Sunday 5 August 2012

டேவிட் ஹார்வி எழுதிய “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” நூல் வாசிப்பில் தேவைப்படும் எச்சரிக்கைகள்


டேவிட் ஹார்வி எழுதிய மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி (தமிழ்) என்ற நூலின் இரண்டாம் பதிப்பிற்கான விளம்பரம் வந்திருக்கிறது.

மார்க்சிய அணுகுமுறைக்கு மாறான வகையில் இந்நூல் அமைந்திருப்பதால், எச்சரிக்யோடு வாசிக்க வேண்டியிருக்கிறது.

"மூலதனத்"தில் மார்க்ஸ் புதிதாக சாதித்தவைகளை டேவிட் ஹார்வி சந்தேகித்து, சர்சையாக்க முயற்சிக்கிறார்.

"மூலதன"நூலை விளக்க முனைவதைவிட சிதைப்பதற்கே பெரும் முயற்சியை எடுத்துள்ளார். அதனால் இந்நூலை வாசிக்கும் போது ஏற்பட வேண்டிய எச்சரிக்கைகள்  முன்வைக்கப்படுகின்றன.


1,மூலதன நூலை மார்க்ஸ் வழியில் விளக்காமலும், தமது சொந்த வழியில் செல்வதற்கு ஒருங்கிணைந்த பார்வையினை வழங்காமலும், பின்நவீனத்துவ பாணியில் பன்னோக்கு பார்வையில் மூலதனத்தை வாசிக்கும் பாதையைத் திறந்துவிடுதல்:-

டேவிட் ஹார்வி:- "மார்க்சை அவரது வழியிலேயே வாசிக்க முயலுங்கள் என்று உங்களிடம் வலியுறுத்திக் கூறிக்கொண்டே நான் இந்த நூலைத் தொடங்கினேன். உங்களுக்கு வழிகாட்டுவதற்கான நான் எனது மனதில் உருவாக்கிக் கொண்ட வரைபடத்தில் மார்க்சின் வழி என்ன என்பததைப் பற்றிய எனது கருத்து முக்கிய பங்கு வகித்தது. என்னிடம் தான் சரியான திசைவழியும் சரியான வாசிப்பு முறையும் இருக்கிறது என்று உங்களை நம்பத் தூண்டவது எனது நோக்கமல்ல. நீங்களே உங்களுடைய சொந்தமான அர்த்தங்களையும் விளக்கங்களையும் உருவாக்கிக் கொள்வதற்கான பாதையை முதலில் திறந்து விடுவது எனது நோக்கமாக இருந்தது எனது வாசிப்பைப் பலரும் விவாதத்துக்குட்படுத்துவார்கள் என்பதை நான் அறிவேன். நீங்களும் கூட முழுமையாகவோ. பகுதியளவிலோ நான் கூறியுள்ளது குறித்துக் கேள்வி எழுப்பக்கூடும்." (பக்கம்  494/495)

ஆக, டேவிட் ஹார்வி மார்க்ஸ் விளக்கும் வகையிலும் செல்லவில்லை, தமது வழி தான் சரியான வாசிப்பு முறை இருக்கிறது என்று நம்பத் தூண்டவில்லை என்பதையும் வெளிப்படையாக அறிவித்துவிடுகிறார். மொத்தத்தில் டேவிட் ஹார்வி மூலதன வாசிப்பிற்கு எந்த வகையிலும் துணையாக (வழிகாட்டியாக) நிற்கவில்லை. மார்க்சின் ஒருங்கிணைந்த பார்வையை கேள்விக்குள்ளாக்கிவிட்டு, தாமும் உறுதியான தெளிவான வழியை காட்டாமல், வாசிப்பவர்கள் சொந்தமான விளக்கங்களை பெறுவதற்கான பாதையை திறந்து விடுவதையே நோக்கமாக இந்நூலை படைத்துள்ளார். மூலதன நூலை பன்னோக்கு பார்வையில் புரிந்து கொள்ள வழிகாட்டியிருக்கிறார்.

இவ்வகையான பின்நவீனத்துவ கண்ணோட்டத்தில் மூலதன நூலை வாசிக்கும்படியான நோக்கத்துக்கு துணைபுரிவதற்கே இந்நூலை படைத்துள்ளார் டேவிட் ஹார்வி. அதனால் தான் "வர்க்கப் போராட்டமே தீர்மானகரமான காரணி.. ..ஏற்புக்குரியவையல்ல" (பக்கம் 292)

டேவிட் ஹார்வி மார்க்சியத்துக்கு எதிரான பின்நவீனத்துவப் பாணியில் வர்க்கப் போராட்டத்தை பெருங்கதையாடலாக அறிமுகப்படுத்துகிறார். மொத்தத்தில் டேவிட் ஹார்வியின் நோக்கம் மூலதன நூலில் காணும் வர்க்கக் கண்ணோட்டத்தை சிதைப்பதேயாகும்.


2,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மறுத்தல்

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை டேவிட் ஹார்வி ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பொருள்முதல்வாததுக்கு எதிரான நிலையில் இந்நூல் அணுகப்பட்டிருக்கிறது.

டேவிட் ஹார்வி:-
"நூலின் இப்பகுதியில்தான் ஏற்கெனவே தெரிவித்து வந்த பொது உண்மைகளை மார்க்ஸ் எளிதாக மறந்துவிட்டார் அல்லது அவர் நடைமுறையில் மூளைக்கோளாறு உள்ளவராக ஆகிவிட்டார் என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இரண்டு விதமான மார்க்சியங்கள் உள்ளனவாம் ஒன்று இந்தப் பகுதியை எழுதிய மார்க்சின் சிந்தனை அதாவது சிந்தனைகளும் மனச்செயல்பாடுகளும் சுதந்திரமாகச் செயல்படுவதை அனுமதித்த மார்க்சின் சிந்தனை, இதற்கு மாறாக உணர்பவையையும் நாம் சிந்திப்பதையும் செயல்படுவதையும் நமது பொருளாயத சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன என்று உண்மையில் உறுதியாகக் கருதும் மற்றொரு மார்க்ஸ்; இவ்வாறு சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையவையல்ல என்று நான் கருதுகிறேன்."
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி (தமிழ்) பக்கம் 171-172

                I, சிந்தனை, மனச்செயற்பாடுகள், பொருளாயத சூழ்நிலைக்கு தொடர்பற்று சுந்தந்திரமாக இருக்கிறது - இது கருத்துமுதல்வாதம்

                II, பொருளாயத சூழ்நிலைகளே, சிந்தனை, மனச்செயற்பாடுகளைத் தீர்மானிக்கிறது - இது பொருள்முதல்வாதம்

                கருத்துமுதல்வாதத்தையும் பொருள்முதல்வாதத்தையும் ஏற்கவில்லை என்பது காலம்காலமாக பொருள்முதல்வாதத்தை மறுக்கின்ற கருத்துமுதல்வாதிகள் பேசிவருவது தான்.

மூன்றாவது தத்துவம் என்பது எங்கும் கிடையாது. வர்க்க சமூகம் ஒழியும்வரை மூன்றாவது தத்துவப் போக்கை உருவாக்குபவர்கள் தோன்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.

                டேவிட் ஹார்வி பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற  புரிதலோடு மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி நூலை வாசிக்க வேண்டும்.

3,சோஷலிசப் புரட்சியை மறுத்தலும் முதலாளித்துவத்துககு மாற்று கிடையாது என முடிவெடுத்தலும்

மதிப்பை சமூக வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கலாம்  மார்க்சின் வழியில் எங்கெல்ஸ் விளக்குகிறார். டேவிட் ஹார்வி ஹார்வியோ அவசியமான உழைப்பை சமுதாய ரீதியில் அவசியமானது என்பது என்ன? என்ற கேள்வியோடு நின்றுவிட்டு மார்கரெட் தாட்சரின் புகழ் பெற்ற வாசகமான முதலாளித்துவத்துககு மாற்று கிடையாது என்பதை வழிமொழிகிறார்.

டேவிட் ஹார்வி எச்சரிக்கை 2ல் கூறியவற்றின் தொடர்ச்சியாக கூறுகிறார்:-
"நமக்கு இது பெரிய பிரச்சனையாக நீடிக்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு வேறு மாற்றே இல்லை என்ற மார்கரெட் தாட்சரின் புகழ் பெற்ற வாசகங்கள் சரியானவையா?  நம்மைச் சூழ்ந்துள்ள இன்றியமையாத சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் நாம் வைக்கப்பட்டுள்ளதால் நாம் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறுவதைப் போலத்தான் உள்ளது. இதன் அடித்தளமாக யாரால் எவ்வாறு மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற ஒரு கேள்விக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டியிருக்கிறது"
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 41

மார்க்ஸ் கண்டுபிடித்ததை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு நின்றுவிடாத டேவிட் ஹார்வி  சோஷலிசப் புரட்சியை மறுத்து விட்டு முதலாளித்துவத்துக்கு மாற்று கிடையாது என்று அறிவிக்கிறார்.

ரிகார்டோவிடம் இருந்த முரண்பாட்டை விடுவித்து  வெளிவருவதற்கான வழியை மார்க்ஸ் காட்டியதாக எங்கெல்ஸ் கூறுகிறார். டேவிட் ஹார்வியோ, மீண்டும் நம்மை ரிக்காடோவிடமே கொண்டு சேர்க்கிறார்.

எங்கெல்ஸ்:-
"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மாக்சின் தற்படைப்பான சாதனையாகும்.

ஆசியருடை சோஷலிசக் கருத்துக்களைப் பற்றி வாசகர் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தாலும் சரி, வழக்கமான சமூக-ஜனநாயக நூல்களை விட மிகவும் மேலான ஒரு நூல் வாசகர் முன்னால் உள்ளது.. ." 
மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி பற்றிய மதிப்புரை பக்கம் 15

மார்க்சின் கண்டுபிடிப்புகளை டேவிட் ஹார்வி ஏற்றுக் கொள்ளாததால், சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்பது அலங்கார வார்த்தையாகவும், முதலாளித்துவம் நிலைத்து நிற்பதாகவும் தோன்றுகிறது.

எங்கெல்சுக்கு, பாட்டாளி வர்க்கப் பார்வையில் மார்க்சின் "மூலதன"த்தை வாசிப்பதால் சோஷலிசப் புரட்சி அவசியமானதாகவும் சாத்தியமானதாகவும் படுகிறது.

4, வால்ஸ்டிரீட் போராட்டத்தைப் பற்றிய முரண்பட்ட கருத்து

டேவிட் ஹார்வி எழுதிய  “மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டிஎன்ற நூலுக்கு தோழர் என்.குணசேகரன் அவர்கள் "வர்க்க வல்லமையை உருவாக்கிடும் வாசிப்பு" என்ற தலைப்பில் பதிப்புரை எழுதியுள்ளார். அதில் "ஒரு இடதுசாரி மாற்று எனும் பார்வை, "வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" உள்ளிட்ட இன்றைய முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்களுக்கு தேவை." என்று எழுதியிருக்கிறார். இங்கு, தோழர் என்.குணசேகரன் இடதுசாரி பார்வையை, வால்ஸ்ட்ரீட் போராட்டம் போன்ற முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், டேவிட் ஹார்வி இந்நூலில் வால்ஸ்டிரீட்டில் போராட்டத்தை, வளர்ச்சிக்கு எதிரான கருத்தாக பதிவுசெய்துள்ளார், மற்றும் எதிர்ப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். (பக்கம் 298) இது நூலுக்கும் நூலுக்கான பதிப்புரைக்கும் இடையேயான அடிப்படைக் கருத்தில் முரணைக்காட்டுகிறது.

5, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியே சமூக வளர்ச்சிக்கு காரணமாகும் என்ற மார்க்ஸ் கருத்தை மறுதலித்தல்

டேவிட் ஹார்வி:-
"சமூக உறவுகளின் பரிணாம வளர்ச்சி, மனக் கருத்துருவாக்கங்கள், இயற்கையுடனான உறவு போன்றவை உள்ளிட்ட மனித குல வரலாற்றுப் பாதையைத் தீர்மானிப்பது உற்பத்தி சக்திகள் தான் என்று அதற்கே முதன்மைப் பாத்திரத்தை அளிக்கும் ஒரு தொழில்நுட்பவியல்வாதியாக நண்பர்களாலும் எதிரிகளாலும் மார்க்ஸ் பல நேரங்களில் சித்திரிக்கப்பட்டு வருகிறார்" பக்கம் 286

இது அப்பட்டமாக மார்க்சை பற்றிய அவதூறாகும். மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளின் ஒன்றான சமூக வளர்ச்சியைப் பற்றிய விதியை டேவிட் ஹார்வி மறுதலிக்கிறார்.

எங்கெல்ஸ்;-

"1830-ஆம் ஆண்டின் முதலாளித்துவ வர்க்கம் முந்தைய நூற்றாண்டின் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக விளங்கியது. அரசியல் அதிகாரம் இன்னமும் பிரபுக்குலத்திடமே விட்டுவைக்கப்பட்டு இருந்தது. பிரபுக்குலம் அவ்வதிகாரத்தைப் புதிய தொழில்துறை முதலாளித்துவத்தின் உரிமைத் தகுதிகளை எதிர்த்து நிற்கப் பயன்படுத்தியது. [நாளடைவில்] அவ்வரசியல் அதிகாரம் புதிய பொருளாதார நலன்களுடன் முரண்பட்டுப் போனது. பிரபுக்குலத்துடன் ஒரு புதிய போராட்டம் தேவையாக இருந்தது. அத்தகு போராட்டம் புதிய பொருளாதார சக்தியின் வெற்றியில்தான் முடிவதாக இருக்கும்."
கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்-முன்னுரை

இங்கு எங்கெல்ஸ் பொருளாதார சக்தியின் வெற்றி என்று உற்பத்திச் சக்தியையே குறிப்பிட்டுள்ளார்.

மார்க்ஸ்;-
"எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை.
..
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது."
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

இங்கு மார்க்ஸ் குறிப்பிடும் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியே சமூக மாற்றத்துக்கு காரணம் என்கிறார். அதே நேரத்தில் இந்த உற்பத்திச் சக்திகளின் வளர்சியே உற்பத்தி உறவுகளோடு மோதி சமூகப் புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது என்கிறார். டேவிட் ஹார்விக்கு முதலாளித்துவ மாற்றத்தில் விருப்பம் இல்லாதிருப்பதால் மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாததை ஏற்றுக் கொள்ள முடியாமல், மூலதன நூலில் கம்யூனிச மாற்றம் பற்றியும் தோற்றம் பற்றியும் அதிகம் கூறவில்லை என்கிறார். கம்யூனிசப் புரட்சி என்கிற சமூக மாற்றம் பற்றிய மார்க்சின் கருத்தை மறைக்க முனைகிறார்.

6,பொருள்முதல்வாதியான மார்க்சை கருத்துமுதல்வாதியாக திரித்துரைத்தல்

"ஒரு நெசவாளியின் செயல் முறைகளை ஒத்தவற்றைச் சிலந்தி செய்கிறது. கட்டக்கலைஞர்கள் பலரும் வெட்கித் தலைகுனியும் வண்ணம் தேனி தனது கூட்டை அமைத்திடுகிறது. ஆனால் கட்டடக் கலைஞர் தன் கட்டட அமைப்பை எதார்த்த்தில் எழுப்பு முன்பே மனத்தில் எழுப்பிக் கொண்டு விடுகிறார். படுமோசமான கட்டட கலைஞரையும் தலை சிறந்த தேனியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுவே. உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனதில் இருந்ததுதான்"  (மூலதனம் I பக்கம் 245)

இது முக்கியமான ஒரு கூற்று. நமக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. பின்னர் அதனை மெய்யானதாக்குகிறோம் என்கிறார் மார்க்ஸ். எனவே மனித உற்பத்தி நடவடிக்கையில் மனதளவிலான ஒரு கணநேரம் கற்பனை செய்யும் காலம் என்ற ஒன்று இருக்கவே செய்கிறது.
...
மனத்தளவிலான கருத்துக்கள் மேற்கட்டுமான அரங்கம் தொடர்பானவை என்று வெறுமனே குறிப்பிட்டாலும் இந்த அரங்கில்தான் நாம் பிரச்சனைகளைப் பற்றிய உணர்வைப் பெற்று அவற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார் என்பதை கவனத்தில் கொள்க."
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 170-173

கட்டக் கலைஞன் மனதில் எழுப்பிக் கொண்டுவிடுகிறார் என்றவுடன், டேவிட் ஹார்விக்கு மார்க்ஸ் கருத்துமுதல்வாதியாக திரும்பிவிட்டார் என்றெல்ல கூச்சல் போடுகிறார். அத்தோடு நில்லாமல், கருத்துக்கள் மேற்கட்டுமானத்துக்கு உரியமை என்று வெறுமனே குறிப்பிட்டாலும, பிரச்சனைகளைப் பற்றிய உணர்வை இந்த அரங்கில் தான் (மனதில்) என்று மார்க்ஸ் தெளிவாக குறிப்பிடுகிறார் என்றெல்லாம் மார்க்சைப் பற்றி அவதூறாக கூறியுள்ளார் டேவிட் ஹார்வி.

 மூலதன நூலின் முதல் தொகுதிக்கான பின்னுரையில் மார்க்ஸ்:-
"ஹெகலுக்கு, மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது-இதனை அவர் "கருத்து" என்ற பெயரில் சுயேச்சையான கர்ட்ததாவாகவே மாற்றி விடுகிறார்-எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும், எதார்த்த உலகம் வேறில்லை,

மறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை"
மூலதனம் I பபக்கம் 41

மார்க்ஸ் பொருளுலகத்திலின் பிரதிபலிப்பே சிந்தனை  என்று தெளிவாக மூலதன நூலிலேயே கூறியிருக்கமனங்களிலிருந்து உணர்வைப் பெற்று போராடுகிறோம் என்று மார்க்ஸ்  குறிப்பிடுவதாக டேவிட் ஹார்வி தெரிவித்துமார்க்சின் பொருள்முதல்வாதத்துக்கு முரணாக மார்க்சை முன்னிருத்துகிறார்.

7, வர்க்கப் போராட்டத்தை குட்டுமுதலாளித்துவ பார்வையில் புரிந்து கொள்ளல்

டேவிட் ஹார்வி:-
"மார்க்ஸ் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரு புரட்சிகர சிந்தனையாளர் என்பதால் இத்தகைய முடிவுக்கு வருவது கடினமானது. பரிவர்த்தனை விதிகளின் அடிப்படையிலேயே மூலதனமும் உழைப்பும் தங்கள் உரிமைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஏற்படக்கூடிய ஒரே விளைவு யாதெனில் ஒரு நியாயமான உழைப்பு நாளுக்கு ஒரு நியாயமான கூலி என்ற மிதமான மகா சாசனமே என்பதைக் குறிப்பிட வேண்டும். இங்கே முதலாளி வர்க்கத்தைத் தூக்கி எறிவது பற்றியோ அல்லது வர்க்க உறவுகளை அகற்றுவதைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. வர்க்கப் போராட்டம் என்பது மூலதன உழைப்பாளர் உறவுகளை வெறுமனே சமநிலைப்படுத்துகிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை தொடர்ந்து இருப்பதற்கான ஒரு சாதகமான சக்தியாகக் கூட முதலாளித்துவ விசை இயக்கவியலின் வர்க்கப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பதுடன் சமூக வழியில் அவசியமானது என்ற பொருளை இது அளித்தாலும் முதலாளித்துவத்தைப் புரட்சிகரமான முறையில் தூக்கி எறிவதற்கான வாய்ப்புகளைப் பற்றி மிகச் சிறிய வெளிச்சத்தையே இது வழங்குகிறது".
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 236/237

லெனின்:-
"குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வாக்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வார்க்க இசைவு பற்றிய பகற்கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோஷலிஸ்டுகள், சோஷலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்திரித்தனர்-சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்திரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்து கொண்டுவிடுவதாகவும், சிறுபான்மையினர்  சமாதானமாகவே அவர்களுக்குக் கீழ்ப்படிந்து விடுவதாகவும் சித்திரித்தனர். இந்த குட்டி முதலாளித்துவக் கற்பனை, வர்க்கங்களுக்கு அப்பாற்பாட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாதது. நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய நலன்களுக்கு துரோகம் இழைக்கவே செய்தது"
அரசும் புரட்சியும்  தேர்வு நூல்கள் 6/12பக்கம் 41-42

8,முதலாளித்துவ சமூகத்தில் நிகழும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடக்கமான பொருளாயத சக்தியை வெளிப்படுத்துதல் என்னும் மூலதன நூலின் நோக்கத்தையே மறுத்தல்

டேவிட் ஹார்வி:-
"மார்க்சின் முடிவுகள் எல்லாம் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுக்கள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற ஆய்வு முடிவுகள் இதனை நாம் மறந்தோம் எனில் அது நமக்குப் பாதகமாகவே முடியும்.
..
இங்கே முன் வைக்கப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு கோட்பாட்டை உதாரணமாகக் குறிப்பிடலாம். முலாளித்துவ சமூக அமைப்பில் பாட்டாளி வர்க்கத்தினர் மேலும் மேலும் அதிக அளவில் துன்ப துயரத்துக்குட்படுத்தப்படுவார்கள் என்பதும் வர்க்க ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு காணப்படும் என்ற கோட்பாட்டை மார்க்ஸ் முன்வைத்துள்ளார்.

இந்தக் கோட்பாடு முதலாளித்துவ சமூகம் குறித்த மார்க்சின் சில அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த அனுமானங்கள் தளர்ச்சியடையும் போது அல்லது மாற்றப்படும் போது இந்தக் கோட்பாடுகள் சரியானவையாக இருக்காது. தனது முடிவுகளையெல்லாம் சில அனுமானங்களைச் சார்ந்து நிற்கும் கருத்துக்களாக அல்லாமல் முக்கால உண்மைகளாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளது போலக் கருதிக் கொண்டு அவரது ஆய்வு முடிவுகள் சரியானவை என்றோ அல்லது தவறானவையென்றோ நிரூபிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது நான் மிதிமிஞ்சிய அளவில் எரிச்சலடைகிறேன்."
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி (பக்கம் 356-357)

டேவிட் ஹார்வி முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் அதிக அளவில் துன்பத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் துன்பம் என்பது மார்க்ஸ் சில அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே. மார்க்ஸ் குறிப்பிடும் அனுமானங்களில் இருந்து முதலாளித்துவ அமைப்பு விடுபட்டு வர்க்கப் போராட்டத்தை தவிர்க்கும் என்கிறார். மார்க்சின் ஆய்வு முடிவுகள் சரியானவை என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளை பார்க்கும் போது மிதமிஞ்சிய அளவில் எரிச்சலடைவதை வெளிப்படையாக கூறுகிறார் டேவிட் ஹார்வி.

கீழே காணும் மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பாட்டாளி வாக்கத்துக்கு டேவிட் ஹார்வின் இந்த கருத்து எந்தளவுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் என்பதை டேவிட் ஹார்வி போன்றோர்கள் அனுபவிக்கத்தான் போகிறார்கள்.

மார்க்ஸ்:-
"இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல, பல உழைப்பாளிகளைச் சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது.எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கிவிடுகிறார். இந்த மையப்பாட்டுடன் கூடவே.
..
..எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றை சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும், இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன. இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களை எல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது. இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்க்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்று படுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலைவருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது."
மூலதனம் I (பக்கம் 1026-1027)

இங்கு முதலாளித்துவப் பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயற்பாடே வர்க்கப் போராட்டத்துக்கான காரணம் என்பதை மார்க்ஸ் வலியுறுத்துகிறார். ஒடுக்குமுறையும் துன்ப துயரமும் சுரண்டலையும் தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு வலுத்துவருவதைப் பற்றியும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் வளர்ச்சியுற்ற சமூகமயமான பொருளுற்பத்தி முறை முதலாளித்துவத்தின் மேலோடு ஒவ்வாததாகி உடைத்தெறியப்படுவதையும், முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிப்பதையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் குறிப்பிடுவதை வலியுறுத்தி பாட்டாளி வர்க்கத்துக்கு சார்பாக பேசினால் டேவிட் ஹார்விக்கு எரிச்சல் வருகிறதாம்

9,மதிப்பை, சமூக வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கலாம் என்ற மார்க்சின் முடிவை மறுத்தல்

"பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பு போன்றவற்றைப் புரியாத புதிரைப் போல முன் வைத்துவிட்டு மார்க்சினால் தப்பிக்க முடிவதற்கு ஒரு காரணம் யாதெனில் ரிகார்டோவின் நூல்களைப் படித்துள்ள எவரும் இங்கே ரிக்கார்டோ இருக்கிறார் என்று கூறிவிடுவார்கள். ஒரு விதிவிலக்கான இடைச்செருகலைத் தவிர இது முழுக்க முழுக்க ரிக்கார்டோவின் கருத்தே. உழைப்பு நேரக் கோட்பாட்டை ரிகார்டோ தனக்கு ஆதரவாக மேற்கோள் காட்டினார். சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரம் என்ற கோட்பாட்டை மார்க்ஸ் பயன்படுத்துகிறார்.

இங்கே மார்க்ஸ் செய்ததெல்லாம் ரிகார்டோவின் கோட்பாட்டுக் கருவியைத் துல்லியமாகப் படி எடுத்தது, அதில் எத்தகைய உள்நோக்கமுமின்றி அப்பாவித்தனமானது என்று தோன்றும் வகையிலான ஒரு திருத்தத்தை இடைச் செருகலாக அவர் புகுத்தியுள்ளதுதான். ஆனால் இந்த இடைச் செருகல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை நாம் காணப் போகிறோம். உடனடியாக ஒரு கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. சமுதா ரீதியில் அவசியமானது என்பது என்ன? அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது? இக்கேள்விகளுக்கு மார்க்ஸ் உடனடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் இக்கேள்வியானது மூலதன நூலின் ஒரு உள்ளடக்கமாக நூல் முழுவதிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் உருக் கொண்டுள்ள சமுதாயத் தேவைகள் எவை எவை? "
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 41

டேவிட் ஹார்வி விளக்க முயற்சிப்பது மார்க்ஸ், ரிகார்டோவின் கண்டுபிடிப்புகளில் தான் முடங்கி இருக்கிறார், புதியதாக பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லைரிகார்டோவை உள்நோக்கம் இன்றி அப்பாவித்தனமாக துல்லியமாகப் படி எடுத்திருக்கிறார் அவ்வளவே என்று எழுதியிருக்கிறார்.

ஆனால், செவ்வியல் பொருளியலாளரான ரிக்கார்டோ மரபானது, முரண்பட்டு தகர்ந்து போயிற்று என்று எங்கெல்ஸ் கூறுகிறார். இதிலிருந்து விடுபடுவதற்கான வழியை மார்க்ஸ் தான் கண்டுபிடித்ததார். இறுதியில் மதிப்பென்பது சமூக வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கலாம் என்று எங்கெல்ஸ் மார்க்சின் மூலதன நூலைக் கொண்டு முடிக்கிறார்.

எங்கெல்ஸ், இந்த விஷயத்தில் மார்க்ஸ் செய்தது என்ன என்று கூறுவதைப் பார்ப்போம்:-
"உழைப்பை வாங்குவதாகவும் விற்பதாகவும் உழைப்பின் மதிப்பு என்பதாகவும் பேசும் வரை, எவ்வளவு முக்கினாலும் முனகினாலும் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபட்டு நாம் வெளிவர முடியாது. பொருளியலாளர்களுக்கும் இதுவே தான் நேர்ந்தது. செவ்வியல் பொருளியலின் கடைசிக் கிளையான ரிக்கார்டோ மரபானது, பிரதானமாய் இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு காண முடியாமல் தான் தகர்ந்து போயிற்று. செவ்விய பொருளியல் திக்கற்ற நிலையை வந்தடைய வேண்டியதாயிற்று. கார்ல் மார்க்ஸ் தான் இந்நிலையிலிருந்து வெளியே வருவதற்கான வழியைக் கண்டுபிடித்தவர்.

பொருளியலாளர்கள் எதை உழைப்பின் உற்பத்திச் செலவாய்க் கருதினார்களோ, அது உயிருள்ள தொழிலாளியின் உற்பத்திச் செலவாகுமே அன்றி உழைப்பின் உற்பத்திச் செலவல்ல. இத்நத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தமது உழைப்பை அல்ல.
.. ..
.. தமது உழைப்பு சக்தியைச் சத்தத்துக்கு விடுகிறார் அல்லது விற்கின்றார். ஆனால் இந்த உழைப்பு சக்தி தொழிலாளியின் உடலுடன் ஒன்றியது, அதிலிருந்து பிரிக்க முடியாதது. ஆதலால் அதன் உற்பத்திச் செலவும் அவருடைய உற்பத்திச் செலவும் ஒன்றாகிவிடுகிறது. உழைப்பின் செலவு என்பதாய்ப் பொருளியலாளர்கள் குறிப்பிடுவது உண்மையில் தொழிலாளியின் உற்பத்திச் செலவே தான், ஆகவே அவருடைய உழைப்பு சக்தியின் உற்பத்திச் செலவேதான். எனவே நாம் உழைப்பு சக்தியின் உற்பத்திச் செலவிலிருந்து உழைப்பு சக்தியின் மதிப்புக்குத் திரும்பிச் சென்று, உழைப்பு சக்தியை வாங்குவதும் விற்பதும் பற்றிய அத்தியாயத்தில் மார்க்ஸ் செய்வது போல (மூலதனம், பாகம் IV, 3) குறிப்பிட்ட தரமுள்ள உழைப்பு சக்தியின் உற்பத்திக்குத் தேவையான, சமூக வழியில் அவசியமான உழைப்பின் அளவை நிர்ணயிக்கலாம்"
"கூலியுழைப்பும் மூலதனமும்" எங்கெல்ஸ் முன்னுரை பக்கம் 15-17
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 2./12

எங்கெல்ஸ், ரிக்கார்டோ சிக்கித் தவித்திலிருந்து மார்க்ஸ் மீட்டு எடுத்தார் என்கிறார். டேவிட் ஹார்வி மார்க்ஸ் கண்டுபிடிப்பை மறுத்து, மீண்டும் நம்மை ரிக்கார்டோவிடம் கொண்டு சேர்க்கிறார்.

(இதனைத் தொடர்ந்து மார்கரெட் தாட்சர் கூறிய முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை என்ற வாசகங்கள் சரியானவையா என்ற கேள்வியை எழுப்பி, அவ்வாறுதான் தான் இருக்கிறது என்கிறார் டேவிட் ஹார்வி. இதனை எச்சரிக்கை 3ல் பார்க்கலாம்)



10,முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணம் அல்ல என்று மார்க்ஸ் கூறியிருக்க குறைநுகர்வையே காரணம் எனக் காட்டுதலும், இயக்கவியல் வகையினங்களில் ஒன்றான காரண காரியவாதத்தை மறுத்தல்

முதலாளித்துவத்தின் அழிவை நோக்கிச் செல்லும் பொருளாதார நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணம் அல்ல என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார்.

டேவிட் ஹார்வியோ குறைநுகர்வே பிரதானமான காரணம் என்று காட்டுகிறார்.

டேவிட் ஹார்வி:-
"முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையானது நெருக்கடிக்குள்ளாகும் தன்மையைக் கொண்டது என்பது வெளிப்படையானது. ஆனால் நெருக்கடிகளின் தோற்றுவாயாக ஒரேயொரு முனைப்பான மற்றும் தனிப்பட்ட விளக்கத்தைக் காணும் போக்கினைக் குறிப்பிடுகிறேன். மூன்று வித பெரிய சிந்தனைப் போக்கு முகாம்கள் வழிவழியாகத் தொடர்கின்றன-அவையாவன:லாப முடக்கம், வீழ்ச்சியடையும் லாபவிகிதம்-குறைநுகர்வு மரபுகள் இவற்றுக்கிடையேயான பிரிவினைகள் பலமான முறையில் குறிப்பிடத்தக்கவையாக இருப்பதனால் அவை ஒவ்வொன்றின் சித்தாந்தங்களும் மற்றதின் குரல்வளையை நெறிப்பவையாக இருக்கின்றன. சில வட்டாரங்களில் குறைநுகர்வு என்ற சொற்றொரே கெட்ட வார்த்தையாகக் கருதப்படுகிறது. "
மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 485

டேவிட் ஹார்வி குறிப்பிடும் சில வட்டாரங்களில் முதல்  இடம் பிடிப்பவர்கள் மார்க்சும் எங்கெசும் ஆவர்.

எங்கெல்சும் 25ஆம் பக்கத்தில் (முன்னுரை) குறைநுகர்வு காரணமாகாது என்பதை குறிப்பிடுகிறார்.

நெருக்கடிக்கு குறைநுகர்வு காரணமாக்குவதை கூறியதையே கூறும் சொற்புரட்டு என்று மார்க்ஸ் மூலதன நூலிலேயே கூறியிருக்க டேவிட் ஹார்வி (வெங்கடேஷ் ஆத்ரேயா) போன்றோர்கள் கூறியதையே கூறி புரட்டும் வேலையை தொடர்கின்றனர்

மார்க்ஸ்:-
"பயன்திறனுள்ள நுகர்வு (effective consumption) அல்லது பயன்திறனுள்ள நுகர்வாளர் பற்றாக்குறையாகி (குறைநுகர்வு) விடுவதுதான் நெருக்கடிகளுக்குக் காரணம் என்கிறார்கள். கூறியதையே கூறும் சொற்புரட்டு ஆகுமே தவிர இது காரண  விளக்கம் ஆகாது.
..
..கூலி உயருமானால், கேடு தீர்ந்து விடும் என்று வாதாடி  மேற்கூறிய சொற்புரட்டுக்கு நியாய விளக்கம் அளிக்க முயலுவார்களாயின், அவர்களுக்கு நாம் கூற  வரும்புவது இதுதான்: பொதுவாக எல்லாருக்கும் கூலி எப்போது உயர்ந்து செல்கிறதோ, சமுதாயத்தின் வருடாந்தரப் பொருளுற்பத்தியில் நுகர்வுக்கென அமையும் பகுதியில் தொழிலாளி வர்க்கத்துக்கு எப்போதும் உள்ளபடியே பெரியதொரு பங்கு கிடைக்கிறதோ, அந்தக் காலகட்டம்தான் எப்போதுமே நெருக்கடிகளுக்குத் தயாரிப்பு செய்யும் காலகட்டமாகிறது."
மூலதனம் II பக்கம் 543

இங்கு காரண காரிய விதியின் படி குறைநுகர்வு காரணமாகாது என்று கூறி தமது கருத்தை காரண காரிய விதியின் படியே நிறுவியுள்ளார். ஆனால் டேவிட் ஹார்வி "காரண காரிய அடிப்படையிலான மொழியை மார்க்ஸ் பொதுவாகத் தவிர்த்துள்ளார் (மூலதன நூலில் பெரிய அளவில் அதனை உங்களால் காண முடியுமா என்று சவால் விடுக்கிறேன்)" (மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி பக்கம் 286/287) காரண காரிய விதி என்பது இயக்கவியல் விதியின் வகையினங்களில் ஒன்று. இயக்கவியல் இந்த காரண காரியம் எவ்வாறு நிகழ்கிறது என்பதையே விளக்குகிறது. பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத டேவிட் ஹார்வி போன்றோர்கள் சவால்விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.




2 comments:

  1. உங்கள் கருத்துக்களில் உடன்பாடு இல்லா விடினும், தங்களது முயற்சி மிகவும் சிறப்பான ஒன்று. வாழ்த்துக்கள்.


    அஜித்

    ReplyDelete
    Replies
    1. மார்க்ஸ் கருத்தோடு டேவிட் ஹார்வி உடன்படவில்லை என்பதையே இங்கு வலியுறுத்தியுள்ளேன். அதனால் எனது கருத்துகளில் நீங்கள் உடன்படவில்லை என்பதில் உள்ள அர்த்தம் எனக்கு புரியவில்லை.

      Delete