Tuesday 17 September 2024

லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்” என்கிற நூலை மொழியாக்கம் செய்த தோழர் எஸ்.தோதாத்ரி அவர்களின், “மொழிபெயர்ப்பாளரின் அறிமுக உரை”யில் இருந்து.

 




“தத்துவப் பிடிப்பு இல்லாத தலைமை கட்சியைச் சீரழித்துவிடும் என்பது லெனினது கருத்து.

1905ஆம் ஆண்டில் முதல் புரட்சி தோல்வியடைந்த பிறகு ரஷ்ய கருத்து உலகிலும் அரசியலிலும் பெரும் குழப்பம் இருந்தது. எந்தப் பாதையில் செல்வது, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்துவது என்ற வாதங்கள் அங்கு அதிகமாக இருந்தன.

இந்தக் குழப்பங்களுக்கிடையே லெனின் மார்க்சியப் பாதையை உறுதியாகப் பின்பற்றினார்.

எனவே மார்க்சியத்தைக் குழப்புபவர்களுக்குப் பல இடங்களில் பதில் கொடுத்தார். அதன் சிகரமாகத்தான் இந்த நூலை எழுதினார்; இதனைப் பலர் "குட்டி முதலாளித்துவப் பொருள் முதல் வாதம்" என்று விமர்சித்தனர். நமது இடதுசாரிகளில் சிலர், லெனினது தாறுமாறான குறிப்புகள் என்று விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் இந்த நூல் மார்க்சியம் பயில்பவர்களுக்குப் பல தெளிவுகளை ஏற்படுத்தும் நூலாகவே உள்ளது.

இந்த நூலை எழுதுவதற்கு லெனின் ஜெனிவா, லண்டன் ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களை பயன்படுத்தி ஒன்பதே மாதங்களில் எழுதி முடிக்கப்பட்டவை. இந்தப் புத்தகம் தீவிரமான படிப்பு, ஆய்வு ஆகியவற்றின் விளைவாகும். இது பல நெருக்கடிகளுக்கு இடையே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.

இது கருத்துமுதல்வாதப் போக்கிற்கு ஒரு பலத்த அடியாக இருந்தது. குறிப்பாக கட்சி உறுப்பினர்களே பல கருத்துகளைக் கூறி வந்த காலத்தில் அவர்களுக்கு இது வழிகாட்டியாக இருந்தது.

இதில் லெனின் என்ன கூறுகிறார்?

இந்த நூலிற்கான அடிப்படையை லெனின் இந்த நூலின் முடிவுரையில் நான்கு பத்திகளில் விளக்குகிறார். அதில் முதலாவது மிக முக்கியமானது ஆகும். இந்த அனுபவவாத விமர்சனம் என்பதற்கான தத்துவ அடிப்படையை இயங்கியல் பொருள் முதல்வாதத்துடன் ஒப்பிட வேண்டும் என்று அவர் கூறுகிறார். இந்த ஒப்பீடு முதல் மூன்று அதிகாரங்களில் இடம்பெறுகிறது. இது அறிவுத் தோற்றவியல் ரீதியாக இந்தத் தத்துவத்தின் பிற்போக்குத் தன்மையைக் காட்டுகிறது.

பொருள்முதல்வாதம் பற்றிய தெளிவின்மை, மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் இயங்கியல் பொருள் முதல்வாதம் பற்றிய அறியாமை, ஆகியன தாம் மார்க்சியத்தையும், அனுபவவாத விமர்சனத்தையும் இணைக்கலாம் என்று கூறத் தோன்றும். மேலும் இந்தத் தத்துவங்களுக்குப் பின்னால் உள்ள வர்க்கச் சார்பையும் ஒருவர் கணக்கிலெடுக்க வேண்டும். சார்பு நிலையற்ற தத்துவம் என்பது எதுவும் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் லெனின் அனுபவவாத விமர்சனத்தை விமர்சிக்கிறார். கான்ட், பெர்க்கிலி, ஹியூம் ஆகிய எல்லோரும் இதில் விமர்சிக்கப்படுகின்றனர். மார்க்சியவாதிகளில் சிலரூம் கருத்துமுதல்வாதிகளும் பொருள்முதல்வாதத்தை மறுக்கின்றனர். கருத்துமுதல்வாத அடிப்படையில் மார்க்சியத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை மாற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர். லெனின் பார்வையில் இவர்கள் திரிபுவாதிகள் ஆவர்.

இந்த நூல் முழுவதும் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றியது. முதல் மூன்று அத்தியாயங்கள் அனுபவவாத விமர்சனத்தின் அறிவுத் தோற்றவியல் பற்றியவை. அதன் அடிப்படைகளை லெனின் ஆழமாக விமர்சனம் செய்கிறார். அதனை இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

நான்காவது அத்தியாயத்தில் புலன் உணர்வு விமர்சனம் மற்றும் கான்டின் தத்துவம் ஆகியவற்றிற்கு இடையிலான உறவை விளக்குகிறார்.

ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தத் தத்துவவாதிகள் விஞ்ஞானத்தை எவ்வாறு மறுத்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இது இயற்பியல் நெருக்கடி எனப்படுகிறது. இந்தக் கருத்தைத் தான் பின்னால் கிருஸ்டோபர் காட்வெல் (Crisis In Physics), மாரிஸ் கான்போர்த் (Idealism and Science) ஆகியோர் விரிவாக்கினர்.

கடைசி அத்தியாயத்தில், வரலாற்றில் பொருள்முதல் வாதம் பற்றி புலன் உணர்வு விமர்சகர்கள் ஒரு கருத்தை முன்வைத்தனர். அது வெளியிலிருந்து திணிக்கப்பட்டது. உபரிமதிப்பு போன்றவை இல்லை என்பன போன்றவை அக்கருத் தாகும். இதனை லெனின் விமர்சிக்கிறார்.

இந்த நூலின் சாராம்சமான கருத்து இதுதான். மார்க்சியத்தை மறுப்பவர்கள், அதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் ஆகியோரை லெனின் மறுத்துரைக்கிறார். இந்த நூல் முழுவதும் தத்துவத்தில் அடிப்படையாக உள்ள பிரச்சனையாக அறிவுத் தோற்ற வியல் பற்றியது. எல்லாத் தத்துவவாதிகளும் இது பற்றிக் கூறியுள்ளனர்.”

(பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் – பக்கம் 15 – 16)