Saturday, 5 December 2020

வகுப்பு 5:- “காரல் மார்க்ஸ்” – சோஷலிசம் (-லெனின்)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

போன வகுப்பில் மார்க்சின் பொருளாதாரப் போதனை என்ற பகுதியில் உள்ள உபரி மதிப்பு என்பதைப் பார்த்தோம். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பைச் செலுத்துகிற பாட்டாளி மற்ற தொழிலாளர்களைவிட வேறுபட்டவராக இருக்கிறார். பணம் எவ்வாறு ஒரு வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மூலதனமாக மாறுகிறதோ அதே போல உழைப்பாளர்களின் உழைப்பு என்கிற உழைப்பு சக்தி, வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு சரக்காகப் பரிணமித்துள்ளது. “கூலி முறையில் இயங்கும் இந்த முதலாளித்துவச் சமூகத்தில் பாட்டளிகளின் விடுதலை என்பது கூலி உயர்வினால் ஏற்படப் போவதில்லை, இந்தக் கூலி முறை ஒழிப்பில் தான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அடங்கியிருக்கிறது. முதலாளித்துவத்தை வீழ்த்துவது பாட்டாளியின் மனம் சார்ந்த விஷயம் அல்ல, அது முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் முதிர்வினால் ஏற்படுகிறது. அதைச் செய்து காட்டுவது பாட்டாளி வர்க்கம். 

இது போன வகுப்பின் சுருக்கம். 

அடுத்து இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

லெனின் “சோஷலிசம் என்ற இந்தப் பகுதியில், முன்பு கூறியதை சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறார். முதலாளித்துவச் சமூகம் அதன் பொருளாதார இயக்க விதியில் இருந்தே, சோஷலிச சமூகமாக மாற்றம் பெறுகிறது. அத்துடன் இது தவிர்க்க முடியாததாகும் என்றும் கூறியுள்ளார். 

தவிர்க்க முடியாதது என்று கூறிவிட்டதனால் இதற்கான போராட்டம் தேவையில்லை என்று லெனின் கூறவில்லை. அதற்கான போராட்டத்தை நடத்துவதற்கே வழிகாட்டுகிறார். அந்தப் போராட்டத்துக்கான செயற்தந்திரத்தை வகுப்பது பற்றி இந்தப் பகுதியின் இறுதியில் கூறியுள்ளார். 

உழைப்பு சமூகமயமாக்கப்படுவது முன்பைவிட அதிக வேகத்துடன் முன்னேறிவருகிறது. மார்க்ஸ், லெனின் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு உலகமயமாதல், நீதி மூலதனக் கட்டத்தில் பெருவீத உற்பத்தியின் வளர்ச்சி முதலாளித்துவத்தில் அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம். இன்று உழைப்புச் சமூகமயம் ஆக்கப்பட்டிருப்பது வெகு தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சமூகமயமான உற்பத்திக்கும், தனிவுடைமை அடிப்படையிலான வினியோக முறைக்கும் உள்ள முரண்பாடே, தவிர்க்க முடியாதபடி சோஷலிசத்தை நோக்கி செல்வதற்கான பொருளாயத அடிப்படையாகும். 

முன்பே கூறியபடி இந்தச் சமூக மாற்றத்திற்கான வழியாக மார்க்சிய வழியில் லெனின் நமக்கு விளக்குகிறார். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவத்தின் முரண்பாட்டில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கத்திற்கு, முதலாளித்துவமே பயிற்சியை அளிப்பதற்கான களத்தைத் தந்துள்ளது. களம் இருந்தால் மட்டும் போதாது, தொழிலாளிர்களின் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள், பயிற்சி கொடுப்பதற்கான திறத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி பெற்ற பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பல்வேறு வழிகளில் போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் தவிர்க்க முடியாத வகையில், அரசியல் ஆட்சி அதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதை நோக்கமாகவே கொண்டுள்ளது. 

பாட்டாளி வர்க்க ஆட்சியில், சமூக மயமான உற்பத்திச் சாதனங்களைச் சமூகச் சொத்தாக மாற்றப்படும். உடைமைப் பறித்தோரின் உடைமை பறிப்பது நிகழ்ந்தே தீரும். அவ்வாறு பாட்டாளி வர்க்க ஆட்சி நடைபெறும் போது, உழைப்பாளியின் வேலை நேரத்தைக் குறைப்பது முதற்கொண்டு, பல்வேறு நலன்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு உரிய வகையில் மேம்படுத்தப்படும்.

 தொழிலாளிக்கும், விவசாயத்துக்கும் இடையே வேறுபாடு முதலாளித்துவத்தோடு முறிவுக்கு வருகிறது. 

உடல் உழைப்பு குறைந்து, இயந்திரத்தை இயக்கும் வேலை வந்த பிறகு பெண்களையும், குழந்தைகளையும் முதலாளித்துவம் உழைப்பில் ஈடுபட வைக்கிறது. இவ்வகையில் இதுவரை தொடர்ந்து வந்த தந்தை வழி குடும்பத்தில் உடைப்பை ஏற்படுத்துகிறது. 

லெனின் இந்தச் சோஷலிசம் என்கிற பகுதியில், மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய நூல்களில் இருந்து பெரியப்பெரிய மேற்கோள்களைப் பதிவிட்டுள்ளார். மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், டூரிங்குக்கு மறுப்பு, பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை ஆகிய நூல்களில் இருந்து லெனின் சோஷலிசத்தை விளக்குகிறார். 

மார்க்சின் “மூலதனம் என்கிற நூலின் அடிப்படையில் லெனின், தந்தைவழிக் குடும்பங்களில் ஏற்பட்டுவருகிற மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார். 

குடும்பங்களுக்கு வெளியில்; பெண்களும், இளைஞர்களும், ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் முதலாளித்துவ இயந்திர உற்பத்தியில் ஈடுபடுவதின் மூலம். உயர்வான குடும்ப வடிவத்துக்கும் பால்உறவு வடிவத்துக்கும் புதிய பொருளாதார அடித்தளத்தைத் தந்துள்ளது. 

அதாவது முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பு பெண்களை, வீடுகளில் முடங்கி வைத்திருந்தது. முதலாளித்துவத்தில் இயந்திரப் பயன்பாடு அதிகாகும் போது, அதற்குத் தேவைப்படுகிற உழைப்பாளர்கள், குறைந்த கூலியில் கிடைப்பதற்காகப் பெண்கைளை வீட்டுச் சிறையில் இருந்து முதலாளித்துவம் வெளி கொணர்ந்தது. 

மார்க்சியம் சென்ற காலத்தை விளக்குவதோடு, எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி, அதனைச் சாதிப்பதற்குத் தையிரியமான நடைமுறை பணிகளை மேற்கொள்கிறது. 

தேசங்கள் என்பது சமூக வளர்ச்சியில் முதலாளித்துவச் சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி தோன்றுகிற விளைவாகும். நாடு வேறு தேசம் வேறு இரண்டும் ஒன்றல்ல. முன்பு அரசர்களால் நாடுகள் பலவற்றைப் பிடித்துத் தமது நாட்டோடு சேர்த்துக் கொள்வர். இதனை நாடு என்று தான் கூற வேண்டும் தேசம் என்று கூறிட முடியாது. இப்படிப் பிடிக்கப்பட்ட நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு குழுக்களாகத் தனித்தனியே பிடிப்பின்றிக் காணப்படுவர். 

ஆனால் தேசம் என்பது ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொருளாதார ஒன்றிணைப்பு உள்ளதாகக் காணப்படும். ஸ்டாலின் தேசத்திற்குப் பொதுவான ஒரு வரையறைத் தந்துள்ளார். 

ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று வழியில் உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும். 

இது ஒரு பொதுவரையறை தான். பல மொழிகளைக் கொண்ட நாட்டை லெனின் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இங்கே நாம் நாட்டுக்கும் தேசத்துக்கும் உள்ள வேறுபாட்டை மட்டும் புரிந்து கொள்வோம். 

சர்வதேசியவாதிகளான பாட்டாளிகளின் தேசம் பற்றி லெனின் இங்கே விளக்குகிறார். பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கண்ணோட்டம், முதலாளித்துவப் பொருளில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் தேசிய தன்மையை லெனின் கூறுகிற வார்த்தையிலேயே பார்ப்போம்.

 

தொழிலாளி வர்க்கம் “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல் தானும் “தேசிய தன்மை பெறாமல் (இந்தச் சொல்லின் முதலாளித்துவப் பொருளில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெற முடியவில்லை, உருவாக முடியவில்லை. 

இதை ஏன் லெனின் கூறிய வார்த்தைகளையே பயன்படுத்தி உள்ளேன் என்றால், இங்கே லெனின் எழுதியதைப் படித்துவிட்டு, லெனின் பாட்டாளிகளின் சர்வதேசத்தை மட்டுமே பேசுயுள்ளார், என்று கூறிவிட்டு, அனைத்து நாட்டு விடுதலையைப் பற்றிப் பேசிவிட்டு, தமது நாட்டின் விடுதலையை மறுதலிப்பவர்கள் இன்று நிறையப் பேர் உள்ளனர். அதனால், இதனை விரிவாகப் பேச வேண்டி வருகிறது. 

முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசிய தடைகளை உடைத்து எறிகிறது. தேசிய தனி வாழ்வை அழிக்கிறது, தேசிய பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருளில் தான் லெனின் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் “தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது என்று “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியது முழுமையான உண்மை என்கிறார். இதனை அப்படியே நேர் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது. எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் தன் இதன் பொருள் விளங்கும்.

 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை:- “நாடுகளையும் தேசிய இனங்களையும் ஒழிக்க விரும்புவதாகக் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

 

தொழிலாளர்களுக்கு நாடு கிடையாது. அவர்கள் பெற்றிருக்காத ஒன்றை அவர்களிடமிருந்து நாங்கள் பறித்துக்கொள்ள முடியாது. பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் முன்னதாக, அரசியல் மேலாதிக்கம் பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்கம் தேசிய தன்மை கொண்டதாகவே இருக்கிறது, இந்தச் சொல்லுக்கான முதலாளித்துவப் பொருளில் இல்லாவிடினும்.” 

கம்யூனிஸ்டுகள் தேசங்களை ஒழிக்க விரும்புவதாகக் கூறிய குற்றச்சாட்டுக்குக் கூறப்பட்ட பதில் இது. 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதலாளித்துவ வளர்ச்சி தேசங்களின் எல்லைகளை உடைத்துவருகிறது. இன்றைய நிலையில் அதாவது உலகமயமாதல் நிலையில் இதனைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 

அடுத்து லெனின் அரசு பற்றிப் பேசுகிறார். அதன் ஒடுக்கு முறையைப் பற்றி விளக்குகிறார். ஏன் என்றால் தேசங்களின் எல்லைகள் உடைகிறது என்று கூறியவுடன், தேசிய அரசின் ஒடுக்கு முறை இல்லை என்று புரிந்து கொள்ளக்கூடாது. லெனின், அரசின் தோற்றத்தைப் பற்றி விளக்குகிறார். இதற்கு எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூலின் நீண்ட மேற்கோளை இட்டு விளக்குகிறார். 

அரசு என்பது ஒழுங்கமைக்கப் பெற்ற பலாத்காரம் ஆகும் என்று லெனின் அரசின் வர்க்கத் தன்மையை முதலிலேயே வெளிப்படுத்தி உள்ளார். சமூகத்தில் வர்க்கத் தோன்றிய போது, வர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காணமுடியாத நிலையினால், ஒடுக்கத்துக்கு ஆளான வர்க்கத்தை எழுச்சி கொள்ளாமல் தடுப்பதற்குத் தோன்றியது அரசு. 

அரசு என்பது வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடாகத் தோன்றியது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அரசின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்வது அவசியமானது ஆகும். 

முதலாளித்துவத்தன் முற்போக்கு வடிவமான ஜனநாயக் குடியரசும் கூட, வர்க்க சார்பானது தான் என்பதைக் கண்டுவருகிறோம். முதலாளித்துவ அரசு, பழைய அரசிடம் இருந்து வடிவத்தில் மாறி இருக்கலாம், ஆனால் அதன் அடிப்படையான வர்க்கத் தன்மை மாறவில்லை. அந்தந்தக் காலத்துக்கு உரிய ஆதிக்க வர்க்கத்தின் சேவையையே அரசு புரிகிறது. 

எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூலில், சோஷலிச அரசின் வளர்ச்சிக் கட்டத்தில், அரசு உலர்ந்து உதிர்வதைப் பற்றி எழுதியதை லெனின் இங்கே மேற்கோளாய்ப் பதிந்துள்ளார். எங்கெல்ஸ் அதில் என்ன கூறுகிறார் என்றால், அரசு ஒழிக்கப்படுவதில்லை, அது தேவையற்றுப் போய் உதிர்ந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். வர்க்க வேறுபாடுகள் சமூகத்தில் களைந்து எறியப்படும் போது அரசு தேவையற்றதாகப் போய் மறைந்துவிடும். 

இதற்கு அடுத்து லெனின் விவசாயிகளைப் பற்றி மார்க்சியக் கண்ணோட்டத்தை எங்கெல்ஸ் எழுதிய “பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை என்ற நூலில் காணப்படுவதை மேற்கோள் மூலம் நிலைநிறுத்துகிறார். 

சோஷலிச அரசு தோன்றிய போது, பெரிய நிலச்சுவான்தாரர்களின் நிலத்தைத்தான் பொதுச் சொத்தாக்கப்படும், சிறு விவசாயிகளின் சொத்துக்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை என்கிறார் எங்கெல்ஸ். சிறு விவசாயத்தைக் கூட்டுறவு உற்பத்தியாகவும், கூட்டுறவு உடைமையாகவும் மாற்றப்படும். இதைப் பலாத்காரமாகச் செய்யாமல், சமூக உதவியைத் தந்து செய்து வைக்கப்படும். 

சிறு விவசாயத்தின் அனுகூலம் இன்மையையும், கூட்டுறவின் அனுகூலங்களையும் சுட்டிக்காட்டி நிறைவேற்ற பல வழிகள் இருப்பதாக எங்கெல்ஸ் இதில் குறிப்பிட்டுள்ளார். 

பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் செயற்தந்திரங்கள் 

இதற்கு அடுத்து, லெனின் “பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் செயற்தந்திரங்கள் என்பது பேசுகிறார். இது ஒரு முக்கியமானப் பகுதியாகும். தத்துவம் படித்தாலும், அரசியல் பொருளாதாரம் படித்தாலும் அனைத்தும் நடை முறைக்கே என்பது நமக்குத் தெரியும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் அந்தந்த நாடுகளின் நிலைமைக்கு ஏற்ப, தொழிலாளர்களின் முன்னணிப்படை என்று கூறப்படுகிற கம்யூனிஸ்ட் கட்சி செயற்தந்திரத்தை அமைத்துச் செயற்படுகிறது. 

இறுதிக்குறிக்கோளை அடைவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும். அதாவது இன்றைய நிலையில் நமது அரசியல் செயற்பாடு, எதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று முடிசெய்ய வேண்டியது, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கடமையாகும். 

கட்சி எதன் அடிப்படையில் செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ளப்படுகிறது என்பது பற்றி லெனின் இங்கே வலியுறுத்திக் கூறியுள்ளார். 

மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதத்தின் குறைபாட்டை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார். “நடைமுறை புரட்சிச் செயல்பாட்டின், சூழ்நிலைமைகளைப் புரிந்து கொள்ளவோ, அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடவோ முந்தைய பொருள்முதல்வாதம் திறனற்றிருந்தது இது தான் அதன் முக்கியமான குறைபாடு என்கிறார். 

தத்துவத் தொடர்பான வேலையின் கூடவே, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் பற்றிய செயற்தந்திரப் பிரச்சினைகளிலும் தமது கவனத்தை மார்க்ஸ் செலுத்தினார். பாட்டாளி வர்க்க செயற்தந்திரத்தை மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத இயக்கவியல் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், அனைத்து ஆதாரக் கூறுகளைக் கொண்டு கறாராக அமைத்தார். 

செயற்தந்திரத்திற்கான அடிப்படையாக லெனின் இங்கே கூறுவது மிகவும் முக்கியமானதாகும். அதனை அப்படியே இங்கே கூறுகிறேன்.

 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எல்லா வர்க்கங்களையும் விதிவிலக்கின்றி எடுத்துக் கொண்டு. அவ்வர்க்கங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவுகளின் கூட்டு மொத்தத்தைப் புறநிலை ரீதியிலே கருத்தில் கொள்வது - அதன் விளைவாக அந்தச் சமூகத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தையும் அந்தச் சமூகத்துக்கும் இதர சமூகங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர உறவுகளையும் கருத்தில் கொள்வது - இது ஒன்றுதான் முன்னணி வர்க்கத்தின் சரியான செயற்தந்திரங்களுக்கு அடிப்படையாக இருக்க முடியும்.” 

நம் நாட்டிற்கு உரிய செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், நம் நாட்டில், விதிவிலக்கின்றி அனைத்து வர்க்கங்களையும் எடுத்துக் கொண்டு அவ்வர்க்கங்களுக்கு இடையேள்ள பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தால் தான், இன்றைய நமது சமூகத்தின் யதார்த்த வளர்ச்சிக் கட்டத்தைக் கணக்கிட முடியும். அதற்கு நம் நாட்டைப் பற்றிய வர்க்க ஆய்வு அவசியமாகும். அந்த ஆய்வின் அடிப்படையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தமது செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ளும். 

லெனினும், மாசேதுங்கும் அவர்களின் நாட்டு வர்க்க ஆய்வை சிறப்பாகச் செய்ததினால் தான், அவர்களின் நாட்டிற்கு உரிய செயற்தந்திரத்தை அமைத்து வெற்றி பெற முடிந்தது. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் முக்கியமான அவர்களின் படைப்பையும் படிக்க வேண்டும். அப்போ தான் நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய வர்க்க ஆய்வின் அவசியத்தைப் புரியும். 

இந்த ஆய்வை செய்வதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும் தெளிவு பெற்றி இருக்க வேண்டும். இந்த ஆய்வு என்பது மேம்போக்கானதாக இருக்கக்கூடாது எனபது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

நமது நாட்டில் தீட்டப்பட்ட கட்சித் திட்டங்கள் சிறு மாறுதலுடன் அதன் அடிப்படையில் இருந்து மாறாமல் ஒவ்வொரு கட்சிக் காங்கிரசிலும் ஏற்கப்படுகிறது. சில கட்சிகள் பல பத்து ஆண்டுகளாக அதையே திட்டமாக வைத்துள்ளனர். ஐம்பது ஆண்டுகளில் நமது நாடு பல கட்டங்களில், வளர்ச்சி அடைந்துள்ளது, புதிய வளர்ச்சிக்கு ஏற்ப செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான திறத்தை, அனைத்து இடதுசாரி கட்சிகளும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

இங்கே லெனின் கூறியதை மனதில் கொணடே நான் இவ்வாறு கூறியுள்ளேன். 

சமூகத்தை இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற அடிப்படையில் அணுக வேண்டும். இங்கிலாந்தில் இருந்து இந்தியா விடுபட்டு பல பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் இடதுசாரி கட்சிகள் பழைய திட்டங்களிலேயே மூழ்கிக்கிடக்கின்றன. லெனின் சொல்வது போல் இந்தச் சமூகத்தின் வளர்ச்சி நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் புதியதாக ஆய்வு செய்ய வேண்டும். 

ஒவ்வொரு வர்க்கத்தினுடைய இயக்கத்தின் விதிகளை நிர்ணயிப்பவை அந்தந்த வர்க்கத்தின் பொருளாதார வாழ்வின் நிலைமைகளே. அத்துடன் சென்ற காலத்தைப் பற்றிய பார்வையோடு நிற்காமல் எதிர்காலத்தைப் பற்றிய பார்வையுடனும் இருக்க வேண்டும். தற்காலத்திய நிலைமையின் கணிப்புச் சரியாக இருந்தால் தான், எதிர்காலம் குறித்த பார்வையும் சரியாக இருக்கும். இதற்குக் கடந்த காலத்திய நடவடிக்கையில் சரி-தவறு என்பது பற்றிய சுயவிமர்சனம் அவசியமாகும். 

ஆனால் நமது நாட்டு இடதுசாரி கட்சிகள் தம்மைப் பற்றிய சுய விமர்சனமும், பிற கட்சிகளைப் பற்றிய விமர்சனங்களையும் செய்வதில் முழுக் கவனம் செலுத்துவதே இல்லை. இதில் மாற்றம் ஏற்படாமல் இடதுசாரிகளிடம் மாற்றத்தைக் காண முடியாது. 

இதை நான் விவாதத்திற்கு வைக்கிறேன், ஆனால் இந்தப் படிப்பு வட்டத்தில் இந்த விவாதத்தை நடத்தப் போவதில்லை. ஆனால் இந்தப் படிப்பு வட்டத்தில் உள்ளவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். விவாதத்தை இங்கே நிகழ்த்த வேண்டாம். படிப்பு வட்டம் அதன் எல்லைக்குள் செயற்படட்டும். 

அடுத்து லெனின் பரிணாமவாதத்திற்கும் இயக்கவிலுக்கம் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, நாம் இயக்கவியல் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்கிறார். பரிணாமவாதம், மெதுவாக நடைபெற்றுவருகிற மாறுதல்களை மட்டும் கணக்கில் கொள்கிறது. மாற்றத்தின் அளவு மாற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை, அதனால் அது பண்பு மாற்றம் அடைவதைப் பற்றிப் பேசுவதில்லை. இயக்கவியலானது அளவு மாற்றத்தையும் அதன் மூலம் படிப்படியாக ஏற்படுகிற பண்புநிலை மாற்றத்தையும் கணக்கில் கொள்கிறது. 

யதார்த்த நிலைமைகளின் மாற்றம் என்கிற புறநிலை வழியில் தான் பாட்டாளி வர்க்க செயற்தந்திரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிக்கான புறநிலை இல்லாமல், ஒரு கட்சியோ, பாட்டாளி வர்க்கமோ பொதுவாகப் புரட்சியைத் தோற்றுவித்திட முடியாது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிற காலங்களே புரட்சிக்கான புறநிலையாகும். இந்தப் புரட்சிகர நிலைமை வந்துவிட்டால் மட்டும் புரட்சி நிகழ்ந்துவிடாது. அதற்கான தயாரிப்பை முன்பே செய்திருக்க வேண்டும். இதைப் பற்றித் தான் லெனின் இங்கே குறிபிடுகிறார். 

பொருளாதார நெருக்கடிகள் நீங்கிய பின் தொடரும் காலத்தை அமைதியான, மந்தமான காலம் என்று லெனின் கூறுகிறார். அந்த நேரத்தில் முன்னணி வர்க்கத்தின் உணர்வையும், பலத்தையும், செயற்தந்திரத்தையும் வளர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், இந்த நேரத்துச் செயற்பாடுகள் அனைத்தும் இந்த வர்க்கத்தினுடைய இயக்கத்தின் இறுதி குறிக்கோளை, அடைவதற்கான பணிகளை நிறைவேற்றி வைப்பதற்கு உரிய திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும். 

இறுதிக்குறிக்கோளை நினைவில் கொள்ளாமல், அன்றாடப் போராட்டத்தில் மூழ்க்கிக் கிடக்கக்கூடாது. 

ஒன்றை மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன், அது என்னவென்றால், லெனின் இந்தக் கட்டுரையில் அதிகமாக, மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களில் இருந்தும் கடிதங்களில் இருந்தும் மேற்கோளைத் தருகிறார். இந்த இடத்தில், தத்துவத்தின் வறுமை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மற்றும் கடிதங்களில் இருந்து மேற்கோள்களைத் தருகிறார். 

தத்துவத்தின் வறுமை என்ற நூலின் மேற்கோள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

முதலாளித்துவத்தின் பெருவீத உற்பத்தியானது முன்பின் அறியாத தொழிலாளர்களை ஓர் இடத்தில் குவிக்கிறது. தொழிலாளர்களை, வேலை கிடைக்க வேண்டும், என்கிற போட்டி அவர்களைப் பிரிக்கிறது. இருந்தாலும் முதலாளிக்கு எதிராகத் தொழிலாளர்களுக்கு இருக்கும் பொது நலனான கூலியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை, தொழிலாளர்களை இணைக்கிறது. 

ஒன்றுபட்டு நிற்கிற மூலதனத்திற்கு முன்பாகத் தொழிலாளர்கள் இணைந்திருப்பது கூலியை நிலைநிறுத்துவதைவிட அதிக அவசியமானது ஆகும். 

இந்த இணைப்பு, நடைபெற இருக்கிற உள்நாட்டுப் போருக்கு தேவையான ஒன்றாகும். தொழிலாளர்களின் இந்த இணைப்பு அரசியல் தன்மை பெற்றுவிடுகிறது. இதைச் செய்வது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல என்பதை மார்க்ஸ் எங்கெல்ஸ் கடித்த போக்குவரத்தின் மூலம் லெனின் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். 

அடுத்து லெனின் அரசியல் போராட்டத்தின் செயற்தந்திரத்திரம் தொடர்பான அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டை, “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூலம் கூறுகிறார். தொழிலாளர்கள் உடனடி நலன்களுக்காகப் போராடுகிற அதே நேரத்தில், எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதை குறிப்பிடுகிறார். 

எதிர்கால நலன்களை மட்டும் பேசுவதோ, அதாவது புரட்சி நடவடிக்கை மட்டும் பேசுவதோ, அல்லது உடனடி நலனைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்துவதோ தவறானதாகும். புரட்சியை முன்னிருத்திக் கொண்டு உடனடி நலன்களில் அக்கறை செலுத்தாமல் இருக்கக்கூடாது. அதே போல உடனடி நலன்களில் முழுக்கி இறுதி குறிக்கோளை மறந்துவிடக்கூடாது. 

உடனடி நலன்களுக்கான போராட்டமானது, ஒரு சீர்திருத்த போரட்டமே, இந்தச் சீர்திருத்த போராட்டத்தின் மூலம் “கூலி முறை என்கிற அமைப்பை நீக்கிவிட முடியாது. கூலி உயர்வுக்கான போராட்டத்தை “கூலி முறை ஒழிப்புக்கான போராட்டம்வரை எடுத்துச் செல்ல வேண்டும். 

இந்தக் கட்டுரையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் கடித்த போக்குவரத்தில் இருந்து பல கடிதங்களை லெனின் குறிப்பிடுகிறார். அன்று அவர்கள் அதனை நான்கு தொகுதியாகப் பதிப்பித்துள்ளனர். அதை முழுமையாகப் படிப்பது, மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். 

மார்க்ஸ்-எங்கெல்ஸ் படைப்புகள் ஆங்கிலத்தில் இதுவரை 50 தொகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் 13 தொகுதிகள் அவர்களின் கடிதப் போக்குவரத்தாகும். அதனை முழுமையாக அனைவராலும் படிக்க முடியாது, ஆனால் லெனின் குறிப்பிடுகிற, அந்த நான்கு தொகுதிகள் மொழிபெயர்த்து வெளியிட்டால் தமிழ் சூழலுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 

பாரிஸ் கம்யூனைப் பற்றி லெனின் அடுத்துக் குறிப்பிடுகிறார். 1870ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை மார்க்ஸ் பொருத்தமற்றது என்று முதலில் எச்சரித்தார். ஆனால் பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் இறங்கிவிட்டது. அதன் பிறகு, மார்க்ஸ் பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு ஆதரவு கொடுத்தார். விண்ணைச் சாடுகின்ற மக்களின் புரட்சிகரமான முன்முயற்சி என்று உற்சாகத்தோடு கொண்டாடி வரவேற்றார். 

இந்த மார்க்சின் முடிவில் இருந்து லெனின் சொல்ல வருவது என்னவென்றால், புரட்சிகரமான போராட்டம் தோல்வி அடைவதானது, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் பொதுவான போக்குக்கும், இறுதி விளைவுக்கும் குறைந்த தீங்கே ஏற்படும். போராடாமல் சரணாகதி அடைவது, பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைக் குலைக்கும், அதன் செயற்தந்திரத்தை பலவீனப்படுத்தும் என்கிறார் லெனின். 

இத்துடன் மற்றொன்றையும் கூறுவதோடு, லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார். 

பொருளாதார நெருக்கடி இல்லாத காலத்தில், அரசியலில் தேக்கம் நிலவும். அப்போது முதலாளித்துவச் சட்டக் கட்டுப்பாடு மேலோங்கி இருக்கும். அத்தகைய காலகட்டத்தில் சட்டவழியிலான போராட்ட முறைகளைப் பயன்படுத்துவதை மார்க்ஸ் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

இத்தகைய போக்கை மறுக்கின்ற அராஜகவாதிகளின் “புரட்சிகரமான சொல்லடுக்குகளை மார்க்ஸ் தீவிரமாகக் கண்டித்தார் என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் கட்சியில் காணப்படும் சந்தப்பவாதத்தையும் மார்க்ஸ் கண்டித்துள்ளார். 

இடதுதீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை மார்க்ஸ் தொடர்ந்து கண்டித்து வந்தார். சட்டவழியிலான போராட்டத்தை நடத்த முடியாதவர்களால் சட்டவழியற்றப் போராட்டத்தைத் திறம்பட நடத்த முடியாது என்கிற உண்மை புரிந்து கொள்ள வேண்டும். 

என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் சட்டவழியிலான போராட்டத்தை விளக்கி இருக்கிறார். அதே போலச் சட்டவழியிலான போராட்டத்தை மறுக்கிற அராஜகவாதிகளை ““இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு என்ற நூலில் சிறப்பாக விமர்சித்துள்ளார். அதே போல வலது திருத்தல்வாதத்தை “மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற சிறு கட்டுரையில் விளக்கி உள்ளார். இத்தகைய நூல்களைப் படிப்பதின் மூலம் நாம் இது பற்றிய தெளிவுக்கு வரலாம். 

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி வலது சந்தர்ப்பவாதத்தையும், இடது தீவிரவாதத்தையும் முறியடிப்போம். சரியான கம்யூனிச வழியில் செல்வோம், என்று கூறுவதோடு இந்தத் தொடர் வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

இத்துடன் இன்றைய வகுப்பும், தொடர் வகுப்பும் நிறைவடைகிறது.

காரல் மார்க்ஸ்-லெனின் (1914)

(மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)


No comments:

Post a Comment