Sunday 12 September 2021

எங்கெல்சின் “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” (முதலிரு அத்தியாயங்கள்)

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

34 வது வார வகுப்பு - 11-09-2021) வகுப்பு) 

1886 ஆம் ஆண்டு, எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலை இன்று பார்க்கப் போகிறோம். 

மார்க்சிய தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு மூன்று நூல்களை கண்டிப்பாக படித்தாக வேண்டும். அதில் முதலாவது “ஜெர்மன் சித்தாந்தம்” இந்த நூலை மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்த எழுதினர்.  இரண்டாவது “டூரிங்குக்கு மறுப்பு” மூன்றாவது “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” இந்த இரு நூல்களை எங்கெல்ஸ் எழுதினார். 

“டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூல் மார்க்ஸ் உயிரோடு இருக்கும் போது எங்கெல்ஸ் எழுதியது, இந்த நூலை மார்க்ஸ் கையெழுத்துப்படியிலே படித்து பார்த்துள்ளார். “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூல் மார்க்ஸ் மறைந்ததற்குப் பிறகு எங்கெல்ஸ் எழுதியது. 

அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி “மூலதனம்” என்று தனியாக ஒரு நூலை மார்க்ஸ் எழுதியது போல் மார்க்சியத் தத்துவத்துக்கு என்று மார்க்சோ எங்கெல்சோ தனியான நூலை எழுதவில்லை. ஆனால் அவர்கள் மார்க்சிய தத்துவத்தை முழுநிறைவு செய்து நமக்குத் தந்துள்ளார்கள். தனி நூலாக எழுதவில்லையே தவிர, பல நூல்களின் முன்னுரை பின்னுரை உள்ளுரை என பல நூல்களில் தத்துவத்தைப் பற்றி எழுதியுள்ளர். 

மதம் பற்றியும் தத்துவம் பற்றியும் மார்க்சும் எங்கெல்சும் அவ்வாறு எழுதியதை தனிநூலாக “மதத்தைப் பற்றி” என்ற தலைப்பில் அன்றைய சோவியத்தில் இருந்த முன்னேற்றப் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளிட்டுள்ளது. அதை தமிழில் ரகுநாதன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு 1963 ஆண்டு என்.சி.பி.எச் வெளியிட்டது. 

“ஜெர்மன் சித்தாந்தம்” என்ற நூல் ஜெர்மனில் உள்ள சித்தாந்தத்தை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்டது. “டூரிங்குக்கு மறுப்பு” நூலில் மார்க்சியத்தின் அடிப்படைகள் மூன்றையும் தனித்தனியான அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு அத்தியாயம் தத்துவம். ஆனால் இது டூரிங் எழுதிய கருத்துக்களை விமர்சிக்கும் முகமாக எழுதியது. அதே போல “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலும் லுத்விக்கைப் பற்றி எழுதும் போது கூறியவை. அதுவும் ஷ்டாக்கே என்பவர் எழுதிய நூலுக்கு எழுதிய விமர்சனமே இந்த நூல். ஆக இந்த இரு நூல்களும் மார்க்சிய தத்துவத்தை விளக்க வந்த நேரடி நூல் அல்ல. ஆனால் மற்ற நூல்களைவிட இந்த நூல்களில்தான் மார்க்சிய தத்துவத்தைப் பற்றி விவரங்கள், விளக்கங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

இந்த இரு நூல்களை முழுமையாகப் படித்தால்தான் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். எங்கெல்ஸ் எழுதிய “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் இயக்கவியலைப் பற்றிய விளக்கங்கள் இருக்கின்றன, இயற்கையை பொருள்முதல்வாதப் பார்வையில் எழுதுப்பட்ட கட்டுரைகள் அதில் இருக்கின்றன. இயக்கவியலில் தெளிவு பெறுவதற்கு இந்த நூல் படிக்க வேண்டும். 

“லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. எங்கெல்ஸ் எழுதும் போது இந்த நான்கு அத்தியாயத்துக்குத் தனிப் தலைப்பு கொடுத்தாகத் தெரிவில்லை, பின்னால்வந்த பதிப்பாளர்கள் நான்குக்கும் தலைப்புகளைக் கொடுத்துள்ளனர். அந்தத் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது. 

முதல் அத்தியாயம் ஹெகலைப் பற்றிய விமர்சனம், 

இரண்டாவது அத்தியாயம் ஃபாயர்க்கின் பொருள்முதல்வாதம் பற்றி பேசப்படுகிறது, 

மூன்றாவது அத்தியாயம் ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் விமர்சிக்கப்படுகிறது, 

நான்காவது அத்தியாயம் மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் விளக்கப்பட்டுள்ளது. 

இந்த நூலுக்கு இறுதியில் பிற்சேர்க்கையாக மார்க்ஸ் எழுதிய “ஃபாயர்பாக் ஆய்வுரைகளை” இணைத்து வெளியிட்டுள்ளார் எங்கெல்ஸ். இந்த ஆய்வுரை மார்க்சால் 1845 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்த ஆய்வுரையை விரித்து எழுதுவதாக திட்டமிட்டிருந்தார் மார்க்ஸ், ஆனால் எழுதிமுடிக்கவில்லை. இந்த ஆய்வுரை என்பது மார்க்ஸ் விரித்து எழுதுவதற்காக தமக்கென எழுதிக் கொண்ட குறிப்பு. அதனால் இது தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மார்க்சிய திருத்தல்வாதிகள் இந்த ஆய்வுரைகளை வைத்தே தமது திருத்தல்வேலைகளை செய்கின்றனர். 

குறிப்பாக முதல் ஆய்வுரையைத் திரித்து அதன் அடிப்படையில் மூன்றாம் ஆய்வுரையை திரிப்பர். இந்த ஆய்வுரையில் இந்த  ஃபாயர்பாக் உள்ளிட்ட மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதிகளின் தத்துவத்தில் காணப்படும் அடிப்படைக் குறைபாட்டை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இந்த 11 ஆய்வுரைகள் தனி வகுப்பாக எடுக்க வேண்டும். அந்த வகுப்பு எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” நூலின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதன்மூலம் மார்க்சியத்துக்கு முரணாக திரிக்கின்ற திரிபுவாதிகளை அம்பலப்படுத்த வேண்டும். அது தனியாக செய்ய வேண்டியவை. 

எங்கெல்ஸ் இந்த நூலுக்கு ஒரு சிறிய முன்னுரையை எழுதியுள்ளார். 

முன்னுரையில் இருந்து இன்றைய வகுப்பைத் தொடங்குவோம். 

மார்க்சோடு தன்னை இணைத்து எங்கெல்ஸ் கூறுகிறார், “ஹெகலைப் பற்றிய எங்களது கருத்தைத் தெரிவித்திருக்கிறோம், என்றாலும் ஒருபோதும் முற்ற முழுதாகச் சொல்லவில்லை. ஃபாயர்பாகைப் பொருத்தவரை. ஹெகலின் தத்துவத்திற்கு எங்கள் கோடபாட்டிக்கும் இடையே பல தன்மைகளில் இடைநிலைக் கண்ணியாக இருக்கும் அவரை, நாங்கள் கவனிக்கவேயில்லை”. 

ஹெகலை பற்றியாவது பல இடங்களில் பேசி இருக்கின்றனர். ஆனால் ஹெகலிடம் இருந்து விடுபட்டு, தாங்கள் பொருள்முதல்வாதியானதற்கு காரணமாக இருக்கும் ஃபாயர்பாகைப் பற்றி கருத்துரைக்கவில்லை என்ற உண்மைநிலையினை அறிவிப்பதோடு இந்த நூலில் ஹெகலைப் பற்றிய விமர்சனத்தையும், ஃபாயர்காக்கைப் பற்றியும் அவரது தத்துவத்தின் மீதான விமர்சனத்தையும் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். 

மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்திற்கு வந்தடைந்த தடத்தை இந்த நூலில் நாம் காணலாம். 

ஹெகலைப் பற்றி கூறுகிற முதல் அத்தியாயத்துக்குச் செல்வோம். 

அன்று ஹெகல் மிகவும் பிரபலமான தத்துவ அறிஞராக இருந்தார். ஹெகலின் அமைப்பு முறை, அன்றைய பிரஷ்ய மன்னரின் அரசுக்குரிய தத்துவம் என்னும் அளவுக்கு உயர்த்தி வைக்கப்பட்டது. ஆனால் ஹெகலின் கருத்தில் ஒளிந்திருக்கும் புரட்சிகர போக்கை அவர்கள் காணவில்லை. 

ஹெகலின் கூற்றைப் பார்ப்போம். 

“எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்ததாகும், பகுத்தறிவுக்கு உந்ததனைத்தும் எதார்த்தமானதாகும்” 

இதன் உண்மைத் தன்மையை உணராமல் இதனை பலர் போற்றி வந்தனர். குறிப்பாக மூன்றாம் ஃபிரீட்ரிஹ் வில்ஹெல்ம் மன்னரும் அவரது குடிமக்களும் ஆவர். ஹெகலின் இந்தக் கூற்றின் ஒரு பகுதியை மட்டும் புரிந்து கொண்டு இவர்கள் அதனை பாராட்டிக் கொண்டிருந்தனர். 

இந்த ஹெகலின் கூற்று, நடப்பில் உள்ள அனைத்தையும் புனிதமாக்கி நியாயப்படுத்துகிறது. கொடுங்கோன்மை மீதும், போலீஸ் ஆட்சியின் மீதும், ராஜநீதி அமைப்பு முறையின் மீதும், தணிக்கை முறை மீதும் தத்துவஞான அருளாசி வழக்குகிறது என்பது உண்மைதான். இதனை மட்டும் ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டனர். 

ஆனால் ஹெகலின் முழுமையானக் கருத்துப்படி, நடப்பிலுள்ளவை அனைத்தும் நிபந்தனையின்றி எதார்த்தமானது ஆகாது. நடப்பிலிருந்தாலும், அதே நேரத்தில், எது அவசியமாக உள்ளதோ அதற்கு மட்டுமே எதார்த்தம் என்கிற நிலையினை அடைகிறது. எதார்த்தமானது தமது வளர்ச்சிப் போக்கில் அவசியமானது என்று நிரூபித்துக் கொள்கிறது. அவசியமற்றது எதார்த்தாநிலையில் இருந்து மறைந்துவிடும். இன்றைய எதார்த்தத்தை மட்டும் ஹெகலின் கூற்று கூறிடவில்லை அதன் எதிர் கால மறைவைப் பற்றியும் கூறியுள்ளது. 

      ஹெகலின் கூற்றின் உண்மையானப் பொருள் இதுதான்:- 

“எந்த அளவுக்கு அந்த அரசு அவசியமானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த அரசு பகுத்தறிவுக்கு உகந்ததாக, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. அப்படி இருந்தும் நமக்கு அந்த அரசு ஒரு தீமையாகத் தோன்றுமேயானால்- தீமையாக இருந்தும் அது நீடித்தருக்குமேயானால்- அந்த அரசின் தீய பண்பை நியாயப்படுத்துவதும், விளக்குவதும் குடிமக்களிடம் அதே அளவிற்குள்ள தீய பண்பே ஆகும்.” 

பொருந்தாத அமைப்பை மக்கள் தூக்கி எறியவே செய்வர். 

ஹெகலின் கூற்று எந்த மாறத நிலையையும் கூறிடவில்லை. அவர் ஒரு இயக்கவியல் அறிஞர் மாறுதலையும், நிலை மறுத்தலையும் உள்ளடக்கியே அனைத்தையும் கூறுவார். ஆனால் சிலர் தமக்கு சாதகமானப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி எடுத்துக் கொள்வதால் மாற்றத்தையோ, நிலை மறுக்கப்படுவதையோ தடுத்திட முடியாது.

 அழிக்கவே முடியாது என்று கருதிய பேரசுகளும், தங்கள் ராஜ்ஜியத்தில் சூரியன் மறைவதே இல்லை என்று கூறிய ஏகாதிபத்திய பேரரசுகளும் தூக்கி எறியப்பட்டதை நாம் வரலாற்றில் கண்டுகிறோம். 

ஹெகலின் கூற்று இறுதியாக எதனை வலியுறுத்துகிறது என்றால், வளர்ச்சியின் போக்கில், முன்னே எதார்த்தமாக இருந்தது, அனைத்தும் பிற்பாடு எதார்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. தனது அவசியத்தை இழந்துவிடுகிறது. இந்த மாற்றத்தின் போது பழையது போதிய அறிவுடன் எதிர்ப்பு காட்டாமல் மறையுமானால் இது அமைதியாக நிகழும், இந்த அவசியத்தை அது எதிர்க்குமேயானால் பலவந்தமாகத் தூக்கி எறியப்படும்.

 

“மனித வரலாற்றுத் துறையில் எதார்த்தமாயிருப்பது அனைத்தும் காலப் போக்கில் பகுத்தறிவுக்குப் புறம்பானதாக ஆகி விடுகிறது.” 

இந்த முடிவில்தான் ஹெகலின் புரட்சிகரத் தன்மை அடங்கியுள்ளது. 

பகுத்தறிவு வேறு பகுத்தறிவுவாதம் வேறு என்பதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். 

பகுத்தறிவுவாத்தால் இந்த ஹெகலின் கூற்றைப் புரிந்து கொள்ள முடியாது. 

அறிவுத் தோற்றத்தையும், அதில் ஏற்படுகிற மாற்றத்தையும் பகுத்தறிவுவாதத்தால் அறிந்து கொள்ள முடியவில்லை. பகுத்தறிவே அனைத்தையும் மாற்றுகிறதாக அவர்கள் கருதிக் கொள்கின்றனர். ஆனால் பகுத்தறிவானது புறநிலைமைக்கு ஏற்ப மாறுகிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஹெகலின் சிந்தனையின்படி எதார்த்தமானது அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்ததே என்றாலும் வளர்ச்சியின் போது அது அவசியம் அற்றுப் போகும்போது அது மறைந்து அழிந்து போகிறது. 

பகுத்தறிவே அனைத்தையும் மாற்றுகிறது என்கிற போக்குகளுக்கு இது மரண அடி கொடுத்தது. மனிதனின் அறிவையே நம்பி இருக்கின்ற போக்கின் குறைபாடு முழுதும் வெளிப்பட்டுவிட்டது. மனிதனின் அறிவு மாற்றம் அடைகிறது என்பதையும், அது எதனால் மாறுகிறது என்பதையும் அறிந்து கொள்ளப்பட்டவுடன் மனிதனின் தனித்த செயல்பாட்டை முன்னிருத்தும் தவறானப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 

“மனித சிந்தனையிலே, மனிதச் செயலிலே விளையும் பயன்களின் இறுதித் தன்மைக்கு அது மரண அடி கொடுத்துத் தீர்த்துவிட்டது” என்கிறார் எங்கெல்ஸ். 

அதாவது, மனிதனின் செயல்களே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தவறானப் போக்குக்கு மரண அடி கொடுத்தது. 

தத்துவத்தின் போக்கானது, இறுதி உண்மையை கண்டிறிய வேண்டும். ஒரு தடவை அந்த இறுதி உண்மையைக் கண்டுபிடித்தால் போதும். தயார் நிலையில் உள்ள அந்த இறுதி உண்மையை நடைமுறைப்படுத்தினால் போதும் என்பதாக ஹெகல் கூற்று கூறிடவில்லை.  

உண்மை என்பது அறிந்து உணர்வதின் நிகழ்வுப் போக்கிலேயே அடங்கி உள்ளது, வரலாற்று வளர்ச்சியில் அடங்கி உள்ளது. உண்மை என்பது அதாவது எதார்த்த உண்மை என்பது எவராலும் தயாரித்து நடைமுறைப்படுத்துவது அல்ல. புறநிலை வளர்ச்சியில் ஏற்படுகின்ற மாற்றத்தினாலும், அதனோடு மனிதனின் செயற்பாட்டின் போது ஏற்படுகிற முரண்களே கருத்துக்களாக அறிவாக உருவாகிறது. 

வரலாறு எங்கேயும் ஒரே விதமாக முடங்கிப் போய்விடுவதில்லை. ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து மேலோங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதியக் கட்டமும் அதன் தோற்றத்தோடு வளர்ச்சியும் அவசியமானதாக இருக்கிறது. நியாயமாகவும் இருக்கிறது. வளர்ச்சியின் உள்முரண்பாட்டில் புதிய கட்டம் தோன்றிக் கொண்டிருக்கிறது பழையக் கட்டம் புதிய கட்டத்தின் முன் பலவினமாகி மறைந்துவிடுகிறது. பழைய கட்டத்துக்கு நேர்ந்ததே வளர்ச்சிக் கட்டதில் புதிய கட்டத்துக்கும் நேர்கிறது. இயக்கவியலுக்கு இறுதியானது, முழுமையானது, புனிதமானது என்பதெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றின் அவசியமும் ஒரு தற்காலிகக் கட்டமே என்பதை இயக்கவியல் வலியுறுத்துகிறது.  

சமூக உறவுகளில் பழைமையான தன்மையும் இருக்கிறது புதியதான தன்மையும் இருக்கிறது. பழைமையானது ஓப்பீட்டு தன்மையுடையது, புதியது புரட்சிகர தன்மையானது, இந்த புரட்சிகர தன்மையானது அறுதி நிலையுடையது. இந்த அறுதிநிலையினையே இயக்கவில் கோட்பாடு ஒப்புக் கொள்கிறது. பழையது மறைவதும் புதியது வளர்வதும், அதுவும் பழையதாகி புதியதுக்கு வழிவிடுவதும் தான் இயக்கவியல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.


இது ஹெகலினுடை வழிமுறையிலிருந்து தவிர்க்க முடியாது முடிவுகள் ஆகும். ஹெகல் தமது போக்கை இவ்வளவுக் கூர்மையாகக் காட்டவில்லை என்பதையும் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார் 

பழைய தத்துவ அறிஞர்கள் அனைவரும் தம்முடைய தத்துவத்தை ஒரு அமைப்பு முறையோடு நிறைவு செய்யும் மரபில் இருந்தனர். இதே மரபுவழிபட்ட அமைப்பு முறையை படைக்கும் கட்டாயத்தில் ஹெகலும் இருந்தார். அந்த அமைப்பு முறை அனைத்துவிதமான பரம உண்மையுடன் முடிவு பெற வேண்டும். 

ஹெகலின் தொடக்கம் ஒரு பரமநிலைக் கருத்தோடு (absolute idea) தொடங்குகிறது. இந்தப் பரமநிலையானது, இந்திய தத்துவங்களில் கூற்பபடுகின்றன பிரம்மத்துக்கு இணையானது. பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சம் தோன்றியதாக எப்படி இந்துத் தத்துவம் கூறுகிறதோ, அதே போல ஹெகலின் பரமநிலைக் கருத்து தன்னிடம் இருந்து விலகி இயற்கையைப் படைத்தது. அதே போல ஹெகலின் அமைப்பு முறையானது எதார்த்தத்தின் வளர்ச்சியில் இருந்து தோன்றாமல், சிந்தனையில் இருந்து படைக்கப்பட்டதாக இருக்கிறது. தொடக்கமும் முடிவும் ஹெகலின் தத்துவத்தில் உள்ள பெரும் குறையாகும். இடைப்பட்டத்தில் அவர் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒப்புக் கொள்கிறார். 

ஹெகலிடம் கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தின் குறைபாடு இருந்தாலும், அவர் பல துறைகளில் அறிவுக்களஞ்சியமாக இருந்தார். அவரது “அமைப்பு முறை” வலிந்து புனைத்து நிறுவ வேண்டியதாக இருந்தது என்பது உண்மையே. இதைக் கடந்து, அவரை உள்ளே சென்று பார்த்தால் இன்னமும் மங்காத மதிப்புடையவை நிறைந்து காணப்படுகிறது. மொத்தத்தில் பழைமையின் பக்கமே ஹெகல் நின்றார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

1830 முதல் 1840வரை ஹெகல் வாதம் கோலோச்சியது. அவரது இயக்கவியலை பின்பற்றியவர்களிடையே அரசியலிலும் மதத்திலும் மிகத் தீவிரமான எதிர்த்தரப்பை உருவாக்கியது. இளம் ஹெகலியன்கள் என்கிற இடதுசாரியினர் தோன்றினர். இவர்கள் ஹெகலின் கருத்துப் பிரிவில் இருந்து விடுபட்டு ஆங்கிலேய-பிரெஞ்சு பொருள்முதல்வாதத்தை நோக்கி பயணித்தனர். 

ஹெகலின் அமைப்பு முறையில் இயற்கை என்பது பரமநிலைக் கருத்தின் வெறும் “விலகலாக” மட்டுமே குறித்தது. அதாவது இந்து தத்துவத்தில் கூறுகிறபடி பிரம்மத்தில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்பது போல் தான் ஹெகலின் தத்துவம் காணப்படுகிறது. 

ஆனால் பொருள்முதல்வாதம் இயற்கை ஒன்றுதான் எதார்த்தமானது என்று கூறியது. 

இந்த நேரத்தில்தான் ஃபாயர்பாக் எழுதிய “கிறித்துவத்தின் சாராம்” என்ற நூல் வெளிவந்தது. அது கருத்துமுதல்வாதத்தைவிட்டு விலகி பொருள்முதல்வாதத்தை அரியாசனத்தில் ஏற்றியது. இந்த நூல் இளம் ஹெகலிரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்டதாய் எதுவும் இல்லை. மதவழிபட்ட கற்பனையாகப் படைத்துள்ள கடவுள்கள், மனித சாராமசத்தின் விசித்திரமான பிரதிபலிப்பே ஆகும். ஃபாயர்பாகின் இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தை எங்கெல்ஸ் கூறியதை அப்படியே பார்ப்போம். 

“அறிவுக்கு விடுதலை அளிப்பது போன்ற இந்நூலின் பாதிப்பை அனுபவித்தவர்களுக்குத்தான் அதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாக்வாதிகளாகி விட்டோம். மார்க்ஸ் இந்தப் புதிய கருத்தோட்டத்தை வரவேற்றார். விமர்சன விளக்கங்கள் அனைத்தையும் மீறி அதன் செல்வாக்குக்கு அவர் எவ்வளவுக்கு உட்பட்டிருந்தார் என்பதை “புனிதக் குடும்பம்” என்னும் நூலில் படித்தறியலாம்” 

எங்கல்சின் இந்த உணர்ச்சிகர எழுத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஃபாயர்பாக் எழுதிய “கிறித்துவத்தின் சாராம்” என்ற நூல் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத் தத்துவத்தை எவ்வாறு வந்தடைந்தனர் என்பதற்கு, இந்த நூல் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும். மார்க்சிய விஞ்ஞான வழிப்பட்ட முறையில் இந்த நூல் எழுதப்படவில்லை என்றாலும், பொருள்முதல்வாதத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு இந்நூலை அவசியம் படிக்க வேண்டும். 

எளிதில் புரியாத ஹெகல் வழிப்பட்ட சொற்சிலம்பம் போல் இல்லாமல் இந்த நூல் புத்துணர்வூட்டுவதாய் இருந்தது. ஆனால் அது மிதமிஞ்சிய அளவுக்கு அன்பை முன்னிருத்தியது. ஃபாயர்பாக் அன்பை தெய்வீக அளவுக்கு உயர்த்தினார். இதில் முக்கியமாக இரண்டு குறைபாடு காணப்பட்டது. இது பற்றி எங்கெல்ஸ் எழுதியதை அப்படியே பார்ப்போம். 

“ஒன்று, விஞ்ஞான அறிவுக்குப் பதிலாக இலக்கிய நயமுள்ள சொற்றொடர்களை முன்வைத்தது. இரண்டு, உற்பத்தியைப் பொருளாதார அடிப்படையில் மாற்றியமைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பதற்குப் பதிலாக “அன்பின் மூலம் மனிதகுலத்தின் விடுதலை எனப் பேசியது.” 

ஹெகலியக் கருத்துப்பிரிவு சிதைந்து போயிற்று. ஆனால் ஹெகலியத் தத்துவம் விமர்சனத்தின் மூலமாக முறியடிக்கப் படவில்லை. ஒரு தத்துவத்தைத் வெறுமனே தவறானது என்று அடித்துக் கூறுவதால் மட்டும் ஒழித்துக்கட்டிவிட முடியாது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சத்தி வாய்ந்த ஹெகலியத் தத்துவத்தை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியாது. அதனை விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிய முடியும். அதே நேரத்தில் அதன் மூலம் வென்று பெற்றுள்ள புதிய உள்ளடக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். இந்த உள்ளடக்கத்தை எங்கெல்ஸ் பின்னால் வரும் அத்தியாயத்தில் விளக்குகிறார். 

ஹெகலை எப்படி ஃபாயர்பாக் ஒதுக்கித் தள்ளினாரோ, 1848ஆம் ஆண்டு புரட்சியானது தத்துவம் முழுவதையும் ஒதுக்கித் தள்ளியது. இந்த நிகழ்வு ஃபாயர்பாக் பின்னணிக்குத் தள்ளப்பட்டார். இதனை அடுத்த பகுதிகளில் விளக்குகிறார். 

அடுத்து இரண்டாவது அத்தியாயம், ஃபாயர்க்கின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பற்றிய விளக்கம். 

தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் (Thinking and Being) உள்ள உறவு பற்றியதே ஆகும். இருத்தலுக்கும்  சிந்தனைக்கும் என்றும் சொல்லாம், சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் என்றும் இதை சொல்லாம். 

மிகப் பழங்காலத்தில் இருந்தே, மனிதர்கள் தங்களுடைய உடலின் கட்டுமானத்தைப் பற்றி ஒன்று அறிந்திடாத போது, கனவுகளுக்குக் காரணம் விளங்காத போது, சிந்தனையும் புலனுணர்ச்சியும் தமது உடலின் நடவடிக்கைகள் அல்ல என்று நினைத்தனர். சிந்தனை என்பது உடம்பில் தங்கியிருந்து இறப்புக்குப்பின் வெளியேறி செல்கிற ஆத்மாவின் நடவடிக்கை என்று நம்பினர். 

அதாவது, கனவுகளில் தோன்றும் மனித உருவங்கள், உடலில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய ஆதமாக்களே என்று நாகரீமற்ற நிலையில் உள்ள மனிதர்கள் நினைத்தனர். இந்துத் தத்துவங்களும் இதனையே அடிப்டையாகக் கொண்டு பேசுகிறது. 

எங்கெல்ஸ் இங்கே குறிப்பிடுகிற ஆத்ம நிலையினைப் புரிந்து கொள்வதற்கு நம் நாட்டில் உள்ள இந்துத் தத்துவங்களைப் படித்தாலே போதும். மேலைநாடுகளைவிட இந்தியாவில்தான் ஆத்மாவைப் பற்றி கருத்துக்கள் அதிகம் பேசப்படுகிறது. ஆத்மத் தத்துவத்தை அறிந்து கொள்ளாமல், ஆத்ம தத்துவத்தை விமர்சிக்க முடியாது. 

மனிதன் கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மாவுடன் ஒடுங்குகிறான். ஒடுங்கிய அவன், பரமாத்மாவை அறிகிறான். அடுத்து பரமாத்மாவே தான் என்கிற உண்மையை அறிந்து கொள்கிறான் என்று சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது. 

ஒரு பொருள்முதல்வாதி ஏன் கருத்துமுதல்வாததைப் படிக்க வேண்டும் என்ற கேள்வி நம் நாட்டில் அதிகமாகக் கேட்கப்படுகிறது.  கருத்துமுதல்வாதத்தைப் புரிந்து கொள்ளாமல் அதன் மீதான விமர்சனத்தை வைக்க முடியாது. கருத்துமுதல்வாதத்தை விமர்சிக்காமல் பொருள்முதல்வாதத்தை நிறுவ முடியாது. 

இந்தியத் தத்துவங்களில் காணப்படும் ஆத்ம போதத்தை அறிந்தவர்களால், இங்கே எங்கெல்ஸ் கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். எங்கெல்ஸ் ஆத்மாவின் அமரத்துவம் பற்றி கருத்தைக் கூறியுள்ளார், ஆத்ம சிந்தனை தோன்றுவதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அவர் கூறியபடியே பார்ப்போம். இதற்கு விளக்கம் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். 

“சாவுக்குப் பிறகு உடலைவிட்டு வெளியேறி ஆத்மா தொடர்ந்து வாழ்கிறதென்றால் அதற்கென்று ஒரு தனி வேறான சாவைப் புனைவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை. இவ்வழியேதான் அதன் சாகா நிலைபற்றிய கருத்து உதித்தது. இக்கருத்து அந்த வளர்ச்சிக் கட்டத்தில் ஓர் ஆறுதலாக நிச்சயமாகத் தோன்றவில்லை. எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த ஒரு தலைவிதியாகவும், அடிக்கடி நேருறுதியான துரதிர்ஷ்டமாகவும் அது தோன்றியது. ஆத்மா நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்வது, தனிநபரின் அழியாநிலை என்ற சலிப்பூட்டும் கருத்துக்கு இட்டுச் செல்கிறது. உடல் மரணித்தபின் இந்த ஆத்மாவை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று விளங்காத, எங்கும் நிலவிய சாதாரண அறியாமையிலிருந்து தோன்றிய தடுமாற்றமே இவ்வாறு இட்டுச் சென்றதே ஒழிய, மன ஆறுதலுக்கான மத விருப்பம் அன்று..” 

மதம் மக்களுக்கு ஒர் ஆறுதலைத் தரவில்லை. 

இந்த சமூகத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனில்லை, தலைவிதிக்கு உட்பட்டு சமூகச் சிக்கலை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு வழிகாட்டுகிறது. இயற்கையையும் சமூகத்தையும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே கடவுள் சிந்தனை தோன்றியது. 

இயற்கைச் சக்திகளை உருவகப்படுத்துவதின் மூலமாக கடவுள்கள் தோன்றினர். மதம் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதின்மூலம் இக்கடவுள்கள் உலகுக்கு அப்பாற்பட்ட வடிவம் பெற்றார்கள். இறுதியாக பல கடவுள்களிடம் இருந்து ஒரே கடவுள்- ஏகத்துவம் என்று கூறுகிற தனியொரு கடவுள் பற்றிய சிந்தனை மனிதர்களின் மனதில் தோன்றியது. 

சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் இடையேயுள்ள உறவு, ஆத்மாவுக்கும் இறக்கைக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய பிரச்சினை, தத்துவம் முழுமைக்கும் முதன்மையான பிரச்சினையாக வேர் கொண்டது. 

இறுதியில் இந்தப் பிரச்சினை கூர்மையான கேள்வியாக முன்வைக்கப்பட்டது. 

எது மூலமுதல்? ஆத்மாவா, இயற்கையா? இதையே வேறுவிதமாகவும் கேட்கலாம். உலகம் கடவுளால் படைக்கப்பட்டதா? அல்லது அது நிரந்தரமா இருந்து வருகிறதா? 

இந்தக் கேள்விக்கு தத்துவவாதிகள் அளித்த பதிலின் மூலம், அவர்களை மாபெரும் இரண்டு முகாம்களாகப் பிரிந்தனர். இயற்கைக்கு மூலமுதலாக இருப்பது ஆத்மா என்று கூறுபவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இறுதியில் உலகம் எதோ ஒருவிதத்தில் படைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருகின்றனர். 

இயற்கைதான் மூலமுதல், இருப்பவை நிரந்தரமாக இருந்தவையே, அதில் மாறுதல்கள் மட்டுமே நிகழ்கிறது என்று கூறுவர்கள் பொருள்முதல்வாதத்தின் பல்வேறு கருத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். 

கருத்துமுதல்வாதத்தைச் சேர்ந்தவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம், ஒன்று அகநிலை கருத்துமுல்வாதம், மற்றொன்று புறநிலை கருத்துமுதல்வாதம். 

இந்த உலகுக்கு அப்பாற்பட்டவரால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று கருதுவது புறநிலை கருத்துமுதல்வாதம். அதாவது படைக்கும் சக்தி அல்லது கடவுள் இந்த உலகுக்கு அப்பால் இருந்து இதனைப் படைத்தார். அதனால் தான் கருத்துமுதல்வாதத்தை அப்பாலைத் தத்துவம் (MetaPhysics) என்று கூறப்படுகிறது. 

புறநிலை கருத்துமுதல்வாதத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள். 

உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கூறுகிறது. இத்தத்துவத்தில் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர்கள். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

சிந்தனைக்கும் வாழ்நிலைக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய பிரச்சினையில் வெறொரு பக்கமும் இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள இந்த உலகத்தை அறிந்துணரும் திறம் சிந்தனைக்கு உண்டா? எதார்த்த உலகைப் பற்றிய ஒரு சரியான பிரதிபலிப்பை உண்டு பண்ண முடியுமா? 

இதற்கு “உண்டு” என்று பதில்ளிக்கிற தத்துவமும் இருக்கிறது. “இல்லை” என்று பதிலளிக்கிற தத்துவமும் இருக்கிறது. உண்டு என்று பதிலளிக்கிற தத்துவம் உலகை அறிந்து அதன்படி செயல்படுகிறது. இல்லை என்று கூறுகிற தத்துவம், உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது. இந்தத் தத்துவத்தை அறிவொண்ணாவாதம் என்று அழைக்கப்படுகிறது. 

இன்றைய இயற்கை விஞ்ஞானம், தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் காணப்படும் முன்னேற்றமானது பொருள்முதல்வாதம் சரியானது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கருத்துமுதல்வாதம் மேன்மேலும் பொருள்முதல்வாத உள்ளடக்கத்தால் தம்மை நிறைத்துக் கொண்டு, இயற்கையே இறைவன் என்று கூறுகிறது. மனதிற்கும் பருப்பொருளுக்கும் இடையேயுள்ள எதிர்நிலையை சமரசப்படுத்த முயன்றது. 

ஆக இறுதியில் ஹெகலின் அமைப்பு முறையானது கருத்துமுதல்வாத வழிமுறையிலும் உள்ளடக்கத்திலும் தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டுள்ள பொருள்முதல்வாதமாகவே காட்சியளிக்கிறது. 

ஃபாயர்பாக் ஒரு முழுமையான ஹெகல்வாதியாக ஒருபோதும் இருந்ததில்லை என்பது உண்மையே, ஆனால் ஒரு ஹெகல்வாதி பொருள்முதல்வாதியாக எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெறுவாரோ அத்தகைய ஒரு வளர்ச்சியையே ஃபாயர்பாக் பெற்றார். அவருடைய இந்தப் பரிணாயம வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஹெகலுடைய கருத்துமுதல்வாத தத்துவமுறையில் இருந்து முற்றாக முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

ஹெகலினுடைய “பரமநிலைக் கருத்து” (Absolute Idea) உலகம் தோன்றுவதற்கு முன்பாக இருந்தது என்பது, உலகுக்கு அப்பால் ஒரு படைப்பாளி இருக்கிறார் என்கிற ஒரு கற்பனா வழிபட்ட நம்பிக்கையின் மிச்சசொச்சமே தவிர வேறில்லை என்பதை ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் நமக்கு காட்டுகிறது. 

பருப்பொருள் என்பது சிந்தனையின் உற்பத்திப் பொருள் அல்ல, சிந்தனை என்பது பருப்பொருளின் உயர்ந்த படைப்பு. இது ஒரு தூய பொருள்முதல்வாதம் தான். ஃபாயர்பாக் இத்துடன் நின்றுவிடுகிறார். பொருள்முதல்வாதம் என்ற சொல்லின் மீதுகாட்டிவருகிற வெறுப்பை அவரால் வெற்றிக் கொள்ள முடியவில்லை. இதை  அவரே உணர்ந்துள்ளார், அதனால் தான், “பின்னோக்கு திசையில் நான் பொருள்முதல்வாதிகளோடு உடன்படுகிறேன், முன்னோக்கிய திசையில் உடன்படவில்லை” என்று ஒப்புக் கொள்கிறார். 

கருத்துமுதல்வாதம் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைவதைப் போலவே பொருள்முதல்வாதமும் வளர்ச்சி பெறுகிறது. இயற்கை விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தம்மை புதுப்பித்துக் கொள்கிறது. 

பதினெட்டாம் நூற்றாண்டு பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக காணப்பட்டது. அன்றைய இயந்திரங்களின் வளர்ச்சியை ஒட்டு அனைத்தையும் இயந்திரமாக பார்த்தனர். விலங்கோ, மனிதனோ அனைத்தும் அவர்களுக்கு இயந்திரமே. இது பிரெஞ்சு பொருள்முதல்வாதத்தின் முதல் குறைபாடாகும். 

பிரபஞ்சத்தை ஒரு நிகழ்வுப்போக்காகவும், இடையறாத வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கும் பருப்பொருளாகவும் புரிந்துகொள்வதில் அவர்களது இயலாமை இரண்டாவது குறைபாடாகும். 

இயற்கை நிரந்தரமாக இயக்கத்தில் இருக்கிறது என்னும் அளவுக்கு தான் அதன் புரிதல் இருந்தது. இந்த இயக்கம் நிரந்தரமான ஒரு வட்டத்திற்குள் சுற்றுவதாகக் கொள்ளப்பட்டது. இது அக்கால கட்டத்திய இயற்கை விஞ்ஞானத்தின் தரத்துக்கும், அதனோடு தொடர்புடைய இயக்க மறுப்பியலுக்கும் ஏற்றவாறே இருந்தது. 

வரலாற்றுத் துறையிலும், வரலாற்றுக்குப் புறம்பான போக்கே அன்றைய  பொருளமுதல்வாதத்தில் காணப்பட்டது. மாபெரும் வரலாற்று இடைத்தொடர்புகளைப் பற்றிப் பகுத்தறிவு பூர்வமான ஆழமான பார்வை இயலாமற் போனது. 

இயற்கை விஞ்ஞானத்தின் முன்னேற்றங்கள், உலகத்தைப் படைத்தவன் என்று ஒருவன் இல்லை என்பதற்கான புதிய சான்றாக மட்டுமே அவர்களுக்குத் தோன்றின. அத் தத்துவத்தை மேலும் வளர்த்திடும் பணியை அவர்கள் செய்யவில்லை. 

கருத்துமுதல்வாதம் தன் இறுதி முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், தற்காலிகமாகப் பொருள்முதல்வாதம் தன்னைவிட கீழ்நிலையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு திருப்தி அடைந்தது. இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்தை ஃபாயர்பாக் ஏற்க மறுத்தது முற்றிலும் சரியே. ஆனால் இதனுடன் பொதுவான பொருள்முதல்வாதத்தை போட்டு அவர் குழப்பி இருக்கக்கூடாது. 

புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அண்மையில்தான் சாத்தயப்பட்டிருக்கிறது. உயிரணு பற்றிய கண்டுபிடிப்பு, ஆற்றலின் உருமாற்றம் பற்றிய கண்டுபிடிப்பு, டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஆகிய மூன்று நிர்ணயமான கண்டுபிடிப்புகள் ஃபாயர்பாக் தம் வாழ்நாளில் கண்டார் என்பது உண்மையே. 

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் மூலம் இயற்கையின் தோற்றம், நிலையிருப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கான காரணங்களை அறிந்திட முடிந்தது. இதன் விளக்கமாக இந்த உலகுக்கு அப்பாலுள்ள சக்தியிடம் வைத்திருந்த நம்பிக்கை தேவையற்றதாகிப்போனது. இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை, எவ்வித அயலான கலப்பின்றி உள்ளதை உள்ளவாறு இயற்கை விஞ்ஞான வளர்ச்சியினால் அறிய முடிந்தது. 

அக்காலத்தில் இயற்கை விஞ்ஞானிகள் சர்ச்சையிட்டு வந்த நிகழ்வுகள், எப்படி ஒரு கிராமத்தில் தனிமையில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்த தத்துவஞானியான ஃபாயர்காக்கால் புரிந்து கொள்ளமுடியும்? இதற்கு ஜெர்மனியில் உள்ள படுமோசமான நிலைமைகள் மீதுதான் நாம் குறைபட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். 

அதே நேரத்தில் நாம் இயற்கையில் மட்டும் வாழ்ந்து வரவில்லை, சமூகத்திலும் வாழ்ந்து வருகிறோம். இயற்கைக்கு இருப்பது போலவே சமூகத்துக்கும் ஒரு வளர்ச்சி இருக்கிறது. சமூகத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அணுகப்பட வேண்டும். 

வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத அடித்தளத்தோடு இசைவுபடுத்தி அதற்கு பிறகு இந்த அடித்தளத்துக்கு ஏற்ப அதனை மறுநிர்மாணம் செய்ய வேண்டும். ஆனால் இதனை ஃபாயர்பாக் செய்யவில்லை. 

ஃபாயர்பாக் 1840-1844ஆம் ஆண்டுகளின் கருத்துநிலையைக் கடந்து மேலே செல்லவில்லை. இதற்கு அவரது தனிமை வாழ்க்கையே முக்கியமான காரணமாகும். சமூகம் பற்றிய விஷயத்தில் ஃபாயர்பாக் இன்னும் கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். 

இந்தியாவில் மதவாதிகள் பொருள்முதல்வாதத்தை எப்படி இழிவுப்படுத்தினார்களோ அப்படியே மேலைநாட்டு கிறித்தவப் பாதிரியார்கள் நெடுங்காலமாகவே பொருள்முதல்வாதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி வந்தனர். அதன் விளைவாக பொருள்முதல்வாதம் என்றும் சொல்லின் மீது ஏற்பட்டுள்ள மரபு வழிப்பட்ட வெறுப்பு காணப்படுகிறது. அவர்கள் பொருள்முதல்வாததை, பெருந்தீனிப் போக்கு, மதுபோதை, அழகுப்பொருள் மேல் பேரவா, காமவெறி, அகந்தை, ஆதாயம் பெறும் விருப்பம், பேராசை, பிறர் பொருள் நயத்தல், இலாப வேட்டை. பங்கு மார்கெட் மோசடி என்று காலம்காலமாக கூறிவருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், தாம் இரகசியமாக ஈடுபடுகின்ற இழிவான தீயொழக்கங்கள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளனர். 

பாதிரிமார்கள் கருத்துமுதல்வாதத்தை அறம், மனிதகுலம் முழுவதின் மீதும் அன்பு, பொதுவான “மேலான உலகம்” என்பதில் நம்பிக்கை என்று கூறினர். 

இத்துடன் இரண்டாவது அத்தியாயம் முடிவடைகிறது. 

     கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றி எங்கெல்ஸ் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். 

எங்கெல்ஸ்:-

“தொன்மைக் காலத் தத்துவவியல் பழைமையான, தன்னியல்பாக உருவான பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆத்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆத்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியாக ஒரு கடவுட் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால், தத்துவவியலின் மேலதிக வளர்ச்சிப் போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது.”

(டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 241)

 

பழங்காலத்தில், சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவுபடத்தக்கூடிய அளவுக்கு அன்றைய விஞ்ஞானமும், தத்துவமும் வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. ஆனால், கருத்துமுதல்வாதம் ஆத்மா என்ற கருத்தைப் படைத்து அதனை விளக்கியது. அன்றைய நிலையில் உள்ள தொடக்கநிலைப் பொருள்முதல்வாதத்தால் (Primitive Materialism), இதனை எதிர் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்றால், பழைய பொருள்முதல்வாதம், பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. இயற்கை விஞ்ஞான வளர்ச்சியினாலும் தத்துவ வளர்ச்சியினாலும் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நவீன பொருள்முதல்வாதத்தால் இன்றைய கருத்துமுதல்வாதம் நிலைமறுக்கப்பட்டது. 

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பதற்கு இரு தத்துவங்களையும் படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்துப் புரிந்து கொள்ளாமல், ஒரு கம்யூனிஸ்ட் நவீனப் பொருள்முதல்வாதியாக திகழ முடியாது. 

 *************************************************


No comments:

Post a Comment