Thursday, 13 January 2022

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - அணிந்துரை - முனைவர். இரா. புருஷோத்தமன்

 அணிந்துரை:- 

                                      முனைவர். இரா. புருஷோத்தமன்

                               ஆய்வுத் திட்ட உதவியாளர்

தத்துவத்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்தத்துவம் என்றால் ஞானத்தின் மீதான காதல் (Love of Wisdom)  என்பது பொதுவான வரையறை. தத்துவத்துக்கு பல்வேறு வரையறை கூறப்படுகிறது. எந்த வரையறையாக இருந்தாலும் அது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

கிரேக்க தத்துவ அறிஞர் சாக்ரடீஸின் மாணவரான பிளேட்டோ, தத்துவத்தின் நோக்கமானது இயற்கையைக் கண்டுபிடிப்பதும், அதன் உண்மைப் பொருளைக் கண்டடைவதும் என்கிறார். தத்துவம் ஒர் அறிவுத்துறை, இது இயற்கை, சமூகம் பற்றிய உண்மைகளையும், அது கொண்டுள்ள காரணகாரியத் தொடர்புகளையும் ஆராய்கிறது.

கொள்கை வழியிலான தரவுகளை மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும், சமூகப் பிரச்சினைகளையும் ஆராய்கிற ஒரு பரந்துபட்ட துறையாக தத்துவம் விளங்குகிறது. இது கடந்த காலத்தை மட்டும் பேசுவதில்லை, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றையும் ஆராய்கிறது.

ஒவ்வொரு தேசத்துக்கும் என்று  ஒவ்வொரு தத்துவம் இருக்கின்றது. மேலைநாட்டு தத்துவம் (Western Philosophy). கீழை நாட்டு தத்துவம் (Eastern Philosophy), சீனத் தத்துவம் (Chinese Philosophy), ஆப்பிரிக்க தத்துவம் (African Philosophy), அரேபிய தத்துவம் (Arabian philosophy) போன்ற பல்வேறு வகையில் தத்துவத்தை பிரிக்கிறோம். எத்தகைய தத்துவமாக இருந்தாலும் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான்.

சிலவற்றுக்கு சில நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலைநாடுகளில் புறநிலை நோக்கில் இருந்து அனைத்தையும் ஆராய்ந்து உலகை அறிவதில் கவனம் செலுத்துகிறது. இந்தியத் தத்துவத்தை ஒட்டுமொத்தத்தில் பார்க்கும் போது, ஆன்மாவின் இயல்பு, பிரம்மத்தின் தன்மை, முக்தியின் அவசியம், பாவம், புண்ணியம், மறுபிறப்பு, மற்றும் அகநிலை உலகுக்கு (உணர்வுக்கு) மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு கிளைகள் (Branches) இருப்பது போல,  தத்துவத்திற்கும் பல்வேறு கிளைகள்  இருக்கின்றன. அவையாவன: புலன் கடந்த அறிவியல் (Metaphysics),  அறிவு ஆராய்ச்சி இயல் (Epistemology), அறவியல் (Ethics), அளவை இயல் (Logic), அழகியல் (Aesthetics) சமூகத் தத்துவம் (Social Philosophy). மேலும், தத்துவம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

.கா.ஈஸ்வரன் தனது நூலில் சமூகக் கண்ணோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியாதாகத் தெரிகிறது.

இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் கல்வி வெளியிலும் சரி, கல்வி வெளியையும் தாண்டி தத்துவத்துறையில் பல்வேறு ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், தமிழ்ச்சூழலில் விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே மிகவும் சொற்ப அளவில் தான் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் தத்துவம் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. இது தான் இன்றைய எதார்த்த நிலை. தத்துவம் கேட்பாரற்று இறக்கும் தருவாயில் உள்ள துறை (Philosophy is a dying subject) என்ற எண்ணமும் உள்ளது. ஆனால், தத்துவத்தின் அருமைத் தெரிந்தவர்கள் உணர்ந்தவர்கள் மட்டும்,   கல்விப்புலத்திலும் சரி, சமூகத்திலும் சரி, தத்துவத்தைப் போற்றுகிறார்கள்; கொண்டாடுகிறார்கள். அதில் இயங்குகிறார்கள், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள், மேலும் அதை வளர்ப்பதற்கும் காப்பாற்றுவதற்குமான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், .கா.ஈஸ்வரன் தத்துவத்தில் இயங்குவதும் தத்துவத்தைப் பற்றி எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தோழர் .கா.ஈஸ்வரன் எனக்கு முகநூல் மூலம் தான் அறிமுகமானவர். அதற்கு முன்பு, எனது நண்பர்களும் தோழர்களும் அவரைப் பற்றி சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இணையதளத்தில் தத்துவம், பொதுவுடைமை சித்தாந்தம், சமூகம் சார்ந்து எழுதியும் பேசியும் வருபவர். தொடர்ந்து மார்க்சிய வகுப்புகள் எடுத்து வருகிறார். அவர் பேசிய ஒரு சில யூடுப் காணொளிப்பதிவுகள் கேட்டு இருக்கிறேன். இந்நூலாசிரியர் மார்க்சிய தத்துவம், மதத்தைப் பற்றி மார்க்சியம், லெனின் வாழ்வும் படைப்பும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும்-படைப்பும் போன்ற நூல்களின் தலைப்புகளை இணையத்தில் பார்த்து இருக்கேன். ஆனால், எதுவும் படித்தது இல்லை.

அண்மையில் தான் நேரிடையாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுதிவரும் இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் என்கிற நூலைப் படித்து கருத்துரைக்கும்படி கேட்டார். முதல் முறையாக அவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் நூலின் கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அ.கா.ஈஸ்வரனுடன் உரையாடும் போது தத்துவத்தின்மீது அவருக்கு இருக்கிற காதல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவரிடம் தத்துவம் சம்பந்தமாக விவாதிக்கும்போது சரி; அலுவலகத்தில் சேகரிச்சு வைத்த தத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த பல புத்தகங்களைப் பார்க்கும் போதும் சரி, இவரின் எழுத்துக்களை இணையத்தில் கூர்ந்துக் கவனிக்கும் போதும் சரி, இவர் எழுத்துத்துறையில் இயங்குவதைப் பார்க்கும்போது சரி, இவர் கல்விப் புலத்தில் தத்துவ பேராசிரியராக இருந்தால் எப்படி இருக்கும் என்று பல முறை யோசித்து இருக்கேன்.

நாங்கள் இளங்கலை முதுகலை பட்டம் மெய்யியல் துறை படிக்கும் போது யாராவது தமிழில் தத்துவப் புத்தகம் எழுதி இருக்க மாட்டார்களா என்று நூலகம் நூலகமாக தேடுவோம். நேரடி தமிழில் தத்துவ நூல்கள் மிகவும் குறைவாகத்தான் வெளிவந்துள்ளன.

      இந்நிலையில் இன்று அ.கா.ஈஸ்வரன் எழுதிய இந்திய தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் என்ற தமிழ் நூல் வெளிவந்துள்ளதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

முதல் தொகுதியான இந்த நூலில் வேத சம்கிதைகள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை ஆகியவற்றை மட்டுமே பேசுகிறது.

வேத சம்கிதையின் உண்மைத் தன்மையையும், அதன் சமூகத்தையும் இந்த நூல் அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. இதனடிப்படையில், வேதங்களில் இல்லாதது ஒன்றுமே இல்லை என்று பொதுச்சமூகத்தில் வேதத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட கருத்தாங்கள் கேள்விக்கு உள்ளாகிறது. அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தோடு இதனை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளப் பகுதிகள், பொதுவாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்தப் பகுதியில் கூறப்பட்டதை புதியதாக படிப்பவர்கள், சிந்துவெளியைப் பற்றி அறிவதற்கு பயணிப்பர் என்று எதிர்பார்க்கலாம். நூலாசிரியர் தமது கண்ணோட்டத்துக்கான ஆதாரத்தை பல ஆய்வாளர்களிடம் இருந்தும், அறிஞர்களிடம் இருந்தும் எடுத்துக் காட்டியுள்ளார்.

உபநிடதங்களில் காணப்படும் தத்துவங்களை தேடி திரட்டித் தொகுக்கப்பட்டுள்ளதை காணும் போது .கா.ஈஸ்வரன் அவர்களின் கடினமான உழைப்பு தெரிகிறது. குறிப்பாக சாந்தோக்கியம்,  பிருகதாரண்யகம் ஆகிய இரண்டு பெரிய உபநிடதங்களில் உள்ள தத்துவங்களை மட்டும் திரட்டித் தந்துள்ளது அவ்வளவு எளிதான செயலாகத் தெரியவில்லை.

உபநிடதங்கள் பகவத்கீதை ஆகியவற்றைப் பற்றி எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிரம்ம சூத்திரத்தை .கா.ஈஸ்வரன் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. தத்துவ நூல்களில் பொதுவாக பிரம்ம சூத்திரத்தைப் பற்றி குறைவாகவே விளக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலாசிரியர் பிரம்ம சூத்திரத்தின்  முதல் நான்கு சூத்திரங்களை விளக்கியுள்ளார். பிரம்ம சூத்திரம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதற்கு இது சான்றாக அவர் காட்டியிருக்கலாம்.

உபநிடதம், பிரம்ம சூத்திரம் ஆகிய இரண்டிலும் உள்ள தத்துவத்தையும் ஓரளவுக்கு அன்றைய சமூகச் சூழ்நிலையை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளார். பகவத்கீதை பகுதிக்கு வந்தவுடன் அவரது விமர்சனங்கள் படிப்படியாக வெளிப்படத் தொடங்குகிறது.

பலன் கருதாமல் உனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய் என்கிற கீதையின் வாசகம் அவரை விமர்சிக்க வைத்துள்ளதாகத் தெரிகிறது. கீதையில் உள்ள அவரது விமர்சனங்களைப் பார்க்கும் போது இந்தியத் தத்துவங்கள் முழுமையும் அவர் எவ்வாறு எழுதப் போகிறார் என்பதை அறியத் தூண்டுகிறது.

இந்தப் புத்தகத்தை கூர்ந்து வாசிக்கும்போது பல இடங்களில் வஞ்சப்  புகழ்ச்சியாக தோன்றுகிறது.

ஒரு தேடல் தான் மற்றொரு தேடலுக்கு நம்மை இட்டுச்செல்லும். இந்தப் புத்தகம் ஒரு வித்து ஆகும். அந்த வகையில், இந்த நூலைப் படித்தப் பிறகு இத்துறைகளில் மார்க்சிய அணுகுமுறையில் ஆய்வு செய்த நா.வானமாமலை, கோ.கேசவன், தேவி பிரசாத் சட்டோபாத்யா, டி.டி கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர்களின் நூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது.

தத்துவஞான விஷயங்களைக் கற்றவர்கள், அதைப் பலரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று பிரசாரம் செய்யுங்கள்!” என்கிறார் எபிகூரஸ். அந்த வகையில், அ.கா.ஈஸ்வரன், இந்தியத் தத்துவத்தை விசாரணை செய்து,  நமக்கு கோர்வைப்படுத்தி எளிமையாக வழங்கி உள்ளார்.

தத்துவம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் சென்றுச் சேர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தை சர்வதேச மெய்யியலுக்கான வாரமாக கொண்டாடப்படுகிறது.

தத்துவத்தை பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், இந்தியத் தத்துவத்தில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்படும். தத்துவத் துறை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, மற்ற துறைகளில் இருப்பவர்களும் படிக்க வேண்டிய நூல் இது.

தமிழ்ச் சமூகத்திற்க்கு தத்துவத்தில் புதிய வரவான இந்த நூலைப் படிக்கும் போது அடுத்து இந்தியத் தத்துவம்: தொகுதி இரண்டு வெளிவர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இரண்டாம் தொகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஒரு எழுத்தாளனின் கடமை என்னவென்றால் தனது வாசிப்பனுவங்களை வாசகனுக்கு கடத்துதல். இதனை நூலாசியரியர் சரியாக செய்துள்ளார். இந்த நூலைப் படித்து பெற்ற வாசிப்பனுபவம், சமூக மாற்றத்துக்கான விதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அணிந்துரை எழுத வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். தோழர் .கா.ஈஸ்வரனுக்கும், இதுபோன்ற தத்துவ நூலை வெளியிடுகின்ற பொன்னுலகம் புத்தக நிறுவனத்துக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment