Saturday 16 February 2019

தத்துவத்தின் வறுமை- மார்க்ஸ் (நூல் அறிமுகம்)



தத்துவத்தின் வறுமை- காரல் மார்க்ஸ்
வெளியீடு- அலைகள் வெளியீட்டகம்
எண்-5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை 600089

கைபேசி-9841775112
1840ல் "சொத்து என்பது என்ன?" என்ற நூலை புரூதோன் வெளியிட்டார். அதில் சொத்து என்பது திருட்டு என்று வாதிட்டுள்ளார். முதலாளிகளின் லாப வெறியையும், லேவாதேவி போன்ற போக்கையும் கண்டித்தார். அதே நேரத்தில் சொத்தை சமூகப்படுத்துவதையும் மறுத்தார். நியாயமற்ற முறையிலான பரிவர்த்தனையே கேடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாகக் கண்டார். முதலாளித்துவ உற்பத்திமுறையின் கேடுகளுக்குத் தனிச் சொத்துடைமைதான் காரணம் என்பதை புரூதோனுடன் நேரடியாகவே  உரையாடலின் மூலம் மார்க்ஸ் பிரஸ்ஸலில் விமர்சித்தார். ஆனாலும் அவரிடம் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை.


ஒரு புறத்தில் ஒரு பிரெஞ்சுச் சிறு விவசாயியின் கருத்து நிலையிலிருந்தும், மறு புறத்தில் சோஷலிஸ்டுகளிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டதிலிருந்து பெறப்பட்டதைக் கொண்டும் புரூதோன் தமது விமர்சனத்தை அமைத்துக் கொண்டுள்ளார். இந்த முரண்பாட்டை "சொத்து என்பது என்ன?" என்ற நூல் வெளிப்படுத்துகிறது.

"பொருளாதார முரண்பாடுகளின் அமைப்பு முறைகள் அல்லது வறுமையின் தத்துவம்" என்ற புதிய நூலை புரூதோன் எழுதி வெளியிட்டார். இந்நூலைப் பற்றிய மார்க்சின் உடனடி விமர்சனத்தை, பா..ஆன்னென்கவுக்கு எழுதிய (28-12-1846) கடிதத்தில் காணமுடிகிறது.

வரலாறு என்பதை தலைசிறந்த மனிதர்களின் செயற்பாடுகளின் விளைவாக பார்க்கிறார் புரூதோன். "..கடவுளின் ரகசிய சிந்தனையைக் களவாடத் தெரிந்துள்ள மனிதர்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள். அவர்களின் தரிசனங்களைச் செயல்படுத்துவது ஒன்றுதான் சாதாரண மக்களின் வேலை" என்று புரூதோனின் வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்தினார் மார்க்ஸ்.

இதற்கு பதிலாக அந்தக் கடிதத்தில், "..திரு.புருதோன் மனிதயினத்தின் வரலாற்று முறையான வளர்ச்சி பற்றித் தமக்கு ஒன்றும் புரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறபோது - உலகளாவிய பகுத்தறிவு, இறைவன் என்றெல்லாம் படாடோபமான சொற்களைப் பயன்படுத்தி, இதை அவர் ஒப்புக் கொள்கிறார்,- பொருளாதார வளாச்சியைப் புரிந்து கொள்ளத் தமக்கு திராணியில்லை என்று அவர் உட்கிடையாகவும் அவசியமாகவும் ஒப்புக்கொள்ளவில்லை?"

மேலும் இந்தக் கடிதத்தில், மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தாக்கத்தை சுருக்கமான வடிவில் தொகுத்தளித்துள்ளார்.

"என்ன வடிவத்தில் இருந்தாலும் சரியே, சமூகம் என்பது என்ன? மக்களின் பரஸ்பர செய்கையின் விளைபயனே. மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமூகத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை
...
தமது வரலாற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளை தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரம் உள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே- அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

..மனிதர்கள் தமது உற்பத்திச் சக்திகளை வளர்த்து வருவதற்கேற்ப - அதாவது தாங்கள் வாழ்ந்து வருவதற்கேற்ப- அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட உறவுகளை வளர்க்கிறார்கள் என்பதையும், உற்பத்திச் சக்திகளின் மாற்றத்தோடும் வளர்ச்சியோடும் கூடவே இந்த உறவுகளின் இயல்பும் மாறித் தீர வேண்டும் என்பதையும் திரு.புரூதோன் பார்க்கவில்லை, இதற்கு முக்கியமான காரணம் அவருக்கு வரலாற்று முறையிலான அறிவு கிடையாது.
...
... இன்றையச் சமூக நிலையைப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதைத் தூக்கியெறியும் போக்கில் செல்கிற இயக்கத்தையும் சரி, இந்தப் புரட்சிகரமான இயக்கத்தின் இலக்கிய வெளியீடுகளையும் சரி, அதைவிடக் குறைவாகத்தான் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கலாம்.
..
...அடிமுதல் முடிவரை திரு.புரூதோன் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் தத்துவ அறிஞரும் பொருளாதார அறிஞரும் ஆவார். முன்னேறிய ஒரு சமூகத்தில் குட்டிமுதலாளித்துவ நபர் தனது வாழ்நிலையின் காரணத்தினாலேயே ஒரு புறத்தில் சோஷலிஸ்டாகவும் மறுபுறத்தில் பொருளாதாரவாதியாகவும் இருந்து தீரவேண்டி இருக்கிறது. அதாவது, அவன் பெரு முதலாளிகளுடைய செல்வச்சிறப்பைக் கண்டு பிரமை பிடித்து நிற்கிறான், மக்களின் துன்பதுயரங்களைக் கண்டு அனுதாபப்படுகிறான்.

ஒரே நேரத்தில் அவன் முதலாளித்துவ வகைப்பட்டவனாகவும் மக்களைச் சார்ந்துள்ள மனிதனாகவும் இருக்கிறான். தான் நடுநிலை வகிப்பதாகவும் சரியான நடுவமைதி நிலையை கண்டு கொண்டதாகவும் அடிநெஞ்சிலே தன்னைப் புகழ்ந்து கொள்கிறான். இவ்வகைப்பட்ட குட்டிமுதலாளித்துவ முரண்பாட்டை வியந்தேத்துகிறான், ஏனெனில் முரண்பாடுதான் அவனது வாழ்நிலைக்கு அடிப்படை. அவனே செயற்பட்டு வரும் சமூக முரண்பாடு தவிர வேறில்லை. நடைமுறையில் தான் எப்படி இருக்கிறானோ அதை அவன் தத்துவரீதியிலே நியாயப்படுத்தித் தீர வேண்டும்,..

அன்புடன்
காரல் மார்க்ஸ்"

பின்பு புரூதோனின் குட்டிமுதலாளித்துவ சிந்தனையில் அமைந்துள்ள "வறுமையின் தத்துவம்" என்னும் நூலுக்கு விரிவாக பதிலளிக்கும் முறையில் ஒரு நூலையே மார்க்ஸ் எழுதிவிட்டார். வறுமையின் தத்துவத்துக்கு பதிலளிக்கும் முகமாக "தத்துவத்தின் வறுமை" என்று மார்க்ஸ் தமது நூலுக்குப் பெயர் வைத்தார். புரூதோனை விமர்சனம் செய்திடும் போதிலேயே தமது தத்துவ-பொருளாதாரக் கருத்துக்களை தெளிவாக நம்முன் வைக்கிறார். "ஜெர்மன் சித்தாந்தம்" நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்கின்ற காலத்தில் நூல்வடிவம் பெறவில்லை. ஆனால் "தத்துவத்தின் வறுமை" என்கிற நூல் 1847ல் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளிவருவதற்கு முன்பே மார்க்ஸ் தத்துவ அறிஞர் என்று அறியப்பட்டிருந்தார், இந்நூலே பொருளாதாரத்திலும் அவர் அறிஞர் என்பதை உலகுக்குக் காட்டியது.

சமூக வளர்ச்சியைத் தலைசிறந்த மனிதர்களிடம் கண்ட புரூதோனின் அகநிலை கருத்துமுதல்வாதத்தை மார்க்ஸ் தாம் வகுத்தளித்த வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளார். புரூதோன் பொருளாதார உறவுக்கு நல்ல அம்சமும் தீய அம்சமும் இருப்பதாகக் கூறுகிறார். நல்ல அம்சமாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் கூறுவது போல் முதலாளித்துவ அமைப்பு நிலையானது என்கிறார். கற்பனாவாத சோஷலிஸ்டுகள் எதிர்க்கிற முதலாளித்துவ சமூகத்தின் முரண்பாடுகளை தீய அம்சம் என்கிறார். புரூதோன் இவ்விருவர்களின் கூட்டுரையாக இருக்க விரும்புகிறார், ஆனால் அவர் கூட்டுப்பிழையாக இருக்கிறார் என்று மார்க்ஸ் கூறுகிறார்.

மார்க்ஸ் கூறுகிறார்:-
"நல்ல அம்சம் தீய அம்சம், நிறைகள் குறைகள், இவற்றை ஒருசேர எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு பொருளாதார வகையினத்தின் முரண்பாடு அமைகிறது என்பது திரு.புரூதோன் கருத்து.

தீர்க்க வேண்டிய பிரச்சினை, தீய அம்சத்தை ஒழித்துவிட்டு நல்ல அம்சத்தை காத்து நிறுத்துவது."1

உற்பத்திக்கும் உற்பத்தி உறவுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பை அறிந்துகொள்ளாது இருக்கிறார் புரூதோன். மார்க்ஸ் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில், சமுதாய உறவுகளில், கருத்துக்களின் உருவாக்கத்தில் ஒர் இடையறாத இயக்கம் இருப்பதை விளக்கியுள்ளார். பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரமாக மார்க்ஸ் தமது பொருளாதார ஆய்வை முன்வைப்பது இந்நூலில் வெளிப்படுகிறது.

பாட்டாளி வாக்க அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் இந்நூலில் முந்தையவற்றைவிட வளர்ச்சியடைந்த வகையில் காணப்படுகிறது. மனிதர்கள் பொருட்களை உற்பத்தி செய்வது போலவே திட்டவட்டமான உற்பத்தி உறவுகளையும் மனிதர்களே உற்பத்தி செய்கிறார்கள். இதனை புரூதோன் புரிந்து கொள்ளவில்லை என்பதை சுட்டும் போது கருத்துக்கள் என்பது உற்பத்தி நடைபெறும்போது தோன்றுவதையும் தோன்றிய கருத்துக்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் மார்க்ஸ் கூறுகிறார்:-

சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழிற்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திக்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்திச் செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”2

மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாதச் செல்வ உற்பத்தியை அரசியல்பொருளாதாரம் எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின்போது மனிதர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்திவினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்வதே பாட்டாளி வர்க்கச் சார்பான அரசியல் பொருளாதாரம். இந்த அரசியல் பொருளாதார அணுகுமுறையாலும், வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தாலும் சோஷலிசப் புரட்சிப் பற்றிய விஞ்ஞான கம்யூனிசக் கோட்பாடு நிலைநாட்டப்படுகிறது.

கூலி உயர்வுக்கான கோரிக்கையும் அதற்குப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தையும் புரூதோன் கடுமையாக எதிர்க்கிறார். ஒவ்வொரு கூலி உயர்வும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி விடும் அதனால் தொழிலாளர்களின் வறுமையைத் தீவிரமாக்கும். கூலி என்பதை தானியங்களின் விலை என்று புரூதோன் புரிந்து வைத்திருக்கிறார். இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு ஆவதைப் போல் அவ்வளவு உறுதியானது என்கிறார்.

இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்காகும் என்கிறதைத் தவிர்த்து மற்றதை உறுதியாக கூறுவதை மார்க்ஸ் மறுத்தார். தொழிற்சங்கங்களைக் கண்டிக்கிற விசயத்தில் பொருளாதாரவாதிகளும், கற்பனாவாத சோஷலிஸ்டுகளும் ஒன்றுபடுகின்றனர். அவர்களின் கண்டன நோக்கங்களில்தான் வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதாரவாதிகள் தொழிலாளர்களுக்குச் சொல்வது இதுதான்:-
சங்கம் அமைக்காதீர்கள், சங்கம் அமைப்பதின் மூலம் நீங்கள் தொழிற்துறையின் முறையான வளர்ச்சியை தடை செய்கிறீர்கள். முதலாளிகளின் கட்டளைகள் நிறைவேறாதபடி தடுக்கிறீர்கள். வாணிபத்தைக் குலைக்கிறீர்கள், இயந்திரங்களின் படையெடுப்பை விரைவாக்குகிறீர்கள்.

சோஷலிஸ்டுகள் தொழிலாளர்களுக்குச் சொல்வது இதுதான்:-
கூலி உயர்வால் என்ன கிடைக்கப் போகிறது, கூலி உயர்வால் சிறுகாசுகள் கிடைக்கலாம், ஆனால் அதனைத் தொடர்ந்து கூலி வீழ்ச்சி ஏற்படும். சங்கங்கள் நடத்துவதற்கான செலவுகளைக் கூட அந்த கூலி உயர்வால் ஈடு செய்ய முடியாது. மேலும் சங்கத்தில் சேர்வது அரசியலில் இறங்குவதாகும். அதனால் சங்கம் அமைக்காதீர்கள்.

தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில் அப்படியே இருக்க வேண்டும் என்று பொருளாதாரவாதிகள் விரும்புகின்றார்கள். சோஷலிஸ்டுகள், அந்த சமூகத்தை அப்படியே இருக்கும்படி தொழிலாளர்கள் விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
               
இவ்விருவரின் கையேடுகளையும் கற்பனைத் திட்டங்களையும் மீறி தொழிற்சங்கங்கள் இடையறாது முன்னேறி வருவதை மார்க்ஸ் கூறுகிறார்:-
"இங்கிலாந்தில் சங்கம் அமைப்பது நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது, மற்றும் பொருளாதார அமைப்பு முறைதான் இந்தச் சட்டரீதியான உரிமையை வழங்கும்படி நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்துள்ளது.

1845ல், சுயேச்சையான போட்டியிலிருந்து விளைகிற நிலைமைகளுக்கு மேலும் மேலும் பொருந்தும்படியாக அமைச்சர் ஹாஸ்கிஸன் கீழ் நாடாளுமன்றம் சட்டத்தைத் திருத்த வேண்டி வந்தபோது தொழிலாளர்களின் சங்கங்களைத் தடை செய்யும் எல்லாச் சட்டங்களையும் ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவீனகாலத் தொழிற்துறையும் போட்டியும் வளரவளர, சங்கம் அமைத்துப் பலப்படுத்துவதற்கான கூறுகளும் அதிகரிக்கின்றன, சங்கம் நாளுக்கு நாள் வலிமை பெற்று ஒரு பொருளாதார உண்மையாகியவுடனே அது ஒரு சட்டபூர்வமான உண்மையாவதற்கு வெகு நாட்களாவதில்லை."3

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து ஒன்றுபட்டு போராடுவதின் தேவையை இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். தொழிலாளர்கள் தங்களை ஒன்றுபடுத்துவதற்காக எடுக்கும் நடவடிக்கை சங்க வடிவத்தில்தான் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான போராட்டத்தில் அரணாகப் பயன்படுகிறது. முதலாளிக்கு எதிராக தொழிலாளர்கள் தங்களது பொதுவான நலனாக விளங்கும் கூலியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சங்கமாக ஒன்றுபடுகின்றனர்.

முன்பின் அறியாதவர்களை பெருமளவிலான தொழிற்துறைகள் ஒரே இடத்தில் திரளாகச் சேர்க்கிறது. தமக்காக போராடும் இந்தத் திரள் ஒரு வர்க்கமாக உருவமைத்துக் கொள்கிறது. தமது எதிரான வர்க்கத்துடனான போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாக உருப்பெறுகிறது. இந்த அரசியல் போராட்டம் எப்படி சமூக மாற்றமாக மாறுகிறது என்பதை மார்க்ஸ் சுருக்கமாக விளக்குகிறார்:-
"வர்க்கங்களின் பகைமை மீது நிறுவப்பட்ட ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பது உயிர்நிலையான நிபந்தனையாகும். எனவே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை என்பது அவசியமான முறையிலே ஒரு புதிய சமூகத்தைப் படைப்பதை உட்கிடையாகக் கொண்டுள்ளது.     ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கான அவசியத் தேவை என்பது, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் உற்பத்திச் சக்திகளும் இருந்து வரும் சமூக உறவுகளும் மேலும் அக்கம் பக்கமாக இருந்துவர முடியாதவையாக ஆகவேண்டும்.

உற்பத்திக் கருவிகள் அனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமேயாகும். வர்க்கம் என்கிற வகையில் புரட்சிகரமான நபர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அமைப்பது, பழைய சமூகத்தினுள்ளே உண்டுபண்ண முடிகிற உற்பத்திச் சக்திகள் அனைத்திலும் இருப்பதை அனுமானிக்கிறது"4

சமூகப் புரட்சிக்கான அகநிலை மாற்றத்துக்கு, உகந்த புறநிலை மாற்றம் ஏற்பட்டுடிருக்க வேண்டும் என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் புரட்சிக்கான புறநிலை விதியை மார்க்ஸ் இங்கே வலியுறுத்தியுள்ளார். மேலும், சமூக மாற்றத்தை நடத்தி முடிப்பதற்கான முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்கு அவசியப்படுவதற்கான கோட்பாட்டையும் மார்க்சின் இந்நூல் அமைத்துத் தந்திருக்கிறது.

1844ல் பாரிசில் மார்க்ஸ் இருக்கும் போது, புரூதோனுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். விடியவிடிய நடைபெற்ற விவாதத்தின் போது ஹெகல்வாதத்தைத் அவரிடம் தொற்ற வைத்தேன் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இப்படி சொல்வதற்கு காரணம் புரூதோனுடைய "கலப்பட நயத்துக்கு" தானும் காரணமாவதால் அதற்கான பழியை ஏற்பதாக மார்க்ஸ் கூறுகிறார்.

குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து புரூதோனை வெளிக் கொணர முடியாது போன நிலையை 1865ல் புரூதோனின் மறைவை ஒட்டி எழுதப்பட்டபோது கூறுகிறார். புரூதோனின் "வறுமையின் தத்துவம்" என்னும் நூல் வெளிவருதற்கு சற்றுமுன் மார்க்சுக்கு புரூதோன் எழுதிய கடிதத்தில், மற்ற விஷயங்களுக்கு இடையே "உங்கள் விமர்சனத்தின் சவுக்கடிக்குக் காத்திருக்கிறேன்" என்று சொல்லியிருந்தார். இருவரின் நட்பும் முறிந்து போகும்படி இந்தச் சவுக்கடி விரைவிலேயே புரூதோன் மீது "தத்துவத்தின் வறுமை" என்னும் நூலின் மூலம் 1847ல் விழுந்தது என்று மார்க்ஸ் எழுதியுள்ளார்.
***************************************************

1.தத்துவத்தின் வறுமை – பக்கம் 122- அலைகள் வெளியீட்டகம்
2.தத்துவத்தின் வறுமை– பக்கம் 120- அலைகள் வெளியீட்டகம்
3.தத்துவத்தின் வறுமை– பக்கம் 184-185- அலைகள் வெளியீட்டகம்
4.தத்துவத்தின் வறுமை– பக்கம் 188- அலைகள் வெளியீட்டகம்

No comments:

Post a Comment