Sunday, 19 June 2016

ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் – லெனின் (அறிமுகம்)

ஏகாதிபத்திய போருக்கான காரணத்தையும், தற்கால அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார சாராம்சத்தை அறிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற நூலை 1916ஆம் ஆண்டில் லெனின் எழுதினார்.

இந்நூலின் நோக்கத்தை:-
“இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது முதல் உலக ஏகாதிபத்திய போரின் தறுவாயில், உலக முதலாளித்துவ அமைப்பை அதன் சர்வதேச உறவு முறைகளில் காட்டும் ஒரு தொகுப்புச் சித்திரமாக அளிப்பதே இப்புத்தகத்தின் பிரதான நோக்கமாக இருந்தது, இன்றும் இருக்கிறது” என்றும்,

“1914-1918ஆம் ஆண்டுகளது போரானது இரு தரப்பினர் தொடர்பாகவும் ஓர் ஏகாதிபத்திய (அதாவது பிரதேசக் கைப்பற்றலுக்கும் சூறையாடலுக்குமான கொள்ளைக்கார) போராகும், உலகைப் பங்கீடு செய்து கொள்வதற்கும், காலனிகள், நிதி மூலதனத்தின் “செல்வாக்கு மண்டலங்கள்” முதலியவற்றைப் பங்கீடும் மறுபங்கீடும் செய்து கொள்வதற்குமான போராகும் என்பது இவ்வெளியீட்டில் நிரூபித்துக் காட்டப்படுகிறது” என்றும் எழுதியுள்ளார்.”1

                இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் ஏகபோகமாக வளாச்சியடைந்து ஏகாதிபத்தியம் என்னும் புதிய கட்டமாக காட்சியளிக்கிறது.

“..ஏகபோகங்களது வரலாற்றின் முக்கிய கட்டங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. 1) 1860-70, தடையில்லாப் போட்டியினது வளர்ச்சியின் உச்ச கட்டம், உச்சிமுகடு, ஏகபோகங்கள் காண்பதற்கு அரிய கருநிலையிலே உள்ளன. 2) 1873ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, கார்ட்டல்கள் வளர்ச்சியுறும் நீண்டதொரு காலப்பகுதி, ஆனால் இன்னும் அவை விதிவிலக்காகவே இருக்கின்றன. அவை இன்னும் நிலை பெறவில்லை. அவை மாறுகின்ற இடைக்காலத்துக்குரிய புலப்பாடாகவே இன்னும் இருக்கினறன. 3) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உயர்வேற்றமும், 1900-1903ஆம் ஆண்டுகளின் நெருக்கடியும், பொருளாதார வாழ்வு அனைத்தின் அடிப்படைகளில் ஒன்றாகக் கார்ட்டல்கள் ஆகிவிடுகின்றன. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாற்றம் அடைந்து விடுகிறது”2

ஏகபோகத்திற்கு முன்பு, ஏராளமான தனியுடைமையாளர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பிரிந்து காணப்பட்ட சுதந்திர சரக்கு உற்பத்தியாளர்களுக்கு இடையே போட்டி நிலவியது. சமூகத்தில் ஒரு சரக்கின் தேவையினை கணக்கிட முடியாமல் இருந்தனர். பொதுவான சந்தையின் தேவையை முன்வைத்து தொடர்பற்ற பல்வேறு தனித்தனி உற்பத்தியாளர்கள் சரக்கினை உற்பத்தி செய்தனர். அதனால் உற்பத்தியில் அராஜகம் காணப்பட்டது.

                இந்தத் தடையில்லா முதலாளித்துவம் தவிர்க்க முடியாதவகையில் உற்பத்தியின் ஒன்றுகுவிப்பை நோக்கியும், இந்த ஒன்றுகுவிப்பு ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் ஏகபோகத்திற்கும் இட்டுச் செல்கிறது. இதனை மார்க்ஸ் தமது மூலதன நூலில் தெரிவித்துள்ளார்.

“..முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிகழ்முறையின் அளவீதமும் அத்துடன், முன்னீடு செய்ய வேண்டிய மூலதனத்தின் குறைந்தபட்ச அளவும் பெருகிச் செல்வதால், தொழில்துறை முதலாளி புரியும் பணியை தனியாகவோ கூட்டாகவோ செயல்படக் கூடிய பெரும்பெரும் பண முதலாளிகளின் ஏகபோகமாக மேலும் மேலும் மாறிச்செல்கிற ஏனைய நிலைமைகளோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது”3

இதனைப் புரிந்து கொள்ள முடியாத, அல்லது படித்தறியாத பல பேர்கள், தடையற்ற போட்டிக் காலத்து முதலாளித்துவத்தைப் பற்றி பேசிய மார்க்சின் பொருளாதாரம் பொய்த்துவிட்டது என்று கூக்குரல் எழுப்புகின்றனர். இதனை லெனின் மறுத்துரைக்கிறார்.

“அரைநூற்றாண்டுக்கு முன்னர், மார்க்ஸ் மூலதனத்தை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தடையற்ற போட்டி “இயற்கை விதியாக” மிகப் பெரும்பாலான பொருளிலாளர்களுக்குத் தோன்றியது. தடையற்ற போட்டி உற்பத்தியின் ஒன்று குவிப்பைத் தோற்றுவிக்கிறது என்றும், இந்த ஒன்றுகுவிப்பு அதன் வள்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏகபோகத்திற்கு இட்டுச்செல்கிறது என்றும், முதலாளித்துவத்தைப் பற்றிய தத்துவார்த்த, வரலாற்றுப் பகுத்தாய்வின் வாயிலாக நிரூபித்த மார்க்சின் நூலை, அதிகாரப்பூர்வமான விஞ்ஞானமானது கவனியாது மௌனம் சாதிக்கும் சதியின் மூலம் அழித்துவிட முயற்சி செய்தது. இன்று ஏகபோகம் நடைமுறை உண்மை ஆகிவிட்டது”4

                தடையற்ற போட்டி தவிர்க்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டதால், பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக் கோட்பாடு தவறாகிப்போய்விட்டதாக பெர்ன்ஷ்டைன் போன்றோர்கள் கூறத் தொடங்கினர். தடையற்ற போட்டி முதலாளித்துவம் மறைந்து போனது, திட்டமிடல் உற்பத்தி முறையான ஏகாதிபத்தியம் தோன்றியது என்று லெனின் கூறியது உண்மை தான். ஆனால் இது முதலாளித்துவ முரண்பாடுகளை நீக்கிவிட்டதாக அவர் கூறவில்லை.  லெனின் தெளிவாக ஏகாதிபத்திய பொருளாதார உறவின் சிக்கலை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

“முதலாளித்துவமானது அதன் ஏகபோகக் கட்டத்தில், உற்பத்தியானது மிக விரிவான அளவில் சமூகமயமாக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது, முதலாளிகளை, அவர்களது விருப்பத்துக்கும் உணர்வுக்கும் மாறாக, ஒரு வகைப் புதிய சமூக முறையினுள், அறவே தடையில்லாப் போட்டியிலிருந்து முற்றும் சமூகமயமாக்கப்படுதலுக்கு மாறிச்செல்வதற்கான இடைநிலையாகிய ஒன்றினுள் இழுத்துச் செல்கிறது எனலாம்.

உற்பத்தியானது சமூகமயமாகிறது, ஆனால் சுவீகரிப்பு தொடர்ந்து தனியார் வசமே உள்ளது. சமூக உற்பத்திச் சாதனங்கள் தொடர்ந்து ஒரு சிலரது தனிச் சொத்தாகவே இருக்கின்றன. சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கப்படும் தடையில்லாப் போட்டியின் பொதுவான கட்டமைப்பு நீடிக்கிறது, அதே போது ஏகபோகக்காரர்கள் ஒருசிலர் ஏனைய மக்கள் தொகையோரின் மீது செலுத்தும் ஒடுக்குமுறை ஆதிக்கம் நூறு மடங்கு மேலும் கடுமையானதாய், அழுத்துவதாய சகிக்க முடியாததாய் ஆகிறது.”5

                இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சிக்கலாகும். எந்த காணரங்கள் சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்று மார்க்ஸ் கூறினாரோ அதே காரணங்கள் ஏகாதிபத்தியத்தில் தீவிரமடைந்துள்ளது.

                சொந்த நாட்டில் போட்டி போட்டுக் கொண்டிருந்த முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சி பெற்ற காலத்தில், அது சர்வதேச அளவில் தமது போட்டியை தொடர்கிறது. இந்தப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை.
               
பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லா முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் உரிய அடிப்படை இயல்பு, ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாறக் கண்டோம், பெருவீதத் தொழில் துறையைத் தோற்றுவித்துச் சிறு தொழிலை நெரித்து வெளியேற்றவும், பெருவீதத் தொழில் துறையின் இடத்தில் மேலும் பெரியதான பெருவீதத் தொழில் துறை அமரவும் கண்டோம்.

இவ்விதம் உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு அந்த அளவுக்கு அதிகமாக்கப்பட்டு அதிலிருந்து ஏகபோகம் வளர்ந்தெழுந்துள்ளது, தொடர்ந்து வளர்ந்தெழுந்து வருகிறது, கார்ட்டல்களும் சிண்டிக்கேட்டுகளும் டிரஸ்டுகளும் இவற்றுடன் ஒன்றுகலந்துவிடும் பத்துப் பதினைந்து வங்கிகளின், நூறு கோடிக் கணக்கிலான தொகைகளைத் தம் பிடியில் கொண்டு காரியமாற்றும் வங்கிகளின் மூலதனமுமாகிய ஏகபோகமாகும் இது. தடையில்லாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன.”6

                பெர்ன்ஷ்டைன் போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சியடைந்துள்ளதால், பழைய முதலாளித்துவத்தின் சில முரண்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன, மீதமிருப்பவையும் தீவிரமானதாக இல்லை, அதனால் சமூக மாற்றம் என்பது தேவையற்றது முதலாளித்துவத்துக்குள்ளேயே சீர்திருத்தம் போதுமானது என்று கூறினர்.

                லெனின் இதனை முற்றாக மறுக்கிறார். ஏகபோகத்தில் முரண்முற்றவே செய்கிறது.

“இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்தில் இருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைச் சரக்கு உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வுகாண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும். ஆனபோதிலும், எல்லாவிதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது.
மெய்தான், முதலாளித்துவத்தில் ஏகபோகத்தால் முழுமையாகவும் மிகநெடுங் காலத்துக்கும் போட்டியினை உலகச் சந்தையிலிருந்து நீக்கிவிட முடியாதுதான்”7

                ஏகபோகங்களாகச் செயற்படும் இந்த ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் பிரதேச பங்கீட்டுக்கு போரினை தோற்றுவிக்கின்றன. இதில் தான் இன்றைய போரின் பொருளாதார அடித்தளம் அமைந்துள்ளது.

“ஒரு புறத்தில் உற்பத்திச் சத்திகள் வளர்ச்சிக்கும் மூலதனத்திரட்டலுக்கும், மறு புறத்தில் நிதி மூலதனத்திற்காகக் காலனிகள், “செல்வாக்கு மண்டலங்களின்” பங்கீட்டுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கு போரைத் தவிர முதலாளித்துவத்தில் வேறு வழி ஏதும் உண்டா? என்பதே கேள்வி.”8

                ஏகாதிபத்தியக் காலத்தில் உடல் உழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியின் காரணமாய் உடலுழைப்பு அல்லாத தொழில்நுட்பம் பயின்ற மூளை உழைப்பாளர்கள் பெருகிவருகின்றனர். இதன்மூலம் மார்க்சியம் கூறிவருகிற தொழிலாளர்களின் புரட்சி இன்றைக்கு சாத்தியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

மார்க்சிய அடிப்படைகளை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தவறான கருத்தே இது. மார்க்ஸ் உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அன்றைய புதிய நவீனஇயந்திரத்தை தொழிற்சாலையில் புகுத்தும்போது அந்த இயந்திரத்தை இயக்குகிற நேரடி உடலுழைப்புக் குறைந்த தொழில்நுட்ப தொழிலாளர்கள் தோன்றியதையும் அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களிடம் இருந்து வேறுபட்டிருப்பதையும் கூறியிருக்கின்றார்.

மார்க்ஸ் தாம் எழுதிய மூலதன முதல் தொகுதியில் ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி என்ற பகுதியில், இயந்திர சாதனமும் நவீனத் தொழில்துறையும் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தொழிற்புரட்சியைத் தொடர்ந்து தானியங்கி தொழிற்சாலை (automatic factory) தோன்றிடும் போது தொழில்நுட்பத்தைக் கையாள்கிற புதியவகை உயரிய தொழிலாளர் பிரிவு (superior class of workmen) உருவாவதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
“மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது, இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், மற்றவர்கள் ஒரு தொழிலுக்கு என்றே வளர்க்கப்பட்டவர்கள், இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவினை முற்றிலும் தொழில்நுட்ப வழிப்பட்டது.
தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரம் ஒன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதம், அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல, வேறு வழியின்றி தொழிற்சாலை முழுவதையும், அதாவது முதலாளிகளையும் அவர் சார்ந்து வாழ வேண்டிய நிலை அதே நேரத்தில் முழுமையாக்கப் படுகிறது.

வேறெங்கும் போலவே இங்கும் சமூக உற்பத்தி நிகழ்முறையினது மேம்பாட்டின் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும், அம்மேம்பாட்டை முதலாளி பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவாய் அதிகரித்த உற்பத்தித் திறனுக்கும் இடையில் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார், தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடம் இருந்து தொடங்குகிறது, இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின்தொடர வேண்டும்.

பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி உயிருள்ள ஒட்டுவால் ஆகிவிடுவதையும் காண்கிறோம்.”9

இயந்திரத்தின் ஒட்டுவாலாய் போன தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேதனைகளையும் இங்கே மார்க்ஸ் தொகுத்துள்ளார். ஆக, தமது உற்பத்திச் சக்தியை விற்கக்கூடிய நிலையில், முதலாளியின் மூலதனத்தை சார்ந்து வாழக்கூடிய சுரண்டப்படும் இந்த தொழிற்நுட்ப தொழிலாளியும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. இதன் தொடர்ச்சியாக தற்கால நவீன உற்பத்தி முறைக்கு வரும் போது இன்றைய பாட்டாளி தனிச் தேர்ச்சிபெற்ற, அதற்கு சான்றிதழ் பெற்ற, மூளை உழைப்பைச் செலுத்தும் தொழிலாளியாக இருக்கிறார்.

தற்காலத்திய தொழிற்சாலைகள் அதிநவீனமாக மாறிவிட்டது, இங்கே முழுவதும் தானியங்கி இயந்திரங்களையும், கணிப்பொறி இயந்திர மனிதனைக் (computer robot) கொண்டும் இயக்கப்படுகிறது. இதனை இயக்குகின்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் தங்களது உடலைவிட மூளையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே போல் மூளை உழைப்பை செலுத்துகின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிசெய்பவர்களில் பலபிரிவுகள் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். உடலுழைப்பைவிட மூளை உழைப்பைச் செலுத்துபவர்களுக்கு இன்றைய நிலையில் அதிகம் ஊதியம் கிடைக்கிறது என்பது உண்மையே. இவர்களிடம் இருந்துதான் மேட்டுக்குடி பாட்டாளிகள் தோன்றுகின்றனர்.

மேட்டுக்குடி பாட்டாளிகளின் மேட்டுக்குடி சிந்தனைகள் எல்லாம் முதலாளித்துவத்தின் செழுமைக் காலத்தில் மட்டும் தான் காணப்படும், தொடர்ந்து வரக்கூடிய பொருளாதார நெருக்கடியால் இவர்களும் நெருக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது என அறிந்திடும்போது இவர்களின் மேட்டுக்குடி சிந்தனை தவிடுபொடியாகிவிடும்.

 “…தொழிலாளி வர்க்கத்தில் அதிக ஊதியம் பெறுவோரைக் கூட – இவ்வர்க்கத்தின் மேட்டுக்குடியினைரையும் கூட- தொழில்துறைக் கொந்தளிப்புகள் எப்படிப் பாதிக்கின்றன”10 என்று மேட்டுக்குடி தொழிலாளர்களும் பொருளாதார நெருக்கடியின் போது அவர்கள் எப்படியெல்லாம் பாதித்தனர் என்பதினைப் பற்றிய செய்தியேடுகளில் வந்துள்ள அறிக்கையை மார்க்ஸ் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். முதலாளித்துவ செழுமையின் போது கிடைக்கின்ற அதிக ஊதியம், பொருளாதார நெருக்கடியின் போது உறுதியற்று போகிறது. செய்திடும் வேலையும் உறுதியற்றது என்பதை உணர்ந்திட்ட மேட்டுக்குடி பாட்டாளிகள் மார்க்சியத்தின் பக்கம் இருப்பர். வரலாறு அறியாத நேர்காட்சி கண்ணோட்டம் கொண்டவர்கள் நெருக்கடியின் போதே மார்க்சியத்தை நாடுவர்.

இந்த மேட்டுக்குடியினரை தனிப் பிரிவான அடுக்காக கொள்ளமுடியாது, தொழிலாளி வர்க்கத்தினுடைய இயக்க வளர்ச்சியில் மாறிச்செல்வதையேக் குறிப்பதாகும் என்கிறார் லெனின்.

“நடுநிலைவாதிக”ளிடையில், சட்ட முறைமையின் நச்சு நோயால் அரிக்கப்பட்டுப் போனவர்களும், நாடாளுமன்றச் சூழலால் கெடுக்கப்பட்டவர்களுமான வழக்கமான பக்தர்களும், சொகுசான பதவிகளுக்கும் வசதியான வேலைகளுக்கும் பழக்கமாகி விட்ட அதிகார வர்க்கத்தாரும் உள்ளனர். வரலாற்று முறையிலும், பொருளாதார முறையிலும் பார்த்தால் அவர்கள் தனிப் பிரிவான ஓர் அடுக்கு அல்ல, ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பழைய கட்டத்தில் இருந்து ஒரு மாறிச் செல்லுதலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்”11

பாட்டாளிகளும், பாட்டாளிகளை வழிநடத்தும் கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளியாக செயற்பட வேண்டுமானால், நிலவும் சமூகத்தின் பிரச்சினைகளை வரலாற்று முறையில் ஆய்ந்து, அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மார்க்சியத்தில் காணப்படும் அரசியல் பொருளாதாரம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமது அரசியல் செயற்பாட்டை விஞ்ஞான அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும்.

 லெனின் இந்த ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்ற நூலில், அன்றைய போரின் அரசியலையும், முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ச்சிபெற்று ஏகாதிபத்தியமாக நிலைபெற்றுள்ளதையும், இந்த புதிய நிலைமைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்ட் கட்சி தங்களது செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.

உற்பத்தியில் தடையில்லாப் போட்டியே முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு அடிப்படையாய் இருந்தது, இன்று ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிராக மாறிவிட்டது. இந்த ஏகபோகப் போக்கு ஏகாதிபத்தியமாக இன்று நிலைபெற்றுள்ளது.
:
“பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மைக் குறிப்புகளின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த ஒரு கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது, இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படைத் தன்மைக் குறிப்புகள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன, முதலாளித்துவத்தில் இருந்து மேலானதொரு சமூக-பொருளாதார அமைப்புக்கு மாறிச்செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.
ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவுக்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும்.”12

                முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை எட்டியதற்கான இலக்கணமாக ஐந்தை கூறுகிறார் லெனின்:-
“… ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்: 1) பொருளாதாரம் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு வளர்ந்துவிடுதல், 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த “நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதல், 3) சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல், 4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல், 5) மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப் பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுகளுக்கு இடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியம்.” 13

                ஏகாதிபத்தியத்தின் அடுத்த நடவடிக்கையாக, பிற ஏகாதிபத்தியம் கைப்பற்றிய பிரதேசங்களை கைப்பற்றுவதாகும் அதாவது மறுபங்கீடு செய்வதாகும். இது வெறும் பிரதேசங்களை பிடிப்பதாக மட்டும் இல்லாது பிற ஏகாதிபத்தியத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கும் ஆகும். மேலும், அதிக எண்ணிக்கையில் சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுகிற ஏகாதிபத்தியத்தை புல்லுருவித்தனமானதாகவும், அழுகிவரும் நிலையினதாவும் நிர்ணயிக்க வேண்டிவருவதாக, லெனின் கூறுகிறார்.

“ஏகபோகங்கள், ஆதிக்கக் கும்பல், சுதந்திரத்திற்காக அல்லாமல் ஆதிக்கத்துக்கான முயற்சிகள், ஒருசில மிகுந்த செல்வந்த அல்லது மிகுந்த வலிமையான தேசங்கள் மேன்மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுதல்- இவை எல்லாம், ஏகாதிபத்தியத்தின் தனிப்பட்ட தன்மைக் குறிப்பான இயல்புகளை- புல்லுருவித்தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவமாக ஏகாதிபத்தியத்துக்கு இலக்கணம் கூறும்படி நம்மை நிர்பந்திக்கும் அந்த இயல்புகளை- தோற்றுவித்திருக்கின்றன.”14

உற்பத்திச் சக்திகள் சமூகமயமாகிவிட்ட நிலையில் இந்த புல்லுருவித்தனமான ஏகாதிபத்தியம் அழுகிவிழ வேண்டியநிலையில் இருக்கிறது என்று புரட்சிக்கான புறநிலை காணப்படுவதாக லெனின் இந்நூலில் கூறியிருக்கிறார். ஆனால் அகநிலையாக உலக கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பப் போக்கினாலும் அதன் புரட்சிகரப் போர்குணம் தேசியவெறியாக மாறிப் போனதாலும் இந்த செயற்கைத் தன்மையால் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது தாமதம் ஆகலாம். சமூகப் புரட்சிக்கான புறநிலையாக அடித்தளம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மேற்கட்டமைப்பின் சந்தப்பவாதப் போக்கினால் புரட்சிகர வாய்ப்பு தவறிப் போகலாம். இருந்தாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் தூக்கியெறியப்படுவது உறுதி என்கிறார் லெனின்.

“…உற்பத்தியின் சமூகமயமாதலையே காண்கிறோம் என்பதும், உள்ளடக்கத்துக்கு இனி ஒவ்வாத மேலோடாய் தனியார் பொருளாதார உறவுகளுக்கு, தனியார் சொத்துறவுகளும் அமைந்திருக்கின்றன, இந்த மேலோடு அகற்றப்படுவது செயற்கையான முறையில் தாமதப்படுத்தப்படுமாயின் தவிர்க்க முடியாத முறையில் இந்த மேலோடு அழுகியே செல்லும், அழுகிய நிலையில் ஓரளவு நீண்ட காலத்துக்கு இந்த மேலோடு இருந்து வரலாம் (படுமோசமான நிலைமையே ஏற்பட்டு, சந்தர்ப்பவாதச் சீழ்க்கட்டி நீக்கப்பட நீண்ட காலமாகிவிடுமாயின்) என்ற போதிலும் தவிர்க்க முடியாதபடி இம்மேலோடு எப்படியும் அகற்றப்பட்டு விடும் என்பதும் தெளிவாகவே விளங்குகிறது.”15

                ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தின் புறநிலைமைகளையும் அகநிலைமைகளையும் கணக்கில் கொண்டு லெனின் மார்க்சியப் புரட்சிகர போதனையை விரிவுபடுத்தினார். சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான பொருளாயத சக்தியான புறநிலைமைகள் பக்குவப்பட்டிருக்கின்றன. மூலதனத்தின் தொடர் ஒடுக்குமுறையால் பாட்டாளி வர்க்கமும் ஒன்று திரண்டு காணப்படுகிறது. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டமும் தீவிரம் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளில் சோஷலிசப் புரட்சிக்கான சூழல் தோன்றியிருந்தது, இந்தச் சூழ்நிலையை புரட்சியாக மாற்ற வேண்டிய அகநிலைச் சக்திகள் செயலில் இறங்க வேண்டும். ஆனால் போல்ஷிவிக்குகளின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மேலைநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தாய்நாட்டின் விடுதலை என்று சந்தர்ப்வாதமாக சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன. இந்நிலையில் லெனின் புரட்சி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை புறநிலைக்கு ஏற்ப மாற்றினார்.

                வளர்ச்சி பெற்ற அனைத்து நாடுகளில் அல்லது பெரும்பான்மையான நாடுகளில் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று இதுவரை மார்க்சியவாதிகள் கருதிவந்தனர். லெனினும் இதே கருத்தையே கொண்டிருந்தார். வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளித்துவத்தின் முதிர்ச்சி இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது உண்மையே. ஆனால் இன்றைய நிலையில் ஏகாதிபத்தியமாக சீரற்ற வளர்ச்சியின் விளைவாக ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணியில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று லெனின் முடிவெடுத்தார். அதாவது ஒரு தனிநாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் வெற்றியின் தொடர்ச்சியாக பிறநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்று விளக்கினார்.

“ஏற்றத் தாழ்வான பொருளாதார, அரசியல் வளர்ச்சி முதலாளித்துவத்தின் கட்டாய விதியாகும். எனவே, முதலில் சில முதலாளித்துவ நாடுகளிலோ ஒரு தனி நாட்டிலோ சோஷலிசம் வெற்றி பெறுவது சாத்தியமே. அந்த நாட்டில் வெற்றி வாகை சூடிய பாட்டாளி வர்க்கம் முதலாளிகளின் தனியுடைமையைப் பறித்துவிட்டுத் தங்களுடைய சொந்த சோஷலிச உற்பத்தியை ஒழுங்கமைத்த பின், மீதியிருக்கும் முதலாளித்துவ உலகத்துக்கு எதிரே எழுந்து நிற்கும்- மற்ற நாடுகளிலுள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை தன்னுடைய குறிக்கோளின்பால் ஈர்த்து வரும், அந்நாடுகளில் முதலாளிகளுக்கு எதிராகப் புரட்சியெழுச்சிகளைக் கிளப்பிவிடும் தேவைப்பட்டால் சுரண்டும் வர்க்கங்களையும் அவர்களின் அரசுகளையும் எதிர்த்து ஆயுத பலத்தையும் பயன்படுத்தும்”16

ஏகாதிபத்தியப் போர் பற்றி எழுதிய இறுதிகால நூல்களில் இதுபற்றி லெனின் தொடர்ந்து எழுதினார். இதனடிப்படையில் போல்ஷிவிக்குகள் தங்களது கட்சியின் செயற்தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றி தனிநாட்டில் புரட்சியை நடத்தி முடிக்க போல்ஷிவிக்கு கட்சி களமிறங்கியது. பாட்டாளி வார்க்கத்துக்கு ஏற்ப கட்சியை அமைத்துக் கொண்டு செயற்பட்டதால், போல்ஷிவிக்கு கட்சி புரட்சிகர போர்குணத்தை இழக்காமல் செயற்பட்டது.

அடிக்குறிப்புகள்

1. ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்- தேர்வு நூல்கள் 4 - பக்கம்- 40,41
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 60-61
3. மூலதனம் – தொகுதி 2 பக்கம் 140-141)
4. ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்- தேர்வு நூல்கள் 4 - பக்கம்- 57-58
5. மேற்கண்ட நூல் -பக்கம்- 67
6. மேற்கண்ட நூல் - பக்கம்- 169-170
7. மேற்கண்ட நூல் - பக்கம்- 188
8. மேற்கண்ட நூல் - பக்கம்- 187
9. மூலதனம் தொகுதி ஒன்று - பக்கம் 568-569, 570-571
10. மேற்கண்ட நூல் - பக்கம் 897-898
11. நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் தேர்வு நூல்கள் 5 -பக்கம் 77
12. ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்- தேர்வு நூல்கள் 4 - பக்கம்-169,170
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 171-172
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 229
15. மேற்கண்ட நூல் - பக்கம்- 234
16. ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வேண்டும் எனும் முழக்கத்தைப் பற்றி - தேர்வு நூல்கள் 4 பக்கம்- 33


No comments:

Post a Comment