Saturday, 28 January 2017

மார்க்சியமும் மொழியியலும்

-லெனின், ஜே.வி.ஸ்டாலின்
தமிழில்: பாரதி

விலை- ரூ.70/-

புதுமைப் பதிப்பகம்,
61.2, பாரதி சாலை,
ஜாம் பஜார் சாலை, திருவல்லிக்கேணி,

சென்னை- 600 005
புதிமை பதிப்பகத்தின் புதிய வெளியீடாக “மார்க்சியமும் மொழியியலும்” என்ற நூல் வந்துள்ளது. இந்நூல் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட பேட்டிகள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லெனினது இரண்டு சிறு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளன. மொழி மீதான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்நூலைப் படித்தறிந்து கொள்ளத் துணைபுரிகிறது.

ஸ்டாலின் தன்னடக்கத்துடன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். தான் மொழியியல் வல்லுணர் இல்லை எனினும் மொழியியலைப் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு என்பது, மற்ற சமூக விஞ்ஞானங்களைப் போன்று எமது துறையுடன் ஓரளவு நேரடியான தொடர்புடையதே என்கிறார்.

மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியதாகக் கருதுகிற போக்கை மிக மோசமான தவறு என்கிறார் ஸ்டாலின். இதனை விளக்குவதற்கு ருஷ்ய சோஷலிசப் புரட்சியோடு அதற்கு 30ஆண்டுக்கு முந்திய முதலாளித்துவ அடித்தள அமைப்பை ஒப்பிட்டுக் காட்டுகிறார். புரட்சியின் போது முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தோடு அதன் மேற்கட்டமைபும் தூக்கி எறியப்பட்டுச் சோஷலிச அடித்தள அமைப்பிற்குப் பொருத்தக்கூடிய ஒரு புதிய மேற்கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ அரசியல், நீதி மற்றும் இதர நிறுவனங்கள் இருந்த இடத்தில், சோஷலிசத்துக்குப் பொருத்தமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் ருஷ்ய மொழியானது சோஷலிசப் புரட்சிக்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மொழியை உற்பத்திக் கருவிகளுடன் ஒப்பிட்டு இரண்டும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சோஷலிச அமைப்பிற்கும் சமமாகவே சேவை செய்கின்றதை எடுத்துக் காட்டியுள்ளார். புஷ்கின் படைப்புகள் எழுதிய பின்பு, நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் தூக்கி எறியப்பட்டு மூனறாவதாக ஒரு சோஷலிச அமைப்பும் உருவாகிவிட்டப்பிறகும் ருஷ்ய மொழியில் எந்தவொரு அடிப்படையான மாற்றமும் அடையவில்லை என்பதை ஸ்டாலின் கூறுகிறார்.

“எல்லா இடங்களிலும் கணங்களின் மொழியிலிருந்து பழங்குடிகளின் மொழியாகவும், பழங்குடிகளின் மொழியிலிருந்து தேசிய இனங்களின் மொழியாகவும், தேசிய இனங்களின் மொழியிலிருந்து தேசிய மொழியாகவும் மாறிய இந்தவளர்ச்சிப் போக்கின் எல்லாக் கட்டங்களிலும், ஒரு சமூகத்தில் உள்ள மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துகின்ற சாதனம் என்ற வகையில் மொழியானது, அந்தந்தச் சமூகத்தின் ஒரே பொதுவான மொழியாகவே விளங்கி வந்திருக்கிறது. சமூகத்தின் உறுப்பினர் அனைவருக்கும் அவர்களின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படாமல் சமமாகவே பணியாற்றி வந்திருக்கிறது” (பக்கம்- 31-32)

மொழி வர்க்க சார்புடையது கிடையாது அதனால் அடித்தள மாற்றத்தோடு மொழி மாற்றம் பெறுவதில்லை. குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மொழி உருவாக்கப்படவில்லை. சமூகத்தில் காணப்படும் அனைத்து வர்க்கங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மொழியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஏதாவது ஒரு பழைய அல்லது புதிய அடித்தள அமைப்பின் படைப்பல்ல. அதற்கு மாறாக, சமூகத்தின் வரலாறு முழுவதாலும், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்து பல அடித்தள அமைப்புகளின் வரலாறு முழுவதாலும் உருவாக்கப்பட்டதாகும் என்கிறார் ஸ்டாலின்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின் ருஷ்ய சொற்தொகுதியில் குறிப்பிட்ட அளவு மாற்றம் பெற்றது. பல பழைய சொற்களின் பொருள் மாறி புதிய முக்கியத்துவம் அடைந்தது. தேவையற்ற சொற்கள் மறைந்துபோயின. புதிய சோஷலிச உற்பத்தி முறையினால் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டது. முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்பட்ட பிறகு, ஒரு புதிய அடிப்படை சொற்தொகுதியாலும், புதிய இலக்கண அமைப்பாலும் முற்றிலும் அகற்றப்படுவதற்கு மாறாக ருஷ்ய மொழியில் முழுமையாகப் பேணப்பட்டதோடு, கடுமையான மாற்றங்களுக்கு உட்படவில்லை என்கிறார் ஸ்டாலின்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்களை நூலின் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அது எந்தக் காலத்தில், எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதையும் அதற்கு மேலேயும் கீழேயும் என்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பாராது “மேற்கோள்களுக்கு” தவறான விளக்கம் கொடுப்பதை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி மறுக்கிறார் ஸ்டாலின்.

மார்க்சியத்தை வறட்டுச்சூத்திரமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதைப் பலநேரங்களில் அறிவுறுத்தப்பட்ட ஒன்றே. இங்கே ஸ்டாலினும் வலியுறுத்துகிறார்.

“மூல நூலை ஒப்புவிப்போரும், பாராயணம் செய்வோரும் சமூக வளர்ச்சி நிலைமைகளில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் மார்க்சியமும், மார்க்சியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளும் கருதுகோள்களும் எப்போதும் மாறாதவை என்று கருதுகிறார்கள். இந்தக் கருதுகோள்களையும் முடிவுகளையும் மனப்பாடம் செய்துவிட்டு அவ்வப்போது மேற்கோள் காட்டிவிட்டாலே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம். அந்த முடிவுகளும் கருத்துகளும் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் வாழ்க்கையின் எல்லாச் சந்தப்பங்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் என்று கருதுகிறார்கள், மார்க்சியத்தின் சாராத்தைப் பாராமல் அதன் சொற்களை மட்டுமே பார்க்கின்ற மார்க்சியத்தின் முடிவுகளையும் கருதுகோள்களையும் அதன் பொருளை உணராமல் மனப்பாடம் செய்பவர்களே இவ்வாறு கருதுவார்கள்,” (பக்கம் - 81)

பூர்ஷ்வாக்கள் ‘அவர்களுக்குச் சொந்தமான மொழியைக்’ கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மொழி பூர்ஷ்வாக்களால் உருவாக்கப்பட்டது என்றும் மார்க்ஸ் கூறிய மேற்கோளைப் பிடித்துக் கொண்டு, மொழியின் வர்க்க இயல்பை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டது போல் புரிந்து கொள்கின்றனர். இதனை ஸ்டாலின் மறுத்து இதே கட்டுரையில் மற்றொரு இடத்தில் அரசியல், பொருளாதாரப் பிடிப்பின் காரணமாகக் கிளைமொழிகள் ஒரு தேசிய மொழியின் பிடிக்குள் வருவதைப் பற்றிக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையே ஸ்டாலின் வேறொரு இடத்தில், வர்க்கங்கள் மொழியைப் பாதிக்கின்றன, அவற்றிற்கே உரிய சொற்களையும் வெளிப்பாடுகளையும் மொழியில் புகுத்துகின்றன. சில நேரங்களில் ஒரே சொல் வெவ்வேறு விதமான பொருளைக் கொள்கின்றன என்பதில் ஐயமில்லை. இதனால் அனைத்து மக்களுக்கு உரிய ஒரு பொது மொழியின் வளர்ச்சிக்கு தடையாகவோ, அல்லது அதன் சிறப்புத் தன்மையை மாற்றி விடுமென்றோ பொருள் கொள்ள முடியாது என்கிறார். இதுபோன்ற தவறான புரிதல்களை இந்நூலில் ஸ்டாலின் சரிபடுத்துகிறார்.

பக்கம் 74-75ல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்றுபட்டு கூட்டாகத் தாக்கினால் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் கூறியதற்கும், தனிநாட்டில் சோஷலிசப் புரட்சி தோன்றுவது பற்றிய லெனினது கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஸ்டாலின் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற மார்க்சிய அறிஞர்கள் கூறுவதைப் போல மொழியானது ஒரு சமூகத்தின் மக்களிடையே தொடர்பு கொள்ளக்கூடிய கருவியாகவே இருக்கிறது, அந்தச் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் சமமாகவே பயன்படுகிறது என்று இந்நூலில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை மட்டும் அறிந்த தமிழ்நாட்டில் பலர், மார்க்சியம் மொழியை வெறும் ஊடகசாதனமாக மட்டுமே பார்க்கிறது என்று விமர்சிக்கின்றனர். ஊடக சாதனம் என்பதை இவர்கள் தான் மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். மொழி, மனிதகுல வரலாற்றில் எவ்வகையில் எல்லாம் ஊடகமாகப் பயன்பட்டுள்ளதை ஸ்டாலின் எடுத்துக்காட்டியுள்ளார்.

“மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் விலங்கு உலகத்திலிருந்து தோன்றுவதற்கும், சமூகங்களாக இணைவதற்கும், அவர்கள் சிந்தனையை வளர்ப்பதற்கும், சமூக உற்பத்தியை ஒழுங்கமைப்பதற்கும், இயற்கை சக்திகளை எதிர்த்து ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கும், நாம் இப்போதுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கும் உதவி செய்த சக்திகளுள் பேசும் மொழியும் ஒன்றாகும்.” (பக்கம்- 71-72)

மேலும், உற்பத்தியிலும், பொருளாதார உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும் மொழி இணைந்து செயல்படுவதற்கு ஒன்று திரட்டும் சாதனமாக இருப்பதையும் இந்தச் சிறப்பியல்பு மொழிக்கு மட்டும் இருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மற்ற சமூக அம்சங்களிலிருந்து மொழியை வேறுபடுத்துகின்ற மொழிக்குரிய சிறப்பியல்புகள் யாவை?

மக்களுக்கிடையே தொடர்பு கொள்ளும் சாதனமாகவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மனிதச் செயல்பாட்டின் அனைத்துத் துறைகளிலும், உற்பத்தியிலும், பொருளாதர உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், அன்றாட வாழ்விலும் இணைந்து செயல்படுவதற்காக ஒன்று திரட்டும் சாதனமாகவும் மொழி விளங்குகிறது. இந்தச் சிறப்பியல்புகள் மொழிக்கு மட்டுமே உண்டு.” (பக்கம்- 60)

“தேசிய கலாச்சாரம்” என்பது முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாகும். இதனைப் பல கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளாமல், தேசிய கலாச்சாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். “பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் முழுக்கம் ‘தேசியவாத கலாச்சாரம்’ அல்ல, மாறாக அது சர்வதேசிய ஜனநாயகக் கலாச்சாரமும், உலகு தழுவிய பாட்டாளி வர்க்க இயக்கமும் ஆகும்.” (பக்கம் 88)

இந்தப் பாட்டாளி வர்க்க சர்வதேச சிந்தனையோடு ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 காங்கிரசில், எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஒரே உலக மொழியைப் பற்றிக் கூறியுள்ளார். சோஷலிசம் நிலைபெற்ற பிறகு தேசிய மொழிகள் தவிர்க்க முடியாமல் ஒரு பொது மொழியாக இணையும். தேசிய மொழிகளில் இருந்து வளம்மிக்க, ஒன்றுபட்ட மண்டல மொழிகள் முதலில் உருவாகும். அதன் பிறகு மண்டல மொழிகள் (zonal languages) அனைத்தும் ஒரு சர்வதேச மொழியாக இணைந்துவிடும். ஆனால் இந்தச் சர்வதேச மொழி ருஷ்ய மொழியாகவோ, ஜெர்மன் மொழியாகவோ, ஆங்கில மொழியாகவோ இருக்காது. மாறாக, இந்தப் புதுமொழியானது. தேசிய, மண்டல மொழிகளின் சிறப்பான கூறுகள் அனைத்தையும் கொண்ட ஒரு புதுமொழியாக விளங்கும்.

இந்த ஸ்டாலினது கூற்றுச் சர்வதேசியவாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்காது, ஆனால் “தேசிய கலாச்சாரம்” என்பதை முன்வைக்கிற தோழர்களுக்கு எற்படும் அச்சரியத்தைத் தவிர்க்க முடியாது.

லெனினது இரண்டு சிறு கட்டுரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் மொழியைப் பற்றி மார்க்சியவாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை இருக்கின்றன. “கட்டாய அலுவல் மொழி அவசியமா?” என்ற கட்டுரையில் லெனின், “ருஷ்ய மார்க்சியவாதிகள் கட்டாய அலுவல் மொழி கண்டிப்பாக இருக்கக் கூடாது எனவும், அனைத்து உள்ளூர் மொழிகளிலும் கல்வி போதிக்கப்படும் பள்ளிகளை மக்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஏதேனும் ஒரு குறிப்பிட்டதொரு தேசத்தின் அனைத்துச் சிறப்புரிமைகளையும் மற்றும் சிறுபான்மை தேசத்தாரின் உரிமை மீறல்கள் அனைத்தையும், இரத்து செய்யும் ஓர் அடிப்படைச் சட்டம் ஒன்று அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்” (பக்கம்94-95)

“மொழிப் பிரச்சினை குறித்துத் தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள்” என்ற கட்டுரையில் பாட்டாளி வர்க்க ஜனாயகத்தின் தேசியஇனத் திட்டத்தில், எந்தவொரு தனிப்பட்ட தேசத்திற்கும், மொழிக்கும் சிறப்புரிமை மறுக்கப்படும் என்று லெனின் தெளிவாகக் கூறியுள்ளார். சிறிய நாடான ஸ்விட்சர்லாந்தை முன்வைத்து மூன்று மொழிகளை அலுவல் மொழியாகக் கொண்டுள்ளதால் அந்நாடு எதையும் இழக்கவில்லை என்று லெனின் கூறுகிறார்.

எந்த ஒரு மாற்றமும் அந்நாட்டில் வளர்ச்சிப் பெற்றுள்ள ஜனநாயத்தின் அடிப்படையில் நிலைமைக்கு ஏற்றப்படியான மாற்றங்கள் உண்டாகும்.
“பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள், ஒரு அரசின்கீழ் வாழும் தேசிய இன மக்களை (அவர்கள் அந்த அரசுடன் வாழ விரும்பும் காலம்வரை) பெரும்பான்மையினரின் மொழியைக் கற்றுக்கொள்ள எப்போதும் நிர்ப்பந்திக்கும். ரஷ்யாவில் அரசியல் அமைப்பு மேலும் ஜனநாயகத்தன்மை அடையும் போது, மேலும் வலிமையாக, விரைவாக, தீவிரமாக முதலாளித்துவம் வளரும், இது மேலும் அவசரமாக, பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள் காரணமாக. பல்வேறு தேசிய இனங்களை, பொது வர்த்தக உறவுகளுக்காக ருஷ்ய மொழியை மிகவும் இசைவுடன் கற்றுக்கொள்ளத் தூண்டும்” (பக்கம் – 86)

மொத்தத்தில் இந்த நூல் மொழியை முன்வைத்து எழுதப்பட்டாலும், மார்க்சிய அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள விரும்பும், அரசியல் போராளிகள், இன்றைய, நாளைய அதாவது எதிர்காலத்திய போக்குகளை அறிந்து கொள்வதற்கு இந்நூலை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். 

No comments:

Post a Comment