Thursday 13 January 2022

அரசியல் பொருளாதார நூல்களின் சாரம் தொகுதி - I , முன்னுரை, அ.கா.ஈஸ்வரன்

முன்னுரை:-

அ.கா.ஈஸ்வரன்

9884092972

ak.eswarn@gmail.com



 

"அரசியல் பொருளாதார நூல்களின் சாரம்" என்கிற இந்த நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும் எழுதிய மூன்று அரசியல் பொருளாதார நூல்களின் சாரமாகும்.

இந்நூலில் எனது வேலை என்னவென்றால், “கூலியுழைப்பும் மூலதனமும்”, “கூலி விலை லாபம்” “கூலி முறை” என்ற மூன்று நூல்களில் காணப்படும் கருத்துக்களின் சாரத்தைத் தொகுக்கும் தொகுப்பாளரின் வேலையே ஆகும். இந்தத் தொகுப்பு வேலையை ஒரு ஆசிரியனாக இருந்தல்லாமல், மார்க்சியத்தைப் படிக்கும் மாணவனாக இருந்து செய்துள்ளேன். பொதுவாக எனது நூல்கள் அனைத்தும் இவ்வகையில் தான் இருக்கும், எனது பங்காக விளக்குவதில் சிறு முயற்சி செய்திருப்பேன் அவ்வளவே. அதை இனம் கண்டு சுட்டிக்காட்டிய வாசகர்களே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறார்கள்.

நூலின் நோக்கம் என்பது தேவைப்படுபவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாகும். இவ்வகையில் எனது எழுத்துப் பணி வெற்றியே ஆகும்.

நூலின் நோக்கத்தை அறியாதவர்கள் கூறுகிற விமர்சனத்தைக் கடந்து, உண்மையான விமர்சனத்தை நோக்கி, எனது நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல் 1847 ஆம் ஆண்டு ஜெர்மன் தொழிலாளர்களுக்குப் பிரஸ்ஸல்ஸில் (பெல்ஜியம்) மார்க்ஸ் நிகழ்த்திய சொற்பொழிவாகும் இதுவே பின்னாளில் பத்திரிகைகளில் நூலாகவும் வந்தது. 1865 ஆம் ஆண்டு முதலாம் அகிலத்தின் பொதுக்குழுவில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையின் நூல் வடிவமே “கூலி விலை லாபம்”. இந்த உரை மார்க்ஸ், எங்கெல்ஸ் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் மகளால் 1898 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்து தொழிற்சங்கத்தின் (The Labour Standard) “தொழிலாளர் தரநிலை” என்ற பத்திரிகையில் எங்கெல்சால் மே 1881 முதல் ஆகஸ்டு 1881 வரை தொடராக எழுதப்பட்டு, பிறகு “கூலி அமைப்புமுறை” என்ற தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டது.

சாரத்தைப் படித்துவிட்டு மூல நூல்களை வாசித்தால், அதில் இருந்து கிடைக்கின்ற அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல், நம்மை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” என்ற நூலை வாசிப்பதற்கு இட்டுச் செல்லும்.

கால வரிசையில் அல்லாமல், இந்நூல் எங்கெல்ஸ் எழுதிய “கூலி அமைப்புமுறை” என்ற நூலில் இருந்து தொடங்குகிறது. தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பிற்கு நேர்மையான கூலி (சம்பளம்) கிடைக்கிறதா என்ற கேள்வியுடன் முதல் கட்டுரை தொடங்குகிறது. அடுத்துக் கூலிக்கான போராட்டம் என்கிற உடனடி போராட்டத்தைப் பற்றியும் கூலி அமைப்புமுறைக்கு எதிராகப் போராட வேண்டியதைப் பற்றியும் பேசுகிறது. தொடர்ந்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் கட்சி, இறுதியாக இன்றைய வளர்ச்சி அடைந்த சமூகத்தில் முதலாளிய வர்க்கம் தேவையற்றவர்களாவது பற்றிப் பேசுகிறது. ஆகத் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை அனைத்தையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது. இதைப் படித்தவுடன் கண்டிப்பாக மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை வாசகர்கள் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற நூல், கூலி என்றால் என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? ஒரு சரக்கின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும், கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவு, மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளது.

இதே போல் “கூலி விலை லாபம்” என்ற நூல், உற்பததியும் கூலியும், கூலியும் விலையும், மதிப்பும் உழைப்பும், உழைப்பு சக்தி, உபரி மதிப்பின் உற்பத்தி, உழைப்பின் மதிப்பு, உபரி மதிப்பைப் பிரித்துப் பெறப்படும் பல்வேறு பகுதிகள், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டமும் அதன் விளைவுகளும் என்பது போன்ற தலைப்புகளில் சமூக மாற்றம் வரை எளிமையாகவும் தெளிவாக உறுதிபடவும் இந்நூல் விவரிக்கிறது.

நம் கையில் உள்ள இந்த நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் அரசியல் பொருளாதாரம் பற்றிய கருத்துக்களின் தொகுப்பாக இருக்கும். இந்த நூல் வெறும் அரசியல் பொருளாதாரமாக மட்டும் இல்லாது, அரசியல் பொருளாதார அடிப்படையில், அரசியலையும் தொழிலாளர்களின் விடுதலையான சமூக மாற்றத்தையும் சேர்த்து விவரிக்கிறது.

அதுமட்டுமல்லாது ஒரு களப் போராளி அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் ஏற்படுத்தும். அதற்கான அறிமுகத்தையும் கொடுக்கும்.

இடதுசிந்தனை உள்ள அனைவரும் அரசியல் பொருளாதார நூல்களைப் படிப்பது அவசியமாகும். மூலநூல்களைப் படிப்பதில் உள்ள சிரமத்தை மனதில் கொண்டு அந்த நூல்களில் உள்ள சாரம் மட்டும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுருக்கமாகக் கூறிவிட்டதாக சொல்ல முடியாது. அதனால் மூல நூலை எடுத்துப் படிக்க வேண்டும். சாரத்தை அறிவது நேரடி நூலை படிப்பதற்கே. இந்த நூல் இந்தளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு தோழர்கள் தா.சந்திரன், த.ஜீவானந்தன், த.ந.தனராமன், இரா.புருஷோத்தமன் ஆகியோர்களே காரணமாகும், அதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தோழர் தா.சந்திரன் தோழர் இரா.புருஷோத்தமன் ஆகிய இருவரும் இந்த நூல் சிறப்பாக வருவதற்காக கடும் முயற்சியும் உழைப்பும் செலுத்தியுள்ளார்கள். அவ்விருவருக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ள பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment