புதிய
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் மார்க்சியம் பழைமைப்பட்டு காலாவதியாகிவிட்டதாக சிலர்
பேசத் தொடங்கினர். இவர்களுக்கு லெனின் தமது பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
என்ற நூலில் பதிலடி கொடுத்தார். விஞ்ஞான வளர்ச்சியின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளும்
அதற்கு மார்க்சியவாதிகள் கொடுக்க வேண்டிய பதில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல்
தெளிவாகக் காட்டுகிறது.
மின்னணு 1897ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
1896ஆம் ஆண்டு இயற்கை கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, அணுக்கள் பிளவுபடக்
கூடியவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துப் பொருட்களின் அடிப்படை அணுக்கள் என்கிற
கருத்து மறுக்கப்பட்டது. அணுக்களின் நிலைப்புத் தன்மை, பிரிபடாத தன்மை என்கிற இயற்பியல்
வல்லுணர்களின் கருத்துக்கள் தகர்ந்து போயின. உடனே பொருள்முதல்வாதம் தகர்ந்து போய்விட்டதாக
கூச்சல் இட்டனர். உண்மையில் பொருள்முதல்வாதம் தகர்ந்து போய்விடவில்லை, முந்தைய இயற்பியல்
கருத்துக்கள்தான் தகர்ந்து போயின. பருப்பொருள் மறைந்து போயின என்பது தவறானது என்றும்
பருப்பொருளைப் பற்றிய புரிதலின் எல்லை தான் தகர்ந்து போயின என்று லெனின் சரியாக விளக்கினார்.
“…பருப்பொருள் மறைந்து விடுதல், மின்சாசாரம் அதன்
இடத்தை எடுத்துக் கொள்ளுதல், இதரவை ஆகிய கூற்று ஏராளமானவர்களைக் குழுப்பிக் கொண்டிருக்கிறது,
ஆனால்,அதன் உண்மையான பொருள் இதுதான்.
“பருப்பொருள் மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப்
பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப்
போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள், பருப்பொருளின் குணாம்சங்களும் (ஊடுருவ முடியாத்
தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதியானவையாக,
மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பருப்பொருளின்
சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளம் ஆனவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. பருப்பொருளின்
ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல்
என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”
பருப்பொருள்
என்பது நம்முடைய உணர்வுநிலைக்கு வெளியே இருக்கிறது என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்
அடிப்படையாகும். புதிய கண்டுபிடிப்புகள் எந்த வகையிலும் பொருள்முதல்வாதத்தை அதன் இயக்கவியல்
போக்கில் இருந்து மறுத்திடவில்லை.
புதிய
கண்டுபிடிப்புகள் பழைய கண்டுபிடிப்புகளை காலாவதியாக்கக்கூடும், அணு மற்றும் எலெக்ட்ரானைப்
பற்றி விஞ்ஞானத்தின் போதனைகளும் காலாவதியாகிப் போகலாம், ஆனால் புறநிலை உண்மை
என்பது என்றும் காலாவதியாகாது.
“பொருளின் அமைப்பியலைப் பற்றி, உணவின் ரசாயனக் கலவையைப்
பற்றி, அணு மற்றும் எலெக்ட்ரானைப் பற்றி விஞ்ஞானத்தின் போதனைகள் காலாவதியாகக்கூடும்,
அவை தொடர்ச்சியாகக் காலாவதியாகின்றன, ஆனால் மனிதன் கருத்துக்களை உண்டு உயிர்வாழ முடியாது.
ஆத்மார்த்தமான அன்பினால் மட்டுமே குழந்தைகளைப் பெற முடியாது என்ற உண்மை ஒருபோதும் காலாவதியாவதில்லை.
காலம் மற்றும் விசும்பின் புறநிலை யதார்த்தத்தை மறுக்கின்ற ஒரு தத்துவம் மேலே கூறப்பட்ட
உண்மைகளை மறுப்பதைப் போலவே பொருளில்லாதது, உளுத்துப்போனது, போலியானது.”
இவ்வாறு
விளக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்தப் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு
எதிராக திசை திருப்பி கருத்துமுதல்வாதப் பார்வையை நிலைநாட்ட முயற்சித்தனர். இவர்களில்
மாஹ், அவெனாரியுசின் மற்றும் பக்தானவ் குறிப்பிடத்தக்கவர்கள்.
உலகம்
எப்படி உள்ளதோ அதனை அப்படியே மக்களால் அறிந்திட முடியாது. ஏனென்றால் அறிதல் என்ற செயற்பாடு, பொருட்களை எதிர்கொள்வதில்லை,
புலனுணர்ச்சிகளைத் தான் எதிர்கொள்கிறது. பொருள் என்று கூறப்படுவது உண்மையில் நமது புலனுணர்ச்சிகளின்
முழுமையே அல்லாது வேறெதும் கிடையாது. இந்த புலனுணர்ச்சிகளுக்கு அப்பால் உலகம் இருக்கிறதா?
என்பதை அறிந்திட முடியாது, ஏனென்றால் உலகைப் பற்றிய அறிவு புலனுணர்ச்சிகளில் இருந்து
தான் பெறப்படுகிறது, என்பதாக இவர்களின் தத்துவம் விவரிக்கிறது.
மார்க்சியம்
கூறுகிற புறநிலை உண்மை என்பதை, இந்த தத்துவப் போக்கு மறுதலிக்கிறது. இதன்விளைவாக சமூக
நடைமுறையில் அகநிலை வழியிலான அணுமுறை வலியுறுத்தப்படுகிறது. புறநிலை உண்மை இல்லை என்றால்,
புறநிலையான விதிகளும் கிடையாது என்றாகிறது. சமூக நடைமுறை அரசியல் போன்ற எல்லாம் மனிதர்களின்
கருத்துகளின் அடிப்படையில் அதன் திறமையின் வழியில் அமைகிறது என்று மாஹியினை ஆதரிப்பவர்கள்
கூறினர்.
இந்த
தவறானப் போக்கின் விளைவைப் பற்றி லெனின் கூறியதை சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்)
கட்சியின் வரலாறு என்னும் நூலில் தொகுத்துத்தரப்பட்டுள்ளது:-
1) “மார்க்சியத்தை மிகவும் நுணுக்கமாக பொய்யாக்குவது.
மார்க்சியம் என்ற போர்வையில், பொருள்முதல்வாத முடிவுகளுக்கு விரோதமான முடிவுகளை மிகமிக
நுணுக்கமான முறையில் வெளிப்படுத்துவது- இதுதான் அரசியல் பிரச்சினைகளிலும், செயற்தந்திரப்
பிரச்சினைகளிலும், பொதுவாக தத்துவத்திலும் காணப்படும் நவீன திருத்தல்வாதத்தின் சிறப்பு
அம்சங்கள்.”
2) “மாஹ், அவெனாரியுசின் ஆகியோர்களுடைய போதனைப்போக்கு
முழுவதும் கருத்துமுதல்வாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.”
3) “மாஹ் என்பவரின் கருத்துமுதல்வாதத்தில் எல்லோரும்
சிக்கிவிட்டனர்.”
4) “”விஞ்ஞான ஆதாரமின்றி அனுபவத்தை”க் கொண்டு ஏட்டுப்புலமைத்தனமாக
நுணுக்கமாகச் செய்யப்படும் கண்மூடித்தனமான விமர்சனத்தின் பின்னால், தத்துவத்தில் கட்சிகளுக்குகிடையே
நடைபெறும் போராட்டங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது, இந்தப் போராட்டங்களை நன்றாக
அலசி ஆராய்ந்து பார்த்தால், நவீன சமூகத்தில் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் வர்க்கங்களின்
போக்குகளையும், கருத்துமுதல்வாதத்தையும் காணலாம்.”
5)“விஞ்ஞானத்தைவிட தங்களின் மனதில் குடிகொண்டிருக்கின்ற
குருட்டு நம்பிக்கையைப் பெரிதாகக்கருதும் பிற்போக்குப் பேர்வழிகள் பொதுவாக பொருள்முதல்வாதத்தை
எதிர்த்துப் போராடுகிறார்கள். விஞ்ஞானபூர்வமற்ற விமர்சனம் இந்தப் பேர்வழிகளுக்கு சேவை
செய்கிறது. அந்த விமர்சனம் புரிகிற வர்க்கப்பணி, உண்மையான பணி, இதைத்தவிர, வேறு எதுவுமில்லை”
6) “தத்துவார்த்த கருத்துமுதல்வாதம்….. பிற்போக்குத்
தனத்திற்கு பாதையாகும்”
வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சியின்
செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டுகிறது. இதனை மறுத்து பிற்போக்கான கருத்துமுதல்வாதத்தின்
பக்கம் சாய்வதென்பது வர்க்கப் போராட்டத்தில் பிற்போக்குத்தனத்திற்கே அதாவது எதிரிக்கே
பாதை அமைத்திடும். அதனால் சித்தாந்தப் போராட்டம் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமானதாகும்.
மாஹ்,
அவெனாரியுசின் ஆகியோருடையத் தத்துவம் எவ்வகையில் அகநிலை கருத்துமுதல்வாதம் லெனின் என்பதை
விவரிக்கிறார்.
“எவ்விதமான உயிரினமும் எவ்விதமான புலனுணர்ச்சியும்
அல்லது எவ்விதமான “மைய உறுப்பும்” உயிரோடு வசிக்க முடியாத காலத்தில் பூமி இருந்தது
என்பதைக் கல்வியறிவுடைய அல்லது சிந்தனைத் தெளிவுடைய எவருமே சந்தேகிப்பதில்லை. ஆகவே
பூமி புலனுணர்ச்சிகளின் தொகுதி (“பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள்”) அல்லது
“மனோதத்துவ மற்றும் இயற்கைக்குரிய முற்றொருமை கொண்ட மூலக்கூறுகளின் தொகுதி”…
-என்ற மாஹ் மற்றும் அவெனாரியுசின் மொத்தத் தத்துவமுமே
தத்துவஞான இருட்டுவாதமாகும், அது அகநிலையான கருத்துமுதல்வதத்தை அறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு
நீட்டிச் செல்வதாகும்”
புதிய
கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி இவர்கள் பழைய அறிவொண்ணாவாத கருத்துமுதல்வாதத்தையே மீட்டெடுக்கின்றனர்.
“நாம் புலனுணர்ச்சிகளை மட்டுமே அறிவதால் புலனுணர்ச்சிகளின்
எல்லைகளுக்கு வெளியே ஏதாவதொன்றின் இருத்தலையும் அறிய முடியாது என்ற மாஹியவாதக் “கோட்பாடு”
கருத்துமுதல்வாத, அறிவொணாவாதத் தத்துவத்தின் பழைய குதர்க்கத்தைப் புதிய சட்டினியோடு
பரிமாறுவதே.”
ருஷ்ய மாஹியவாதியான பக்தாவ், தம்மை மாஹியவாதியாக
ஒத்துக்கொள்ளாமல், தத்துவத்தில் தம்மை ஒரு மார்க்சியவாதியாக கருத முனைகிறார். பொருள்முதல்வாதம்
காலாவதியாகிவிட்டது என்பவர்களைவிட இவரே ஆபத்தானவர். இவர் பொருள்முதல்வாதத்தை திரித்துரைக்கிறார்.
இவரது தத்துவம் என்பது அறிவொணாவாத அகநிலை கருத்துமுதல்வாதமே.
“பின்னால் தரப்பட்ட கேள்விக்கு பக்தானவின் எதிர்மறையான
பதில் தெளிவாக இருக்கிறது, உண்மை என்பது ஒரு சித்தாந்த வடிவம் மட்டுமே என்றால்
அகப்பொருளில் இருந்து, மனித குலத்தில் இருந்து சுதந்திரமான உண்மை என்பது கிடையாது,
ஏனென்றால் பக்தானவுக்கோ அல்லது நமக்கோ மனித சித்தாந்தத்தைத் தவிர வேறுவிதமான எந்தச்
சிந்ததாந்தமும் தெரியாது. பக்தானவின் எதிர்மறையான பதில் அவருடைய கூற்றின் இரண்டாவது
பாதியில் இன்னும் அதிகத் தெளிவாகப் புலப்படுகிறது, உண்மை என்பது மனித அனுபவத்தின் ஒரு
வடிவம் என்றால் மனித குலத்தில் இருந்து சுதந்திரமான உண்மை என்பது கிடையாது, புறநிலையான
உண்மை என்பதும் இருக்க முடியாது.
பக்தானவ் புறநிலையான உண்மையை மறுப்பது அறிவொணாவாதம்
மற்றும் அகநிலைவாதமாகும்.”
பக்தானவ்வின்
தலைகீழ் சிந்தனையை லெனின் அப்பட்டமாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். புறநிலையானது மனிதர்களின்
அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத் திறனுக்கும் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார்
பக்தானவ், இதனை மறுத்து உண்மை என்பது இதற்கு நேர்மாறானது என்கிறார் லெனின்.
“..பூமியின் கடந்த காலம் மற்றும் உலகத்தின் படைப்பு
ஆகியவை பற்றிப் பொருந்துகின்ற புறநிலை யதார்த்தம் இல்லை. எந்தச் சமூகத்துக்கும் முன்பு,
மனித குலத்துக்கு முன்பு, அங்ககப் பருப்பொருளுக்கு முன்பு பூமி இருந்தது,
அது திட்டவட்டமான காலத்துக்கு மற்ற கிரகங்களைப் பொறுத்தவரை திட்டவட்டமான
விசும்பில் இருந்து வந்திருக்கிறது என்ற விஞ்ஞான போதனைக்கு பொருந்துகின்ற புறநிலை
யதார்த்தம் இருக்கிறது.
விசும்பு மற்றும் காலத்தின் பல்வேறு வடிவங்கள் மனிதர்களின்
அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத் திறனுக்கும் தகவமைத்துக் கொள்கின்றன என்பார்
பக்தானவ், ஆனால் இதற்கு நேர்மாறானதே உண்மையாகும், நம்முடைய “அனுபவமும்” நம்முடைய அறிவும்
புறநிலையான விசும்புக்கும் காலத்துக்கும் மேன்மேலும் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன,
அவற்றை மேன்மேலும் சரியாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கின்றன.”
மனிதர்களின் அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத்
திறனுக்கும் புறநிலை தகவமைத்துக் கொள்கின்றன என்பது பக்தானவின் கூற்றாகும். சமூக உணர்வு
சமூக வாழ்நிலையைச் சார்ந்திருக்கவில்லை, இரண்டும் முற்ற சரிசமமானது அதாவது பரஸ்பர வினைவுபுரிகிறது
என்ற பக்தானவின் கருத்தானது கருத்துமுதல்வாதமும் இல்லாத பொருள்முதல்வாதமும் இல்லாத
போக்கை முன்வைக்கிறது. இது மார்க்சிய தத்துவமுறைக்கு எதிரானதாகும்.
செயற்பாட்டின் குறிக்கோள்களை புறநிலை உண்மையில்
இருந்து பெறாமல் அகநிலையில் இருந்து தன்னிச்சையாக பக்தானவ்வின் கண்ணோட்டம் காணப்படுகிறது.
சமூக வளர்ச்சி என்பது மக்களின் நலன்களில் இருந்தல்லாமல், பெரும் நிறுவனத் தலைவர்களின்
தனித்திறனான சக்தியால் படைக்கப்படுவதாக கருதுகிறது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம் உழைக்கும் மக்களின்
நலன்களை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் தொழிலாளர்களின் கோட்பாடாக மார்க்சியம் விளங்குகிறது.
“பொருள்முதல்வாதிக்கு மனித நடைமுறையின் “வெற்றி”
நம்முடைய கருத்துக்களுக்கும் நாம் புலன்களால் அறிகின்ற பொருட்களின் புறநிலையான தன்மைக்கும்
இடையே பொருத்தம் இருப்பதை நிரூபிக்கிறது.“
No comments:
Post a Comment