Wednesday, 12 January 2022

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - அணிந்துரை - சுந்தர சோழன்

 அணிந்துரை:-

சுந்தர சோழன்

மார்க்சிய எழுத்தாளர்

 


மனிதன் என்பவன் யார்?, அவன் எப்போது எப்படித் தோன்றினான்?, இந்தப் பிரபஞ்சம் எப்படி எதிலிருந்து உருவானது?, மனிதனின் இருத்தலுக்கும் அவனது உணர்வு நிலைக்குமான தொடர்பு என்ன?, யதார்த்தம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?, மனிதனுக்கும் நாம் வாழும் இந்த உலகத்திற்குமான தொடர்பு என்ன? இப்படி ஏராளமான கேள்விகள் பல்லாயிரம் ஆண்டுகளாகவே மக்கள் மனதில் எழுந்துள்ளன. அவற்றுக்கு விடைதேடுவதற்கு மனிதன் முயற்சி செய்து வந்துள்ளான். இவற்றையும் இவற்றுடன் தொடர்புடைய வேறு பல சிந்தனை முறைகளையும் விளக்கும் கோட்பாடுகளே தத்துவம் என்று அறியப்படுகின்றன.

இவை மனித மனங்களில் சாதாரணமாக எழக் கூடிய கேள்விகளே என்பதால் தத்துவம் என்பது காடுகளில் உறையும் ரிஷி முனிவர்கள், உலகின் தலைசிறந்த அறிவுபடைத்தவர்கள் மட்டுமே சிந்திக்கக் கூடிய, அவர்கள் மட்டுமே விளக்கவோ புரிந்து கொள்ளவோ கூடிய அதிமானுடக் கோட்பாடு கிடையாது.

துவக்ககால மனிதனைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தத்துவம் குறித்த தேடல் ஏதும் இருக்கவில்லை. இயற்கையின் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், அதனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளாத வரையில் அங்கே தத்துவத் தேடல் எதுவும் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. இயற்கையுடனான இடையறாத போராட்டமும் அதில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியுமே அங்கே பிரதானமாக இருந்திருக்க முடியும். அதையும் தாண்டிச் சென்றால், அன்றைய மனிதன் இயற்கையின் விளங்க இயலாத அதிசய நிகழ்வுகளைக் கண்டு அதிசயித்து நின்றதை மட்டுமே காணலாம். அதன் காரணமாக அவற்றுக்கு அளவிட முடியாத சக்தி இருப்பதாகக் கற்பனை செய்து, அவற்றை வியந்தும் புகழ்ந்தும் பாடினான்; உருவகப்படுத்தி மகிழ்ந்தான். இதற்கு ஒப்பான பல துதிப்பாடல்களை ரிக்வேதத்தில் காணலாம். இவற்றில் தத்துவத்தின் துவக்கக் கீற்றுகளைக் கூடக் காண முடியாது என்பது திண்ணம்.

நாம் மேலே குறிப்பிட்ட அடிப்படைக் கேள்விகளுக்கு  - குறிப்பாக மனிதனின் இருத்தல் மற்றும் உணர்வுநிலை ஆகிய இரண்டில் முதலில் தோன்றியது எது என்ற கேள்விக்கு - அளிக்கப்பட்ட பதில்கள் தத்துவஞானிகளை கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் என்று இரண்டு முகாம்களாகப் பிரித்தன.

இவ்விரு முகாம்களும் தத்துவத் தேடல் தொடங்கிய காலம் தொட்டே இருந்து வந்துள்ளன. இந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. பண்டைய இந்தியத் தத்துவஞானத்தில் பொருள்முதல்வாதம் மிக முக்கியமாகக் குறிப்பிடத் தக்க ஒன்றாக இருந்தது. சார்வாகம், லோகாயதவாதம் என்ற பல பெயர்களில் இதனை நாம் காணலாம். இராமாயணம் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட காப்பியங்களில் கூட இதன் கூறுகள் காணக் கிடைக்கின்றன.

ஆறு தரிசனங்கள் எனப்படும் பண்டைய இந்தியத் தத்துவ முறைகளிலும் சில  பொருள்முதல்வாதத் தத்துவமாகவே இருந்தன என்று தெரிகிறது. அவற்றின் மூல நூல்கள் பல தற்போது கிடைக்கவில்லை. மேலும், பிற தத்துவங்களை இணைத்து, அவை நீர்த்துப் போகும்படிச் செய்யப்பட்டன

இந்தியத் தத்துவஞானம் என்பது அடிப்படையில் ஆன்மா பற்றிய கருத்தாக்கத்தை – பிரம்மத்தை நோக்கிய தேடலை – மையமாகக் கொண்டிருந்தது போன்ற ஒரு சித்திரத்தை முன்வைக்கப் பழமைவாத முகாம் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளது.

ஆனால், இந்தியத் தத்துவஞான மரபு என்றால் நிச்சயமாக அது ஆன்மாவைத் தேடும் அகவயக் கருத்துமுதல்வாதம் மட்டுமே ஆகாது என்பதைக் கவனத்தில் நிறுத்த வேண்டும். மாறாக அது காலத்தால் பிந்தையதும், பண்டைய இந்தியாவின் மிக நீண்ட தத்துவஞான மரபில் இறுதியாகத் தோன்றியதும் மட்டுமே ஆகும். இந்த நம்பிக்கையின் மூலவிதை கூட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தது என்று கூறிவிட முடியாது. மாறாகப் பண்டைக் காலத்தில் இருந்தே, உடலினின்று வேறான, அழிவற்ற ஆத்மா என்பதைக் குறிக்கும் ஆத்மன் என்பதன் பல்வகையான வேர்ச்சொற்கள் பண்டைய இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இடம் பெற்றிருந்தன.

“பண்டைய மனிதர்கள் தங்களது உடல்கட்டமைப்பைப் பற்றி அறியாதவர்களாக இருந்தபடியால் தங்களது சிந்தனையும் உணர்வுகளும்….உடலில் வசிக்கிற, மரணத்தின் போது அதிலிருந்து வெளியேறுகிற விசேஷமான ஆன்மாவின் செயல்கள் என்று நம்பியதில் இருந்து, அந்தக் காலத்திலிருந்து இந்த ஆன்மாவுக்கும் வெளிஉலகத்திற்கும் இடையேயுள்ள உறவுகளைப் பற்றிச் சிந்திக்கும்படி மனிதர்கள் தூண்டப்படுகிறார்கள்” என்று எங்கெல்ஸ் கூறுவது (லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்) ஆன்மா பற்றிய கருத்தாக்கம் என்பது முன்னேறிய அதிநுட்பமான மானிடச் சிந்தனையில் இருந்து தோன்றியதல்ல, மாறாக பழங்கால அறியாமையின் விளைபொருளே என்பதைத் தெளிவாக்குகிறது. இதில் சூக்கும்மான சிந்தனை எதுவும் இல்லை!

*   *   *   *   *

இந்திய தத்துவஞானத்தின் கருத்துப் பெட்டகமாக முன்வைக்கப்படும் உபநிடதங்கள், பிராமண மதத்தின் பல்வேறு போக்குகளின் வளர்ச்சிப் போக்குக்கு ஏற்ப, மாற்றுப் பள்ளியைச் சேர்ந்த வழிபாட்டு மற்றும் சிந்தனை முறைகளின் சாரத்தையும் உள்வாங்கிச் செரித்து ஒருங்கிணையச் செய்யும் (synthesis) போக்கிலும் பயன்படுத்தப் பட்டன என்பதைக் காணத் தவறக் கூடாது.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதனை மிகச் சிறப்பாக விளக்கி விடும்.

ருத்ர-சிவன் குறித்த பிராமண மத இலக்கியங்களின் நிலைப்பாடும், அவற்றின் உள்ளடக்கமும் இந்த விசயத்தில் மிகக் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை ஆக உள்ளன.

ரிக் வேத ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைவதற்கு முன்னர் கோலோச்சிய அரப்பா நாகரீக மக்கள் லிங்க வழிபாடு உள்ளிட்ட வளமை வழிபாடுகளைப் பின்பற்றியதைத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. அரப்பா நாகரீக முத்திரைகளில் காணப்படும் தொல் சிவன் முத்திரை, பின்னாளில் பசுபதியுடன் அடையாளம் காணப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைவதற்கு முன்னர் ஆரியர்களிடம் லிங்க வழிபாடு வழக்கத்தில் இருக்கவில்லை. மேலும், லிங்க வழிபாடு மற்றும் அதனைப் பின்பற்றுபவர்களை இழித்துரைக்கும் விதமாக ‘சிஸ்ணதேவ’ என்று ரிக்வேதம் குறிப்பிட்டது. ருத்திரன் எதிர்மறைக் கடவுளாக, அஞ்சி நடுங்கத் தக்க, விலகி இருக்க வேண்டிய கடவுளாகக் குறிப்பிடப் பட்டான். ருத்திரனின் கோபத்தைத் தணிக்கும் விதமாக (பிற்காலத்தில்) அமைதி தவழும், மங்கலகரமான கடவுளாக சிவன் என்று உருவகப்படுத்தப் பட்டார். “என்னை ஒன்றும் செய்து விடாதே, எனது வீர வாரிசுகளை ஒன்றும் செய்து விடாதே, எனது வேலையாட்களை ஒன்றும் செய்து விடாதே” என்று மன்றாடுவது வேத நம்பிக்கைகளைப் பின்பற்றியவர்களின் (ருத்ரனிடம்) பொதுவான வேண்டுகோளாக இருந்தது. எதிர்மறைக் கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட ருத்திரனை முஜாவந்த் மலைக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்குப் போய்விடும் படியான வேண்டுதல்கள் கூட உண்டு.

தொடக்கக் கால ஆரியர்கள் அஞ்சி நடுங்கிய எதிர்மறைக் கடவுளாகிய ருத்ரன், ஐதரேய பிராமணத்தில் வேதக் கடவுளர் வரிசையில் அதிரடியாக நுழைந்தார்.  பின்னர் ஸ்வேதாஸ்தார உபநிடதம், சிவ ருத்ரனைப் பிரபஞ்சத்தைப் படைத்து காலத்தின் முடிவில் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் முழு முதல் கடவுளாக, முதற் காரணியாக மாற்றும் போக்கை முழுமை செய்தது

இவ்வாறு பல நூற்றாண்டுக் கால வளர்ச்சிப் போக்கில், ரிக் வேத ஆரியர்கள் கண்டு நடுங்கிய, அஞ்சி விலகிய கடவுளான ருத்திரன் மங்களகரமான சிவனாக உருமாற்றம் பெற்று, பிரபஞ்சக் கடமைகளைப் பெற்று, இன்றைய இந்து மதத்தின் இரு பெரும் போக்குகளில் ஒன்றான வைதீக சைவ மதத்தின் மையக் கடவுளாக ஆனார்.

*   *   *   *   *

இந்தியத் தத்துவ ஞானம் – குறிப்பாக பிராமண மதம் சார்ந்த தத்துவ ஞானம் – பல்வேறு தத்துவப் போக்குகள் அல்லது பள்ளிகளை முன்னிறுத்துவதற்கான மதவியல் முயற்சிகளையும், அதன் ஒரு பகுதியாக முன்வைக்கப் பட்ட புனைகதைகளையும் ஒருங்கே திரட்டிய கதம்பத் திரட்டு ஆகவே இருக்கிறது. இவற்றை விலக்கி விட்டு உண்மையான தத்துவச் சாரத்தைத் தேடினால் அது மிகக் குறைவாகவே இருப்பதைக் காணலாம்.

*   *   *   *   *

இந்திய தத்துவஞானம் குறித்துப் பேசும் ஒருவர், பகவத் கீதையைப் பேசாமல் கடந்து போக முடியாது. அந்த அளவுக்கு இந்தியத் தத்துவஞானத்தின் சாரத்தை உள்ளடக்கியது கீதை என்று பழமைவாத இந்து நம்பிக்கை கருதுகிறது. பகவத்கீதையை மயிர் பிளக்கும் தத்துவ விவாதங்களை உள்ளடக்கிய கருத்துப் பெட்டகம் மட்டுமே என்று கருதுவது தவறாகி விடும். கடோபநிடதத்தின் ஆன்மத் தத்துவத்தை இன்னும் விரிவுபடுத்தி, மிக உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் கீதை, ஆன்மத் தத்துவத்தின் தொடர்ச்சியாக மறுபிறப்புக் கோட்பாட்டையும், அதன் மூலம் நால் வர்ண சமூக அமைப்பையும் நியாயப்படுத்தி அதனை இறைவனால் அருளப்பட்ட புனித ஏற்பாடாக நிறுவும் பணியைச் செவ்வனே செய்தது.

தன்னைச் சரணடையுமாறு கீதையில் கிருஷ்ணன் கூறுவது, ஆன்மத் தத்துவத்தைக் காட்டிலும் ஏக இறைவனிடம் சரணடையக் கோரும் சரணாகதித் தத்துவத்தை வலியுறுத்தும் பக்தி இலக்கிய முயற்சியின் தொடர்ச்சியே ஆகும். கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் மட்டுமின்றி பக்தி மார்க்கத்தையும் பிரேரேபிப்பதாக கீதை அமைந்துள்ளது.

ஆனால் அத்வைதம், துவைதம், விசட்டாத்துவைதம் போன்ற மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொண்ட ஒவ்வொறு மதப்பிரிவும் கீதை உள்ளிட்ட மூலப் படைப்புகளைத் தனது தத்துவத்திற்கு ஏற்ப விரித்துரைத்தன. என்னவொரு விந்தை?

*   *   *   *   *

இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட – இன்னும் சொல்லப் போனால் எதிர் நிலையில் நின்ற - பல்வேறு தத்துவப் போக்குகளின் தொகுப்பே இந்தியத் தத்துவஞானம் ஆகும். எனவே, இந்தியத் தத்துவஞானம் என்பதை வெறும் இந்து தத்துவவியல் ஆகக் கருதுவது கிணற்றுத் தவளை உலகை எடைபோட முயற்சிப்பதற்கு ஒப்பான ஒரு முயற்சியாகும். பண்டைய இந்தியாவில் பிராமண மதத்திற்கு எதிராக – ஒரு காலத்தில் அதைக் காட்டிலும் வலுவானதாக – இருந்த பண்டைய பவுத்தம் ஆத்மா பற்றிய கருத்தை மறுத்தது. அதனைக் குறிக்கும் விதமாக அனத்தா (அல்லது ஆத்மமின்மை) என்பது பற்றிய குறிப்புகளைப் பண்டைய பவுத்த நூல்களில் காணலாம்.

புத்தரது காலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தத்துவப் பள்ளிகள் அல்லது போக்குகள் இருந்தன என்று அக்கால நூல்களில் இருந்து நாம் அறிகிறோம். அவை பெரும்பாலும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதிகளைப் பற்றிய கூற்று மட்டுமே என்று கூறலாம். ஆத்ம மைய சிந்தனையை முன்வைத்த அத்வைதம் போன்றவை அத்தகைய எண்ணிறந்த சிந்தனைப் பள்ளிகளில் ஒன்று மட்டுமே ஆகும்.

இவை அனைத்தும் ஆன்மத் தேடலும், மாயாவத சிந்தனையை முன்னிறுத்திய வேதாந்தமும் தான் இந்தியத் தத்துவஞானத்தின் ஆணி வேராகும், அவற்றின் பிழிவு அல்லது சாரத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்ற பழமைவாதக் கருத்தை உடைத்தெறிகின்றன.

*   *   *   *   *

இறுதியாக, தன்னைப் பொருள்முதல்வாதி எனக் கருதும் ஒரு நபர் இந்தியத் தத்துவஞானத்தை ஏன் கற்க வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் தேவைப்படுகிறது. அது பிரதானமாக அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்பது தான் நிரூபிக்கப்பட்டு விட்டதே? அதன்படிப் பார்த்தால் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று தானே? அது சமூகத்தின் வெறும் மேல்கட்டுமானம் மட்டும் தானே? பொருள்முதல்வாதிகள் அடித்தளத்தின் மீது அதிக கவனம் செலுத்தி, அதனை மாற்றியமைக்க முயல்பவர்கள் இல்லையா? அத்தகைய மேல்கட்டுமானம், சமூகத்தின் அடித்தளத்தின் மீது தீர்மானகரமான தாக்கம் செலுத்த இயலாது என்பது தானே நாம் கற்றுக் கொண்ட பொருள்முதல்வாதப் பார்வையின் சாரம்? இப்படியான பல கேள்விகளை எதிர் கொள்ளலாம்.

ஆனால் அது சரியான பார்வையாக இருக்க முடியாது என்பது திண்ணம்.

எந்தவொரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் ஆக இருப்பது எதுவோ, அதுவே அன்றைய சமூகத்தில் கோலோச்சும் தத்துவமாக இருக்கும் என்பது வரலாறு நமக்குக் கற்பித்த உண்மை. அந்த வகையில் அன்றும் இன்றும் என்றும் அத்வைதம் உள்ளிட்டக் கருத்தியல்கள் ஆளும் வர்க்கத்தினரின் கருத்தியல்களே. அவர்களுக்குச் சேவை செய்பவை மட்டுமே.

“நீதி, மதம், அரசியல், சமுதாயம் தொடர்பான எல்லா விதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும், தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோர் ஆகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்” என்று லெனின் சுட்டிக் காட்டியதை இந்தத் தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்தியத் தத்துவஞானத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும், அவை முன்வைக்கும் பிரகடனங்களுக்கும் பின்னே எந்த வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளாமல் அவற்றை மதிப்பிட முடியாது. எந்தவொரு தத்துவத்தின் சார்பு நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டுமாம் என்றாலும், முதலில் அந்தத் தத்துவம் குறித்த விரிவான புரிதல் அவசியம்.

இதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, இந்திய தத்துவஞானத்தைச் சுருக்கமாக அதே சமயம் தெளிவாக விளக்கும் விதமாக தோழர் அ.கா.ஈஸ்வரன் இந்த நூலை எழுதியுள்ளார். அவற்றின் உள்ளடக்கத்தை உள்ளது உள்ளபடிப் புரிய வைப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ள அதே சமயம், அவற்றின் உண்மைத் தன்மையையும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

உபநிடதங்கள் குறித்த பகுதியில், உபநிடதங்கள் உள்ளிட்ட தத்துவங்கள் சமூகத்தில் நிலவும் சொத்துடைமை முறையையும், அதனால் பயனடையும் சொத்துடைமை வர்க்கத்தையும் காப்பாற்றுவதற்கே பயன்படுகின்றன என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.

பெரிதும் போற்றப்படும் உபநிடதம் ஆகிய ஈசாவாஸ்ய உபநிடதம் பற்றிக் குறிப்பிடும் அவர்

சமூகத்தில் உள்ள மக்கள் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகின்றனர். அதாவது சிலர் பணக்காரர்களாகவும், பெரும்பான்மையினர் எவ்வளவு உழைத்தும் ஏழைகளாகவும் அல்லது தமது குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப்படுவதில் பற்றாக்குறையாகவும் காணப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் ஏற்படும் குழப்பத்தால் உருவாகும் கலகத்தைத் தடுப்பதற்கு ஏற்பட்டதே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்பதை இதன் முதல் பாடல் தெளிவுபடுத்துகிறதுஎன்று கருத்துமுதல்வாதத்தின் வர்க்க சார்பை அ.கா.ஈஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீதையில் கிருஷ்ணன் கடமையைச் செய்து விட்டு, அதற்கான பலன்களை எதிர்பார்க்காது, பக்தி மேலிட்ட சரணாகதி நிலையை விரும்பி ஏற்றவனையே  தனக்குப் பிடித்தவனாக அடையாளம் காட்டுகிற தத்துவத்தின் ஆளும் வர்க்க சார்பையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கீதை மட்டுமின்றி, அதற்கு உரை எழுதிய உரையாசிரியர்களும் கூட, தங்களது ஞான விளக்கங்களையும் தத்துவ முத்துக்களையும் தாண்டி வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதைத் தங்கள் கடமையாக மேற்கொண்டு செய்தனர். இதனை தோழர் அ.கா ஈஸ்வரன் கூறுவது ஒளிவுமறைவற்ற அதன் உண்மை முகத்தை நமக்குக் காட்டுவதாக அமைகிறது.

இந்து தத்துவஞானத்தின் பல்வேறு போக்குகளும் உழைக்கும் மக்கள் இவ்வுலகில் தமது உழைப்புக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது, அத்தகைய எதிர்பார்ப்புகளைக் கடந்து தனது கடமையை மட்டுமே செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அந்த வகையில் “பக்தி யோகமாக இருந்தாலும் சரி, கர்ம யோகமாக இருந்தாலும் சரி, ஞான யோகமாக இருந்தாலும் சரி அனைத்துமே பலனை எதிர்பார்க்காமல் உழைக்கும்படியே கூறுகிறது. பலன் கிடைப்பதற்கு இந்த உலகில் வழியில்லை என்றே ஆன்மீகம் கருதுகிறது” என்று நூலாசிரியர் கூறி இருப்பது முற்றிலும் சரியானதே. இந்து தத்துவஞானத்தில் உழைக்கும் மக்களின் கேள்விக்கு பதிலில்லை என்பதை இதை விடச் சரியாக எடுத்துக் காட்டிட முடியாது.

தோழர். அ.கா.ஈஸ்வரன் அவர்கள் எழுதியுள்ள இந்தியத் தத்துவஞானம் என்னும் இந்நூல், இந்து தத்துவஞானம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது மட்டுமின்றி அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கும் சிறப்பான வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதில் ஐயமே இல்லை.

 

*   *   *   *   *

No comments:

Post a Comment