Tuesday, 7 June 2016

கூலி விலை லாபம்- மார்க்ஸ்

கூலி விலை லாபம்
-மார்க்ஸ்
விலை- ரூ.60/-

தமிழில்: மு.சிவலிங்கம்

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018.

தொலை பேசி: 044- 24332424, 24332924, 24339024


1860களின் இடைப்பகுதியில், ஐரோப்பாவில் கூலி உயர்வுக்கான கோரிக்கையும், வேலை நிறுத்தப் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கூலி உயர்வினால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று முதலாளித்துவ அறிஞர்களின் கருத்தைப்போலவே, அகிலத்தில் பொதுக் கவுன்சிலின் உறுப்பினராக இருந்த ஜான் வேஸ்டனும் தொழிலாளர்கள் பொருளாதாரத்துக்கான போராட்டம் வீணானது என்ற கருத்தை தொழிலாளர் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் போராடுவதை அகிலம் ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா? என்ற கேள்விக்கு விஞ்ஞான வழிப்பட்ட பதிலைக் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டது. அப்போது மார்க்ஸ் "மூலதனம்" நூலின் முதல் தொகுதியை வெளியிடுவதற்கான தயாரிப்பில் இருந்தார். இந்நூலில் காணப்படும் சிலவற்றின் அடிப்படையில் 1865ஆம் ஆண்டு ஜூன் மாதம், சர்வதேசத் தொழிலாளர் கவுன்சில் கூட்டத்தில் "கூலி விலை லாபம்" என்ற அறிக்கையை ஆங்கிலத்தில் மார்க்ஸ் சமர்பித்தார். இந்த அறிக்கை மார்க்ஸ் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகள் எலியனோராவால் 1898ல் வெளியிடப்பட்டது.

வேஸ்டனின் அறிக்கையின் சாரம், தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தை நெருக்குதல் கொடுத்து நானூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாயாக சம்பளம் வாங்கினால், முதலாளி இதற்கு, ஈடாக ஐநூறு ரூபாய் பெறுமானத்துக்கு பதிலாக நானூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களையே தருவார். இதனால் தொழிலாளி வர்க்கம் கூலி உயர்வுக்கு முன் நானூறு ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு இப்போது ஐநூறு ரூபாய் கொடுக்க வேண்டியது இருக்கும்.

ஏன் என்றால் கூலியின் தொகை திண்ணமாக நிர்ணயிக்கப்பட்டது. கூலித் தொகை இயற்கையாகவே நிலையானதாக அவருக்குப் படுவதால், கூலி உயர்ந்தால் இந்த உயர்வை அடுத்து அதற்கான எதிர் நடவடிக்கை ஏற்பட்டே தீரும் என்பது அவரது வாதம்.

இதனை மறுபக்கத்திலிருந்து பார்க்க வேண்டும். கூலிக்குறைப்பை முதலாளிகள் பலவந்தமாக ஏற்படுத்த முடியும், அவ்வாறு செய்ய அவர்கள் இடைவிடாது முயல்கிறார்கள் என்ற உண்மை  வேஸ்டனுக்குத் தெரியும். கூலி நிலையானது என்னும் கோட்பாட்டின்படி இதை அடுத்தும் முன்னதைவிட குறையாத எதிர் நடவடிக்கை ஏற்பட்டே தீரும். எனவே, கூலியைக் குறைக்கும் முயற்சியையோ அல்லது செயலையோ எதிர்த்துத் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுப்பது நியாயமானதே. ஆகவே, கூலி உயர்வை வற்புறுத்திப் பெறும் போதும் அவர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள். ஏனென்றால், கூலிக் குறைப்புக்கு எதிரான ஒவ்வொரு எதிர் நடவடிக்கையும் கூலி உயர்வுக்கான நடவடிக்கையாகும். ஆகையால், கூலி நிலையானது என்பது வேஸ்டனின் சொந்தக் கோட்பாட்டின் படியே, சில சந்தர்ப்பச் சூழ்நிலைகிளில் கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் ஒன்றுபடவும் போராடவும் வேண்டியிருக்கிறது. இந்த முடிவை மறுப்பாராயின், கூலியின் தொகை திண்ணமானது என்று பெறப்பட்ட அந்த ஆதாரக் கூற்றை அவர் விட்டுவிட வேண்டும். கூலியின் தொகை என்பது நிலையான பரிமாணம் என்று அவர் சொல்லக் கூடாது.

தொழிலாளியினது உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட மதிப்புதான் அவனும் முதலாளியும் தத்தமது பங்குகளை, கூலியாகவும் லாபமாகவும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டியுள்ள ஒரே மதிப்பு. இந்த மதிப்பு இரு தரப்பினரிடையேயும் எத்தகைய வெவ்வேறான விகிதாச்சாரங்களில் பிரித்துக் கொள்ளப்பட்டாலும் அதன் அளவு மாற்றம் அடையாது என்பது தெளிவு. அதாவது கூலி மாறினால் லாபமும் எதிர்திசையில் மாற்றமடையும். கூலி குறைந்தால், லாபம் அதிகரிக்கும், கூலி அதிகரித்தால், லாபம் குறையும்.

வழங்கலும் வேண்டலும் (supply and demand) என்கிற சந்தையின் போக்காலும், சரக்கின் மதிப்பை விளக்க முடியாது என்கிறார் மார்க்ஸ்.

வழங்கலும் வேண்டலும் சந்தை விலைகளின் தற்காலிக ஏற்ற இறக்கங்களை ஒழுங்கு படுத்துவதைத்தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஒரு சரக்கின் சந்தை விலை அதன் மதிப்புக்கு மேலே ஏன் உயர்கிறது, அதன் மதிப்புக்குக் கீழே ஏன் குறைகிறது என்பதை வேண்டுமானல் அவை விளக்கலாம், ஆனால் அந்த மதிப்பை அவற்றால் ஒருபோதும் விளக்க முடியாது.

ஒரு சரக்கின் மதிப்பு அதில் அடங்கியுள்ள உழைப்பின் ஒட்டுமொத்தமான அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பின் அளவில் ஒரு பகுதி, கூலி வடிவத்தில் ஈடு செலுத்தப்பட்ட மதிப்பாகச் செயலாக்கப்படுகிறது, மறு பகுதியோ, எவ்வகையான ஈடும் செலுத்தப்படாத மதிப்பாகச் செயலாக்கப்படுகிறது. அதாவது சரக்கில் அடங்கியுள்ள உழைப்பில் ஒரு பகுதி ஊதியம் பெற்ற உழைப்பு, மற்றொரு பகுதி ஊதியம் பெறாத உழைப்பு. எனவே, சரக்கை அதன் மதிப்புக்கு விற்பதால் முதலாளி நிச்சயமாக லாபத்திற்கே விற்பார். அவர் தாம் ஈடு செலுத்திப் பெற்றதை மட்டுமின்றி, தனது தொழிலாளியின் உழைப்பு செலவிடப்பட்டிருந்த போதிலும் தாம் எதையும் செலுத்தாமல் பெற்றதையுங்கூட விற்கிறார்.

முதலாளிக்கு சரக்கின் மதிப்பு என்பது ஒன்று, அதன் உண்மையான மதிப்பு என்பது மற்றொன்று, இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். எனவே, பொதுவான சராசரி லாபங்கள், சரக்குகளை அவற்றின் உண்மையான மதிப்புகளுக்கு விற்பதால் கிடைக்கின்றதே தவிர அம்மதிப்புகளுக்கு மேலாக விற்பதால் அல்ல என்பதை மார்க்ஸ் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தக் கூலி அமைப்பு முறையின் சுரண்டலை உபரி மதிப்பு என்கிற தமது கண்டுபிடித்த கோட்பாட்டில் மார்க்ஸ் விளக்குகிறார்.


"மூலதன" நூலின் முதல் தொகுதி வெளிவருவதற்கு முன் இந்த அறிக்கையில் தான் முதன்முறையாக மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment