Saturday 19 December 2020

தத்துவமும் மதமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் (12-12-2020) எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள ஒற்றுமையும் வேறுபாடும் 

தத்துவம் - மதம் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறேன். இந்த அறிமுகத்தின் போது தத்துவம் மதம் பற்றிய புதிய கலைச் சொற்களையும் தெரிந்து கொள்ளப் போகிறோம். புரியாத கலைச் சொற்கள் வந்தால் கவலைப்பட வேண்டாம். இன்று காதில் விழுகின்ற கலைச் சொற்கள், பிறருடன் பேசும் போதோ, நீங்களாகவே படிக்கும் போதோ படிப்படியாக புரிந்து கொள்ளலாம். 

தத்துவத்திற்கும் மதத்திற்கும் ஒற்றுமையும் இருக்கிறது வேற்றுமையும் இருக்கிறது. தத்துவத்தில் உள்ள ஒரு பிரிவுக்கும், மதத்திற்கும் நெருக்கம் இருக்கிறது. அதனால் தான் முதலில் தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, அடுத்து மதத்தைப் பற்றிப் பார்க்கலாம். 

தத்துவமும் மதமும் மேலை நாடுகளில் தனித்தனியாகப் பிரிந்து காணப்படுகிறது. நம் நாட்டில் தத்துவமும் மதமும் இணைந்து-பிணைந்து காணப்படுகிறது. 

மேலைநாடுகளில் தத்துவாதிகள் என்றால் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களும், மதம் என்றால் அதனை நிலைநிறுத்திய ஏசுநாதர், நபிகள் நினைவுக்கு வருவார்கள். 

இந்தியாவில் அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்திய ஆதிசங்கரரே சனாதன மதத்துக்கு தலைவராகவும் இருக்கிறார். அதே போல வைணவ மதத்தின் தலைவராக ராமானுஜரும், அந்த மதத்தின் தத்துவமான விசிட்டாத்வைதத்திற்குத் தலைவரும் அவரே ஆவார். தமிழகத்தில் உள்ள சைவ மதமும் இதே போலத்தான். இந்த மதத்தைச் சைவம் என்றும் இதன் தத்துவத்தைச் சைவ சித்தாந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சைவ மதத்திற்கு ஒத்த தவலைவரை முன்னிருத்துவதில்லை. ஆனால் சைவ தத்துவமான சைவ சித்தாந்தத்திற்கு மெய்கண்ட தேவர் முன்னிருத்தப்படுகிறார். 

மதமும் தத்துவமும் இணைந்து காணப்படுவது இந்தியாவில் மட்டும்தான். மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. இந்த வேறுபாட்டை முதலில் மனதில் கொள்ள வேண்டும். 

தத்துவமும் மதமும் ஒன்றிணைந்து காணப்பட்டாலும் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதில் முக்கியமானது உலகைப் படைத்தவரை ஒரு உருவமாகப் பார்ப்பது மதம், உலகைப் படைத்தவரை உருவமற்ற சக்தியாகப் பார்ப்பது தத்துவம். 

இங்கே சக்தி என்பது நம் நாட்டில் “பிரம்மம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு “Absolute” என்று அழைக்கிறார்கள். 

மதத்தில் உள்ள உருவக் கடவுளிடம் "இது வேண்டும்" "அது வேண்டும்" என்று பிரார்த்தனை இடம் பெறும். தத்துவத்தில், சில பயிற்சியின் மூலம் தத்துவம் கூறுகிற நிலையை அடைவது பற்றி அதில் பேசப்படுகிறது. 

ஆன்மீகத் தத்துவம் – கருத்துமுதல்வாதம் 

இதுவரை நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீக தத்துவம், இதனைக் கருத்துமுதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தை மறுக்கிற தத்துவமும் இருக்கிறது அதன் பெயர் பொருள்முதல்வாதம். 

தத்துவத்தில் பல போக்குகள் இருக்கிறது. எவ்வளவு போக்குகள் இருந்தாலும் அதனை இரண்டு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று ஆன்மீகவாதம் அதாவது கருத்துமுதல்வாதம், மற்றொன்று ஆன்மீகத்தை மறுக்கின்ற பொருள்முதல்வாதம். இந்தப் பொருள்முதல்வாதத்தை நாத்திகவாதம் என்றும் கூறலாம். ஆனால் பொருள்முதல்வாத தத்துவத்தில் நாத்திகம் மட்டுமே கூறப்படவில்லை. பல விஷயங்கள் அதில் பேசப்படுகிறது. 

தத்துவத்தில் உள்ள கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் என்கிற இருபெரும் பிரிவுகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். 

கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் 

உலகம் படைக்கப்பட்டதா? இல்லை அது இயற்கையிலேயே என்றும் உள்ளதா? என்ற கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கிடைக்கிறது. அந்தப் பதிலைக் கொண்டே ஒன்றை கருத்துமுதல்வாதம் என்றும் மற்றொன்றை பொருள்முதல்வாதம் என்றும் கூறுகிறோம். 

உலகம் படைக்கப்படவில்லை, அது என்றும் உள்ளது. மாற்றத்திற்கு உட்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவது பொருள்முதல்வாதம். 

உலகம் எதாவது ஒரு வகையில் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்தும் கருத்துமுதல்வாதம். அதாவது எதோ ஒரு சக்தியினால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கூறுவது கருத்துமுதல்வாதம் ஆகும். இதில் பல கோக்குகள் இருக்கிறது. பல போக்குகள் இருந்தாலும், அனைத்தையும் இரு பிரிவுக்குள் அடங்கிவிடலாம். ஒன்று புறநிலை கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலை கருத்துமுதல்வாதம். 

புறநிலை கருத்துமுதல்வாதம் - அகநிலை கருத்துமுதல்வாதம் 

உலகப் படைப்புக்குக் காரணமான அந்தச் சக்தி புறத்தில், இந்த உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலை கருத்துமுதல்வாதம். படைக்கிற சக்தி பௌதீக உலகிற்கு அப்பால் இருப்பதாகக் கூறுவதால், இதற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர் பெறுகிறது. அதனால் தான் கருத்துமுதல்வாதத்தை ஆங்கிலத்தில் Metaphysics என்று அழைக்கப்படுகிறது. Meta என்றால் "அடுத்து" அல்லது "அப்பால்" என்று பொருள். அதாவது பௌதீக உலகத்திற்கு அப்பால். 

படைப்பு சக்தியை இந்த உலகிற்குப் புறத்தில் உள்ளதாகக் கருதுவதால் இந்தத் தத்துவத்திற்குப் புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர். அந்தச் சக்தியை புறத்தில் காணாது அகத்தில், அதாவது மனதில் இருப்பதாகக் கொள்வது அகநிலைக் கருத்துமுதல்வாதம். 

நாம் நினைப்பதே புறத்தில் தோன்றுகிறது. புறத்தில் எதுவும் இருப்பதில்லை, நமது மனமே புறத்தைப் படைக்கிறது. இது தான் அகநிலை கருத்துமுதல்வாதம். 

புறநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ராமானுஜரின் விசிட்டாத்வைத தத்துவதையும் அகநிலைக் கருத்துமுதல்வாதத்திற்கு ஆதி சங்கரருடைய அத்வைத தத்துவத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக உலகம் முழுவதும் காணப்படுவது புறநிலை கருத்துமுதல்வாதமே.

தத்துவத்தின் இரு பிரிவுக்குக் காரணம் 

தத்துவத்தை ஏன் கருத்துமுதல்வாதம் – பொருள்முதல்வாதம் என்று பிரிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுப்புவது இயல்பானது. 

கருத்துமுதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளை விளக்குவதோடு நின்றுவிடுகிறது. பணக்காரனாக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவரவர் போன ஜென்மத்தில் செய்த செயல்களே காரணம் என்று விளக்கம் மட்டுமே கொடுக்கிறது கருத்துமுதல்வாதம். 

ஆனால் பொருள்முதல்வாதம் இந்த உலகப் பிரச்சினைகளுக்குக் காரணத்தைக் கூறுவதோடு அதனை மாற்றுவதற்கான வழியினையும் கண்டுபிடித்துத் தருகிறது. 

சமூக மாற்றத்தைக் கோருவது பொருள்முதல்வாதம், சமூகத்தை இருக்கும் நிலையிலேயைக் காக்க விரும்புவது கருத்துமுதல்வாதம். 

தத்துவத்தின் சார்பு 

பொருள்முதல்வாதத்தை ஏன் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறுகிறோம். சமூக மாற்றம் என்பது உழைப்பாளர்களின் நலனை பிரதிபலிப்பதனால் பொருள்முதல்வாதத்தைத் தொழிலாளர்களின் தத்துவம் என்று கூறப்படுகிறது. 

இந்த யதார்த்த சமூகத்தைத் தக்க வைப்பதற்குப் போராடுவதனால், இந்தக் கருத்துமுதல்வாதத்தை ஆளும் வர்க்கத்திற்கு உரியதாகக் கூறப்படுகிறது. 

இந்த இரு தத்துவத்திற்கும் இடையே உள்ள வர்க்க சார்பை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த வகுப்பு தத்துவ அறிமுகம் என்பதனாலே, இந்த வேறுபாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். வேறொரு வகுப்பில் விரிவாக இதனைக் காணலாம். 

இயக்கவியல் பொருள்முதல்வாதம்- வரலாற்றியல் பொருள்முதல்வாதம் 

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம், மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

இந்த உலகமும் இயற்கையும் எப்படி எல்லாம் நிலைபெற்று இருக்கிறது, எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை ஆராய்வது இயக்கவியல் பொருள்முதல்வாதம். 

சமூகம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு நிலைபெறுகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்வது வரலாற்றியல் பொருள்முதல்வாதம். 

மதம் 

இதுக்கு முன்னால் கருத்துமுதல்வாதம் பற்றிப் பேசினோம், அந்தத் தத்துவத்திற்கு நெருக்கமானது மதம். 

கருத்துமுதல்வாதம் இந்தப் பிரபஞ்சம் ஒரு சக்தியினால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுகிறது. மதம் அந்தச் சக்தியை ஒரு கடவுளாக உருவகம் செய்கிறது. அந்தச் சக்திக்கு மனித உருவம் கொடுக்கிறது. 

சைவ மதம் அந்த இறைவனைச் சிவபெருமான் என்கிறது, வைணவம் நாராயணன் என்கிறது. கிறித்துவத்தில் கர்த்தர் அல்லது ஏசு என்று கூறப்படுகிறது. இஸ்லாத்தில் அல்லா என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் கொடுப்பதில்லை. அந்த அல்லாவின் சக்தியைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. அல்லாவை உருவமாகப் பார்ப்பதை அவர்கள் ஏற்பதில்லை. 

இந்த உலகம் அந்த இறை சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மதம் கூறுகிறது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி இந்த உலகத்தில் ஒன்றையும் செய்திட முடியாது. அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது. இது தான் மதத்தின் அடிப்படைக் கருத்தாகும். 

மார்க்சியப் பார்வையில் மதம் 

மதத்தை மார்க்சியம் வேறு வகையில் பார்க்கிறது. 

மதம் ஒரு காலத்தில் தோன்றியது என்பதே மார்க்சியப் பார்வை. அப்படி என்றால் மதம் தோன்றாக் காலம் என்று ஒன்று உண்டா? ஆம் இருந்தது. 

மதம் இல்லாச் சமூகத்தை பழங்குடி சமூகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து நாகரீக சமூகமும் இந்தப் பழங்குடி சமூகத்தைக் கடந்து தான் வந்துள்ளது. நேரடியாக எந்தச் சமூகமும் நாகரீகம் பெற்றுவிடவில்லை. 

அந்தப் பழங்குடி சமூகத்தில் கடவுளோ, மதமோ கிடையாது. இந்த இரண்டும் இல்லாத அந்தச் சமூகம் எப்படி இருந்தது என்பதது என்பதை அடுத்துப் பார்ப்போம். 

அந்தப் பழங்குடி சமூகத்தில் மக்கள் தங்களுக்குள் வேறுபாடு இன்றி வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணக்காரன் - ஏழை என்ற வேறுபாடு கிடையாது. அப்படி இருந்தும் அந்த வாழ்க்கை மிகவும் கடினமானதாகத் தான் இருந்தது. 

வேட்டையில் எந்த உணவும் கிடைக்காமல் சில நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டது. அந்நிலைமைகளில் பூமியில் உள்ள கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்பார்கள். அதுவும் கிடையாத சூழ்நிலையையும் அன்றைக்கு அவர்கள் சந்தித்தார்கள். 

அந்தப் பழங்குடி சமூகத்தில் பணக்காரர் - ஏழை என்ற வேறுபாடு தான் கிடையாது. ஆனா அவர்கள் கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. 

வேட்டை ஆடுவதற்கு அன்றைக்கு அவர்களிடம் இருந்த கருவிகள் மிகவும் சாதாரணமானது. அதை வைத்துக்கொண்டு அன்றாட உணவுத் தேவையை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. உணவுகளைத் தேடுவது மட்டுமே அன்றைக்கு வேலையாக இருந்தாலும், முழு நாள் தேடியும் உணவு அவர்களுக்குச் சொற்பமாகத் தான் கிடைத்தது. 

பழங்குடி மக்கள் சேர்ந்து தான் வாழ்ந்தார்கள், ஆனால் அது ஒரு சிறிய கூட்டமாகத்தான் இருந்தது. விலங்கிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்தே வாழ வேண்டிய, சூழ்நிலை தான் அப்போது இருந்தது. மேலும் அந்தச் சிறு குழு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயமும் இருந்தது. 

ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்தில் இருக்கிற அனைவருக்காகவும் உழைத்தார்கள். கிடைக்கிற அனைத்தையும் சமமாகப் பங்கிட்டார்கள். அன்றைய நிலையில் அவர்கள் ஒரு கூட்டு வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தார்கள். இந்தக் கூட்டு வாழ்க்கைக் காரணமாக அன்றைய பழங்குடி சமூகத்தை ஆதி பொதுவுடைமை சமூகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு தனிநபரும் அந்தக் கூட்டத்துக்கு அவசியமாக இருந்ததால், ஒவ்வொரு தனிநபரையும் காப்பாற்ற வேண்டி வந்தது. எந்த ஒரு நபரையும் இழக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையே அன்னைக்கு இருந்தது. அன்றைய சிந்தனைகளும் கருத்துக்களும் இந்தச் சூழ்நிலைக்குத் தக்கபடி இருந்தது. 

அவர்களின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனையை, அவர்வர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகளே ஏற்படுத்திக் கொடுத்தது. 

அன்றைய பழங்குடி சமூகங்களுக்கு இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றது. தோல்வி அடைந்த பிற பழங்குடி மக்களை, தம் இனத்தோடு சேர்த்துக் கொள்ளாமல், அவர்களைக் கொலை செய்துவிடுவார்கள். இருக்கிற உணவு பற்றாக் குறையினால் போர் கைதிகளைப் பராமறிக்க முடியவில்லை. அதனால் பிடிபட்டவர்களை அன்றைக்குக் கொலை செய்துவிடுவார்கள். இது தொடக்கல கால நிலைமை. 

இனக் குழு பெருகிய போது, தோல்வி அடைந்த இன மக்களை, முன்பு போலக் கொலை செய்யாமல், அவர்களை அடிமையாக வைத்துக் கொண்டார்கள். 

இந்தப் பழங்குடிகளிடம் மதம் காணப்படவில்லை என்று பார்த்தோம். ஆனால் அந்த மக்களிடம் ஒன்று இருந்தது. அதை ஆங்கிலத்தில் Magic என்று கூறுவார்கள். இதைத் தமிழில் மாயவித்தை என்று சொல்லாம். தங்களுக்கு உணவாக எதுவும் கிடையாக்காத போது, அந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உருவானதே இந்த மாயவித்தை. அன்றைய சமூகத்தில் பயன்படுத்திய உற்பத்திக் கருவிகளின் எளிய தன்மையின் வெளிப்பாடே மாயவித்தை. 

இயற்கையைச் செயற்பட வைக்க உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற உத்தியே மாயவித்தை. பொய்த் தோற்றம் என்று கூறுவதால் இது ஒரு மதப் போக்காகப் பார்க்கக்கூடாது. இது ஒரு மன கிளர்ச்சிக்காக அந்த மக்கள் செய்தனர். இதை எப்படிச் செய்தனர் என்பதைப் பார்ப்போம். 

மழை பெய்யாத காலங்களில், அதனால் ஏற்பட்ட அசாதரணச் சூழ்நிலையில், அவர்கள் கூட்டாக மழை வேண்டி நடனம் ஆடுவார்கள். மழை பெய்தது போலவும், அதன் விளைவாகக் கிழங்குகள் நிறையக் கிடைத்த போலவும் நடிப்பார்கள். இந்த நடிப்பு ஒரு வகையில் மனக் கிளர்ச்சி ஏற்பட்டு, அந்த அசாதாரணச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். இது தொடக்கலாம். 

அதற்கு அடுத்த, சமூக வளர்ச்சி கட்டத்தில் "மழையே வா" என்று கட்டளை இட்டார்கள். இது அவங்களோட இயலாமையை வெளிப்படுத்தினாலும், எந்த இயற்கையை மீறிய சக்தியிடம் வழிபாடு செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான் இதை மதம் என்று சொல்வதில்லை. 

இந்தப் பழங்குடி சமூகத்தில் மதம் தோன்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். அப்படி என்றால் எந்தச் சமூகத்தில் மதம் தோன்றியது. 

இந்தப் பழங்குடி சமூகத்தின் ஆதித வளார்ச்சிக் கட்டத்தில் மதம் தோன்றியது. 

அந்த நேரத்தில் உற்பத்திக் கருவிகள் சற்று மேம்பாட்டு இருந்தது, அதனுடன் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. இந்த உழைப்புப் பிரிவினை தான் அன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. 

குறிப்பிட்ட சிலர் வேட்டையாடுவதும், மற்ற சிலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதுமான வேலைப் பிரிவினை முதலில் தோன்றியது. இந்த வேலைப்பிரிவினையினால் உணவு உற்பத்தியில் சற்று உபரி ஏற்பட்டது. இந்த உபரி அன்றைய சமூகத்தின் தேவையை முழுமையாக நிறைவேற்றிவிட வில்லை என்றாலும், பழைய நிலைமையை ஒப்பிடும்போது சற்று உபரி ஏற்பட்டது. 

இந்த உபரியை பயன்படுத்திக் கொள்வதில் புதிய மாற்றம் ஏற்பட்டது. முன்பு கூட்டாக உழைத்தனர், கிடைப்பதை சமமாகப் பங்கிட்டனர். இப்போது வேலைப்பிரிவினைக்கு ஏற்ப பங்கீடு மாறியது. சமமான பங்கீடு என்ற முறை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. 

கூட்டாகச் செய்த மாயவித்தை இப்போது ஒருசிலரால் மட்டுமே செய்யப்பட்டது. அதில் தனிச்சிறப்பும் தேர்ச்சியும் வளர்ந்தது. பழங்குடிகளுக்கு இடையே இணைப்பு ஏற்பட்டது, இந்த இணைப்பு போர்களாலும், வேறு சில காரணங்களாலும் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் செய்து வந்த தொழிலையே தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் தான் சாதி தோன்றியது. சாதி தோன்றியதற்குப் பல காரணங்களில் இதுவும் ஒன்று. 

வேலைப் பிரிவினையின் வளர்ச்சியினால், உடல் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் அதனை நிர்வகிப்பவர்களுக்கும் இடையே வேறுபாடு தோன்றத் தொடங்கியது. இந்த உடல் உழைப்பு இல்லாதவர்கள் உபரியை கையக்கப்படுத்தினர். 

இந்தக் கையப்படுத்துவதற்கு நியாயம் கற்பிக்கவே மதம் தோன்றியது. உடலால் உழைப்பவர்களை இழிவாகப் பார்க்கும் போக்குத் தொடங்கியது. மூளை உழைப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது. 

உழைப்பை செலுத்துவர்களுக்கும் உழைப்பை வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள கோபதாபங்களை மூடிமறைக்கவே மதம் தோன்றியது. மதமும் அரசும் ஒரே காரணத்தின் அடிப்படையில் தான் தோன்றியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது. 

வர்க்கம் தோன்றிய போது மதம் தேவைப்பட்டது 

மதத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலன்கள் பிரதிபலிக்கிறது. மதமும், அரசும் அனைவருக்கும் பொதுவானது என்று அது கூறியது. ஆனால் அதன் வர்க்கத் தன்மையை மார்க்சியமே வெளிப்படுத்தியது. 

சமூகத்தில் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் இருப்பதற்குக் காரணத்தைக் கூறுவதில் மதத்தின் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது. பணக்காரர்கள் இன்று பணக்காரர்களாக இருப்பதற்குக் காரணம், போன ஜென்மத்தில் அவர்கள் செய்த புன்னியக் காரியமே, என்று மதம் கூறியது. உழைப்பாளிகள் நாள் முழுதும் உழைத்தும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காததற்கு, போன ஜென்மத்தில் இவர்கள் செய்த பாவ காரியம் என்று மதம் கூறியது. 

அத்தோடு நிற்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்த ஜென்மத்தில், பலனை எதிர் பார்க்காமல் உழைக்க வேண்டும். இருப்பதைக் கொண்டு தியாக உணர்வோடு, இந்த ஜென்மத்தில் வாழ்ந்தால், அடுத்த ஜென்மத்தில் நலமாக வாழலாம். இது ஒரு சாதாரணக் கருத்தாகத் தெரியலாம், ஆனால் இதில் தான் மதத்தின் வர்க்கத் தன்மை அடங்கி இருக்கிறது. 

மதத் தோற்றத்திற்கு இரண்டு காரணங்கள் 

மதத்தின் தோற்றத்துக்கு மார்க்சியம் இரண்டு காரணத்தைக் கூறுகிறது. ஒன்று கல்லாமை மற்றொன்று இல்லாமை. 

இயற்கைப் பற்றிய அச்ச உணர்வு கல்லாமையினால் ஏற்பட்டது. 

சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுக்குக் காரணத்தை அறியாமலும், பொருளாதாரப் போக்கைப் புரிந்து கொள்ளாமையினாலும் உருவான அச்ச உணர்வினால் மத உணர்வு தோன்றியது. இது இல்லாமை என்கிற அடிப்படைக் காரணத்தால் தோன்றிய அச்சமாகும். 

இயற்கைப் பற்றிய அறியாமையினால் உருவான அச்சமும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் பற்றிய அறியாமையினால் ஏற்படுகிற அச்ச உணர்வும் சேர்ந்து, மதம் தோன்றுவதற்குக் காரணமாகிறது. 

கல்லாமை, இல்லாமை ஆகிய இரண்டுமே மதத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும். 

மதத்தை வெறும் மூட நம்பிக்கையாக, மார்க்சியம் பார்க்கவில்லை. மதம் தோன்றுவதற்கான புறநிலைக் காரணம் இருக்கிறது. அந்தப் புறநிலை இருக்கும் வரை மதமும் அதே போல அரசும் இருக்கும். புறநிலை மறையும் போது மதமும் அரசும் மறைந்து போகும். மதம் தோன்றுவதற்கான முக்கியமான புறநிலைமைகளே அரசு தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது. 

கல்லாமை மறைந்துவிட்டது 

மதம் தோன்றுவதற்கான இரண்டு காரணங்களில் ஒன்று, இன்றைய நிலையில் மறைந்து விட்டது என்று சொல்லலாம், இயற்கைப் பற்றிய புரிதல் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வளர்ந்து இருக்கிறது. படிப்பறிவு குறைந்த, அல்லது விஞ்ஞானப் படிப்பு இல்லாதவர்களிடமே இந்தக் காரணங்கள் இன்றும் நீடிக்கிறது. அதனால் இயற்கைப் பற்றிய அறியாமை இன்றைய நிலையில் நீங்கிவிட்டதாகக் கூறலாம். 

ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வினால் ஏற்படுகிற அச்சவுணர்வு இன்னும் நீடிக்கிறது. சமூகத்தில் படிப்பறிவு பெற்றவர்களிடையிலும் இன்று மத உணர்வு இருப்பதற்குக் காரணம் இதுவே ஆகும். விஞ்ஞானிகளிடமும் கூட மத உணர்வு இருக்கிறது. 

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருதார நெருக்கடிகள் தோன்றியதற்கு காரணத்தை பலரால் அறிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி அடைந்த வங்கிகள் சில நாட்களுக்குள் சரிந்து வீழ்ந்தன. இதற்கான காரணத்தை அறியாமல் இருந்தவர்களுக்கு, இதனால் ஏற்படுகிற அச்ச உணர்வு, அவர்களை இயற்கை மீறிய சக்தியிடம் தஞ்சம்புக வைத்தது. 

மதத்தின் மறைவு 

மதத்தின் மறைவு என்பது வர்க்க சமூகத்தின் மறைவோடு இணைந்துள்ளது. அப்போது அரசும் உலர்ந்துவிடும், மதமும் தேவையற்றுப் போய்விடும். அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமே இருக்காது. வர்க்கங்கள் முழுமையாக ஒழிந்து போய்யிருக்கும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து போயிருக்கும். 

மக்களை வேறுபடுத்தும் பொருளாதாரக் காரணங்கள் இல்லாத அந்தக் காலத்தில் மதம் தேவைப்படப் போவதில்லை. வர்க்க வேறுபாடு இல்லாத அந்தச் சமூகத்தில். வர்க்க ஒடுக்கு முறைக்குக் காரணமான மதம், அரசு ஆகியவை தேவை இல்லாமல் மறைந்து போய்விடும். 

இங்கே சுருக்கமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேல் விளங்கங்களுக்கு மார்க்சிய தத்துவத்தைப் படித்தறிய வேண்டும். கண்டிப்பாக அரசியல் பொருளாதாரத்தையும் இத்துடன் இணைந்து கற்க வேண்டும். 

இன்று அறிமுகமாகப் பெற்றது, மார்க்சிய தத்துவம், மார்க்சிய பொருளாதாரம் பற்றிய புரிதல் கிடைக்கும் போது, இந்த அறிமுகத்தைக் கடந்து தெளிவைப் பெறலாம். 

இன்று நாம் பார்த்தது தத்துவம் - மதம் பற்றி அறிமுகமே. கம்யூனிஸ்ட் கட்சியின் மதத்தின் மீதான அணுகுமுறை என்ன? என்பது அவசியமான ஒன்றாகும். அதை ஒரு தனி வகுப்பில் பார்க்கலாம். 

No comments:

Post a Comment