(இந்தியாவில் ஜே.வி.ஸ்டாலின்
படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்ட New Horizon Book Trust நிறுவனத்தின் பதிப்புரை.
அலைகள் வெளியிட்டுள்ள தமிழ் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது)
ரொட்டியைத்
தியாகம் செய்யுங்கள்,
குண்டுகள்
தயாரிக்க...
தியாகியாக
மாறவும் தயாராக இருங்கள்,
சந்தைக்காக...
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மக்களிடையே முதலாளித்துவம்
செய்துவரும் சுவிசேஷப் பிரசங்கம் இதுதான். இதை அப்படியே ஏற்றுக் கொண்டால் நீங்கள் ஓர்
அறிவுஜீவி. இதை மறுத்துப் பேசினாலோ நீங்கள் ஒரு முட்டாள்.
ஆம், இப்படித்தான் இந்த உலகம் சென்று கொண்டிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள், நிதி மூலதனம் ஆகியவற்றின் கருணையால் வாழ்ந்து வரும் உலகிற்கு
இதைவிட்டால் வேறு வழியில்லை.
பணப்பெட்டியை மட்டுமே போற்றி, பூசித்து வரும் இந்த
உலகம் ஜோசப் விசாரியோனோவிச் ஜுகாஷ்விலி என்ற இயற்பெயருடைய ஸ்டாலினைக் கொடுங்கோலன் என்றும்,
இரக்கமே இல்லாத அரக்கன் என்றும், ஜார் மன்னனின் மூதாதையும் ருஷ்யாவின் அரசனும் ஆன
'இவான் த டெரிபிள்' என்று அழைக்கப்பட்ட இவானின் கொடூரச் செயல்களை எல்லாம் விஞ்சிய கொடுமைகளைக்
கட்டவிழ்த்துவிட்ட நாசக்காரன் என்றும் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பதில் வியப்பேதும்
இல்லை.
ஏன் ஸ்டாலின் மீது மட்டுமே இத்தகைய பழிச்சொற்களை,
நச்சு வார்த்தைகளை, அண்டப்புளுகைக் கட்டவிழ்த்துவிட வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள்
இருப்பதாகத் தோன்றுகிறது.
முதலாவதாக, அவர் லெனினின் உண்மையான
சீடர் என்ற வகையில் ஒடுக்குவோர்-சுரண்டுவோர், முதலாளிகள்-நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு
எதிரான போரில் தனது சமகாலப் போல்ஷ்விக்குகளை எல்லாம் விஞ்சி முன்னே நிற்பவராக இருந்தார்.
வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலோ அவர் யாரையும், எதையும் விட்டு விடவில்லை. ஜாராட்சி
அடியாள்களின் எதிர்ப்புரட்சி இயக்கத்தை இருந்த இடம் தெரியாமல் நசுக்கிய போதோ அல்லது
சோசலிச வகைப்பட்ட சீரமைப்பிற்குக் கேடு விளைவிக்கத் துணிந்தவர்களை நச்சுப் பாம்புகளென
நசுக்கிய போதோ அல்லது பாசிசத்தின் கோட்டையைச் சுக்குநூறாகத் தூளாக்கியபோதோ மிகக் கடுமையானவராக,
எதற்கும் இடம் கொடாத ஒருவராகத்தான் அவர் இருந்தார்.
சோசலிசத்தின் எதிரிகளைச் சலனமற்ற உறுதியுடன் ஸ்டாலின்
எதிர்த்துப் போராடினார். அவரைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உணர்ச்சிக்கு இடமில்லை;
தனிப்பட்ட உறவுகளுக்கு எவ்விதச் சலுகைகளும் இல்லை. அவரது சிந்தனை முழுவதுமே உழைக்கும்
மக்களின் போராட்டம் என்ற ஒரே நோக்கத்தில்தான் எப்போதும் ஆழ்ந்திருந்தது.
ஒரு செருப்பு தைப்பவனின் மகன்; ஒரு பண்ணை அடிமையின்
பேரன் என்ற வகையில் ஒடுக்கும் வர்க்கங்கள் மீதான வெறுப்பே ஸ்டாலினின் செயல்களை வடிவமைத்தது.
ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் புகழ்பெற்ற ஒருவர் - ஸ்டாலின் சென்ற பாதையில்
எவ்வித நம்பிக்கையும் இல்லாதவராக இருந்தவர் அவர் என்பதை இங்கே குறிப்பாகச் சுட்டிக்
காட்டவேண்டும் - அவர்தான் ஸ்டாலினைப் பற்றிய மிகச் சரியானதொரு சித்திரத்தை வழங்கியிருந்தார்.
வர்க்க விரோதிகளின் மீதான வெறுப்பு என்பது ஸ்டாலினுக்கு இயற்கையாகவே அமைந்திருந்த ஒரு
குணம் என்பதுதான் அவரின் கணிப்பு. புரட்சிகர இயக்கங்களின் தாக்கம் மிகவும் அரிதாகிப்
போன இன்றைய சூழலில் தொழிலாளி வர்க்கம், சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றுக்கு விரோதமான
சக்திகளால் கொடுமையின் அவதாரமே ஸ்டாலின்தான் என்று குறிப்பாகப் பழிக்கப்படுவதும் இயல்பான
ஒன்றுதான்.
லெனினின் புரட்சிகரமான அறிவுத்திறன்தான் ருஷ்யாவின்
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்த உதவியது என்று கூறுவோமேயானால்,
உருக்கு போன்ற மன உறுதி படைத்த ஸ்டாலினின் தலைமையின் கீழ்தான் அந்நாட்டின் அடித்தட்டு
மக்கள் தாம் மேற்கொண்ட சோசலிச வகைப்பட்ட சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில்
வெற்றி பெற்றனர் என்பது மட்டுமின்றி, மனிதகுல வரலாற்றில் முதன்முறையாகக் கோடிக் கணக்கான
உழைக்கும் மக்கள் தங்களது பொருள் - கலாச்சார தேவைகளில் மிக அதிகமான அளவிற்குத் திருப்தியும்
அடைந்தனர்.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக உருவான இந்தப் புதிய
சமூக அமைப்பின் வெற்றி என்பது அளவுகடந்த வியப்பைத் தருவதாக இருந்தது. இரண்டாம் உலகப்
போரின் முடிவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரும் தொழில் வளர்ச்சி
பெற்ற நாடாகச் சோவியத் யூனியன் உருவாகியிருந்தது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகப்
பெருமுதலைகளாலும், அறிவுசார் உலகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்திருந்த அவர்களது அடியாள்களாலும்
போற்றப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்த சமூக - பொருளாதார அமைப்பிற்குச் சோவியத் யூனியன்
மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. 'ஒரே
நாட்டிற்குள் சோசலிசத்தைக் கட்டுவது' என்பது லெனின் உருவாக்கிய கருத்தோட்டமாகும்.
ஸ்டாலினின் வீரஞ்செறிந்த, ஊக்கமூட்டும் வகையிலான முயற்சியின் விளைவாகவே இந்தக் கருத்தோட்டமானது
உயிரோட்டமானதோர் அமைப்பாக உருமாற்றப்பட்டதோடு, உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு, ஒளிமயமானதோர் உலகை, எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் திசைகாட்டியாகவும்
திகழ்ந்தது.
இடைக்கால நிலப்பிரபுத்துவ இருளில் மூழ்கிக் கிடந்த
ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கு அவர் வழங்கிய வெற்றிகரமான தலைமைக்காகவும், கொள்ளை
லாபம் அடிப்பவர்கள், மக்களைச் சுரண்டுபவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் கையாண்ட சமரசமற்ற
கடுமையான அணுகுமுறை ஆகியவற்றுக்காகவுமே பொய்களும் அவதூறுகளும் நிரம்பிய கூச்ச நாச்சமற்ற
பிரச்சாரத்தின் இலக்காக ஸ்டாலின் மாறுகிறார். முதலாளித்துவக் கொடுங்கோலன்களும், அவர்களிடம்
கூலிக்கு மாரடிக்கின்ற அறிவு ஜீவிகளும் காட்டு மிராண்டித்தனமான அவதூறுகளையும், கோபத்தில்
கொந்தளிக்கும் வெறுப்பு நிறைந்த வசவுகளையும் அவர்மீது வீசிக் கொண்டே இருக்கின்றனர்.
1950 களின் நடுப்பகுதியில் குருச்சேவ் தலைமையிலான திருத்தல்வாதக் கும்பல் ஆட்சியைக்
கைப்பற்றியதைத் தொடர்ந்தும், இறுதியில் 1990களின் துவக்கத்தில் சோவியத் யூனியனே முற்றிலுமாகச்
சிதறுண்டு போனதைத் தொடர்ந்தும், ஸ்டாலின் மீது பொழியப்பட்ட தொடர்ச்சியான அவதூறுப் பிரச்சாரமானது
இதுவரைக் கண்டிராத உச்சத்தைத் தொட்டது. இதனால் புரட்சிகர எண்ணம் கொண்டோர் மத்தியிலும்
கூட அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடிந்தது.
இத்தகைய பின்னணியில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின்
தலைவர் என்ற வகையிலும், ஒரு நாட்டில் சோசலிசத்தை மறுகட்டுமானம் செய்த நிபுணர் என்ற
வகையிலும், மார்க்சிய-லெனினிய தத்துவத்தை விளக்கிக் கூறியவர் என்ற வகையிலும் ஸ்டாலினது
பங்கைக் காய்தல் உவத்தல் இன்றி மதிப்பீடு செய்ய வேண்டியதென்பது மிக அவசரமானதொரு கடமையாகவே
தோன்றுகிறது. ஸ்டாலினின் சொந்த எழுத்துகள், (மிக அரிதாகவே கிடைக்கும்) அவரது உரைகள்
ஆகியவையே இந்தக் கடமைக்குப் பேருதவி செய்வதாக இருக்குமே தவிர, சந்தைக்கான தத்துவத்திடம்
சோரம் போய்விட்ட 'அறிஞர்'களின் உள்நோக்கம் கொண்ட ஆய்வுகளோ, கருத்துகளோ அல்ல.
இந்த நோக்கத்துடனேயே, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட்
(போல்ஷ்விக்) கட்சியின் மத்தியக் குழுவின்கீழ் இயங்கிய மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் கழகத்தால்,
1946-49 காலப்பகுதியில் ருஷ்ய மொழியில் வெளியிடப்பட்டு, அவர்களது அந்நிய மொழிகள் பதிப்பகத்தால்
1952-55 காலப் பகுதியில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட ஸ்டாலின் தொகுப்பு நூல்களை
எவ்விதக் கூட்டலும் கழித்தலும் திருத்தலும் இன்றி அப்படியே உங்களிடம் வழங்குகிறோம்.
இந்த முயற்சி பிரம்மாண்டமான ஒரு முயற்சி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை . எமது இந்த
முயற்சியை வாசகர்கள் பாராட்டுவார்கள் என்றே நம்புகிறோம்.
செப்டம்பர்,
1998.
good.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதோழர், லெனினின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் நூலுக்கு அறிமுகம் உரை எழுதிப்பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.....நன்றி
ReplyDeleteஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் – லெனின் (அறிமுகம்)
ReplyDeletehttps://abouttamilbooks.blogspot.com/2016/06/blog-post_19.html
சிறு அறிமுகம் செயதிருக்கிறேன் படித்துப் பாருங்கள்