Monday 10 February 2020

பெரியார் தத்துவம் ஒரு மார்க்சிய விமர்சனம்- கார்முகில்

ஆசிரியர்-கார்முகில்
வெளியீடு: தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சி
விலை –ரூ25/-


திராவிடர் கழகத்தின் “உண்மை” (1988) இதழுக்கு பதிலளிக்கும் முகமாக “கேடயம்” இதழில் (1989) எழுதப்பட்டதை நூலாக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்குப் பொருந்தாத வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இங்கே நிகழ்த்த வேண்டியது வர்ணப் போராட்டமே, அதனை நடத்துவது திராவிடர் கழகமே. அதனால் பெரியார் இயக்கமே உண்மையான கமயூனிச இயக்கம் என்று “உண்மை” இதழ் கூறியதை, மறுத்து “கேடயம்” எழுதியதே “பெரியார் தத்துவம் ஒரு மார்க்சிய விமர்சனம்” என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இந்நூலின் தொடக்கமே பெரியார் தத்துவத்தின் தன்மையை வறையறுத்துள்ளது. கம்யூனிச இயக்கத்தின் சோசலிசம் விஞ்ஞானச் சோசலிசம், பெரியாரின் சோசலிசம் கற்பனா சோசலிசம். கம்யூனிச இயக்கத்தின் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம், பெரியாரின் தத்துவம் மார்க்சியத்திற்கு முன்பான கொச்சைப் பொருள்முதல்வாதம்- சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் பொருளாதாரம் வர்க்கப் போராட்டத்தைப் போதக்கிறது, பெரியாரின் பொருளாதாரம் வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறது.

பெரியார் எழுதிய “தத்துவ விளக்கம்” என்ற நூலின் அடிப்படையில் அவரின் தத்துவம் விமர்சிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” (1952-1959)ல் வெளிவந்த கருத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பெரியாரின் கருத்து விமர்சிக்கப்படுகிறது. இந்நூலில் கொடுக்கப்பட்ட பெரியாரின் மேற்கோளே அவரின் கருத்துமுழுவதையும் வெளிப்படுத்திவிடுகிறது.

“நல்ல தொழிலாளர் சங்கம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது முதலாளயிடத்தில் விசுவாசம், சொந்தப் பொறுப்பு போலக் கருதி தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது முதலியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.” இந்தக் கருத்தை இந்நூல் பெரியாரின் தொழிற்சங்க இயக்கப் பிரகடனம் என்று கூறுகிறது.

கடவுளும், மதமும் மனிதர்களால் படைக்கப்பட்டுப் பரப்பட்டதாகக் கருதுகிற பெரியாரின் கருத்து, மார்க்சின் மதம் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் மறுக்கப்படுகிறது.
பார்ப்பனர், மற்றும் மதங்களின் ஒழிப்பில் தான் சாதி ஒழிப்பு இருப்பதாகப் பெரியார் கருதுகிறார். இதற்கு மாறாக “சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி முறையினால் ஆதிக்கம் பெறுகின்றவர்களும் அதற்கான உற்பத்தி மறையும் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற இந்நூல் மார்க்சிய வழியில் தீர்வைக் கூறுகிறது. சாதிய ஒழிப்பில் பெரியாரின் வர்க்க சமரத்தை இந்நூல் மிகத் தெளிவாக அம்பலப்படத்தியுள்ளது.

“சாதிக்கு எதிரான போராட்டம் என்பது உண்மையில் நிலப்பிரபுக்களின் நிலவுடைமைக்கும், அவர்களுடைய சாதிய ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டம் என்பதை மறைத்து பார்ப்பானுக்கு எதிரான போராட்டம், கடவுள், மதத்துக்கு எதிரான போராட்டம் என்பதாகச் சுருக்கிவிடுகிறார். இதனால் பெரியாரின் சாதி ஒழிப்புக் குரல் பார்ப்பானுக்கு எதிராகச் சம அந்தஸ்து கோரி மேல்சாதி பணக்காரர்கள் எழுப்பும் குரலாக இருக்கிறதே தவிர முழுமையான சாதி ஒழிப்புக்கான குரலாக இல்லை.
முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் இருப்பது பற்றிப் பேசுகிறார், கணவன் மனைவி போல் குடும்பமாக வாழ்வது பற்றிப் பேசுகிறார், வர்க்க சமரசம் பேசுகிறார்.” (பக்கம் -42)

“உண்மை” பத்திரிகையில் வெளிவந்துள்ள கருத்திற்கு “கேடயம்” உடனடிப் பதிலாக எளிமையாகவும் உறுதியாகவும் விமர்சித்துள்ளது. பெரியாரின் சமதர்மத்திற்கும் விஞ்ஞானக் கம்யூனிசத்திற்கும் உள்ள வர்க்க வேறுபாட்டை முழுமையாக விமர்சித்து எழுத வேண்டியது, கம்யூனிஸ்டுகளின் கடமையாக இருக்கிறது. கடமையை நிறை வேற்றுவோம்.

3 comments:

  1. மகிழ்ச்சி தோழர்

    ReplyDelete
  2. கேடயத்திற்கு நன்றியை செலுத்துவோம் தோழர்

    ReplyDelete