லெனின் எழுதிய “மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்” என்ற சிறு கட்டுரையின் முக்கியத்துவம் என்னவென்றால், மார்க்சியத்தின் உயிர்த்துடிப்பான இயக்கவியலை முன்னிருத்துவதற்கே ஆகும். மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் லெனினும் வலியுறுத்துகின்றனர்.
மார்க்சியம் என்பது முடிந்துபோன் சிந்தனை அல்ல. அது புதிய நிலைமைக்கு ஏற்ப தன்னை வளர்த்துக் கொள்ளக்கூடியது. இதனை மறுப்பவர்கள், மார்க்சியத்தை ஒருதலைபட்சமாகவும், உருக்குலைக்கப்பட்டதாகவும், உயிரற்ற ஒன்றாகவும் திரிக்கின்றனர். உயிரோட்டமான அதன் அடித்தளத்தைப் பறித்துவிடுகின்றனர். நடைமுறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் வரலாற்றில் ஏற்படும் ஒவ்வொரு புதிய திருப்பங்களுக்கு ஏற்ப தனது புதிய கடமைகளைப் புரிந்து கொண்டு வகுத்து செயற்டுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் பழைய நிலைமைகளுக்கு ஏற்ப, எடுத்த முடிவுகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் அல்ல. அதனால் கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாகக் கருதவில்லை. இவ்வாறு சொன்னவுடன் மார்க்சியத் திருத்தல்வாதிகள் மார்க்சிய அடிப்படைகளைத் திருத்த முனைகின்றனர். இதனை அறிந்து தான் லெனின் இந்தக் கட்டுரையில், பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை, என்று தெளிவு படுத்தியுள்ளார். வர்க்க சமூகம் இருக்கும் வரை, வரலாற்றில் ஏற்படும் புதிய நிலைமைகளால் அடிப்படை குறிக்கோள்கள் மாறிவிடுவதில்லை என்பதையும் லெனின் சேர்த்துக் கூறியுள்ளார்.
ருஷ்ய நிலைமைகளின் ஆறு ஆண்டுகளை இந்தச் சிறு கட்டுரையில் ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு ருஷ்ய நாட்டுக்கு உரியது தான், ஆனால் அவர் தங்கள் நாட்டின் புறநிலை மாற்றங்களை எவ்வாறு உண்ணிப்பாகக் கவனத்து, தங்களது செயல்களை வகுத்துக் கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் பெரும் பகுதி இதனையே வலியுறுத்துகிறது. இதற்கு அடுத்தப்படியாக இந்தக் கட்டுரை என்ன கூறுகிறது என்றால், முன்பே கூறியது போல், வர்க்க சமூகம் இருக்கும் வரை மார்க்சிய அடிப்படைகள் புதிய திருப்பங்களினால் மாறிவிடப் போவதில்லை.
மார்க்சியமும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது, அது தமது அடிப்படையில் நின்று வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் லெனின், மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல என்று கூறியதுடன். மார்க்சிய அடிப்படைகளுக்காகப் போராட வேண்டியதையும் சேர்த்து லெனின் கூறியுள்ளார். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சிய அடிப்படைகளை விளக்குவதன் மூலம் மார்க்சியம் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது. அதற்கு லெனினியமே சாட்சி.
வறட்டுச் சூத்திரவாதிகள் மார்க்சிய முடிவுகளை மனப்பாடம் செய்து கொண்டு அதையே மார்க்சியமாக, மார்க்சிய அடிப்படையாகப் புரிந்து கொண்டு, புதிய நிலைமைகைளுக்கும் பழைய முடிபுகளையே, பழைய முழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர். இந்த வறட்டுப் போக்கை லெனின் மறுதலித்துள்ளார். வறட்டுச் சூத்திரவாதிகள் வரலாற்று வளர்ச்சி பற்றிய இயக்கவியல் போதனையைப் பலவீனப்படுத்துகின்றனர்.
புதிய நிலைமைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியாத மார்க்சிய வறட்டுவாதிகளால், மார்க்சிய அடிப்படைகள் புதிய நிலைமைக்குப் பொருந்தவில்லை என்று கூறி மார்க்சிய அடிப்படைகளைத் திருத்தவும், கருத்துமுதல்வாத போக்கை மார்க்சியத்தினுள் நுழைக்கவும் செய்கின்றனர். இதனால் முதலாளித்துவத் தத்துவத்தின் செல்வாக்கு மார்க்சியவாதிகளிடையே கொள்ளை நோய் போலப் பரவிடுகிறது. அதனால் இந்தத் திருத்தல்வாதத்தை எதிர்த்து மார்க்சிய அடிப்படைகளுக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மார்க்சிய அடிப்படைகளைக் காப்பாற்றுவதின் வாயிலாகத்தான், மார்க்சிய வழியில் கம்யூனிஸ்டுகள் சமூகத்தில் செயற்பட வேண்டியுள்ளது.
திருத்தல்வாதத்தை எதிப்போம்.
மார்க்சியம் காப்போம்.
மார்க்சிய வழியில் செயற்படுவோம்.
No comments:
Post a Comment