலின் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

உழைப்பாளர்களின் எட்டு மணி வேலை நேரத்தையும் ஒருவிதத்தில் நல்லதாக கூற முடியும் மற்றொரு விதத்தில் தீயதாகவும் கூறிட முடியும். பாட்டாளி வர்க்கத்தை வலுப்படுத்தும் வரையில் அது நல்லது, கூலி அமைப்பு முறையை வலுப்படுத்துவதாக இருக்கும் போது அது கெட்டது.

வாழ்க்கை இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிப் போக்கிலும் இரண்டு போக்குகள் காணப்படுகின்றன. இதில் ஒன்று சாதகமானது மற்றொன்று பாதகமானது. சாதகமானதை ஆதரிக்க வேண்டும், பாதகமானதை தவறாமல் நிராகரிக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

அராஜகவாதிகள் இன்னதென்று அறிய முடியாத காரணங்களால் புரட்சி தோன்றுவதாக கருதுகின்றனர். ஆனால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்கிற நிச்சயமானது, உயிராதாரமானதுமான சமூகப் புறநிலைக் காரணங்களால்தான் புரட்சி தோன்றுகிறது என்பதை மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு ஸ்டாலின் நிறுவுகிறார்.

மேலும் தெளிவாக ஸ்டாலின் கூறுகிறார், மார்க்ஸ்-எங்கெல்ஸ் கருத்தின்படி, ஒரு சமூகத்தில் உற்பத்திச் சக்திகள் போதுமான அளவுக்கு வளர்ந்து முதிர்ச்சி அடையும் போதுதான் புரட்சி நடைபெறுகிறது, அராஜகவாதிகள் நினைப்பது போல எதர்பாராதவிதமாக அல்ல.

அதாவது, புரட்சி என்பது தற்செயல் நிகழ்ச்சியாகவே அராஜகவாதிகள் கருதுகின்றனர். அதனால்தான் அவர்கள் இன்றைய நடைமுறையை புரட்சிக்கானதாக மாற்றாமல், புரட்சி ஏற்படும் தற்செயலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்கவியல் முறையானது, தன் சக்திக்கு அப்பால் தாவிக் குதிப்பதற்கும், தன்னிலை தாண்டுவதற்கும் எந்த சாத்தியத்தையும் வழங்கவில்லை என்று இயக்கவியலை அராஜகவாதிகள் மறுக்கின்றனர்.

இதற்கு பதிலாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

 

“திருவாளர் அராஜகவாதிகளே, இதுதான் அப்பட்டமான உண்மை ஆகும். எனது அன்புக்குரிய ஐயாமார்களே, இங்கு நீங்கள் முற்றிலும் சரியாகச் சொல்கிறீர்கள், இத்தகைய ஒரு சாத்தியப் பாட்டை இயக்கவியல் முறை உண்மையில் வழங்குவதில்லைதான். ஆனால், இயக்கவியல் முறை ஏன் இத்தகைய சாத்தியத்தை வழங்கவில்லை? ஏனென்றால், “தன்னிலை தாண்டுவதும், தன் சக்திக்கு அப்பால் தாவிக் குதிப்பதும்” என்பது தான்தோன்றித் தனமான, காட்டில் உள்ள ஆட்டுக்கு உரியது. ஆனால், விஞ்ஞானவழியிலான இயக்கவியல் முறையோ மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.

இதுதான் இயக்கவியலின் ரகசியம்.”

      மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரின் விஞ்ஞானத் தன்மை உடைய இயக்கவியலை புரிந்து கொள்ள அராஜகவாதிகள் தவறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அராஜகவாதிகள் செப்பிடுவித்தை காட்டி தமது சொந்த இயக்கவியலை உருவாக்கி, விஞ்ஞானத் தன்மை கொண்ட மார்க்சின் இயக்கவியலை ஈவிரக்கமின்றி எதிர்த்து போராடுகின்றனர்.

மார்க்சியத்தின் இயக்கவியல் விஞ்ஞானத் தன்மை கொண்டது, அராஜகவாதிகளின் அணுகுமுறை விஞ்ஞானத் தன்மை அற்றது என்பதை ஸ்டாலின் இந்த சிறு அத்தியாயத்தில் விளக்கி உள்ளார்.

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (இரண்டாம் பகுதி)

 

No comments:

Post a Comment