Tuesday 18 September 2012

இர்பான் அபீப் அவர்களின் மார்க்சிய வரலாற்றுவரைவியல் பற்றிய - ஒரு பார்வை


இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்
ஆசிரியர்: இர்பான் அபீப்
விலை:ரூ.250/-

இந்திய வரலாறு குறித்து ஆய்வுரைகள் (ஒரு மார்க்சிய அணுகுமுறையை நோக்கி) என்ற  முப்பது ஆண்டுகளாக இர்வான் அபீப் எழுதிய தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது. இதில் முதல் கட்டுரை மார்க்சிய வரலாற்றுவரைவியல் குறித்த பிரச்சினைகள் (Problems of Marxist Historiography) என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இர்பான் அபீப் சிந்துவெளி சமூகம் முதல் தற்கால சமூகம் வரையான விரிந்த தளங்களில் ஆராய்ச்சிகளை நிகழ்த்தியவர். அவரது மார்க்சிய வரலாற்றுவரைவியல் பற்றிய கண்ணோட்டத்தை மதிப்பிடுவது இன்றியமையாதனவாகும்.

இந்த கட்டுரையில் இர்பான் அபீப் மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் குறித்த தமது கருத்தினைப் பதிந்துள்ளார். அவ்வாறு செய்யும்போது “மார்க்சிய வரலாற்றுவரைவியல் புதிய அம்சங்களைத் தேடுவதில் தொடர் ஈடுபாடும், புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதும் அவசியம்”என்றும் “.. விஞ்ஞான சோசலிசத்துக்கு வெளியிலிருந்துவரும் விமர்சனங்கள் அல்லாமல் உள்ளுக்குள் தொடர்ச்சியான விவாதம் தேவையென நான் கருதுகிறேன்” என்றும் கூறுகிறார்.

“மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்”
(மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்)

-என்ற லெனின் கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இர்பான் அபிப் மேலே கூறிய கருத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் “இன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற ‘பன்மைத் தன்மை’ என்ற பண்பு குறித்து..” அவர் பேசத் தொடங்கும் போது அவர் கருத்துக்களில் உள்நோக்கம் ஏதும் இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏன் என்று சொன்னால் லெனின் மேலே கூறிய கருத்தோடு மேலும் சிலவற்றை தெரிவித்திருக்கிறார்.

பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை”
(மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில இயல்புகள்)

-என்றும் அதில் கூறியிருக்கிறார். இங்கே லெனின்  கூறியது போல் பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்கள் குறிக்கப்படவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமல்  இருக்கும்வரை மார்க்சியத்தின் அடிப்படைகள் மாறாது. மாற்ற முனைவது பாட்டாளி வர்ககத்திற்கு எதிராகவும், முதலாளி வர்க்கத்திறகு துணைபுரிவதாய் போய்முடியும். எல்லாம் மாறும் என்று சொல்லிவிட்டதால் மார்க்சியத்தின் அடிப்படையை ஏன் இன்னும் மாற்றாமல், அல்லது மாற்றவிடாமல் இருக்கிறீர்கள் என்று கேட்க்கும் போக்கு, எந்தளவிற்கு தவறாய் முடியும் என்பதை பார்ப்போம்.

இதனை மாவோ தெளிவுபடுத்துகிறார்:-
“வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முன்னே்றி வளரும். நடைமுறை அனுபவத்தின் வளர்ச்சியுடன் அதுவும் நிச்சயம் வளரும், அது முன்னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து மாறாத நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால் தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கண்ணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை எதோ விறைப்பான ஒன்றாக கருதுவதும் வறட்டுவாதம் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மையை நிராகரிதோல், அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம்.”
(சீனக்கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை) (12 மார்க்ச் 1957)

“திரிபுவாதம் அல்லது வலது சந்தர்ப்வாதம் என்பது ஒரு முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஓட்டமே. இது வறட்டுவாதத்தைக் காட்டிலும் மேலும் அபாயமானது.  திரிபுவாதிகள், வலதுசாரி சந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள்கூட “வறட்டுவாதத்தைத்” தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களையே ஆகும். அவர்கள் பொருள்முதல்வதத்தையும் இயக்கவியலையும் எதிர்க்கின்றனர் அல்லது திரித்துப் புரட்டுகின்றனர்.”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி) (27 பிப்ரவரி 1957)
       
        இங்கே மாவோ எச்சரித்தது போல் இந்தப் போக்குகள் மார்க்சியத்தின் அனைத்தையும் தழுவிய அடிப்படை உண்மைகளை நிராகரித்ததால் திரிபுவாதமாகவும், முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவாகத்தான் முடிகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் கோட்பாடான, அடித்தளம் மேல்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது வரையரைக்குட்ட வகையில் எதிர்செயல் புரிகிறது என்பதை ஏற்றுக் கொள்ளாமல், நிர்ணயவாதமாக மார்க்சியத்தை புரிந்துக்கொள்ளக் கூடாது என்று கூறி, உண்மையில் அவர்கள் திரிப்பது மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்களையே. மாவோ இப்போக்குடையவர்கள் பொருள்முதல்வாதத்தையும், இயக்கவியலைபும் தான் எதிர்க்கின்றனர் என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
"வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம்  காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான  இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து  முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது.  இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம்மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார  அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்  கட்டமைப்பாகும்."
        (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய லெனின் கூற்றை சந்தேகிக்கும் படியான கருத்தை இர்பான் அபீப் தெரிவிக்கிறார். “சமூக அமைப்புகள் சமுதாயத்தில் அடுத்தடுத்து மாறி வந்துள்ளன. புராதனப் பொதுவுடைமை, அடிமை உடைமைநிலபிரத்துவம், முதலாளித்துவம் என்ற வரிசையில் இது அமைந்திருந்தது. இத்தகைய வரிசைமுறை பொதுவாக நிலவியிருந்ததா என்பதும் பிரச்சினையாக உள்ளது.” என்ற இர்பான் அபீப் அவர்களின் கருத்து மேலே லெனின் கூறிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் வழியில் ஒப்புக்கொள்ளவில்லை என்பது வெளிப்பட்டுவிடுகிறது. லெனின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான இன்னொரு சமுதாய அமைப்பு முறையாக வளர்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்து சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு என்னும் அடித்தளம், தத்துவவியல்மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும் மேல்கட்டமைப்பாக பிரதிபலிக்கிறது என்பதையும் இர்பான் அபீப் ஏற்றுக் கொள்ளாமல் சந்தேகிக்கிறார். ஒரு பகுதியிலுள்ள உறவுகள் மற்றொரு பகுதியை எவ்வாறு ‘நிர்ணயிக்க’ இயலும்?  என்று அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையே சந்தேகிக்கிறார். இந்த சந்தேகத்தின் தொடர்ச்சியாக மார்க்சியம் என்பது முதலாளித்துவத்தின் விளைபொருள் என்றெல்லாம் கூறி குழப்ப முனைகிறார்.

“உற்பத்தித் தொழில்நுட்பமே (உற்பத்தி சக்திகள்), சமூக உறவுகளை (உற்பத்தி உறவுகள்) நிர்ணயிக்கிறது. அது உலகக் கருத்துகளையும், பண்பாட்டையும் (மேற்கட்டுமானம்) உருவாக்குகிறது. அதனால்தான் ‘சமூக இருப்பே சமூக உணர்வைத் தோற்றுவிக்கிறது’ என மார்க்ஸ் குறிப்பிட்டார். தொழில் நுட்பத்துக்கும் – - வர்க்க உறவுகளும், உற்பத்தி முறையும் -– பண்பாட்டுக்கும் இடையிலான உறவு தீர்மானிக்கிற ஒன்றாக உள்ளது. ஆனால், ஒரு பகுதியிலுள்ள உறவுகள் மற்றொரு பகுதியை எவ்வாறு ‘நிர்ணயிக்க’ இயலும்? ‘மார்க்சியம் முதலாளித்துவத்தின் விளைபொருள்’ எனக் கூறப்படுகிறது. முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கவில்லை எனில் அது தோன்றியிருக்காது. ஆனால் மார்க்சின் சிந்தனை தவிர்க்கவியலாமல் முதலாளித்துவம் தோற்றுவித்த நிலைமைகளிலிருந்து உருவானது எனக் கூறினால் அதனை ஏற்பது கடினம்.”

இர்பான் அபீப் மார்க்சியத்தை நிர்ணயவாதமாக அணுகக் கூடாது என்கிறார். “மார்க்சியத்தை ஒரு ‘நிர்ணயவாதமாக’ அணுகும் பாடநோக்கிலான பார்வையே மார்க்சிய வரலாற்று வரைவியலை எளிதாகப் புரிந்துகொள்வதிலுள்ள பொதுவான சிக்கலாகும்.” என்றும் “ஒரு பகுதியிலுள்ள உறவுகள் மற்றொரு பகுதியை எவ்வாறு ‘நிர்ணயிக்க’ இயலும்? என்றும் கேள்வியை எழுப்புகிறார். உற்பத்தியில் ஈடுபடும்போது உருவாகும் உறவுகளின் அடிப்படையில் கருத்துக்கள் தோன்றுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ளாமுடியாததால் தான் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை சந்தேகித்ததின் தொடர்க்சியாக இர்பான் அபீப் அவர்களால் கருத்து எதிர்காலத்தில் முதன்மை பெறும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் படி, அதற்கு பூர்ஷ்வாக்களே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றும் கூறுகிறார்.

“ஜெர்மன் தொழிலாளர்களின் கட்சியின் செயல் திட்டத்தை பற்றி சில குறிப்புகளி”ல் மார்க்ஸ் கூறுகிறார்:-
“..முதலாளி வர்க்கத்துடன் ஒப்பிடுகின்ற பொழுது பாட்டாளி வர்க்கம் புரட்சிரமானது, ஏனென்றால் பெரிய அளவுத் தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டு, தான் வளர்ச்சியடைந்த பிறகு அது, உற்பத்தியில் எந்த முதலாளித்துவத் தன்மையை முதலாளி வர்க்கம் நிரந்தரப்படுத்துவதற்கு முயல்கிறதோ அதை உற்பத்தியிலிருந்து பறிக்கப் பாடுபடுகிறது. ஆனால் “மத்தியதர வர்க்கத்தின் கீழ்ப் பகுதிகளாகிய” மக்கள் “பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள்” என்பதனால் புரட்சிகரமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று“ கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” எடுத்துக் காட்டியிருக்கிறது”

இங்கு மார்க்ஸ் முதலாளி வர்க்கத்துடன் ஒப்பிட்டு, தொழில்துறை வளர்ச்சியின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமாக மாறிவருவதையும், பின்பு முதலாளி வர்க்கம் நிரந்தரப்படுத்துவதற்கு முயலும் முதலாளித்துவத் தன்மையை பாட்டாளிகள் பறிக்கப்படயிருப்பதையும் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறார்.

“கருத்து” என்று பொத்தம்பொதுவாக கூறுவதால் இர்பான் அபீப் கூற்றில், எந்த வர்க்கத்தின் நலன்கள் அதில் பிரதிபலிக்கிறது என்பது வெளிப்படவில்லை.

லெனின் கூறுகிறார்:-
“நீதி, மதம், அரசியல், சமூதாயம் சம்பந்தமான எல்லா விதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்”    
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்)

இதன் அடிப்படையில் இர்பான் அபீப் கூறும் கருத்து என்ற பொதுவான கூற்றில் கருத்துக்களின் வர்க்கத் தன்மை மறைக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் போதிருந்த பூர்ஷ்வாக்களின் புரட்சிகரத் தன்மைகள், தொடர்ந்து வருவதாக கற்பனை செய்து கொள்கிறார். அதேபோது கருத்தினை பெருமளவுக்கு முதன்மைப் படுத்தி மேலும் கூறுகிறார், “ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் உலகில் நிலவிய சமூக அமைப்புகளில் மிகவும் முன்னேறிய நிலையில் – சரக்கு உற்பத்தி, உற்பத்தித்திறன் போன்றவற்றில் இல்லை. அதாவது அதன் உள்முரண்பாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மட்டுமே அது இறுதியில் முதலாளித்துவமாக மாறவில்லை. பத்திரிகை, அச்சகம், பற்சக்கரம், சுழலும் சக்கரத்துடன் கூடிய பட்டை, மாலுமியின் பாகைமானி, துப்பாக்கி ரவை ..” போன்றவற்றை வலியுறுத்துகிறார். சரக்கு உற்பத்தியினால் சமூக அமைப்பு முன்னேறுவதில்லை என்று கூறிவிட்டு கருத்து நிலைகளுக்கு முன்னுரிமைத் தருவதின் மூலம் பொருள்முதல்வாதச் சிந்தனையை விட்டுவிலகி அப்பால் வெகு தொலைவில் சென்றுவிடுகிறார்.

எங்கெல்ஸ் போர்கியுக்கு எழுதிய கடித்தில் “சமூகத்துக்குத் தொழில்நுட்பத் தேவை ஏற்பட்டால், அத்தேவை பத்து பல்கலைகழகங்களைக் காட்டிலும் அதிகமாக விஞ்ஞானத்தை முன்னுக்குத் தள்ளும்”  என்று பொருளாதார தேவையின் அடிப்படையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நடைபெறுவதாக கூறுகிறார். ஆனால் இர்பான் அபீப் கருத்துநிலைகளிலிருந்து தொழில்நுட்பம் கண்டுபிடிக்க படுவதாக தெரிவிக்கிறார்.

கருத்துக்கள் என்பது உற்பத்தி நடைபெறும் போது தோன்றுவதையும் தோன்றிய கருத்துக்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் மார்க்ஸ் கூறுகிறார்:-
சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.
 (தத்துவவியலின் வறுமை) பக்கம் 139 – 140

        இங்கே மார்க்ஸ் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில், சமுதாய உறவுகளில், கருத்துக்களின் உருவாக்கத்தில் ஒர் இடையறாத இயக்க இருப்பதை விளக்கியுள்ளார்.

        இர்பான் அபீப் “கருத்துக்கு” முதன்மைக்கொடுத்தும், அத்துடன் ‘பன்மை தன்மை’யை வலியுறுத்தியும் இறுதியில் “தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் என்ற வகையில் மார்க்சியம் தனிமைப்பட்டு, தனித்திருக்க இயலாது” என்றும் முடிவெடுத்து மார்க்சியத்திற்குள் பல்வேறு முரணான கருத்துக்கள் புகுவதற்கு இடம்கொடுக்கிறார்.

        இர்பான் அபீப் கூறுகிறார் “தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம்  என்ற வகையில் மார்க்சியம் தனிமைப்பட்டு, தனித்திருக்க இயலாது. எல்லாச் சமயங்களிலும் அதற்கு போட்டி விளக்கங்கள் கிளம்பி வந்துள்ளன. இவ்வாறு விளக்கம் அளிப்பவர்கள் மார்க்சியத்தின் அடிப்படையான வர்க்கப் பார்வையை ஏற்பவதில்லை. எனவே, அவற்றை நாம் பூர்ஷ்வா’ தன்மை வாய்ந்தவை என நிராகரித்து, புறக்கணித்துவிட முடியாது. இதில் தெளிவாக கூறிவிட்டர். மார்க்சியம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம் என்று சொன்னால், அது மற்றவர்களிடமிருந்து தனித்திருப்பதற்கு ஒப்பாகும், இதுபற்றிய விமர்சனம் வைப்பவரிடம் வர்க்கப்பார்வை இல்லாதபோதும், பூர்ஷ்வா தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் நிராகரித்து புறக்கணித்துவிட முடியாது என்ற இர்பான் அபீப்பின் கூற்று, மார்க்சியம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் பற்றிய போதனை என்பதை மாற்ற எடுக்கும் பெருமுயற்சியாகும்.

மார்க்சியம் என்பது பற்றியும் முதலாளித்துவத்தில் தொழிலாளர்களின் நிலைமையும் லெனின் கூறுகிறார்:-
“மார்க்சியத் தத்துவம் – தற்காலச் சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு பொருளாதார வளர்ச்சி காரணமாக தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிப்பதுமான மார்க்சியத் தத்துவம் – அதன் வாழ்வு முழுதும் போராடியே ஒவ்வொரு அடியாய் முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு எதுமில்லை”
                                                           (மார்க்சியமும் திருத்தல்வாதமும்)

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு  முறையும் முதலாளி வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகினறன என்றும் முதன் முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்க வல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணி திரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ண மிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோஷலிசம் என்பது எதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினார்”                                              (பிரடெரிக் எங்கெல்ஸ்)

        இந்த இரு சிறு பகுதிகளில் மார்க்சியத்தைப் பற்றியும், தொழிலாளி வர்க்கத்தின் கடமையையும், இதற்கான பொருளாதார காரணத்தையும் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் கருத்துக்களை லெனின் தெட்ட தெளிவாக விவரித்துள்ளார்.  அத்துடன் வர்க்கப் போராட்டம் என்பது தனிநபர்களின் நல்லெண்ணத்திலும் அவர்களின் முன்முயற்சிலும் உருவாவதில்லை என்பதையும் தெளிபடுத்திவிட்டார்.

        தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தாலேயே லெனினின் கருத்திற்கு மாறான முடிவிற்கு இர்பான் அபீப் வருகின்றார்.

“மார்க்சியம் முதலாளித்துவத்தின் விளைபொருள்’ எனக் கூறப்படுகிறது. முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கவில்லை எனில் அது தோன்றியிருக்காது. ஆனால் மார்க்சின் சிந்தனை தவிர்க்கவியலாமல் முதலாளித்துவம் தோற்றுவித்த நிலைமைகளிலிருந்து உருவானது எனக் கூறினால் அதனை ஏற்பது கடினம்” இந்த இர்பான் அபீப் கூற்று முதலாளித்துவத்தின்முன் மார்க்சியத்தையும், தொழிலாளி வர்க்கத்தையும் கொச்சப்படுத்த முயற்சிக்கிறது. இதனால் மார்க்சியத்திற்கு எந்த இழிவும் வந்திடப்போவதில்லை. மார்க்சியம்  என்பது சமூக பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தோன்றிய விஞ்ஞாமாகும், இதுபோன்ற முயற்சியால் மார்க்சியத்தை சிறுமைப்படுத்திவிட முடியாது. சிறைப்படுத்தவும் முடியாது. பொருளாதார வளர்ச்சிக் காரணங்களின் அடிப்படையில் மார்க்சியம் வெல்லும்.

        உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் சமூகப் புரட்சியின் பொருளாதார முன்நிபந்தனையாக உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிச் சுழலைத்தான், புரட்சிகர நிலைமை என்று கூறுகிறார் மார்க்ஸ். இந்நிலைமையின் போது சுரண்டும் வர்க்கத்தால், சமூகத்தை நிர்வகிக்க இயலாமல் போகிறது. சுரண்டப்படும் வர்க்கமோ இனிமேலும் பழைய நிலைமையில் வாழ முடியாமல், புரட்சியைத் தொடங்குகிறது. எல்லாப் புரட்சிகர சுழலும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை, சமூகத்தில் அனைத்து துறையிலும் நெருக்கடிகள் ஏற்பட்டவுடன், சமூகத்தின் கட்டமைப்பு தளரத்தொடங்குகிறது. புரட்சியை இறுதி வெற்றியை எட்டும் நிலைக்கு எடுத்துச் செல்லும் புரட்சிகர பாட்டாளி வர்க்கமும், அதன் இணை சக்தியான விவசாயிகளும், மற்ற துணை சக்திகளையும் ஒருங்கிணைந்து தலைமைத்தாங்கும் புரட்சிகர கட்சி என்னும் முன்னணிப்படை தேவைப்படுகிறது.

சோஷலிசப்புரட்சிக்கான புறநிலைச் சூழலை மார்க்ஸ் கூறுகிறார்:-
“வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

மார்க்சிய வழியில் வரலாற்றியல் பொருள்முதுல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாத்தால்    இர்பான் அபீப்  சமூக மாற்றத்தில் பொருளாதார காணரங்களின் இன்றியமையாததை புரிந்த கொள்ளாமல் கூறுகிறார், “முதலாளித்துவமும், பிற சுரண்டல் அமைப்புகளும் சொந்தச் சுமை காரணமாக அல்லது ‘முதலாளித்துவப் பொது நெருக்கடி’ காரணமாக தாமாகவே வீழ்ந்துவிடாது. கருத்துப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்று இல்லை. பொருளாதாரச் செயல்பாடு ஒரு உதவிதான். ஆனால் அது வர்க்க உணர்வுக்கு மாற்றாகாது.”

        வர்க்க உணர்விற்கு பொருளாதாரச் செயற்பாடு மாற்று கிடையாது. வர்க்க உணர்வை உந்துவதும், துரிதப்படுத்துவதும் பொருளாதார செயற்பாடேயாகும். வர்க்கப் போராட்டத்தின் சாரம் பொருளாதார செயற்பாட்டில் அடங்கியிருக்கிறது. வர்க்க உணர்வென்பது பொருளாதார செயற்பாட்டிலிருந்து விலக்கி பார்ப்பதென்பது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாகும். வர்க்கப் பேராட்டத்தின் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் விளக்கப்படுத்துவதே பொருள்முதல்வாதமாகும். பொருளாயதக் காரணங்களின் விளைவுகளின் அடிப்படையில் இதனை விளக்கப்படுத்துவதால் தான் மார்க்சியத்தை விஞ்ஞானம் என்றழைக்கப்படுகிறது.
சமூக புரட்சிக்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவப் பொது நெருக்கடியினால் உருவாகும் புரட்சிகர சூழலை இரண்டாம் நிலைக்கும், கருத்துப் போராட்டத்தை முதன்மையிடத்திற்கும் இர்பான் அபீப் கொண்டு செல்கிறார். இவ்வாறு வர்க்க உணவர்விற்கும் பொருளாதார காரணங்களுக்கும் உள்ள இயக்கவியல் தொடர்பை மறுப்பதும், பொருளாதார சூழலைவிட, கருத்துப் போராட்டத்திற்கு முதன்மை தருவதும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மறுதலித்ததின் விளைவேயாகும்.

இத்துடன் இர்பான் அபீப் நிறுத்திக்கொள்ளவில்லை, "ஒவ்வொரு சமூக முறையையும் முந்திய சமூகத்தின் மேல்மட்டத்தில் நிலவும் வளர்ச்சிப் போக்கில் உள்ள உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாகவே உருவாகின்றன என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் பலரது அணுகுமுறையைத் திருத்தவேண்டியுள்ளது என நான் கருதுகின்றேன்"  என்று மார்க்சிய வரலாற்றாசிரியர்களின் இதுவரையான அணுகுமுறையைத் திருத்தவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது என்று மேலே சமூக மாற்றத்தைப் பற்றி மார்க்ஸ் கருத்திற்கு மாறாக இர்பான் அபீப் அவர்களின் கூற்று அமைந்திருக்கிறது. அத்தோடு இர்பான் அபீப் அவர்களின் கூற்றிலுள்ள மார்க்சிய வரலாற்றாசிரியர்களில் மார்க்சும் உள்ளடங்குகிறார் என்பதை தெரிவித்துக் கொண்டு மார்க்சை பின்பற்றும் மார்க்சிய ஆய்வாளர்கள் இர்பான் அபீப்பின் ஆலோசனையைப் புறக்கணித்து மார்க்சிய வழியிலேயே செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூகம் வர்க்கமாக பிளவுபட்டிருக்கும்வரை சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கும், செயற்படுவதற்கும் துணைபுரியும், அதனால் இதனை இக்காலகட்டத்தில் எதிர்ப்பவர்களின் போக்கு மார்க்சியத்திலிருந்து தொழிலாளிகளை பிரிப்பதற்கான முயற்சியாகவும், முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஆதரவான பணியாகவும் அமைந்துவிடும்.

முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கம் வெல்லும் மார்க்சியம் அதற்கு துணைபுரியும். 

No comments:

Post a Comment