மூலதனத்தின் மூன்று தொகுதிகள்: சுருக்கமான மக்கள் பதிப்பு
-ஜீலியன் போர்ச்சார்ட்
முதல்
பதிப்பு:
நவம்பர், 2013
தமிழில்: கி.இலக்குவன்
வெளியீடு:
பாரதி
புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018.
தொலை பேசி: 044-
24332424, 24332924, 24339024
மார்க்சின் "மூலதன" நூலை புரிந்து கொள்வதற்கு, பல்வேறு அணுகுமுறையிலான நூல்களைப் படிப்பது நல்ல பலனையே கொடுக்கும். அந்த வகையில் இந்நூலாசிரியர் ஜீலியன் போர்ச்சார்ட் குறிப்பிட்ட விதமான அணுகுமுறையை கடைபிடித்துள்ளார். அதாவது, மார்க்சின் அனைத்து அடிப்படைக் கருத்துக்களை அவரது சொற்களிலேயே தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் வாசகர் மருண்டு போகவோ, களைப்படையவோ கூடாது என்பதை கருத்தில்
கொண்டும், நூலின் அளவு
பெரியதாகாமலும், மார்க்சின்
கருத்துக்களை தேர்வு செய்து படைத்துள்ளார்.
மார்க்சின்
நூலை சுருக்குதல், இடையிடையே சொற்களை மாற்றியமைத்து
மற்றும் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு மட்டும் சில சொற்களைக் கொண்டும் நிறைவு செய்துள்ளார்.
மார்க்சின்
மூலதன மூன்று தொகுதிகளின் கருத்தையும் உள்ளடங்கிய வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மூலதன மூன்று தொகுதிகளின் பக்கங்கள் 3,000த்தை தாண்டுகிறது. இதனை சுருக்கி 350 பக்கத்தில் கொடுத்துள்ளார். சுருக்கத்தில் விடுபட்டவற்றை மதிப்பு குறைவானதாகக்
கருதிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜீலியன் போர்ச்சார்ட்.
மூன்றாவது
தொகுதியின் கணிசமான பகுதியை முதலில் நமக்கு அறிமுகம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து முதல் தொகுதியும் இடையிடையே
இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகளின் பகுதிகளையும் இணைத்துள்ளார்.
பொதுவாக
மார்க்சின் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் சுருக்கப்பட்ட
மார்க்சின் நூலாகவே காட்சியளிக்கிறது.
இதன்பொருட்டே இந்நூலை
படைத்த ஆசிரியர் தம்மை பதிப்பாசிரியர் என்றே பதிந்துள்ளார். பதிப்புரை, இறுதியுரை, மற்றும் பிற்சேர்க்கைத் தவிர்த்து இந்த
வழிமுறையில் நூல் அமைந்துள்ளது. சில பகுதிகளில் மார்க்சின் கருத்துக்களை
சிறப்பாகவே விளக்கியிருக்கிறார். குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர் மீது தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்ற 10ம் அத்தியாயம், பணம் பற்றிய
16ம் அத்தியாயம்.
மார்க்சின் வார்த்தைகளை பயன்படுத்தி பதிப்பாசிரியர் சிறப்பாக நமக்களித்த பகுதிகள் சிலவற்றைத்
தொகுப்போம்.
"உழைப்புச் சக்தியைப் பயன்படுத்தும் போது தான் உபரிமதிப்பு உருவாகிறது என்பதால் உழைப்புச் சக்தியை வாங்குவது இந்த நிகழ்முறையில் இன்றியமையாத அம்சமாகத் திகழ்கிறது என்பதை நாம் அறிவோம்" -பக்கம் 256
"வணிகமூலதனம் உபரிமதிப்பை உருவாக்குவதில்லை என்பதால் சாராசரி லாபமாக அதற்கு சேரக்கூடிய உபரிமதிப்பானது ஒட்டுமொத்த உற்பத்தித்தன்மை கொண்ட மூலதனத்தால் உருவாக்கப்படும் உபரிமதிபின் ஒருபகுதியாகவே இருந்தாக வேண்டும்.
..
வர்த்தக லாபம் என்பது சரக்குகளின் விலையை அவற்றின்
மதிப்புக்கு மேல் உயர்த்துவதிலேயே மட்டுமே அடங்கியுள்ளது என்ற நம்பிக்கை ஒரு மாயையே" -பக்கம் 275
"..வணிக மூலதனமும் சரக்குகளில் அடங்கியுள்ள ஊதியமிலா உழைப்பின் ஒரு பகுதிக்கு தான் விலை தருகிறது. சரக்குகள் விற்கப்படும் போது அப்பகுதிக்கும் சேர்த்து விலை பெறுகிறது. உற்பத்தி மூலதனம் பிறரது ஊதியமிலாத உழைப்பை நேரடியாக தனதாக்கிக் கொள்வதன் மூலம் உபரிமதிப்பை உற்பத்தி செய்கிறது. வணிக மூலதனமோ ஏற்கெனேவே இருக்கக்கூடிய உபரிமதிப்பில் ஒரு பகுதியை தனக்கே மாற்றிக் கொள்கிறது" -பக்கம்
279
"..வணிகர் வாங்குவது நமது அனுமானத்தின்படி வர்த்தகப் பணியே அன்றி வேறல்ல.
இது சரக்குகளை பணமாகவும் பணத்தை சரக்குகளாகவும் மாற்றுவதற்கு அவசியமான உழைப்பு என்ற விதத்தில் செய்யப்பட்டது. எனவே இந்த உழைப்பு மதிப்புகளை மாற்றும் உழைப்பே அன்றி மதிப்புகளை படைக்கும் உழைப்பு அன்று."
-பக்கம் 282
"பிறருடைய உழைப்பை சுரண்டுவதற்காக நிர்வாகப் பணிகளையும் கண்காணிப்புப் பணிகளையும் எஜனமானர் என்ற நிலையில் இருப்பவர் செய்ய வேண்டியவையாக இருக்கிறது என்ற உண்மை அத்தகைய சுரண்டலை நியாயப்படுவதற்கு பல நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலாளியானவர் பிறரது ஊதியமிலா உழைப்பை தனதாக்கிக் கொள்வதானது மூலதன உடைமையாளர் செய்யும் வேலைக்காக அவருக்கு முறையாகக் கிடைக்கும் ஊதியமாக பல நேரங்களிலும் எடுத்துக்காட்டப்படுகிறது." -பக்கம்
316-317
மார்க்சின்
மூலதன நூலின் வழியிலேயே ஜீலியன் போர்ச்சார்ட் செல்லும்போது இது போன்று கருத்துரைக்கிறார், ஆனால் இறுதி அத்தியாத்தியாமான நெருக்கடிகள் என்பதிலும் பிற்சேர்க்கையான "நெருக்கடிகள் குறித்த மார்க்சின் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள்" என்ற பகுதியிலும் மார்க்சின் முடிவுகளில் இருந்து விலகிவிடுகிறார்.
"...எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக இந்நூல் செய்துள்ளதைப் போலவே இக்கோட்பாட்டையும் (நெருக்கடிகள்) ஆக்குவதற்கு செய்யப்பட்ட முயற்சி அதாவது சுருக்குதல் மற்றும் இடையிடையே சொற்களை மாற்றியமைப்பது போன்றவற்றின் மூலம் இதனைச் செய்வதற்கான முயற்சியானது துரதிஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளது" (பக்கம் 336) -ஜீலியன் போர்ச்சார்ட்.
உண்மையில் அவர் நெருக்கடியை புரிய வைப்பதில் தோல்வியடையவில்லை, மார்க்சியவழியில் விளக்குவதில் தான் தோல்வி கண்டுள்ளார்.
பொருளாதார
நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு முறை காரணமே தவிர, முதலாளியின் தவறல்ல (பக்கம் 336) என்று கூறுவதின் மூலம் ஜீலியன் போர்ச்சார்ட் முதலாளியைக் காப்பாற்ற முனைகிறார். மூலதனத்தின் உருவடிவமாக முதலாளியைப் பார்க்காமல், மூலதனத்தையும் முதலாளியையும் பிரித்துக்காட்டுகிறார்.
ஜீலியன்
போர்ச்சார்ட் கூறுகிறார், ”..ஒரு சமநிலை
எட்டுவதற்கு முயற்சிக்கப்பட வேண்டும். அதாவது நுகர்வோருக்குத் தேவைப்படும் அதே
அளவில் ஒவ்வொரு சரக்கும் சாத்தியமான அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். தேவைப்படுவதைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ
அல்ல, .....” (பக்கம் 347) என்று முதலாளித்துவ உள்முரண்பாடுகளுக்கு
நிர்வாக வழிமுறையிலான விடையைத் தேடுகிறார்.
முதலாளித்துவ
முறைக்கு முன்பான அமைப்பில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களின் தேவைகளை துல்லியமாக முன்கூட்டியே
அறிந்து அதன்படி உற்பத்தி நிகழ்த்தினர். இன்றைய முதலாளித்துவ முறையில் இதுபோன்று
அறிந்திட முடியாது, ஏனென்றால் முதலாளித்துவ அமைப்பில்
வணிகமும் போக்குவரத்தும் வளர்ந்துவிட்டன, இதனால் தொலைதூர நகரத்தின் அதிலும்
குறிப்பாக அன்னிய நாட்டு நகரத்தின் தேவைகளின் அளவை முன்கூட்டியே ஊகிப்பது சாத்தியமல்ல
என்று மார்க்சியத்துக்கு மாறான ஒன்றை பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக காட்டுகிறார்.
இதனை
தெளிவாகவே முன்வைக்கிறார், "..காரணங்கள் எதுவாக இருந்தபோதிலும் நெருக்கடி என்பது உற்பத்திக்கும்
நுகர்வுக்குமிடையேயான சமநிலை சீர்குலைக்கப்படுவதில் அடங்கியுள்ளது. எழுகிற கேள்வி இது தான். எப்போதுமே இது இப்படித் தான் இருந்ததா? அத்தகைய பாதிப்புகள் இல்லாத ஒரு
காலமோ - அல்லது அது
சாத்தியமற்றதாக இருந்த ஒரு காலமோ இருந்திருக்கவும் முடியுமா? இதற்கு ஒரு தெளிவான பதிலை அளிப்பது
சாத்தியமல்ல.” (பக்கம் 348)
பொருளாதார
நெருக்கடிக்கான தீர்வை முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே தேடுவதால் ஜீலியன் போர்ச்சார்ட்டால் சாத்தியமான பதிலை அளிக்க முடியாமல் இருக்கிறார். நெருக்கடிக்கு தீர்வாக மார்க்ஸ்,
எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாமையே இந்த சாத்தியமற்றதுக்குக்
காரணமாகும். இன்றைய தினம் சரக்குகளை உற்பத்தியாளர்களிடைமிருந்து
நுகர்வோருக்குக் கொண்டு செல்லும் மிகவும் சிக்கலான கருவியானது சீரற்றதாக (பக்கம்
348) இருப்பதாக கூறி,
முதலாளித்துவ அமைப்பின்
உள்ளேயே தீர்வை எதிர்நோக்குகிறார். அதுமட்டுமல்லாது
இந்த மிகை உற்பத்தியினால் ஏற்பட்ட நெருக்கடி என்பது தனித்தனி முதலாளிகளிடையே
ஏற்படுகின்றன போட்டியினால் உருவான சிக்கல் என்று பார்க்காமல், நுகர்வோரின் தேவைகளினாலேயே தீர்மானிக்கப்பட்டதாக
கருதுகிறார்.
தனித்தனி முதலாளிகள் போட்டியின் காரணமாக, தமது பொருளின் உற்பத்தி செலவை குறைக்கும் நோக்கத்தில், தொழில்நுட்பத்தையும், நவீன கருவிகள் இயந்திரகங்களையும் தோற்றுவித்து, அதிகமான பொருட்களை சந்தையை நோக்கி அனுப்பிவிடுகின்றர். இந்த திட்டமிடாத செயலால் முதலாளித்துவ பொருள் உற்பத்தியில் மிகைஉற்பத்தி எற்பட்டு பொருளாதார நெருக்கடி உருவாகிறது. மீண்டும் மீண்டும் எழும் இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்பில் தீர்க்க முடியாத சிக்கலாக மாறிவிடுகிறது. சமூக உற்பத்திமுறையாக மாறிவிட்ட முதலாளித்துவ உற்பத்திமுறைக்கும், முதலாளித்துவ தனிச்சொத்தின் அடிப்படையிலான விநியோக முறைக்கும் முரண் முற்றிவிடுகிறது. மறுவுற்பத்தியை தொடங்க முடியால் நிலைகுலைந்து போன இந்த அமைப்புமுறை தூக்கி எறியப்பட்டு, அந்த இடத்தில் புதிய சோஷலிச சமூகம் அமைக்கப்படுவதே இந்த சிக்கலுக்கான தீர்வாக மார்க்சியம் கூறுகிறது.
எங்கெல்சின்
“கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்ற படைப்பில், முதலாளித்துவ உற்பத்தி முறையில்
மிகை உற்பத்தியால் உருவாகும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாது என்று கூறியதை
குறிப்பிடும் ஜீலியன் போர்ச்சார்ட் இதற்கு மேல் எங்கெல்ஸ்
கூறுவதை தவிர்த்துவிடுகிறார்.
“கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்ற கேள்விபதில் பகுதியில்
எங்கெல்ஸ் 12 கேள்விக்கான பதிலின் இறுதியில் கூறியிருக்கிறார்:-
"இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும்
இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு
ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும்
கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி,
அவை எப்போதும் பொதுவான
புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு
முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன."
எங்கெல்ஸ்
குறிப்பிடும் இந்த அபாயத்தை ஜீலியன் போர்ச்சார்ட் மறைத்தது விடுகிறார்.
"(13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில்
இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?" என்ற கேள்வியை எழுப்பி எங்கெல்ஸ் நமக்கு தீர்வை நல்குகிறார்:-
"தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:
(1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு
இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம்
காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,
(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக
இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்."
-ஆக இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு ஒரு புதிய சமூக அமைப்பை தோற்றுவிப்பதே என்றும் அடுத்து தனியுடைமை ஒழிக்கப்பட
வேண்டும் என்றும் எங்கெல்ஸ் கூயிருக்கிறார். இதனை ஜீலியன் போர்ச்சார்ட் பொருட்படுத்தவே
இல்லை.
உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும்
விலங்குகளாக உற்பத்தி உறவுகள் மாறிவிடும் போது சமூகப் புரட்சி ஏறப்படுகிறது என்று மார்க்ஸ்
கூறுகிறார்:-
“வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள்
அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில்
வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள்
மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து
அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப்
புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”
அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை
லெனினும் முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகம், அதனைத் தொடர்ந்து நெருக்கடியும் ஏற்படுவதைக் குறிப்பிட்டு இறுதியில் கூறுகிறார்:-"உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்" (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்) என்று எழுதியுள்ளார்.
ஆக, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் காட்டிய அரசியல் பொருளாதார வழியில், வரலாற்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால்
கூறப்பட்ட தீர்வான உடைமைப் பறித்தவரின் உடைமைப் பறிக்கப்படும் என்பதை ஏற்காதவர்கள், முதலாளித்துவ உற்பத்தி முறையின்
உள்முரண்பாட்டால் உருவான பொருளதார நெருக்கடிக்கான தீர்வை முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே
நம்பிக்கையோடு தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஜீலியன் போர்ச்சார்ட் தம் நூலில் மார்க்சின்
கருத்து வெளிப்படுத்துகிறார் ஆனால் அதனை பின்பற்றாமல் விட்டுவிடுகிறார்.
“மூலதனத்தின் ஏகபோகத்துடன் கூடவே
தோன்றி அத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த பொருளுற்பத்தி முறக்கு மலதன ஏகபோகமே பூட்டிய
விலங்காகிவிடுகிறது. உற்பத்தியின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமும் வளர்ந்து செல்கையில்
ஒரு கட்டத்தை எட்டுகிறது. அப்போது அதன் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகிவிடுகிறது.
எனவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனயுடையின் சாவு மணி ஒலிக்கிறது
உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது” (பக்கம்231) என்று நமக்கு எழுதிகாட்டி இருக்கிறார். ஆனால் இதற்கு
மாறாக அவர் நுகர்வை அதிகரிப்பது (increase of consumption) மற்றும் திறம்பட்ட நுகர்வை ஏற்படுத்துவது
(effectively
consumed) என்று முதலாளித்துவ
அமைப்பின் உள்ளேயே தீர்வை தேடிக் கொண்டிருக்கிறார்.
ஜீலியன் போர்ச்சார்ட்:-
"...நுகர்வை
அதிகரிப்பதன் மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதும் அதன் மூலம் இப்போதும் இதன்
பிறகும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்குகளும் பயனுள்ள விதத்தில் நுகரப்படலாம்
என்பதும் குறித்தும் நமக்கு திடமான நம்பிக்கை ஏற்பட்டு விடுமானால் இந்த உண்மைகள் குறித்து
ஒரு தெளிவு நமக்கு ஏற்பட்டு விடுமானால் எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கத்தக்க வாய்ப்பின்
வாசல்கள் நமக்கு திறந்து வைக்கப்படும்.
அப்போது ஒவ்வொருவரும் பொருளாதாய
இன்னல்கள் மற்றும் துன்பதுயரங்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான சமூக நிலைகள் தோன்றுவதை
நாம் எதிர் நோக்க முடியும்.”
(பக்கம் 360)
மகிழ்ச்சி
அளிக்கத்தக்க இந்த வாய்ப்பின் வாசலை மார்க்சிய வழிமுறையில், சமூக மாற்றத்தில் காணாமல்
சமூக நிலமைகளின் மாற்றத்தை எதிர் நோக்குகிறார். இது நெருக்கடியால் தவிக்கும் முதலாளியின் ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
மீண்டும் மீண்டும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் நெருக்கடிகள் ஏற்படாத வகையில் செயல்பட முடியுமா?, முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே ஏற்பட்ட நெருக்கடிக்கு அதற்குள்ளேயே திர்வு கிடைக்குமா? என்று மார்க்சின் மூலதன நூலை முதலாளிகள் படித்தும் ஆராய்ந்தும் வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் முதலாளிகளும் அவர்களது அறிவுத்துறையினரும் மூலதன நூலை இன்று நாடிவருவது இதற்கேயாகும். ஆனால் மூலதன நூல் முதலாளித்துவத்தின்
நெருக்கடிக்கான காணரத்தை கூறுவதுடன் அதற்கான தீர்வு முதலாளித்துவ அமைப்பில் இல்லை என்பதையும்
வெளிப்படுத்தியுள்ளது.
பாட்டாளி வர்க்கத்துக்கு மூலதன நூல் முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்படுவதையும்
அந்த இடத்தில் புதிய அமைப்பு தோற்றம் பெற வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.
எங்கெல்ஸ்
மார்க்சின் "மூலதன" நூலுக்கு எழுதிய மதிப்புரையில்
(1867) சமூக புரட்சியின் அவசியத்தையும் சாத்தியத்தையும் தெரிவிக்கிறார்:-
".. நம்முன் இருக்கும் நூலின் ஆசிரியர்.
பொருளாதார விஞ்ஞானம் முழுவதுடனும் சம்பந்தப்பட்ட
வகையில் மூலதனம், உழைப்பு ஆகியவற்றின் உறவு முழுவதையும்
மறுக்க முடியாத அரிய அறிவுடன் விளக்குகிறார்,
"நவீனகால சமூகத்தை இயக்குவிக்கும்
பொருளாதார விதிகளைப் புட்டுக்காட்டுவதைத்" தனது இறுதி லட்சியமாகக் கொள்கிறார், இவ்விஷயம் பற்றிய தெளிவான அறிவுடன் வெளிப்படையான
உண்மையான பரிசீலனைகள் நடத்தியவின் "முதலாளித்துவ உற்பத்தி முறை" முழுவதும்
ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
..
மூலதனத்தின் ஒரு முகமான குவிதல்
மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி
தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப்
புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும்
மார்க்சின் தற்படைப்பான சாதனையாகும்"
அடுத்து
"மக்களின்
மார்க்ஸ்" நூலின்
முன்னுரைக்கு வருவோம். இதில் ஜீலியன் போர்ச்சார்ட் மார்க்சைப் பற்றியும் அவரது
மூலதன நூலைப் பற்றியும் அவதூறாக எழுதியிருக்கிறார்.
பொருளாதார
அறிவியலின் உள்ளடக்கமே மார்க்சின் முழுக் கவனம் மற்றும் ஆற்றல் எடுத்துக் கொண்டிருந்ததால், தமது கருத்தை வெளிப்படுத்தும் வடிவத்துக்கு
அவர் எத்தகைய முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்தையே புரியாத் தன்மைக்கான காரணமாக கூறுகிறார்
ஜீலியன் போர்ச்சார்ட். இது மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர்களின் முன்னுரையின் காணப்படும்
எழுத்துக்களுக்கு முரணாக இருக்கிறது.
"..மதிப்பின்
வடிவம் பற்றிய அனுபந்த விளக்கம் பெரும்பாலான வாசர்களுக்குத் தேவை என்று.." லு.குகெல்மன் மார்க்சிடம் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் இரண்டாம் ஜெர்மன்
பதிப்பில் திருத்தம் செய்திருக்கிறார். இப்படி இருக்க ஜீலியன் போர்ச்சார்ட் மார்க்ஸ் வடிவத்துக்கு
கவனம் செலுத்தவில்லை என்பது அவதூறானதே. அத்தோடு ஜீலியன் போர்ச்சார்ட் நிற்கவில்லை,
"..அவரையொத்த
பரந்துபட்ட ஞானம் இல்லாதவர்கள் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானவை என்பதை அவர்
உணர்ந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இதற்கும் மேலாக போதிய பயிற்சி இல்லாதவர்களுக்காக
எழுதும் எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை மாறாக ஒரு கடுமையான அறிவியல் படைப்பை உருவாக்கும்
எண்ணத்தையே அவர் கொண்டிருந்தார்"
(பக்கம் 4) என்று எழுதியிருக்கிறார். இது எங்கெல்ஸ் நமக்குக் காட்டுகின்ற
காட்சிகளுக்கு எதிரானதாகும்.
""தாஸ் கேபிட்டல்" கண்டத்தில் (Continent) "தொழிலாளி வர்க்கத்தின் பைபிள்" என்று போற்றப்படுகிறது. இந்த நூலில் கண்டுள்ள முடிவுகள் ஜெர்மனியிலும்
ஸ்விட்சர்லாந்திலும் மட்டுமன்றி, பிரான்சிலும் ஹாலந்திலும் பெல்ஜியத்திலும்
அமெரிக்காவிலும், ஏன் இத்தாலியிலும் ஸ்பெயினிலும்
கூட நாளும் பரவி, மேலும் மேலும் மாபெரும் தொழிலாளி
வர்க்க இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும், எங்கு பார்த்தாலும் தொழிலாளி வர்க்கம் தனது
நிலைமையினுடையவும், விருப்பங்களுடையவும் மிகப் பொருத்தமான
தெரிவிப்பை இந்த முடிவுகளில் மேலும் மேலும் அடையாளங் கண்டு கொள்கிறது என்பதை அந்த இயக்கத்துடன்
பரிச்சயமுள்ள எவரும் மறுக்க மாட்டார்"
(ஆங்கிலப் பதிப்புக்கு
முன்னுரை- 1886)
முப்பது
ஆண்டுகளாக மூலதன நூலை ஆய்வுசெய்த ஜீலியன்
போர்ச்சார்ட் முப்பத்து
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய எங்கெல்சின் கருத்துக்கு மாறாக எழுதியிருப்பது ஏன்?. மார்க்ஸ் குறிப்பிடுகிற ஜெர்மன் தொழிலாளி
முப்பது ஆண்டுகளுக்குப் பின்னால்
இந்த நிலையை ஏன் அடைந்தார்கள் என்பதை எல்லாம் இங்க ஆய்வு செய்வதைவிட, மார்க்சும் எங்கெல்சும் முன்னுரைகளில் மூலதன
நூலை வாசிப்பதற்கு செய்த உதவிகளுடன் மூலதன நூலை வாசிப்போம்.
அது மட்டும் அல்லாது, மார்க்சும் எங்கெல்சும் பெல்ஜியத்தில் தங்கியிருந்த ஜெர்மன் தொழிலாளர்களுக்கு, அரசியல் அறிவை வளர்க்கவும், விஞ்ஞான கம்யூனிசத்தின் கருத்தைப் புரியவைப்பதற்கும் 1848ல் ஜெர்மன் தொழிலாளர் கழகத்தை அமைத்தனர். அதில் மார்க்ஸ் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு விரிவுரை நிகழ்த்தியுள்ளார். இந்த உரைகளே “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற தலைப்பிலான மார்க்சின் நூல் நமக்குக் கிடைத்திருக்கிறது.
1891ல் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு இந்த சிறு நூலை எங்கெல்ஸ் வெளியிடார். 1859ஆம் ஆண்டுகளில் மார்க்ஸ் அடைந்துள்ள அரசியல் பொருளாதார சிந்தனைக்கு ஏற்ப தாம் மேற்கொள்ளும் திருத்தங்களுடன் இந்த மறுபதிப்பை
வெளியிடும் போது அவர் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுப்பாய்வுகளை, படிப்பறிவில்லாத தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியவைத்துவிட முடிகிறது. ஆனால் மெத்தப் படித்த மேதாவிகளுக்கோ இத்தகைய நுட்பமான பொருளாதாரப் பகுப்பாய்வுப் பிரச்சினைகள் அவர்தம் வாழ்நாள்
முழுவதும் தீர்க்க முடியாத புதிர்களாகவே இருக்கின்றன என்று தமது முன்னுரையில் எழுதியுள்ளார்.
போதிய
பயிற்சி இல்லாதவர்களுக்காக எழுதும் எண்ணம் எதுவும் மார்க்சுக்கு இல்லை, மாறாக ஒரு கடுமையான அறிவியல் படைப்பை உருவாக்கும் எண்ணத்தையே அவர்
கொண்டிருந்தார் என்ற ஜீலியன் போர்ச்சார்ட்டின் கருத்து மார்க்சின் உண்மை நிலைக்கு மாறானது. மூலதன நூல் மேதமை பொருந்திய படைப்பு தான், ஆனால் அது மெத்த படித்த மேதாவிகளுக்காக மட்டும் எழுதப்பட்டது என்று கூறிவது தவறானது.
மார்க்ஸ்
உயிரோடு இருக்கும் போது மூலதன முதல் தொகுதி பல பதிப்புகளாக (மொழியாக்கத்தையும் சேர்த்து) வெளிவந்திருக்கிறது. அவரது மறைவுக்குப் பின் இரண்டாம்
மூன்றாம் தொகுதி எங்கெல்சால் பதிப்பக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையைக்கு மாறாக ஜீலியன் போர்ச்சார்ட் "மார்க்சினாலேயே தனது பணியை நிறைவு
செய்ய முடியவில்லை என்ற உண்மையைக் குறிப்பிட வேண்டும்" (பக்கம் 5) என்று கூறியிருக்கிறார். மூன்றாம் பகுதியின் இறுதி "கையெழுத்துப் பிரதி இங்கே அரைகுறையாக
நின்றுவிடுகிறது" என்று பதிபித்திருப்பது உண்மையே, ஆனால் அது மார்க்சின் மறைவால் ஏற்பட்டது, இதனை மார்க்சாலேயே தனது பணியை நிறைவு
செய்ய முடியவில்லை என்று கூறுவது அவதூறானதே. முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டால் ஏற்படுகின்ற
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை அரசியல் பொருளாதார வழியிலும், வரலாற்றுப் பொருள்முதல்வாத வழியிலும்
நமக்கு அளித்திடாமலா!! மறைந்துவிட்டார்.
முதலாளித்துவத்தின்
தனிவுடைமை விரும்பிகள், மார்க்சின் தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாததை மறைப்பதற்கு மார்க்சின் நூல் குறைபாடுடனும், புரியாத் தன்மை பெற்றதாகவும் இருப்பதாக கூறிவருகின்றனர். இது முதலாளித்துவத்தின் மறைவையும், சோஷலிசப் புரட்சியையும் ஏற்றுக்கொள்ள
முடியாமையை வெளிப்படுத்துகிறது.
லெனின்
தமது மார்க்சிய அரசியல் பொருளாதார சிந்தனையை வளப்படுத்துவதற்கும், ஏகாதிபத்தியத்தியம் முதலாளித்துவத்தின்
உச்சக்கட்டம் என்று அராய்ந்து எழுதுவதற்கும் உதவிய மார்க்சின் மூலதன நூல் நமக்கு புரியாத்
தன்மையோடும் குறைபாட்டோடும் காணப்படாது என்பதே உண்மைநிலை.
நூல்
விமர்சனப் பகுதியிலேயே ஒன்றை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். பாரதி புத்தகாலயம் குறுகிய காலகட்டத்தில், அரசியல் பொருளாதார நூல்கள் நான்கை
வெளியிட்டுள்ளது. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்” (2010), எங்கெல்ஸ் எழுதிய "மார்க்சின் மூலதனம் பற்றி...'2010), டேவிட் ஹார்வி எழுதிய "மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி" (2012) அடுத்து அண்மையில் வெளியிட்டுள்ள ஜீலியன் போர்ச்சார்ட் எழுதிய
“மக்களின் மார்க்ஸ்” இதில் எங்கெல்ஸ் நூலைத் தவிர்த்து மற்ற
மூன்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கி.இலக்குவன்.
இந்த தொடர் வெளியீடு
கண்டிப்பாக பாராட்டத் தக்கதே.
இம்முயற்சி, தமிழகத்தில் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய அறிதலுக்கு பெரும் பங்களிப்பை நல்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாரதி புத்தகாலயம் அரசியல் பொருளாதார நூலை இது போல் தொடர்ந்து வெளியிட வேண்டும். அதற்கு கி.இலக்குவன் அவர்கள் மொழியாக்கம்
செய்திட வேண்டும்.
மொழியாக்கம்
செய்திட வேண்டிய சில ஆங்கில நூல்கள்:-
1.Economic &
Philosophical Manuscripts
-Marx
2. Comments of V
I Lenin concerning Rosa Luxemburg's book Accumulation of Capital
-
V I Lenin
3. Rosa
Luxemburg's Unsuccessful Addition to Marx's Theory
-
V I Lenin
4. The
Accumulation of Capital
-Rosa
Luxemburg
5. Guide to
Marx's Capital
-
Michael Eldred & Mike Roth
6. The Crisis of
Keynesian Economics A MARXIST VIEW By
-
Geoffrey Pilling
7. The Economic
Doctrines of Karl Marx
-Karl
Kautsky
8. Essays on
Marx's Theory of Value
-Isaak
Illich Rubin
9. Marx,
Classical Political Economy and the Problem of Dynamics
-Henryk
Grossman
மூலதன
தொகுதி இரண்டு மற்றும் மூன்றினுக்கான டேவிட் ஹர்வியின் வழிகாட்டும் நூல்கள்
வணக்கம் தோழர்.. நான்தான் நந்தன் ஶ்ரீதரன்.. பிளாக்குகளில் பின்னூட்டம் இடும்போது எனது இந்த வலைப்பூ பெயரே பதிவாகிறது.. அதை எப்படி தவிர்ப்பது என்றே தெரியவில்லை..
ReplyDeleteமற்றபடிக்கு வழமையான உங்களது கூர்த்த விமரிசனப் பார்வை என்னை வியக்கவே வைக்கிறது.. மூலதனமாகட்டும், அதன் சுருக்கமாகட்டும்.. எளிய மக்களை சென்றடைகிற மாதிரி எளிமைப் படுத்தி எழுதினால்தான் என்ன என்ற எனது ஆதங்கம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.. நல்ல கருத்துகளை எல்லோரிடமும் அவர்களது மொழியிலேயே கொண்டு சேருங்கள் தோழர்..
மற்றபடிக்கு உங்களது எழுத்துப் பணி எப்போதும் போலவே இந்த கட்டுரையிலும் உங்கள் மீதான எனது மதிப்பை உயர்த்துகிறது என்பதும் உடனுறை உண்மையே..
தோழர் த.ஜீவானந்தம் எழுதிய "மார்க்ஸின் மூலதனம்- வாசிப்புக்கு ஒரு திறவுகோல்" மிக விரைவில் வெளிவர இருக்கிறது.
ReplyDeleteஇந்த நூல் மூலதன நூலின் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருக்கும்
"மக்களின் மார்க்ஸ்" (மூலதனத்தின் மூன்று தொகுதிகள்: சுருக்கமான மக்கள் பதிப்பு) என்ற நூலில் "... போதிய பயிற்சி இல்லாதவர்களுக்காக எழுதும் எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை மாறாக ஒரு கடுமையான அறிவியல் படைப்பை உருவாக்கும் எண்ணத்தையே அவர் கொண்டிருந்தார்" என்று ஜீலியன் போர்ச்சார்ட் சொன்னது மூலதன நூலுக்கு என்றாலும் இது மார்க்சுடைய எந்த நூலுக்கும் பொருந்தாது என்பதே உண்மை.
ReplyDeleteபெல்ஜீயத்தில் குடியேறிய ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்தை விரிவுரை நிகழ்த்தினார். இதன் அடிப்படையில் நூலாக எழுதும் போது குறிப்பிடுகிறார்:-"எமது கருத்துக்களைக் கூடுமானவரை எளிதாகவும் மிகப்பலரும் படிக்கத்தக்க விதத்திலும் எடுத்துரைக்க முயற்சி செய்வோம், அரசியல் பொருளாதார அரிச்சுவடிப் பாடத்துக்குரிய கருத்துக்களுங்கூட தெரிந்திருப்பதாய்க் கொள்ளாமல் எடுத்துரைப்போம்" என்று எழுதியுள்ளார். " (கூலியுழைப்பும் மூலதனமும்)