வெங்கடேஷ் ஆத்ரேயா வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை அறிமுகப்படுத்தி தமது “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்” (“மூலதனம்” நூலுக்கு ஒரு எளிய அறிமுகம்) என்னும் நூலை தொடங்குகிறார்.
“உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி
உறவுகளையும் ஒரு சமூதாயத்தின் கட்டுமானம் அல்லது பொருளாதார அடித்தளம் என்று பல மார்க்சிய
எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். .. ..
சில மேற்கட்டுமானமும்
அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால், அடிக்கட்டுமானம்
தான் மேல்கட்டுமானத்தின் மீது தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
இக்கருத்துகளைக் கவனமான
முறையில் விளக்கிக் கூறினால் அவை மிகவும் சரியானவையாகவே இருக்கும். சில நேரங்களில்
அவை தவறாகப் புரிந்து கொள்ளப்படுத்துவதை தடுக்க இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதை நாம்
தவிர்த்துள்ளோம். சதாரண முறையில் பேசும் போது
பொருளாதார அடித்தளம் என்பதற்குக் குறுகிய பொருளே அளிக்கப்படுகிறது. ஆனால், மார்க்சியக் கண்ணோட்டத்தின்படி பொருளாதார அடித்தளம் என்பதன்
பொருள் சமூக உற்பத்தியின் ஒட்டுமொத்த பொருளியல் சூழலைக் குறிப்பிடுவதாகும். ஏனவே, மார்க்சிய அடிப்படையில் பயன்படுத்தப்படும்
பொருளாதார அடித்தளம் என்ற சொற்றொடரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
அவ்வாறு புரிந்து கொள்பவர்கள் மார்க்சியத்தையும் வரலற்றுப்பொருள்முதல்வாதத்தையும்
பொருளாதார நியதிவாதமாகப் புரிந்து கொள்கின்றனர்.
இரண்டாவதாக சித்தாந்த
மற்றும் அரசியல் துறைகள் அனைத்தையும் பொருளாதாரமே தீர்மானிக்கிறது என்று சாதாரணமாகவோ
அல்லது இயந்திரகதியிலோ வரலாற்றுப் பொருள் முதல்வாதம் வாதிடுவதில்லை. மாறாக, சித்தாந்த மற்றும் பொருளாதாரத்
துறைகளை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதை
வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அதே நேரத்தில் மேலே விளக்கப்பட்ட விரிவான பொருளில் அடிப்படையில்
பொருளாதாரம் இறுதியாகத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
குறிப்பிடுகிறது. சமூகங்கள் மாற்றமடைந்துவரும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் மற்றும்
சித்தாந்தக் கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வரலாற்று அனுபவங்கள் உணர்ந்துகின்றன.
சீனா சோஷலிசச் சமூக அமைப்புக்கு மாறிவரும் இடைப்பட்ட காலத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இதுவரை விளக்கப்பட்டதான
அடிப்படையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் முக்கிய அம்சங்களாகப் பின்வருபவற்றைக்
குறிப்பிடலாம். சமூக உற்பத்தியின் முக்கியத்துவம், உற்பத்தி உறவுகள் மற்றும் வரலாற்றின்
உந்துசக்தியாகச் செயல்படக்கூடிய வர்க்கப் போராட்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். இந்தச் சுருக்கமான வரைபடத்தின்
அடிப்படையில் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் கருத்தமைவைப் பரிசீலிப்போம் (பக்கம் 26 -27)
வெங்கடேஷ் ஆத்ரேயா தொடக்கத்தில் கூறுகிறார்:-
“சில மேற்கட்டுமானமும் அடித்தளத்தின்
மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அடிக்கட்டுமானம் தான் மேல்கட்டுமானத்தின்
மீது தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.”
இதில் “ஆனால்” என்று சந்தேகத்தை கிளப்பி விடுகிறார். அது மட்டுமல்லாது
இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற விவரிப்பில் முரண்தொனி காணப்படுகிறது. மேற்கட்டமைப்பை
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவிற்கு, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது
என்றால் எந்த வகையில் என்பது இங்கு தெளிவாக்கப்படவில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை
முழுமையாக புரிந்து கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆனால் இவ்வளவு குழப்பமாக எழுதியிருப்பதைப் பார்க்கும் போது புரிந்து
கொள்ளக் கூடாது என்ற முடிவில் தோழர் இருப்பது போல் தோன்றுகிறது.
“அடித்தளம் மேற்கட்டமைப்பில் தீர்மானகரமான
செல்வாக்கைச் செலுத்துகிறது.” இதில் செல்வாக்கை செலுத்துவது என்ற சொல்லை மேற்கட்டுமானம்
அடித்தளத்தில் செலுத்துவதைக் குறிக்க வேண்டும், தீர்மானகரமான என்பதை, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது
என்று தெரிவிக்க வேண்டும். இதை மாற்றியோ, அல்லது குறிப்பிடாமலோ இருந்தால் குழப்பமும், புரியாமையும் தான் ஏற்படும்.
“மார்க்சிய அடிப்படையில் பயன்படுத்தப்படும்
பொருளாதார அடித்தளம் என்ற சொற்றொடரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.
அவ்வாறு புரிந்து கொள்பவர்கள் மார்க்சியத்தையும் வரலாற்றுப்பொருள்முதல்வாதத்தையும்
பொருளாதார நியதிவாதமாகப் புரிந்து கொள்கின்றனர். “ (பக்கம் 26)
பொருளாதார நியதிவாதத்தை எதிர்ப்பதாக காட்டிக் கொள்வது, கருத்து என்பதை முதன்மைப் படுத்துவதற்கேயாகும்.
அதாவது கருத்தின் பங்கை முதன்மை படுத்துபவர்களே, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை பொருளாதார நியதிவாதமாக புரிந்து
கொள்ளக் கூடாது என்று கூறிவருகின்றனர்.
பொருளாதார நியதிவாதம் என்றால் என்ன? அடித்தளம் மேல்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்பதை மட்டும் ஏற்றுக்
கொண்டு, மேல்கட்டமைப்பினுடைய அடித்தளத்தின்
மீதான வரம்விற்குட்பட்ட தாக்கத்தை, ஏற்றுக்கொள்ளாமல்
இருப்பதாகும். அது மட்டுமல்லாது அடித்தளம் மேற்கட்டமைப்பை தானே நிறுவிக் கொள்ளும் என
சோம்பியிருப்பதுமாகும். இதை புரியவைப்பதற்கு எந்த சிரமும் எடுக்கத் தேவையில்லை. ஆனால், மேல்கட்டுமானத்தின் சுதந்திரம் சார்புநிலையானது
என்பதை வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதனால் தான் சிக்கல் ஏற்படுகிறது.
“சித்தாந்த .. .. துறைகளை மற்றவற்றுடன்
ஒப்பிடும்போது கணிசமான அளவில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதை வெளிப்படையாக
ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அதே நேரத்தில் மேலே விளக்கப்பட்ட விரிவான பொருளில் அடிப்படையில்
பொருளாதாரம் இறுதியாகத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
குறிப்பிடுகிறது.”
(பக்கம் 26)
அது எப்படி மேல்கட்டுமானம் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் இறுதியாக
தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறது என்று சொல்லமுடியும். அடித்தளம் மேற்கட்டமைப்பை
தீர்மானித்தால், மேற்கட்டமைப்பு முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் இருக்கமுடியாது.
மேற்கட்டமைப்பு முழுச் சுதந்திரமாக செயல்படும் என்றால், அடித்தளத்தின் தீர்மானிக்கும் பங்கை
ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பதிலாக வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார்.
“சமூகங்கள் மாற்றமடைந்துவரும் இடைப்பட்ட
காலத்தில் அரசியல் மற்றும் சித்தாந்தக் கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வரலாற்று
அனுபவங்கள் உணர்த்துகின்றன”. (பக்கம் 26-27)
அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி
முறைக்கும் முரண் அதிகரித்து, சமூக மாற்றம் பெறும் போது பொருளாதாரம்
தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த சமூக மாற்றம் ஏற்படும்வரையான இடைப்பட்ட காலத்தில் அரசியல் மற்றும்
சித்தாந்தக் கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் கூறிவிடுகிறார். மேலும் கூறுகிறார். “ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே
ஒருவிதமான இணைப்பு இருக்கலாம். ஆனால் அது அப்படியே நீடிக்கும் என்று கருதக்கூடாது. ஏனென்றால், சமூகம் வளர்ச்சி அடையும் போது அந்த
இணைப்பு தொடர்ச்சியாகத் தகர்க்கப்பட்டுச் சீர்குலைக்கப்படுகிறது.”
உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே முரண்பாடுகள் அதிகரித்து
தீவிரமடைந்து சமூக மாற்றம் ஏற்படுகிறது, அடுத்த சமூக மாற்றம் ஏற்படும் வரையிலான இடைப்பட்ட
காலத்தில் அரசியல், சித்தாந்தம் முதன்மை பெறுவதாக கூறுகிறார். உற்பத்தி சக்திகளுக்கும்
உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் இணைப்பை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்
வெங்கடேஷ் ஆத்ரேயா. அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தி உறவு பொருந்தாமல்
முரண்படுகிறது. இந்த இணைப்பில் உருவான முரண்பாட்டின் வளர்ச்சியில் தான் சீர்குலைவும், தகர்வும் ஏற்படுகிறது.
மார்க்ஸ் தத்துவவியலின் வறுமை (பக்கம் 139 – 140) என்ற நூலில் கூறுகிறர்:-
“சமுதாய உறவுகள்
உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப்
பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது
வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள்
அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு
நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம்
தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய
உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக்
கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆகவே, இந்தக் கருத்துக்களும்
இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே
அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில்
அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே
ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
இதில் மார்கஸ் உற்பத்தி
உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு இருக்கும் நெருக்கத்தை தெரிவித்து, உற்பத்திச் சக்திகளை
பெறுவதிலிருந்து தான், மனிதர்கள் உற்பத்தி உறவுகள் அனைத்தையும் மாற்றிக் கொள்கிறர்கள் என்றும் உற்பத்தி
கருவிகளின் மாற்றம் தான் நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்தையும்
அமைத்துத்தருகிறது என்றும் தெரிவிக்கிறார். அதேபோது உற்பத்திற்கு பொருத்தமான சமுதாய
உற்பத்தி உறவுகள் நிறுவப்படுவதையும் அந்த உற்பத்தி உறவுகள் எந்தளவிற்கு நிரந்தரமானவை
அல்லவோ உற்பத்தி உறவுகளால் உருவான கருத்துக்களும் வகையினங்களும் அதே அளவுக்கு நிரந்தமானவை
அல்ல. அவை வரலாற்றுமுறையில் தற்காலிகத் தன்மையைக் கொண்டதே என்கிறார் மார்கஸ்.
இத்துடன் உற்பத்திச் சக்திகளின்
வளர்ச்சியில். சமுதாய உறவுகளின் அழிவிற்கு இடையே கருத்துக்களின் உருவாக்கத்தில் இடையராத
இயக்கம் இருக்கிறது என்பதையும் இங்கே மார்க்ஸ் தெளிவாக கூறுகிறார்.
இதனை வெங்கடேஷ் ஆத்ரேயா “ஒரு குறிப்பிட்ட
காலத்தில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே ஒருவிதமான இணைப்பு இருக்கலாம்.
ஆனால் அது அப்படியே நீடிக்கும் என்று கருதக்கூடாது.” என்று மறுதலிக்கிறார்.
எங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் கூறுகிறார்:-
“சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான்
மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின்
அந்தந்தக் காலக் கூறுக்குரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய
மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது
போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய
உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.” (பக்கம்48-49)
இதுதான் மார்க்ஸ் கூறிய வரலாற்றியல்
பொருள்முதல்வாதம். ஆனால் இதனை வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
“வர்க்கப் போராட்டம்” என்பது மட்டுமே சமூகத்தை இயக்குவதாக
தோழர் தெரிவிக்கிறார்.
“வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்
முக்கிய அம்சங்களாகப் பின்வருபவற்றைக் குறிப்பிடலாம். சமூக உற்பத்தியின் முக்கியத்துவம், உற்பத்தி உறவுகள் மற்றும் வரலாற்றின்
உந்துசக்தியாகச் செயல்படக்கூடிய வர்க்கப் போராட்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.”
(பக்கம்
27)
இங்கு வர்க்கத்தை உந்துவது எது
என்பதை குறிப்பிடப்படவில்லை. சமூக உற்பத்தியின் முக்கிய அம்சங்களாக உற்பத்தி உறவு, வர்க்கப் போராட்டம் என்று தாவிவிடுகிறார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பதை, ஒரே கூரையின் கீழ் கூட்டு வேலையில் ஈடுபடும்
தொழிலாளிகள் சேர்ந்திருப்பதை மட்டுமே உற்பத்தி சக்தியாக பார்க்கிறார். இதில் உழைப்பின் குறிபொருள், உற்பத்திச் சாதனங்கள் ஆகிவற்றை
உற்பத்திச் சக்தியில் சோர்க்காமல் விட்டுவிடுகிறார். உற்பத்திச் சாதனங்கள் யாரிடம்
உடைமையாக இருக்கிறதோ, அதன்படி வினியோகம் நடைபெறுகிறது, அதற்கு ஒப்பவே உற்பத்தி உறவு உருவாகிறது.
அதன் அடிப்படையில் வர்க்கங்கள் நிலவுகின்றன.
லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ்
கூறுகிறார்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய
மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப்
போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு
சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின்
போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக
இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின்
தரத்தினால், அவற்றின்
உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன
என்பது அந்த விதியாகும்.”
இதில் உள்ள பொருளாதாரக் காரணங்களை
கணக்கில் கொள்ளாமல், வர்க்கப் போராட்டத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா, மேலும் கூறுகிறார்:-
“.. ஒரு உண்மையை
நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக
வர்க்கங்களிடையே ஏற்படும் மோதல்தான் ஒரு சமூக அமைப்பு முறையிலிருந்து மற்றொரு சமூக
அமைப்பு முறைக்கு மாறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது” (பக்கம் 24)
சமூக மோதலுக்கான பொருளாதாரக் காரணங்களை கணக்கில்
கொள்ளாமல், வர்க்க மோதல்
என்ற வடிவத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார். தொழில்புரிவோர், தொழில்புரியாதோர், ஏழை, பணக்காரன் என்று மட்டும் பேசுவது
வர்க்கத்தின் சாரத்தை அறிந்துகொண்டதாகாது. வர்க்கத்தின் தோற்றம் என்பது சமூகத்தில்
தனிச்சொத்தின் தோற்றத்தோடு உருவானதாகும், முதலாளித்துவ சமூகத்தில் இந்த வர்க்கப்
பிளவு அப்பட்டமாக தெரிகிறது. முதலாளித்துவத்தில் சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும்
இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான
பகைமை, வர்க்கப்
போராட்டமாக வெளிப்படுகிறது.
லெனின் கூறுகிறார்:-
“வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூராகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் பேராட்டக் கொள்கை மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய கொள்கையே. வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சிய வாதிகளாகிவிடுவதில்லை, இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலதாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டக் கொள்கைக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும்.”
(அரசும் புரட்சியும்)
இங்கே
லெனின் கூறியிருப்பதை தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும். வர்க்கப் போராட்டம் மார்க்சியத்தின் பிரதான கூராகும் என்ற தவறான போக்கில் செல்லுவதின் விளைவாய் மார்க்சியம் சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டுப்படுவதாக கூறுகிறார். அது மட்டுமல்லாது இவ்வழியில் புரிந்து கொள்வதென்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய கொள்கையாக அமைகிறது. வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்றுக் கொண்டோர் மார்க்சிய வாதிகளாகிவிடுவதில்லை என்றும் இவர்கள் முதலாளித்துவ சிந்தனை, முதலாளித்துவ அரசியல் ஆகியவற்றின் வரம்புக்குள் நிற்பவராக இருக்கக் கூடும் என்றும் எச்சரிக்கிறார். வர்க்கப் போராட்டக் கொள்கைக்கு அப்பால் செல்லாது இருப்பது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவது, முதலாளித்துவ வர்க்கத்ருக்கு ஏற்றதாய் குறுக்குவதேயாகும் என்கிறார் லெனின்.
பொருளாதார வழியில் வர்க்கப் போராட்டத்தை
விளங்கிக் கொள்ளாததால் வெங்கடேஷ் ஆத்ரேயா முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை முதலாளித்துவப்
பார்வையில் விளக்குகிறார். இந்தப் பார்வை முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றிய அவரது கருத்திலும் வெளிப்படுகிறது.
வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார் “.. முதலாளித்துவக் கூலி உழைப்பாளி சுதந்திரமானவன் அதே நேரத்தில்
தான் உயிர் வாழ்வதற்கான வழிமுறைகளிலிருந்தும் விடுபட்டவனாக இருப்பான். எனவே, மூலதன உடைமையாளருக்காக வேலை செய்ய
வேண்டிய கட்டாய நிலையில் வைக்கப்படுகிறான் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்“ என்பதில் ஒரு பக்க கூற்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதற்கு மார்க்சையும் துணைக்கு அழைத்துள்ளார்.
லெனின் “காரல் மார்க்ஸ்” என்ற கட்டுரையில் கூறுகிறார்:-
“மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று
வழிப்பட்ட முன்தேவைகளான: முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப்
பணம் குவியவும், அதே நேரத்தில்
பொதுவாகவே பண்ட உற்பத்தியின் வளர்ச்சி சார்பு நோக்கில் உயர்ந்த தரத்திற்கு வளர்ந்திருக்கவும்
வேண்டும், இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் “சுதந்திரமான” உழைப்பாளி இருக்க வேண்டும்-அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில்
எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும் பொதுவாக எல்லா
உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்திலும்.. .. “பாட்டாளி”
இருக்க வேண்டும்”.
-இது தான் மார்க்சிய பார்வை. வேலை செய்ய
வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொழிலாளியை மட்டும் குறிப்பிடுவது, முதலாளிகளின் நலன்களுக்கே வழிவகுக்கும்.
மூலதனத்தின் தோற்றத்திற்கு முன்தேவைகளாக
பணம் குவிக்கப்பட்ட முதலாளிகளும், வேலை செய்ய வேண்டிய கட்டாயம் மட்டுமல்ல, நிலத்திலிருந்தும் எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவனாக
தொழிலாளி இருக்கவேண்டும். இரண்டையும் சேர்த்துப் பார்க்காமல் இவர் முதலாளித்துவ பார்வையிலேயே
செல்கின்றார்.
வெங்கடேஷ் ஆத்ரேயா முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பற்றி
பேசும் போது
“பொருளாதார நெருக்கடிகள் என்பவை
முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மட்டுமே சொந்தமானவை
அல்ல. எனினும் முதலாளித்துவ அமைப்பு எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகள் மிகவும் விந்தையானதாகவும்
புரியாத பெரும் புதிராகவும் அமைகின்றன. முதலாளித்துவத்துக்கு முந்தைய அமைப்பு முறைகளில்
வறட்சி, வெள்ளம், பூமி அதிர்வு போன்ற இயற்கைப் பேரிடர்களின்
போதும் கொள்ளை நோய்கள் ஏற்படும் காலங்களிலும் நெருக்கடிகள் ஏற்படுவதுண்டு”
என்று கூறுகிறார்.
இது அப்பட்டமான, முதலாளிகளுக்கு
சார்பான கூற்றாகும். முதலாளித்துவத்திற்கே
உரிய இந்த நெருக்கடியை, இயற்கைச் சீற்றத்துடன் இணைத்து
முதலாளித்துவத்திற்கு நற்பெயரை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்.
நெருக்கடிகளுக்கு காரணங்களான முதலாளித்துவ
உற்பத்தி முறையிலுள்ள அராஜகம், அதனைத் தொடர்ந்து ஏற்படும் மிகைஉற்பத்தி போன்ற மார்க்சின்
விளக்கங்களின் படி செல்லாமல் வெங்கடேஷ் ஆத்ரேயா முதலாளிகளுக்கு சார்பாக நெருக்கடிக்கு
விளக்கம் அளிக்கிறார்.
“முதலாளித்துவ உற்பத்தி முறையின்
அராஜகத்தன்மை காரணமாக இந்தப் பொருத்தமற்ற விகிதாசாரத்தன்மை உருவாகிறது என்றாலும் முதலாளித்துவப்
பொருளாதார நெருக்கடிகளுக்கான தோற்றுவாய்களில் ஒரு பொதுவான ஆய்வுப் பொருளாக இது அமைந்துள்ளது.
(அராஜகம் என்பதில் நாம் நிசயமாக, அனைத்து ஒழுங்கு
குழப்பம் இல்லாமையை அர்த்தப்படுத்தவில்லை, ஏனெனில், மார்க்சிஸமானது, குறிப்பிட்ட இயக்க விதிகளுக்கு
உட்பட்டிருக்கும் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்கிறது). உண்மையில் ஆழமான, மேலும் குறிப்பான இரண்டு தோற்றுவாய்களை
மார்க்சிய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அவை லாபவிகிதம் வீழ்ச்சி அடையும் போக்கு ஒன்று.
மற்றது குறை நுகர்வுப் போக்கு ஆகும்.”
(பக்கம்
230)
மேலும் பக்கம் 93ல் கூறுகிறார். “சந்தையின் அராஜகம் என்ற சொற்றொடர்
போதுமான விளக்கமாக இருக்காது”
மார்க்ஸ் மூலதன நூலில் கையாண்ட
உற்பத்தியில் அராஜகம் என்ற கலைச்சொல்லை வெங்கடேஷ் ஆத்ரேயா ஏற்றுக் கொள்ள முடியாமல்
தவிக்கிறார். மேலும் முதலாளித்துவ நெருக்கடிக்கு
குறை நுகர்வுப் போக்கு, லாபவிகிதம் வீழ்ச்சி என இவையிருண்டையும் காரணமாகக்
காட்டுகிறார். இது மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு பொருத்தமானதல்ல.
குறை நுகர்வு என்ற கண்ணோட்டம், முதலாளித்துவ நெருக்கடிக்கு பொருந்தாத பார்வை என்பதை மார்க்சிய
மூலவர்கள் தமது நூல்களில் பலயிடங்களில் விளக்கியிருக்கிறார்கள். அடுத்து லாபவிகிதம்
வீழ்ச்சி இதுவும் முதலாளித்துவக் கண்ணோட்டதின் விளைவாய் தோன்றியவையே, நெருக்கடி காலகட்டத்தில் பாட்டாளிகளும், தொழிலாளர்களும் பொதுவாக சமூகம்
சந்திக்கும் துன்ப துயரங்களைத் தான் மார்க்சிய ஆசான்கள் பேசுகிறார்கள். ஆனால் தோழர்
லாபவிகித வீழ்ச்சி என்று முதலாளிக்காக வருத்தப்படுகிறார்.
மூலதனம் நூலில் மார்க்ஸ்
கூறுகிறார்:- “ஒரு புறத்தில், நேரடியாகத் தேவைப்படுவதைக் காட்டிலும்
கூடுதலான அளவு நிலை-மூலதனத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது, மறு புறத்தில் -இது மிகவும் முக்கியம்-
கச்சாப் பொருள் முதலானவற்றை நேரடியான வருடாந்தரத் தேவையைக் காட்டிலும் கூடுதலாய் உற்பத்தி
செய்து இருப்பில் வைக்க வேண்டியிருக்கும். இம்மாதிரியான மிகையுற்பத்தி சமுதாயமானது
தன்னுடைய மறுவுற்பத்திக்கு வேண்டிய பொருட் சாதனங்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்கு
ஒப்பானதாகும். ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் இது ஓர் அராஜக அமிசமாகி விடுகிறது” (மூலதனம் இரண்டாம் பாகம் பக்கம் 621-622)
“குறிப்பிட்ட தனது பண்டம் எந்தளவு
சந்தைக்கு விற்பனைக்கு வரும், எந்தளவில் அதற்குத் தேவை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
தாம் உற்பத்தி செய்யும் பண்டத்திற்கு உள்ள படியே தேவை இருக்குமா, அவர் தமது உற்பத்திச் செலவை ஈடுசெய்து
கொள்ள முடியப் போகிறதா என்றோ கூட யாருக்கும் தெரியாது. சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்தில் அராஜகம் தலைவிரித்தாடுகிறது”
(டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 474)
பொருளுற்பத்தியில் அராஜக போக்கிற்கும், அதன் காரணமாக உருவான மிகை உற்பத்திக்கும்
ஆன காரணத்தையும் சாரத்தையும் இங்கு தெளிவாய் கூறப்பட்டுள்ளது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இந்த முறையை தலைவிரித்தாடும்
அராஜகம் என்று குறிப்பிடாமல் வேறு எப்படி கூறமுடியும்.
“குறிப்பிட்ட இயக்க விதிகளுக்கு
உட்பட்ட முதாளித்துவத்தை மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது” (பக்கம் 244) என்கிறார்
தோழர். மார்க்சியம் முதலாளித்துவத்தை வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்கிறது, ஆனால் தார்மீக முறையில், பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில்
முதலாளித்துவச் சுரண்டலை விமர்சிக்கிறது. இந்த அடிப்படையில் எழுதப்பட்டவையே மார்க்சின் “மூலதனம்” என்கிற நூல். ஆனால் வெங்கடேஷ் ஆத்ரேயா சுரண்டல்
என்பதை தார்மீக நெறிமுறையில் மார்க்சியம் பார்க்கவில்லை என்கிறார்.
தோழர் வர்க்கம் என்பதை உழைப்பவர், உழைக்காதவர் என்ற பார்வையில் முடித்துவிடுகிறார்.
உழைக்காதவரிடம் உள்ள தனிச்சொத்தைப் பற்றி விளக்காமல் வர்க்கத்தின் சாரத்தை புரிந்து
கொள்ள முடியாது. மார்க்ஸ் முதலாளித்துவத்தை வரலாற்று முறையில் ஏற்றுக்கொள்கிறார், தார்மீக முறையில் முதலாளித்துவ
சுரண்டலை மூலதனம் என்ற தமது நூலில் அம்பலப்படுத்துகிறார்.
எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தியின்
தீய அம்சங்களை எவ்வளவு கூர்மையாகச் சுட்டிக்காட்டுகிறாரோ, அதேபோல சமுதாயத்தின் உறுப்பினர்
அனைவரும் மானுட ஜீவிகள் என்ற தகுதியுடன் வாழச் சமமான வளர்ச்சியை சாத்தியமாக்கக் கூடிய
தரத்துக்கு சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்க்க, இந்த சமூக அமைப்பு அவசியமாகிறது என்பதையும்
தெளிவாக நிரூபிக்கிறார்”
(கா.மார்க்ஸ் மூலதனம் முதல் தொகுதி பற்றி மதிப்புரை)
சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்க்க
முதலாளித்துவத்தின் அவசியத்தை மார்க்ஸ் வலியுறுத்துவதை, வெங்கடேஷ் ஆத்ரேயா முதலாளித்துவத்தின்
தீய (மிகை உற்பத்தி, உற்பத்தியில் அராஜகம், சுரண்டல்) அம்சங்களுக்கும் சேர்த்து கூறிவிடுகிறார்.
அடுத்து குறை நுகர்வைப் பார்ப்போம், டூரிங்குக்கு மறுப்பு (பக்கம் 504) என்ற நூலில் எங்கெல்ஸ், 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில்
ஏற்பட்ட குறை நுகர்வுப் போக்கை குறிப்பிட்டுவிட்டு கூறுகிறார்:-
“..எனவே குறை நுகர்வு என்பது ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக வரலாற்றில் ஓர் இடையறாத தன்மையாக இருந்து வந்துள்ளது, அதே பொழுதில், மிகை உற்பத்தியின் விளைவாக ஏற்படும்
நெருக்கடிகளால் சந்தை பொதுவாகச் சுருங்குவது என்பது கடந்த ஐம்பதாண்டுகளாக மட்டுமே இருக்கும்
ஒரு புலப்பாடாகும். ஏனவே இந்தப் புதிய மோதலை மிகை உற்பத்தி என்ற புதிய புலப்பாடு மூலம்
அல்லாது ஆயிரமாண்டு பழமையான குறை நுகர்வு என்ற புலப்பாடு மூலம் விளக்குவதற்கு ஹெர்
டூரிங்கின் மேம்போக்கான கொச்சைப் பொருளியல் முழுதும் தேவைப்படுகிறது “
இதனை அடுத்து இங்கிலாந்திலும் ஸ்காட்லந்திலும் ஏற்பட்ட பஞ்சாலை
நெருக்கடியைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“.. நூல் மற்றும்
துணி சந்தையில் இன்றுள்ள முழுமையான தேக்கத்தை ஆங்கில பஞ்சாலை உடைமையாளர்கள் நடத்திய
மிகை உற்பத்தியால் விளைந்தது என்று குறிப்பிடாமல், ஆங்கில பொதுமக்களின் குறை நுகர்வே காரணம்
என்று விளக்குவதற்கு மிகவும் ஆழவேருன்றிய பலமான வெட்கமற்ற துணிச்சல் வேண்டும் (பக்கம் 506)
குறை நுகர்வு என்ற கோட்பாடு முதலாளித்துவ
நெருக்கடிக்கு பொருந்தாமை என்பது மேலே கூறியவற்றால் புரிந்து கொள்ளலாம். ஆயிரமாண்டு
பழமையான குறை நுகர்வு கோட்பாட்டை, முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு பயன்படுத்த டூரிங்கின்
மேம்போக்கான கொச்சைப் பொருளியலும், பலமான வெட்கமற்ற துணிச்சலும் தேவைப்படுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.
அடுத்து, முதலாளிக்கு லாபவிகிதம் வீழ்ச்சி ஏற்படுவதாக முதலாளிகளுக்காக வருத்தப்படுகிறார்
வெங்கடேஷ் ஆத்ரேயா. ஆனால் மார்க்சும், எங்கெல்சும் நெருக்கடியின் போது தொழிலாளிகள்
படும் வேதனையை தான் வெளிப்படுத்துகின்றனர்.
“பொருளாதார வாழ்க்கையில் ஏற்படும்
ஒரு முறிவாகவும் முதலாளித்துவ மறு உற்பத்தி நிகழும் முறையில் ஏற்பட்ட ஒரு தடையாகவும்
முதலாளித்துவ நெருக்கடியை மார்க்சியம் பார்க்கிறது”
இது வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின்
கண்ணோட்த்திற்கு உரிய வர்க்கப் பார்வையே தவிர, மார்க்சிய வர்க்கப்பார்வை கிடையாது. எங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் எழுதுகிறார்:-
“இந்த நெருக்கடிகளில் சமுதாயமயமான
பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலுள்ள முரண்பாடு மூர்க்கமாய்
வெடித்தெழுகிறது.
..
பொருளுற்பத்தி முறை
பரிவத்தனை முறையினை எதிர்த்துக் கலகம் புரிகிறது, பொருளுற்பத்தி சக்திகள் எதை மீறி வளர்ந்துவிட்டனவோ
அந்தப் பொருளுற்பத்தி முறைக்கு எதிராக் கலகம் செய்கின்றன” பக்கம் 482-483
இதுவரை உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்பட்ட
பொருளாதார மோதலை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அடுத்து இதன் மூலம் உருவான வர்க்கப் போராட்டத்தை
குறிப்பிடுகிறார்.
“சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும்
இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான
பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது” பக்கம் 473
“ஒரு புறத்தில் முதலாளித்துவ உற்பத்தி
முறை தொடர்ந்து இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை புரியத் திறனற்றது என்பது நிரூபிக்கப்பட்டுத்
தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது“
பக்கம் 484
இது தான் மார்க்சியப் பார்வை, தோழர் சொல்வது போல் நெருக்கடி என்பதை
பொருளாதார வாழ்க்கையில் ஏற்படும் ஒரு முறிவாக, பொத்தம்பொதுவாக மார்க்சியம் பார்க்க வில்லை.
தோழரின் இந்தப் பார்வைக்கு காரணம், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்சிய
வழியில் ஏற்றுக் கொள்ளாமல், மார்க்சிய
திரிபுவாதிகளின் வழியில் விளங்கிங்கொண்டமையேயாகும். “சமூக வாழ்நிலையே சமூக உணர்வுநிலையை
தோற்றுவிக்கிறது” என்ற மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதக்
கண்ணோட்டம், “வர்க்கப் போராட்டமே சமூகத்தை மாற்றுகிறது” என்ற வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் பார்வைக்குக்
கிடையாது. தோழரது கண்ணோட்டத்திற்கு முதலாளித்துவ நெருக்கடியை புரிந்து கொள்ளும் ஆற்றல்
இல்லை. “பொருளாதார நெருக்கடிகள் என்பவை
முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. எனினும் முதலாளித்துவ அமைப்பு
எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகள் மிகவும் விந்தையானவைகவும் புரியாத பெரும் புதிராகவும்
அமைகின்றன.” முதலாளித்துவ நெருக்கடிகள் வெங்கடேஷ்
ஆத்ரேயா அவர்களின் “வர்க்கப்
போராடம்” என்கிற கண்ணோட்டதிற்கு புரியாத
பெரும் புதிராக காட்சியளிக்கிறது. இந்தப் புதிரைத்தான் மார்க்ஸ் “மூலதனம்” என்ற படைப்பின் மூலம் விடுவித்தார். இதை புரிந்து கொண்டதனால் தான் இன்று மார்க்சியர்களை
விட அதிகமாக முதலாளிகளும், அவர்களைச்
சார்ந்தவர்களும் மூலதன நூலை எடுத்து படித்துவருகின்றனர். முதலாளித்துவ
நெருக்கடிக்கான புதிரை புரிந்து கொள்ள முடியும், ஆனால் முதலாளித்துவத்தை அவர்களால் காப்பாற்ற முடியாது.
எங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் கூறியப்படி முதலாளித்துவ உற்பத்தி முறை
தொடர்ந்து இந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை புரியத் திறனற்றது என்பதை நிரூபிக்கப்ட்டுத்
தீர்ப்பு கூறப்பட்டிருப்பதாக கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் வெங்கடேஷ் ஆத்ரேயா முதலாளித்துவ முரண்பாட்டால் முதலாளித்துவத்தின்
சாத்தியமற்ற தன்மையையோ அல்லது முதலாளித்துவ ‘நிலைகுலைவு’ என்ற (பக்கம் 240) குறுகிய பொருளாதாரக் கோட்பாடுக்கோ இட்டுச்
செல்லாது என்று கூறுகிறார். எங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ முரண்பாடுகளுக்குத்
தீர்வு காண, பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில்
இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச்
சொத்தாக மாற்றுகின்றது என்று பாட்டாளி வர்க்க புரட்சி நிறைவேற்றப் போகும் சமூக மாற்றத்தை
குறிப்பிடுகிறார்.
“பாட்டாளி வர்க்கப் புரட்சி - முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கிறது.
பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின்
கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது
பொதுச் சொத்தாக மாற்றுகின்றது.
..
..
உலகளாவிய இந்த விடுதலைப்
பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச்
செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து
கொண்டு, தற்போது
ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது முடிக்க
வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தை முழு அளவில் தெரியப்படுத்துவது
தான் பாட்டாளி வர்க்கத்தின், கொள்கை வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.”
(டூரிங்குக்கு மறுப்பு பக்கம் 500-501)
மார்க்சிய அடிப்படையை திருத்தமற்ற
முறையில் புரிந்து கொண்டால் தான், இந்த விஞ்ஞான சோஷலிசத்தின் கடமையை நிறைவேற்றமுடியும்.
லெனின்
கூறிய கருத்தோடு இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்:-
“மார்க்சின் தத்துவஞானப்
பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த
ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.
மார்க்சின் பொருளாதாரக் கொள்கை ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி
வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது” (மார்க்சியத்தின்
மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்)
ஆன்மீக அடிமைத் தனத்திலிருந்து ஒடுக்கப்பட்ட
வர்க்கங்களெல்லாம் விடுபடும் வழியை மார்க்சின் பொருள்முதல்வாதம் ஒன்றுதான்
காட்டியிருக்கிறது. அதே போல் மார்க்சின் பொருளாதாரக் கொள்கை ஒன்றுதான் பொதுவான
முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலைகளை விளக்கியுள்ளது.
இவ்விரண்டிற்கும் மாறாக விளக்குவது அல்லது
இரண்டையும் மறுப்பது என்பது ஒடுக்கப்பட்ட வர்க்ககங்களுக்கு வழிகாட்டும் கொள்கையாகாமல், பாட்டாளிகளுக்கு எதிரான
கொள்கையாகவும், எதிரியின் கொள்கையாகவும் அமைந்துவிடும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமுகநூலில் "எனது வலைபூவில் " வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்”- என்கிற நூலுக்கு எனது எதிர்வினை" என்பதை வாசிக்க என்று பதிந்த போது Chegu
ReplyDeleteLogesh என்பவர் அளித்த பின்னூட்டகம் கிழே கொடுத்திருக்கிறேன்.மூலதன நூலை புரிவதில் இன்னும் முரண்பாடு உள்ளதாக அவர் கூறுகிறார், அதற்கு அவரவரது அடிப்படை பொருளாதார
நுண்ணறிவு. காலத்திற்கேற்ப மற்றும் சூழ்நிலை என்றெல்லாம் கூறி இறுதியில் இவைகளே வேறுபாடாக தோன்றுவதற்கு காரணம் என்கிறார். அது மட்டும் அல்லாமல் தாம் பொருளாதார ஆய்வு
மாணவர் என்கிறார். ஒரு ஆய்வு மாணவனுக்கு ஒரு நூலை படிப்பது பற்றி தெளிவு ஏற்படாமல் போனதின் தடை என்பது கல்லூரிப் படிப்பில் இருப்பதாக நான் கருதவில்லை.அவருக்கான
வழிகாட்டுதலில் பெரும் தவறு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். ஒரு நூல் எழுதப்பட்ட காலத்தில், அது சொல்ல நினைத்து எது என்ற நிலையில் இருந்து தான் படிக்க வேண்டும் இதற்கெல்லாம் பெரிய
ஆய்வுக் கண்ணோட்டம் தேவைப்படாது. //நானும் பொருளாதார ஆய்வு மாணவர், மார்க்ஸ் பாட்டனாரின் நூலையும் சிறுது படித்தவன் என்ற முறைளும், ,,தோழர் ,,// என்று முடிக்கிறார்.
மார்க்சின் பாட்டனாரின் நூலையும் படித்து என்ன பிரயோசனம். அது மட்டும் அல்லாது இதன் மூலம் அவர் சொல்ல நினைப்பது என்ன உங்களைவிட நாங்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள் அடங்கு
என்றா? இதனைப் படித்து எனது பாட்டாளி வர்க்க சிந்தனை அடங்கிவிடுமா என்ன?
அவர் கூறியிருப்பதை படியுங்கள்
//Chegu Logesh உங்களுது ,,பதிவு படித்தேன் ,, தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் ,, வகுப்புக்களும் ,, மற்றும் நான் படித்த கல்லூரிக்கும் ஆய்வு அரங்கத்து ,,வந்துள்ளார் ,,
அவரது மார்சிய அரசியல் பொருளாதாரம் ,,நூலையும் படித்தேன் ,,இதில் இருந்து புரிவதில் முரண்பாடுகள் ,, உள்ளன ,,என்றே உணர்கிறேன் ,,அவர் அவர் கருத்து ஒப்புமைகேற்ப ,,
திறன்,அடிப்படை பொருளாதார நுண்ணறிவு ,காலத்திற்கேற்ப , மற்றும் அவர் சூழ்நிலையும் புகற்ற முயற்சி ,, இவாறு காரணங்களால் சில வேறுபாடுகள் தோன்று கின்றன என்று நான் நன்புகிறேன்
எ னுக்குதெரிந்த வரைலும்,நானும் பொருளாதார ஆய்வு மாணவர், மார்க்ஸ் பாட்டனாரின் நூலையும் சிறுது படித்தவன் என்ற முறைளும் , ,,தோழர் ,,//