Wednesday 15 May 2019

சோசலிசப் பொருளாதாரம் – ஜே.வி.ஸ்டாலின் (நூல் அறிமுகம் - 1)


ஆசிரியர்: சுந்தர சோழன்

விலை:- :ரூ.150/-

வெளியீடு: பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413, பாரதிநகர், 3-ஆவது வீதி,
பிச்சம்பாளையம் (அஞ்சல்)
திருப்பூர் 641603.


அலைபேசி- 94866 41586 – 701040 84465


                (இந்நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்)



மார்க்சியம், விஞ்ஞான வழியில் சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுகிறது. அந்த விஞ்ஞானத்திற்கு அடிப்படை வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் ஆகும். லெனின் வழியில் சோவியத் யூனியனில் சோசலிசத்தை நிர்மானித்தது ஸ்டாலினே. அதற்குப் பிறகு குருசேவ்பிரஷ்நேவ்- கோர்பசேவ் ஆகியோர் அந்தச் சோசலிச நிர்மாணத்தைக் குலைத்து சோவித் யூனியனை சீர்குலைத்தனர். அது ஒரு தனி வரலாறு.

சோவியத் யூனியனில் சோசலிசத்தை நிர்மானித்ததில் உள்ள பிரச்சினைகளை ஸ்டாலின் எழுதியசோசலிசப் பொருளாதாரம்” (1952) என்கிற இந்த நூல் அலசுகிறது. சில முக்கியமான ஸ்டாலின் நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1,லெனினியத்தின் அடிப்படைக்கள், 2,அராஜகவாதமா? சோசலிசமா? 3,இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் 4.மார்க்சியமும் தேசிய பிரச்சினையும் 5,மார்க்சியமும் மொழியியலும். இந்நூல்கள் தமிழில் பல ஆண்டுகளாகக் கிடைத்து வருகின்றன. ஆனால் ஸ்டாலின் எழுதிய அரசியல் பொருளாதார நூல் எதையும் இதுவரை தமிழில் கண்டதில்லை. முதன்முறையாகப் பொன்னுலகம் புத்தக நிலையம் பொருளாதார நூலை வெளியிட்டுளளது. பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் பெயர்சோசலிசப் பொருளாதாரம்”. இந்நூலின் ஆங்கிலப் பெயர்சோவியத் யூனியனில் சோசலிசப் பொருளாதாரத்தின் பிரச்சினைகள்(Economic Problems of the U.S.S.R) ஸ்டாலின் தேர்வு நூல்கள் தொகுதியிலும் இந்நூல் இடம் பெறவில்லை. அதனால் தான் இந்நூல் தனியாக வெளியிடப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலே அனைத்தும் நம் கைவசம் வந்துவிடும் என்று நினைக்கிற தோழர்களை இன்றும் நாம் சந்தித்து வருகிறேம். ஆட்சி அதிகாரம் என்பது தொடக்கமே அன்றி முடிவல்ல. அதற்குப் பிறகு தான் அனைத்துமே இருக்கிறது. அந்த மாற்றம் என்பது அவ்வளவு எளிதல்ல. ருஷ்யாவுக்கு முன்பு சோசலிச நிர்மானம் என்பது பற்றி எந்த முன்மாதிரியும் கிடையாது. அதனால் ருஷ்யாவில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் ஸ்டாலின் பதிலளிக்கிறார். இந்தப் பதில் இரண்டாம் பகுதியில் வருகிறது. நூல் இருபகுதிகளைக் கொண்டுள்ளது. முதல்பகுதியில் ஸ்டாலின் நேரடியாகத் தமது அரசியல் பொருளாதாரக் கருத்துக்களைக் கூறுகிறார்.

சோசலிசத்தின் கீழ் அரசியல் பொருளாதார விதிகளின் புறநிலைத் தன்மையை மறுக்கின்ற தோழர்களுக்கு இந்நூலின் தொடக்கத்தில் பதிலளிக்கிறார். இந்தப் பதில் மிகமிக நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. எந்தவித குழப்பத்திற்கும் இடமில்லாமல் ஸ்டாலினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவியல் விதிகள் - அவை இயற்கை அறிவியல் விதிகள் அல்லது அரசியல் பொருளாதார விதிகள் என எதுவாக இருந்தாலும் சரிமனிதனின் விருப்பங்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான புறவயச் செயல்முறைகளின் பிரதிபலிப்பே ஆகும் என்று மார்க்சியம் கருதுகிறது. மனிதர்கள் இந்த விதிகளைக் கண்டுபிடிக்கலாம், அவற்றைத் தெரிந்து கொள்ளலாம், ஆய்வு செய்யலாம், தனது செயல்பாடுகள் மூலம் அவற்றை எதிர்கொள்ளலாம், சமூக நலன் கருதி அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. மனிதன் புதிய அறிவியல் விதிகளை வடிவமைப்பதோ அல்லது உருவாக்குவதோ இதைவிடச் சாத்தியமற்றது ஆகும்.” (பக்கம் – 28-29)

மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு இதனையே வலியுறுத்துகிறது. இன்றைய நிலையில் சிலர், மார்க்சியம் வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறி, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் வினைபுரிவதாக வரையறுகின்றனர். அதாவது அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும், சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தைத் தீர்மானிக்கும். இது மார்க்சிய அடிப்படையைச் சிதைக்கும் கண்ணோட்டமாகும். இது எந்த வகையிலும் வளர்ச்சியாகாது.

புறநிலை உண்மையை மறுப்பவர்கள், உண்மையின் அறிவியலை மறுக்கிறார்கள். சமூக வளர்ச்சியையும் - மாற்றத்தையும் முன்னறிந்து கூறுகின்ற சாத்தியப்பட்டையும் மறுக்கிறார்கள், என்று ஸ்டாலின் கூறுகிறார்.

சோசலிசத்தின் கீழ் அரசியல் பொருளாதார விதிகள் புறநிலைத் தன்மை உடையவை, பொருளாதார வாழ்வின் செயல்முறைகள் (processes) விதிகளின் படி நடப்பவை மற்றும் நமது விருப்பத்திற்கு அப்பாற்பட்டு செயல்படுபவை ஆகும். இந்த அனுமானத்தை (postulate) மறுப்பவர்கள் உண்மையில் அறிவியலை மறுக்கிறார்கள், அறிவியலை மறுப்பதன் மூலம் வரப்போவதை முன்னறிவதற்கான ஆன அனைத்து சாத்தியப்பாடுகளையும் மறுக்கிறார்கள், பொருளாதாரச் செயல்பாடுகளை வழிநடத்துவதற்கான சாத்தியப்பாட்டை மறுக்கிறார்கள்.” (பக்கம் – 37)

இவ்வாறு சோசலிசத்தின் கீழ் பொருளாதார விதிகளின் தன்மை என்ற முதல் அத்தியாயம் விவரிக்கிறது.

சோசலிசத்தின் கீழ் பண்ட உற்பத்தி என்ற இரண்டாம் அத்தியாயம் சரக்கைப் பற்றிப் பேசுகிறது. ருஷ்ய புரட்சியின் பிரத்யேகத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கின்ற முடிவுகளில் ஒன்று, ஆட்சியைப் பிடித்தவுடனேயே சரக்கு உற்பத்தி முறையை விட்டிருக்க வேண்டும் என்பதாகும். இதற்கு ஸ்டாலின் கொடுக்கிற பதில்:-

நமது பண்ட உற்பத்தி முறையானது சாதாரண வகைப்பட்டது அல்ல, மாறாக முதலாளிகள் இல்லாத பண்ட உற்பத்தி என்னும் சிறப்பு வகையான பண்ட உற்பத்தி முறையாகும். பிரதானமாக அது தன்னுடன் தொடர்புடைய (associated) சோசலிச உற்பத்தியாளர்களின் (அரசு, கூட்டுப் பண்ணைகள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவை) உற்பத்திப் பொருட்கள் சார்ந்தது ஆகும். அதன் வீச்சு எல்லையானது, தனிநபர் நுகர்வுக்கான பொருட்களைத் தயாரிப்பதுடன் கட்டுப்படுத்தப் பட்டது (confined) என்பதால் அது முதலாளித்துவ உற்பத்தி முறையாக வளர்ச்சி அடைய முடியாது. மேலும்பணப் பொருளாதாரத்துடன்இணைந்து சோசலிச உற்பத்தி முறையின் வளர்ச்சி மற்றும் அதனை உறுதி செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

எனவே, சோசலிச சமூகமானது பண்ட உற்பத்தி முறையை ஒழிக்கவில்லை என்பதால் முதலாளித்துவத்திற்கே உரிய பொருளாதார வகையினங்கள்பண்டமாக இருக்கும் உழைப்பு சக்தி, உபரி மதிப்பு, மூலதனம், முதலாளித்துவ லாபம், சராசரி லாப விகிதம் போன்றவைமீண்டும் தோன்றுவது தவிர்க்க இயலாதது என்று சொல்லும் தோழர்கள் முற்றிலும் தவறு செய்கிறார்கள். இந்தத் தோழர்கள் பண்ட உற்பத்தியை முதலாளித்துவ உற்பத்தியுடன் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள், பண்ட உற்பத்தி இருக்கிறது என்றால் முதலாளித்துவ உற்பத்தியும் இருக்கத் தான் வேண்டும் என்று நம்புகிறார்கள். நமது பண்ட உற்பத்தி முறையானது முதலாளித்துவப் பண்ட உற்பத்தி முறையில் இருந்து ஆழமாக மாறுபட்டது என்பதை அவர்கள் உணரவில்லை.” பக்கம் – 49-50)

இந்த அத்தியாயத்தில், எங்கெல்ஸ் எழுதிய டூரிங்க்கு மறுப்புஎன்ற நூலில் கூறப்பட்டதை ருஷ்யச் சூழ்நிலைமைகளைப் புரிந்து கொள்ளாது அப்படியே பின்பற்ற வேண்டும் என்று கூறுபவர்களின் தவறுகளை ஸ்டாலின் சுட்டிக்காட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

சரக்கு உற்பத்தியைத் தொடர்ந்து மூன்றாம் அத்தியாயத்தில், “சோசலிசத்தின் கீழ் மதிப்பு விதி பற்றிப் பேசப்பட்டுள்ளது.

சோசலிச சமூகத்தின் கிழ் மதிப்பு விதி இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஸ்டாலின் மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார்.

“..நமது நாட்டைப் பொறுத்த வரையில், மதிப்பு விதியின் செயல் எல்லையானது பண்டங்களின் சுற்றோட்டம், வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றின் மூலமான பண்டப் பரிமாற்றம், குறிப்பாகத் தனிநபர் நுகர்வுக்கான பொருட்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்குவதாக இருக்கிறது. இங்கே. இந்த வீச்சு எல்லைக்கு உட்பட்ட அளவில், மதிப்பு விதியானது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள், ஒரு கட்டுப்பாட்ட அமைப்பின் செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது

ஆனால் மதிப்பு விதியின் செயல்பாடு என்பது, பண்டச் சுற்றோட்டத்தின் வீச்சு எல்லைக்குள் மட்டுமே குறுக்கப்பட்டு விடுவது அல்ல. அது உற்பத்தி வரையில் நீள்கிற ஒன்றாகும். நமது சோசலிச உற்பத்தியில் மதிப்பு விதிக்கென ஒரு ஒழுங்கமைக்கும் செயல்பாடு (regulating function) கிடையாது என்பது உண்மை தான். இருந்த போதிலும், உற்பத்தி மீது அது தாக்கம் செலுத்துகிறது. உற்பத்தி நிகழ்வை நிருவகிக்கும் (directing) போது இந்த உண்மையைப் புறக்கணித்து விட முடியாது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், உற்பத்தி நிகழ்வில் செலவிடப்படும் உழைப்பு சக்தியை ஈடு செய்வதற்குத் தேவையான நுகர்வோர் பொருட்கள், நமது நாட்டில் மதிப்பு விதியின் செயல்பாட்டுக்குக் கீழ் வரும் பண்டங்கள் என்ற வகையில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப் படுகின்றன. இங்குத் தான் மதிப்பு விதியானது மிகத் துல்லியமாக உற்பத்தி மீது தனது தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்த விசயத்தில், அடக்கவிலைக் கணக்கியல் (cost accounting), லாபம் ஈட்டுதல், உற்பத்திச் செலவுகள், விலைகள் போன்ற அனைத்தும் நமது நிறுவனங்களுக்கு உண்மையான முக்கியத்துவம் உடையவையாகும். ஆகவே, நமது நிறுவனங்கள் மதிப்பு விதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது.

இது நல்லது தானா? இது கெட்டது கிடையாது. தற்போதைய நிலைமைகளின் கீழ், இது உண்மையில் கெட்டது கிடையாது.” (பக்கம் – 54-55)

உற்பத்தி சாதனங்கள் தனியுடைமையாக இருக்கும் போது ஏற்படுகிற போட்டி, உற்பத்தியில் அராஜகம், மிகை உற்பத்தி போன்ற காரணங்களினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி ஆகியவைகளைக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தியின் கீழ் தான், மதிப்பு விதி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதாக இருக்க முடியும். சோசலிச உற்பத்தி முறையில் மதிப்பு விதி உற்பத்தியை கட்டுப்படுத்துவதாக இருக்காது.

மதிப்பு விதி, கம்யூனிச சமூகத்தின் இரண்டாம் நிலையில் எவ்வாறு மறைந்திருக்கும் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்யூனிச சமூகத்தின் இரண்டாம் கட்டத்தில், பொருட்களை உற்பத்தி செய்வதற்குச் செலவிடப்படும் உழைப்பின் அளவானது பண்ட உற்பத்தியில் செய்யப்படுவது போன்று சுற்றி வளைத்துக் கணக்கிடப் படுவதில்லை. மாறாக, பொருளை உற்பத்தி செய்வதற்குச் செலவிடப் படும் நேரம், மணித் துளிகள் ஆகியவை நேரடியாகவும், உடனடியாகவும் கணக்கிடப்படும். உழைப்பைப் பகிர்ந்து அளிப்பது பற்றிய விஷயத்தில், உற்பத்தியின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் அதைப் பகிர்ந்தளிப்பது என்பது மதிப்பு விதியின் படி நடைபெறாது - இந்தக் காலகட்டத்திற்கு முன்னரே மதிப்பு விதி என்பது செயல்பாடு இல்லாததாகி விடும்பொருட்களுக்கான சமூகத் தேவையின் வளர்ச்சி அடிப்படையில் அது பகிர்ந்தளிக்கப்படும். சமூகத் தேவைகளுக்கு ஏற்றவாறு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு சமூகமாக அது இருக்கும்.” (பக்கம்-59)

நான்காம் அத்தியாயம் நகரங்கள் மற்றும் கிராமங்கள், மூளை உழைப்பு மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலையை ஒழித்தல், அவற்றுக்கு இடையிலான மாறுபாடுகளை நீக்குதல் என்கிற நீண்ட தலைப்பும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

தொழில்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையிலான அடிப்படை மாறுபாடுகள், உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்து போகும். இவ்வாறு கூறுவதைச் சிலர் இரண்டும் இடையே அனைத்து மாறுபாடுகளும் மறைந்து போகும் என, சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

அவற்றுக்கு இடையிலான அடிப்படை மாறுபாடுகள், கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அளவிலான வேறுபாடுகள் நிச்சயம் மறைந்து போகும். ஆனால் சில மாறுபாடுகள், அவை மிகச் சாதாரணமானவை என்றாலும் கூட, இருக்கத் தான் செய்யும்.” (பக்கம்- 70)

ஒற்றை உலகச் சந்தையின் தகர்வும் உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி தீவிரம் அடைவதும்இது ஆறாம் அத்தியாயமாகும். இதன் இறுதிப் பகுதி இவ்வாறு முடிவரைகிறது.

இத்தகைய நிலைமையானது இரண்டு கேள்விகளைப் பொருளாதார அறிஞர்கள் முன்வைக்கிறது.

1. இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய, முதலாளித்துவப் பொது நெருக்கடிக் காலகட்டத்தில் சந்தைகளின் சார்புநிலை ஸ்திரத் தன்மை பற்றி ஸ்டாலின் முன்வைத்த ஆய்வுரையானது இன்றும் கூடச் செல்லத்தக்கது என்று உறுதிபடச் சொல்ல முடியுமா?

2. 1916ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லெனின் முன்வைத்த ஆய்வுரைமுதலாளித்துவமானது அழுகிக் கொண்டிருப்பதையும் தாண்டி, “மொத்தத்தில் முதலாளித்துவமானது முன்னெப்போதையும் விட அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது” – என்பது இன்றும் கூடச் செல்லத்தக்கது என்று உறுதிபடச் சொல்ல முடியுமா?

அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இரண்டாம் உலக யுத்தம் காரணமாகத் தோன்றிய புதிய நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த இரண்டு ஆய்வுரைகளும் தனது செல்லுபடியாகும் தன்மையை இழந்து விட்டன என்று கருத வேண்டி இருக்கிறது.” (பக்கம் - 75)

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்த முதலாளித்துவ உற்பத்தி முறை கண்டிப்பாக ஏற்றக் காலத்தில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மறு சுற்றில் அது மீண்டும் பொருளாதார நெருக்கடியை வந்தடையும். அண்மைய (2008) நெருக்கடி இதனையே வலியுறுத்துகிறது. முதலாளித்துவப் பொருள் உற்பத்தியில் உள்ள உள் முரண்பாடால் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க முடியாது. முதலாளித்துவ உற்பத்தியின் அழிவு இந்தப் பொருளாதா நெருக்கடியில் தான் அடங்கியுள்ளது. புரட்சியின் புறநிலை இதில் தான் இருக்கிறது. இதற்கு ஏற்ப அகநிலையைக் கட்சியினால் வளர்க்கப்பட வேண்டும். கட்சியும் புறநிலைக்கான அகநிலையே ஆகும்.

 அடுத்த (ஆறாம்) அத்தியாயமான முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போர்களின் தவிர்க்க இயலாத் தன்மை என்ற தலைப்பில் நெருக்கடியைத் தொடர்ந்து தோன்றிய ஏற்றக் காலம் நிலையானதல்ல என்பதை ஸ்டாலின் விவரிக்கிறார்.

இரண்டு உலகப்போர்களின் விளைவைக் கண்ட முதலாளித்துவ நாடுகள் தமக்குள் மீண்டும் ஒரு போரில் ஈடுபடாது, கற்றுக் கொண்ட பாடத்தால் போர் மூளாது என்றும் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போர்கள் தவிர்க்க இயலாதவை அல்ல என்று சிலர் தவறாகக் கூறுவதை ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிலளிக்கிறார்.

இந்தத் தோழர்கள் மேற்பரப்பில் தோன்றி மறைகிற வெளித் தோற்றத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தவறு செய்கிறார்கள்.

வெளித் தோற்றத்தில் பார்க்கும் போது எல்லாம்சரியாக நடந்து கொண்டிருப்பதுபோல் தோன்றும். அமெரிக்காவானது மேற்கு ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இதர உலக முதலாளித்துவ நாடுகளைக் குறைந்தபட்சத் தேவைகளுக்கே போராடும் நிலைக்குத் (put the countries on ration) தள்ளி விட்டது. மேற்கு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கி, அதன் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கின்றன. ஆனால் எல்லாம்என்றென்றைக்கும்எல்லாம்சரியாக நடக்கும்”, அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் ஒடுக்குமுறையை இந்த நாடுகள் முடிவே இல்லாமல் சகித்துக் கொள்ளும், அமெரிக்காவின் அடிமைத்தளையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு சுதந்திரமான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அவை முயற்சி செய்யாது, என்று நினைத்தால் அது தவறானதாகும்.“ (பக்கம் - 78)

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின், முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் போர்கள் நடைபெறுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது என்பதைப் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நிறுவியுள்ளார்.

ஏழாம் அத்தியாயம்நவீன முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் ஆகியவற்றின் அடிப்படைப் பொருளாதார விதிகள்”. முதலாளித்தவத்திற்கும் சோசலிசத்திற்கும் உரிய அடிப்படைப் பொருளாதார விதியைப் பார்க்கும் போதே, அந்த இருண்டு உற்பத்தி முறைக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரிகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாபத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய விதியான, உபரி மதிப்பு விதியே முதலாளித்துவத்தின் அடிப்படைப் பொருளாதார விதியாகும். முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படைச் சிறப்பம்சங்களை உபரி மதிப்பே தீர்மானிக்கிறது. உபரி மதிப்பு பற்றிய விதி மிகப் பொதுவான ஒரு விதியாகும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு உறுதிசெய்து கொள்ள வேண்டிய, முன்நிபந்தனையாக இருக்கும் மிக அதிகபட்ச லாப விகிதம் பற்றிய பிரச்சினையை இது உள்ளடக்கவில்லை என்கிறார். உபரி மதிப்பு பற்றிய விதியை இன்னும் திண்மை உடையதாகவும், ஏகபோக முதலாளித்துவ நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.

மேம்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சோசலிச உற்பத்தியைத் தொடர்ச்சியாக விரிவுபடுத்துதல் மற்றும் முழுநிறைவானதாக்குதல் இவற்றின் உதவியுடன் ஒட்டுமொத்த சமூகத்திலும் தங்குதடையற்று உயர்ந்துவரும் பொருளாயத மற்றும் கலாச்சாரத் தேவைகளை அதிகபட்சம் நிறைவேற்ற உறுதி செய்தல் ஆகியவையே சோசலிச உற்பத்தி முறையின் அடிப்படை பொருளாதார விதியாக ஸ்டாலின் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின், முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியும், அதில் இருந்து மீண்டு நிலையான ஏற்றநிலை எட்டுதல் என்ற வகையில் நீடித்த வளர்ச்சிப் போக்கிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். அடுத்து சோசலிச உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் போல் இல்லாது தடைபடாத உற்பத்தி வளர்ச்சியைக் கொண்டதாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதர பிரச்சினைகள் என்கிற எட்டாம் அத்தியாயம், பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. குறிப்பாக விவசாயம், சோவியத் யூனியனில் இயந்திரங்களின் பயன்பாடு, தேசிய வருமானம்.

ஸ்டாலின் எழுதிய இந்த நூலின் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், ஒரு அரசியல் பொருளாதாரப் பாட நூலை உருவாக்குவதைப் பற்றிப் பேசுவதாகும். இதற்கு அடுத்த அத்தியாயங்களில் இது பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்த அரசியல் பொருளாதார நூலில் லெனின், ஸ்டாலின் ஆகியோரைப் பற்றிச் சிறப்பு அத்தியாயம் இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு, இந்த அத்தியாயத்தில் ஸ்டாலின் பதிலளிக்கிறார்.

அந்த அத்தியாயத்தை நீக்க வேண்டும் என்று கூறுகிறார். ஸ்டாலின் தனிநபர் வழிபாட்டை விரும்புபவராக இருந்திருப்பின் இந்த அத்தியாத்தை நீக்கும்படி கூறியிருப்பாரா? ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒன்பதாவது அத்தியாயம் அரசியல் பொருளாதாரம் குறித்த மார்க்சியப் பாடநூலின் சர்வதேச முக்கியத்துவம்”. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே இதன் அவசியத்தைப் பற்றி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசியல் பொருளாதாரம் குறித்த மார்க்சியப் பாடநூல் ஒன்று தேவைப்படுவதன் அவசியத்தை நமது தோழர்கள் தேவையான அளவு முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். அது நமது சோவியத் இளைஞர்களுக்கு மட்டுமே தேவையானது அல்ல. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் அனைவருக்கும் இது தேவைப்படுகிறது.” (பக்கம் -99)

இந்த அரசியல் பொருளாதாரப் பாடநூல் சோவியத் நாட்டினருக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள புரட்சிகர இளைஞர்களுக்கும் பயன்படக்கூடியது என்கிறார்/

பத்தாவது அத்தியாயம் அரசியல் பொருளாதாரம் குறித்த வரைவுப் பாடநூலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் இதில் வரைவுப் பாடநூலை மேம்படுத்துவதைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். வரைவுப் பாடநூலில் காணப்படும் தவறுகள் மற்றும் கவனக்குறைவுகள் ஆகியவற்றுக்காக இதன் ஆசிரியர்களைச் சிலர் கடுமையாகத் தாக்கி, இந்த வரைவுப் பாடநூல் தோல்வி என்று கூறினார். இதனை ஸ்டாலின் மறுத்தார். இதுபோன்ற எந்தப் பெரிய தயாரிப்புலும் இத்தகைய குறைகளைக் காணமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டி, வரைவுப் பாடநூலைத் தயாரித்த ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்று கூறினார்.

வரைவு நூலைப் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும் உள்ளடக்கி பாடநூல் மேம்படுத்தும் கமிட்டியை ஸ்டாலின் உருவாக்கினார். முழுமையான பாடநூலைத் தயாரிப்பதற்கு ஒராண்டுக் காலம் வழங்கப்பட்டது.

இத்துடன் முதற் பகுதி முடிவடைகிறது. இரண்டாம் பகுதியில் பல்வேறு தோழர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஸ்டாலின் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்துள்ளார். அரசியல் பொருளாதாரம் பற்றிய தவறான புரிதலுக்கு இந்தக் கேள்விபதில் பகுதி சிறப்பான பதிலைத் தருகிறது. பொருளாதாரத்தைப் படிக்கிற தொடக்கநிலை வாசகர்களுக்கு இது மிகுந்தப் பயனுள்ளதாக இருக்கும். (இந்தப் பகுதியைப் பற்றிய அறிமுகம் விரைவில் வெளிவரும்)

ஸ்டாலின் எழுதிய இந்த சோசலிசப் பொருளாதாரம் என்கிற நூல் சிறிய நூல் தான், அனைவரும் எளிதாகப் படிக்கக்கூடியதாக இருக்கிறது. அரசியல் பொருளாதார நூலை இவ்வளவு எளிதாக எழுத முடியுமா என்ற கேள்வியைக் கேட்டும் படியாக, இந்நூல் அமைந்துள்ளது. சரக்கு உற்பத்தி, மதிப்பு விதி ஆகியவற்றைப் பேசுவது போல் சந்தையைப் பற்றியும் பேசியிருந்தால், இன்று சோசலிச சந்தைப் பொருளாதாரம் பற்றிப் பேசுபவர்களுக்குச் சரியான பதிலடியாக இருந்திருக்கும்.

இந்த நூல் குறிப்பிடுகிற அரசியல் பொருளாதாரப் பாடநூல் பல்வேறு பரிணாமங்களில் பல நூல்களைப் படைத்துள்ளது. அதில் சில நூல்கள் தமிழில் வந்துள்ளது. அதில் குறிப்பிடத் தக்கது, பி.நிக்கிடின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள், மற்றவை எல்.லியோன்டிவெய் எழுதிய அரசியல் பொருளாதாரச் சுருக்கம். எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹிடக்கோர்மவ் ஆகியோர் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள். எஸ்.இல்யீன், .மொத்திலோவ் ஆகியோர் எழுதிய அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?

இந்நூல்களைப் படித்தவர்கள் கண்டிப்பாக ஸ்டாலின் எழுதியசோசலிசப் பொருளாதாரம்”.என்ற நூலைப் படிக்க வேண்டும்.  முழு விஷயத்தைப் பற்றிப் பேசாமல் குறிப்பிட்ட விஷயத்தைக் குறிப்பாக, “சோசலிசப் பொருளாதாரம்என்ற இந்நூலில். பேசப்பட்டுள்ளது.

சோசலிச உற்பத்தி முறையைப் பற்றி அறிவதற்குசோசலிசப் பொருளாதாரம்என்ற இந்நூல் சிறந்த அறிமுக நூலாகும்.

No comments:

Post a Comment