Wednesday, 10 August 2016

மண்ணுக்கேற்ற மார்க்சியமும் மார்க்சிய அடிப்படைகளும்

மார்க்சிய அடிப்படைகளை அறிவதற்காகவும் அதன்மீதான திருத்தல்வாதத்தை எதிர்ப்பதற்காகவும் லெனின் நிறைய எழுதியிருக்கிறார். அப்படி இருக்க, இவரது நூலையே திருத்தல்வாதத்திற்கு பயன்படுத்தும் போக்கு இன்றுவரை தொடர்கிறது. ருஷ்ய நிலைமைகளுக்கு ஏற்ப மாக்சியத்தை அணுக வேண்டும் என்றும், அவ்வாறு அணுகும் போது மார்க்சியம் செழுமையடையும் என்று சேர்த்துச் சொன்னால், பலர் இதனை மார்க்சிய திருத்தலுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். மார்க்சிய அடிப்படைகளை விளக்குகின்ற பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் எழுதிய நூல் முதற்கொண்டு அவர் எழுதிய எந்த பகுதியிலும் மார்க்சியத்தை ஒரு பிரதேசத்துக்கு உரியதாகவோ. ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனித்தனி மார்க்சியம் என்றோ கூறவில்லை. இந்த மண்ணிற்கேற்ற மார்க்சியவாதிகள் இதனைப் புரிந்து கொள்ளவேயில்லை.

மார்க்சிய அடிப்படைகளைப் பற்றி லெனின் எழுதிய நூல்களைப் பட்டியல் இடுவோம் அதில் காணப்படும் கருத்தைக் கொண்டு தெளிவு பெறுவோம்.

1)பிரெடெரிக் எங்கெல்ஸ் (1895)
2)நமது திட்டம் (1899)
3)மார்க்சிமும் திருத்தல்வாதமும் (1908)
4)மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (1910)
5)மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் (1913)
6)மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் (1913)
7)காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்) (1914)

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி எங்கெல்ஸ் மறைந்தார். இதனை ஒட்டி லெனின் பிரடெரிக் எங்கெல்ஸ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.”1

மேலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் அதன் வழியில் சோஷலிசத்தை நடைமுறைப்படுத்தும் சக்தியான பாட்டாளிகள் பற்றியும் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.

சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பது எல்லாம்- சமூகச் சக்திகளில் எது நவீன சமூதாயத்தில், தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோஷலிசத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.”2



அடுத்து நமது திட்டம். இதில் தான் பெரிய சிக்கலை உருவாக்குகின்றனர். இந்தக் கட்டுரை லெனினால் மார்க்சியத்தின் உயிரோட்டத்தை விவரிப்பதற்காக எழுதப்பட்டது.
“மார்க்சின் கோட்பாட்டை (Marx’s theory) சுயேச்சையான முறையில் விரிவுபட (independent elaboration) வளர்த்திடுவது, முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தக் கோட்பாடு பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே (general guiding principles) அளித்திடுகிறது, குறிப்பான முறையில் (in particular) அவை பிரான்சிலிருந்து வேறுவிதமாய் இங்கிலாந்திலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் பிரயோகிக்கப்படுபவை (applied). ஆகவே கோட்பாட்டுப் பிரச்சினைகள் (theoretical questions) பற்றிய கட்டுரைகளுக்கு எமது பத்திரிகையில் மகிழ்ச்சியுடன் இடம் அளிப்போம், சர்சைக்குரிய விவரங்களை (controversial points) பகிரங்கமாய் விவாதிக்குமாறு எல்லாத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”3

                இங்கு லெனின் தெளிவாகத்தான் எழுதியிருக்கிறார். மார்க்சியம் பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே (general guiding principles) அளித்திடுகிறது, ஆகவே கோட்பாட்டுப் பிரச்சினைகள் (theoretical questions) பற்றிய கட்டுரைகள் எமது பத்திரிகையில் இடம் அளிப்போம் என்கிறார். இங்கே அவர் மார்க்சிய அடிப்படைளைப் பற்றி பேசவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே, “நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டு நிலையையே எமது நிலைப்பாடாய் கொண்டு நிற்கிறோம்: (We take our stand entirely on the Marxist theoretical position:) மார்க்சியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்தில் இருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது, இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது, (to lay a firm foundation for this science) இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் (further developing and elaborating it in all its parts) பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று ( indicate the path).” எழுதியிருக்கிறார்.

                இங்கே காணும், “…இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்கு (further developing and elaborating it in all its parts)…” இதனை மட்டும் தனியாக எடுத்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். “நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டு நிலையையே எமது நிலைப்பாடாய் கொண்டு நிற்கிறோம்:“ (We take our stand entirely on the Marxist theoretical position:)”, “பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுகிறோம்” ( indicate the path). இவைகளை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு முதலில் கூறியதை விவரித்து விரித்துக் கொண்டே போகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் மார்க்சியத்தை பிரயோகிக்கப்படுவது (applied) பற்றித்தான் இங்கே பேசப்பட்டிருக்கிறது. ஆனால் திருத்தல்போக்கினர் மார்க்சிய அடிப்படையை திருத்த முயல்கின்றனர்.

                இந்தக் கட்டுரையின் நோக்கத்தை இதன் தொடக்கமே சுட்டிக்காட்டுகிறது.

“தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் (ideological wavering) பீடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ் எங்கெல்ஸ் போதனைகள் புரட்சிக் கோட்பாட்டுக்குரிய உறுதிவாய்ந்த அடித்தளமாய் (foundation) கருதப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழைமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன.”4

மார்க்சிய போதனை குறைபாடானதாக கருதுவதை எதிர்ப்பதற்காக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.

“இப்பொழுது நாம் கேட்கிறோம்: இந்தக் கோட்பாட்டை ( this theory) “புதுப்பிப்பதாய்” “renovators” உரக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக் காலத்தில் பெருங்கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மன் சோஷலிஸ்ட் பெர்ன்ஷ்டைனை மையமாய்க் கொண்டு திரண்டு இருப்போராகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இக்கோட்பாட்டில் புகுத்தியிருக்கிறார்களா?  எதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்திடவில்லை. ( they have not taught the proletariat any new methods of struggle) இதைத் தான் நவீன திருத்தல்வாதிகள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.”5

லெனின் தெளிவாகத்தான் கூறியிருக்கிறார், வளர்த்திடுவது என்பதைற்குப் பொருள், அந்தந்த நாட்டின் சூழ்நிலைமைக்கு ஏற்ப போராட்ட வடிங்களை அமைத்துக் கொள்வதேயாகும். அதாவது மார்க்சியத்தை அந்தந்த நாட்டிற்கு ஏற்ப பிரயோகிப்பதை (applied) பற்றி பேசியிருக்கிறார், ஆனால் இந்த நவீன திருத்தல்வாதிகள் விஞ்ஞான கம்யூனிசத்தின் அடிப்படைகளையே திருத்த, அவர்கள் பொருளில் வளர்க்க முயற்சிக்கின்றனர். வடிவத்தை அமைத்துக் கொள்வதற்கு கூறியதை அடிப்படைக்கு மாற்றிவிடுகின்றனர்.

 “தியரி(theory) கோட்பாடு- என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு மாறுபட வேண்டிய நடைமுறையை வகுத்தளிக்கிறது. மாற்றத்தை எதைக் கொண்டு அணுகுகிறோமோ அது மார்க்சிய விஞ்ஞான அடிப்படையேயாகும். அடிப்படை வளருமா? ஆமாம் என்கிறார் லெனின், அடிப்படை அடிப்படையைக் கொண்டு வளரும் என்கிறார். அடிப்படையை மீறிவளர்ந்தால் அடிப்படை பொய்ப்பித்துவிட்டது என்று பொருள். நவீன திருத்தல்வாதிகள் மார்க்சிய அடிப்படையை மீறிவளர்க்க முயற்சிக்கின்றனர்.

 ஃபாயர்பாக், மார்க்ஸ், எங்கெல்ஸ் காலம் வரையிலான பருப்பொருள் என்பதற்கான வரையறையை, புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிறகு லெனின் வளர்த்ததை இங்கே குறிப்பிடலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்னணு, கதிரியக்கம் கண்டுபிடித்தபோது, அணுக்கள் பிளவுபடக்கூடியவை என்பதை அறிந்த போது, அனைத்துப் பொருட்களின் அடிப்படை அணுக்கள் என்ற கருத்து மாற்றம் பெற்றன. உடனே சில தத்தவஞானிகள் பொருளே மறைந்து போன பிறகு பொருள்முதல்வாதத்திற்கு இனி இடமே இல்லை. பொருள்முதல்வாதத் தத்துவம் தகர்ந்து போயிற்று என்று கூப்பாடு போடும் போது, லெனின் கூறினார் பருப்பொருள் மறைந்திடவில்லை, பருப்பொருளை நாம் எந்தளவுக்கு அறிந்திருந்தோமோ அந்த எல்லை தான் மறைந்தது என்றார்.

““பருப்பொருள் மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப் பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள், பருப்பொருளின் குணாம்சங்களும் (ஊடுருவ முடியாத் தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதியானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பாருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளமானவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”6

                இன்றைக்கு பிரச்சினை செய்பவர்களுக்கும் நாளை பிரச்சினை செய்யப் போகிறவர்களுக்கும் சேர்த்தே லெனின் பதிலளித்துவிட்டார். அதாவது எதிர்காலத்தில் புதியதாக எதைக் கண்டுபிடித்தாலும் அதற்கும் சேர்த்தே பதிலளித்துவிட்டார். நமக்கு புறத்தே பருப்பொருள் இருக்கிறது என்பதும், அது நமது அறிதலில் வெளிப்படுகிறது என்பதும் பருப்பொருளின் சாரமாகும். இது மார்க்சிய அடிப்படைகளை விட்டு தனித்த போக்கில் வளர்த்தெடுக்கப்படவில்லை, மார்க்சிய அடிப்படைகளினுடைய உள்ளடக்கத்தின் அடிப்படையில் தான் அது வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கே பலர், அவரவர் ஊருக்கான மார்க்சியத்தை தனித்த முறையில் வளர்க்க வேண்டும் என்று திரித்துரைக்கின்றனர். இந்த திருத்தலின் உச்சமாக கூறியது, மேலை நாடுகளில் உற்பத்திச் சக்திகளே தீர்மானிக்கிறது, கீழை நாடுகளில் உற்பத்தி உறவுகளே தீர்மானிக்கிறது.

வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையே மறுத்து, சிந்தனைதான் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதே நமது நாட்டு பொருள்முதல்வாதம்!!!! என்ற பிதற்றலையும் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இவர்கள் நமது நாட்டில் காணப்படும் பொருள்முதல்வாதச் சிந்தனைப் போக்கையும் புறக்கணித்துவிட்டு தான்தோன்றித் தனமாக செயல்படுகின்றனர்.

                இதற்கு அடுத்து, மார்க்சியமும் திருத்தல்வாதமும், மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் என்ற கட்டுரை குறிப்பிடத் தக்கதாகும். திருத்தல்வாதத்தைப் பற்றி கூறுகிறார்.

“மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுவிட்டதெனக் கூறுகிறது. சோஷலிசத்தை மறுத்து பிழைப்பு தேடிக் கொள்ளும் இளம் விஞ்ஞானிகளும், காலவதியாகிவிட்ட எல்லா வித "அமைப்புகளின்" மரபுகளையும் பாதுகாத்து நிற்கும் தள்ளாத கிழவர்களும் ஒருங்கே துடித்தெழுந்து மார்க்சைத் தாக்குகின்றனர். மார்க்சியத்தின் முன்னேற்றமானது, தொழிலாளி வர்க்கத்தினரிடையே அதன் கருத்துக்கள் பரவி வேரூன்றி உறுதி பெறுவதானது, மார்க்சியத்தின் மீதான இந்த முதலாளித்துவத் தாக்குதல்களின் வேகத்தையும் கடுமையையும் தவிர்க்க முடியாதபடி அதிகரிக்கச் செய்கிறது. அதிகாரபூர்வமான விஞ்ஞானத்தால் "அழித்தொழிக்கப்படும்" ஒவ்வொருதரமும் மார்க்சியம் மேலும் மேலும் வலுவும் உறுதியும் சக்தியும் பெற்று ஓங்குகிறது.”7

                பாட்டாளி வர்க்கத்தின் உறுதியைப் பிளக்கும் நோக்கோடும் முதலாளிகளை சார்ந்து வாழவைக்கும் போக்கோடும் சீர்திருத்தவாதம் செயற்படுகிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர கடமைகளை துறக்கச்செய்து, அவற்றுக்குப் பதிலாய் மிதவாதத் தொழிலாளர் கொள்கையை அளித்திடுகிறது.

“மார்க்சின் தத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை கூலியடிமை முறை தவிர்க்க முடியாததாகும் என்பதை உணர்ந்து கொள்ளும் தொழிலாளர்கள், முதலாளித்துவச் சீர்திருத்தம் எதனாலும் ஏய்க்கப்பட்டுவிடமாட்டார்கள். எங்கே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்கிறதோ அங்கே சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்கவோ அதிக பயனளிப்பனவாகவோ இருக்க முடியாதென்பதை உணர்ந்து கொள்ளும் இத்தொழிலாளர்கள், மேம்பாடான நிலைமைகளுக்காகப் போராடி, கூலியடிமை முறைக்கு எதிரான போராட்டத்தை மும்முரமாக்குவதற்காக இம்மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அற்பச் சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும், ஏமாற்றவும் முயலுகிறார்கள், அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் சீர்திருத்தவாதத்தின் கள்ளத்தனத்தைக் கண்டு கொண்டதும் அவர்கள் தமது வர்க்கப் போராட்டத்தை வளர்த்துச் செல்லவும் விரிவாக்கவும் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

“ஐரோப்பாவில் சீர்திருத்தவாதம், உண்மையில் மார்க்சியம் துறக்கப்பட்டு அதற்குப் பதிலாய் முதலாளித்துவச் "சமூகக் கொள்கை" கைக் கொள்ளப்படுவதைக் குறிக்கிறது. ருஷ்யாவில் கலைப்புவாதிகளுடைய சீர்திருத்தவாதம் குறிப்பது அது மட்டுமல்ல, மார்க்சிய நிறுவனம் அழிக்கப்படுவதையும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கடமைகள் துறக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாய் மிதவாதத் தொழிலாளர் கொள்கை கைக்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது.”8

இக் கட்டுரையில் மார்க்சியத்தின் அடிப்படைகளை அதாவது தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவற்றில் செய்துவருகிற திருத்தல்போக்கைத் தொகுத்து லெனின் விமர்சிக்கிறார். திருத்தல்போக்கின் காரணத்தையும் கூறுகிறார்.

"மார்க்சிய போதனை - தற்கால சமுதாயத்தின் மிகவும் முன்னேறிய வர்க்கத்துக்கு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்கமைக்க நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு (பொருளாதார வளர்ச்சி காரணமாய்) தவிர்க்க முடியாதபடி  வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிப்பதுமான மார்க்சியப் போதனை - அதன் வாழ்வு முழுவதும் ஒவ்வொரு அடியும் போராடியே முன்னேற வேண்டியிருந்துள்ளது என்பதில் வியப்பு ஏதுமில்லை.

..மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசம் நொறுக்கப்பட்டுவிட்டது. முன்பு போல தனது சொந்த அடிப்படையிலிருந்து போராடுவதற்குப் பதிலாய், இப்பொழுது அது மார்க்சியத்தின் பொது அடிப்படையிலே நின்று, திருத்தல்வாதமாய்ப் போராட்டத்தை நடத்தி வருகிறது."9

மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் என்ற கட்டுரையின் தொடக்கமே சீர்திருத்தம் பற்றிய கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அராஜகவாதிகள் மறுதலிப்பதைப் போல் மார்க்சியவாதிகள் மறுப்பதில்லை அதே நேரத்தில் சீர்திருத்தவாதிகளைப் போல் சீர்திருத்த போராட்டத்துடன் முடங்குவதை மார்க்சியர்கள் வைராக்கியத்துடன் எதிர்த்து போராடுகின்றனர். மேலும் சீர்திருத்தவாதம் முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

“அராஜகவாதிகளைப் போலல்லாது மார்க்சியவாதிகள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, அதாவது ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலே உழைப்பாளி மக்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வதற்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர். ஆனால் அதே போதில் மார்க்சியவாதிகள் சீர்திருத்தவாதிகளை எதிர்த்து மிகவும் வைராக்கியமான ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதுடன் நின்றுவிடும்படி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படத்திவிடுகிறவர்கள். மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கிற வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்படினும், எப்பொழுதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம்.”10

       சீர்திருத்தவாதம் தொழிலாளர்களை பலம் இழக்கச் செய்கிறது, இதிலிருந்து விடுபடுவதற்கு தொழிலாளி வர்க்க இயக்கம் சுயேச்சையாய் செயற்பட வேண்டும்.

“தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் பலம் இழந்தவர்களாகி விடுகிறார்கள், முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழ வேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிவிடுகிறது, முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி வித்தைகளைக் கையாண்டுச் சீர்திருத்தங்களைத் தள்ளுபடி செய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாய் இருக்கிறதோ, அதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளனவோ, சீர்திருத்தவாதக் குறுநோக்கிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு விடுபட்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை விடாது இருத்திக் கொள்வதும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.”11

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் கலைப்புவாதிகளைப் போல் மார்க்சியவாதிகள், மார்க்சிய நிறுவன அமைப்பையும், மார்க்சியக் கட்டுப்பாட்டையும் அழித்து தொழிலாளி வர்க்க இயக்கத்தை சீர்குலைக்கவில்லை. கலைப்புவாதிகள் மார்க்சியத்தை துறந்துவிட்டதைப் போல் மார்க்சியவாதிகள் துறக்கவில்லை, மார்க்சியத்தை அடிநிலையாகக் கொண்டு, சீர்திருத்தவாதத்துக்கு அப்பாற்பட்டும் செயற்படுகின்றனர்.

சீர்திருத்தங்களை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வதிலும், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதிலும் மார்க்சியவாதிகள் பின்னிலையில் தங்கிவிடவில்லை, மாறாக நிச்சயமாய் முன்னிலையில் தான் இருக்கின்றனர் என்பதைத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு அரங்கிலும் நிகழ்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன. தொழிலாளர் தொகுதிகளில் டூமாத் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள். டூமாவின் உள்ளேயும் வெளியேயும் நமது பிரதிநிதிகளின் சொற்பொழிவுகள், தொழிலாளர் பத்திரிகைகளையும் இன்ஷீரன்ஸ் சீர்திருத்தத்தையும் பயன்படுத்திக் கொள்ளுதல், யாவற்றிலும் பெரிய சங்கமான உலோகத் தொழிலாளர் சங்கம், இன்னபலவற்றிலும் - எங்கும் கிளர்ச்சி புரிதல், நிறுவன ஒழுங்கமைப்பு செய்தல், சீர்திருத்தங்களுக்காகவும் போராடுதல் ஆகிய நேரடியான, உடனடியான, அன்றாடச் செயற்பாட்டில் மார்க்சியவாதிகளான தொழிலாளர்கள் கலைப்புவாதிகளை முந்திக் கொண்டு முன்னிலையிலே இருக்கிறார்கள்.

சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான "சாத்தியப்பாடு" ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது வேலை செய்கின்றனர். பிரசாரத்திலும் கிளர்ச்சியிலும் வெகுஜனப் பொருளாதாரப் போராட்டத்திலும் பிறவற்றிலும் சீர்திருத்தவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டித்தல்ல, அதற்கு ஆதரவாய், அது முன்னேற்றம் அடைய அரும்பாடுபட்டு மார்க்சியவாதிகள் வேலை செய்கின்றனர். ஆனால் மார்க்சியத்தைத் துறந்துவிட்ட கலைப்புவாதிகள் இதற்கு மாறாய், மார்க்சிய நிறுவன அமைப்பு ஒன்று இருப்பதையே எதிர்த்துத் தாக்குதல்கள் கொடுப்பதன் மூலமும், மார்க்சியக் கட்டுப்பாட்டை அழிப்பதன் மூலமும், சீர்திருத்தவாதத்தையும் மிதவாதத் தொழிலாளர் கொள்கையையும் ஆதரித்து நிற்பதன் மூலமும் தொழிலாளி வர்க்க இயக்கத்தைச் சீர்குலைத்து வருகிறார்கள்.”12

                லெனின் துணையோடு மார்க்சிய அடிப்படைகளை அறிவதற்கு இரு கட்டுரைகள் நமக்குத் துணைபுரிகின்றன. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும், காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்). இவற்றில் காணப்படும் இரண்டாவது கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு எழுதப்பட்டது. முதல் கட்டுரையில் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கத்தை அதன் தோற்றத்தோடு இணைத்து மிகச்சிறிய அளவில் சுருக்கமாக எழுதியதாகும். அக்கட்டுரையின் தொடக்கத்திலேயே கூறுகிறார்.

“மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.13

                மார்க்சின் வாழ்க்கை பற்றியும் மார்க்சியப் போதனை பற்றியும் எழுதிய கட்டுரையில் லெனின் மார்க்சிய போதனை பற்றியும் அதன் முரணற்ற முழுநிறைவு பற்றியும் கூறுகிறார்.

“மார்க்சின் கருத்துக்கள், போதனைகள் அடங்கிய முழுத் தொகுப்பே மார்க்சியம். 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான சித்தாந்தப் போக்குகள் இருந்தன. அவை மனிதகுலத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, செவ்வியல் ஜெர்மன் தத்துவம், செவ்வியல் ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பனவாகும்.

இந்த மூன்று சித்தாந்தப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்சின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள்கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துக்கள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள்முதல்வாதமாகவும் நவீன விஞ்ஞான சோஷலிசமாகவும் அமைந்துள்ளன.”14

                ஆக மார்க்சின் போதனை முரணற்ற வகையில் முழுநிறைவானதாக மார்க்சின் எதிரிகள்கூட ஒப்புக் கொள்வதாக லெனின் இங்கே குறிப்பிடுகிறார். மார்க்சிய திருத்தல்வாதிகள் மார்க்சிடம் குறை காண்கின்றனர். இந்தத் திருத்தல்வாதிகளின் உண்மையான நோக்கம், மார்க்சின் விஞ்ஞானத் தன்மையை நீக்குவதேயாகும். அதனால் தான் அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்திலும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திலும் தமது கைவரிசைகளைக் காட்டுகின்றனர்.

                மார்க்சோ, எங்கெல்சோ, மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாகக் கொள்ளவில்லை. அதனது இயங்கும் உயிராற்றலை மறுக்கவும் இல்லை. லெனின் இதன் அடிப்படையில் தான் வளர்த்தெடுத்தார். இந்த வளர்ச்சி மார்க்சியத்தை செழுமைப்படுத்தியது. ஏகாதிபத்திய காலத்திய மார்க்சியமாக லெனினியமாக வளர்ச்சியுற்றது.

“எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல என்கிறார் எங்கெல்ஸ்- தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் எங்களுடைய என்கிறார். அடிக்கடி பலரும் மறந்துவிடும் மார்க்சியத்தின் ஓர் அம்சத்தைக் குறிப்பிடத்தகுந்த வலிமையுடனும் பொருள்நிறைவுடனும் இந்த ஒப்புயர்வற்ற வாசகம் வலியுறுத்தியது. இதை மறந்து விடுவதன் மூலமாக நாம் மார்க்சியத்தை ஒருதலைப்பட்சமான, உருக்குலைக்கப்பட்டதான, உயிரற்ற ஒன்றாய்த் திரித்துவிடுகிறோம், உயிர்த்தியங்கி வரும் உயிராற்றலை அதிலிருந்து பறித்து விடுகிறோம், மார்க்சியத்தின் மூலாதாரத கோட்பாட்டு அடித்தளங்களை- அதாவது முரண்பாடுகள் நிறைந்தும் சர்வவியாபகமாயுமுள்ள சரித்திர வளர்ச்சியைப் பற்றிய போதனையாகிய இயக்கவியலை- தளர்த்திப் பலவீனப்படுத்துகிறோம், நமது சகாப்தத்தில் நம்முன்னுள்ள திட்டவட்டமான நடைமுறைக் கடமைகளுடன், வரலாற்றின் ஒவ்வொரு புதிய திருப்பத்தையும் தொடர்ந்து மாறும்படியான இந்தக் கடமைகளுடன் மார்க்சியத்துக்கு இருக்கும் தொடர்பை நாம் அறுத்தெறிகிறோம்.”15

                பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.

“பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோளை இங்கே நான் குறிப்பிடவில்லை (I am not referring, of course, to general and fundamental aims) வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை.”16

வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் மார்க்சியத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் மாறுவதில்லை என்பதை லெனின் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

                மார்க்சியம் வறட்டுச்சூத்திரம் கிடையாது, அது புதியது அனைத்தையும் இயக்கவியல் பார்வையில் கிரகித்துக்கொள்ளும் என்று இதே கட்டுரையில் லெனின் கூறுகிறார். சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களை மார்க்சியம் பிரதிபலித்துக்காட்டும்.

லெனினது எழுத்துக்கள் மார்க்சிய அடிப்படைக்காகப் போராடுகிறது. இப்படிப்பட்ட எழுத்துக்களை மார்க்சிய அடிப்படையில் இருந்து விலகுவதற்குப் பயன்படுத்துவது மிகவும் கொடுமையானது. மார்க்சிய அடிப்படைகளை கைவிட்டவர்கள் மார்க்சியவாதியாக மாட்டார்கள். லெனின் மார்க்சிய அடிப்படைக்காக உறுதியான விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதற்கு தான் நம்மை அறைகூவி அழைக்கிறார்.

“மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல, இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக்கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது, சமூக வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடீரென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாக மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும்.

ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்தமாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து உறுதியாக போராட வேண்டியது தேவை, மார்க்சிய அடிப்படைகளுக்காக உறுதியாக விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.”17

                ஆக, மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்குப் போராடுகிற லெனினை, மார்க்சிய அடிப்படைகளை சிதைவதற்குப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

பயன்படுத்திய நூல்கள்

1,2 பிரெடெரிக் எங்கெல்ஸ்
3.4.& 5.நமது திட்டம்
6 .பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்,
7.8  & 9 .மார்க்சியமும் திருத்தல்வாதமும்
10,11 & 12 மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்
13 .மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
14. காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்)

15. 16. & 17 .மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்

No comments:

Post a Comment