Saturday, 18 January 2025

பெருங்கற்கால ஈமக்காடு: நரசிங்கம்பட்டி எனும் பழையூர் மேற்பரப்புக் கள ஆய்வு – நூல் அறிமுகம்

 நூலாசிரியர் : மா.பரமசிவன் & ரே.கோவிந்தராஜ்

விலை : 300/-

வெளியீடு : என்சிபிஎச் நிறுவனம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2024 

மதுரை, தியாகராசர் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறையில் உதவி பேராசிரியர்களாகப் பணிபுரியும் முனைவர் மா.பரமசிவன், முனைவர் ரே.கோவிந்தராஜ் ஆகிய இருவரும் நரசிங்கம்பட்டி என்கிற இடத்தில் மேற்பரப்புக் களஆய்வு செய்துள்ளனர். இங்கே பெருங்கற்கால நெடுங்கற்கள், நடுகற்கள், கற்பதுக்கைகள், முதுமக்கள் தாழிகள், உடைந்த மட்கலன்கள் ஆகியவைகளை நிறையக் கண்டனர்.

09-04-2023 அன்றுமுதல் பலமுறை நரசிங்கம்பட்டிக்கு சென்று ஆய்வுகள் செய்து அதனை “பெருங்கற்கால ஈமக்காடு: நரசிங்கம்பட்டி எனும் பழையூர் மேற்பரப்புக் கள ஆய்வு” என்கிற தலைப்பில் நூலாக ஆக்கியுள்ளனர்.

நரசிங்கம்பட்டி வைகை ஆற்றின் வடகரையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆய்வுக்களம் சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது.

இந்த களத்தைப் பற்றி தமிழிணையம் ஆற்றுப்படையில் நரசிங்கம்பட்டி பற்றிய குறிப்புகள் சிறந்த அறிமுகத்தைக் கொடுக்கிறது.

 

“இறந்தோரை முறையாக அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஈமக்காடு நரசிங்கம்பட்டி கிராமத்தினருகில், பெருமாள் மலை அடிவாரத்தில் அடர்ந்த புதர்க்காட்டுக்குள் காணக்கிடைக்கிறது. இந்த ஈமக்காடு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையானது என்றும், முதுமக்கள் தாழியைப் பயன்படுத்துவதற்கும் முந்தைய நாகரிகம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். சப்பட்டையான நீளவடிவிலான நடுகற்கள் பலவற்றை இப்போதும் இங்கு பார்க்கலாம். அத்துடன், இறந்தவர்களைப் புதைத்த அடையாளமாக, கற்களை அடுக்கி வைத்திருப்பதையும் அங்கங்கே காணலாம். இக்கல்லறைகள் கி.மு 10,000 ஆண்டுக்கும் கி.மு 300-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனத் தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.”

பெரும் ஈமக்காடாக இருக்கும் இந்த இடத்தைப் பற்றிய பெரிய ஆய்வுகள் இதுவரை நடைபெறவில்லை. இந்நூலாசிரியர்கள் இருவரும் முதன்முதலாக மேற்பரப்புக் கள ஆய்வை செய்துள்ளனர். அந்த ஆய்வின் அடிப்படையில் ஒன்பது தலைப்புகளாக இந்த நூலை எழுதியுள்ளனர்.

1) பழையூர் முதல் நரசிங்கம்பட்டி வரை: ஊர்ப்பெயர் ஆய்வும் வரலாறும்

2) வாழ்விட மேடு

3) பெருங்கற்கால ஈமக்காடு: செவ்வியல் பதிவுகளும் நரசிங்கம்பட்டியும்

4) நெடுங்கற்களும் நடுகற்களும்

5) கற்பதுக்கைகள்

6) முதுமக்கள் தாழிகள்

7) மட்கலப் பண்பாடு

8) பெருங்கற்காலக் குறியீடுகள்

9) சித்திரச்சாவடி

கள ஆய்வு முடிவுகளை இவ்வாறு பிரித்து எழுதியிருப்பது, அந்த களத்திற்கு சென்று பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. பின்னிணைப்புகளில் பல நிறம் கொண்ட நெடுங்கல், நடுகல், கல்வட்டம், பதுக்கை, முதுமக்கள் தாழி ஆகியவைகளின் படங்கள் புகைப்பட தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை என்சிபிஎச் நிறுவனம் மிகச் சிறப்பாக பதிப்பித்துள்ளது. இது போன்ற நூல்களை இவ்வகையில் பதிப்பிததால் மட்டுமே கள ஆய்வாளர்களின் உழைப்பை முழுமையாகப் பெறமுடியும்.

முதல் அத்தியாயம் நரசிங்கம்பட்டியின் வரலாறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நரசிங்கம்பட்டி, மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள சிற்றூர். இந்த ஊரின் பழைய பெயர் “பழையூர்” என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். தொடக்கத்தில் இந்த இடம் பௌத்த தலங்களாக இருக்க, பிற்காலத்தில் சில இடங்கள் சமணரும் சில இடங்கள் வைதிகரும் தமதாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. நரசிங்கம்பட்டி என்கிற இந்த பெயரே வைதிக வைணவத்தின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது போன்று வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது உண்மை வரலாற்றை தமிழர்கள் அறிவதற்கு வாய்ப்பளிக்கிறது.

இந்த ஊரின் தொல்லியல் தடங்களாக, 1) பெருங்கற்கால வாழ்விட மேடு, 2) பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், 3) சித்திரச் சாவடி ஆகிய மூன்றையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஈமக்காட்டின் தென்மேற்குப் பகுதியில் வாழ்விட மேட்டைக் கண்டுள்ளனர். அவ்வாழ்விட மேட்டில் அக்கால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த நூலில் ஒரு சிறப்பான பகுதி எதுவென்றால் அது மூன்றாம் அத்தியாயம் ஆகும். அதில் நரசிங்கப்பட்டியில் காணப்படும் பொருளோடு, சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல்களின் கருத்தோடு பொருத்திக் காட்டியது சிறப்பாக உள்ளது. சங்க இலக்கியம் என்பது ஒரு கற்பனை இலக்கியம் அல்ல அது தமிழர்களின் வாழ்வை வெளிப்படுத்தும் வரலாற்றுக் குறிப்புகள் என்பது இக்கட்டுரையின் மூலம் உறுதிப்படுகிறது.

இங்கு காணப்படும் 21 நெடுங்கற்கள், 19 நடுகற்கள் ஆகியவற்றை எடுத்து அதன் அளவீடுகளை இந்த நூலாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு நெடுங்கற்களையும் அதன் உயரம், அடிப் பகுதி, இடைப் பகுதி, மேல் பகுதி ஆகியவற்றை அளவெடுத்து பதிந்துள்ளனர்.

அவ்வாறு அளவிடும்போதே, எவை எவை முதல், இரண்டாம், மூன்றாம் காலத்தவை என்பதையும் பிரித்துக் காட்டியுள்ளனர்.

அதே போல கல்வட்டம் ஒவ்வொன்று எத்தனை மீட்டர்களைக் கொண்டுள்ளது என்பதையும் முதுமக்கள் தாழி ஒவ்வொன்றும் எத்தனை சென்டி மீட்டர் கொண்டுள்ளது என்பதையும் கணக்கிட்டுள்ளனர்.

இந்தக் கணக்கீடுகளைக் காணும் போது இந்த நூலாசிரியர்களின் முதல்  தொல்லியல் பணியாக இது தெரியவில்லை, பல அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கிறது.

இங்குக் கிடைத்த மட்கலங்களையும் சிறப்பாக ஆய்வு செய்துள்ளனர்.

அங்கு கிடைத்த பெருங்கற்காலக் குறியீடுகளை, 1) மட்கலன் செய்வோரின் குறியீடுகள், 2) உரிமையாளரின் குறியீடுகள், 3) குலக்குழுக் குறியீடுகள் என்று பிரித்து ஆராய்ந்துள்ளனர். அவ்வாறு ஆராயும் போது குறியீடுகள் உணர்த்தும் பொருளையும் சுட்டிக்காட்டுவது இந்த நூலைப் படிப்பதில் ஆர்வத்தைக் கூட்டுகிறது.

இங்கே இவ்வளவு பெரிய ஈமக்காடாக இருக்கிறது என்றால் இதன் அருகில் பெரிய மக்கள் வாழ்விடப் பகுதி கண்டிப்பாக இருந்திருக்கும். இதனை தொல்லியல் துறைகள் கவனத்தில் கொண்டு இந்தப் பகுதியை கீழடி  போல் தொல்லாய்வு செய்தால் தமிழக வரலாறு விரிவடையும்.

இந்த நூலாசிரியர்களின் கடுமையான மேற்பரப்புக் கள ஆய்வுப் பணி தொல்லியல் ஆய்வை நோக்கிப் பயணிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இது ஒரு மற்றொரு கீழடியாகவும் கீழடியைவிட அதிக ஆதாரத்தைத் தரும் தொல்லியல் களமாகவும் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.