Sunday 10 July 2016

லெனின் வாழ்வும் படைப்பும்-முன்னுரை

ஆசிரியர்-அ.கா.ஈஸ்வரன்

வெளியீடு;-
பொன்னுலகம் பதிப்பகம்
விலை- ரூ.220/-

அலைபேசி- 94866 41586
மின்னஞ்சல்- ponnulagampathippagam@gmail.com

லெனின் வாழ்வும் படைப்பும்- முன்னுரை
பல நூற்றாண்டுகளாக கனவுக் கோட்பாடாக இருந்த கம்யூனிசத்தை மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானமாக்கினர்.

கற்பனாவாதிகளில் மேதையாகத் திகழ்ந்தர்வகள்கூட, சுரண்டல் என்பது அநியாயமானது, என்பதை ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும் சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டனர். முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்ததால் அவர்களின் அறிவு எல்லைக்குட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது, முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்கிறார் எங்கெல்ஸ்.

1840களில் முதலாளித்துவம் முதிர்ச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது. முதலாளித்துவத்தைப் பற்றிய விமர்சனமும் விடிவும் கற்பனையில் அறிந்து கொள்ள வேண்டிய நிலையிலிருந்து விஞ்ஞான வழிப்பட்ட கோட்பாடாக மாற்றுவதற்கான சமூக பொருளாதரம் வளர்ச்சி பெற்றுவிட்டது.

மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞானத் தன்மை பெற்றதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இருமாபெரும் கண்டுபிடிப்புகள் காரணமாகிறது.

                மார்ச்சிய தத்துவமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம், முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான பகைமையில் காணப்படும் முரணில் உருவான வர்க்கப் போராட்டத்தை எடுத்துரைக்கிறது. மார்க்சும் எங்கெல்சும் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை கண்ணுற்று அவர்களை உணர்வுபூர்வமாக ஆதரித்து அதன் வழியில் தமது கோட்பாட்டை வகுத்துக் கொண்டனர்.

      சோஷலிசத்தை கற்பனாவாத நிலையிலிருந்து விஞ்ஞான வகைப்பட்டதாக மாற்றுவதற்கு, தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலைமைகளை அடிப்படையாக மார்க்சும் எங்கெல்சும் அமைத்துக் கொண்டனர். முதலாளித்துவ சமூகம் வளர்ச்சியுற்று இறுதியில் தன்னை நிலைநிறுத்த முடியாமல் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தால் எவ்வாறு வீழும் என்பதை மார்க்சும் எங்கெல்சும் அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுதினர்.

      இந்த மார்க்சியத்தை லெனின் வறட்டுச் சூத்திரமாக கொள்ளாமல், அதன் படைப்பாற்றலோடு புரிந்து கொண்டு ஏகாதிபத்திய காலத்திய மார்க்சியமாக லெனினியத்தை அமைத்தார். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாகக் கொண்டவர்கள், மார்க்சிய முடிவுகளை மட்டும் படித்துவிட்டு, லெனின் மார்க்சியத்துடன் முரண்டுகிறார் என்றும் ருஷ்யப் புரட்சி மார்க்சின் மூலதன நூலுக்கு எதிரானது என்றும் அதனால் இதுகாறும் நம்பப்பட்டு வந்தது போல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்று விளக்கப்படுத்தத் தொடங்கினர்.

லெனினது நடைமுறையும், படைப்பும் இந்தக் கூற்றுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதை இந்த லெனின் வாழ்வும் படைப்பும் என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ளலாம். லெனினியம் என்பது ருஷ்யாவின் தனித்துவமான போக்கை தவிர அதில் சர்வதேச பொதுத் தன்மை ஏதும் கிடையாது என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். இதனை லெனின் படைப்புகளே மறுதலிக்கின்றன. ருஷ்யப் புரட்சியை அப்படியே தமது நாட்டில் நடத்துவது பற்றிய சிந்தனைப் போக்கையும், அதற்கு மாறாக இது ருஷ்ய நாட்டிற்கு மட்டுமானது என்பதாக புரிந்து கொள்வதையும்  லெனின் தமது இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் மறுத்துரைக்கிறார்.

வளர்ச்சியுறாத நாட்டில் லெனின் சோஷலிசத்தை நிர்மாணிக்கிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர், ஆனால் இதற்கு மாறாக, சற்று பின்னோக்கிச் சென்று புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து, இதனை நிறைவேற்றியப் பிறகே சோஷலிச நிர்மாணத் திட்டங்களை செயற்படுத்தியுள்ளார் என்பதை லெனினது படைப்புகளின் தொடர்ச்சி நமக்கு விளக்குகிறது. இயக்கவியல் அடிப்படையில் புரிந்து கொண்டவர்களுக்கு லெனினியம் மார்க்சியத்தின் தொடர்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வறட்டுத் தனமாக ஏற்றுக் கொண்டவர்களுக்கே சிக்கல் ஏற்படுகிறது.

ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டை கொண்டாட முடியாமல், அதன் நினைவு நாளையே கொண்டாட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். புரட்சிக்கு முன்பு போல்ஷிவிக்குக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தாலும் அதனை நீடித்து அரசாள முடியுமா? என்ற கேள்விவை எழுப்பியிருந்தனர். போல்ஷிவிக்குகள் நீடித்து அரசாள முடியுமா? என்ற நூலில் இதற்கு முடியும் என்று லெனின் பதில் அளித்துள்ளார். ஆனால் இன்று போல்ஷிவிக்குகளின் ஆட்சி ருஷ்யாவில் இல்லை. இதனை விவரிப்பது தேவையான ஒன்றாகும். இருந்தாலும் இந்த நூலின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்நூலின் இறுதி, இதன் விவாதத்தை தொடங்கும் முகமாகவே முடிக்கப்பட்டுள்ளது.

“லெனின் விட்டுச் சொன்ற பணியினை ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும் செய்து முடித்தது. முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிச சமூகத்திற்கு மாறிச் செல்வதற்கு தேவைப்பட்ட இடைக்காலத்தை முடித்துக் கொண்டு 1935ஆம் ஆண்டில் சோஷலிச சமூகத்திற்குள் சோவியத் நுழைந்தது. 1940ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறை உற்பத்தியின் அளவு ஐரோப்பியாவில் முதல் இடத்தையும், உலக உற்பத்தியின் அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.

 

1940 களில் எற்பட்ட இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய பாசிச ராணுவம் சோவியத் ஒன்றியத்தின் நகரங்களையும் தொழிற்கூடங்களையும் அழித்தது. இதனோடு 55 ஆயிரம் டாங்கிகள், 62 ஆயிரம் விமானங்கள், 80 லட்சத்துக்கு மேற்பட்ட போர்வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். நாட்டைக் காப்பதற்கான இந்த தேசபக்த போரின் போது, போர்வீரர்கள் மற்றும் மக்களின் பேராற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியது. அது மட்டுமல்லாது போரின் விளைவாக ஏற்பட்ட அழிவில் இருந்து மீள்வதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும் என்று உலகம் கணித்துக்கொண்டிருக்க, சோவியத் ஒன்றிய உழைக்கும் மக்கள், போருக்கு முன்பான உற்பத்தியின் அளவை, முதல் மூன்று ஆண்டிலேயே எட்டினர். மக்களின் இந்த பேராற்றலுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். மக்கள், கட்சி, தலைவர் ஆகியோர்களிடையே காணப்பட்ட ஐக்கியமே இந்த வெற்றிக்கு வழிவகுத்தது.”


            பின்தங்கிய ருஷ்யாவை சோஷலிச நிர்மாணத்திற்கு தேவையான வகையில் வளர்ச்சியடைய போல்ஷிவிக்குகளால் முடிந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஆனால் ஸ்டாலினின் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட, பின்வந்த ருஷ்ய அதிபர்கள் சோவியத் வளர்ச்சியடைந்த சோஷலிச சமூகமாக மேம்பட்டுவிட்டது, இதற்கு அடுத்தக் கட்டமான கம்யூனிச சமூகத்தில் நாம் கால்பதிக்க வேண்டும்.  இந்த சமூகத்தில் முதலாளித்துவத்தின் முயற்சிகள் பலனளிக்காது என்று கூறி, சோவியத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் மீண்டும் முதலாளித்துவத்தையே கொண்டு வந்திருக்கிறது. ஸ்டாலினிடம் காணப்படும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதாக கூறியது உண்மையில் மார்க்சிய எதிர்ப்பேயாகும். இன்றுவரை ஸ்டாலின் எதிர்ப்பென்பது மார்க்சிய எதிர்ப்பாகவே காணப்படுகிறது.

      இப்போது ஆய்வு செய்து பார்க்க வேண்டியது, எப்போது எப்படி போல்ஷிவிக்கல்லாதவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கடசியிலும் தலைமையிலும் இடம்பெற்றார்கள் என்பதேயாகும். அதாவது சோவியத் தகர்வின் போது போல்ஷிவிக்குகள் ஆட்சியில் இல்லை என்பதே உண்மையாகும். இதனை ஆய்வு செய்ய வேண்டியது சர்வதேச இடதுசாரியினரின் கடமையாகும். ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை இந்த ஆய்வுடனேயே கொண்டாட வேண்டும். சோவியத் தகர்வு என்பது கம்யூனிச சித்தாந்தத்தின் தகர்வாகாது, சித்தாந்தத்தின் சிதைவினால் உண்டான தகர்வேயாகும். இந்த சித்தாந்த சிதைவை விமர்சித்து மார்க்சியத்தை நிலைநிறுத்துவது பெரும் கடமையாகும்

இன்றைய ருஷ்யாவில் பெரும்பாலான இளைஞர்களின் கவனம் சோஷலிசத்தின் பக்கம் திரும்புவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது ருஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டின் நற்செய்தியாகும். நாளைய உலகம் உழைப்பாளர்களுக்கேயாகும்.

இந்நூல் இந்தளவில் வந்திருப்பதற்கு பெரும் காரணமானவர்கள் .ஜீவானந்தம், மகேஷ் ராமநாதன் என்ற இரு தோழர்களாவர். நூல்வடிவம் பெறுவதற்கு முன்பே இவர்கள் படித்து திருத்தி உதவினர். எனது நூலின் ஆக்கத்திற்கு  தொடர்ந்து ஊக்கமளிக்கும் தோழர்கள் கோவை ஈஸ்வரன், பாஸ்கர், ஆ.பத்மாவதி, சுந்தர சோழன். இந்தத் தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் வாசகர்களுக்கும் நன்றி. இந்த ஆர்வமே என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. எனது எழுத்தை தோழமையோடு வெளியிடும் தோழர் திருப்பூர் குணாவுக்குவுக்கு நன்றி. இந்நூலை அழகு வடிவத்தில் விரைந்து அச்சிட்டு முடித்தமைக்காக பொன்னுலகம் பதிப்பகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அலைபேசி எண்: 92832 75513 - 098840 92972                                  அ.கா.ஈஸ்வரன்
மின்னஞ்சல்- marxistwriter@gmail.com                                                    சென்னை

    மே 2016

No comments:

Post a Comment