Thursday 14 February 2019

தேசிய இனப் பிரச்சினை: லெனினியமும் குட்டிமுதலாளியத் தேசியவாதமும் - நூல் அறிமுகம்



தேசிய இனப் பிரச்சினை:
லெனினியமும்
குட்டிமுதலாளியத் தேசியவாதமும்

நூலாசிரியர்: மு.வசந்தகுமார்-குமணன்

விலை:ரூ70/-

வெளியீடு:   சோசலிசக் கல்வி மையம் – ஈரோடு
            சமூக விஞ்ஞான ஆய்வரங்கம் - ஓசூர்
மு.வசந்தகுமார், குமணன் ஆகிய இரு தோழர்கள் சேர்ந்து “தேசிய இனப் பிரச்சினை: லெனினியமும் குட்டிமுதலாளியத் தேசியவாதமும்” என்ற நூலை எழுதியுள்ளனர். இந்நூல் தோழர் கார்முகில் எழுதிய “பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை” என்ற நூலை விமர்சித்துள்ளது. விமர்சன நூல்கள் மிகமிகக் குறைவாக எழுதப்படும் இக்காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. தோழர் கார்முகில் எழுதிய “தவறுகளுக்கு தத்துவார்த்த முலாம்” விமர்சன நூல் ஏற்கெனவே வந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம், ஆரோக்கியமாக விமர்சிப்போம்., விமர்சனங்களே நம்மை வளப்படுத்தும். இங்குள்ள பல குழப்பங்கள் விவாதத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

தோழர் கார்முகில் அவர்களின் தேசியக் கண்ணோட்டம் இந்நூலில் விமர்சிக்கப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில், பழங்குடி மக்கள் சமூக அமைப்பில் இருந்து முதலாவது வர்க்க சமூதாயம் தோன்றிய போது தேசிய இனங்கள் அமைந்தன, என்கிற தோழர் கார்முகில் அவர்களின் கருத்து விமர்சிக்கப்படுகிறது. இக்கருத்து ‘தேசிய இனப்பிரச்சினையும் லெனினியமும்” என்ற ஸ்டாலின் எழுதிய நூலில் காணப்படும் லெனின் மேற்கோள் மூலம் மறுக்கப்படுகிறது.

இனக்குழு பிணைப்புகளின் பொதுமைப்படுத்தலும் தொடர்ச்சியும் தேசியப் பிணைப்புகள் என்கிற மிகைலோவ்ஸ்கியின் கருத்தை லெனின் இங்கே விமர்சித்துள்ளார். அதே அடிப்படையில் தோழர் கார்முகில் அவர்களின் கருத்தை விமர்சிக்கின்றனர் இந்நூல் ஆசிரியர்கள். அவ்வாறு கூறும்போது, நீண்ட கால வரலாற்றுப் போக்கில் பல்வேறு இனங்கள் ஒன்று கலந்து முதலாளிய வளர்ச்சிக் கட்டத்தில் அது தேசிய இன அடையாளத்தைப் பெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். முதல் அத்தியாயத்தின் முடிவில் இந்நூலாசிரியர்கள் தோழர் கார்முகில் அவர்களின் மீதான விமர்சனமாக, “தேசிய இன விடுதலையைப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் மேலாக நிறுத்திக் குட்டி முதலாளியத் தேசிய இனவாதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்” என்று நேரடியாகக் குற்றசாட்டை வைத்துள்ளனர்.

ஸ்டாலின் நூலிலும் இதற்கான விளக்கம் இருக்கிறது. "பேர்" போன்றோர்கள் தேசம் என்பதை வரலாற்று வகைப்பட்டதாக அறிந்து கொள்ளாமல், இன வகைப்பட்டதாகவும் பழங்குடியோடும் இணைத்து குழப்புவதைச் சுட்டிக்காட்டி மறுத்துள்ளார். ஆனால் தோழர் கார்முகில் அவர்கள் பழங்குடியில் இருந்து நேரடியாக தேசிய இனம் தோன்றியதாகக் கூறவில்லை. ”பழங்குடி மக்கள் சமூக அமைப்பிலிருந்து முதலாவது வர்க்க சமுதாயம் தோன்றியபோது..” அதாவது முதல் வர்க்க சமூம் தோன்றிய போது என்று தான் கூறியுள்ளார். இதுவும் தவறாகும்.

நாடும், தேசமும் ஒன்றல்ல. ஏன் பேரரசை கூடத் தேசம் என்று அழைக்கப்படுவதில்லை. பேரரசுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் மக்கள் குழுக்களாகப் பல்வேறு வழிகளில் பிடிப்பின்றிப் பிரிந்தே கிடக்கின்றனர். இந்தப் பேரரசில் திரண்டுள்ள மக்கள் போர்களின் போது ஏற்பட்ட வெற்றியின் விளைவாய் இணைந்தவர்கள்.

ஸ்டாலின் கூறுகிறபடி, தேசம் என்பதில் மக்கள் முதலில் நிலையான சமூகமாக இருக்க வேண்டும். அதற்கென்று பொது மொழியும், பொதுவான பிரதேசமும் இருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவக் கட்டத்தின் வழியாக ஏற்பட்ட பொதுவான பொருளாதார வாழ்வும், பொருளாதார ஒன்றிணைப்பு என்பதும் தேசத்துக்கான முதன்மையான அம்சமாகும். இங்குக் கூறப்பட்டது மட்டுமே தேசத்துக்குப் போதுமானவை அல்ல. இதனோடு தேசத்தில் உள்ள மக்கள் தனித்துவமான பொதுப் பண்பாட்டோடு உளவியல் வழிப்பட்ட ஒன்றிப்பும் தவிர்க்க முடியாததாகும்.

இறுதியில் கூறப்பட்ட பண்பாட்டோடு உளவியல் வழிப்பட்ட ஒன்றிப்பு என்பது இனவழியிலான காலச்சாரம் கிடையாது. ஸ்டாலின் தேசம் என்பது குறிப்பிட்ட மக்களைக் கொண்ட சமூகமாகும். இங்கு மக்கள் என்பது இனம் மற்றும் பழங்குடிகளைக் குறிப்பிடவில்லை என்று தெளிவுபடுதிவிடுகிறார். இனவழிப்பட்ட சிந்தனை என்பது மார்க்சியத்தில் கிடையாது.

இந்நூலின் முன்னுரையில் ஏராளமான ஆதாரங்களை அளித்தால் அது மேற்கோள்களின் தொகுப்பாக அமைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் முடிந்தவரை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நிறைய மேற்கோள்கள் நூலில் சேர்க்கப்பட்டுப் பின்பு நீக்கப்பட்டு அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. நூலின் தொடர்ச்சி அறுபட்டுக் காணப்படுகிறது. இது வாசகருக்கு படிக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தும். அதிகக் கவனம் செலுத்தி கூடுதலான காலத்தை எடுத்து இது போன்ற குறையை நீக்கியிருக்கலாம்.

“ஒரு தேசம் என்பது ஒரு பொது மொழி இன்றி இருக்க முடியாது, ஒன்றுக்கு மேற்பட்ட பொது மொழிகள் கொண்டதாகவும் இருக்க முடியாது. காரணம் வெவ்வேறு பொது மொழிகள் வெவ்வேறு தேசிய இனங்களைக் குறிப்பவையாகும்” (பா.வ,தே.கொ-பக்-10) மொழிவழிபட்ட தேசிய இனத்தையே தோழர் கார்முகில் கூறுகிறார் என்பது தெரிகிறது. நேசினல் (national) என்பதற்குத் தமிழில் தேசிய இனம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மார்க்சியத்தைப் பொருத்தளவில் தேசியம் என்பத இன வழிப்பட்டதல்ல.

ஒரு தேசத்தில் மூன்று மொழிகள் பேசப்படுவதால் எந்தக் கேடும் ஏற்படவில்லை என்று லெனின் கூறுகிறார்

“.. சின்னஞ் சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை அல்ல, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது – இதனால் அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டுவிடவில்லை, நன்மையே உண்டாகியிருக்கிறது.”
(தேசியஇனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்கம் -20)

இரண்டாம் அத்தியாயத்தில், லெனின் கூறுவதில் ஒற்றை தேசிய அரசை குறித்து மட்டுமே தோழர் கார்முகில் பேசுகிறார். பல்தேசிய அரசு குறித்த லெனினது கருத்தை மறைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மூன்றாவது அத்தியாயத்தில் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியே பிரிந்து  தனியான ஒரு தேசிய அரசை உருவாக்க வேண்டும் என்கிற தோழர் கார்முகில் அவர்களின் கூற்று லெனினது கருத்தைக் கொண்டு மறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சின்னஞ்சிறிய இனங்களையும் என்றென்றைக்கும் தனித்திருத்தலை மார்க்சியர்கள் விரும்பவில்லை, இணைந்திருப்பதற்கான நிலைமைகள் இருப்பின் சேந்திருப்பதையே விரும்புகின்றனர். தாம் அதிகாரத்திற்கு வரும்போது பின்லாந்து, உக்ரேன், அர்மீனியா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான கூட்டணியையே லெனின் விரும்பியுள்ளார்.

எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம.”
(மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து)

நாம் அதிகாரத்துக்கு வரும் பொழுது, பின்லாந்துக்கும் உக்ரேனுக்கும் அர்மீனியாவுக்கும் ஜாரிசத்தாலும் (மகாருஷ்ய பூர்ஷ்வாக்களாலும்) ஒடுக்கப்பட்ட வேறு எந்தத் தேசிய இனத்துக்கும் இந்த உரிமையை உடனடியாகவும் நிபந்தனை இல்லாமலும் அங்கீகரிப்போம். மறு பக்கத்தில் நாம் பிரிவினையைச் சிறிதும் ஆதரிக்கவில்லை.


சாத்தியமான அளவுக்குப் பெரிய அரசை, மகா ருஷ்யர்களின் அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கின்ற தேசிய இனங்களின் மிக அதிகமான எண்ணிக்கையினரின் இயன்ற அளவுக்கு மிக நெருக்கமான கூட்டணியை நாம் விரும்புகிறோம், ஜனநாயகம், சோஷலிசத்தின் நலன்களுக்காக, வெவ்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களில் சாத்தியமான அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கையினரைப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்குள் ஈர்ப்பதற்காக நாம் இதை விரும்புகிறோம். நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரமான ஒற்றுமையை, இணைப்பை விரும்புகிறோமே தவிர பிரிவனையை அல்ல.”
(கட்சியின் வேலைத்திட்டத்தைத் திருத்தல் குறித்து)


ஐந்தாம் அத்தியாயமான கார்முகிலின் “செயல்பூர்வத்தன்மையும்” லெனினின் “செயல்பூர்வமற்றதன்மையும்” ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு ஆதாரத்தையும் முழுமையாக ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. தோழர் கார்முகில் சார்பாக விமர்சிப்பவர்கள் தான் முழுமையாக ஒப்பிட்டுப் பதில் அளிக்க வேண்டும்.

     பிரிவினைவாதம் என்பது வேறு பிரிதலை அங்கிகரிக்கின்ற சுயநிர்ணய உரிமை என்பது வேறு. சுயநிர்ணய உரிமை என்பது பிரிதலை அங்கிகரிக்கின்றது என்பதை இந்நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்ற ஜயம் ஏற்படுகிறது. இந்நூல் ஆசிரியர்கள் இதனை ஏற்றுக் கொண்டது பற்றி வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை. பிரிவினைவாதத்தை எதிர்க்கும் போது மார்க்சிய வழிப்பட்ட பிரிதலையும் வலியுறுத்தி எழுதியிருக்க வேண்டும்.

சுயநிர்ணய உரிமையைக்கு உதாரணமாக விவாகரத்து உரிமையை லெனின் சுட்டிக்காட்டுவார். “சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தானமானது" (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை) என்று லெனின் கூறுகிறார்

விவாகரத்து என்பது சேர்ந்து வாழ முடியாத நிலையில் பிரிவதையே குறிப்பிடுகிறது. அதே போல் ஒடுக்கும் பெரிய தேசியத்தோடு இணைந்திருக்க முடியாத நிலையில் ஒடுக்கத்திற்கு ஆளான சிறிய தேசியம் ஒடுக்குதலில் இருந்து விடுபடப் பிரிந்து செல்ல வேண்டும்.

இந்தப் பிரிதலை இந்நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்பது பற்றி இந்நூலில் அறிந்து கொள்ள முடியவில்லை.

“பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் காப்பாற்றும் கடமை ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமில்லை, ஒடுக்கும் இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்க்ததிற்கும் அந்தக் கடமை உண்டு. இரண்டு இனத்திலுமுள்ள பாட்டாளி வர்க்கமும் சுயநிர்ணய உரிமையை காப்பாற்ற வேண்டும். ஒன்றிணைந்த வர்க்கப் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல வேண்டும்.” (பக்கம்-61)

ஐக்கியத்தை வலியுறுத்தி சுயநிர்ண உரிமையில் காணப்படும் பிரிதலை முற்ற புறக்கணிக்கப்பட்டத்கத் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 58ஆம் பக்கத்தில் உள்ள கருத்தும் காணப்படுகிறது.

“..ஒடுக்கப்படும் தேசிய இனம் தனியே பிரிந்து செல்வதை அந்த இனத்தில் உள்ள சமூக ஜனநாயகவாதிகள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும், பிரிந்து செல்வதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் பிரிவினை என்பது முதலாய வர்க்கத்தால் நிறைவேற்றப்பட்டு வந்தது” (பக்கம்-58)

பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பதைப் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டு ஐக்கியத்திற்கு மட்டுமே முதன்மை இடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய ஒடுக்குமுறைக்கு ஆளான நாடு பிரிவது என்பது பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் உட்பட்டே அங்கீகரிக்கப்படுகிறது.

"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும் அவர்களது வர்க்க ஒருமைப்பாட்டின் நலன்களும் தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது." (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

லெனின் தேசங்களுக்கு இடையே காணவேண்டிய ஒற்றுமையையும் கூறியுள்ளார், தேசியப் பிரச்சினை தோன்றிய போது பிரிய வேண்டியது பற்றியும் கூறியுள்ளார். இதில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்வது லெனினியமாகாது. லெனின் தேசிய பிரச்சினையைப் பற்றிக் கூறுகிறதை அவர் நூல்களில் நேரடியாகப் படித்தறிய வேண்டும்.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்போம்

ஆரோக்கியமாக விமர்சிப்போம்.

விமர்சனங்களே நம்மை மேம்படுத்தும்



****************************************************************************************************
லெனினது நூலை
முதல்முறையாகப் படிப்பவர்களுக்கு உதவிடும் வகையில்;-

“தேசிய-கலாசாரத்தன்னாட்சி” என்ற முழுக்கத்தை வைக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து லெனின்


சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்

https://scientificcommunism.blogspot.com/2016/03/blog-post.html
*******************************************************************************


லெனின் எழுதிய 
என்ற நூல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தோழர் கார்முகில் எழுதிய 
நூலை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்





No comments:

Post a Comment