டேவிட் ஹார்வி
தமிழில்: இலக்குவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
பக்:
496, விலை: ரூ. 300/-
நூல் விமர்சனம்
“மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள்
தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிட்டுள்ளது.
தமிழில் வெளிவந்து
சுமார் இருபது நாட்களுக்குள் "தீக்கதிரில்" தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் விமர்சனம்
எழுதியிருக்கிறார்.
அந்த விமர்சன இறுதியில்:-
".. மீண்டும் முதல்
அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதியவெளிச்சத்தில்
மூலதனத்தைப் புரிய முடியும் என் கிறார் ஹார்வி. மெய்தான்.. ஆம் அப்போதுதான்
அவர் விரும்பியது போல் நாம் சொந்தமாகப்படித்து சொந்த மான கருத்துக்கு வர இயலும்.
அதற்கு வழிகாட்டுவது தான் இந்நூல்.
உலகம் இடைவிடாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து மாறிக்கொண்டே
இருப்பதால் அறுதியான, முழுநிறைவான, துல்லியமான புரிதல் என்பது இருக்கவே முடியாது. எனவே மீண்டும் மீண்டும் மூலதனம் நூலை வாசிப்பதன் மூலமே புத்தொளி பெற முடியும்." என்று முடிக்கின்றார்.
உலகம்
மாறிக் கொண்டே இருப்பதால், மூலதன நூலை படிப்பதில் துல்லியமான புரிதல் இருக்க
முடியாது என்கிறார் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம்.
இந்தக் கூற்றை எப்படி புரிந்து கொள்வது என்பது இன்றைய "மூலதன" வாசிப்பில்
உள்ள புதுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
உலகம்
மாற்றம் பெரும் போது “மூலதன” நூலில் மார்க்ஸ் எழுதியதின் நோக்கமும் அர்த்தமும் மாறிவிடுமா என்ன?.
அறுதியான, முழுநிறைவான புரிதலுக்கு
வரமுடியாது என்பது ஒரு வகையில் உண்மையே. பொருளாதாரம் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு
“அரசியல்” பொருளாதாரம் தான். அதாவது
"பொருளாதார" விளக்கத்தில் அரசியல்
சார்பு இருக்கிறது. மார்க்சின் “மூலதன” நூல் முதலாளித்துவ உற்பத்தி முறையை,
பாட்டாளி வார்க்க பார்வையில் எழுதப்பட்டுள்ளது.
முதலாளித்துவ கண்ணோட்டத்தில்
இந்நூலை வாசிப்பதற்கும், பாட்டாளி வார்கக் கண்ணோட்டத்தில் வாசிப்பதற்கும்
வேறுபாடு உண்டு, வாசிப்பில் இரண்டு கண்ணோட்டங்கள் இருப்பதால்,
அறுதியான, முழுநிறைவான வாசிப்பாக இருக்க முடியாது
என்பது உண்மையே.
டேவிட் ஹார்வி "மூலதன" நூலை எந்தக் கண்ணோட்டத்தில் விளக்குகிறார் என்பதை
பார்ப்போம்.
இந்நூலுக்கு தோழர்
என்.குணசேகரன் அவர்கள் "வர்க்க வல்லமையை உருவாக்கிடும் வாசிப்பு" என்ற
தலைப்பில் பதிப்புரை எழுதியுள்ளார். அதில் "ஒரு இடதுசாரி மாற்று எனும் பார்வை, "வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" உள்ளிட்ட இன்றைய
முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்களுக்கு தேவை." என்று எழுதியிருக்கிறார். இங்கு, தோழர்
என்.குணசேகரன் இடதுசாரி பார்வையை, வால்ஸ்ட்ரீட்
போராட்டம் போன்ற முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது
பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், டேவிட் ஹார்வி
இந்நூலில் வால்ஸ்டிரீட்டில் போராட்டத்தை, வளர்ச்சிக்கு எதிரான
கருத்தாக பதிவுசெய்துள்ளார், மற்றும் எதிர்ப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்
என்றும் கூறியிருக்கிறார். (பக்கம் 298) இது நூலுக்கும் நூலுக்கான பதிப்புரைக்கும் இடையேயான அடிப்படைக் கருத்தில் முரணைக்காட்டுகிறது.
டேவிட் ஹார்வி தமது
அறிமுகத்தில் மூலதன நூலை மார்க்சின் சொந்த விதிமுறைகளின்படியே படிக்க வேண்டும் என்பதே
தமது நோக்கம் என்று எழுதியுள்ளார். இந்த விதிமுறைப்படி டேவிட் ஹார்வி தமது நூலைப்
படைத்துள்ளாரா? என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.
ஏன் என்றால் டேவிட்
ஹார்வி இப்படைப்பில், பெரும்பாலன இடங்களில் மார்க்சை கேள்விக்குள்ளாக்குகிறார்.
அக்கேள்விகள் அனைத்தும் மார்க்ஸ் வழிகாட்டுதலின் தொடர்ச்சியாக இல்லாமல்,
மார்க்சிய அடிப்படைகளை சந்தேகிக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
முதலில் டேவிட் ஹார்வி கேள்விக்குள்ளாக்குவதை தொகுப்போம்:-
"மார்க்ஸ் இவ்வாறுதான் கருதினாரென்றால்
அவர் கூறுவது தவறு என்று நான் நினைக்கிறேன்." (பக்கம் 120)
“இங்கே மார்க்ஸ் எடுக்கும் நிலைபாடும் (அது குறித்து
எனது புரிதலும்கூட) சர்ச்சைக்கிடமானது. அந்நிலைபாடு குறித்து வினா எழுப்புவதற்கான
ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. (பக்கம் 175)
" ….. மால்தூசை மார்க்சினால் பின்பற்ற முடியவில்லை
என்பதால் மார்தூசிடமிருந்து தான் இந்த அளவுக்கு உத்வேகம் பெற்றதாக டார்வின் குறிப்பிடுவதை
மார்க்சினால் ஜீரணிக்க முடியவில்லை. (பக்கம் 284)
“இக்காலங்களில் "மூலதனம்" இரண்டாம்
தொகுதியின் பகுப்பாய்வு ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. அதே நேரத்தில் முதல் தொகுதியின் முடிவுகள் சற்று நம்ப முடியாதவையாக இருந்தன.” (பக்கம் 415)
“லாப விகித வீழ்ச்சி பற்றிய கருத்து மார்க்ஸ் குறிப்பிட்டுக்
கூறும் விதத்தில் செயல்படுவதில்லை என்பது எனது கருதது. (பக்கம் 469)
இதுபோன்ற கேள்விகளை கேட்ப்பதை
பார்க்கும் போது, டேவிட் ஹார்வி, தமது அறிமுகத்தில் மார்க்சின்
சொந்த விதிமுறைகளின்படியே படிக்க வேண்டும் என்பது தமது நோக்கம், என்று கூறிய முறையை பின்பற்றப்படவில்லை.
இதனை மறைக்காமல் டேவிட் ஹார்வி கூறுகிறார்:-
“மார்க்சின் முடிவுகள் எல்லாம்
அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுக்கள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற
ஆய்வு முடிவுகள், இதனை நாம் மறந்தோம் எனில் அது நமக்குப் பாதகமாகவே
முடியும்.” பக்கம் 356
“..
இதிலெல்லாம் மார்க்சின் வழியிலே- - - - அவரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டிய தேவை இல்லை”. பக்கம் 248
மார்க்சின் முடிவுகள் அனைத்து
நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுக்கள் அல்ல, மற்றும் மார்க்சின் வழியிலே பின்தொடர்ந்து செல்ல
வேண்டிய தேவையும் இல்லை என்று தமது கருத்தை வெளிப்படையாக கூறுயுள்ளார்.
இவ்வளவுக் கேள்விக் கணையை டேவிட்
ஹார்வி வெளிப்படுத்துவது எதற்கு என்றால், மார்க்ஸ்
கண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்புகோட்பாடு
என்ற இரண்டையும் மறுதலிப்பதற்காகவே ஆகும்.
சமூகப் பொருளாதார அடித்தளமே; தத்துவம், மதம்,
அரசியல், சட்டம், பண்பாடு
போன்ற மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும்
இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இத்தொடர்பில் அடித்தளம்
முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது.
மேற்கட்டமைப்பு அடித்தளத்துக்கு கட்டுப்பட்டு தனித்த முறையில் அடித்தளத்தின்
மீது தாக்கத்தை செலுத்துகிறது. இதுவே மார்க்சியம் கூறும் வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் ஆகும்.
அடித்தளம் தான் தீர்மானிக்கும் என்றால், சமூக
வாழ்நிலையே, சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்று பொருள்.
இது பொருள்முதல்வாதம்.
மேற்கட்டமைப்பு தீர்மானிக்கிறது என்றால், சமூக உணர்வே, சமூக வாழ்நிலையை
நிர்ணயிக்கிறது என்று பொருள்.
இது கருத்துமுதல்வாதம்.
இவ்விரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அடித்தளமும் மேற்கட்டமைப்பும்
பரஸ்பர வினைபுரிகிறது என்று பொருள். இது தத்துவத்தில் பொருள்முதல்வாதத்துககும் கருத்துமுதல்வாதத்துககும்
இடை போக்காக்க கருதப்படுகிறது. ஆனால் தத்துவத்தில் மூன்றாம் போக்கு என்பது கிடையாது.
விவேகானந்தர் போன்றோர் தனது கருத்துமுதல்வாத சிந்தனையை மறுப்பதற்கு
இந்த நடுப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகவே கூறுகின்றனர்.
நடுப்பாதையை நாம் அடைய முடியுமா? முடியும்.
ஆனால் அது இன்று அல்ல. தனிசொத்துடைமை ஒழிந்த சமூகத்தில்,
வர்க்கம் மறைந்த கம்யூனிச சமூகத்தில், நினைப்பதுவும்
நடப்பதுவும் ஒன்றாகவே இருக்கும் அந்த நேரத்தில் தான் அடித்தளமும் மேற்கட்டமைப்பும்
பரஸ்பர வினைபுரியும்.
வர்க்க சமூகத்தில் பரஸ்பர வினைபுரிதல் என்பது மேற்கட்டமைப்புக்கு
முதன்மை தருவதிலே போய் முடியும்.
டேவிட் ஹார்வியும் இறுதியில் மேற்கட்டமைப்பையே முன்நிறுத்துகிறார். (பக்கம்
295/296)
வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
பற்றி டேவிட் ஹார்வி எழுப்பும் கேள்வியினைப் பார்ப்போம்:-
"நூலின் இப்பகுதியில்தான் ஏற்கெனவே தெரிவித்து வந்த பொது உண்மைகளை
மார்க்ஸ் எளிதாக மறந்துவிட்டார் அல்லது அவர் நடைமுறையில் மூளைக்கோளாறு உள்ளவராக ஆகிவிட்டார்
என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இரண்டு விதமான மார்க்சியங்கள் உள்ளனவாம் ஒன்று
இந்தப் பகுதியை எழுதிய மார்க்சின் சிந்தனை, அதாவது
சிந்தனைகளும் மனச்செயல்பாடுகளும் சுதந்திரமாகச் செயல்படுவதை அனுமதித்த மார்க்சின் சிந்தனை, இதற்கு மாறாக உணர்பவையையும் நாம்
சிந்திப்பதையும் செயல்படுவதையும் நமது பொருளாயத சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன என்று
உண்மையில் உறுதியாகக் கருதும் மற்றொரு மார்க்ஸ். இவ்வாறு சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையவையல்ல என்று நான் கருதுகிறேன்." பக்கம் 171-172
"எது எப்படியாயினும் அரசியல் மற்றும்
சட்ட மேற்கட்டுமானங்களில் பிரதிநிதித்துவமோ தெரிவிப்போ இல்லாமல் உற்பத்திச் சக்திகளும்
சமூக உறவுகளும் ஜீவிக்க முடியாது." பக்கம் 296
மார்க்ஸ், தமது வரலாற்றியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறையை விவரிக்கும் அத்தியாயத்தை, விளக்கும் போது மார்க்சின் அடித்தளம்
மேற்றகட்டமைப்பு பற்றிய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் டேவிட் ஹார்வியின் துணிச்சலை
குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த துணிச்சலை நூல் முழுவதிலும்
பார்க்க முடிகிறது.
"சமூக உறவுகளின் பரிணாமவளர்ச்சி. மனக் கருத்துருவாக்கங்கள்,
இயற்கையுடனான உறவு போன்றவை உள்ளிட்ட மனித குல வரலாற்றுப் பாதையைத் தீர்மானிப்பது
உற்பத்தி சக்திகள் தான் என்று அதற்கே முதன்மைப் பாத்திரத்தை அளிக்கும் ஒரு தொழில்நுட்பவியல்வாதியாக
நண்பர்களாலும் எதிரிகளாலும் மார்க்ஸ் பல நேரங்களில் சித்திரிக்கப்பட்டு வருகிறார்"
பக்கம் 286
உழைப்பு நிகழ்முறையே
சமூக வளர்ச்சி நிகழ்முறையாக மார்க்ஸ் கூறுகிறார்:-
"உழைப்பு நிகழ்முறையின் மூல காரணிகள் வருமாறு: 1,மனிதனின்
நேரடிச் செயற்பாடு, அதாவது வேலை. 2, அந்த
வேலைக்கு உள்ளாகிற குறிப்பொருள். 3, அதற்கான சாதனங்கள்."
மூலதனம் I (தமிழ்) பக்கம்245-246
Karl Marx:-
"The
elementary factors of the labour-process are 1, the personal activity of man, i.e.,
work itself, 2, the subject of that work, and 3, its instruments." capital
I (English)
மார்க்சின் "மூலதன"த்தை நேரடியாக வாசித்த மார்க்சியவாதிகளுக்கு டேவிட் ஹார்வியின் பாணியிலான விளக்கங்கள்
நெருடலை ஏற்படுத்தாமல் இருக்காது. இதனைக் கருத்தில் கொண்டு டேவிட் ஹார்வி கூறுகிறார்:
"இங்கே மார்க்ஸ் எடுக்கும் நிலைபாடும் (அது குறித்து எனது
புரிதலும்கூட) சர்ச்சைக்கிடமானது. அந்நிலைபாடு குறித்து வினா எழுப்புவதற்கான
ஏராளமான வாய்ப்புகள் உள்ளன." பக்கம் 175
டேவிட் ஹார்வியின் துணிச்சலையும், அவர்
ஏற்படுத்திவரும் சர்ச்கைகளையும் தொகுத்துக் கொண்டிருப்பதைவிட மார்க்ஸ் சமூகவளர்ச்சியைப்
பற்றி கூறியவற்றை தெரிந்து, புரிந்து களத்தில் செயல்படுவோம்.
அடுத்து, உபரி மதிப்பு
கோட்பாட்டைப் பற்றி டேவிட் ஹார்வி எழுப்பும் கேள்வியினைப் பார்ப்போம்:-
"16ம் அத்தியாயத்தில் (அறுதி உபரி மதிப்பும் மற்றும் ஒப்பீட்டு உபரி
மதிப்பும்) காணப்படும் புதிய பார்வை சர்ச்சைக்கிடமானது என்பதையும்
விட சற்றுக் கூடுதலானது. " பக்கம்
347
,,பயன்திறனுள்ள தேவை குறித்த இப்பகுதி
சிலவிதங்களில் பிரச்சனை நிரம்பியதாக உள்ளது. இக்கருத்து தொடர்பாக ரோசா லக்சம்பர்க், மார்க்சுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய
ஒரு சவாலை விடுக்கிறார்.
.. ... .. ..
எனவே பயன் திறனுள்ள தேவை தொடர்பான
இந்தக் கருத்துக்கள் உபரிமதிப்பு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து
விளக்க முடியாது". பக்கம் 144-145
இவ்வாறு மார்க்சின் உபரிமதிப்பை ரோசா லக்சம்பர்க்கை துணைக்கழைத்து கேள்விக்குள்ளாக்குகிறார்
டேவிட் ஹார்வி.
முதலாளித்துவத்தின் சுரண்டலையும் அதனால் எழுகின்ற வர்க்கப் போராட்டத்தையும் உபரிமதிப்பு கோட்பாடும், வரலாற்றியல்
பொருள்முதல்வாதத் தத்துவமும் புரியவைத்திடுகிறது, அதானல் தான் மார்க்சியத்தின் எதிரிகள் அடிப்படையான இவ்விரண்டையும் குழப்புவதற்கு
முயற்சிக்கின்றார்.
டேவிட் ஹார்வியின் வர்க்கப் போராட்ட
பார்வையைப் பற்றி பார்ப்போம்.
வர்க்கப் போராட்டம் என்பது நியாயமான உழைப்புக்கு ஒரு நியாயமான
கூலியைப் பற்றிய போராட்டம் என்பது மட்டுமே, முதலாளி வர்க்கத்தைத் தூக்கி எறிவது பற்றியும்,
வாக்க உறவுகள் அகற்றுவது பற்றியும் எல்லாம் பேசக்கூடாது என்கிறார்.
வர்க்கப் போராட்டம் என்பது மூலதனம் உழைப்பாளர் பற்றிய உறவுகளின் சமநிலைப்படுத்துவது
என்றே பொருள் கொள்கிறார். இங்கு முதலாளி என்று கூறமாட்டார் டேவிட்
ஹார்வி, மூலதனம்தான் முதலாளியை
இயக்குகிறது. முதலாளித்துவ சுரண்டலுக்கு மூலதனமே பொருப்பாக வேண்டும் முதலாளி
நினைப்பது எல்லாம் மூலதனத்துக்கு முன் ஒன்றும் செய்ய முடியாது என்பதே டேவிட் ஹார்வியின்
கருத்து. வர்க்கப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தை தூக்கி
எறிவதற்காக அல்ல, முதலாளித்துவத்தை நிலைப்படுத்துவதற்கே என்கிறார்.
அதுமட்டுமல்ல, வர்க்கப்
போராட்டம் என்பது முதலாளியும் தொழிலாளர்களும், உற்பத்தியில் ஈடுபடும்
போது ஏற்படுகின்ற “தொழில்தகராறு” என்பது போல் பேசுகிறார். முதலாளித்துவ
உற்பத்திமுறையில் உள்ள சுரண்டல் தன்மையால் வர்க்கப் போராட்டம் ஏற்படுகிறது என்ற உண்மையை
டேவிட் ஹார்வி மறைக்கிறார்.
டேவிட் ஹார்வி:-
மார்க்ஸ் வெளிப்படையாக அறியப்பட்ட
ஒரு புரட்சிகர சிந்தனையாளர் என்பதால் இத்தகைய முடிவுக்கு வருவது கடினமானது. பரிவர்த்தனை
விதிகளின் அடிப்படையிலேயே மூலதனமும் உழைப்பும் தங்கள் உரிமைகளை நோக்கிப் பயணிக்கின்றன
என்ற ஆரம்பகட்ட அனுமானத்துடன் மார்க்ஸ் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஏற்படக்கூடிய ஒரே விளைவு யாதெனில்
ஒரு நியாயமான உழைப்பு நாளுக்கு ஒரு நியாயமான கூலி என்ற மிதமான மகா சாசனமே என்பதைக்
குறிப்பிட வேண்டும். இங்கே முதலாளி வர்க்கத்தைத் தூக்கி
எறிவது பற்றியோ அல்லது வர்க்க உறவுகளை அகற்றுவதைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வர்க்கப் போராட்டம் என்பது மூலதன உழைப்பாளர் உறவுகளை வெறுமனே சமநிலைப்படுத்துகிறது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தொடர்ந்து இருப்பதற்கான ஒரு சாதகமான
சக்தியாகக் கூட முதலாளித்துவ விசை இயக்கவியலின் உள்ளார்ந்த அம்சமாக வர்க்கப் பேராட்டத்தையும்
ஆக்க முடியும். வர்க்கப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது
என்பதுடன் சமூக வழியில் அவசியமானது என்ற பொருளை இது அளித்தாலும் முதலாளித்துவத்தைப்
புரட்சிகரமான முறையில் தூக்கி எறிவதற்கான வாய்ப்புகளைப் பற்றி மிகச் சிறிய வெளிச்சத்தையே
இது வழங்குகிறது. பக்கம் 236/237
முதலாளித்துவத்தை நிலைநிறுத்த
போராடும் டேவிட் ஹார்வி, சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்பதை மறுப்பதில் எந்த ஆச்சரியமும்
இல்லை. மறுப்பது என்பது அவரது தனிப்பட்ட உரிமை, அது மட்டுமல்ல சோஷலிசப் புரட்சி என்பது கூடுதலான கற்பனை என்று செல்வதுகூட அவரது தனிப்பட்ட உரிமையே.
உரிமையோடு அவர் சொன்னதை முதலில் பார்ப்போம்.
"சரக்குகளின் மாய்மாலத்துக்கு அப்பாலும் நாம் முன்னேறி கூட்டுச்
சமுதாயத்தை அமைக்க முயல்வதன் மூலம் வேறு விதமான உறவினை ஏற்படுத்த முடியும் என்ற தனது
நம்பிக்கையை மார்க்ஸ் வெளிப்படுத்துகிறார். இது சாத்தியமானதா
அல்லது சாத்தியமற்றதா என்பது மார்க்சின் மாணவர்கள் பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும்.
ஆனால் இங்கே சோஷலிச எதிர்காலம் பற்றிய மார்க்சின் தொலை நோக்குப்பார்வையின் ஒரு
கணநேரக்காட்சி "மூலதனம்" நூலில் நாம் காணும் அரிய தருணங்களில்
ஒன்றாகும்." பக்கம்76
அதே நேரத்தில் வேறு விதமான அறிவார்ந்த மற்றொரு வித பொருளுற்பத்தி
முறைக்கு இடமளித்துவிட்டு முதலாளித்துவம் அகன்றுவிட வேண்டும் என்று "கிரண்ட்ரிசே"
நூலில் மார்க்ஸ் தெரிவிக்கும் ஆலோசனை முற்றிலும் நிச்சயமான நிகழ்வாக
இல்லாவிட்டாலும் கூடுதலான அளவில் கற்பனை செய்து பார்க்கக் கூடியதே.” பக்கம் 381
கீழ்நிலை உற்பத்தி முறையிலிருந்து மேல்நிலையான உற்பத்திமுறைக்கு மாறுகின்ற, சமூக வளர்ச்சியின்
விதியை மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்திலிருந்தே நமக்கு அளிக்கிறார்.
மார்க்ஸ் கூறும் சமூக வளர்ச்சியின் விதிமுறையை டேவிட் ஹார்வி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் சோஷலிச மாற்றம் அவருக்கு
சாத்தியமா? சாத்தியமற்றதா? என்ற
கேள்வியை எழுப்புகிறார். மார்க்சிய மாணவர்கள் இதனை மீண்டும் மீண்டும்
பரிசீலித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
முதலாளித்துவம் தூக்கி எறியப்பட்டு சோஷலிசப் புரட்சி நடைபெறும் என்று மார்க்ஸ்
கூறியதை, கற்பனை
என்றும், சோஷலிச புரட்சி நடைபெறுவதற்கான பொருளாதாரக் காரணங்களை
வெறும் அலங்கார வார்த்தைகள் என்றும் டேவிட் ஹார்வி கூறுகிறார். இவைகளே மூலதன வாசிப்பில் டேவிட் ஹார்விக்கு ஏற்பட்ட புத்தொளியாக இருந்துவிட்டு
போகட்டும், ஆனால் “மூலதன” நூலில் கம்யூனிசப் புரட்சி
உருவாவது பற்றியும், கம்யூனிச சமூகத்தைப் பற்றியும் அதிகம் பேசவில்லை என்று கூறுவது
பெரும் அவதூராகும்.
டேவிட் ஹார்வி:-
“முதலாளித்துவத்தின் அறிவியல் ரீதியான புரிதலுக்கான பல விளக்கங்களை
அளிக்கும் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி அதிகம்
பேசவில்லை என்பதை நாம் காணவிரும்புகிறோம். அது மட்டுமின்றி ஒரு கம்யூனிச சமுதாயம் எவ்வாறு
தோற்றமளிக்கும் என்பதைப் பற்றியும் மூலதன நூலில் அதிகம் காண முடியாது.” பக்கம் 19
முதலாளித்துவத்துக்கு சாவு மணி அடிப்பது பற்றியும் சோஷலிசப் புரட்சியை எட்டுவது
குறித்தும், மார்க்ஸ்
“மூலதன” முதல் தொகுதியிலேயே
பகுதி 8ல், ஆதி திரட்சி (அத்தியாயம்
32, முதலாளித்துவத் திரட்டலின் வரலாற்று வழிப்பட்ட போக்கு), பற்றி எழுதும்போது விவரித்துள்ளார்.
மூலதனத் திரட்டல் என்பது எவ்வாறு கம்யூனிச சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது
என்பது இப்பகுதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மார்க்ஸ்:-
"மூலதனத்தின்
ஏக போகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த
பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில்,
உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து
செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகி
விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது.
முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது." மூலதனம்I (தமிழ்
என்.சி.பி.எச்)பக்கம் 1026-1027
இந்த அத்தியாயத்தில் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசமூகத்துக்கு மாறுவதைப் பற்றி
பேசுகின்ற வாசகங்கள் டேவிட் ஹார்விக்கு அலங்கார நடையை ஒத்ததாகப்படுகிறது. ஆனால் பாட்டாளி
வர்க்கத்துக்கோ மார்க்சின் இந்தப் பகுதி சோஷலிச புரட்சிக்கான புரிதலை தருகிறது.
சமூகத்தின் இடையில் தோன்றிய முதலாளித்துவத்துக்கு முடிவுகாலம் உண்டு
என்பதையும், அதன் தொடர்ச்சியாக சோஷலிச சமூகத்தை எட்டும் வழிமுறையையும்
தெளிவுபடுத்துகிறது.
இது மட்டுமல்ல ஆச்சரியப்படும் படியான அளவுக்கு கம்யுனிச சமூகத்தைப் பற்றி மார்க்ஸ்எழுதியிருக்கிறார்.
மூலதன நூலின் மூன்று தொகுதிகளில் இருந்து கீழ்கண்ட வகையில் கம்யூனிச
சமூகத்தின் தோற்றத்தை தொகுத்து புரிந்து கொள்ளலாம்.
மூலதனம் I
கம்யூனிச சமூகத்தில் உழைப்பின் நிலைமைகளும் ஒழுங்கமைப்பும்
கம்யூனிசமும் தனி மனித வளர்ச்சியும்
மூலதனம் II
சமூக மயமாக்கப்பட்ட கம்யூனிச பொருளுற்பத்தியில் உழைப்புச் சக்தி, உற்பத்திச் சாதனங்கள்
இவற்றின் வினியோகம்
கம்யூனிச சமூகத்தில் மறுவுற்பத்தி
கம்யூனிச சமூகத்தில் பொருளுற்பத்தி திட்டமிடப்படுதல்
மூலதனம் III
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாமையே கம்யூனிச உற்பத்தி முறையின்
நிறுவுதலுக்கு இட்டுச் செல்கிறது
உற்பத்தியில் சமூகக் கட்டுப்பாடும் முறைப் படுத்தல் கம்யூனிச உற்பத்தி முறையின்
கீழ்தான் சாத்தியம்
கம்யூனிச உற்பத்தி முறையும் உபரி உழைப்பும்
கம்யூனிச உற்பத்தி முறையின்கீழ் சமூக உற்பத்திப் பொருளின் பங்கீடு
இதுபோன்று, கம்யூனிச
சமூகத்தைப் பற்றிய கருத்துக்கள் “மூலதன” நூலில்
(மூன்று தொகுதிகளிலும்) பலவாறு கொட்டிக்கிடக்கிறது.
முதலாளித்துவத்தின் முடிவையும் கம்யூனிச சமூகத்தின், தோற்றத்தையும்
எந்த சக்தியாலும் தடுத்திட முடியாது என்பதை மார்க்சின் “மூலதன”த்தின் மூன்று தொகுதிகளும் நமக்கு
புரியவைத்திடுகிறது.
மொத்தத்தில் டேவிட் ஹார்வி எழுதிய நூல் பாட்டாளி வாக்க நலன்களின்
அடைப்படையில் எழுதப்படவில்லை. முதலாளித்துவம் நிலைத்திருக்க வேண்டும் என்ற
அவரது கண்ணோட்டத்துக்கு எற்ப மார்க்சின் “மூலதனம்” நூலை பயன்படுத்திக் கொள்கிறார். அதாவது பாட்டாளி
வாக்க விடிவை வெளிப்படுத்தும் "மூலதன"நூலென்னும் ஆயுதத்தைக் கொண்டு பாட்டாளிகளை நிராயுதப்பாணியாக்க முயற்சிக்கிறார்.
பாட்டாளி வர்க்கத்தின் கைகளைக் கொண்டே அவர்களின் கண்களைக் குத்த முயற்சிக்கிறார்.
டேவிட் ஹார்வி எழுதிய இந்நூல் பாட்டாளி வர்க்கத்துக்கு வல்லமை சேர்க்காது என்பது
திண்ணம்.
சிதைக்கும் இந்தப் போக்கு அதிகநாள் நீடிக்காது. விழிப்புற்ற
பாட்டாளிகளும் விழிப்படைந்துவருகிற
பாட்டாளிகளும் இந்த நச்சு வலையில் சிக்கமாட்டார்கள். பாட்டாளி
வர்கத்தில் காணப்படும் நிலப்பிரபுத்துவ தொழிலாளிகளும், அவர்களுக்கான
அறிவுத்துறையினரும் டேவிட் ஹார்வியின் வர்க்கச் சிதைவு சித்தாந்தத்தில் அகப்படுவர்.
டேவிட் ஹார்வி போன்ற சித்தாந்த சிதரல் வேலை செய்பவர்கள், காலந்தோறும்
மார்க்சியத்துக்கு எதிராக உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தோன்றுகிற போதே அவர்களை சரியாக இனம்கண்டு விமர்சிக்க வேண்டும்.
புரட்சிகர பாட்டாளிகளிடம் காணப்படும் புரட்சிகரத் தன்மையை தக்கவைப்பதற்கும்
அதனை வளர்ப்பதற்கும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்கள்
வலியுறுத்தய மார்க்சியத்தின் அடிப்படைகளைக் காப்பதும், உயர்த்திப்
பிடிப்பதும் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகச் சிறந்த விமர்சனம். தெளிவாக புத்தகத்தை பற்றிய முழுச் சித்திரத்தை கொடுக்கிறது. எப்படியெல்லாம் மார்க்சியத்தினை சிதைப்பதற்கு மார்க்சின் பெயராலேயே கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கண்டித்து ஒதுக்க வேண்டும். மார்க்சியத்துக்கு மூடுவிழா நடத்த துடிக்கும் இவர்களுகளின் முயற்சிக்கு சாவுமணி அடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதுபோல் சதி செய்து வரலாற்றை திருப்பிவிட முடியும் என்று கனவு காண்பவர்கள் உலகம் முழுவது முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை முறியடிப்பதற்கு மார்க்சிய லெனினியத்தை ஏற்பவர்கள் ஒன்றுபட அறைகூவல் விடுவோம், ஒரு சமூக மாற்றத்திற்கான தொடக்கத்தினை ஏற்படுத்திடுவோம்.
ReplyDeleteமார்க்சிய லெனினியம் நீடூழி வாழ்க!
தங்களுடைய டேவிட் ஹார்வியின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான விமர்சனக் கட்டுரையைப் படித்துவிட்டேன். மார்க்சியத்தை உறுதியாக
ReplyDeleteநம்புபவர்கள், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான ஆயுதம் அது என்ற உணர்வோடும், நம்பிக்கையோடும், லட்சியத்தோடும் கூடியவர்கள் அத்த
கைய புத்தகங்களை படிக்கிறார்கள், அதற்கான விமர்சனங்களை கொடுக்கிறார்கள் என்பது தான் அக்கட்டுரைக்கான முக்கியத்துவம்.
நூலைப் படிக்காமல் விமர்சனத்தை மட்டும் படிப்பதால், விமர்சன ஆசிரியரின் பார்வையில் தான் மூலநூலைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது
மார்க்சின் விசயத்தில் ஹார்வியின் புத்தகத்திற்கு பொருந்தும், ஹார்வியின் விசயத்தில் உங்களுடைய கட்டுரைக்குப் பொருந்தும். ஆனால்
உங்களுடைய நேர்மை ஹார்வியிடம் இல்லை. நீங்கள் விமர்சனம் என்று சொல்லிவிட்டுச் செய்வதை ஹார்வி “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு
வழிகாட்டி” எனச் சொல்லி செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
தங்களை மார்க்சியவாதிகள் என்றும் தங்களுடைய கட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சொல்லிக் கொள்பவர்கள் எப்படி இந்தப்
புத்தகத்தை எத்தகைய விமர்சனரீதியான முன் குறிப்பும் இன்றி வெளியிடுகிறார்கள் என்பதைத்தான் தங்களுடைய கட்டுரை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறது.
தற்பொழுது புத்தக நிறுவனங்கள் முழுவதும் வியாபார ரீதியாக விற்கச் சாத்தியமான அனைத்தையும் விற்பதற்கு தயாராகிவிட்டன. அநேகமாக
டேவிட் ஹார்வி என்ற ஆங்கிலப் பெயரும் “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற புத்தகத் தலைப்பும் மட்டுமே போதும் அதன்
விற்பனை உத்திரவாதத்துக்கு என்று பாரதி புத்தகாலயம் முடிவு செய்திருக்கக் கூடும்.
ஒரு முறை ஒரு தோழருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார். என்சிபிஎச் தலைமை நிர்வாகியிடம் ஒரு நேர்காணலுக்கு
போயிருந்தாராம். அதில் அவர் கேட்ட கேள்வி ஒட்டு மொத்த சூழலையும் தர்ம சங்கடமாக்கிவிட்டதாம். அந்தத தோழர் கேட்ட கேள்வி, "முன்பு
தெருவில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த புத்தகங்களெல்லாம் தற்பொழுது என்சிபிஎச்சின் தயாரிப்பில் வெளிவருகிறது, முன்பு என்சிபிஎச்சின்
தயாரிப்பில் வெளிவந்த புத்தகங்களெல்லாம் இன்றைக்கு தெருவில் விற்கப்படுகிறது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?" என்று நேரடியாக த
லையிலடித்தாற்ப்போல கேட்டாராம்.
நன்கு சிரித்துக் கொண்டே வழக்கம் போல சாஸ்தோத்ரமான கேள்விகளோடு சென்று கொண்டிருந்த ஒரு நேர்காணலில், சற்றும் எதிர்பாராத ஒரு நொடியில் குண்டைத் தூக்கி
மடியில் வீசியதைப் போல் வந்த இந்தத் தடாலடிக் கேள்வியால் வாயடைத்துப் போன அந்த நிர்வாகி, தன்னைச் சுற்றியிருந்த சகலரையும் ஒரு
சில நொடிகள் சுற்றிச்சுற்றிப் பார்த்துவிட்டு, நீண்ட யோசனைக்குப் பிறகு, "இவ்வளவு பெரிய நிறுவனம், எவ்வளவு ஊழியர்கள் வேலை
செய்கிறார்கள், வேறு என்ன செய்வது?" என்று பதிலை கேள்வியாக்கி மையமாகக் கேட்டாராம்.
ஒரு புத்தக நிறுவனத்திற்கே இந்த கதியென்றால், அவ்வளவு பெரிய தொழிற்சங்கங்களை என்ன செய்வது? அவ்வளவு பெரிய கட்சியை என்ன
செய்வது? இப்படியாக விடைகிடைக்காத கேள்விகள் அனைத்துக்குமான விடையையும் இந்தப் புள்ளியிலிருந்து புரிந்து கொள்ளத் துவங்கலாம்.
இருக்கட்டும்.
நீங்கள் குறிப்பிட்டதைப் போல மார்க்சின் மூலதன நூலில் பொருளடக்கத்தைக்கூட - உள்ள கம்யூனிச உற்பத்தி முறை, சமூகம் பற்றிய -
படிக்காமலா ஹார்வி போன்றவர்கள் மார்க்ஸ் மூலதனத்தில் கம்யூனிசம் பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை என்று கூறுகிறார் என்பதை
ஆச்சரியத்தையும், பலமான சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
மூலதனத்தை படிப்பதற்கான உண்மையான ஒரு வழிகாட்டி நூல் தற்கால அடிப்படையில் வேண்டும் என்ற தேடலோடு இருந்த நான், இ
ணையத்தில் டேவிட் ஹார்வியின் "A Companion to Marx's Capital" என்ற புத்தகத்தை பார்த்த நாள் முதல் அவர் குறித்து
மேலதிகமான தகவல்களையும், அவருடைய நேரடி வகுப்புக்களின் காணொளிகளையும் யூடியூப் போன்றவற்றில் பார்க்க முயற்சித்தேன். பாரதி
புத்தகாலயம் அதனை தமிழில் கொண்டு வந்திருப்பது அறிந்து வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தங்களுடைய விமர்சனம் அந்த நூலை மிகக் கவனமான விமர்சனப் பார்வையோடு படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நன்றி.
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி என்ற புத்தகத்தில் டேவிட் ஹார்வி மூலதனப் புத்தகத்துக்கு வழிகாட்டுதல் என்ற போர்வையின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்தையும், அரசியல் திசைதிருப்பல் வேலையையும், மிகுந்த மன உறுதியுடனும், தன்னை மார்க்சிய நண்பனைப் போல் காட்டடிக் கொண்டு, மார்க்சிய ஆய்வுமுறைமைக்கும், சமூக வளர்ச்சியின் திசை வழிவந்தடைவோரை, தடுக்கும் நோக்குடனும், படிப்போரை மயக்கும் பரவலான முப்பது ஆண்டுகள் பயிற்சி மற்றும் படிப்பு அனுபவத்தோடும், (பழைமைப் பட்டுப் போனவற்றை மீண்டும் தூக்கி பிடித்து) வாசகனை மிரளவைத்து தனது நோக்கத்தை, (முதலாளித்துவ தாசர் தன்மையை) நிறைவேற்றிக் கொள்ள மிகுந்த பிரயத்தனப்பட்டு இருக்கின்றார்.
ReplyDeleteஒரு டேவிட் ஹார்வி அல்ல, ஒராயிரம் டேவிட் ஹார்வி உலகத்தில் கிளம்பி வந்தாலும், மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ அதன் அடிப்படையில் அமைந்த, வரலாற்று பொருள்முதல்வாத சமூக வரலாற்று வளர்ச்சியின், திசை வழியையோ, தடுத்து நிறுத்திவிட முடியாது, என்பதை உண்மை மார்க்சியவாதிகள் நன்கு புரிந்தே உள்ளனர்.
இடையில் வரும் மார்க்சிய விரோத ஜிகினாக்கள், சில காலம் மினுமினுக்கலாம். அவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படுவார்கள் என்பது திண்ணம்.
எனது முகநூலில் இருந்து:-
ReplyDeleteAanandha Gowthaman Eswaran Eswaran Akஅவர்களின் இந்த நூலை பற்றிய விமர்சனம் கூடுதலாக கவனிக்கப்படவேண்டியது . பௌத்தத்தை பார்ப்பனீயம் உடனிருந்து உடனுறங்கி கபளீகரம் செய்தது போல் சில ஆய்வறிஞர்கள் மார்க்சியத்தை பற்றி எழுதுகின்றார்கள் என்பது சரியான நேரத்தில் ஒலிக்கும் நல்ல எச்சரிக்கை மணி .
Ec Ramachandran Erode
தோழர் ஈஸ்வரனின் விமர்ச்சனம் கவனிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவர் குறிப்பிடுகிறபடி டேவிட் கார்வியை மூலதன நூலுக்கு எதிராக கொண்டுவந்து நிறுத்த முடியுமா ? என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் ஒரு மூலநூலின் வாசிப்பில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட கருத்துத் தோன்ற வாய்ப்புண்டு. அந்த மாறுபட்டக் கருத்து அந்நூலின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக்கூடியதாக இருக்கிறதா என்று பார்க்கப்பட வேண்டும். ஆனால் டேவிட் கார்வியிடமிருந்து தோழர் ஈஸ்வரன் சில வாக்கியங்களை மட்டும் எடுத்துவந்து விமச்சிக்கிறார்.அதாவது இவர்கள் இருவருக்குமான மாறுபட்ட வாசிப்புதான் அவரது கட்டுரையில் தெரிகிறது. உதரனமாக.“வரலறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாரே” என்று கம்யுனிஸட் கட்சி அறிக்கையி்ல் குறிப்பிடுவதை “வர்க்கங்களே இல்லாத மூன்று பழங்குடி இனங்களை மட்டுமே கொண்ட எங்கள் கினியோ பிசே நாட்டில் எப்படி மார்க்ஸியத்தைப் பயன்படுத்துவது” என்று அமில்கர் கப்ரால் கேள்வி எழுப்புகிறர் என்பதால் அவரை கம்யுனிஸ்ட் அறிக்கைக்கு எதிரானவர் என்று சொல்லிவிட முடியுமா? மூலதன நூலின் அடிப்படைக் கட்டமைப்புக்கே டேவிட் கார்வி எதிராக உள்ளார் என்பதை தோழர் ஈஸ்வரன் சொல்லும் பட்சத்தில் நாமும் அதை முழுமையாக படித்துவிட்டு விவாதிப்போம்.