ஆசிரியர்: க.சுபாஷிணி
பதிப்பு : (முதல்) ஜூலை 2024
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
விலை : ரூ,180/-. ஐரோப்பாவில் யூரோ 4/-
விரிவான அறிவியல்
நூல்களைப் படிப்பது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், ஆனால் அந்த நூல்களை
படிக்க வேண்டும் என்கிற ஆவல்மட்டும் குறையாமல் இருக்கும். அப்படிப்பட்ட இரண்டு நூல்களை
எடுத்து அந்த நூல்களில் காணப்படும் சாரத்தையும் தன்னுடைய அனுபவங்களை சேர்த்தும், க.சுபாஷிணி
“தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்” என்கிற தலைப்பில்
ஒரு நூலை எழுதியுள்ளார்.
முதலில் டேவிட் ரைஹ்
எழுதிய “நாம் யார், எப்படி இங்கு வந்தோம்”
(Who We Are and How Got Here) என்கிற நூலையும், இரண்டாவதாக டோனி ஜோசப் எழுதிய
“ஆதி இந்தியர்” (Early Indians) என்கிற
நூலையும் பற்றி எழுதியுள்ளார்.
பல்வேறு வகையில் இன்று
மனிதகுலம் பிரிந்துள்ளதாக காணப்படுகிறது, ஆனால் உண்மையில் நாம் அனைவரும் ஒரே இனத்தைச்
சேர்ந்தவர்களே என்கிற உணர்வு இந்த நூலைப் படித்தப்பிறகு ஏற்பட்டது.
நாடு, மொழி, மதம்,
சாதி போன்றவற்றின் பேரால், நாம் அனைவரும் பிளவுபட்டுள்ளோம், அதனடிப்படையில் சண்டை,
சச்சரவுகள் அதிகமாகக் காணப்படுகிறது. இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது, இது ஒரு நாள்
கண்டிப்பாக முடிவுக்கு வரவேண்டும். அதற்கான புரிதலை இந்த நூல் தருகிறது.
தொல்லியல், கல்வெட்டு,
நாணயம், அகழாய்வு, இலக்கியம் போன்றவைகளே இதுவரை வரலாற்றை அறிவதற்குப் பயன்பட்டது. இன்று
மரபணு ஆய்வு துறையும் இணைந்துள்ளது. “வரலாற்றை அறிந்து கொள்ள தொல்லியல் துறையும், இலக்கியத்
துறையும் கடினமாகப் போராடிக் கொண்டிருக்கின்ற காலத்தில் மரபணு அறிவியல் துறை என்பது
மிகத் துல்லியமாக புதியபுதிய வெளிச்சங்களை வரலாற்றுத் துறையில் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது”
என்று வரலாற்றில் துல்லியத் தன்மையை இந்த மரபணு ஆய்வுகள் தருவதை இந்த நூலில் க.சுபாஷிணி சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்று பிரிந்து காணப்படும்
மனித இனங்களுடைய மூதாதையர்கள் தொடக்கத்தில் இன்றைய ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. இதனை ஏற்பதற்கு பலருக்குத் தயக்கம் இருக்கலாம்,
ஆனால் டிஎன்ஏ இதனை அறிவியல் வழியில் உறுதிபடுத்துகிறது.
பொதுவாக சிறுசிறு
நூல்களையும் சிறிய பகுதிகளாகக் கொண்ட அத்தியாயத்தையும் க.சுபாஷிணி விரும்புவது அவரது
நூல்களைப் படிக்கும் போது தெரிகிறது.
இந்த நூலும் சிறிய
அத்தியாயங்களைக் கொண்டே அமைந்துள்ளது. இத்தகைய வழிமுறை அதிகமானவரை படிக்கத் தூண்டும்
என்பதில் சந்தேகம் இல்லை.
அத்தியாயங்களுக்கு
க.சுபாஷிணி கொடுக்கும் தலைப்பு, அதில் பேசப்பட்டப் பொருளை வெளிப்படுத்துவதாகவும், அதனைப்
படிக்கத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.
இரண்டு நூல்களில்
உள்ளதில் அறிந்து கொள்ள வேண்டியதை தொகுத்து தந்துள்ளார் க.சுபாஷிணி.
முதலில் “நாம் யார், எப்படி இங்கு வந்தோம்” (Who
We Are and How Got Here) என்கிற நூலைப் பார்ப்போம்.
“ஆப்பிரிக்காவிலிருந்து” என்பது ஒர் அத்தியாயத்தின்
தலைப்பு, இந்த அத்தியாயம் இரண்டே பக்கத்தில் கலைகளஞ்சியத்தில் கொடுக்கப்படும் தகவல்களைப்
போல சுருக்கமாகவும் செறிவாகவும் இருக்கிறது. அதனால் இங்கே அதனை சுருக்கி சொல்லுதல்
என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.
இருந்தாலும் எடுத்துக்
கொண்ட பணியை சிறப்பாக செய்யவே முயற்சிக்கிறேன்.
ஜீனோம் என்கிற சொல்லைப்
பற்றி இந்த அத்தியாயத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த சொல்லை புதியதாக கேட்பவர்களுக்கு
புரியும் வகையில் இதன் பொருளை முதலிலேயே க.சுபாஷிணி விளக்கி இருக்கிறார்.
ஜீனோம்
என்பது நமது பெற்றோர்களிடம் இருந்து வழிவழியாக, நம் உடலில் நாம் பெற்று, நம்மை உருவாக்கி
இருக்கும் அடிப்படை நுண்கூறுகளாகும். அதாவது ஒவ்வொரு பெற்றோர்களிடம் இருந்து தொடர்ச்சியாக
பெறும் நுண்கூறுகளே ஜீனோம் என்கிற பெயர் குறிக்கிறது.
இந்த ஜீனோம் என்பது
நமது பெற்றோர்களிடம் இருந்து மட்டும் பெறுவது அல்ல, நமது பெற்றோர்களின் பெற்றோர், அந்தப்
பெற்றோர்களின் பெற்றோர் என்று தொடர்ச்சியாக, மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட
பல டிஎன்ஏ குழுக்களின் தொடர்ச்சி ஆகும்.
இந்த ஜீனோமை ஆய்வு
செய்தால் பல தலைமுறைகளின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இப்படி ஆய்வு செய்யும்
போது, இன்று பல கண்டங்களில் பிரிந்து மனிதஇனம் காணப்பட்டாலும் அனைவரின் மூதாதையர்கள்
ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர்களே என்பதை அறிய முடிகிறது.
பிரிந்த பகுதியில்
வாழ்ந்த சூழ்நிலை, உட்கொள்கிற உணவு ஆகியவற்றால் தோற்றத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படுகிறார்கள்.
இவைகள் எல்லாம் தோற்றமாற்றங்களே, டிஎன்ஏ-வைப் பொருத்தளவில் நாம் அனைவரும் ஓரே இனத்தவர்களே.
இந்த அறிவியலைப் புரிந்து
கொண்டால், யாதும் ஊரே யாவரும் கேளிர். அதாவது இன்று உலகில் காணும் அனைத்து மனிதர்களும்
உறவினர்களே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
விலங்கின் ஒரு பரிணாம
வளர்ச்சியே மனிதயினம் என்று பரிணாமவியல் கூறுகிறது. அப்படிக் கூறுவதால் ஒரே இன வளர்ச்சியில்
இன்றைய நவீன மனிதன் உருவாகவில்லை. அதிலும் பல கலப்புகள் நிகழ்ந்துள்ளது.
நியாண்டர்தால், டெனிசோவன் போன்ற
பல இனங்களின் கலப்பே இன்றைய நவீன மனிதன். அதனால் தூய இனம் என்கிற பேச்சுக்கு அறிவியலில்
ஆதாரம் இல்லை.
1856ஆம் ஆண்டில் ஜெர்மனியில்
உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில், ஒரு கட்டிடப் பணிக்காகத் தோண்டப்பட்ட போது முதன்முறையாக
நியாண்டர்தால்களின் எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. எந்த இடத்தில் முதன்முறையாக கிடைக்கிறதோ
அந்த இடத்தின் பெயரையே வைப்பது பொதுவான வழக்கம், அந்த வகையில்தான் இந்தப் புதிய இனத்தைக்
கண்டிபிடித்த போது நியாண்டர்தால் என்று பெயர் சூட்டப்பட்டது.
இதைக் கேட்டவுடன்
நமக்கு ஒர் ஆர்வத்துடன் கேள்வி எழும், அது என்னவென்றால், நவீன மனிதர்களுடன் நியாண்டர்தால்
எப்போது சந்தித்துக் கொண்டனர்? அவர்களுடன் இனக் கலப்பு ஏற்பட்டதா?
ஆய்வு முடிவுகள்,
ஏறக்குறைய 1,30,000 ஆண்டுகளில் இருந்து 50,000 ஆண்டுகள் வரை சந்திப்பும் இனக்கலப்பும்
ஏற்பட்டிருக்கும் என்று பதிலாகத் தருகிறது.
நவீன மனித குலத்தின்
உடலில் அதிகபட்சமாக சில குறிப்பிடத்தக்க நிலப்பகுதிகளில் 25 விழுக்காடுகள் வரை நியாண்டர்தால்
மரபணுக் கூறுகள் கலந்திருப்பதாக வியப்பூட்டும் தகவல் கிடைக்கிறது. அதிகமான அளவு கலப்பு
என்பது ஐரோப்பாவில் நடந்திருப்பதாக அறியப்படுகிறது.
தமிழ்நாட்டு கிராமத்தில்
வாழ்ந்து வரும் பெருமக்கள், 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக்கூட பயணிக்காதவர்களை இன்று
நாம் காண முடியும். இதனை வைத்துப் பார்க்கும் போது அத்தகையவர்கள் கலப்பில்லாமல் வாழ்ந்திருப்பார்கள்
என்று கருதப்படுகிறது, ஆனால் இது தவறானது என்று அறிவியல் உண்மைகள் கூறுகின்றன.
பல தலைமுறைகளாக குறுகிய
ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மையே, ஆனால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு இங்கு வந்தடைந்தவர்கள்தான், இடம்பெயர்ந்தவர்கள் தான் என்பதையே அறிவியல் உண்மைகள்
உணர்த்து கின்றன.
எப்படி இப்போது ஒரு
வாடகை வீட்டில் வேறொரு வீட்டிற்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோமோ அதே போல ஆப்பிரிக்காவில்
இருந்து கிளம்பி பல ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு இடமாக மாறியே தற்போதைய இடத்தை அடைந்துள்ளனர்
என்பதே உண்மை ஆகும்.
புதியதாக இந்த அறிவியல்
உண்மைகளை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கும் என்பது உண்மைதான், அதற்கான ஆதாரங்கள்
நிறைய அறியும் போது இந்த ஆச்சரியம் படிப்படியாக மறைந்து போகும், அதற்கு நாம் நிறைய
அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
2008ஆம் ஆண்டில் ரஷ்ய
நாட்டில் உள்ள தெற்கு சைபீரியாவில் காணப்படும் ஆல்த்தாய் அலைக் குகைப் பகுதியில் இளஞ்சிவப்பு
நிற குழந்தையின் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டன. ஆய்வின் போது இதுவரை கண்டறியப்பட்ட
மனித இனத்தோடு ஒத்துப் போகாததால் அதனை டெனிசோவன் வகை மனித இனம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
அந்த மலைப் பகுதியில்
உள்ள, குகைக்கு அருகிலேயே நியாண்டர்தால் வகை மனிதர்களின் எலும்புகூடுகளும் கிடைத்தன.
நவீன மனிதர்கள், நியாண்டர்தால்,
டெனிசோவன் ஆகிய மனித வகைகள் மட்டுமல்லாது, மற்ற மனித இனங்களும்கூட தொடக்கக் காலத்தில்
உருவான ஆதி மனிதர்களின் வழித்தோன்றல்களே என்பதை இவைகளுக்கு இடையே காணும் ஒற்றுமைக்
கூறுகள் அடையாளப்படுத்துகிறது.
ஆப்பிரிக்காவில் இருந்து
பிரிந்த இனங்கள் அங்கங்கு வாழ்ந்த சூழலுக்கும் அவர்களுக்குக் கிடைத்த உணவுகளைக் கொண்டும்
மாறுதல் அடைந்தனர். டெனிசோவன் வகை மனிதர்களுக்கு மிகப்பெரிய பல்கள் இருந்ததை அறிய முடிகிறது.
அவர்கள் மிகப்பெரிய தாவரங்களை சமைக்காமல் உண்டு இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாக
கூறப்படுகிறது. இதன் மூலம் டெனிசோவன் வகைப்பட்ட மனித இனம் தாவர வகைகளை சாப்பிடும் பழக்கம்
உடையவர்களாகத் தெரிகிறது.
டெனிசோவன் வகையைச்
சேர்ந்த மனித இனங்களின் எச்சங்கள் அதிகமாக இன்றைய ரஷ்யா மற்றும் அதற்குக் கீழ் நிலப்பகுதிகளில்
காணப்படும் மலைப்பகுதிகளில் கண்டெக்கப்பட்டன.
நவீன கால மனிதர்கள்,
நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் டிஎன்ஏ
கூறுகள் மூன்றையும் வெற்றிகரமாக மரபணுவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.
மிக நீண்ட காலத்துக்கு
முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து தனித்த இனமாக வளர்ச்சி பெற்ற தொல் மனிதர்கள்,
மீண்டும் கலந்துள்ளனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கிறது.
மைய இந்தியாவில் நர்மதா
பகுதியில் செய்யப்பட்ட ஒர் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூடு 75,000 ஆண்டுகளுக்கு முன்பானதாக
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த எலும்புக்கூடு டெனிசோவன் வகையைச் சேர்ந்த மனித இனம்
என்று அறியப்பட்டது.
அதே போல, சீனாவின்
தெற்கு பகுதியில் செய்யப்பட்ட ஒர் அகழாய்வில் 20,000 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு எலும்புகூடு
கிடைத்தது, இந்த எலும்புக்கூடு டெனிசோவன் வகை மனித இனம் என்று அறியப்பட்டது.
மரபணுவியல் ஆய்வுகள்,
மேலை நாடுகளில் கவனம் செலுத்தும் அளவுக்கு சீனாவிலும் இந்தியாவிலும் செலுத்தவில்லை,
என்றாலும் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதை க.சுபாஷிணி இந்த நூலில் குறிப்பிட்டுள்ள
தகவல், நமக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இருக்கிறது.
புதிய புதிய மரபணுக்கள்
கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு புதிய பெயர்கள் இடப்படுகின்றன, அனைத்து
மனிதயினத் தோற்றத்தின் மையப் புள்ளியாக அமைந்திருப்பது ஆப்பிரிக்கா என்பதை நவீன ஆய்வுகள்
உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மனிதயினம் ஆப்பிரிக்காவில்
இருந்து முதன்முறையாக இடப்பெயர்ந்தது எப்போது என்று கூறிட முடியவில்லை, ஆனால் 12 லட்சம்
ஆண்டுகளுக்கு முன்பான எலும்புகூடு ஸ்பெயினில் 1994ஆம் ஆண்டு கண்டிபிடிக்கப்பட்டது.
இன்றைக்கு இருக்கிற
நவீன மனிதயினம் எவ்வளவு கலப்புகள் ஏற்பட்டிருந்தாலும், ஆப்பிரிக்காவில் இருந்து
60,000 ஆண்டுகள் காலகட்டத்தில் இடப்பெயர்ந்தவர்களாக அறிய முடிகிறது.
இன்று பறவைகளின் இடப்பெயர்வு
வானில் பறந்தாலும் அதன் நீண்ட தொலைவு செல்லும் திறனைஆச்சரியமாகப் பார்க்கிறோம். அதே
ஆச்சரியம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பெயர்ந்த மனிதயினத்தினுடைய பயணத்தின் அளவு
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஓர் இடத்தில் கிடைத்த
எலும்புக்கூடுகளின் டிஎன்ஏ-வும், தற்போது அங்கே வாழ்பவர்களின் டிஎன்ஏ-வும் எந்தத் தொடர்பும் இல்லாமல் அல்லது மிகமிக குறைந்த
தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் காட்டுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சான்றுக்கு சொல்வோமானால்,
தற்போதைய தமிழ்நாட்டுப் பகுதியில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடோ
அல்லது வாழ்ந்ததற்கான எச்சங்களோ கிடைக்கிறது என்றால், அந்த மனிதன் தற்போது வாழ்கிற
தமிழரை ஒத்திருப்பார்கள் என்று இப்போதைக்கு கருதவே முடியாது. ஒருவேளை அவர்களின் வாழ்வு
தொடர்ச்சி இருப்பதாகத் தென்பட்டால், குறைவான தொடர்பையே காட்டும், அவர்கள் தொடர்ந்து
வாழாமல் இடம் பெயர்ந்தாலோ அல்லது அழிந்து போயிருந்தாலோ அவர்களை தற்போதுள்ள தமிழர்களோடு நேரடித் தொடர்பு படுத்த முடியாது. ஆனால்
அவர்களை இன்றைய தமிழ் மண்ணுக்கு உரியவர்களாக கருதுவதில் தவறுகிடையாது. ஏன்னென்றால்
அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்ததை மறுக்க முடியாது, ஆனால் அவர்கள் பேசியது தமிழாக இருக்கும்
அல்லது தொல் தமிழாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
அனைவரும் ஆப்பிரிக்க
மனிதயினக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே, இடப்பெயர்வு ஏற்பட்டு பிரிந்து பல ஆயிரம் அல்லது
பல லட்சம் ஆண்டுகள் வாழ்ந்த போது, புதிய சூழ்நிலையினாலும் அங்கு கிடைக்கிற உணவுகளின்
வகையினாலும் புதிய இனமாக உருபெற்று காட்சி தருகிறார்கள். இது போன்று புதிதுபுதிதாக
உருபெற்ற மனிதயினம் கலப்பு ஏற்பட்டு புதிய கலப்பினமாக மாறி இருக்கிறார்கள்.
கலப்பு இல்லாத நவீன
மனிதர்கள் உலகில் எங்கும் இல்லை என்பதே உண்மையாகும். அந்தமானில் உள்ள தனித்தீவில் இன்று
வெளிவுலக மக்களோடு தொடர்பில்லாமல் வாழும் சென்டினல் மக்கள்
கூட்டம்கூட கலப்பில்லாதவர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது, பலப் பிரச்சினைகளை சந்தித்தப்
பிறகே இவர்கள் மற்றவர்களுடனான தொடர்பை முழுமையாக நிறுத்தியிருப்பார்கள், அந்தப் பிரச்சினைகளில்
ஒன்று கலப்பாகவும் இருக்கலாம். இவர்கள் இடம்பெயர்ந்தே இந்த தீவை அடைந்துள்ளனர். அப்படி
இடம்பெறும் போது மற்றவர்களுடன் கலந்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இந்தத்
தீவுக்கு வந்த பிறகு தொடர்பற்று தனித்து இருக்க அவர்கள் விரும்பியிருக்க வேண்டும்.
கலப்பு இல்லாத மனிதயினம்
இன்று உலகில் எங்கும் கிடையாது, கலப்பு குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம், ஆனால் கலப்பு
இல்லாத தூய இனம் எங்கும் கிடையாது. இந்த வரலாற்று உண்மையை அறிந்து கொண்டால் தூயவாதம்
பேசுவது ஆதாரமற்றது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வோம், அடுத்து அவர்களை அறிய வைப்போம்.
இந்த மரபணுவியல் ஆய்வுகள்
கலப்பினை வெளிப்படுத்துவது எதிர் காலத்தில் உலக மக்களின் ஒற்றுமைக்கு வழிவகை செய்யும்
என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உலக அளவில் விவசாயம்
தொடங்கப்பட்ட பகுதியாக, இன்றைய தென் துருக்கி, வட சிரியா ஆகிய பகுதிளைக் குறிக்கின்றனர்.
விலங்குகளை வீட்டு விலங்காகப் பயன்படுத்தியதும் இதே பகுதி என்று அறியப்படுகிறது.
விவசாயம் அறிந்த மனிதக்கூட்டம்
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் வடக்குப் பகுதிகளுக்கும், ஐரோப்பாவின் வடக்குப்
பகுதிக்கும் கிழக்காசியப் பகுதிக்கும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வுகளை மட்டும்
வைத்துக் கொண்டு விவசாயம் ஒரு பகுதியில் தோன்றி உலகம் முழுமைக்கும் பரவியது என்று முடிவு
எடுக்கக் கூடாது. சில இடங்களில் விவசாயத்தை தானாகக்கற்றும் இருப்பார்கள், பல இடங்களில் பரவியும் இருக்கும். ஆனால் விவசாயத்தை
கண்டறிந்த காலங்கள் வேறுபடலாம்.
மனிதயினம் ஓரிடத்தில்
தொடங்கியது போல நாகரிகமும் ஓரிடத்தில் தொடங்கி இருக்கும் என்கிற முடிவுக்கு வரக்கூடாது.
கருப்பான நிறத்தில்
ஆப்பிரிக்காவில் காணப்படும் மனிதக்கூட்டம் எப்படி இன்று பல பகுதிகளில் பல நிற வேறுபாடுகளுடன்
காணப்படுகிறது என்கிற கேள்வி நம்முள் எழும், இதற்கு இந்த நூல் பதில் தருகிறது.
இன்று நமக்குக் கிடைக்கிற
தொன்மையான டிஎன்ஏ தகவல்களை ஆராய்ந்தால், 8000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஐரோப்பிய
வேட்டையாடும் குழுகள், நீல நிற கண் விழிகளோடும் கருத்த தோலுடனும் கருத்த நிறமுடைய முடியையும்
கொண்டிருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இதற்குக் காரணம்,
கருத்த நிறமுடைய இடம்பெயர்ந்த மனிதக்கூட்டம் பல கலப்புகளாலும் தட்பவெப்ப சூழ்நிலையாலும்
உணவுப் பழக்கத்தாலும் இந்த மாற்றத்தை அடைந்திருப்பர்.
கருத்த நிறத்தோடும்,
மஞ்சள் நிறத்தோடும், சிவந்த நிறத்தோடும், வெள்ளை நிறத்தோடும் இன்று மனிதகூட்டம் காணப்படுவதற்கு
இதுவே காரணங்களாகும்.
இன்று அமெரிக்காவில்
உள்ள கருப்பினத்தவர் வெள்ளை நிறத்தவர்களோடு கலப்பு ஏற்பட்டு தோலின் நிறம் முதல் பல
மாற்றத்தை பெற்றுவருவதை நாம் காண முடிகிறது.
16-வது “தூய இனம்”
என்கிற தலைப்பில் உள்ள அத்தியாயத்தில் க.சுபாஷிணி
“நாம் யார், எப்படி இங்கு வந்தோம்” என்பதை நூலின் அடிப்படையில் கூறுபவை மிகவும் முக்கியமான
ஒன்றாகும். தூய இனம் என்று பேசுகிற இனவாதம் உலகில் அழிவையே இதுவரை தந்துள்ளது. இனம்
பற்றிய ஆய்வை இத்தகையவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதைப் பற்றி இந்த அத்தியாயம்
பேசுகிறது.
ஐரோப்பாவில் 19ஆம்
நூற்றாண்டு காலகட்டத்தில் இந்தோ ஐரோப்பியர்கள் என்கிற அடிப்படையில் ஆரியர்கள் “தூய
இனம்” என்கிற கருத்தோடு நாஜி என்கிற இயக்கம் உருவானது. இரண்டாம் உலகப் போருக்கு ஏகாதிபத்தியக்
காரணங்களுடன் இந்த இனவாதமும் ஒரு காரணமாக இருந்தது. இந்தப் போரில் பெரும் நாசங்கள்
உலகுக்கு ஏற்பட்டது, இதற்கு ஒரு காரணமான ஆரிய இனவாதம் என்பது தவறான கருத்தின் அடிப்படையில்
உருவானது என்பது, பிற்காலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளால் அறியப்படுகிறது.
இன்று இந்தோ ஐரோப்பிய
மொழி பேசுபவர்கள், ஜெர்மானிய மூதாதையர்கள் அல்ல, உண்மையில் ஸ்டெப்பி புல்வெளி மற்றும்
மைய ஆசிய பகுதிகளில் இருந்தும் அதற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்தும்
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தவர்களின் இனப்பரவலாக்கத்தின் வழி விரிவாக்கம்
கண்ட மக்கள் என்பது ஆய்வுபடி உறுதியானது. உண்மையில் இவர்கள் “யம்னாயா” என்கிறப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட குழு என்பது தெளிவானது.
நாஜிக்களின் இனத்
தூய்மைவாதம் என்கிற கருத்தாகத்திற்கு அறிவியல் அடிப்படையில் ஆதாரமே இல்லை. க.சுபாஷிணி
தமது நூலில் தமிழ் சூழலில் காணப்படும் “தூய இனம்” “உயர்ந்த சாதி” “ஆண்ட பரம்பரை” ஆகியவை
இனவாத அடிப்படையில் பேசுகிற அனைத்தும் மிகத் தவறானது என்பது மட்டும் அல்ல சமூகத்தில்
பின்விளைகளை உருவாக்கும் என்று கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடிப்படைவாதிகள்,
உண்மை வரலாற்றை விடுத்து தவறான கருத்துக்களை உருவாக்கி அதனை வரலாறாக காட்டுவார்கள்
என்பதை இன்றும் நாம் காண்கிறோம். ஆதாரமற்ற இந்த நாஜியிசம், பாசிசம் ஆகியவற்றை, ஆதாரமான
அறிவியல் உண்மைகளால் மறுக்க வேண்டும். தேச மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் உலக மக்கள்
ஒன்றுபட்டு வாழ்வதற்கும் இத்தகைய பாசிச அடிப்படைகள் தடையாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில்
மரபணுவியல் ஆய்வுகள், அறிவியல் வழியில் இத்தகையப் போக்கை மறுக்கிறது. இந்த வகையில்
இது போன்ற நூல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
“நாம் யார், எப்படி
இங்கு வந்தோம்” என்கிற நூலின் 6ஆம் அத்தியாயத்தின் அடிப்படையில் வேதங்கள், ஆரியர்கள்,
ஹரப்பா நாகரிகம், விவசாயப் பயிர்கள் ஆகியவற்றைப் பற்றி க.சுபாஷிணி எழுதியுள்ளார்.
ஆரியர்களின் பழைமையான
ரிக் வேதம், இந்திரனுக்கும் தாசர்களுக்கும் போர் நடைபெற்றதையும் கோட்டைகளைத் தாக்கி
அழித்ததையும் பற்றி பேசுகிறது. இன்றைய இந்தியா, பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் காணப்படும்
சிந்துவெளியில் சுமார் 4000ம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் செழித்திருந்திருந்தன என்பதை
அகழாய்வுகள் மெய்பிக்கின்றன.
இந்த அகழாய்வுகள்
நடத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் ஹரப்பா நாகரிகத்தில் ஆரியர்களின் நுழைவு
பற்றிய கருத்துக்கள் அதிகமாகப் பேசப்பட்டது.
ஆரியர்களும் சிந்துவெளி
மக்களும் இருவேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இதனை ஒட்டி நடைபெறும் கலந்துரையாடல்
சுமூகமானதாக இல்லை என்றும் மிகுந்த சவால் நிறைந்த கலந்துரையாடலுக்கு வழிவகுப்பதால்,
ஆய்வுப்பூர்வமான கலந்துரையாடல்களுக்கு இடம் தரவில்லை என்று க.சுபாஷிணி வருத்தத்துடன்
கூறியுள்ளார்.
இதை இங்கே விவாதமாகப்
பேசாமல் க.சுபாஷிணி கூறியக் கருத்தோடு முடித்துக் கொள்வோம். சிந்துவெளி பண்பாட்டின்
தொடர்ச்சி தென் இந்தியப் பண்பாட்டில் மிக ஆழமாக இருப்பதை அறியமுடிகிறது, இந்த ஆய்வில்
மரபணுவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பது முக்கியக் கேள்வி என்று க.சுபாஷிணி முடிக்கிறார்.
க.சுபாஷிணி தமது நூலின்
21வது அத்தியாயத்தில், இந்திய மரபணுவியல் ஆய்வுகளைப் பற்றி பேசியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை
மரபணுவியல் ஆய்வாளர்கள், இந்திய மக்களை இரண்டு வகை இனப் பிரிவாக பிரிக்கின்றனர்.
ஒரு பிரிவினர் தொன்மையான
வட இந்திய கூட்டத்தினர், மற்றொன்று தொன்மையான தென் இந்திய கூட்டத்தினர்.
வட இந்திய கூட்டத்தினரின்
மரபணுக்கள் ஐரோப்பிய மத்திய ஆசிய, கிழக்காசிய மற்றும் ஈரான் நிலப்பகுதி மக்களின் மரபணுவோடு
நெருக்கமான தொடர்பு கொண்ட மரபணுக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது.
தென் இந்திய கூட்டத்தினரின்
மரபணுக்கள், இன்றை உலகில் வாழ்கின்ற மற்ற பகுதிகளின் கலப்புகள் போல் இல்லாமல், மிகமிகக்
குறைவான நிலையில், மிகப் பெரும்பான்மை மரபணுக் கூறுகள் மிகத் தொன்மையான காலத்தில் ஆப்பிரிக்காவில்
இருந்து புலம் பெயர்ந்த மக்கள் கூட்டத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.
க.சுபாஷிணியின் இந்த
நூலின் 22ஆம் அத்தியாயத்தில் கூறியதையும் இங்கே சேர்த்துப் பார்ப்போம்.
தொன்மையான வட இந்திய
மரபணு என்பது 50 விழுக்காடு இன்றைய ஈரானிய விவசாயிகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்
இந்தியத் துணை கண்டத்துக்கு வந்து சேர்ந்த மக்கள் கூட்டத்தையும், 50 விழுக்காடு ஸ்டெப்பி
புல்வெளி மூதாததையர்கள் சுமார் 5000 ஆண்டு காலவாக்கில் வந்து சேர்ந்த இனக்குழுக்களின்
கூட்டு கலவையாக உருவான இனக் குழுவாகும்.
தொன்மையான தென் இந்திய
மரபணு என்பது சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் ஈரானிய விவசாயிகள் கூட்டத்தில் இருந்து
இந்திய நிலப்பகுதிக்குள் வந்த மக்களின் மரபணுக்கூறுகள் 25 விழுக்காடு உள்ளது. 75 விழுக்காடு
இக்கூட்டம் வருவதற்கு முன்பு இந்தியப் பகுதியில் இருந்த தொன்மையான வேட்டையாடி கூட்டத்தினரின்
மரபணுக்களின் கலப்பினாலும் உண்டான மரபணுக் கூறுகள் காணப்படுகிறது.
ஆக கலப்பே இல்லாதவர்கள்
உலகில் எங்கும் கிடையாது, குறைவான, அதிகமான கலப்புகளைக் கொண்டவர்களே காணப்படுகின்றனர்.
கலப்பு என்று நிகழ்ந்துவிட்டால் அனைத்தும் ஒன்றுதான், இதில் எந்த வகையிலும் குறைவானக்
கலப்பு என்று பெருமை பேசுவதற்கு மரபணுவியலைப் பயன்படுத்தக்கூடாது. வரலாற்றை அறிவியல்
வழியில் அறிவதற்கும் பேசுவதற்கும் மட்டுமே மரபணுவியல் உதவவேண்டும்.
உண்மையில் தூய்மைவாதம்,
இனவாதம் போன்றவை உடைப்பதற்கு இந்த மரபணுவியல் பயன்படுகிறது என்பதே உண்மையாகும்.
இதுவரை “தொல்மனித
இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்” என்கிற நூல் முன்வைக்கும் கருத்துகளாக க.சுபாஷிணி
தொகுத்துத் தந்துள்ளதைப் பார்ப்போம்.
மனிதர்கள் இந்த இயற்கையின் ஒரு உறுப்பு.
7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான்.
இன்று வாழ்ந்து வருகிற ஒவ்வொரு மனிதனும் ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகையைச் சேர்ந்தவர்களே ஆவர்.
கலப்புகளற்ற
தூய்மையான ஒரு சமூகம் என்பது மனிதர்களிடையே இல்லை. அது சாத்தியமுமில்லை.
இரண்டாவதாக டோனி ஜோசப்
எழுதிய “ஆதி இந்தியர்” (Early
Indians) என்கிற நூலைப் பற்றி க.சுபாஷிணி கூறியதைப் பார்ப்போம்.
“ஆதி
இந்தியர்” நூலின்
அத்தியாயத்தின் பெயர்களே இந்த நூலின் போக்கையும் முடிவையும் வெளிப்படுத்திவிடுகிறது.
1) முதல் இந்தியர்
2) முதல் உழவர்
3) முதல் நகரவாசிகள்- ஹரப்பர்கள்
4) இறுதியாகக் குடியேறியவர்கள்- ஆரியர்கள்
தமிழில் இந்த நூல்
சுமார் 300 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. க.சுபாஷிணி இதனை
30 பக்கங்களுக்கு சுருக்கித் தந்துள்ளார். அதனை இங்கே சுருக்கமாகவே பார்ப்போம்.
க.சுபாஷிணி அறிமுகத்திலேயே
நம்முன் எழும் கேள்விகளை சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்த மனிதர் யார்?
குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர் இங்கே தோன்றியவர்களா? அல்லது வேறு நிலப்பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்களா?
உலகின் மூத்த குடி எது?
சிந்து
சமவெளி அல்லது ஹரப்பா நாகரிகத்திற்கும் தமிழ் மக்களின் வரலாற்றிற்கும் உள்ளள தொடர்பு
என்ன?
கண்டிப்பாக இத்தகைய
கேள்விகளை எழுப்பியவர்கள் நம்மிடையே இருப்பர். இந்தக் கேள்விகளை அணுகும் போது உணர்ச்சி
வசப்பட்டு பதில்களை நாம் முன்னரே உருவாக்கிக் கொண்டு அதனை நோக்கிச் செல்வது முறையான
ஒர் ஆய்வாக அமையாது. மாறாக அறிவியல் வழியில் ஆய்வுகளை அலசி ஆராய வேண்டும் என்று க.சுபாஷிணி தெரிவிக்கிறார்.
இது ஒரு முக்கியமான
ஒன்றாக நான் பார்க்கிறேன். நம் நாட்டில் எதையும் உணர்ச்சி அடிப்படையிலும் முன்முடிவுகள்
அடிப்படையிலும் அணுகுவதை பார்க்கிறோம். இந்தப் பார்வை உண்மை நோக்கி செல்லாது, அறிவியல்
வழியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளையே நாம் ஏற்க வேண்டும். அதைதான் அனைத்துலகமும் ஏற்கும்,
இல்லை என்றால் நாம் தனிப்பட்டுவிடுவோம்.
இன்று இரும்பு தமிழகத்தில்
5000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தினார்கள் என்றால் அதை அறிவியல் அடிப்படையில் தமிழக
தொல்லியல் துறை “இரும்பின் தொன்மை” என்கிற பெயரில் நூலாக தமிழிலும் ஆங்கிலத்திலும்
வெளியிட்டு இருக்கிறது. இது போன்ற அறிவியல் உண்மைகளையே வெளி உலகத்துக்கு எடுத்துச்
செல்ல வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற முடிவுகள் உலக அறிஞர்களிடம் எடுபடாது,
அறிவியல் உண்மைகளே உலகம் ஏற்கும்.
அறிவியல் உண்மைகளின்
அடிப்படையில் புரிந்து கொள்வதற்கே இந்த நூலை க.சுபாஷிணி எழுதியுள்ளார்.
ஆப்பிரிக்காவில் மனிதர்
தோன்றி பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதையே அறிவியல் உண்மைகள் உணர்த்துகின்றன.
உலகில் காணும் இன்றைய
நவின மனிதர் அனைவரும் ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகையினத்தைச் சேர்ந்தவர்களே என்பதை
இன்றுவரை செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதனை மறுப்பவர்கள் இருக்கிறார்கள்,
தங்களின் கூற்றை அறிவியல் வழியில் நிரூபித்தால் மட்டுமே அறிவு உலகம் ஏற்றுக் கொள்ளும்.
உலகமும் ஏற்கும்.
அறிவியலுக்கு மாறான
கருத்துகள் பல நாடுகளில் காணப்படுகிறது, ஆனால் அவை அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
எந்த முடிவையும் விருப்பம் சார்ந்து எடுக்கக் கூடாது, அறிவியலால் உறுதி செய்யப்பட்டதே
உண்மையான வரலாறாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இன்றைய நவீன மனிதன்,
ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகையினக் கூறுகளை மட்டும் கொண்டவனா? என்று கேள்வி எழுப்பினால்
அதற்கு பதில் இல்லை என்பதே ஆகும். பல்வேறு வேறுபட்ட இனங்களும் மனிதரைப் போலவே வாழ்ந்துள்ளனர்
என்றே மரபணுவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமில்லாது அதனுடன் இன்றைய நவீன மனிதரின்
முன்னோர்கள் அந்த இனத்துடன் கலந்துள்ளனர். தொடக்கம் முதல் இன்றுவரை மனிதர் அனைவரும்
கலப்புக்கு உள்ளாகியே இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
க.சுபாஷிணி அவர்களின்
இந்த நூலை நான் ஆர்வத்துடன் படித்ததற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. எனக்கு இந்த
அறிவியல் பயிற்சி குறைவாகவே இருக்கிறது, அதனால் இப்படிப்பட்ட நூல்களை பார்ப்பதோடு சரி,
எடுத்துப் படிக்காமல் இருந்தேன். க.சுபாஷிணி இரண்டு அறிவியல் உண்மைகள் அடங்கிய நூலைப்
பற்றி தமிழில் வெளிவந்தவுடன் வாங்கி படித்தேன். படித்து ஓரளவுக்குப் புரிந்து கொண்டதன்
விளைவாக, டோனி ஜோசப் எழுதிய “ஆதி இந்தியர்கள்” யுவால் நோவா ஹராரி எழுதிய “சேப்பியன்ஸ்”
என்கிற நூலை அண்மையில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிவிட்டேன்.
என்னை முன்வைத்துப்
பேசும் போது இதுவே க.சுபாஷிணி அவர்களின் நூலுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகிறேன்.
எந்தத் துறை என்றாலும்
கலைச் சொல் நம்மை மிரள வைக்கும், அறிவியலில் கேட்கவே வேண்டாம். க.சுபாஷிணி அவர்களின்
நூலைப் படிக்கத் தொடங்கிய நிலையில் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்கிற பகுதியைப்
படிக்கும் போது சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்று இருண்டு முறை வந்துவிட்டதே, இது அச்சுப்
பிழையா? அல்லது காப்பி பேஸ்ட் பிரச்சனையா? என்றே எனக்கு முதலில் தோன்றியது.
க.சுபாஷிணி அவர்களின்
நூலை தொடர்ந்து படிக்கும் போது, நான் புரிந்து கொண்டது தவறு என்பது வெளிப்பட்டது.
ஹோமோ சேப்பியன் வகையின்
கிளைப்பிரிவாக ஹோமோ சேப்பியன் சேப்பியன் என்ற சொல் குறிக்கிறது என்பதை தொடர்ந்து படிக்கும்
போது புரிந்து கொண்டேன். என்னை போன்றோர்களுக்கு அறிவியல் புதிது, அப்படிப்பட்டவர்களுக்கும்
புரியும்படி எளிமையாக க.சுபாஷிணி இந்த நூலை எழுதியதற்கு எனது பாராட்டை இந்த இடத்தில்
தெரிவிக்க விரும்புகிறேன். சுமார் 300-300 பக்கங்களைக் கொண்ட இரு நூலை என்னைப் போன்றோர்கள்
நேரடியாகப் படிப்பது சிரமம் தான், அதனை சுருக்கி எழுதியது எனது புரிதலை வளர்த்தது.
பொதுவாக எனது நூல்களைப்
படித்தவர்கள் பாராட்டுவதை நான் பெரியதாக கருதுவதில்லை, அதனால் நான் பிறரைப் பாராட்டுவதையும்
பெரியதாக கருதாமல் இருந்தேன், இந்த நூலைப் படித்தப் பிறகு பாராட்டை உடனே சொல்லிவிட
வேண்டும், அதுவே அவர்களின் பணி தொடர்வதற்கு ஊக்கமாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன்.
பாராட்டுதல் என்பது அவர்களுக்கு ஒரு ஒளிவட்டத்தை உருவாக்குவதற்கு அல்ல, அவர்களின் பணி
சரியானதாக இருக்கிறது என்பதை அது உணர்த்தும் என்பதற்கே ஆகும்.
ஹோமோ சேப்பியன் சேப்பியன்
இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்வு 70,000 ஆண்டுகளாக பகுதி, பகுதியாக நடைபெற்றது.
இவர்களே இன்று உலகம் முழுதும் நவீன மனிதராக இருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து
இடம் பெயர்ந்த இந்த மனிதக்கூட்டம், இன்று பல்வேறு இனமாக பிரிந்த வளர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த இன வேறுபாடு காணப்பட்டாலும் நாம் அனைவரும் ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகையினத்தைச்
சேர்ந்தவர்களே ஆவோம்.
70,000 ஆண்டுகளுக்கு
முன் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய ஹோமோ சேப்பியன் சேப்பியன். சுமார் 65,000 ஆண்டுளுக்கு
முன்பு இந்திய துணை கண்டத்துக்கு அவர்களில் சிலர் வந்தடைந்தனர்.
இதனடிப்படையில் க.சுபாஷிணி
ஏறக்குறைய 60,000 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த நவீன மனிதர்களே
முதல் இந்தியர்கள் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார். இந்த கணிப்பு இன்றளவும் நீடித்துக்
கொண்டிருக்கின்ற ஒரு வம்சாவளியை முன்வைத்து கூறியதாகும்.
தொல்லியல் ஆய்வாளர்களிடம்
கேட்டால், அத்துறையைச் சார்ந்த சிலர் 1,20,000 என்று கூறுவர் என்கிறார் டோனி ஜோசப்.
இங்கே அந்த இனம் இன்றும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை கணக்கில் கொள்ளாது கூறியதாகும்.
ஒரே உருவத்தைக் கொண்ட
ஹோமோ வகையினத்தின் தொடர்ச்சியாகவே, பொதுவாக இன்றைய நவீன மனிதனின் வளர்ச்சியைப் பார்க்கிறோம்.
ஆனால் இது உண்மையல்ல, நம்மைப் போன்ற இனம் பல இந்த உலகில் வாழ்ந்து இருக்கிறது, ஆனால்
இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம் என்பது ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்
மட்டுமே.
ஹோமோ சேப்பியன்சைப்
போலவே, ஹோமோ எரெக்டஸ், ஹோமோ நியாண்டர்தால் போன்ற மனிதயினங்கள் இருந்தன. ஒவ்வொன்றும்
தனித்தனி கிளையாகக் கருதலாம்.
ஹோமோ எரெக்டஸ் வகையினம்
பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியப் பகுதியான சீனா, இந்தோனீசியா, இந்தியா போன்றப் பகுதியில்
வாழ்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
ஹோமோ நியாண்டர்தால்
வகையினம் பெரும்பாலும் ஐரோப்பாவிலும், தென்மேற்கு ஆசியாவிலும் வாழ்ந்திருப்பதாக ஆய்வுகள்
காட்டுகின்றது.
2010ஆம் ஆண்டு வரை,
நவீன மனிதயினமான ஹோமோ வகையினர் மற்ற வகையினத்துடன் கலந்திருக்காது என்ற கருத்தே காணப்பட்டது.
ஆனால் ஆய்வு முடிவுகள் இதற்கு மாறானதாக காட்டியது. இன்றைய நவீன மனிதர்கள் சிலரிடம்
நியாண்டர்தால் மரபணுக்கள் காணப்பட்டதை டோனி ஜோசப் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு இன்றைய தமிழகத்தின் அத்திரம்பாக்கம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததாக, அவர்கள்
பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு அறிய முடிகிறது, ஆனால் இவர்கள் ஹோமோ சேப்பியன்கள்
வகையினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, அவர்கள் குறிப்பாக எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதை அறிந்து கொள்வதற்கு எலும்புகூடுகள் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடினால்
கிடைக்கும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
“ஆதி இந்தியர்” என்கிற
நூலின் இரண்டாம் அத்தியாயம் விவசாயிகளைப் பற்றி பேசுகிறது.
தெற்கு ஆசியாவில்
மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை தொடர்பான ஆய்வுகளில் பழைமையானதாக மெகர்கர் என்கிற கிராமத்தில்
தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் தொடர் வளர்ச்சியினால்தான்
சிந்துவெளி நாகரிகம் உருவானதாக கூறப்படுகிறது.
தற்போதைய பாகிஸ்தானத்தில்
காணப்படும் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு கிராமமே மெகர்கர். இந்தப் பகுதியில்
7000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிந்துவெளி
நாகரிகத்துடன் இந்த கிராமம் தொடர்புடையதாகக் கூறுவதால், இந்த கிராமம் பற்றிய ஆய்வுகள்
முக்கியமானதாக இருக்கிறது.
சிந்துவெளி நாகரிகம்
மூன்று கட்டங்களாக ஆய்வாளர்கள் பிரிப்பர்.
கி.மு. 5,500 முதல்
கி,மு. 2,600 வரையிலான கட்டத்தை முந்தைய கட்டம், அதாவது தொடக்கக் கட்டம்.
கி.மு. 2,600 முதல்
கி,மு.1,900 வரையிலான கட்டத்தை முதிர் கட்டம், அதாவது வளர்ச்சி அடைந்தக் கட்டம்.
கி.மு. 1,900 முதல்
கி,மு.1,300 வரையிலான கட்டத்தை பிந்தைய கட்டம், அதாவது மறைவு கட்டம்.
நாகரிகத்தின் முந்தியக்
கட்டமும் மெகெர்கர் கிராமத்தில் மக்கள் வாழ்ந்த கட்டமும் நெருக்கமாக இருப்பது, அந்த
கிராமத்தின் தொடர்ச்சியே சிந்துவெளி நாகரிகத்தின் வளர்ச்சி என்கிற கருத்தை உறுதிப்படுத்துகிறது.
சிந்துவெளி நாகரிக
மக்கள் பேசிய மொழி எந்தக் குடும்பத்தைச் சார்ந்தது என்பது இன்றும் பேசு பொருளாகவே இருக்கிறது.
சிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்கள் படிக்கும்வரை இந்த விவாதம் தொடரவே செய்யும், அல்லது
வேறு ஆய்வுகள் மொழியை உறுதி செய்யலாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
சிந்துவெளியில் கிடைத்த
வரிவடிவத்தின் அடிப்படை மொழி, முதல்நிலைத் திராவிட மொழியாக இருக்கலாம் என்றே பல ஆய்வாளர்கள்
கருதுவதை டோனி ஜோசப் குறிப்பிடுகிறார்.
மெசப்பட்டேமியா மொழிகளில்
குறிப்பாக ஈல மொழி பற்றி ஆய்வாளர்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்று டோனி ஜோசப் தெரிவிக்கிறார்.
ஏனெறால் ஈல மொழி திராவிட மொழிக் குடும்பத்தின் பிராகுயி மொழியை ஒத்திருக்கிறது. எந்த
வகையில் பார்த்தாலும் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழிக் குடும்பத்துடனே தொடர்புடையதாக
இருக்கிறது.
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என அழைக்கும் போக்கு இன்று அதிகம் காணப்படுகிறது, டோனி ஜோசப் இதற்கு வலுவானக் காரணங்கள் இல்லை என்பதால் மறுக்கிறார்.
இந்தியப் பண்பாடு ஒற்றைத்தன்மை கொண்டல்ல, அது பன்முகத்தன்மை கொண்டது. இந்தியாவின் சிறப்பியல்பான பன்முகத்தன்மையை மறுக்கும் இந்த ஒற்றைப் பண்பாடு என்று கூறுகிற முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன, அதே நேரத்தில் அவை ஆதாரத்துடன் மறுக்கப்பட்டு தோற்கடிக்கப்படுகின்றன.
வரலாறு திரிக்காமல் இருப்பதற்கு, அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், அதற்கு முதல் இந்தியரிடம் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்க வேண்டும் என்று டோனி ஜோசப் கூறுகிறார்.
டோனி ஜோசப்பின் கருத்தே சார்பற்ற ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. நாமும் அதனையே பின்பற்றுவோம்.
வரலாற்றைத் திரிப்பவர்களுக்கு எதிராகவும், தூய இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராகவும் இது போன்ற அறிவியல் நூல்களைப் பயன்படுத்த வேண்டும்.
இன்று உலகில் உள்ள மக்கள், இனமாக, மொழியாக, தேசமாக, சாதியாக, மதமாக பிரிந்து இருந்தாலும், நம் அனைவரின் மூதாதையர் ஒருவரே, அவர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தவர் என்பதை மரபணுவியல் ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகிறது.
அறிவியல் வழிநின்று நாம் அனைவரும் ஒருவரே என்கிற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாளைய உலகம் ஒற்றுமையில் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.