Saturday 24 July 2021

மார்க்சியம் பயிலுவது பற்றி லெனின்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

27 வது வார வகுப்பு - 25-07-2021) வகுப்பு) 

இன்று பல முற்போக்கு இளைஞர்கள் மார்க்சியத்தைப் படித்தறிய ஆவல் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், மார்க்சியத்தை எவ்வாறு படித்தறிவது என்பது பற்றி லெனின் காட்டியுள்ள வழிகாட்டுதல்கள் இங்கே தொகுக்கப்படுகிறது. இந்த வகுப்பு தொடக்கநிலை தோழர்களை மனதில் கொண்டு எடுக்கப்படுகிறது. பழைய தோழர்களுக்கு இவைகள் தெரிந்திருக்கும், இருந்தாலும் அதனை மீண்டும் ஒரு முறை காதில் போட்டுக் கொள்ளலாம். 

இன்றைய வகுப்புக்கு லெனினது முக்கியமான இரண்டு சொற்பொழிவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று “இளைஞர் கழகங்களின் பணிகள்” (02-10-1920) என்ற சொற்பொழிவு, மற்றொன்று “அரசு” (11-07-1919) என்பது பற்றிய சொற்பொழிவு. நமது வசதிக்காக இரண்டாவதை முதலிலும், முதலானதை இரண்டாவதும் பார்க்கலாம். 

“இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற சொற்பொழிவு, ருஷ்யாவின் இளங் கம்யூனிஸ்டக் கழகத்தின் மூன்றாவது அனைத்து ருஷ்யக் காங்கிரசில் நிகழ்த்திய சொற்பொழிவு ஆகும். ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடைபெற்ற பிறகு நிகழ்த்தப்படும் சொற்பொழிவாகும். இந்தச் சொற்பொழிவு ருஷ்ய இளைஞர்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ளதால், இன்றைய இளைஞர்களுக்கும் இது வழியாட்டியாக இருக்கும். 

மார்க்சியத்தை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் “கற்றறியுங்கள்” என்பது தான் பதிலாக இருக்கும். இது மிகமிகப் பொதுப்படையான பதிலாகும். எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற முதன்மையான கேள்விக்கு இது பதில் அளிக்கவில்லை. 

மார்க்சிய அறிஞர்கள் எழுதிய நூல்களிலும், பிரசுரங்களிலும் அடங்கியுள்ள அறிவை ஏற்றுக்கொள்வதே கம்யூனிசத்தைக் கற்றறிவதாகும் என்பதே பொதுவாக ஒருவருக்கு மனதில் தோன்றும். கம்யூனிசத்தைப் பயிலுவதற்கு இவ்வாறு கூறும் இலக்கணம் மிதமிஞ்சிய கொச்சைப்படுத்துவதும், குறைப்பாடு உடையதும் ஆகும் என்று லெனின் எச்சரிக்கிறார். 

ஒரு கம்யூனிஸ்ட் நூல்களில் இருப்பதை ஏற்றுக் கொள்வதே போதுமானதாகக் கருதினால், அது கம்யூனிச வார்த்தைகளைப் பேசி வித்தைக் காட்டுவோரை அல்லது வாய்சவடால்காரர்களையே உருவாக்கும். கம்யூனிசத்தை நூல்களில் மட்டும் படிப்பது என்பது தீங்கையே ஏற்படுத்தும். ஏன் என்றால் இத்தகையோர் கம்யூனிச நூல்களில் எடுத்துரைக்கப்பட்டதைப் படித்துத் தெரிந்து கொண்டபின், படித்ததைப் பல்வேறு துறைகளைச் சேர்த்து இணைத்திடும் திறமை அற்றவாக இருப்பர். 

இந்த எச்சரிக்கை, கம்யூனிசத்தை நூல்களில் படித்தறிய வேண்டாம் என்று கூறவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நூல்களில் படித்துப் பெற்ற அறிவோடு நின்று விடுகிற தவறைத்தான் சுட்டிக்காட்டப்படுகிறது. 

வேலையில் ஈடுபடாமல், போராட்டம் செய்திடாமல் கம்யூனிச நூல்களைப் படித்துப் பெறப்பட்ட அறிவு சிறிதும் பயனற்றது. அதைவிடக் கம்யூனிச முழக்கங்களை ஏற்றுக் கொள்வது அதைவிட அபாயகரமானதாகும். இந்த அபாயத்தைத் தக்க காலத்தில் உணர்ந்து தவிர்க்க வேண்டும். 

அதே நேரத்தில் மற்றொரு அபாயமும் இருக்கிறது. அது மார்க்சியத்தைத் தவிர மற்றது எதையும் பாடிக்காதிருத்தல். 

மனித குலம் சேகரித்திருக்கும் அறிவுச் செல்வத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது. அறிவின் கூட்டுத் தொகையினால் விளைந்த பயனே கம்யூனிசம். இந்தக் கூட்டுத் தொகையான அறிவைப் பெறாமலே, கம்யூனிச முழுக்கங்களையும் கம்யூனிசத்தின் முடிவுகளையும் அறிந்து கொண்டால் போதும் என நினைப்பது தவறாகும். 

லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற சிறு கட்டுரையைப் படித்தாலே இதனை உணரலாம். தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்கிற மார்க்சியத்தின் உட்கூறுகள் வந்தடைந்த வழிகளை அதில் லெனின் எடுத்துக்காட்டியுள்ளார். 

மனிதகுலம் படைத்தளித்திருக்கும் அனைத்துக் கருவூலங்கள் பற்றிய அறிவைப் பெற்று, சிந்தனையை வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே கம்யூனிஸ்ட் ஆக முடியும் என்கிறார் லெனின். 

விமர்சனக் கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே, ஒரு கம்யூனிஸ்ட், தயாராக வரையறுத்து வைக்கப்பட்டுள்ள முடிவுகளைத் தெரிந்து கொண்டுவிட்ட, ஒரே காரணத்தால், தனது கம்யூனிச அறிவை மெச்சிப் புகழ்வாராயின், உண்மையில் அவர் பரிதாகத்துக்குரிய கம்யூனிஸ்டுதான் என்கிறார் லெனின். 

மேலும் கூறுகிறார், ஒரு கம்யூனிஸ்ட், எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பபானவரா முடியவே முடியாது.  

கம்யூனிசத்தை எவ்வாறு பயில வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலாக லெனின் கூறுகிறார், “.. .. தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும் சுரண்டலாளர்களது பழைய சமூகத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.” இதுதான் பதில். 

ஒர் உதாரணத்தின் மூலம் லெனின் விளக்குகிறார். என்றும் மாறாத நிலையான ஒழுக்கநெறியில் கம்யூனிஸ்டுகளுக்கு நம்பிக்கை இல்லை. சமூகம் வர்க்கமாகப் பிரிந்த பிறகு பொதுவான ஒழுக்கநெறி இருக்க முடியாது என்பதை லெனின் சுட்டிக்கிறார். “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்“ என்ற நூலில் லெனின் இதனை மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். 

நீதி, மதம், அரசியல், சமூகம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும், பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும், பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள, மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில், அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும், தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்- என்கிறார் லெனின். இங்கே கூறியுள்ளபடி ஒன்றை படித்தறியும் போது அதன் பின்னுள்ள வர்க்க நலனின் அடிப்படையில் அணுகவேண்டும். 

கம்யூனிஸ்டுகளுக்கு ஒழுக்கநெறிக் கிடையாது என்ற பொய் பரப்புரையை இன்றுவரை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஒழுக்கநெறி இருக்கிறது, அது பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் அடங்கியிருக்கிறது. பாட்டாளிகளின் ஒழுக்கநெறி வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்து தோன்றுகிறது. இந்த ஒழுக்கநெறி, மனித சமூகம் மேலும் உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும், உழைப்பைச் சுரண்டப்படுவதை ஒழித்து, தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பணி புரிகிறது. 

மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒழுக்க நெறியையும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கின்றனர். மேலே லெனின் குறிப்பிட்டது போல அனைத்து சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவெதாரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்கிறது. இதனை அறியாமல் போனால் வர்க்க சமூகத்தில் ஏமாளியாகவே கிடப்பர். 

அனைத்து நூல்களையும், சுரண்டலாளர்களது சமூகத்தை எதிர்த்து, உழைப்பாளிகள் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே படிப்பு, பயிற்சி, கல்வி, போதனை ஆகியவைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து “அரசு” (11-07-1919) என்ற சொற்பொழிவு, இந்தச் சொற்பொழிவு, பல்கலைக் கழகத்தில் லெனின் ஆற்றியதாகும். 

இதில் அரசு பற்றிக் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். இங்கே அரசு பற்றியதான விளக்கமாக இருந்தாலும் இதுவே அனைத்துக்கும் அடிப்படையான வழிகாட்டுதலாகும். 

அரசு என்பது பற்றி, முதல் முறையாக அணுகுகிறீர்கள் என்றால், இந்தக் கடினமான பொருள் பற்றிய, முதல் பேச்சில் தெளிவு ஏற்பட்டுவிடும் என்று கூறிவிட முடியாது என்று தொடக்கத்திலேயே லெனின் கூறிவிடுகிறார். அதாவது, அரசு பற்றிய மார்க்சிய கருத்தை முதன்முறையாக இங்கே தான் கேட்கப்படுவதாக இருந்தால், இந்த முதல் சொற்பொழிவிலேயே அரசு பற்றிய தெளிவு ஏற்பட்டுவிடும் என்று கூறிட முடியாது. 

முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் ஆகியோர் மற்ற எந்தப் பிரச்சினைகளையும்விட அரசு பற்றியே அதிகமாகக் குழப்பியிருக்கின்றனர். அதனால் முதல் பேச்சில் ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியமல்ல. இந்த உரையைக் கேட்டப்பின் விளங்கிக் கொள்ளாத அல்லது தெளிவில்லாத இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறித்து வைத்தவற்றுக்குத் தொடர்புடைய படிப்பினாலும், தனிப்பட்ட விரிவுரைகளாலும், உரையாடல்களாலும் விளக்கம் பெறலாம் என்கிறார் லெனின். அடுத்து, விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்க்சும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களில் சிலவற்றையேனும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார். 

இன்றைய நிலையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பலர், அதனைப் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள் தங்களை இடதுசாரி என்றும் அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதின் இடதுசாரி அதாவது மார்க்சிய பொருளில் புரிந்து கொள்ளாது, முதலாளித்துவப் பொருளில் புரிந்து கொள்கின்றனர். 

முதலாளித்துவச் சமூகத்தில் இருக்கும் அரசு முதலாளித்துவச் சர்வாதிகார தன்மை கொண்டதுதான். பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிச அரசு, பாட்டாளி வார்க்க சர்வாதிகாரமாகத்தான் செயல்படும். இதனை வெளிப்படையாகக் கம்யூனிஸ்டுகள் அறிவிக்கின்றனர், முதலாளிகள் தங்களது அரசின் சர்வாதிகாரத் தன்மையை மறைத்து ஜனநாயக அரசு என்கின்றனர். 

முதலாளித்துவச் சர்வாதிகார அரசுக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுக்கும் உள்ள வேறுபாட்டைச் சிறிதும் அறியாமல் பேசுகின்றனர். முதலாளித்துவ அரசு என்றால் முதலாளிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்குமான அரசு, அதாவது சிறுபான்மையான முதலாளித்துவ நபர்களுக்கான அரசு, பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்க எதிரான அரசு. 

அதே நேரத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்றால் உழைக்கும் பெருவாரியான மக்களின் அரசு, சோஷலிச சமூகத்தைச் சிதைக்க முயற்சிக்கும் சிறுபான்மையான முதலாளித்துவச் சிந்தனையை ஆதரிக்கிறவர்களுக்கு எதிரான அரசு. மார்க்சியம் கூறுகிற அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், சிலர் பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசு என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இப்போது பேசிவருகிற “அரசு” பற்றிய லெனின் சொற்பொழிவில் அரசின் வர்க்கத் தன்மையைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

 

"அரசு என்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்" 

வர்க்க சமூகத்துக்கு அப்பாற்பட்ட பொதுவான ஜனநாயக அரசு என்று கூறுவது முதலாளித்துவக் கண்ணோட்டமாகும். பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டமானது, அரசானது ஆளும் வர்க்கத்தின் சார்பானது என்பதாகும். 

சமூகம் வர்க்கமாகப் பிரிவுபட்டுள்ளதையும், இங்குள்ளவை அனைத்தும் அதன் சார்பாகவே செயல்படுகிறது என்பதை அறியாத ஒருவரால், கண்டிப்பாக முதலாளித்துவச் சர்வாதிகாரத்தையோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையோ அறிந்து கொள்ள முடியாது. பொத்தாம் பொதுவாக ஜனநாயகம் என்று கூறுபவர்களால், வர்க்க சார்பான சிந்தனையின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை ஆகும். 

கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளுதல், அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல் மட்டுமே ஒருவரை சிறந்த கம்யூனிஸ்ட் செயற்பாட்டளராக உருவாக்கிவிட முடியாது. கண்டிப்பாக மார்க்சிய அடிப்படை நூல்கள் சிலவற்றையேனும் படிக்க வேண்டும். 

“டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் எங்கெல்ஸ் கூறியதைப் பார்ப்போம். தத்துவ முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது. 

ஆகப் படித்தறியாமல் திறமையான செயற்பாட்டாளராக முடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

படிப்பு என்பது நடைமுறைக்கு அப்பாற்பட்டதல்ல, நடைமுறை என்பது படிப்புக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இரண்டும் இணைந்தே நடைபெற வேண்டும். படிப்பு தனியாகவும், செயற்பாட்டைத் தனியாகவும் பிரிக்க முடியாது. கோட்பாட்டையும் பழைய நடைமுறைகளையும் படித்துத்தான் அறிந்து கொள்ள முடியும். இன்றைய நடைமுறையை அடுத்து வருபவர்கள் அறிய வேண்டுமாயின், இன்றைக்கு எழுதிவைத்த நடைமுறையும், நடைமுறையால் உருவாக்கிய கோட்பாடுகளையும் நூல்களின் வாயிலாகவே படித்தறிய முடியும். படிப்பு என்பது நடைமுறையோடும், நடைமுறை என்பது படிப்போடும் தொடர்புடையதேயாகும். 

மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களை முதன்முறையாகப் படிக்கும் போது, அதில் காணும் விளக்கவுரையின் கடுமை காரணமாக, சிலருக்குத் திகில் உண்டாகலாம், அதனால் ஏதும் கலக்கம் அடைய வேண்டாம் என்கிறார் லெனின். முதல் முறையாகப் படிக்கும் போது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் போது அல்லது பின்னர் அந்தப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட கோணத்தில் அணுகும் போது தெளிவுகிடைக்கும். 

கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் அரசு பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். அரசியல் முழுமைக்கும் இது அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். பொருளாதாரம் அல்லது அரசியல் பிரச்சினையோடு இது தொடர்புடையதாக இருப்பதனால், அரசியல் செயற்பாட்டாளர்கள் அவ்வப்போது இப்பிரச்சினையை எதிர்கொள்வர். 

அரசு என்பது என்ன? 

அதன் தன்மை யாது? 

அதன் முக்கியத்துவம் என்ன? 

முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்குப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு விஷயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? 

கட்சியின் செயற்பாட்டாளர்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையில்லாமல் அணுகும் ஆற்றலைப் பெற்றாக வேண்டும், இதன் அவசியத்தை எதிரிகளோடு விவாதிக்கும் போது உணர்ந்திருப்பர். ஆதலால் படிப்பதுடன் அதுபற்றி உரையாடல்கள், விரிவுரைகள் ஆகியவற்றின் துணையோடு, இந்தப் பிரச்சினையை அணுகும் ஆற்றலை பெறுவது முக்கியமாகும். பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் எதிரிகளை வெல்வதற்கும் இந்தப் பயிற்சி அவசியமாகும். கொள்கைத் துணிபுகளில் போதியளவு உறுதி கொண்டர்வர்களாக அப்போது தான் விளங்கமுடியும். 

அரசு பற்றிய பிரச்சினையில் முதலாளித்துவ அறிஞர்கள் குழப்பியுள்ளனர். இப்பிரச்சினை இதுநாள் வரையில் மதம் பற்றிய பிரச்சினையோடு அடிக்கடி பிணைத்து விடுகின்றனர். மதப் போதனைகளைப் பின்பற்றுவோர்கள் மட்டும் அன்றி, மதப்பிடிப்பில் இருந்து விடுபட்டவர்களும் அரசு என்ற தனிப் பிரச்சினையை, மதம் பற்றிய பிரச்சினையோடு சேர்த்து குழப்புகின்றனர். 

சமூகச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படுத்தும் வகையில், முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், அரசு பற்றிய போதனை செயல்படுகிறது. இந்தப் பிரச்சினை சுரண்டும் வர்க்கங்களின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைக்கப் பட்டுள்ளது. 

அரசு பற்றிய பிரச்சினையை விஞ்ஞான முறையில் அணுகுவதற்கு, அரசு என்பதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றை மேலோட்டமாகவாவது பார்வையிட வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையையும் இவ்வாறு தான் அணுக வேண்டும். 

குறிப்பிட்ட பிரச்சினையை ஆராயும் போது, அந்த நிகழ்ச்சி வரலாற்றில் எவ்வாறு தோன்றியது, அது தன் வளர்ச்சிப் போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது, குறிப்பிட்ட அப்பொருள் இன்று என்னவாக ஆகியிருக்கிறது என்பதை ஆராய்வதே மார்க்சிய விஞ்ஞான அணுகுமுறையாகும் என்கிறார் லெனின். 

அரசு என்ற ஒன்று இல்லாத காலம் இருந்தது என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அப்போது அங்கே அரசு தேவையின் அடிப்படையில் தோன்றுகிறது. 

வர்க்கங்கள் பிரிவுபடுவதற்கு முன்பான சமூகத்தை ஆதி கம்யூனிச சமூகம் என்று அழைப்பர். அங்கே அரசு என்ற ஒன்று இல்லவேயில்லை. வழக்கம், மரபு ஆகியவற்றின் ஆதிக்கத்தையும், குலத்தலைவரிகளின் அதிகாரத்தையும் தான் காணமுடிகிறது. இந்த அதிகாரம் அந்தக் காலத்தில் மகளீருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அது தாய்வழி சமூகமாக இருந்து. 

இச் சமூகத்தில், ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகப் பிற மக்களைப் பலாத்காரத்தால் அடிமைப்படுத்த ஒரு தனி இயந்திரம் தேவைப்படவில்லை. ஏன் என்றால் அங்கே வர்க்கம் தோன்றவில்லை. வர்க்க சமூகம் தோன்றிய போது பலாத்காரத்தால், உழைக்கும் மக்களை அடிமைப்படுத்த அரசு என்ற இயந்திரம் தேவைப்பட்டது, 

உழைக்கும் மக்கள் தங்களது ஒடுக்கு முறைக்கு எதிப்பு தெரிவிக்கும் மனநிலையை, பலவந்தமாகக் கட்டுப்படுத்துவதற்குத் தேவைப்பட்ட இயந்திரமே அரசு. அந்த அரசு இயந்திரம், சிறைச்சாலைகள், விசேஷப் படைகள், இராணுவம் காவல் துறை முதலியவைகளை உள்ளடக்கி இருக்கிறது. 

இந்த வரலாற்று நிகழ்வை தொகுப்பாய் கூறுகிறார். 

எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிறதோ, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு அப்போது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.- என்கிறார் லெனின். 

சட்டங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றின் மூலமாக ஆட்சி புரிவதாக, சுரண்டும் வர்க்க அறிஞர்கள் கூறினாலும் பலாத்காரத்தினாலேயே மக்கள் அடக்கப்படுகிறார்கள். மக்களில், மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்கள் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் மீது பலாத்காரம் இல்லாது ஆதிக்கம் செலுத்த முடியாது. அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதற்குத் தோன்றியதே அரசு. 

ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலக் கட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள, இன்றைய தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனைகளை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலமோ, இந்தப் பலாத்காரம் மக்கள் மீது செலுத்தப்படுகின்றனது- என்கிறார் லெனின். 

அடிமை உற்பத்தி முறைக்கான அரசாக இருந்தாலும் சரி நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கான அரசாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ உற்பத்தி முறைக்கான அரசாக இருந்தாலும் சரி, அரசின் சாரம் என்பது அந்த உற்பத்தி முறையில் உள்ள உழைக்கும் மக்களின் எழுச்சியை ஒடுக்குவதற்கு உருவானதே ஆகும். 

மூலதனத்தின் கரங்களில் தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியரசு எவ்வளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும் அதிக இரக்கமற்றதாகவும் இருக்கிறது. 

பாட்டாளி வர்க்கமானது, அரசின் வர்க்கத் தன்மையை அறிந்த கொண்டுவிட்டது. அரசு என்பதற்கு அனைத்து மக்களினுடைய ஆட்சி என்ற பழங்கதைகளை நம்பிக் கொண்டு, மூடத்தனமாகப் பயபக்தியுடன், மக்கள் அதன்முன் மண்டியிட்டு நின்றார்களே, அந்த அரசு எனும் இயந்திரத்தைப் பாட்டாளி வர்க்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அது முதலாளித்துவப் பொய் என்று சாற்றுகின்றது- என்கிறார் லெனின். 

இந்த அரசு எப்போது தேவையற்றுப் போகும் என்பதை இந்தச் சொற்பொழிவின் இறுதியில் லெனின் கூறியுள்ளார். 

சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போன போது, நிலச் சொந்தக்காரர்களும், ஆலைச் சொந்தக்காரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் மட்டும் வாரிவாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே கிடையாது எனும் நாளில்தான், இந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். அப்போது அரசென்பதும் இருக்காது, சுரண்டலும் இருக்காது. நம் கம்யூனிஸ்டுக் கட்சியின் நோக்கு இதுவே- என்று கூறி இச்சொற்பொழிவை லெனின் முடிக்கிறார். 

அரசு உலர்ந்துவிடும் என்று மார்க்சியம் கூறுவதைப் பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர், வர்க்க தன்மையுடன் கூடிய அரசு என்பது ஒழிக்கப்படும், ஆனால் அன்றைக்குத் தேவைப்படுகிற நிர்வாக முறை சிறப்பாகவே தொடரும். திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கிற சமூகத்துக்குச் சிறந்த நிர்வாகம் தேவைப்படுகிறது. அதற்கு வர்க்க சார்பான அரசுதான் தேவையில்லை. சிறப்பான நிர்வாகம் தொடரவே செய்யும். 

இந்தச் சொற்பொழிவில் லெனின், ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை படிக்கும்படி வலியுறுத்துகிறார். அவ்வாறு கூறும்போது அந்நூலைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் கொடுக்கிறார். 

நவீன சோஷலிசத்திற்குரிய அடிப்படை நூல்களில் இது ஒன்று, அதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நம்பிக்கையோடு ஏற்கலாம், அதாவது, அவ்வாக்கியம் மனம் போனவாறு கூறப்பட்டதன்று, வரலாற்று அரசியல் சம்பந்தமாக அளவற்ற விவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற உறுதியோடு ஏற்கலாம். இந்த நூலின் எல்லாப் பகுதிகளும் ஒரே நிகராகச் சகலருக்கும் புரியக்கூடிய வகையில் எடுத்து விளக்கப்படவில்லை என்பதில் ஐயம் இல்லைதான். வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவுடைய வாசகரை மனதிற்கொண்டே நூலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் இந்த நூலைப் படித்ததும், அதை உடனேயே புரிந்துகொள்ளாவிடில், நீங்கள் கலக்கமுற கூடாது என்று லெனினின் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். 

இந்நூலை எடுத்த எடுப்பில் புரிந்துகொள்வது எவருக்கும் அரிது. பின்பு, உங்கள் ஆர்வம் தூண்டிவிடப்படும் போது, அதை மீண்டும் படித்தீர்களானால், அதனை முழுமையாக இல்லாவிட்டாலும், அதன் பெரும் பகுதியைப் புரிந்து கொள்வதில் வெற்றியுறுவீர்கள். நான் இந்நூலைக் குறிப்பிடுவதன் காரணம் யாதெனில் இங்குக் குறிக்கப்பட்ட பொருளில் இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கான சரியான வழியை அது காட்டுகின்றது- என்று லெனின் கூறியுள்ளார். 

எங்கெல்ஸ் எழுதய நூலைப் பற்றி லெனின் இங்கு இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அச்சுறுத்துவதற்காக அல்ல. அதனைப் படிப்பதற்கு மெனக்கெட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இவ்வாறு கூறியுள்ளார். இந்த எங்கெல்சின் நூலைப் படிப்பதற்கு முன் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலை முதலில் படித்துவிட்டு எங்கெல்சின் நூலைப் படிக்கலாம். ஏன் என்றால் லெனின் தமது நூலில் எங்கெல்ஸ் மார்க்ஸ் அரசு பற்றிக் கூறியவைகளை மேற்கோள்காளாகக் கொடுத்து விளக்கியுள்ளார். லெனினது இந்நூல் சுருக்கமாகவும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துக்களைத் தொகுக்கப்பட்டதாகவும் இருக்கிறது. 

லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” நூலை முதலில் படிப்பதால் அது, எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலைப் படிப்பதற்குத் துணைபுரியம். 

மார்க்ஸ்-எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நிறைய, பெரிய மேற்கோள்களை லெனின் தமது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் பயன்படுத்தியது பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

 

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிராயத்தை வந்தடைய முடியும், இக்கருததுக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.

(அரசும் புரட்சியும்) 

வாசகர்களுக்குச் சிரமம் ஏற்படுத்தினாலும் மேற்கோளிட்டு எழுதுவதற்குக் காரணம், ஆதாரத்துடன் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கேயாகும். இவ்வாறு மேற்கோளிட்டு எழுதுவது பற்றி லெனின் மற்றொர் இடத்திலும் வலியுறுத்தியுள்ளார்.

 

“மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களது நேரடியான எழுத்துக்களில் இருந்து வேண்டும் என்றேதான் விரிவான மேற்கோள்கள் எடுத்துக் கூறியுள்ளோம். வாசகர் இவற்றை ஒட்டு மொத்தமாய்ப் பரிசீலனை செய்து பார்க்கும் பொருட்டே இவ்வாறு செய்துள்ளோம். இவை அவசியம் படித்தறிய வேண்டியவை. கவனமாய்ச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவை.”

(ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்) 

மேற்கோளாகக் கூறப்பட்ட நூலை நேரடியாகச் சென்று படிக்க வேண்டும். மேற்கோளோடு நின்று போகக்கூடாது. அந்த மேற்கோள் எந்த இடத்தில் கூறப்பட்டது, அதனுடன் மேலேயும் கீழேயும் கூறியது என்ன என்பதையும் சேர்த்துப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கோளில் விளக்கம் இருக்காது. அந்த விளக்கத்தை அந்தந்த நூலைப் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

மார்க்சியம் தோன்றியது முதலே மார்க்சியத்தைத் திரிக்கின்ற போக்குத் தொடங்கிவிட்டது. மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்ததில் முதல்வரிசையில் இருப்பவர் பிளாகனவ். இவரைத் தொடாந்து லெனினும் மார்க்சிய திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தியுள்ளார். திருத்தும் வேலை இன்றும் தொடர்வதால், அதனை எதிர்த்து மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்களாக ஆதாரத்துடன் நிறுவேண்டியது அவசியமாகிறது. 

லெனின் கூறியதையே 99.99% இந்தத் தொகுப்பில் கூறியுள்ளேன். எனது படிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஒன்றை மட்டுமே கூறலாம். மார்க்சிய அடிப்படை நூல்களைப் படிக்கும் போது அந்நூலின் தொடக்கப் பகுதி புரிந்து கொள்ள முடியாது போனாலும், தொடர்ந்து முழுவதையும் ஒருமுறை படித்துவிட வேண்டும். ஒரு முறை முழுமையாக வாசித்துவிட்டு புரியாத பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கும் போது தெளிவு ஏற்படும். 

எனது இளம் வயதில் எங்கெல்சின் "லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்" என்ற நூலின் முதல் அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டேன், ஒன்றுமே புரியவில்லை, ஆனால் இரண்டாம் அத்தியாயத்தைப் படித்தவுடன் ஏற்பட்ட தெளிவோடு, முதல் அத்தியாயத்தை மீண்டும் படிக்கத் தொடங்கும் போது புரியத் தொடங்கியது. 

முதல் பகுதியைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தப் பகுதியைப் படிக்காதீர்கள் என்பதாகவே பலரது ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் எனது ஆலோசனை மாறுபடுகிறது. ஒருவேளை சிலருக்கு அது பயன்பட்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலருக்கு எனது அனுபவம் பயன்படும் என்று நினைக்கிறேன். 

படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களை அருகில் உள்ள தோழர்களோடு உரையாடுவதன் மூலம் தெளிவு பெறலாம். சில தோழர்கள் தத்துவத்திலும், சில தோழர்கள் அரசியல் பொருளாதாரத்திலும், சில தோழர்கள் விஞ்ஞானக் கம்யூனிசத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பர் அவர்களுடன் உரையாடி விளக்கம் பெறலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கட்சி சார்பில்லாதவர்கள் நடத்தும் மார்க்சிய வகுப்புகள் பயனுள்ளதாக அமையும். இபோது வீடியோக்களில் மார்க்சிய வகுப்புகள் கிடைக்கின்றன, அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மார்க்சியம் கற்போம் திருத்தல்வாதம் எதிர்ப்போம். மார்க்சிய முதலாசிரியர்களின் நேரடி நூல்களைப் பயிலுவோம். அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் பிறர் குழப்பும் போது எங்கெல்ஸ் தங்களது நேரடி நூல்களைப் படிக்கும்படி ஆலோசனை கூறுயுள்ளார். அதனைப் பின் பற்றுவோம். 

மார்க்சியத் திருத்தல்வாதத்தை எதிர்த்து, மார்க்சிய வழியில் எழுதப்படுகிற, மார்க்சிய அறிஞர்களின் நூலின் துணையோடு, மார்க்சிய முதல் ஆசிரியர்களின் நூல்களைப் படித்துத் தெளிவடைவோம். நமது செய்பாட்டை இந்தத் தெளிவு சிறப்படையச் செய்யும். 

உழைக்கும் மக்கள் அனைவரும் மார்க்சிய நூல்களைப் படித்தே ஆக வேண்டும் என்று கூறிட முடியாது. உழைக்கும் மக்கள் தங்களது போராட்டத்தின் வாயிலாகவே இதனை அறிந்து கொள்வர். உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ள, தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் மார்க்சிய அடிப்படை நூல்களைப் படித்தே ஆக வேண்டும். 

உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை பெறும்வரை மார்க்சியம் நமக்கு வழிகாட்டும். 

நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கே ஆகும்.

No comments:

Post a Comment