Sunday 9 July 2023

லெனின் எழுதிய “நமது வேலைத் திட்டம்” என்கிற கட்டுரையின் சாரம்

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 91- வது வார வகுப்பு – 09-07-2023  )

“நமது வேலைத் திட்டம்என்கிற கட்டுரையை லெனின் 1899 ஆம் ஆண்டு எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறந்த பல சிறு கட்டுரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள பகுதியை முதலில் மேற்கோளாகப் பார்க்க வேண்டும். ஏன் என்றால் இதில் கூறியுள்ளதற்கு விளக்கம் தேவைப்படவில்லை. அதுமட்டும் அல்லாது, அன்று லெனின் கூறியது இன்றும் பொருந்துகிறது. அதனால் அதனை லெனினது எழுத்திலேயே பார்ப்போம். எப்போதும் சொல்வதைப் போல இங்கேயும் சொல்கிறேன். அன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் கம்யூனிஸ்ட் என்றும் கம்யூனிசம் என்றும் அழைக்க முடியாத நிலையில் சமூக-ஜனநாயகக் கட்சி, சமூக-ஜனநாகவாதி, சமூக-ஜனநாயகம் என்று அழைத்தனர். நாம் இங்கு கம்யூனிசம் என்கிற சொல்லையே புரிதலுக்காகப் பயன்படுத்துகிறோம் என்பதை பதிவு செய்கிறேன்.

 

“தற்போது அனைத்துநாட்டு கம்யூனிச சித்தாந்தம் ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுவரை மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் கோட்பாட்டுக்கு உரிய உறுதிவாய்ந்த அடித்தளமாகக் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன” (51)

 லெனின் இதை எழுதி கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகின்றது. இன்றும் கம்யயூனிச சித்தாந்தம் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டன என்றும் கூறுவதை கேட்க முடிகிறது. கம்யூனிசம் கோலாச்சும் காலம் முழுதும் இதை கேட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

 இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், கம்யூனிசம் சித்தாந்தம் பழைமைப்பட்டுப் போய்விட்டன என்று கூறுபவர்களை, எதிர்த்து எழுதி லெனின் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிச வழியில் ருஷ்யாவில் புரட்சியை நிகழ்த்தினார். கம்யூனிசத்தை மறுப்பவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் கம்யூனிச வழியில் நாம் புரட்சியை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

 கம்யூனிசம் வறட்டுக் கோட்பாடாக இருந்தால்தான் அது பழைமைப்பட்டுப் போகும். கம்யூனிசம் என்பது ஒரு விஞ்ஞான அணுகுறை, அது எத்தகைய புதியப் போக்கையும் விஞ்ஞான வழியில் அணுகுவதற்கு வழிகாட்டியாக  இன்றும் பயன்படுகிறது.

 அன்றைய சூழ்நிலையில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் புதிய நிலைமைக்குப் பழமைப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால் அந்த விஞ்ஞான அணுகுமுறை இன்றும் புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. முதலாளித்துவக் கட்டம் புதிய நிலைமையினை அடைகிறது என்றால் அதற்கு ஏற்ப கம்யூனிசக் கோட்பாடும் வளர்ந்து கொண்டே செல்லும். அதனால், வர்க்க சமூகம் இருக்கும்வரை கம்யூனிசக் கோட்பாடு பழமைப்பட்டுப் போகாமல் புத்துயிர்ப்புடன் இருக்கும் என்பதே உண்மை ஆகும்.

       "நாங்கள் முற்றிலும் மார்க்சிய கோட்பாட்டின் நிலைப்பாட்டிலேயே நிற்கிறோம்" (We take our stand entirely on the Marxist theoretical position) என்று லெனின் அறிவிக்கிறார், நாங்கள் என்பது இங்கே ருஷ்ய கம்யூனிசக் கட்சி என்பதாகும். இப்படி உண்மையிலேயே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அறிவிக்க வேண்டும். கம்யூனிசத்தில் எத்தகைய தடுமாற்றத்திலும் இல்லை என்பதை இத்தகைய அறிவிப்பு உறுதி அளிக்கிறது. அதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு அறிவித்து செயல்படவேண்டும்.

     சென்ற வகுப்பில் “எங்கிருந்து தொடங்குவது” என்பதில் லெனின் குறிப்பட்டதை நினைவில் கொள்வோம். கட்சியின் முதன்மையான பிரச்சினை எந்த திசைவழியில் செல்வது என்பதல்ல, கம்யூனிசக் கட்சி கம்யூனிச வழியில்தான் செல்லும், கம்யூனிச வழியில் செல்வதற்கு எத்தகைய நடைமுறை நடவடிக்கைகளை கையாள்வது என்பதே பிரச்சினை ஆகும். ஒரு கம்யூனிசக் கட்சி கம்யூனிசக் கோட்பாட்டை ஏற்பதில் பிரச்சினை இருக்க முடியாது, இருக்கக்கூடாது. கம்யூனிசக் கோட்பாட்டை சந்தேகிக்கும் கட்சி எப்படி கம்யூனிச வழியில் செயல்பட முடியும். கம்யூனிசத்தை முழுமையாக ஏற்ற கட்சியே கம்யூனிச வழியில் நடைபோட முடியும்.

அடுத்து மார்க்சியத்தை ஏன் ஏற்று அதன்படி செயல்படுகிறோம் என்பதை லெனின் விளக்குகிறார்.

மார்க்சியம்தான் முதன்முறையாக சோஷலிசத்தை கற்பனாவாதத்தில் இருந்து விஞ்ஞானமாய் மாற்றியது. இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தையும் அதை மேலும் மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் பின்பற்ற வேண்டிய பாதையையும் சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவ சுரண்டலை விஞ்ஞான வழியில் மார்க்சியம் விளக்கியது.

உழைப்புச் சக்தியை விற்கும் உழைப்பாளியை, வேலைக்கும் அமர்த்துவதின் மூலம் தொழிற்சாலை முதலாளிகள் லட்சக்கணக்கான உழைப்பாளிகளை எவ்வாறு அடிமைப்படுத்துகிறார்கள் என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதாரம் அம்பலப்படுத்துகிறது.

இந்த விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் முதலாளிகள் எப்படி பல்வேறு சிறு உற்பத்தியாளர்களை அழித்து, வளர்ந்து வருகிறார்கள் என்பதையும், அப்படி வளர்ந்து வரும் முதலாளித்துவம் இறுதியில் தனது உள்முரண்பாட்டின் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடியில் அகப்படுவதும், அதன் தீர்வாக சோஷலிச சமூகத்தை நிறுவ வேண்டியதின் சாத்தியப்பாட்டையும் மார்க்சியம், விஞ்ஞான வழியில் எடுத்துக் காட்டியது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடே வர்க்கப் போராட்டத்துக்குக் காரணம் ஆகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் தொழிலாளியான பாட்டாளி இந்த வர்க்கப் போராட்டத்துக்கு எப்படி, ஏன் தலைமை தாங்க வேண்டும் என்பதை மார்க்சியம் கம்யூனிஸ்டுகளுக்குப் போதிக்கிறது என்கிறார் லெனின்.

இந்த போதனையான மார்க்சியத்தைக் கற்காமல் தொழிற்சங்கத்தில் வேலை செய்ய முடியாது என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிசமே புரியவில்லை என்று கூறுகிற பல கம்யூனிஸ்டுகளை நம்நாட்டில் காண முடிகிறது. கம்யூனிசத்தைக் கற்பது என்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல. அதில் ஈடுபாடு உண்மையாக இருக்குமேயானால் அதை போதிப்பதற்கு நம் நாட்டில் நிறைய தோழர்கள் இருக்கின்றனர். அவர்களின் வீடியோக்களும் எழுத்துக்களும் இன்று நிறைந்து கிடக்கின்றன. நிறைய வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்றைய நிலையில் மார்க்சியத்தைக் கற்பது என்பது எளிதாகும். கம்யூனிச கட்சிகளும் வகுப்புகளை நடத்துகின்றன. பொதுவெளியில்கூட கட்சி வகுப்புகளை நடத்துகிறது.

தொழிலாளர்களுக்கு வழிகாட்டுகிற கம்யூனிஸ்டுகளின் கடமை என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதை முழுமையாக விஞ்ஞான வழியில் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தனிக் கல்வி அல்ல. அரசியல் செயல்பாட்டோடு கற்க வோண்டிய ஒன்றாகும்.

ஒரு கம்யூனிஸ்ட் கடசியின் பணியாக மார்க்சியம் என்ன கூறுகிறது என்பதை லெனின் அடுத்து சுட்டிக்காட்கிறார், அதை நாம் அப்படியே பார்க்கலாம். இதில் கட்சியின் பணி எது அல்ல என்பதையும் கட்சியின் பணி எது என்பதையும் லெனின் தெளிவாகவும் எளிமையாகவும் கூறியுள்ளார்.

 

“புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது (மார்க்சியம்) தெளிவுபடுத்திற்று: சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரம் வெல்வதையும், சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக்குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.” (52)

லெனின் இதில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதிக்குறிக்கோளை அடைவதற்கான தலைமைப் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இதனை நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாத கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியாக செயல்பட முடியாது என்பதே உண்மை ஆகும்.

இதுவரை லெனின் கூறியதை நினைவு படுத்திக் கொள்வோம்.

சமூகத்தைத் திருத்தியமைப்பதற்கு செயற்கையானத் திட்டங்களை வகுப்பது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் அல்ல, தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாடு அடையவது குறித்து முதலாளிகளுக்கு அறிவுரை அளிப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை அல்ல. அதுமட்டுமல்லாது சதிகளைப் புரிந்து சமூகத்தை மாற்றுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை அல்ல.

அப்படி என்றால் ஒரு கம்யூஸ்ட் கட்சியின் கடமை என்ன? அதை லெனின் அடுத்து கூறுகிறார். பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டதை ஒழுங்கமைப்பதும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை புரட்சியின் மூலம் வெல்வதும், அதன்பின் அமைக்கப்பட்ட சோஷலிச சமூகத்தை ஒழுங்கமைக்கப்படுவதும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதிக்குறிக்கோளாகும். இந்த இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு தலைமைத் தாங்குவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பதே மார்க்சியம் என்று லெனின் தெள்ளத்தெளிவாக நமக்கு விளக்கி இருக்கிறார்.

இந்த இறுதிக்குறிக்கோளை புரிந்து கொள்ளாது, அன்றாட சீர்திருத்தப் போராட்டத்துடன் நின்றுபோவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி அல்ல. இறுதி நோக்கத்தை புரிந்து செயல்படுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் பணியாகும். ஆகவே கம்யூனிஸ்ட்டாக செயல்படுவதும், கம்யூனிஸ்டுகளை, கட்சி தலைமைத் தாங்குவதும் அவ்வளவு சாதாரண செயல் அல்ல. தமது குறிக்கோளை கட்சி சரியாகப் புரிந்து அதை அடைவதற்கான திறத்தைப் பெற வேண்டும். பெற முடியவில்லை என்றால் அதை எப்படி கம்யூனிஸ்ட் கட்சி என்ற கூறிட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி என்றால் தமது இறுதி நோக்கத்தை அடைவதற்கான திறத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.

மார்க்சியம் பழைமைப் பட்டுபோய்விட்டது அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறுகிறவர்களின் உள்நோக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொண்டும் மார்க்சியத்தில் உறுதி கொண்டும் செயல்பட வேண்டும். இதைப் பற்றி லெனின் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.

மார்க்சியத்தைப் “புதுப்பிப்பதாய்” உரக்கக்கூறும் ஜெர்மன் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெர்ன்ஷ்டைன் போன்றோர்கள் புதியதாய் எதையேனும் மார்க்சியக் கோட்பாட்டில் புகுத்தியிருக்கிறார்களா? என்று கேட்டால் எதுவும் இல்லை என்பதே உண்மை ஆகும். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து லெனின் மிகவும் கோபமாகப் பேசுவதாகவே தெரிகிறது.

லெனின் கேட்கிறார், மார்க்சும் எங்கெல்சும் மார்க்சியத்தை வளர்த்தெடுக்குமாறு அதாவது மேம்பட்ட விஞ்ஞானமாக வளர்த்திடுமாறு நமக்குக் கட்டளையிட்டதை இப்படிப்பட்டவர்கள் ஓரடிகூட செய்திடவில்லை, பாட்டாளி வர்க்கத்துக்கு எத்தகைய புதிய போராட்டமுறையும் இவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்று லெனின் கடுமையாகச் சாடுகிறார்.

உண்மையில் இவர்கள் செய்தது என்னவென்பதை அடுத்து லெனின் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சியத்தைப் புதுப்பிப்பதாய் கிளம்பிய இத்தகையவர்கள், பிற்பட்டக் கோட்பாடுகளில் சிறு பகுதியை பெற்றுக் கொண்டுள்ளனர். பாட்டாளி வர்க்கத்துக்கு போராடும் கோட்பாட்டை போதிக்காமல், விட்டுக் கொடுக்கும் அதாவது சலுக்கைக்காட்டும் கோட்பாட்டை, புதுப்பிப்பதாய் கூறுபவர்கள் பரப்புரை செய்து மார்க்சியத்தில் இருந்து பின்வாங்குகிறார்கள்.

இந்த ஜெர்மன் பெர்ன்ஷ்டைனைப் பற்றி பிளெகானவ் ஈவிரக்கமின்று விமர்சித்தது முற்றிலும் சரி என்கிறார் லெனின். பெர்ன்ஷ்டைனுடைய கருத்துக்களை ஜெர்மன் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாலும் நிராகரிக்கப்பட்டிருப்பதையும் லெனின் இங்கே குறிப்பிடுகிறார்.

மார்க்சியத்துக்கு எதிரானப் போக்கை, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நுழையும் போதே அதை இனம்கண்டு எதிர்த்துப் போராட வேண்டும், இதுவே சர்வதேச அனுபவம் நமக்கு போதிக்கிறது.

அடுத்து லெனின் கூறுவது மிகவும் முக்கியமானது ஆகும். அவர் கூறியதில் சாரத்தைப் பார்த்துவிட்டு அதை நேரடியாகவே பார்ப்போம்.

மார்க்சியக் கோட்பாடுகளை கம்யூனிஸ்டுகள் முற்றிலும் முடிவான ஒன்றாகக் கருதவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சியம் விஞ்ஞானத்தின் அடிப்படையை மட்டுமே அமைத்துத்தந்துள்ளது. வாழ்க்கையோடு நடைபோடும்போது இந்த மார்க்சிய விஞ்ஞானத்தை அனைத்து திசைகளிலும் வளர்த்துச் செல்ல வேண்டும் என்பதை கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கிறார்கள்.

மார்க்சியக் கோட்பாட்டை சுதந்திரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியது ருஷ்யக் கம்யூனிஸ்டுகளுக்கு தேவையான ஒன்றாக லெனின் கருதுகிறார். ஏனென்றால் இந்தக் கோட்பாடு பொதுவான வழிகாட்டுதலையே கொடுத்துள்ளது. குறிப்பான முறையில் அவை பிரான்சில் இருந்து வேறுவிதமாக இங்கிலாந்தில் கையாளப்பட வேண்டும்,  ஜெர்மனியில் இருந்து வேறுவிதமாக பிரான்சில் கையாளப்பட வேண்டும். அதே போல ருஷ்யாவில் இருந்து வேறுவிதமாக ஜெர்மனியில் கையாளப்பட வேண்டும்.

ஆகவே குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் கடைபிடிக்க வேண்டியதை அவர்கள்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் அதனால் கோட்பாட்டுப் பற்றி பிரச்சினையில் தங்களது பத்திரிகையில் மகிழ்ச்சி உடன் இடம் கொடுப்பதாக லெனின் கூறுகிறார். மேலும் சர்ச்சைக்கு உரிய அனைத்து விவரங்களை பகிரங்கமாக விவாதிக்குமாறு அனைத்துத் தோழர்களுக்கும் லெனின் அழைப்பு விடுக்கிறார். இதை லெனின் எழுத்துக்களிலேயே பார்ப்போம்.

“மார்க்சின் கோட்பாட்டை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய், மீறக்கூடாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோஷலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது, சோஷலிஸ்டுகள் வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசைகளிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம்.

 

மார்க்சின் கோட்பாடு தன்னிச்சையான முறையில் விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தக் கோட்பாடு பொதுவான வழிகாட்டும் கொள்கைகளையே அளித்திடுகிறது; குறிப்பட்ட முறையில் அவை பிரான்சிலிருந்து வேறு விதமாய் இங்கிலாந்திலும், ஜெர்மனியிலிருந்து வேறு விதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் கையாளப்படுகிறவை.

 

ஆகவே கோட்பாட்டுப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளுக்கு எமது பத்திரிகையில் மகிழ்ச்சியுடன் நாம் இடம் அளிப்போம், சர்ச்சைக்குரிய விவரங்களைப் பகிரங்கமாய் விவாதிக்குமாறு எல்லாத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” (54)

   தொழிலாளர்களுக்கான வர்க்கப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு நிகழ்த்துக்கின்றனர் என்பதை அடுத்து பார்ப்போம். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சித்தாந்தப் போராட்டத்தைப் பார்த்தோம். அடுத்து பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் பார்க்கலாம்.

தொழிலாளர்களுடைய நிலைமைகள் மேம்பாடு அடைவதற்குத் தனிப்பட்ட முதலாளிகளுடன் எதிர்த்துப் போராடுவது பொருளாதாரப் போராட்டம். மக்களுடைய உரிமைகள் விரிவடைவதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் விரிவடைவதற்காக அரசாங்கதை எதிர்த்து நடத்தும் போராட்டம் அரசியல் போராட்டமாகும்.

ருஷ்ய கம்யூனிஸ்டுகளில் சிலர் பொருளாதாரப் போராட்டத்தை ஒப்பிட முடியாத அளவுக்கு மிகமிக முக்கியமானதாக கருதுகின்றனர். இவர்கள் அரசியல் போராட்டம் என்பதை எதிர்காலத்துக்கு உரியதாய் ஒதுக்கிவிடுகின்றனர். இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் தவறானது என்கிறார் லெனின். மேலும் அவர் கூறுகிறார், பொருளாதாரப் போராட்டத்துக்காக அரசியல் போராட்டத்தை மறப்பதானது சர்வதேச கம்யூனிசத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகிவிடும். தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு அனைத்தும் நமக்குப் போதித்ததை மறப்பதாகிவிடும்.

லெனின் கூறிய இதை கம்யூனிஸ்ட் கட்சி கவனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அன்றாடப் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினையாக வர்க்கப் போராட்டாமாக மாற்ற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் பணி இதுவே ஆகும்.

அடுத்து லெனின் கூறுவதை கவனத்துடன் கேட்டு, ஏற்று பின்பற்றுவோம்.

முதலாளித்துவத்தையும் அதற்கு பணிபுரியும் அரசாங்கத்தையும் மட்டும் பின்பற்றுபவர்களே தொழிலாளர்களுக்கு பொருளாதார சங்கங்களை அமைப்பதோடு நின்றுவிடுகின்றனர். இதன் மூலம் இவர்கள் அரசியலில் இருந்தும் இறுதிக் குறிக்கோளான சோஷலிசத்தில் இருந்தும் திசைவிலகிவிடுகின்றனர். ருஷ்ய அரசாங்கமும்கூட இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்வது முற்றிலும் சாத்தியமே என்கிறார் லெனின். அதாவது, கூலி உயர்வு போராட்டத்தையே வர்க்கப் போராட்டமாக நினைத்தால் அதை ஆளும் வர்க்கமே செய்யத் தயராக இருக்கிறது.

பொருளாதாரப் போராட்டத்துடன் நிற்கின்ற அரசியல் முதலாளித்துவ அரசியலே என்று லெனின் பல இடங்களில் விளக்கி இருக்கிறார் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம். அற்ப கவளங்களை கொடுப்பதில் அனைத்து சுரண்டும் வர்க்கத்தின் அரசு செய்யவே விரும்புகிறது. ஏன் இப்படி செய்கிறது என்பதை லெனின் அடுத்துக் கூறுகிறார்.

இதன் மூலம் ஒடுக்கப்படுகின்றோம், உரிமைகள் இல்லாத இருக்கின்றோம் என்கிற உண்மையை மறைப்பதற்கு இதுபோன்ற சிறு கவளங்களை தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. இதை மட்டும் பெற்றுத் தருவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தேவையில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து லெனின் கூறுவது நம் நாட்டில் உள்ள புரட்சிகர போராளிகளுக்கு எதிராக இருக்கிறது. அதாவது சட்டவழியில் போராடுவது இவர்களுக்கு புரட்சிக்கு எதிரானதாகப்படுகிறது. சட்டமன்றனத்துக்கு செல்வது என்பது புரட்சியை காட்டிக் கொடுப்பதாக இவர்களுக்கு தோன்றுகிறது. பொருளாதாரப் போராட்டத்தில் ஈடுபடாத இவர்கள், அரசியல் போராட்டத்தை நடத்துவதாக கூறிக் கொள்கின்றனர். பொருளாதாரப் போராட்டத்துடன் அரசியல் போராட்டம் இணைந்துள்ளது என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. இருக்கும் உரிமையை பயன்படுத்தாமல், எவ்வளவு தடையைப் போட்டாலும் அதைப் பயன்படுத்தாமல் நாம் அரசியல் போராட்டத்தை நடத்த முடியாது.

ஏனென்றால் பொருளாதாரப் போராட்டத்தின் எல்லையையும் அதற்குத் தேவைப்படுகிற அரசியல் போராட்டமும், தொழிலாளர்களுக்கு முழுவிடுதலையை பெற்றுத்தராது என்பதை அனுபவழியில் தொழிலாளர்கள் தெரிந்து கொள்வதற்கு இப்படிப்பட்ட போலி புரட்சியாளர்கள் தடையாக இருக்கின்றனர். சட்டவழியில் சிறப்பாக செயல்படத் தெரிந்த கட்சிக்கே, சட்டவழியற்ற போராட்டத்தில் சிறப்பாக செயல்படமுடியும். அனுபவத்திற்கு வராதவர்களால் இதனை புரிந்து கொள்ள முடியாது. கோட்பாடும் அனுபவமும், அனுபவமும் கோட்பாடும் இணைந்ததாகும். சட்ட போராட்டமும் சட்டவழியற்ற போராட்டமும் இணைந்ததாகும். இதனை போல்ஷிவிக்குகளின் அனுபவம் சர்வசேத்துக்கு அளித்துள்ளது. இதனைப் புரிந்து கொண்டால்தான் மக்களுடன் இணைந்து வெற்றி பெற முடியும். இல்லை என்றால் மக்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டிவரும்.

எந்தவித கூடுதல் விளக்கமும் இல்லாமல் லெனின் கூற்றை அப்படியே அடுத்துப் பார்ப்போம்.

 

“தொழிலாளர்கள் தடையின்றி சுதந்திரமாய்க் கூட்டங்கள் நடத்தவும் சங்கங்கள் அமைக்கவும் தமது சொந்த செய்தியேடுகளைப் பெற்றிருக்கவும் தேசியச் சட்டமன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் உரிமை உடையோராய் இருந்தாலன்றி, ஜெர்மனியிலும் ஏனைய எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் (துருக்கியையும் ருஷ்யாவையும் தவிர்த்து) தொழிலாளர்களுக்கு இருந்துவரும் இந்த உரிமைகளை உடையோராய் இருந்தாலன்றி, எந்தப் பொருளாதாரப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு நீடித்த மேம்பாட்டைக் கிடைக்கச் செய்யவும் முடியாது, பெரிய அளவில் நடத்தப்படவுங்கூட முடியாது. ஆனால் இந்த உரிமைகளை வென்று கொள்ள வேண்டுமாயின் அரசியல் போராட்டம் நடத்துவது இன்றியமையாததாகும். ருஷ்யாவில் தொழிலாளர்கள் மட்டுமின்றி குடிமக்கள் எல்லோருமே அரசியல் உரிமைகள் இல்லாதோராகவே இருக்கின்றனர்.” (56)

      லெனின் இங்கே ஐரோப்பாவில் காணப்படும் உரிமை ருஷ்யாவில் கிடைக்கவில்லை என்பதையும் சேர்த்தே கூறியுள்ளார். அடுத்து லெனின் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம்.

 

“முதலாளிக்கு எதிரான ஒவ்வொரு வேலை நிறுத்தமும் இராணுவமும் போலீசும் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுவதில் முடிவடைகிறது. ஒவ்வொரு பொருளாதாரப் போராட்டமும் தவிர்க்க முடியாதபடி ஓர் அரசியல் போராட்டமாகிவிடுகின்றது. சமூக-ஜனநாயகவாதமானது (கம்யூனிசமானது) ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாதபடி இரண்டையும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே வர்க்கப் போராட்டமாய் இணைத்தாக வேண்டும். இத்தகைய ஒரு போராட்டத்தின், முதலாவதும் தலைமையானதுமான நோக்கம் அரசியல் உரிமைகளை வென்று கொள்வதாய், அரசியல் சுதந்திரத்தை வென்று கொள்வதாய் இருத்தல் வேண்டும்.” (57)

லெனினது இந்தக் கூற்றுக்கு என்ன விளக்கம் தேவைப்படுகிறது. எளிமையாக நமக்குப் புரிய வைத்துள்ளார். புரிந்து கொள்ள வேண்டியது நமது கடமை.

வர்க்கப் போராட்டம் என்பது வெறும் பொருளாதாரப் போராட்டம் அல்ல, அதனோடு அரசியல் போராட்டதையும் இணைத்துக் கொள்ள வேண்டும். வர்க்க போராட்டம் என்பது அரசியல் அதிகாரத்தை வென்று கொள்வதில் முடிவடைகிறது.

சட்டவழியிலான போராட்டத்தின் தேவை சட்டப் போராட்ட முறை கிடைக்காத ருஷ்ய போல்ஷிவிக்குகளுக்குத் தெரிந்திருக்கிறது. இதைத் தெரிந்து கொண்டதின் காரணமாகவே சட்டவழியற்றப் போராட்டத்தில் போல்ஷிவிக்குகளால் வெற்றி அடைய முடிந்திருக்கிறது. கோட்பாட்டை நடைமுறையோடு இணைத்துப் பார்ப்பவர்களுக்கு இதை நான்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

      லெனின் கூறுகிறார், பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர்கள், ருஷ்ய கம்யூனிஸ்டுகளிடம் இருந்து கிடைத்த சிறிதளவு உதவியைக் கொண்டு அரசாங்கத்திடம் போராடி சிறிய அளவு சலுகையை பெற்றுக் கொள்வதில் வெற்றிக் பெற்றுள்ளார்கள். இதே போல ஒட்டுமொத்த ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் ஒருமித்த ருஷ்ய கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியால் தலைமை தாங்கி வெற்றிபெற முடியும்.  மற்ற வர்க்கங்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு உதவ வராவிட்டாலும்கூட ருஷ்யாவின் தொழிலாளி வர்க்கம் தனித்து நின்று தனது பொருளாதார, அரசியல் போராட்டத்தை நடத்திச் செல்ல முடியும். ஆனால் தொழிலாளர் வர்க்கம் தனித்து நிற்கவில்லை என்கிறார் லெனின்.

தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் வெற்றி பெறும்போது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அதற்கு ஆராவு கிடைக்கும். ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, மக்களது உரிமைகளுக்காகப் போராடுவோர் அனைவரின் தலைமையிலே நின்று செயல்படும், அப்படிப்பட்ட தலைமை வெல்ல முடியாத பலம் பெறும். இதுவே தமது அடிப்படைக் கருத்தோட்டங்கள், இதை அனைத்து கோணங்களிலும் வளர்த்துச் செல்லப்படும். இந்த வழியில் ருஷ்யாவின் கம்யூனிச தொழிலாளர் கட்சி நடைபோடும் என்று லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார்.

      இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பேசியது சித்தாந்தப் போராட்டம், அடுத்து பேசியது, பொருளாதாரப் போராட்டமும் அரசியல் போராட்டமும் ஆகும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம், சித்தாந்தப் போராட்டம் ஆகிய மூன்றும் ஆவசியமானதாகும் என்பதை லெனின் இந்த சிறிய கட்டுரையின் மூலம் நாமக்கு அறிவுறுத்தி உள்ளார்.

      லெனின் வழியில் செல்வோம் வெற்றி பெறுவோம் என்று கூறி இன்றைய உரையை முடிக்கிறேன்.

No comments:

Post a Comment