சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட்
கட்சியின் மையக் குழுவால் தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டது “சோவியத் கம்யூனிஸ்ட்
கட்சியின் (போல்ஷிவிக்) வரலாறு”. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலார்
ஸ்டாலின் அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் இந்த நூல் எழுதப்பட்டது. இத் தொகுப்பில் இடம்பெற்ற
“இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்” என்ற
பகுதி ஸ்டாலினால் 1938ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
தற்போது இந்நூல் தனியாகக்
கீழைக்காற்று வெளியீட்டகம் மற்றும் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இயற்கை பற்றியும்
சமூகம் பற்றியும் இயக்கவியல் பார்வையில் மார்க்சியம் எவ்வாறு பார்க்கிறது என்பதை மிகமிகச்
சுருக்கமா ஸ்டாலின் இதில் எழுதியுள்ளார்.
தொடக்கத்திலேயே உலகில்
காணும் பொருட்கள் தனித்தும் மற்றொன்றோடு ஒன்று இணைந்து அதாவது சார்ந்து இருப்பது பற்றிய
விளக்கத்தைக் கொடுக்கிறார்.
“இயற்கைப்பொருள்களும்
அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டவை என்றும், ஒரு
முழுத்தன்மை உடையவை என்றும், ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்றும் ஒன்றின் தன்மையை
மற்றொன்றின் தன்மை நிர்ணயிக்கும்படி உள்ளதென்றும் இயக்கவியல் தத்துவம் கருதுகிறது.
எனவே,
இயற்கையின் தோற்றம் எதையும் அதைச் சூழ்ந்துள்ள பிற தோற்றங்களிலிருந்து பிரித்துத் தனியாக
ஆராய்ந்தால், அதைப் புரிந்து கொள்ளவே முடியாது என இயக்கவியல் தெளிவாகக் கூறுகிறது.
அதாவது ஒரு தோற்றத்தைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப்
பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது;
மேலும், அப்படிப் பார்த்தால் அந்தத் தோற்றமே பொருளற்றதாகக் காணப்படும். வேறு விதமாக
விளக்குவோம். ஒரு குறிப்பிட்ட இயற்கைத் தோற்றம் உள்ளது ; அதைச் சுற்றி வேறு பல தோற்றங்கள்
உள்ளன; இந்தச் சுற்றுப்புறத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டு, அது குறிப்பிட்ட தோற்றமாகக்
காட்சியளிக்கிறது. எனவே அந்தக் குறிப்பிட்ட தோற்றத்திற்கும் சுற்றுப்புறத் தோற்றங்களுக்கும்
இடையே உள்ள இணைப்பு - உறவு பிரிக்க முடியாததாகும். இந்த உறவோடு அந்தக் குறிப்பிட்ட
தோற்றத்தைப் பரிசீலனை செய்தால்தான், அதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும்.” (பக்கம்-6)
இயற்கை இடையறாது இயங்கி புதுப்பித்துக் கொண்டிருக்கிறது
என்கிறது இயக்கவியல். பொருட்களின் இயக்கமும், பொருட்களையும் அவற்றின் பிரதிபிலிப்பான
சிந்தனைகளைப் பற்றி எங்கெல்சின் மேற்கோளை ஸ்டாலின் இரண்டு நூல்களில் இருந்து எடுத்துத்
தருகிறார்.
“எங்கெல்ஸ்
கூறுகிறார்:- “சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் ஈறாக, சிறு மணல் துகள்
முதலாக சூரியன் ஈறாக, உயிரணு முதல் மனிதன் ஈறாக இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும்
இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கிறது எந்நேரத்திலும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
இடையறாது இயங்கி வரும் நிலையிலும் மாறிக் கொண்டே இருக்கும் நிலையிலும் உள்ளது."
(இயற்கையின் இயக்கவியல்)
ஆகவே,
'பொருள்களையும் அவற்றின் பிரதிபலிப்பான சிந்தனை களையும் ஆராய வேண்டுமானால், அவற்றின்
பரஸ்பரத் தொடர்புக ளிலும், அவற்றின் இயக்க போக்கிலும், அவை தோன்றி வளர்ந்து மறையும்
நிலைமையிலும் நின்று ஆராய வேண்டும்'' என்கிறார் ஏங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு)”
ஒரு பொருளில் ஏற்படும் மாற்றங்கள் அதன் குணத்தில்
எந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று இயக்கவியலுக்கு எதிரான இயக்கமறுப்பியல் கருதுகிறது.
ஒரு பொருளின் அளவில் ஏற்படும் அற்பமான புலனுக்கு எட்டாத மாறுதல்கள் குறிப்பிட்ட எல்லையைக்
கடந்தவுடன் அந்தப் பொருளில் குணமாற்றம் அடைகிறதை இயக்கவியல் சுட்டிக்காட்டுகிறது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஸ்டாலின் இந்த
நூலில் மிகவும் புரிதலில் எந்த வகையிலும் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்குக் கறாராக வரையறுத்துள்ளார்.
வரலாறு பற்றிய மார்க்சியப் பொருள்முதல்வாதத்தை
ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்:-
“பொருள்,
இயற்கை, வாழ்நிலை என்பவைதான் புறநிலை உண்மை, நமது உணர்வுக்கு அப்பால் – நமது உணர்வைச்
சார்ந்திராமல், ஆதாரமாகக் கொண்டிராமல், சுயேட்சையாக - இயங்குபவை அவை. பொருள்தான் முதல்.
ஏனெனில், அதுதான் புலன் உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் உணர்வுக்கும் மூலாதாரம்;
தோற்றுவாய். உணர்வு என்பது இரண்டாம் பட்சமானது; மூலத்திலிருந்து பெறப்படுவது.
ஏனெனில்,
பொருளின் பிரதிபலிப்பே உணர்வு, வாழ்வின் பிரதிபலிப்பே உணர்வு என்று மார்க்சிய பொருள்முதல்வாதத்
தத்துவம் கருதுகிறது. மேலும் பருப்பொருளின் விளைவாகச் சிந்தனை வளர்ச்சியுற்று, மிகவும்
உயர்ந்த உன்னதமான நிலையை எட்டும் போது அது மூளை ஆகிறது . சிந்தனை என்பதே பொருளின் படைப்பு.
மூளைதான் சிந்தனையின் உறுப்பு. எனவே, பொருளிலிருந்து சிந்தனையைப் பிரிக்க முடி யாது.
அப்படிப் பிரிப்பது மிகப் பெரிய தவறு செய்வதாகும் - என்று மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்
கருதுகிறது.” (பக்கம்-17-18)
இவ்வாறு தமது கருத்தை விளக்கி
வருகின்ற போதே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் மேற்கோள்களை ஆதாரமாக ஸ்டாலின்
கொடுத்துள்ளார். இங்கம் ஸ்டாலின் கருத்துக்களை ஆதாரமாக ஏற்பதற்கு மேற்கோள்காகத் தொகக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றியல்
பொருள்முதல்வாதத்தையே தமது வழிகாட்டியாகக் கொண்டுள்ளது. அது எவ்வாறு கட்சிக்குப் பயன்படுகிறது
என்பதை இந்நூல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.
சமுதாயத்தின் வளர்ச்சி
விதிகள் பற்றி ஸ்டாலின் கூறுகிறார்:-
“இயற்கைத்
தோற்றங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாயுள்ளதும் தான்
இயற்கையின் வளர்ச்சி விதிகள் என்று ஏற்பட்டால், அப்பொழுது சமுதாய வாழ்வின் தோற்றங்கள்
ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ளதும்தான், அந்தச்
சமுதாயத்தின் வளர்ச்சி விதிகள் என்று ஆகும்; ஏதோ தற்செயலாக அவை ஏற்பட்டவை அல்ல என்பதாகும்.
எனவே,
சமூக வாழ்வும், சமுதாய வரலாறும் ''தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் ஒரு குவியல்''
என்கிற கருத்துத் தவறாகிறது. ஒழுங்கான விதிகளின்படி நடக்கும் சமுதாயத்தின் வளர்ச்சி
பற்றியதே வரலாறு என்றும் அது ஆகிறது. மேலும், சமுதாய வரலாற்றின் ஆராய்ச்சி ஒரு அறிவியலாக
மாறுகிறது.
எனவே,
பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் எவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும்?
'தலைசிறந்த மனிதர்களின் நல்லாசிகளை ஆதாரமாகக் கொண்டல்ல - ''பகுத் தறிவின்'' தீர்ப்புகளை
ஆதாரமாகக் கொண்டல்ல - “உலகளாவிய அறநெறிகளைக் கொண்டல்ல. மாறாக, சமுதாய வளர்ச்சி விதிகளை
அடிப்படையாகக் கொண்டு, அந்த விதிகளைப் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, பாட்டாளி
வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகள் இருக்க வேண்டும்.” (பக்கம் 22)
பாட்டாளி வர்க்கத்தின்
கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்குச் சமுதாய வளர்ச்சியின் விதிகளையும், அந்த
விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக் கொள்ள
வேண்டும் என்கிறார் ஸ்டாலின்
“உலகம்
அறியப்படக்கூடியதே - இயற்கையின் வளர்ச்சி விதிகளைப் பற்றிய நமது அறிவு உண்மை அறிவுதான்;
புறநிலை உண்மையைப் போலவே அதுவும் ஏற்கத்தக்கதுதான் என்றானால், அதைத் தொடர்ந்து, சமூக
வாழ்வும் சமுதாயத்தின் வளர்ச்சியும் அறியக் கூடியவையே என்றும், சமூகத்தின் வளர்ச்சி
விதிகளைப் பற்றிய அறிவியல் விவரங்கள் உண்மையானவையே, அவையும் புறநிலை உண்மைகளைப் போலவே
ஏற்கத்தக்கதே என்றாகிறது.
எனவே,
சமூக வாழ்க்கையின் தோற்றங்கள் எவ்வளவு சிக்கல் நிறைந்திருந்தபோதிலும் சரி; சமூக வரலாற்றைப்
பற்றிய அறிவியல் கூட பிற அறிவியல் பிரிவுகளைப் போல - உதாரணமாக, உயிரியலைப் போல - அவ்வளவு
கறாரான அறிவியலாக விளங்க முடியும். மேலும், சமூக வளர்ச்சியின் விதிகளை நடைமுறை அறி
வியலாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே.
எனவே,
பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை
வழி காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமுதாய வளர்ச்சியின் விதிகளையும்,
அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடை முறைக்குரிய முடிவுகளையும்தான் வழிகாட்டியாகக்
கொள்ள வேண்டும்.
எனவே, மனித குலத்தின் இன்பமயமான
எதிர்காலம் என்ற ஒரு கனவாக இருந்து வந்த
சோசலிசம், இப்பொழுது ஒரு அறிவியலாக மாற்றப்படுகிறது.
ஆகவே,
அறிவியலுக்கும் நடைமுறை வேலைக்கும் உள்ள இணைப்பு, கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலுள்ள
இணைப்பு, அவற்றின் ஒற்றுமை - இவைதான் பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு வழிகாட்டும் துருவ
நட்சத்திரமாக இருக்க வேண்டும்.” (பக்கம் 22-23)
அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு எனப்பட்டது, இந்தப் புறநிலை உண்மையின் பிரதிபலிப்பு
மட்டுமே என்பதை ஸ்டாலின் வலியுறுத்திகிறார்.
“இயற்கையும்,
வாழ்வும், பருப்பொருள் உலகும் மட்டுமே முதன்மை என்றானால் - உணர்வும், சிந்தனையும் இரண்டாம்
பட்சமான மூலத்திலிருந்து தோன்றியவை என்றானால் - அதைத் தொடர்ந்து என்ன முடிவு வரும்?
மனித உணர்விற்கு அப்பால் சுதந்திரமாக இயங்கும் புறநிலை உண்மையைத்தான் பருப்பொருள் உலகம்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
உணர்வு
எனப்பட்டது இந்த புறநிலை உண்மையின் வெறும் பிரதிபலிப்பு மட்டுமே என்றானால், அதைத் தொடர்ந்து
என்ன முடிவு ஏற்படும்? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு, அதன் நிலைமை என்பவை முதன்மையானவை
- சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வு இரண்டாம் பட்சமானது; ஒரு மூலத்திலிருந்து உதித்ததுதான்.
சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு எனப்பட்டது, மனிதர்களின் சித்தத்திற்கு அப்பாற்பட்டுச்
சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கும் புறநிலை உண்மை - ஆனால் சமுதாயத்தின் அறிவுசார்ந்த
(spiritual) வாழ்வு எனப்பட்டது, இந்தப்
புறநிலை உண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே, யதார்த்த நிலையின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே
- என்ற முடிவுகள் ஏற்படும்.” (பக்கம் 23-24)
ஒரு சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வின் நிலைமைகளுக்கு ஏற்ப சமுதாயத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், அரசியல் கண்ணோட்டங்களும்,
அரசியல் நிறுவ னங்களும் தோன்றுகின்றன.
“சமுதாயத்தின் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு எதிலிருந்து பிறந்தது?
சமுதாயக் கருத்துக்களும், சமுதாயக் கொள்கைகளும், அரசியல் கருத்துக்களும், அரசியல் நிறுவனங்களும்
எதிலிருந்து உதிக்கின்றன? அவற்றின் தோற்றுவாய் எது? என்று கண்டுபிடிக்க வேண்டுமானால்,
அந்தக் கருத்துக்களையே, கொள்கைகளையே, கண்ணோட்டங்களையே அரசியல் நிறுவனங்களையே துருவிப்பார்த்துக்
கொண்டிருக்கக் கூடாது. அவற்றிற்குள்ளேயே பொதிந்து கிடக்கிறதா என்று தேடக்கூடாது. அதற்கு
மாறாக, இந்தக் கருத்துக்களும், கொள்கைகளும், கண்ணோட்டங்களும் எதனுடைய பிரதிபலிப்பாக
இருக்கின்றனவோ அதை - சமுதாயத்தின் பொருளாயத வாழ்வையும், அதன் நிலையையும் - துருவிப்
பார்க்க வேண்டும்.
ஆகவே,
சமுதாய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும்,
கண்ணோட்டங்களும் அரசியல் நிறுவனங்களும் காணக் கிடக்கின்றன என்றால் - அடிமை சமுதாய முறையின்
கீழ் சில சமூகக் கருத்துக்களையும் கொள்கைகளையும் கண்ணோட்டங்களையும், அரசியல் நிறுவனங்களையும்
காண்கிறோம் என்றால் - நிலப்பிரபுத்துவ முறையின்கீழ் வேறு சிலவற்றைக் காண்கிறோம் என்றால்
- முதலாளித்துவ முறையின் கீழ் இன்னும் வேறு சிலவற்றைக் காண்கிறோம் என்றால் அதை எப்படி
விளக்குவது? அந்தந்தக் கருத்துக்களின், கொள்கைகளின், கண்ணோட்டங்களின், அரசியல் நிறுவனங்களின்
''தன்மையை' வைத்து, அவற்றின் "குணாம்சங்களை'' வைத்து, அதை விளக்கக் கூடாது; அதற்கு
மாறாக, சமுதாயம் வளர்ந்து வந்ததன் வெவ்வேறு கால கட்டங்களில் நிலவிய சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வின் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டு அதை விளக்க வேண்டும்.
ஒரு
சமுதாயத்தின் நிலை எப்படியிருக்கிறதோ, ஒரு சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள்
எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் அந்த சமுதாயத்தின் கருத்துக்களும், கொள்கைகளும், அரசியல்
கண்ணோட்டங்களும், அரசியல் நிறுவனங்களும் உள்ளன.” (பக்கம் 24)
பொருளாயத வாழ்வு வளர்வதற்கு
வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச்
செய்ய வேண்டும் என்று மார்க்சை ஆதாரப்படுத்திக் கூறியுள்ளார் ஸ்டாலின்
“மார்க்ஸ்
கூறுவதாவது: "மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல; அதற்கு
மாறாக, மனிதர்களின் சமூக வாழ்நிலைதான் அவர் களின் உணர்வை நிர்ணயிக்கிறது.'' (அரசியல்
பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)
ஆக,
கொள்கையில் தவறாமலிருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால்
- பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்? புறநிலைக்கப்பால் நிற்கும் ''மனிதப்
பகுத்தறிவுக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச்
செய்யக் கூடாது. சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது ? சமூகத்தின் பொருளாயத வாழ்விலுள்ள
பருண்மையான நிலைமைகள்தாம் அந்த சக்தி. எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி
வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும். ''பெரிய மனிதர்களின்'' நல்லெண்ணங்களை
ஆதார மாகக் கொள்ளவும் கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு
வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச்
செய்ய வேண்டும்.
நரோத்னிக்குகள்,
அராஜகவாதிகள், சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் அடங்கலாக, கற்பனை உலகில் உலவியவர்கள் பலர்
வீழ்ச்சியடைந்தார்களே - அதற்குக் காரணமென்ன? காரணங்கள் பல உண்டு. அதில் ஒன்று, சமூகம்
வளர்வதில் சமுதாயத்தின் பொருளாயத வாழ்க்கை நிலைமைகள் வகிக்கும் முதன்மையான பாத்திரத்தை
அவர்கள் அங்கீகரிக்காததே. அதோடு கூட, கருத்து முதல்வாதக் குட்டையில் இறங்கி விட்டனர்.
சமுதாய பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வேலைகளைச் செய்யவில்லை.
அதற்குப் பதிலாக, இந்தத் தேவைகளைப் புறக்கணித்து அவற்றிற்குத் தொடர்பில்லாத வகையில்,
சமுதாயத்தின் யதார்த்த வாழ்வுடன் தொடர்பற்ற "இலட்சியத் திட்டங்களையும்'', ''அனைத்தும்
தழுவிய திட்டங்களையும்' 'தங்களுடைய வேலைகளுக்கு ஆதாரமாகக் கொண்டனர்.” (பக்கம் 25)
மார்க்சிய - லெனினியத்தின்
பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? என்ற கேள்வியை ஸ்டாலின் கேட்டு பதிலளிக்கிறார்.
“மார்க்சியம்
- லெனினியத்தின் பலம், அதன் உயிர்நாடி எதிலிருக்கிறது? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு
வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அது தனது வேலைகளைச் செய்கிறது - சமுதாயத்தின்
யதார்த்த வாழ்விலிருந்து எப்பொழுதும் தன்னைக் கத்தரித்துக் கொள்வது கிடையாது என்கிற
உண்மையில் அடங்கியுள்ளது.
அப்படியென்றால்,
சமுதாயக் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும், அரசியல் கண்ணோட்டங்களுக்கும், அரசியல்
நிறுவனங்களுக்கும் சமுதாய வாழ்வில் ஒரு முக்கியத்துவமும் கிடையாது என்று முடிவு செய்வதா?
சமுதாய நிலையையும், சமுதாய வாழ்வின் பொருளாயத நிலைமைகளையும் அவை பரஸ்பரம் பாதிப்பதில்லை
என்று முடிவு கட்டுவதா? மார்க்சினுடைய வார்த்தைகளிலிருந்து எழுவது இந்த முடிவுதானா?
இல்லவே இல்லை. சமுதாயக் கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும், கண்ணோட்டங்களுக்கும்,
அரசியல் நிறுவனங்களுக்கும் எது தோற்றுவாய் என்பதைப் பற்றித்தான் இது வரை நாம் பேசிக்
கொண்டிருந்தோம்; அவை எப்படி உதிக்கின்றன என்பதைப் பற்றித்தான் - சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வு நிலைமைகளின் பிரதிபலிப்புதான் அதன் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு என்கிற விசயத்தைப்
பற்றித்தான் - இது வரை நாம் பேசிக் கொண்டிருந்தோம்.
சமுதாயக்
கருத்துக்கள், கொள்கைகள், அபிப்பிராயங்கள், அரசியல் நிறுவ னங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம்
என்ன? சமுதாயத்தில் அவை என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று கேட்கலாம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
அவற்றை மறுக்கவில்லை. மாறாக, சமுதாய வாழ்வில், சமுதாய வரலாற்றில், அவை வகிக்கும் முக்கியமான
பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் அது வலியுறுத்துகிறது.
சமூகக்
கருத்துக்களிலும், கொள்கைகளிலும் வெவ்வேறு வகைப் பட்டவை உண்டு. என்றோ மறைந்தொழிந்து
போயிருக்க வேண்டிய பழைய கருத்துக்களும் கொள்கைகளும் இன்னும் இருந்து வருகின்றன. சமுதாயத்தில்
நசிந்து வரும் சக்திகளின் நலன்களை அவை பேணிப் பாதுகாக்கின்றன. சமுதாயத்தின் வளர்ச்
சிக்கும் முன்னேற்றத்தக்கும் குறுக்கே விழுந்து தடங்கல் செய்வதில்தான் இவற்றின் முக்கியத்துவம்
அடங்கியுள்ளது. மறுபுறம் புதிய முற்போக்கான கருத்துக்களும் கொள்கைகளும் உள்ளன.
சமுதாயத்திலுள்ள
முற்போக்கான சக்திகளின் நலன்களுக்கு இவை சேவை புரிகின்றன. இவற்றின் முக்கியத்துவம்
எதில் அடங்கியுள்ளது? சமுதாயத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் இவை சுலபமாக்குகின்றன
என்பதில்தான் இவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. மேலும் சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எவ்வளவுக்கெவ்வளவு, சரியாக அவை பிரதிபலிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு,
அவற்றின் முக்கியத்துவம் அதிகமாகிறது.” (பக்கம் 26-27)
புதிய சமுதாயக் கருத்துக்களும்,
கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன?- என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கிறார்.
“புதிய
சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும் எப்பொழுது உதிக்கின்றன? சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வின் வளர்ச்சியானது சமுதாயத்தின் முன், நிறைவேற்ற வேண்டிய புதிய கடமைகளை வைத்த
பிறகுதான் அவை உதிக்கின்றன. அதற்குமுன் உதிப்பதில்லை . ஆனால், ஒரு தடவை உதித்து விட்டால்
போதும், அப்புறம் அவை மிகவும் ஆற்றல் மிக்க சக்தியாக மிளிர்கின்றன. சமுதாயத்தின் பொருளாயத
வாழ்வு வளர்ச்சி நம்முன் வைக்கும் புதிய கடமைகளை நிறைவேற்றுவதை அந்தச் சக்தி சுலபமாக்குகின்றது.
சமுதாயம் முன்னேறுவதை அது சுலபமாக்குகிறது; இங்கேதான் மக்களை அமைப்பாக மாற்றும் சக்தி,
மக்களை அணி திரட்டும் சக்தி, மக்களைப் புதிய சமுதாயமாக மாற்றியமைக்கும் சக்தி வெளிப்படுகிறது.
புதிய
சமுதாயக் கருத்துக்களும், கொள்கைகளும், புதிய அரசியல் கண்ணோட்டங்களும், புதிய அரசியல்
நிறுவனங்களும் ஏன் தோன்றுகின்றன?
ஏனென்றால்,
அவை சமுதாயத் துக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால், அவற்றின் அணி திரட்டும் படியான,
அமைப்பாக்கும் படியான, புதிய நிலையை உருவாக்கும் படியான வேலைகள் நடக்காமல் சமுதாயத்தின்
பொருளாயத வாழ்வு வளர்ச்சியானது நம்முன் வைக்கும் கடமை களை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.
சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு வளர்ச்சி முன் வைக்கிற கடமைகளிலிருந்து தோன்றி இந்தப்
புதிய சமுதாயக் கருத்துக்களும் கொள்கைகளும் பல வந்தமாக வெடித்துக் கொண்டு வெளிக் கிளம்புகின்றன;
அவை மக்களின் சொத்தாகின்றன. சமுதாயத்திலுள்ள நசிந்து வரும் சக்திகளுக்கு எதிராக மக்களை
அணிதிரட்டி அமைப்பாக மாற்றி அமைக் கின்றன. அப்படிச் செய்வதன் மூலமாக சமுதாயத்தின் பொருளா
யத வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்கும் இந்தச் சக்திகளைத் தகர்த் தெறிவதை எளிதாக்குகின்றன
எனவே,
சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் வளர்ச்சி - சமு தாய நிலைமையின் வளர்ச்சி முன்வைக்கிற
அவசரக் கடமைகளை அடிப்படையாகக் கொண்டுதான், சமுதாயக் கருத்துக்களும் கொள்கைகளும் அரசியல்
நிறுவனங்களும் எழுகின்றன. அவ்வாறு எழுந்தவுடன் அவை சமுதாய நிலைமையின் மீதும் சமுதாயத்தின்
பொருளாயத வாழ்வின் மீதும் எதிர் வினை ஆற்றுகின்றன. சமு தாயத்தின் பொருளாயத வாழ்வின்
வளர்ச்சி முன்வைக்கின்ற கடமை களை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் சமுதாயம் மேலும் வளர்
வதற்கும் அவசியமான நிலைமைகளை அவை உருவாக்குகின்றன.
இது
தொடர்பாக மார்க்ஸ் கூறுவதாவது: ''மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவுடன் தத்துவம் எனப்பட்டது
ஒரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது.'' ('ஹெகெலினுடைய உரிமை பற்றிய தத்துவத்தின் மீதான
ஒரு விமர்சனம்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை)
எனவே
சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள் மீது செல்வாக்குச் செலுத்த வேண்டுமென்றால்
- அவற்றின் வளர்ச் சியைத் துரிதப்படுத்த வேண்டு மென்றால் - எப்படிப்பட்ட சமு தாயக்
கோட்பாட்டைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பற்றுக் கோடாகக் கொள்ள வேண்டும்? சமுதாயத்தின்
பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை எந்தச் சமுதாயக் கோட்பாடு சரியாகப் பிரதிபலிக்கிறதோ,
அப்படிப்பட்ட தொரு கோட் பாட்டைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பற்றுக்கோடாகக் கொள்ள
வேண்டும். அப்படிச் சரியாகப் பிரதிபலிக்கும் ஒரு சமுதாயக் கோட் பாடுதான், பெருவாரியான
மக்களை இயங்கும்படி செய்து, அணி சேர்த்து, பிற்போக்குச் சக்திகளைத் தூள்தூளாக்கவும்,
சமுதாயத்தின் முற்போக்குச் சக்திகள் முன்னேறுவதற்கு பாதையை ஒழுங்கு படுத்தவும் தயாராக,
மக்களை அமைப்பு ரீதியில் பாட்டாளி வர்க்கக் கட்சியின் மாபெரும் படையாகத் திரட்டுவதற்கும்
ஆற்றல் பெற்றிருக்கும்.” (பக்கம் 27-28)
“மார்க்சிய
- லெனினியத்தின் வலிமையும் உயிர்த் துடிப்பும் எதிலிருந்து பிறக்கின்றன? சமுதாயத்தின்
பொருளாயத வாழ்வின் வளர்ச்சியின் தேவைகளைச் சரியாய் பிரதிபலிக்கும்படியான ஒரு முற்போக்கான
கோட்பாட்டை பற்றுக்கோடாகக் கொண்டிருப்பதிலிருந்துதான் - கோட்பாட்டை ஒரு சரியான மட்டத்துக்கு
உயர்த்தி வைத்ததிலிருந்துதான் - மக்களை அமைப்பாகத் திரட்டவும், அணி வகுக்கவும், மாற்றியமைக்கவும்
இந்தக் கோட்பாடு பெற்றுள்ள ஆற்றலை ஒரு துளிகூட விடாமல் முழுவதுமாகப் பயன்படுத்திக்
கொள்வது தனது கடமை என்று கருதுவதிலிருந்துதான் - அந்த வலிமையும் உயிர்த் துடிப்பும்
பிறக்கின்றன.
சமுதாய
நிலைமைக்கும், சமுதாய உணர்வுக்கும் இடையிலுள்ள உறவு என்ன - பொருளாயத வாழ்வின் வளர்ச்சியின்
நிலைமைக ளுக்கும் சமுதாயத்தின் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வின் வளர்ச்சிக்கும்
இடையி லுள்ள உறவு என்ன என்று கேட்கப்படும் கேள்விக்கு வரலாற்று பொருள்முதல்வாதம் கொடுக்கும்
பதில் அதுதான்.” (பக்கம் 29)
புதிய உற்பத்தி சக்திகளும்
உற்பத்தி உறவுகளும் அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயே முளைக்கின்றன என்பதை
ஸ்டாலின் தெளிவாக முன்வைக்கிறார். இது போன்ற ஸ்டாலினின் தெளிவானக் கருத்துக்கள் பல்வேறு
குழப்பத்தைத் தவிர்கின்றன.
“புதிய
உற்பத்திச் சக்திகளும் சரி, அவற்றிற்குகந்த உற்பத்தி உறவுகளும் சரி பழைய சமுதாய அமைப்பு
முறைக்கு அப்பால் நின்றபடி, அந்த அமைப்பு முறை அழிந்து போன பிறகு தனியே முளைத்தெழுவதில்லை,
அதற்குப் பதிலாக, அந்தப் பழைய சமுதாய அமைப்பு முறைக்குள்ளேயேதான் அவை முளைக்கின்றன.
மனிதன் ஆர அமரச் சிந்தித்து உணர்வுபூர்வமாக வேலை செய்வதன் விளைவாக அவை எழுவது மில்லை.
போகிற போக்கிலே உணர்வற்ற வகையிலே மனிதச்சித்தத்திற்கு அப்பாற்பட்டுத் தன்னியல்பாக அவை
உதிக்கின்றன. போகிற போக்கிலே, மனித சித்தத்திற்கு அப்பாற்பட்டு அவை நிகழ்வதற்கு இரண்டு
காரணங்கள் உண்டு.
முதலாவதாக, இந்த உற்பத்தி முறை வேண்டுமா
அல்லது அந்த உற்பத்திமுறை வேண்டுமா என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள மனிதர்களுக்குச் சுதந்திரம்
இல்லை என்பது ஒரு காரணம். ஏனென்றால், ஒவ்வொரு புதிய தலைமுறையும் பிறந்து வாழத் தொடங்கும்
போது, தனக்கு முன் சென்ற தலைமுறைகளின் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும்
உற்பத்திச் சக்திகளையும், உற்பத்தி உறவுகளையும் அது காண்கிறது. எனவே, உற்பத்தித் துறையில்
ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள எல்லா வற்றையும் அந்தத் தலைமுறை ஏற்றுக் கொண்டு, அவற்றிற்கு
ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் முதன் முதலில் ஏற்படுகிறது.
அப்படிச் செய்தால்தான் பொருளாய்த செல்வங்களை அதனால் உற்பத்தி செய்ய இயலும்.
இரண்டாவதாக: ஏதாவதொரு உற்பத்திக் கருவியை
முக்கிய மாகக் கருது கிற காலத்தில் - உற்பத்தி சக்திகளின் ஏதாவதொரு அம்சத்தை முதன்மைப்படுத்துகிற
காலத்தில் - அப்படி முக்கியப் படுத்து வதனால் சமுதாயத் துறையில் என்ன விளைவுகள் உண்டாகும்
என்று மனிதர்கள் அறிவதில்லை; புரிந்து கொள்வது மில்லை, சிந்திக்கவும் காத்திருப்பதில்லை.
தங்களுடைய அன்றாட நலன்களைப் பற்றித்தான், தங்களுடைய உழைப்பின் பளுவை எப்படிக் குறைப்பது
என்பதைப் பற்றித்தான் - தமக்கு ஏதாவது நேரடியாகக் கை மேல் கிடைக்கக்கூடிய உருப்படியான
பலன் களைப் பெறுவதைப் பற்றித்தான் - அவர்களின் சிந்தனை உள்ளது.” (பக்கம் 49-50)
புறநிலைகளே அடித்தளம்,
அகநிலைமைகளே மேற்கட்டமைப்பு. அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்.
மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம். கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதத்தையே
ஏற்கின்றனர்.
அடித்தளம் தீர்மானிக்கிறது என்பதால் சமூக மாற்றம்
தானே நிகழும் என்ற புரிதல் இயந்தரத்தனமானது. இதனை எங்கெல்ஸ் தமது இறுதிக்காலங்களில்
கடுமையாக விமர்சித்தார். ஆனால் அங்கே எங்கெல்ஸ் அடித்தளத்தின் தீர்மானகர பாத்திரத்தை
எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை.
இயக்கவியல் பார்வையற்றவர்கள் மேற்கட்டமைப்பின்
அடித்தளத்தின் மீதான தாக்கத்தைத் கணக்கில் கொள்வதில்லை என்று எங்கெல்ஸ் விமர்சிக்கிறார்.
இந்தத் தாக்கத்தைத் தீர்மானிக்கும் அளவுக்குப் பேசி சிலர் குழப்பி வருகின்றனர்.
தாக்கம் என்பதற்கு ஆங்கிலத்தில் செல்வாக்கு (influence) என்று வருவதால், அடித்தளத்தையே
மாற்றும் செல்வாக்கு என்று மார்க்சுக்கு எதிராக இதற்குப் பொருள் கொள்கின்றனர். இவர்களால்
புறநிலை விதி என்பதை விதிவாதமாகக் கொள்கின்றனர். ஆனால் புறநிலை விதியை ஏற்பது என்பது
அதற்கு ஒப்ப அகநிலைகளை அமைத்துக் கொண்டு செயற்படுவதற்கே ஆகும். புறநிலை மூலமாக அகநிலை
மாற்றங்களை விளக்குவதில் தான் கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மை அடங்கியிருக்கிறது. இதில்
விதிவாதமோ, இயந்திர தனமோ கிடையாது.
புறநிலையை மறுக்கின்றவர்கள், மார்சுக்கு முன்பான
கருத்தையே ஏற்றுக்கூறிவருகின்றனர். மார்க்சின் புதிய கண்டு பிடிப்பான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப்
புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இதுபோன்றவர்களுக்கு இந்த ஸ்டாலினின் நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிறந்த கம்யூனிஸ்டாகச் செயற்பட விரும்புகவர்கள் இந்த நூலை கற்றுத் தேறவேண்டும். அப்போதுதான் மார்க்சிய வழிபட்ட கம்யூனிஸ்டாகத் திகழமுடியும்.
No comments:
Post a Comment