Friday, 20 February 2026

மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” நூலின் சாரம்

 

கூலியுழைப்பும் மூலதனமும்என்கிற இந்த நூலில் உள்ளவை மார்க்ஸ் 1847 ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் தங்கியிருந்த ஜெர்மன் தொழிலாளர்களுக்கு அரசியல் பொருளாதாரம் பற்றி நிகழ்த்திய சொற்பொழிவு ஆகும்

மார்க்ஸ் தமது அரசியல் பொருளாதார ஆய்வை ஜெர்மன் தொழிலாளர்களுக்கு நேரடியாகக் கூறியதேகூலியுழைப்பும் மூலதனமும்என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது. தொழிலாளர்களுக்கு இடையே நிகழ்த்திய உரை என்பதனால் இதை அவர் மிகவும் எளிமையாக விளக்கி இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் புதிதாக மார்க்சிய அரசியல் பொருளாதாரம் படிப்பவர்களுக்கு இது ஓரளவு எளிமையாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம். என்னதான் எளிமையாக இருந்தாலும் ஒரு புதிய துறையைப் படிக்கும் போது அதற்கே உரிய சிரமம் இருக்கத்தான் செய்யும். படிப்பவர்கள் அதைப் புரிந்து கொள்வதற்கு உரிய சிரமத்தை எடுத்துக் கொண்டால் தான் அதில் தெளிவு பெற முடியும். ஒரு நூலுக்கு வழிகாட்டி நூல்கள், அறிமுக நூல்கள் என்ற பல நூல்கள் இருக்கும் அதைப் படித்துவிட்டு மூலநூலுக்குச் செல்லும் போது சிரமம் குறைந்து காணப்படும்

            இந்த நூல் மார்க்ஸ் காலத்திலேயே ஒரு பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்டது. 1891ஆம் ஆண்டு மார்க்ஸ் மறைந்த பிறகு ஒரு புதிய பதிப்பை வெளியிடத் தீர்மானித்த போது, ஒரு முன்னுரையை எங்கெல்ஸ் எழுதியுள்ளார். புதிய பிரச்சாரத்திற்காக இந்த நூல் 10,000 படிகள் அச்சடிக்கப்படுவதாகத் திட்டமிட்டிருந்தனர்

            இந்த நூல் மார்க்சால் 1847ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மார்க்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றிய தமது விமர்சனத்தை முழுமையாக முடித்திடவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 1859ஆம் ஆண்டு வெளியிட்டஅரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஓர் பங்களிப்புஎன்ற நூலில் தான் மார்க்சின் ஆய்வு முடிவடைகிறது. அதனால் 1859ஆம் ஆண்டுக்கு முன்பு எழுதிய பொருளாதார நூல்களில், பிற்காலத்தில் எழுதிய அரசியல் பொருளாதார நூல்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில் விரும்பத்தகாதனவும் தவறான தொடர்களும், முழு வாக்கியங்களும் காணப்படும் என்று மறுபதிப்பு முன்னுரையில் எங்கெல்ஸ் கூறுகிறார்

            பொது வாசகர்களுக்காக வெளியிடப்படும் இந்தப் புதிய பதிப்பில், மார்க்ஸ் இன்று இருந்திருந்தால், பிற்காலத்தில் மார்க்ஸ் உருவாக்கிய கருத்தோட்டத்துக்கு இசைவாய்ப் புதிய பதிப்பில் மாற்றியிருப்பார் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடும் எங்கெல்ஸ் எந்த வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்

 

மிகவும் அடிப்படையான அனைத்து விவரங்களிலும் இந்தக் குறிக்கோளை அடையும் பொருட்டுத் தேவைப்படும் சில மாற்றங்களையும் கூடுதல் விவரங்களையும் இந்தப் பதிப்பில் நான் சேர்க்கும்போது, மார்க்சின் மனநிலையிலிருந்தே நான் செயல்படுகிறேன் என்பதை நிச்சயம் உணர்கிறேன்.

.....

என்னுடைய மாற்றங்கள் ஒரேயொரு விவகாரம் பற்றியவை. மூலத்தின்படி தொழிலாளி தமது உழைப்பைக் கூலிக்காக முதலாளியிடம் விற்கிறார்; ஆனால் இங்குள்ள வாசகத்தின்படி அவர் தமது உழைப்புச் சக்தியை விற்கின்றார். இப்படி நான் மாற்றம் செய்திருப்பதற்குரிய விளக்கத்தைக் கூறுவது எனது கடமையாகும். இது வெறும் சொற்சிலம்பமல்ல சிலம்பமல்ல, மாறாக அரசியல் பொருளாதாரம் அனைத்திலுமே மிக முக்கிய விவகாரங்களில் ஒன்றாகும் என்பதைத் தொழிலாளர்கள் கண்டு கொள்ளும் பொருட்டு, நான் அவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். படிக்காத தொழிலாளர்கள் - மிகவும் சிக்கலான பொருளாதாரப் பகுத்தாய்வுகளையும் சுலபமாய் இவர்களுக்குப் புரிய வைத்து விடமுடிகிறது - மண்டைக் கனம் கொண்ட நமது ''மெத்தப் படித்தவர்களைக்' காட்டிலும் - இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் இந்த மெத்தப் படித்தவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராப் புதிர்களாகவே இருக்கின்றன-எப்படி மிகப் பெரிதும் மேம்பட்டவர்களாவர் என்பதை ஐயமுற முதலாளித்துவ வர்க்கத்தினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு நான் இவர்களுக்கு இந்த விளக்கத்தைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.”

(கூலியுழைப்பும் மூலதனமும், எங்கெல்ஸ் முன்னுரை

மெத்தப் படித்த மேதாவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொழிலாளர்களுக்கு ஏற்படுவதில்லை என்று இங்கே எங்கெல்ஸ் சிறப்பாகச் சுட்டிக்காட்டி உள்ளார். இன்றும் மெத்தப் படித்தவர்கள் மார்க்சியக் கலைச்சொற்களில் சிக்கிக் கொண்டு காலத்தை விரயமாகிக் கொண்டிருக்கின்றனர். மார்க்சியக் கலைச் சொற்களைத் தொழிலாளர்கள் புரிந்து கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்

கேள்விகளை எழுப்பி அதற்குப் பதில் தருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கு மார்க்ஸ் அளித்த பதில்களை நன்றாகப் புரிந்து கொண்டால், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய அடிப்படையில் தெளிவு பெறலாம். இந்த நூல் தொழிலாளர்கள் மத்தியில் நிகழ்த்திய உரை என்று முன்பே பார்த்தோம். அதனால் இது எளிமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதைப் பற்றி மார்க்ஸ் கூறியதையே பார்ப்போம்

 

எமது கருத்துகளைக் கூடுமான வரை எளிதாகவும் மிகப் பலரும் படிக்கத்தக்க விதத்திலும் எடுத்துரைக்க முயற்சி செய்வோம்; அரசியல் பொருளாதார அரிச்சுவடிப் பாடத்துக்குரிய கருத்துகளுங்கூடத் தெரிந்திருப்பதாய்க் கொள்ளாமல் எடுத்துரைப்போம். தொழிலாளர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே எமது விருப்பம்.” 

            ஆக இந்தச் சொற்பொழிவும், நூலும் தொழிலாளர்கள் புரிந்து கொள்வதற்குத் தான் மார்க்சால் உருவாக்கப்பட்டது. அதனால் இதற்கு மேல் எளிமையாக இருக்க வேண்டும் என்று கோருவதைவிட, அதனைப் புரிந்து கொள்வதற்கு, மெனக்கெடுவோம் என்பதை வலியுறுத்தி நூலுக்குள் செல்வோம்

1) கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? 

தொழிலாளர்களிடம்உங்களுக்குக் கிடைக்கும் கூலி எவ்வளவு?” என்று கேட்டால், ஒருவர்எனக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 800/- கிடைக்கிறதுஎன்றும், இன்னொருவர்எனக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1,000/- கிடைக்கிறதுஎன்றும் பலவகையாகப் பதில் அளிப்பர். இவர்கள் வெவ்வேறு தொகைகளைக் குறிப்பிட்டாலும் ஒரு விஷயம் குறித்து அனைவரும் ஒத்துக்கொள்வர். அது என்னவென்றால், “குறிப்பிட்ட உழைப்பு நேரத்துக்காக அல்லது உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் குறிப்பிட்ட அளவு சரக்குக்காக, முதலாளி அளிக்கும் பணத்தொகையே கூலி எனப்படும்.”  

   இதில் இருந்து தெரிவது என்னவென்றால், முதலாளி பணம் கொடுத்துத் தொழிலாளர்களுடைய உழைப்பை வாங்குகிறார், தொழிலாளி பணத்துக்காக முதலாளியிடம் தமது உழைப்பை விற்கிறார். ஆனால் இது வெளித்தோற்றமே அன்றி உண்மையல்ல. உண்மையில் தொழிலாளி பணத்துக்காக முதலாளியிடம் விற்றது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை

மார்க்ஸ் கூறுகிற இந்த உழைப்புச் சக்தி என்கிற சரக்கைப் பற்றி அறிந்து கொள்ளாமல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது

ரூ.1,000/- கொடுத்து, தொழிலாளியின் உழைப்புச் சக்தியை, முதலாளி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆயிரத்தைக் கொண்டு முதலாளி இரண்டு மூட்டை அரிசி வாங்கலாம், அல்லது வேறொரு சரக்கைக் குறிப்பிட்ட ஓர் அளவுக்கு வாங்கலாம். இந்த எளிய உதாரணத்தின் மூலம் மார்க்ஸ் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை ஒரு சரக்கு என்பதை நிறுவுகிறார்

            தொழிலாளி தம்மிடம் உள்ள சரக்கான உழைப்புச் சக்தியை முதலாளியிடம் உள்ள சரக்கான பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரம் உழைப்பதற்கு இவ்வளவு பணம் என்று குறிப்பிட்ட விகிதத்தில் பரிவர்த்தனை நடைபெறுகிறது

            ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் பணமாகக் கணித்துக் கூறுவோமானால், அதுதான் அச்சரக்கின் விலை எனப்படுகிறது. கூலி என்பது உழைப்புச் சக்தியின் விலையைக் குறிக்கும் ஒரு தனிப் பெயரே ஆகும். சாதாரணமாக இது உழைப்பின் விலை என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பே உழைப்பின் விலை ஆகும். 

மனிதனின் சதையையும் ரத்தத்தையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத இந்தத் தனித்துவம் கொண்ட உழைப்புச் சக்தி என்கிற சரக்கின் விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி

உதாரணமாய் ஒரு நெசவாளியை எடுத்துக் கொள்வோம். முதலாளி இந்த நெசவாளிக்குத் தறியும் நூலும் தருகிறார், இவற்றை வைத்துக் கொண்டு நெசவாளி வேலை செய்கிறார், நூல் துணியாய் மாற்றப்படுகிறது. துணியின் உடைமையாளராகிய முதலாளி துணியை 1,000 ரூபாய்க்கு விற்கிறார். நெசவாளிக்குக் கிடைக்கும் கூலியானது துணியை விற்ற இந்த 1,000 ரூபாயில் இருந்தா கொடுக்கப்படுகிறது? இல்லவேயில்லை. துணி விற்பனை செய்யப்படுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே நெசவாளிக்குக் கூலி கொடுக்கப்பட்டுவிட்டது

இதன் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால், முதலாளி இந்தத் துணியிலிருந்து தாம் பெறப் போகும் பணத்தில் இருந்து தொழிலாளிக்குக் கூலியைத் தரவில்லை, ஏற்கனவே தம்மிடம் இருந்த பணத்தில் இருந்தே கொடுத்துள்ளார். எப்படித் தறியும் நூலும் முதலாளியால் நெசவாளிக்குத் தரப்பட்டவையே தவிர, நெசவாளி உற்பத்தி செய்த பொருள்கள் அல்லவோ, அதே போலத் தமது சரக்காகிய உழைப்பு சக்திக்குப் பரிவர்த்தனையாய் நெசவாளி பெற்றுக் கொள்ளும் சரக்குகளும் அவர் உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல.  

தம் மூலதனத்தின் பிறிதொரு பகுதியைக் கொண்டு மூலப்பொருளான நூலையும் உழைப்புக் கருவியாகிய தறியையும் எப்படி அவர் விலைக்கு வாங்கினாரோ அதே முறையில்தான் நெசவாளியின் உழைப்புச் சக்தியையும் வாங்கியுள்ளார். நமது அருமை நெசவாளியும் இந்த உழைப்புக் கருவிகளுள் ஒரு கருவியாகவே இருக்கிறார்.  

இந்த வகையில் நெசவாளியின் உழைப்பு சக்தியும், தறியைப் போலவேதான் ஒரு சரக்காகக் கணிக்கப்படுகிறது. உற்பத்திப் பொருளிலோ, அப்பொருளுக்குக் கிடைக்கும் விலையிலோ அவருக்குப் பங்கு எதுவும் இல்லை. ஆக, கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் சரக்கில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் சரக்குகளில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும். உழைப்பு சக்தி என்பது இவ்விதம் அதன் உடைமையாளராகிய கூலித்தொழிலாளி, மூலதனத்துக்கு விற்பனை செய்யும் ஒரு பரிவர்த்தனைச் சரக்காகும்.           

    தொழிலாளி தானும் தனது குடும்பமும் வாழ்வதற்காகத்தான் உழைப்பு சக்தியை முதலாளிக்கு விற்கிறார். தொழிலாளியின் உழைப்பு அவரின் உயிர் செயற்பாடாகும். தமக்குத் தேவைப்படுகிற பிழைப்புச் சாதனங்களைப் பெற்றுக் கொள்வதற்கே, தமது உயிர் செயற்பாட்டை முதலாளிக்கு விற்பனை செய்கிறார்

இந்த வகையில் உழைப்புச் சக்தி என்பது முதலாளிக்கு உரியதாய் மாற்றித் தந்துவிட்ட ஒரு பரிவர்த்தனை சரக்காகும். தொழிலாளியின் குறிக்கோளாக உற்பத்தி பொருள் இருக்கவில்லை, தமக்கு அவர் உற்பத்தி செய்தது கூலியைத் தான். கூலிக்காகவே தொழிலாளி உழைக்கிறார்

உழைப்பு சக்தியானது எந்தக் காலத்திலும் இப்படி ஒரு பரிவர்த்தனை சரக்காக இருந்து வரவில்லை, உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய், அதாவது சுதந்திர உழைப்பாய் இருந்து வரவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்புவரை தொழிலாளியின் உழைப்பு இப்படிச் சுதந்திர உழைப்பாய் இருக்கவில்லை

ஒரு காளை மாடு தனது உழைப்பை எஜமானனுக்கு விற்பதில்லை, அதே போல அடிமை உற்பத்தியில் அடிமை அவனது உழைப்பை விற்பதில்லை. அவன் முழுமையாக எஜமானனுக்கு விற்கப்பட்டவன் ஆவான். அந்த அடிமையை உடமையாகக் கொண்ட எஜமானன் மற்றொருவருக்கு விற்கக்கூடிய  பரிவர்த்தனை பொருளே அடிமை. அவனே ஒரு விற்பனை சரக்காகும். ஆகவே அடிமையின் உழைப்பு சக்தி அவனுடைய பரிவர்த்தனை சரக்காக இல்லை. பண்ணை அடிமையும் தமது உழைப்பு சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே விற்பனை செய்கிறான். பண்ணையடிமை தமது சிறு நிலத்துடன் இணைக்கப்பட்டவன். நவீனப் பாட்டாளியான சுதந்திர உழைப்பாளி இவ்வாறு இல்லாமல், தன்னைச் சிறுகச்சிறுக விற்பனை செய்து கொள்கிறான். மேலும் தனது உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் அன்றி வாழவழி இல்லாதவன்

தமது உழைப்பு சக்தியை விற்பனை செய்வதே வருமானத்துக்கான ஒரே ஆதாரமாய்க் கொண்டிருக்கும் பாட்டாளி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து விலகி வந்துவிட முடியாது. தொழிலாளி எந்தவொரு தனி முதலாளிக்கும் உரியவன் அல்ல. அவன் முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரித்தவனாவான். தன் முதலாளியை அவன் தேடிக்கொள்ள வேண்டும். அதாவது இந்த முதலாளித்துவ வர்க்கத்தினுள் தன்னை வாங்கிக் கொள்ளும் ஒரு முதலாளியைத் தேடிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்தச் சமூகத்தில் தொழிலாளியால் வாழமுடியாது. இப்படிப்பட்ட பாட்டாளியைத் தான், தன்னை விற்பதற்குச் சுதந்திரம் பெற்றவன் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்

இத்தகைய நிலை ஒரு வரலாற்றில் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் தான் தோன்ற முடியும். வேலைப்பிரிவினை பெருகிவிட்ட நிலையில், சரக்கு உற்பத்தி தோன்றிய நிலையில் உள்ள வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் இத்தகைய சுதந்திரப் பாட்டாளி உருவாகிறான்

இந்த நவீன முதலாளித்துவச் சமூகத்தில் தொழிலாளி எந்தவொரு தனி முதலாளிக்கும் உரியவன் அல்ல. அவன் முதலாளித்துவ வர்க்கத்துக்கே உரித்தவனாவான் என்று மார்க்ஸ் கூறியதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பணம் மூலதனமாக உருமாறுகிற வரலாற்று கட்டத்தில் முதலாளி தோன்றுகிறார். மூலதனத்தைப் பெருக்குவதற்காக உழைப்பதற்குப் பாட்டாளி தேவைப்படுகிறார். இங்கு மூலதனப் பெருக்கம் சுரண்டல் மூலம் நிகழ்கிறது. இந்த முதலாளியின் சுரண்டலை நீக்க வேண்டும் என்றாலும், பாட்டாளி சுரண்டலுக்கு ஆளாவதை நிறுத்த வேண்டுமானாலும் மூலதனத்தை ஒழிக்க வேண்டும். இந்த மூலதனத்தை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிற முதலாளியுடன் போராட வேண்டும். இந்த வரலாற்று புரிதல் இல்லாதவர்கள் தான், முதலாளியிடம் இரக்கக் குணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

நவீனப் பாட்டாளி தமது வாழ்க்கையைப் பராமரிப்பதற்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்சப் பிழைப்புச் சாதனங்களைப் பெறுவதற்காகவே உழைக்கிறார். தொடர்ந்து வேலை செய்வதற்கான சக்தியைப் பெறுவதற்கும், தொழிலாளி வர்க்கம் அழிந்து போய்விடாமல் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட உழைப்பாளர்களை மறுவுற்பத்தி செய்வதற்கும் தேவைப்படுகிற பிழைப்புச் சாதனங்களையே பாட்டாளி கூலியாகப் பெறுகிறார்

வணிக நிலைமைக்கு ஏற்பவே சரக்கின் விலை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகிறது. வணிக நிலைமை நன்றாக இருக்கும் போது சரக்கின் விலை அதிகமாகவும், நிலைமை மோசமாக இருக்கும் போது சரக்கின் விலை குறைவாகவும் விற்பதைப் போலவே இந்த உழைப்பாளியின் உழைப்பு சக்தி என்கிற சரக்கும் வணிக நிலைமைக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகிறது

கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? என்கிற கேள்விக்குக் கீழ்க்காணும் வகையில் மார்க்ஸ் பதிலளிக்கிறார்

கூலி என்பது குறிப்பிட்ட ஒரு சரக்கின், அதாவது உழைப்புச் சக்தியின் விலை ஆகும். எனவே, ஏனைய பிற சரக்குகளின் விலையை நிர்ணயிக்கும் அதே விதிகள்தான் கூலியையும் நிர்ணயிக்கின்றன. ஆக, ஒரு சரக்கின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதே அடுத்த கேள்வி

2) ஒரு பரிவர்த்தனை சரக்கின் விலை எதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது? 

    வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான போட்டியினாலும், கேட்புக்கும் கிடைத்தலுக்கும், வரத்துக்கும் தேவைக்கும் இடையிலான உறவாலும் ஒரு பரிவர்த்தனை சரக்கின் விலை நிர்ணயிக்கப் படுகிறது

ஒரே சரக்கைப் பல்வேறு விற்பனையாளர்களும் சந்தையில் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒரே தரமுள்ள சரக்குகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கிறவர், மற்றைய விற்பனையாளர்களைச் சந்தையில் இருந்து விரட்டிவிட்டுத் தமது சரக்கை அதிகமாகவே விற்பனை செய்வார். இவ்வகையில் உற்பத்தியாளர்களிடையே போட்டி உருவாகிறது. போட்டியின் காரணமாகச் சரக்குகளைக் குறைந்த விலைக்கு விற்கவே உற்பத்தியாளர் விரும்புவர்கள். இதன் காரணமாகச் சரக்குகளின் விலை வீழ்த்தப்படுகிறது

அதே நேரத்தில் வாங்குவோர் இடையிலும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியினால் சரக்கின் விலை உயரும்படி செய்கிறது. முடிவில் வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையே போட்டி உருவாகிறது

            சந்தையில் 100 மூட்டை பருத்தி விற்பனைக்கு இருக்கிறது. அதே நேரத்தில் 500 மூட்டை பருத்தியை வாங்க விரும்புவோர் இருப்பதாகக் கொள்வோம்.  இருப்பைக்காட்டிலும் தேவையானது ஐந்து மடங்கு கூடுதலாக இருக்கிறது. இந்த நிலையில், வாங்குவோரிடையே போட்டி வலுவாக இருக்கிறது. வாங்குவோர் தமக்குத் தேவையான மூட்டையை வாங்கவே விரும்புவர். இதன் காரணமாகப் பருத்தியை வாங்க முனைபவர் ஒப்பளவில் அதிக அளவு விலை கொடுத்து வாங்கி, மற்றவர்களைச் சந்தையில் இருந்து விரட்டப் பார்ப்பர்

            வாங்குபவர்களுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டியினால், தமது நூறு மூட்டை பருத்தி விற்பனையாவது உறுதி என்பதை விற்பனையாளர்கள் அறிந்து கொள்கின்றனர். வாங்குவோர் இடையே காணப்படும் இந்தப் போட்டியினால் பருத்தியின் விலை போட்டிக்கு ஏற்ப வெகுவாக உயர்கிறது

            இதற்கு நேர்மாறான சூழ்நிலையில் தேவையைக் காட்டிலும் சரக்கின் வரத்தால் சந்தையில் பொருட்கள் மிகவும் கூடுதலாகக் காணப்படுவதும், விற்பனையாளர்களிடையே வெறித்தனமான போட்டா போட்டியும், வாங்குவோர் குறைவாக இருப்பதினால், சரக்கைக் குறைவான விலைக்கு விற்பனையாளர் விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவதையும் பார்க்கிறோம்.               

      ஆனால், விலைகளின் ஏற்றம் என்பது என்ன? வீழ்ச்சி என்பது என்ன? உயர்ந்த விலை என்பது என்ன? குறைந்த விலை என்பது என்ன? வரத்துக்கும் தேவைக்குமுள்ள உறவு விலையை நிர்ணயிக்கிறது எனில், வரத்துக்கும் தேவைக்கும் உள்ள உறவை நிர்ணயிப்பது எது? என்ற கேள்வி அடுத்து எழுகிறது. 

வரத்துக்கும் தேவைக்கும் உள்ள வேறுபாட்டால் சரக்கின் விலை ஏற்றம் பெறுவதையும் வீழ்ச்சி அடைவதையும் பார்த்தோம். ஏற்றத்தால் உயர்ந்த விலையும், வீழ்ச்சியினால் குறைந்த விலையும் கிடைக்கிறது

ஒரு சரக்கின் விலை அதன் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறுவது, ஒரு சரக்கின் விலை அதன் உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறுவதற்குச் சமமாகும். ஏனென்றால் உற்பத்திச் செலவு முதலாவதாக, கச்சாப்பொருட்களையும், உற்பத்திக் கருவிகளின் தேய்மானத்தையும் உழைப்பாளியின் உழைப்பு நேரத்தையும் உள்ளடக்கி இருக்கிறது

ஒரு முதலாளியிடம் உரையாடி ஒரு முடிவுக்கு வருவோம். முதலாளி கூறுகிறார், “ஓராண்டில், நான் விற்கும் சரக்குகளின் உற்பத்திச் செலவு எனக்கு 100 லட்சம் ஆகிறது, அச்சரக்குகளை விற்பதன் மூலம் 110 லட்சம் கிடைக்கிறது. இது ஒரு நியாயமான லாபம் ஆகும். ஆனால் 120 அல்லது 130 லட்சம் கிடைத்தால், அதிக லாபம் பெறுவேன். 200 லட்சம் கிடைக்குமானால் அது அசாதாரணமான, பிரம்மாண்டமான லாபமாக இருக்கும்.” 

முதலாளிகளுக்கு லாபத்தின் அளவுகோலாகப் பயன்படுவது எது? அவருடைய சரக்கின் உற்பத்திச் செலவுதான் அளவுகோலாகும். அவர் தம் சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு, உற்பத்திச் செலவைக் காட்டிலும் எந்தளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ப லாபத்தின் ஏற்றத்தையோ வீழ்ச்சியையோ காண்கிறார்

லாபத்துக்கு அளவு கோலாக இருக்கிற உற்பத்திச் செலவு சரக்கின் விலையையும் நிர்ணயிப்பதாக இருக்கிறது. எனவே சரக்கின் விலையானது அதன் உற்பத்திச் செலவுக்குக் கீழே சரிந்துவிடுமானால் நட்டம் ஏற்படும். நட்டத்தை  விரும்பாத முதலாளி அச்சரக்கின் உற்பத்திக்குச் செலவிடும் மூலதனத்தை அந்தத் தொழிலிருந்து வெளியே கொண்டு செல்வார். அக்காரணத்தால் தொழிற்கிளை அழிந்து போகும்

இதற்கு அடுத்தாக, கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது.  

3) கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? 

            சரக்குகளின் விலையைப் பொதுவாக ஒழுங்குபடுத்தும் அதே பொது விதிகள்தான், கூலியையும் ஒழுங்கு படுத்துகின்றன. கூலி என்பது உழைப்புச் சக்திக்கான விலை. அதாவது தொழிலாளி தமது பிழைப்புச் சாதனங்களைப் பெறுவதற்கான பண அளவே கூலி ஆகும். மற்ற சரக்குகளைப் போலவே இந்த உழைப்புச் சக்தி எனும் சரக்குக்கும் அதன் விலையான கூலியானது; தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளால் உயரவோ, குறையவோ செய்கிறது. அதாவது உழைப்புச் சக்தியை விற்போராகிய தொழிலாளருக்கும், உழைப்பு சக்தியை வாங்குவோராகிய முதலாளிக்கும் இடையிலான போட்டியின் திசை வழிகளின்படி கூலி உயரவோ அல்லது குறையவோ செய்கிறது

உழைப்பாளியின் பிழைப்புச் சாதனங்களுக்குத் தேவைப்படுவதை ஒட்டிக் கூலி கொடுக்கப்படுகிறது. இதுவே உற்பத்தி செலவாகக் கணக்கிடப்படுகிறது. உழைப்பு சக்தியெனும் இந்தச் சரக்கை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்தால்  கூலி நிர்ணயிக்கப்படுகிறது

            அடுத்து, உழைப்பு சக்தியின் உற்பத்தி செலவு எவ்வளவு? என்ற கேள்வி எழுகிறது

            தொழிலாளி தம்மைப் பராமரித்துக் கொள்வதற்கு உரிய செலவுதான் உழைப்பு சக்தியின் உற்பத்தி செலவு ஆகும். ஆகவே தொழிலாளியின் உழைப்பின் விலை அவசியமான பிழைப்புச் சாதனங்களின் விலையால் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கூலி, குறைந்தபட்சக் கூலி என்றழைக்கப்படுகிறது. இந்தக் குறைந்தபட்சக் கூலி, உற்பத்திச் செலவைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் சரக்குகளின் விலையைப் போன்றே கணக்கிடப்படுகிறது. தனிப்பட்ட ஒரு தொழிலாளியைக் கொண்டு இது கணக்கிடப்படுவதில்லை. தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்தத்தையே கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கணக்கீடு தொழிலாளியின் தேவையை முழுமைப்படுத்துவதற்காகச் செய்யப்படவில்லை. குறைந்தபட்சப் பிழைப்புச் சாதனங்களைப் பெற்று உயிர்வாழ்வதற்குத் தேவையானதைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதனால் தான் மார்க்ஸ் இதைக் குறைந்தபட்சக் கூலி என்று கூறியுள்ளார்

அடுத்து, மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும் என்பது பற்றி மார்க்ஸ் ஆராய்கிறார்.  

4) மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும் 

பணமும் மூலதனமும் ஒன்றல்ல. பண்டம் (சரக்கு) மாற்று தொடங்கிய சில காலங்களுக்குள் பணம் வந்துவிட்டது. ஆனால் மூலதனம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் போது தான் தோன்றியது. மூலதனம் என்பது, புதிய மூலப் பொருள்கள், புதிய உழைப்புக் கருவிகள், புதிய பிழைப்பாதாரப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் மூலப் பொருள்களையும், உழைப்புக் கருவிகளையும், அனைத்துவகை பிழைப்பாதாரப் பொருள்களையும் உள்ளடக்கியதாகும். மூலதனத்தின் இந்த உள்ளடக்கக் கூறுகள் அனைத்தும் உழைப்பால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். மூலதனம் என்பது உழைப்பின் உற்பத்தி பொருளாகும், சேமிக்கப்பட்ட உழைப்பாகும்

புதிய உற்பத்திக்கு ஒரு சாதனமாகப் பயன்படுகின்ற, திரட்டி வைக்கப்பட்ட உழைப்பே மூலதனம் ஆகும், இதுவே மூலதனத்தின் இயல்பு

            மூலதனம் என்பது பொருள் உற்பத்தியின் ஒரு சமூக உறவாகும், முதலாளித்துவ உற்பத்தி உறவாகும். மேலும் மார்க்ஸ் கூறுகிறார், மூலதனத்தில் அடங்கியுள்ள பிழைப்புச் சாதனங்களும் உழைப்புக் கருவிகளும் மூலப் பொருட்களும் குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் தோன்றுகிறது. புதிய உற்பத்திக்காகப் பயன்படும் பொருட்களை இந்தக் குறிப்பிட்ட சமூகத் தன்மைதான் மூலதனமாய் மாறுகிறது

பொருள் உற்பத்தி நடைபெறும் போது ஏற்படுகிற, சமூக உறவுகளை, உற்பத்தி உறவுகள் என்று சுருக்கமாக மார்க்ஸ் கூறியுள்ளார். உற்பத்தி நிகழ்வுப்போக்கில், மனிதர்கள் இயற்கையின்மீது மட்டுமன்றித் தங்களுக்குள்ளும் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்றுசேர்ந்து உழைப்பதன் மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன் மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுத்த தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்கு செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது

            அடுத்து மார்க்ஸ், உற்பத்தி உறவுகளை, உற்பத்தி சாதனங்கள் நிர்ணயிப்பதைப் பற்றி ஆராய்கிறார்

இதைப் பலர் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வருகின்றனர். அவ்வாறு மறுப்பவர்கள் மார்க்சிய மேதைகள்!! என்று கூறப்படுவது தான் நமது நாட்டின் மோசமான நிலையாகும். ஆனால் மார்க்ஸ் இதனைப் பல இடங்களில் விளக்கி இருக்கிறார்

 

உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின் கீழ்த் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகளும், உற்பத்தியின் சமூக உறவுகளும் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை நாம் காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்த முழுமையில் சமூக உறவுகளாய் அமைகின்றன. அவையே சமுதாயமாக, இன்னும் குறிப்பாக, வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்திலுள்ள சமுதாயமாக, தனக்கே உரித்தான தனித்த பண்பியல்பு கொண்ட ஒரு சமுதாயமாக அமைகின்றன.” 

இதற்கு மேல் என்ன விளக்கம் தேவைப்படுகிறது. உற்பத்திச் சாதனங்களே உற்பத்தியின் உறவுகளை ஏற்படுத்துகிறது. பிற்காலத்தில் மார்க்ஸ் இதனை உற்பத்தி உறவு என்று தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்

ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் கட்டத்தையும் உற்பத்தி சாதனங்களே தீர்மானிக்கின்றன. இந்தத் தீர்மானிக்கும் மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பல அறிஞர்கள் ஏற்பதில்லை. குருட்டாம்போக்கில் மனிதனது மனவோட்டமாகவே உற்பத்தியை இவ்வகை அறிஞர்கள் பார்க்கின்றனர். இத்தகைய தவறான பார்வையினால் சோஷலிச உற்பத்தி முறைக்குச் செல்லும் வழியை இவர்களால் சரியாகக் கூறிட முடியாது என்பதே பெரிய உண்மை ஆகும்

முதலாளித்துவ வீழ்ச்சியையும் சோஷலிசத்தின் தோற்றத்தையும் மார்க்சிய விஞ்ஞான வழியில் புரிந்து கொள்ள, இப்படிப்பட்ட அறிஞர்களால் முடியாது. கேள்விகளை எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கட்டும், நாம் மார்க்சிடம் அரசியல் பொருளாதாரம் கற்போம், களத்தில் செயல்படுவோம்

            பிற பொருட்களுடன் பரிவர்த்தனை செய்யத்தக்க பொருட்களே சரக்காகும். அவை பரிவர்த்தனை செய்யப்படக் கூடிய குறிப்பிட்ட விகிதம்தான் அவற்றின் பரிவர்த்தனை மதிப்பு ஆகும். இதையே பண வடிவில் கூறினால் அவற்றின் விலை ஆகும்.  ஒரு கோடி பெறுமானம் உள்ள ஒரு வீடு, ஒரு கோடி மதிப்புள்ள மற்ற பொருளுக்குப் பரிவர்த்தனை செய்துகொள்ளக்கூடிய மதிப்புடையதாகும்

அடுத்து, சரக்குகளின் தொகுப்பு, பரிவர்த்தனை மதிப்புகளின் கூட்டுத்தொகை எவ்வாறு மூலதனமாக ஆகிறது? என்பதைப் பார்ப்போம். மூலதனம் தோன்றுவதற்கு முன்தேவை முதலாளியும், தொழிலாளியும் ஆகும். இங்கே அப்படிப்பட்ட தொழிலாளியைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்

 

தன்னை நேரடியான, உயிருள்ள உழைப்புச் சக்தியுடன் பரிவர்த்தனை செய்து கொள்வதன் மூலமாய், தன்னைச் சுயேச்சையான ஒரு சமூகச் சக்தியாய், அதாவது சமுதாயத்தில் ஒரு பகுதியின் சக்தியாய்ப் பேணிப் பாதுகாத்துக் கொண்டும் பெருகச் செய்து கொண்டும் செல்வதால், உழைப்பதற்குத் தனக்குள்ள சக்தியைத் தவிர வேறு உடைமை ஏதுமில்லாத ஒரு வர்க்கம் இருப்பது மூலதனத்துக்கு அத்தியாவசியமான ஒரு முன்தேவையாகும்..” 

            பாட்டாளியானவன், உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிரப் பிழைப்பதற்கு வேறு வழியில்லாதவன். இப்படிப்பட்டவனின் தேவை மூலதனத்திற்கு இருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தில் உருவான உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலபிரபுத்துவத்துக்கு பொருந்தாமல் போனதாலேயே முதலாளித்துவம் தோன்றியது. வளர்ச்சி அடைந்த உற்பத்திச் சக்திகளுக்கும் மூலதனத்துக்கும் முதலாளியும் பாட்டாளியும் தேவைப்படுகின்றனர்

அதாவது, வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில், வணிகத்தின் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்களிடம் சேர்ந்த பணம், வணிக மூலதனமாக மாறியது. இந்த வணிக மூலதனம், தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது, வணிகர்கள் தொழில் முதலாளிகளாக மாறினர்.  தூக்கி எறியப்பட்ட விவசாயிகள் நகர்புறத்து பாட்டாளிகளானார்கள்

அடுத்து, மார்க்ஸ் கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்குமுள்ள உறவு பற்றி கூறுகிறார்

5) கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்குமுள்ள உறவு 

முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்கும் இடையேயான பரிவர்த்தனையில் நடைபெறுவது என்ன? என்று கேட்டுப் பதிலளிக்கிறார். 

தொழிலாளி தமது உழைப்புச் சக்திக்குப் பரிவர்த்தனையாய்ப் பிழைப்புச் சாதனங்களைப் பெறுகிறார். முதலாளியோ தமது பிழைப்புச் சாதனங்களுக்குப் பரிவர்த்தனையாய்த் தொழிலாளியின் உடைய உற்பத்தி் சக்தியைப் பெறுகிறார்

ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். தொழிலாளி ஒருவர் ரூ.500/- கூலிக்காக ஒரு விவசாயியின் நிலத்தில் நாள்முழுதும் வேலை செய்கிறார். அதன்மூலம் விவசாயிக்கு ரூ.1,000/- கிடைக்கும்படி செய்கிறார். விவசாயி தாம் தொழிலாளிக்குத் தந்தக் கூலிக்கு ஈடான தொகையைப் பெறுவது மட்டுமின்றி, மேலும் ஒரு மடங்கு பணத்தை உருவாக்குகிறார். ஆக, விவசாயி தொழிலாளிக்குத் தந்த ரூ.500/- பணத்துக்கு ஈடாகத் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை வாங்கி அவர் செலவழித்த ரூ.500/-வுடன் கூடுதலாய் ரூ.500/- சேர்த்து இருமடங்கு மதிப்புள்ள விளைபொருள்களை நிலத்தில் உருவாக்குகிறார். அதாவது ரூ.1,000/- மதிப்புள்ளதைப் படைக்கிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக, தொழிலாளி தன் உற்பத்திச் சக்தியின் பலன்களை விவசாயியிடம் ஒப்படைத்துவிட்டு, அவ்வுற்பத்தி சக்திக்குப் பதிலீடாகப் பெறும் ரூ.500/-யை பிழைப்பாதாரச் சாதனங்களுக்குச் செலவழிக்கிறார். அவ்வாறு பெறும் பிழைப்பாதாரச் சாதனங்களை விரைவில் நுகர்ந்து தீர்த்து விடுகிறார்

தொழிலாளி தமது உழைப்புச் சக்திக்கு ஈடாகப் பெற்ற கூலியைச் செலவழித்துவிட்டதால், தமது பிழைப்புக்கு மீண்டும் உழைப்பதற்கு வந்தாக வேண்டும். இதன் மூலம் மார்க்ஸ் கூறுவது என்னவென்றால்:-

இவ்வாறு மூலதனத்துக்கு முன்தேவை கூலியுழைப்பும், கூலியுழைப்புக்கு முன்தேவை மூலதனமும். ஒன்று மற்றொன்றின் முன்னிபந்தனையாய் அமைகிறது, ஒன்று மற்றொன்றைத் தோற்றுவிக்கிறது.” 

            இத்தகைய மூலதனத்தின் தேவையைப் புரிந்து கொள்ளாத பலர், முதலாளியின் இரக்கக் குணத்தைத் தூண்டுவதின் மூலம், இந்தக் கூலி அமைப்பு முறைக்கு உள்ளேயே இந்தப் பிரச்சினையைத் தீர்த்திடலாம் என்று கனவு காண்கின்றனர். முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்றால் மூலதனத்தைத் தூக்கி எறிய வேண்டும்

            மேலும், மார்க்ஸ் கூறுகிறார், பஞ்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி பருத்தித் துணிகளை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, மூலதனத்தையும் உற்பத்தி செய்கிறார். எனவே மூலதனத்தின் அதிகரிப்பு பாட்டாளி வர்க்கத்தின், அதாவது தொழிலாளி வர்க்கத்தின் அதிகரிப்பு ஆகும். இதன் மூலம் முதலாளியின் நலன்களும் தொழிலாளிகளின் நலன்களும் ஒருமித்து விடுவதாய் முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவகையில் இது உண்மை தான். மூலதனம் தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்ளாவிடில் தொழிலாளி அழிய வேண்டியதுதான். உழைப்புச் சக்தியை மூலதனம் சுரண்டாவிடில் மூலதனம் அழிய வேண்டியதுதான்

            மற்றொன்றையும் மார்க்ஸ் நினைவு படுத்துகிறார். உற்பத்தித் திறனுள்ள மூலதனமானது, எவ்வளவுக்கு எவ்வளவு செழிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில்துறை செழித்து ஓங்குகிறது, முதலாளித்துவ வர்க்கத்தார் இதன் மூலம் மேன்மேலும் தம்மைச் செல்வந்தர்களாக்கிக் கொள்கின்றனர். தொழிலும், வணிகமும் சிறப்படையும் போதுதான், முதலாளிக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அவ்வளவுக்கு அவ்வளவு அதிக விலைக்குத் தொழிலாளி தம்மை விற்றுக் கொள்ள முடிகிறது

            எனவே உற்பத்தித் திறனுள்ள மூலதனம் சாத்தியமான அளவுக்கு மிகவும் வேகமாய் வளர்ந்து பெருகுவதுதான் தொழிலாளருக்கு, ஓரளவு உகந்த நிலைமை நிலவுவதற்குரிய அத்தியாவசிய நிபந்தனை ஆகும். 

            உகந்த நிலை என்று கூறியவுடன் சுரண்டலுக்கு வாய்ப்பில்லாத நிலையா? என்று பலர் சிந்திக்கத் தொடங்கிவிடுவர். அதனால் தான் மார்க்ஸ் இத்துடன் நிற்காமல் தொடர்கிறார்.  உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சியானது, தற்போதைய நிகழ்கால உழைப்பின்மீது, திரட்டி வைக்கப்பட்ட சென்றகால உழைப்பினுடைய ஆதிக்கத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது, தொழிலாளி வர்க்கத்தின்மீது முதலாளித்துவ வர்க்கம் செலுத்தும் ஆட்சி அதிகாரத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. 

            உழைப்புச் சக்தியின் பணவிலை, உண்மையான கூலியைக் குறிப்பதில்லை. அதாவது, கூலிக்குப் பரிவர்த்தனையாக உள்ளபடியே தரப்படும் சரக்குகளின் அளவைக் குறிப்பதில்லை. ஆகவே கூலியின் உயர்வு அல்லது வீழ்ச்சி பற்றிப் பேசும்போது, உழைப்புச் சக்தியின் பெயரளவான கூலியை மட்டுமின்றி, உண்மையான கூலியையும் நினைவில் கொள்ள வேண்டும். தொழிலாளி தன்னை முதலாளியிடம் விற்றுக்கொள்ளும் பணத்தின் அளவு, இந்தப் பணத்துக்குத் தொழிலாளி வாங்க முடிகிற சரக்குகளின் அளவு, இவையிரண்டில் எதுவுமே கூலி என்ற சொல்லில் உள்ளடங்கியுள்ள உறவுகளை முழுமையாக விளக்கிவிடவில்லை

கூலியானது, அனைத்துக்கும் மேலாக, முதலாளிக்குக் கிடைக்கும் ஆதாயத்துடன், அதாவது இலாபத்துடன் அதற்குள்ள உறவால் நிர்ணயிக்கப்படுகிறது

முன்பே இதைப் பற்றி பார்த்தோம், கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் சரக்கில் தொழிலாளிக்கு உரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் சரக்குகளின் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள குறிப்பிட்ட ஓர் அளவு உழைப்புச் சக்தியைத் தனக்கு வாங்கிக் கொள்கிறாரோ அந்தப் பகுதியே கூலி ஆகும்

அடுத்து, கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதியைப் பற்றி மார்க்ஸ் விளக்குகிறார்

6) கூலி, இலாபம் இவற்றின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் பொது விதி 

முதலாளி தான் செலவிட்ட உற்பத்திச் செலவுக்கு மேலாக ஓரளவு உபரி தனக்குக் கிடைக்கும்படி, அதாவது அவருக்கு இலாபம் கிடைப்பதற்கே உற்பத்தியில் ஈடுபடுகிறார். முதலாளியின் கண்ணோட்டத்தின்படி, தொழிலாளி உற்பத்தி செய்யும் சரக்குகளின் விற்பனை விலை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது

முதலாவது, உற்பத்தியில் முதலாளி ஈடுபடுத்தும் மூலப்பொருள்களின் விலையை ஈடுகட்டவும், அத்தோடுகூட உற்பத்தியில் அவ்வாறே ஈடுபடுத்தும் கருவிகள், எந்திரங்கள், இன்னபிற உழைப்புச் சாதனங்களின் தேய்மானத்தை ஈடுகட்டவும் ஆகும் பகுதி

இரண்டாவது, அவரால் தரப்பட்ட கூலியை ஈடுகட்டும் பகுதி

மூன்றாவது, எஞ்சுகின்ற உபரி - அதாவது முதலாளியின் இலாபம்

முதலாவது பகுதி பழைய மதிப்புகளைத் திருப்பித் தருவதாக மட்டும் இருக்கிறது, உழைப்பாளியால் செலுத்தப்பட்ட உழைப்பு மட்டும்தான், கூலியைத் திருப்பி எடுப்பதுடன், முதலாளிக்கு உபரியாகிய லாபத்தையும் தருகிறது. இந்த லாபமானது, தொழிலாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்டு மூலப் பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய மதிப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது

இங்கே மார்க்ஸ் உபரி மதிப்பைச் சிறிய அளவுக்குத் தான் விளக்கி உள்ளார். உபரி மதிப்பைப் பற்றி நேரடியாகக் கூறவில்லை. கூலி, விலை, லாபம்என்கிற சொற்பொழிவில் தான் உபரி மதிப்பை முதன்முறையாக நேரடியாக விளக்கியுள்ளார்

            அடுத்து, கூலிக்கும் லாபத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றி மார்க்ஸ் கூறுகிறார். பிழைப்புச் சாதனங்களின் விலைகள் மூன்றில் இரு பங்கு குறையும் போது, தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கான கூலி மூன்றில் ஒரு பங்கு குறைவதாய் வைத்துக் கொள்வோம். உதாரணமாகத் தொழிலாளி முன்பு ரூ.200/- க்கு வாங்கிய பிழைப்பு சாதனங்களை இப்போது அதைவிடக் குறைவான ரூபாயில் வாங்க முடிகிறது. இருந்தாலும் முதலாளியின் லாபத்துடன் ஒப்பிடும் போது தொழிலாளியின் கூலி குறைந்து தான் காணப்படுகிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பங்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மூலதனத்துக்குக் கிடைக்கும் பங்கு அதிகம்

சமூகத்தின் செல்வம் மூலதனத்துக்கும், உழைப்புக்கும் இடையே பங்கிட்டுக் கொள்ளப்படுவது, முன்பைவிட இன்னும் அதிகச் சமமின்மையாய் ஆகிவிட்டது. தொழிலாளி வர்க்கத்தின்மீது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டே செல்கிறது. தொழிலாளியின் சமூக நிலைமை மேன்மேலும் மோசமாகிறது. உழைப்பின் பங்காகிய கூலி குறைந்து செல்லும் போது அதே விகிதத்தில் மூலதனத்தின் பங்காகிய லாபம், உயர்ந்து செல்கிறது. லாபம் குறையக் குறையக் கூலி உயர்ந்து செல்கிறது, அதே போலக் கூலி எந்த அளவுக்குக் குறைகிறதோ அதே விகிதத்துக்கு லாபம் உயர்ந்து செல்கிறது

            மற்ற நிலைமைகளை ஒப்பிட்டு, சில முதலாளிகளுக்குச் சாதகமான நிலை அல்லது நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு முதலாளி தம் உற்பத்திப் பொருட்களைத் தமக்குச் சாதகமான முறையில் பிற முதலாளிகளுடன் பரிவர்த்தனை செய்வதாலும். புதிய சந்தைகள் திறக்கப்படுவதின் மூலமும் தமது சரக்குகளுக்கான தேவையை அதிகரிக்கலாம். முதலாளி தம் இலாபத்தைக் கூலியின் ஏற்ற இறக்கத்தைச் சாராமல், உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைச் சாராமல், பிற முதலாளிகளை முந்திச் செல்வதன் மூலம் லாபத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்

உழைப்புக் கருவிகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், இயற்கைச் சக்திகளின் புதிய பயன்பாடுகள், இன்னபிற காரணங்களாலும் முதலாளியின் இலாபம் அதிகரிக்க முடியும். லாபம் இங்கே அதிகரித்ததற்குக் கூலி குறைந்தது காரணம் அல்ல என்பது கவனிக்க வேண்டும். இங்கே ஏனைய முதலாளியை ஒப்பிடும் போது அதே அளவு உழைப்பைக் கொண்டு, முதலாளி அதிக அளவிலான பரிவர்த்தனை மதிப்புகளைப் பெற்றுக் கொள்கிறார். ஆனால் இதற்காக அவர் உழைப்புக்கு அதிக விலை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை

இந்த இடத்தில் மார்க்ஸ் பலவற்றைக் குறிப்பிட்டாலும், இங்குக் குறிப்பிடுவது முதலாளிக்குக் கிடைக்கிற ஒப்பீட்டு உபரி மதிப்பையே. இந்தச் சொற்பொழிவில் மார்க்ஸ் உபரி மதிப்பை நேரடியாக அறிவிக்காததால், இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பை முழுமையாக விளக்கவில்லை. இருந்தாலும் மார்க்சின்மூலதனம்நூலைப் படித்துவிட்டு இதைப் படிக்கும் போது இங்கே ஒப்பீட்டு உபரி மதிப்பைத் தான் விவரிக்கிறார் என்பது புரியவரும். 

நவீன இயந்திரங்களை மற்ற முதலாளிகள் பயன்படுத்தாத போது அதனால் உருவாகிறப் பலன், இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்குக் கூடுதல் லாபமாகக் கிடைக்கிறது. மற்ற முதலாளிகள் இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தும் வரை இந்தத் தனித்த லாபம் குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிறது. மற்ற முதலாளிகள் இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தும் வரை மட்டுமே இந்தத் தனித்த இலாபம் குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிறது

உபரி மதிப்பு 

உபரி மதிப்பு இரண்டு வகைப்படும், ஒன்று அறுதி உபரி மதிப்பு, மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு. தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிப்பதன் மூலம் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு. மற்ற முதலாளிகளுக்கு முன்பாக நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட முதலாளி, அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பதனால் மற்ற முதலாளிகளை ஒப்பிடும் போது கிடைக்கும் அதிக மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று மூலதன நூலில் மார்க்ஸ் விளக்குகிறார்

உபரி மதிப்பு பற்றி முந்தைய பகுதியில் பார்த்ததை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தொழிலாளி முதலாளியிடம் விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை. இந்த உழைப்புச் சக்திக்கே கூலி கொடுக்கப்படுகிறது. இது சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி தமது கூலிக்கான தொகையை ஒரு மணிநேரத்தில் உழைத்துக் கொடுத்துவிடுகிறார் என்பதை முன்பு பார்த்தோம்

 தமது கூலிக்கான மதிப்பு நேரத்தை, நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துவதினால் மற்ற தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட, குறைந்த நேரத்தில் மதிப்பைப் படைத்துவிடுகின்றனர்

அதனால் மீதமுள்ள உழைப்பு நேரத்தில் கிடைக்கும் உபரி மதிப்பு முழுதும் இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிறது. அவசியமான உழைப்பு நேரம் சமூக வழியில் கணக்கிடப்படுவதால், இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்குக் கூடுதல் உபரி மதிப்பு கிடைக்கிறது. அவசியமான வேலை நேரத்தைக் குறைத்து, உபரி வேலை நேரம் அதிகரிப்பதால் கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று மார்க்ஸ் தமதுமூலதனம்நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து, மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை என்பதை மார்க்ஸ் கூறிய பின், உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின் மீது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்

7) மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை 

மூலதனத்தின் விரைவான வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளியின் கூலி அதிகரிக்கிறது. அதேவேளையில், முதலாளியையும் தொழிலாளியையும் பிரிக்கும் சமூக இடைவெளி விரிவடைகிறது. உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. உழைப்பானது மூலதனத்தை முன்பைவிட அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது

            என்ன தான் தொழிலாளியின் கூலி அதிகரித்தாலும், எவ்வளவுதான் தொழிலாளியின் பொருளாதார வாழ்வு மேம்பட்டாலும், தொழிலாளர்களின் நலன்களுக்கும் முதலாளிகளின் நலன்களுக்கும் உள்ள பகைமை இந்தக் கூலி அமைப்பு முறையில் நீங்கிவிடப் போவதில்லை

உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் சாத்தியமான அளவு வேகமான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும் சாதகமான நிலைமை என்று கூறுவதானது என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்

தொழிலாளி வர்க்கம் தனக்குப் பகையான சக்தியை, எந்த அளவுக்கு விரைவாகப் பெருக்கி விரிவாக்குகிறதோ, அந்த அளவுக்குச் சாதகமான நிலைமைகள் உருவாகும். அந்தச் சாதகமான நிலைமைகளின் கீழ்த் தொழிலாளி வர்க்கம், முதலாளித்துவச் செல்வத்தைப் பெருக்கி, மூலதனத்தின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, மீண்டும் கடினமாய் உழைக்கவே செய்கிறது. முதலாளி வர்க்கத்திற்குப் பின்னால் தொழிலாளியைக் கட்டி இழுத்துச்செல்லும் தங்கச் சங்கிலிகளைத் தனக்குத் தயாரிப்பதோடு திருப்தி காணவும் அனுமதிக்கப்படுகிறது. இதுதான் கூலிக்குச் சாதகமான நிலைமையினால் ஏற்படும் உண்மையான விளைவு ஆகும்

உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியை எந்த வகையில் பாதிக்கிறது? என்பது பற்றி மார்க்ஸ் அடுத்து ஆராய்கிறார்.       

முதலாளித்துவச் சமூகத்தின் உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சியினால், உழைப்பின் பன்முகக் குவிப்பு ஏற்படுகிறது. அதே போல மூலதனத்தின் பெருக்கமானது, முதலாளிகளுக்கு இடையிலான போட்டியை அதிகரிக்கிறது. இந்தப் போட்டியினால், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் தமது சரக்குகளைக் குறைவான விலைக்கு விற்பதும், அதனால் அந்த அளவுக்குத் தமது சரக்கின் விலையைக் குறைக்க முடியாத முதலாளிகள், சந்தையில் இருந்து விரட்டப்படுவதும் நடைபெறுகிறது. தாக்கு பிடிக்கும் முதலாளிகள் தொடர் போட்டியின் விளைவாகத் தமது உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில் உழைப்பின் உற்பத்தித் திறனைக் கூடுமான அளவுக்கு உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்

நவீன இயந்திரங்களைப் புகுத்துவதின் மூலமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். அதற்கு இயந்திரச் சாதனங்களை இடையறாது நவீனமாக்கிக் கொள்வதும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தவிர்க்க முடியாததாகிறது. இதன் மூலம் உழைப்புப் பிரிவினை ஏற்படுகிறது

நவீனத்தைப் புகுத்தாத, பழைய உற்பத்தி முறையில் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளி, இரண்டு மீட்டர் துணியைப் பழைய முறையில் உற்பத்தி செய்யும் போது, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தும் முதலாளி மேற்சொன்ன தனது போட்டி முதலாளி பயன்படுத்தும் அதே உழைப்பு நேரத்தில் மூன்று மீட்டர் உற்பத்தி செய்துவிடுவார், பழைய முறையிலான முதலாளி அதே நிலவர விலையில் இரண்டு மீட்டர் துணியை விற்றுக் கொண்டிருக்க, நவீன இயந்திரங்களைப் பயன்படுத்திய முதலாளி குறைந்த விலைக்கு விற்றுத் தனது போட்டியாளர்களைச் சந்தையிலிருந்து விரட்டியடிக்கவும், அதிக அளவில் உற்பத்தி செய்து தனது சரக்கை விரிவாக விற்பனை செய்யவும் முடிகிறது. 

            இந்த நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய பலன்கள், போட்டி முதலாளிகள் இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தாதவரைக்குத்தான் கிடைக்கும். போட்டி முதலாளிகள் சில காலம் சென்ற பிறகு இந்த நவீன இயந்திரத்தையோ அல்லது இதைவிட அதிநவீன இயந்திரத்தையோ பயன்படுத்தக்கூடிய நிலையே முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது ஒப்பீட்டு உபரிமதிப்பு குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைப்பது நின்று போகிறது

            உபரி மதிப்புக் கோட்பாடு முதலாளித்துவத்தின் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. முதலாளிக்கு மூலதனம் பாட்டாளியைச் சுரண்டுவதின் மூலம்தான் தொடர்ந்து கிடைக்கிறது. சுரண்டாமல் முதலாளியிடம் மூலதனம் சேகரமாகாது. தொழிலாளி சுரண்டலில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலாளியோடும் மூலதனத்தோடும் போராட வேண்டும், போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்

            இதன் மூலம் முதலாளிகளின் நலன்களும் தொழிலாளிகளின் நலன்களும் நேர் விரோதமானது என்பதை அறிகிறோம். அதனால், உழைப்பாளர்களின் விடுதலைத் தொழிலாளிகளின் நலன்களின் அடிப்படையில் அமைத்துக் கொண்டால் தான் வெற்றி கிட்டும். 

இதற்கு அடுத்து மார்க்ஸ், முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின்மீது முதலாளித்துவப் போட்டியின் விளைவு பற்றிப் பேசுகிறார்

8) முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின்மீது முதலாளித்துவப் போட்டியின் விளைவு. 

            முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியும், அதனை ஒட்டிய உற்பத்தி முறைகளும் மேம்பட்டுக் கொண்டே செல்கிறது. நவீன இயந்திரங்களினால் பெருவீத உற்பத்தியும் இதைத் தொடர்ந்து மேலும் பெருவீத அளவினாலான உற்பத்தியும் ஏற்படுகிறது. இவ்வாறு முதலாளித்துவ உற்பத்திமுறை,  உழைப்புச் சக்திகளை மேன்மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த விதியானது மூலனத்தை இன்னும் மேலே செல், இன்னும் மேலே செல் என்று கட்டாயப்படுத்துகிறது. 

            ஒரு முதலாளி என்னதான் நவீன இயந்திரத்தைப் புகுத்தினாலும், போட்டியின் காரணமாக மற்ற முதலாளிகளும் படிப்படியாக அத்தகைய இயந்திரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்கள். இவ்வாறு நிகழும் போது அனைத்து முதலாளிகளின் உற்பத்திச் செலவும் சமன் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்துப் பழையபடி போட்டி தொடங்குகிறது. இதன் காரணமாக உழைப்புப் பிரிவினைகளும், நவீன இயந்திரச் சாதனங்களின் பயன்பாடும், ஒப்பிட முடியாத அளவுக்கு மீண்டும் மீண்டும் பெருவீத உற்பத்தியை நோக்கியே செல்கிறது

            அதிக அளவிலான உழைப்புப் பிரிவினை ஒரு தொழிலாளி ஐந்து அல்லது பத்துப் பேருடைய வேலையைச் செய்யக் கூடியவராக்கிவிடுகிறது. தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டி ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்கிறது. இந்தப் போட்டியினால் ஒருவரைவிட மற்றொருவர் தன்னை மலிவான விலைக்கு விற்க வேண்டியதாகிறது

            மேலும், உழைப்புப் பிரிவினை அதிகரிக்கும் போது அதே அளவுக்கு உழைப்பு எளிதாகிறது. தொழிலாளர்களின் தனித் திறமை மதிப்பு இழந்து போகிறது. கடுமையான உடல் உழைப்போ, மூளை ஆற்றலோ தேவையில்லாது போவதுடன், சலிப்பூட்டும்படி ஒரேமாதிரியான உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கிறது. உழைப்பு எளிமையாக்கப்பட்டதனால் குழந்தைகளையும், பெண்களையும் வேலைக்கு நவீன முதலாளித்துவம் அமர்த்துகிறது

    சலிப்பூட்டும் வேலையால் தொழிலாளர்களிடம், உழைப்பதில் திருப்தியின்மையும், தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டியால் கூலி குறைந்தும் போகிறது

உற்பத்தித் திறனுள்ள மூலதனம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ, அந்த அளவுக்கு அது உழைப்புப் பிரிவினையையும் இயந்திரச் சாதனங்களின் பயன்பாட்டையும் அதிகமாக்குகிறது. உழைப்புப் பிரிவினையும் இயந்திரச் சாதனங்களின் பயன்பாடும் எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களிடையே போட்டி பெருகுகிறது, அந்தளவுக்கு அவர்களின் கூலி சுருங்குகிறது

            தொழிலாளிகள் மட்டுமல்ல, மேன்மேலும் பெருவீதத் தொழில் வளர்ந்து வருவதனால் சிறு முதலாளிகளும் பாதிக்கப்பட்டு, தொழிலாளி வர்க்கத்திடம் சேர்கின்றனர். அதனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடி வேலை தேடுபவர்களிடையேயான போட்டி அதிகரிக்கிறது. சிறு உற்பத்தியாளராய் இல்லாமல் பெருவீத உற்பத்தித் தொழிலதிபராக வேண்டும் என்பது வெற்றிக்கு முதல் நிபந்தனையாக உள்ளது. போட்டியின் விளைவாகச் சிறு உற்பத்தியாளர்கள் தாக்குபிடிக்க முடியாமல் மறைந்து போகின்றனர்

            பெருவீத உற்பத்தியினுடைய வளர்ச்சியின் விளைவாக வணிக நெருக்கடி உண்டாகிறது. அதாவது பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. நெருக்கடியினால் சரக்குகள் விற்காமல் சந்தையில் தேங்கிவிடுகிறது. இதில் இருந்து மீள்வதற்கு உற்பத்திச் சக்திகளின் ஒரு பகுதியை அழிப்பதின் மூலம் முதலாளித்துவம் தம்மைக் காத்துக் கொள்கிறது

பெருவீத உற்பத்தியினால் பெருகிவிட்ட சரக்குகளை விற்பதற்கு விரிந்த சந்தைகளுக்கான தேவைகள் பெருகப்பெறுக உலகச் சந்தையானது மேன்மேலும் சுருங்கிவிடுகிறது. மேலும் மூலதனமானது உழைப்பை அரித்துத் தின்று வாழ்வதோடு மட்டும் நிற்காமல், காட்டுமிராண்டியாக விளங்கும் ஓர் எஜமானனைப்போல, இந்த நெருக்கடிகளில் சிக்கிப் பலியாடுகளைப்போல் மந்தை மந்தையாக மடிந்துபோகும் தொழிலாளர்களாகிய தன் அடிமைகளின் சடலங்களையும், தன்னோடு சேர்த்துத் தன்னுடைய சவக்குழிக்கு இழுத்துச் செல்கிறது

மூலதனம் விரைவாய் வளருமாயின், தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டி அதிவிரைவாய் வளருகிறது, அதாவது தொழிலாளி வர்க்கத்தின் வேலை வாய்ப்புகளும் பிழைப்புச் சாதனங்களும் அதே அளவுக்கு விரைவாய் குறைகின்றன; இருந்தபோதிலும் மூலதனத்தின் விரைவான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும் சாதகமான நிலைமையாய் இருக்கின்றது

இதனை லெனின், நவீன இயந்திரங்களுக்கு அதிக மூலதனம் செலவிடப்படுவது, முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும், முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று கூறியுள்ளார். அதாவது உற்பத்திச் சக்திகளை வளர்க்காமல் முதலாளித்துவத்தால் வாழமுடியாது, ஆனால் அந்த வளர்ச்சியே முதலாளித்துவத்திற்கு முட்டுக்கட்டையாகவும், முட்டுக்கட்டை நீக்குவதன் மூலம் சோஷலிசமாக மாறுவதற்கு அடிப்படைக் காரணமாகவும் அது அமைகிறது

            இந்த அடிப்படைக் காரணத்தைக் காரியமாக்குவது அதாவது காரணத்தை விளைவாக ஆக்குவது தொழிலாளர்களின் கட்சியே ஆகும். புறநிலைகள் தாமே சமூக மாற்றத்தை-புரட்சியை நிகழ்த்தாது, புறநிலைமைகளைப் புரிந்து கொண்ட அகநிலைமைகளே போராட்டத்தின் மூலம் சமூக மாற்றத்தை-புரட்சியை ஏற்படுத்தும். புறநிலைமை அகநிலைமை ஆகியவற்றின் இணைவே புரட்சியைச் சாத்தியப்படுத்தும்

            மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல், முதலாளித்துவச் சமூகத்தில் இருந்து சோஷலிசச் சமூகத்திற்கு மாறுவதற்கான விஞ்ஞான வழிப்பட்ட அணுகுமுறையைத் தருகிறது. விஞ்ஞான வழியில் செயல்பட விரும்பும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல் அவசியமாகிறது. நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் சமூக மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்றால் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும்

            அரசியல் பொருளாதாரம் பயில்வோம் சமூக மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

 


No comments:

Post a Comment