Saturday, 18 January 2020

லெனின் பாட்டாளி வர்க்கத் தலைவர் - முன்னுரை


நூல்:- லெனின் பாட்டாளி வர்க்கத் தலைவர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்
விலை: ரூ90-00
வெளியீடு:செஞ்சோலைப் பதிப்பகம்
           1015, பூஞ்சோலை நகர்
           முனீஸ்வர் நகர் விரிவாக்கம்,
           ஓசுர்.
           தொடர்புக்கு 98948 35373
மின்னஞ்சல்: sencholaipathippagam@gmail.com
லெனின் வாழ்க்கை வரலாற்றையும், ருஷ்யப் புரட்சியையும் பற்றியும் இதுவரை அறிந்திடாத வாசகர்கள், முதலில் சுருக்கமாக அறிய வேண்டுமானால் “லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர்” என்ற இந்நூல் ஒரு சிறந்த தொடக்கமாக அமையும். ஏன் என்றால் லெனினது வாழ்க்கை ருஷ்யப் புரட்சியோடு தொடர்புடையது, ருஷ்யப் புரட்சியின் வெற்றியானது பல திருப்பங்களையும் பல்வேறு சிக்கல்களையும் கடந்து பெற்றதாகும். அதனால் லெனின் வாழ்வும், அவரது நூல்களையும், ருஷ்யப் புரட்சியையும் புரிந்து கொள்வதற்குப் பல நூறு பக்கங்களைப் படிக்க வேண்டிவரும்.

தொடக்க வாசகர்களுக்கு இது சிரமமே. இது போன்ற சிரமத்தை நமக்குத் தராமல் இந்நூல் 100 பக்கத்திற்குள் சுருக்கமாக லெனினது வாழ்வையும் அவரது பணிகளையும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் பேசாமல் முதல் வாசிப்புக்கு எது தேவையோ அதனை மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த நூலின் சுருக்கத்தைப் போலவே தோழர் நிழல்வண்ணன் அவர்களின் தமிழ் மொழியாக்க எளிமையாக இருக்கிறது.

என்னதான் சுருக்கமாக இருந்தாலும், முதல் முறையாக வாசிப்பவர்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். இதுவரை கேட்டறியாத புதிய கலை சொற்களே அந்தப் பிரச்சினையாகும். அனைத்து முதல் வாசர்கள் சந்தித்தப் பிரச்சினைத்தான் இது.

முதல் முறை வாசிப்பில் அனைத்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது பற்றிக் கவலை கொள்ளாது முழுமையாக வாசித்துவிடுங்கள். இந்நூலை அடுத்த முறை வாசிக்கும் போதோ, அல்லது இதன் தொடர்பான பிற நூல்களைப் படிக்கும் போதோ நிச்சயமாகப் புரியத் தொடங்கும். தொடங்கினால் தான் பிரச்சினைத் தீரும். அதனால் சில சொற்கள் சில விடயங்கள் புரியவில்லை என்றால் அந்த இடத்திலேயே நின்றுவிடாமல் தொடர்ந்து படித்து முடியுங்கள்.

அன்றைய கட்டத்தில் சில காரணங்களுக்காகக் கம்யூனிஸ்ட்டை சமூக-ஜனநாயகவாதிகள் என்று அழைத்தனர். இந்த நூல் முழுதும் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே சமூக-ஜனநாயகவாதி என்று படிக்கும் போது அது கம்யூனிஸ்டுகளையே குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல நரோத்தினிக்குகள், பொருளாதாரவாதிகள், சட்டபூர்வ மார்க்சியவாதிகள், போஷ்விக்குகள், மென்ஷிவிக்குகள் என்ற புதிய சொற்கள் வரும்போது நிதானமாக அதன் பொருளை அறிந்து, குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் லெனின் எழுதிய நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, அந்த நூலின் தலைப்பையும் அந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த முயற்சியாக லெனின் நூல்களை நேரடியாகப் படிப்பதற்கு இம்முறை பயன்படும்.

லெனின் வாழ்க்கை நமக்குப் பெரும் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அவர் புறநிலைமைகள் மாறமாற அவர் தம் கருத்தை மாற்றிக்கொள்கிற திறம் வியக்கவைக்கிறது. மார்க்சைத் தொடர்ந்து மார்க்சியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு நமக்கு லெனினியமாகக் கிடைத்துள்ளது.

லெனின் தமது அரசியல் போராட்டத்தினால் பல காலம் வெளிநாடுகளில் தங்க வேண்டிவந்து. அவ்வாறு வெளியே தங்கினாலும், ருஷ்யாவில் ஏற்படுகிற தொடர் மாற்றங்களைக் கண்ணுற்று வந்துள்ளார். அதனால் அவரது சிந்தனை ருஷ்ய மக்களோடு நெருங்கியதாகவே இருந்தது.

மார்க்சியத்தைத் திரித்துரைக்கின்ற போக்கையும், பொருள்முதல்வாதம் காலாவதியாகிவிட்டது என்கிற விமர்சனங்களையும் லெனின் எதிர் கொண்டு பதிலளித்துள்ளார். சட்டபூர்வ வழிப் போராட்டத்திலேயே பழக்கப்படுத்திக் கொண்ட வலது திரிபையும், அதே போலச் சட்டவழிப்பட்ட போராட்டத்தைப் புறக்கணித்துச் சட்டவழியற்றப் போராட்டத்தை மட்டுமே மேற்கொள்கிற இடது திரிபையும் லெனின் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

பொதுவாக ருஷ்யப் புரட்சி வரையிலான பகுதியை அதிகமாகவும் அதற்குப் பின்பான பகுதியை குறைவாகவும் விவரிப்பதே வழக்கமாக உள்ளது. ஆனால் இந்நூல் அதற்குப் பின்பான் பகுதி சற்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது. லெனின் வாழ்க்கையும் அவரது பணியையும், ருஷ்யப் புரட்சியையும் அதற்குப் பின்பான சோஷலிச நிர்ணமானத்தையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்தச் சுருக்கமான நூல் கண்டிப்பாக உதவிடும். இது போன்று சுருக்கமான நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் செஞ்சோலை பதிப்பகத்தைப் பாராட்ட வேண்டும். இப் பணி தொடரட்டும். நாளைய உலகம் உழைக்கும் மக்களுக்கே.