இந்த நூலில் தான் மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டைப் பற்றி முதன்முறையாகப் பொதுவெளியில் விளக்கி உள்ளார். இதற்கு முன் உபரி மதிப்புக் கோட்பாட்டைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லாமல் சுருக்கமாக விளக்கியுள்ளார். ஆனால் இங்கேதான் உபரி மதிப்புக் கோட்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இந்த வகையில் இந்த நூல் ஒரு சிறப்பு பெற்ற நூலாக அமைந்துள்ளது.
நூறு பக்கத்துக்கும் குறைவாக உள்ள சிறு நூல் தான், ஆனால் இது “மூலதனம்” முதல் தொகுதியைப் படிப்பதற்கு நம்மைத் தயார்படுத்துகிறது. அதனால் இந்த நூலைக் கவனமாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பதினான்கு தலைப்புகளைக் கொண்ட சிறு நூல் என்றாலும் பல விஷயங்கள் இதில் பேசப்பட்டுள்ளது.
ஜான் வெஸ்டன் என்பவர் அகிலத்தில் பேசியதை முன்வைத்து அதற்குப் பதிலளிப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது.
தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு உகந்தவை என்ற நினைப்பில் ஜான் வெஸ்டன் ஒரு கருத்தை முன்வைக்கிறார். கூலி உயர்வினால் தொழிலாளர்களின் நிலைமையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படாது, அதனால் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீமை விளைவிப்பவை என்பதே அவரின் கருத்து. இதனை மார்க்ஸ் இந்நூலில் மறுத்துரைக்கிறார்.
இந்த அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்ஸ் அரங்கத்தைப் பார்த்துக் கூறியதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைவர்கள், வெஸ்டன் கூறிய பிரச்சினை பற்றிய ஒரு திண்ணமான வரையறுக்கப்பட்ட கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, சபையில் உள்ளவர்களின் பொறுமையை வெகுவாகச் சோதிப்பதாக இந்த உரை இருக்கும் என்றாலும் இவ்விஷயத்தைப் பற்றி முழுமையாக ஆராய்வது தம் கடமை எனக் கருதுவதாக மார்க்ஸ் தெரிவிக்கிறார்.
ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல் அவசியமானது, எனவே நமது பொறுமையைச் சோதித்தாலும் கடும்முயற்சி செய்து கற்க வேண்டியது கடமையாகிறது. இது ஒரு தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மை அரசியல் பொருளாதாரத்திலும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்திலும் தான் அடங்கி இருக்கிறது. அதனால் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற முயற்சி அனைத்தையும் எடுத்தாக வேண்டும்.
(1) உற்பத்தியும் கூலியும் என்ற விஷயத்தைப் பற்றி வெஸ்டன் என்ன பேசியுள்ளார் என்பதை முதலில் பார்ப்போம். வெஸ்டனின் கூற்று இரு ஆதாரங்களில் அமைந்துள்ளது. முதலாவது, தேசிய உற்பத்தியின் ஒட்டுமொத்தம் நிலையான ஒன்றாகும், அதாவது மாறாத அளவைக் கொண்டது. இரண்டாவதாக, உண்மையான கூலியின் அளவானது அவர்களால் வாங்கக்கூடிய பொருட்களின் அளவுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது.
முதல் கூற்று தவறானது என்கிறார் மார்க்ஸ். ஒவ்வொரு ஆண்டும்; மதிப்பும், உற்பத்தியின் மொத்த அளவும் பெருகிக் கொண்டே இருக்கின்றன; தேசிய உழைப்பின் உற்பத்தித் திறன்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன என்பது கண்கூடானது. தேசிய உற்பத்தியின் மொத்த அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. மக்கள் பெருக்கத்தைக் கணக்கில் கொள்ளாவிடினும், மூலதனத் திரட்டலும், உழைப்பின் உற்பத்தித் திறனும் இடைவிடாமல் மாற்றம் பெற்று வருகின்றது. பொதுவான கூலி விகிதம் உயர்ந்தாலும், அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும், கூலி உயர்வால் தானாகவே உற்பத்தியின் மொத்தத்தில் எந்த அளவு மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை. கூலி உயர்வு ஏற்படுவதற்கு முன் தேசிய மொத்த உற்பத்தி மாறக்கூடியதாகவே இருந்தது, கூலி உயர்வு ஏற்பட்ட பின்னரும்கூட, மாறக்கூடியதாகவே இருக்கும்.
தேசிய உற்பத்தியின் மொத்தம் நிலையானது என்று வெஸ்டன் கூறியதைச் சரி என்று வைத்துக் கொண்டால் அது தர்க்கத்திற்கு முரணாக இருக்கிறது.
எட்டு என்கிற எண்ணினைக் கொண்டு ஓர் உதாரணத்தின் மூலம் மார்க்ஸ் விளக்குகிறார்.
உதாரணமாக லாபமும் கூலியும் எட்டு என்கிற எண்ணைக் கொண்டு பார்த்தால் எட்டு என்பது அறுதி வரம்பானது, அதாவது கூலியும் லாபமும் இணைந்து எட்டு எண்ணிக்கையின் வரம்பைத் தாண்டாது அதன் பகுதிகள் தம் ஒப்பீட்டு எல்லைகளை மாற்றிக் கொள்வதனால் அறுதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. லாபம் ஆறு என்ற அளவிலும் கூலி இரண்டு என்ற அளவிலும் ஒப்பீட்டு எல்லைகளாகக் கொள்ளலாம் அதே சமயம். கூலியை ஆறாக உயர்த்தியும், லாபத்தை இரண்டாகக் குறைத்தும் கொள்ளலாம். இதனால் எட்டு என்கிற அறுதி வரம்பு எந்த வகையிலும் மாறவில்லை. அதனால் நிலைத்த அளவிலான உற்பத்தி என்பது எந்த வகையிலும், கூலியின் அளவு நிலையானதுதான் என்பதை நிரூபிக்கவில்லை. இதனை வெஸ்டன் ஏற்காமல் போவதற்குக் காரணம், அவர் தர்க்கவியலை கைவிட்டு, வலிந்து உரைப்பதே ஆகும்.
அப்படியே வலிந்துரைப்பது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் கூட, அது இரு பக்கங்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். ஆனால் வெஸ்டன் ஒரு பக்கத்துக்கு மட்டுமே அதை வலியுறுத்துகிறார். கூலியின் மொத்த அளவு நிலையான அளவு எனில், அதனைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது. இது தான் தர்க்கத்திற்குப் பொருத்தமானது. ஆனால் முதலாளிகள் கூலியைக் குறைப்பதை மட்டும் வெஸ்டன் ஏற்கிறார்.
தொழிற்சங்கம் மூலம் தொழிலாளர்கள் போராடிக் கூலி உயர்வு பெறுவது முட்டாள்தனமானது என்கிற வெஸ்டனின் கூற்று எந்தளவுக்கு முட்டாள்தனமானதோ, முதலாளிகள் கூலியைக் குறைப்பது சரி என்று ஒப்பு கொண்டால் அதுவும் அதே அளவுக்கு முட்டாள்தனமானதே என்கிறார் மார்க்ஸ். முதலாளிகள் கூலியை வலிந்து குறைக்க முனைவதை வெஸ்டன் அறிந்துதானே இருக்கிறார். கூலியை முதலாளி குறைப்பது தவறில்லை என்றால், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைந்து கூலி உயர்வுக்குப் போராடுவது தவறில்லை என்பதே தர்க்கத்துக்குச் சரியானது ஆகும்.
ஆகவே, தொழிலாளர்கள் சங்கமாக இணைந்து கூலி உயர்வுக்காகப் போராடுவது சரியான செயலே ஆகும். ஏனென்றால் கூலிக் குறைப்புக்கு எதிரான நடவடிக்கையே கூலி உயர்வுக்கான நடவடிக்கை ஆகும். இதை வெஸ்டன் மறுத்தார் என்றால், கூலியின் அளவு நிலைத்தது என்கிற அவரது கூற்றை அவரே விட்டுவிட வேண்டியதாகிறது.
எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் தொழிலாளியிடம் சுரண்ட வேண்டும் என்பதே முதலாளியின் விருப்பமாக இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது அவருடைய விருப்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதல்ல, அவருடைய அதிகாரம், அந்த அதிகாரத்தின் வரம்புகள் மற்றும் அந்த வரம்புகளின் தன்மை ஆகியவற்றை விசாரிப்பதாகும்.
இந்த முதலாளித்துவக் அமைப்பை ஆராய்ந்து, முதலாளித்துவ கூலி அமைப்பு முறையை விளக்கி, இறுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் சக்தியைக் கொண்டு அதனைத் தூக்கி எறிவதற்கான வழியை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். அதனால் முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான அரசியலை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்டுகள், மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
அடுத்து, (2) உற்பத்தி, கூலி, லாபம் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
வெஸ்டனின் வாதத்தை மார்க்ஸ் தொகுத்துத் தருகிறார். தொழிலாளி வர்க்கம் போராட்டத்தின் மூலம் முதலாளியைக் கட்டாயப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 800 ரூபாய்க்குப் பதிலாக 1,000 ரூபாய் பெறுகிறார்கள் என்றால், முதலாளியானவர், இப்போது 1,000 ரூபாய் மதிப்புள்ள சரக்குக்குப் பதிலாக 800 ரூபாய் பெறுமானம் உள்ள சரக்கையே தருவார். இதனால் தொழிலாளிகள் கூலி உயர்வுக்கு முன், 800 ரூபாய் பெறுமானம் உள்ள சரக்கு இப்போது 1,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிவரும். ஏனென்றால், கூலியின் அளவு நிலையானது. இதுதான் வெஸ்டனின் அடிப்படைக் கருத்து.
கூலித் தொகையின் வரம்பானது, முதலாளியின் விருப்பத்தையோ, தொழிலாளியின் விருப்பத்தையோ சாராத ஒரு பொருளாதார விதி என்று வெஸ்டன் கூறுவாரானால், அவர் செய்ய வேண்டியது, இந்த விதியை முதலில் நிரூபிப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், முதலாளியானவர் தொழிலாளியின் கூலியைக் குறைக்க முடிகிறது என்று வெஸ்டன் ஒப்பு கொள்வதால் கூலியின் நிலைத்த தன்மை என்று ஒன்றும் இல்லை என்பது உறுதியாகிறது.
கூலித் தொகையின் வரம்பு முதலாளியின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றப்படலாம் என்றால் முதலாளிக்கு எதிராகவும் கூலித் தொகையை உயர்த்தி மாற்றப்படலாம். ஆக, மொத்தத்தில் கூலிப் போராட்டம் சரியானது என்கிறார் மார்க்ஸ்.
அடுத்து, (3) கூலியும், நாணயமும் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார். இது குறித்து வெஸ்டன் முதலில் கூறியதையே வலிந்துரைத்து புதிய வடிவத்தில் தெரிவிக்கிறார்.
வெஸ்டன் கூறுவது இதுதான்:- கூலி உயர்வு ஏற்படுவதனால், தொழிலாளிக்குக் கொடுப்பதற்கு நாணயங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் நாணயங்கள் மாறா அளவுடையனவாக இருக்கும் போது எந்த நாணயங்களைக் கொண்டு தொழிலாளிக்குக் கொடுக்க முடியும்?
வெஸ்டன் கூறுவது தவறானது என்கிறார் மார்க்ஸ். அனைத்துப் பரிவர்த்தனையும் பணத்தைக் கொண்டு நடைபெறுவதில்லை என்பதே உண்மை ஆகும். பணம் எதுவும் கொடுக்காமல், மாற்று ஆவண உண்டியல்கள், காசோலைகள், பற்று-வரவு கணக்குகள், வங்கிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் பணக்கொடுப்புக்கு ஈடாக மாற்றப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் வெஸ்டன் கூறுகிற மாறாத நிலையான நாணயம் என்னும் கோட்பாடு மிகவும் தவறானது என்பது தெரிகிறது என்று விளக்குகிறார் மார்க்ஸ்.
அடுத்து, (4) வரத்தும் தேவையும் (Supply and Demand) என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
மார்க்ஸ் ஒரு லத்தீன் பழமொழியின் மூலம் வெஸ்டனின் போக்கில் காணப்படும் வறட்டுக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பழமொழி என்னவென்றால், “சொன்னதைச் சொல்வதே ஆராய்ச்சியின் தாய்” என்பதாகும். நிருபிக்க முடியாததை, சொல்லிக் கொண்டிருந்தாலேயே அது சரியானது என்று கருதப்படும் என்று வெஸ்டன் அப்பாவியாக நினைக்கிறார்.
கூலியின் அளவு அதிகம் அல்லது குறைவு என்று சொல்ல வேண்டுமானால், கூலிகளின் பரிமாணங்களை அளவிடக்கூடிய ஒரு திட்டவட்டமான அளவுடன் தான் ஒப்பிட முடியும். ஆனால் வெஸ்டன் திட்டவட்டமான அளவுகளைக் குறிப்பிடாமல் கூலியைப் பற்றி அதிகம், குறைவு என்று பொதுப்பட பேசுவதைத் திட்டவட்டமான பொருளில் பேசுவதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கூலியாகக் கொடுப்பது ஏன் என்பதை அவரால் விளக்கிச் சொல்ல முடியாது. “இது வரத்து-தேவை (Supply and Demand) விதியினால் தீர்மானிக்கப்படுகின்றன” என்று அவர் பதில் அளிக்கிறார் என்றால், வரத்தும் – தேவையும் எந்த விதியினால் தீர்மானிக்கப்படுகின்றன என்று கேட்டால் வெஸ்டன் திணறிப் போவார் என்பதில் சந்தேகம் இல்லை.
உழைப்பின் மதிப்பு அல்லது வேறு எந்த வகையான சரக்கின் மதிப்பும் வரத்து-தேவை என்பவற்றால் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினால் அது முற்றிலும் தவறு என்கிறார் மார்க்ஸ். உண்மையில் வரத்தும் தேவையும் சந்தை விலைகளின் தற்காலிகமான ஊசலாட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றன என்பது தான் உண்மை. அது வேறு எதையும் செய்திடவில்லை.
ஒரு சரக்கின் சந்தை விலை அதன் மதிப்புக்குக் மேலே ஏன் உயர்கிறது, அதன் மதிப்புக்கு கீழே ஏன் குறைகிறது என்பதை வேண்டுமானால் வரத்து-தேவைக் கோட்பாடு விளக்கலாம். ஆனால் ஒருபோதும் மதிப்பை அதனால் விளக்க முடியாது என்பதே உண்மை ஆகும். வரத்தும் தேவையும் ஒன்றையொன்று சமன் செய்து கொள்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அந்நிலையில் இரண்டு எதிர்ச் சக்திகளும் சமமாகிவிடும் அதே நேரத்தில் அவை ஒன்றையொன்று முடக்கிப் போட்டுவிடும். இதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு வரத்து-தேவைக் கோட்பாடு பயனற்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து, (5) கூலியும் விலைகளும் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
“சரக்குகளின் விலைகள் கூலியால் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ஒழுங்குபடுத்தப்படுகின்றன” என்று வெஸ்டன் வெளிப்படையாகக் கூறவில்லை. அதே நேரத்தில் லாபமும் வாடகையும்கூடச் சரக்கினது விலையின் ஒரு பகுதிகள்தான் என்று கூறுகிறார். ஏனென்றால் தொழிலாளியின் கூலி மட்டுமல்லாது, முதலாளியின் லாபமும் நிலச்சொந்தக்காரனின் வாடகையும்கூடச் சரக்குகளின் விலையில் இருந்துதான் கொடுக்கப்பட வேண்டும் என்று வெஸ்டன் கூறுகிறார்.
வெஸ்டன் கூறியதன் அடிப்படையில் விலைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பார்ப்போம்.
முதலாவதாகக் கூலியாலும், பிறகு முதலாளியின் சார்பாக ஒரு கூடுதல் சதவீதமும், நிலவுடைமையாளரின் சார்பாக மற்றொரு கூடுதல் சதவீதமும் விலையோடு சேர்ந்து கொள்கின்றன. ஒரு சரக்கின் உற்பத்தியில் செலுத்தப்பட்ட தொழிலாளியின் கூலி பத்து என்று வைத்துக் கொண்டால், லாப வீதம் 100 சதவீதம் என்றால், முதலாளி கொடுத்த கூலியுடன் மேலும் ஒரு பத்தினைச் சேர்த்துக் கொள்வார். அடுத்து நில வாடகை வீதம் 100 சதவீதம் என்றால், கூலியோடு மேலும் ஒரு பத்தைச் சேர்த்துக் கொள்வார். எனவே சரக்கின் மொத்த விலை முப்பதாக இருக்கும்.
இவ்வாறாகக் கூலிதான் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகப் பழைய அரசியல் பொருளாதார எழுத்தாளர்கள் கருதினர். ஆனால் இதனை அவர்களால் ஒரு பொருளாதார விதியாக வகுத்துக் கொடுக்க முடியவில்லை. ஆனால், மார்க்ஸ் இதைத் தெளிவு படுத்துகிறார்.
பரிவர்த்தனையின் மதிப்பே விலை என்று கூறப்படுகிறது. விலை என்பது பணத்தொகையில் தெரிவிக்கப்படுகின்ற பரிவர்த்தனை மதிப்பாகும். மதிப்பைப் பற்றி பேசும்போதெல்லாம் எப்போதும் பரிவர்த்தனை மதிப்பைப் பற்றியே பேசுகிறேன் என்று நேரடியாக இங்கே மார்க்ஸ் தெரிவித்துள்ளார். மேலே கூறப்பட்ட கருத்தின்படி, “சரக்குகளின் மதிப்பு உழைப்பின் மதிப்பினால் தீர்மானிக்கப்படுகிறது” எனலாம். இதையே வேறுவிதமாகவும் சொல்லலாம், “உழைப்பின் மதிப்பே, மதிப்பின் பொதுவான அளவீடு ஆகும்.”
உழைப்பின் மதிப்பே சரக்கின் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்றால், உழைப்பின் மதிப்பு எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? என்ற கேள்வி எழுகிறது.
“கூலி சரக்குகளின் விலையைத் தீர்மானிக்கிறது” என்கிற வறட்டுக் கோட்பாட்டின் அருவமான சொற்களில் இருந்து கிடைப்பது என்னவென்றால், “மதிப்பே மதிப்பைத் தீர்மானிக்கிறது.” இத்தகைய வெற்று சொல்லடுக்கு மதிப்பைப் பற்றி உண்மையில் எதையும் கூறவில்லை என்கிற உண்மையையே வெளிப்படுத்துகிறது.
“கூலிதான் விலைகளைத் தீர்மானிக்கிறது” என்கிற பழைய, பெருவழக்கான, புழுத்துப்போன, தவறான வாதத்தை 1817ல் தகர்த்திட்ட மிகப்பெரும் பெருமை ரிக்கார்டோவைச் சாரும். ஆடம் ஸ்மித் இந்தத் தவறான வாதத்தைத் தம் ஆய்வுகளின் உண்மையான அறிவியல் வழிப்பட்ட பகுதிகளில் முறியடிக்கிறார். இருந்தாலும் அதைச் சாதாரண மக்களுக்கு உரிய, கொச்சையான அத்தியாயங்களில் மீண்டும் மறு ஆக்கம் செய்திருந்தார் என்று மார்க்ஸ் கூறுகிறார்.
அடுத்து, (6) மதிப்பும் உழைப்பும் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
பிரச்சினையின் உண்மையான போக்கைப் பற்றி விளக்க வேண்டிய கட்டத்துக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டு மதிப்பும் உழைப்பும் என்பது பற்றி மார்க்ஸ் இங்கே விளக்கியுள்ளார். பிரச்சினையின் அடிப்படையைக் கேள்வியாக மார்க்ஸ் வைக்கிறார்.
ஒரு சரக்கின் மதிப்பு என்ன? அது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
இங்கே கேள்வி நேரடியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சரியான விளக்கம் கொடுப்பதின் மூலம் இதுவரை ஏற்பட்ட குழப்பங்கள் நீக்கப்படும். அதனால் இனிவரும் பகுதிகளைச் சற்றுக் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு சரக்கின் மதிப்பு என்பது முற்றிலும் ஒப்பீட்டு அளவிலானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சரக்கை மற்ற எல்லாச் சரக்குகளுடனான அதன் தொடர்புகளில் வைத்துப் பரிசீலிக்காமல் மதிப்பு அளவை முடிவு செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. உண்மையில் மதிப்பைப் பற்றி பேசும் போது, அச்சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் பற்றி தான் பேசுகிறோம். ஒரு சரக்கை மற்ற சரக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் விகிதாச்சாரத்தின் அளவுகளையே மனதில் வைத்துப் பேசுகிறோம்.
இதற்கு அடுத்து மற்றொரு கேள்வி எழுகிறது.
“சரக்குகள் ஒன்றுடன் ஒன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் போது விகிதாச்சாரங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?”
ஆயிரம் கிலோ கோதுமை, ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இரும்புடன் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதாவது ஆயிரம் கிலோ கோதுமையின் மதிப்பு அரை டன் அளவு இரும்பின் மதிப்பால் அளவிடப்படுகிறது என்று கணக்கிடுவோம். கோதுமையின் மதிப்பும் அதற்குச் சமமான இருப்பின் மதிப்பும் மூன்றாவது ஒரு சரக்கின் குறிப்பிட்ட அளவுக்குச் சமம். அதாவது கோதுமையும், இரும்பும் அல்லாத மூன்றாவது சரக்கிற்குச் சமமாக்க முடிகிறது.
அனைத்துச் சரக்குகளின் மதிப்புகளையும் அனைத்துக்கும் பொதுவான ஒன்றாகச் சுருக்க வேண்டும். அந்தப் பொதுவான அளவீட்டு மதிப்பைச் சரக்குகள் தமக்குள்ளே எந்த விகிதாச்சாரங்களில் கொண்டுள்ளதோ, அந்த அடிப்படையில் தான் அவற்றைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டும்.
சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகள் அப்பொருட்களின் சமூகச் செயல்பாடாக மட்டுமே இருக்கின்றன. சரக்குகளின் இயல்பான பண்புகளுக்கும் அவற்றின் பரிவர்த்தனை மதிப்புகளுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை.
அடுத்துக் கேட்க வேண்டிய கேள்வி, அனைத்துச் சரக்குகளிலும் அடங்கியுள்ள பொதுவான சமூக உள்ளடக்கக் கூறு என்ன?
அதுதான் உழைப்பு.
ஒரு சரக்கை உற்பத்தி செய்ய, ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பு, அதன் மீது செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே மார்க்ஸ் உழைப்பு என்பதை, சமூக உழைப்பு என்று கூறியுள்ளார்.
தனது சொந்த உடனடிப் பயன்பாட்டிற்கும், தானே நுகர்வதற்கும் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் மனிதன் படைப்பது. ஒர் உற்பத்திப் பொருளே அன்றிச் சரக்கு அல்ல. சொந்தத் தேவையை நிறைவு செய்து கொள்ளும் ஒருவன், உற்பத்தியாளன் என்கிற வகையில் அவனுக்குச் சமூகத்துடன் எவ்வித உறவும் இல்லை.
ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு ஒருவன் எதாவது ஒரு சமூகத் தேவையை நிறைவு செய்யக்கூடிய பொருளை உற்பத்தி செய்ய வேண்டும். அதுமட்டும் அல்லாது, சமூகம் தனக்காக ஈடுபடுத்தும் மொத்த உழைப்பில் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக அவனது உழைப்பு இருக்க வேண்டும். இத்துடன் அவனது உழைப்பு சமூகத்திற்குள் நிலவும் உழைப்புப் பிரிவினைக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
இறுகிய உருப்பெற்ற சமூக உழைப்பு என்னும் பிரத்தியேகமான ஒற்றைப் பண்பு கொண்டதாக இருந்தால் மட்டுமே, ஒரு சரக்கு மதிப்பாகக் கருத முடியும். கூடுதலாக அல்லது குறைவாக உழைப்பைப் பெற்றிருப்பதைப் பொறுத்துத்தான் சரக்குகளை வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
உழைப்பின் அளவுகளை எவ்வாறு அளப்பது?
உழைப்பு நீடிக்கும் நேரத்தைக் கொண்டு அளக்கலாம், அவ்வாறு அளக்கும் போது, அனைத்து வகையான உழைப்பும் சராசரி உழைப்பாக அல்லது சாதாரண உழைப்பாக மாற்றப்பட்டு, அதனையே அளவீட்டு அலகாகக் கொள்ள வேண்டும்.
இறுதியில் நாம் வந்தடைந்த முடிவு என்னவென்றால், ஒரு சரக்கானது சமூக உழைப்பின் இறுகிய வடிவம் என்பதனால் அச்சரக்கு ஒரு மதிப்பைப் பெற்றுள்ளது. சரக்குகளின் மதிப்புகள் அந்தந்தச் சரக்குகளில் செலுத்தப்பட்ட உழைப்பின் அளவினால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரே அளவு நேரத்தைக் கொண்ட உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் ஒப்புநிலை அளவுகள் சமமாக இருக்கின்றது.
இந்த நிலையில், சரக்குகளின் மதிப்புகளைக் கூலியைக் கொண்டு தீர்மானிப்பதற்கும், அவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பின் ஒப்பீட்டு அளவுகளைக் கொண்டு தீர்மானிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களின் கூலியானது உற்பத்தி சரக்கின் மதிப்புகளினால் வரையறுக்கப்படும், ஆனால் அவர்களுடைய உற்பத்திச் சரக்குகளின் மதிப்புகளோ கூலிகளினால் வரையறுக்கப்படவில்லை.
ஒரு சரக்கின் மதிப்பு அதன் உற்பத்தியில் செலுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு கூறும் போது ஒரு சந்தேகம் எழும். ஒரு சோம்பேறி தொழிலாளியோ அல்லது திறமை குறைந்த தொழிலாளியோ உற்பத்தி செய்யும் சரக்கு, கண்டிப்பாகத் திறமை மிகுந்த தொழிலாளியின் உழைப்பு நேரத்தைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அப்படி என்றால் சோம்பேறி குறிப்பிட்ட சரக்கை உற்பத்தி செய்ய அதிகம் நேரத்தை எடுத்துக் கொள்வதால், இவரது சரக்கு அதிக மதிப்பைப் பெறுமா? “இல்லை” என்பதே இதற்குப் பதிலாகும்.
பழைய கைத்தறியோடு போட்டி போடுவதற்கு, இயந்திரத் தறி வந்தபோது, முன்பு தேவைப்பட்ட நேரத்தைவிட மிகவும் குறைவான நேரத்தில் இயந்திரத்தால் நெய்யப்பட்டது. முன்பு ஒன்பது மணிநேரத்தில் உழைத்த, பரிதாபத்துக்கு உரிய கைத்தறி நெசவாளி, இயந்திரம் வந்த பிறகு பதினெட்டு மணி நேரம் உழைக்கிறார். இருந்தாலும், பதினெட்டு மணி நேர உழைப்பில் உற்பத்தியான பொருள் இப்போது சமூக முறையில் அவசியமான பத்து மணி நேர உழைப்புக்கு மட்டுமே சமமாக இருக்கிறது. அதாவது பதினெட்டு மணி நேரம் உழைத்தாலும் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமான பத்து மணி நேரத்திற்கு உரிய மதிப்பு தான் கிடைத்துள்ளது. ஏன் என்றால் சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டே சரக்கின் மதிப்பு அளவிடப்படுகிறது.
பெருவீத உற்பத்தியும், மூலதனத்தின் குவிப்பும், உழைப்பின் சேர்க்கையும், உழைப்புப் பிரிவினை, இயந்திரச் சாதனம், மேம்பட்ட உற்பத்தி முறைகள், வேதியியல், இயற்கைச் சக்திகளின் பயன்பாடு, தகவல்தொடர்பு, போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் நேரத்தையும் இடைவெளியையும் குறைத்தல் ஆகியவற்றால் உழைப்பின் சமூகத்திறன்கள் அதிகரிக்கின்றன. இத்தகைய உழைப்பின் உற்பத்தி திறன்களின் அதிகரிப்பால், ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்திப் பொருட்களில் குறைவான உழைப்பே செலுத்தப்படுகிறது. எனவே இப்பொருட்களின் மதிப்பும் குறைவாகிறது. உழைப்பின் உற்பத்தித் திறன்கள் குறைவாக இருந்தால் உற்பத்திப் பொருட்களில் அதிகமான உழைப்பு செலவழிக்கப்படுகிறது. அதனால் அதன் மதிப்பு கூடுகிறது. எனவே இதனை ஒரு பொது விதியாக வரையறுக்கலாம்.
இதுவரை உழைப்பின் அளவு எவ்வாறு அளக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம்.
சரக்குகளின் மதிப்புகள் அவற்றின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் நேர அளவுக்கு நேர் விகிதத்தில் இருக்கும். ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தித் திறன்களுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
இதுவரை மதிப்புப் பற்றி பார்த்தோம். அடுத்து விலை என்பது பற்றி பார்ப்போம்.
தனியாக எடுத்துக் கொண்டால் விலை என்பது, மதிப்பின் பணக்குறியீடு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இயற்கை விலைகளுக்கும் சந்தை விலைகளுக்கும் இடையே உள்ள உறவு என்ன? தனித்தனியான உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில் உற்பத்தி நிலைமைகள் வெவ்வேறாக வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஒரே விதமான சரக்குகள் அனைத்தின் சந்தை விலைகள் ஒன்றாகவே இருக்கும். இந்தச் சந்தை விலைகள் ஒரு குறிப்பிட்ட சரக்கை ஒரு குறிப்பிட்ட அளவில் சந்தைக்கு வழங்குவதற்கு, அவசியமான சமூக உழைப்பின் சராசரி அளைவைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. மறுபுறத்தில், மதிப்பு அதாவது இயற்கை விலைக்கு மாறாகச் சில நேரத்தில் விலைகள் உயர்வதும் தாழ்வதும் வரத்து-தேவை ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துள்ளது. மதிப்பில் இருந்து சந்தை விலைகளின் விலகல்கள் தொடர்ந்து நிலைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
வரத்தும் தேவையும் ஒன்றையொன்று சமன்படுத்திக் கொண்டால், சரக்குகளின் சந்தை விலைகள் அவற்றின் இயற்கை விலைகளோடு ஒன்றிப்போகும். அதாவது அந்தந்தச் சரக்குகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சராசரி சமூக உழைப்பின் அளவுகளினால் முறையே நிர்ணயிக்கப்படுகின்ற அவற்றின் மதிப்போடு ஒன்றிப் போகும்.
அதே நேரத்தில், வரத்தும் தேவையும் இடையறாது ஒன்றையொன்று சமன்செய்து கொள்ளும் போக்காய் இருக்க வேண்டும். வரத்தும் தேவையும் ஓர் ஊசலாட்டத்தை மற்றொரு வீழ்ச்சியின் மூலம், ஒரு வீழ்ச்சியை மற்றோர் உயர்ச்சியின் மூலம் மட்டுமே ஈடுசெய்து தம்மை அவ்வாறு சமன்செய்து கொள்கின்றன என்பதே உண்மை ஆகும்.
அனைத்து வகையான சரக்குகளும் சராசரியாக, அவற்றின் மதிப்புகளுக்கே அதாவது இயற்கை விலைகளுக்கே விற்கப்படுகின்றன.
லாபங்களின் பொதுவான தன்மையை விளக்குவதற்கு ஒரு தேற்றத்தில் இருந்து தொடங்க வேண்டும். சராசரியாக, சரக்குகள் அவற்றின் உண்மையான மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன. அவற்றில் செலுத்தப்பட்ட உழைப்பின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப விற்பதன் மூலம்தான் லாபங்கள் பெறப்படுகின்றன.
முதல் பார்வைக்கு இது முரணாகத் தெரியலாம், சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்கிற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு முரணாகத் தான் முதலில் தோன்றியிருக்கும். அப்படித்தான் லாபம் பற்றிய இந்தத் தோற்றமும் முதல் பார்வைக்கு முரணாகத்தான் தெரியும். பொருட்களின் மாயமான தோற்றங்களை மட்டும் பற்றிக் கொள்ளும் அன்றாட அனுபவங்களை வைத்து முடிவெடுத்தால், விஞ்ஞான உண்மைகள் எப்போதும் முரணுரையாகவே தெரியும்.
அடுத்து, (7) உழைப்புச் சக்தி என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
இதுவரை மார்க்ஸ், அனைத்துச் சரக்கின் பொதுத் தன்மையைப் பற்றி விளக்கினார். அடுத்து உழைப்பு என்கிற பிரத்யேகமான மதிப்பினை விளக்குகிறார். புதிதாக இதைப் படிப்பவர்களுக்கு முரணாகவும் திகைப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் மார்க்ஸ் விளக்குவதில் மிகுந்த அளவு கவனத்தைச் செலுத்த வேண்டும்.
உழைப்பாளியானவர் அன்றாடம் தமது உழைப்பை விற்கிறார், ஆகையினால் உழைப்புக்கு ஒரு விலை இருக்கிறது, ஒரு சரக்கின் விலை என்பது அதன் மதிப்பின் பண வடிவம் என்பது தெரிந்த ஒன்றே, ஆகவே, உழைப்புக்கும் அதன் மதிப்பு என்பது போன்ற ஒன்று நிச்சயமாக இதில் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம். ஆனால் இந்தச் சொல்லுக்குப் பொதுவாக வழக்கில் உள்ள பொருளின்படி உழைப்பின் மதிப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. இருப்பது, ஒரு சரக்கில் உருப்பெற்றுள்ள அத்தியாவசியமான உழைப்பின் அளவே அச்சரக்கின் மதிப்பை உருவாக்குகிறது. இதை முன்பு பார்த்தோம்.
இப்போது, மதிப்பு பற்றிய இதே கோட்பாட்டினைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
பத்து மணி நேர வேலை நாளின் மதிப்பை எப்படி வரையறுத்துக் கூறமுடியும்? அந்த நாளில் எவ்வளவு உழைப்பு அடங்கி இருக்கிறது?
பத்து மணி நேர நாளின் மதிப்பு, பத்து மணி நேர உழைப்புக்குச் சமம் அல்லது அதில் அடங்கி உள்ள உழைப்பின் அளவுக்குச் சமம் என்று பதிலளிப்பது, கூறியதுகூறல் மட்டும் அல்லப் பொருளற்ற கூற்றும் ஆகும். உழைப்பின் மதிப்பு என்ற கூற்றின் உண்மையான ஆனால் மறைந்துள்ள பொருளைக் கண்டு அறிந்துவிட்டால், பகுத்தறிவுக்குப் பொருந்தாச் சாத்தியமற்றது போல் தோன்றும் மதிப்பின் பயன்பாட்டையும் உறுதியாக விளக்க முடியும்.
தொழிலாளி நேரடியாக விற்பது தனது உழைப்பை அல்ல, உழைக்கும் சக்தியைத் தான். குறிப்பிட்ட காலத்திற்குத் தமது உழைப்புச் சக்தியை முதலாளியிடம் ஒப்படைக்கிறார். அடிமை உற்பத்தி முறையில் தொழிலாளி தனது உழைக்கும் சக்தியை வரையறையற்ற நேரத்துக்கு விற்கிறார். அதனால் அடிமை தனது உழைக்கும் சக்தி தனது வாழ்நாள் முழுவதும் விற்கப்படுவதனால், அடிமையானவர் தன்னை வேலைக்கு அமர்த்துபவரிடம் ஆயுள்கால அடிமையாக இருக்கிறார். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் பாட்டாளி தமது உழைப்புச் சக்தியைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே முதலாளியிடம் விற்கிறார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு மற்ற எல்லாச் சரக்குகளையும் போலவே உழைப்பின் மதிப்பையும் நிர்ணயிக்க முடியும். அப்படி நிர்ணயிப்பதற்கு அதற்கான வரலாற்று கட்டத்தைச் சமூகம் அடைந்திருக்க வேண்டும்.
முதலாளித்துவம் தோன்றுவதற்கான சூழ்நிலைமையே அந்தக் கட்டம்.
சமூகத்தில், ஒரு புறம் உழைப்பாளர்களை வாங்கி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் ஒன்றைக் காண்கிறோம். அந்தக் கூட்டத்திடம் நிலம், இயந்திரம், கச்சாப் பொருள், உயிர் வாழ்வதற்குத் தேவைப்படுகிற சாதனங்கள் ஆகிய உற்பத்திப் பொருட்கள் உடைமையாக இருக்கும். இதற்கு மறுபுறம் உழைக்கும் சக்தியையும், பாடுபடும் கைகளையும், மூளையையும் தவிர விற்பதற்கு வேறு எதுவும் இல்லாத உழைப்பை விற்கும் கூட்டம் ஒன்றைக் காண்கிறோம். முதல் கூட்டம் லாபம் ஈட்டித் தம்மை வளப்படுத்திக் கொள்ளும் பொருட்டு உழைப்பைத் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் கூட்டம் தமது வயிற்றுப் பிழைப்புக்காகத் தொடர்ந்து தமது உழைப்பை விற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்த விசித்திர வேறுபாடு எவ்வாறு தோன்றியது?
இதற்குப் பொருளாதார அறிஞர்கள் ஆதித் திரட்சி என்று கூறப்பட்டதை அறிய வேண்டும். ஆனால் இதனை ஆதிப் பறிமுதல் என்றே அழைக்க வேண்டும் என்கிறார் மார்க்ஸ். ஆதித் திரட்சி என்று சொல்லப்படுகின்ற இது, உழைக்கும் மனிதனுக்கும் அவனுடைய உழைப்புச் சாதனங்களுக்கும் இடையே, முன்னர் நிலவி வந்துள்ள ஒருங்கிணைப்பைச் சிதைத்த வரலாற்று இயக்கப் போக்குகளின் ஒரு வரிசை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இது பற்றிய ஆய்வு தற்போதைய கருப்பொருளின் வரம்புக்கு அப்பாற்பட்டதாகும் என்கிறார் மார்க்ஸ்.
உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது என்ன? என்ற மிகவும் முக்கியமான கேள்விக்குப் பதிலை மார்க்ஸ் அடுத்து அளிக்கிறார்.
மற்ற ஒவ்வொரு சரக்கின் மதிப்பைப் போலவே உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பானது அந்த மனிதனுடைய வாழும் தனித்தன்மையில் தான் நிலவுகிறது. ஒரு மனிதன் தான் வாழ்ந்திடவும், தன் வாழ்க்கையைப் பராமரிக்கவும், குறிப்பிட்ட அளவு அத்தியாவசியப் பொருட்களை நுகர்ந்தாக வேண்டும். மனிதனும் இயந்திரத்தைப் போலவே தேய்ந்து பயனற்றுப் போகிறான். அவனிடத்தை வேறொரு மனிதன் இட்டு நிரப்பியாக வேண்டும். தனது சொந்தப் பராமரிப்புக்குத் தேவைப்படும் வாழ்வாதாரப் பொருட்களோடு குழந்தைகளைப் பெற்று வளர்த்துத் தொழிலாளராக உருவாவதற்குமான வாழ்வாதாரப் பொருட்களும் தேவைப்படுகிறது.
வெவ்வேறு தரமான உழைக்கும் சக்திகளை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் வேறுபடுவது போலவே வெவ்வேறான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிற உழைக்கும் சக்திகளின் மதிப்புகளும் வேறுபடும். அதனால் சமமான கூலிக்குரிய கூக்குரல் ஒரு தவறான அடிப்படையைக் கொண்டதாகும். ஆகையால் சமமான கூலி என்பது நிறைவேற்ற முடியாத சாரமற்ற கோரிக்கை ஆகும்.
கூலி அமைப்புமுறை உள்ள சமூகத்தில் உழைக்கும் சக்தியின் மதிப்பும் மற்றைய சரக்கைப் போலவே முடிவு செய்யப்படுகிறது. வெவ்வேறு வகைப்பட்ட உழைப்பு சக்திகள் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டிருப்பதால் அல்லது அவற்றின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவு உழைப்பு தேவைப்படுவதால், அவை தொழிலாளர் சந்தையில் வெவ்வேறு விலைகளைப் பெற வேண்டும்.
கூலி அமைப்பு முறையின் அடிப்படையில் உள்ள சமூகத்தில் சமமான அல்லது நியாயமான வெகுமானத்துக்குக் கூக்குரல் இடுவது என்பது அடைய முடியாததற்கான முயற்சிப்பதே ஆகும்.
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அமைப்பு முறையில் எது அவசியமானது, தவிர்க்க முடியாதது என்பதை அறிந்து குரல் கொடுக்க வேண்டும். அதை ஒட்டியே போராட வேண்டும். அப்படிப்பட்ட போராட்டமே வெற்றி பெறும். அவசியமற்ற போராட்டம் தோல்வியையே தழுவும்.
ஆக, உழைப்புச் சக்தியின் மதிப்பானது, உழைப்பு சக்தியை மறுவுற்பத்தி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும், நிலைத்திருப்பதற்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் மதிப்புகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
மார்க்ஸ் கூறுகிற உழைப்புச் சக்தி என்கிற சரக்கைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டால் தான், உபரி மதிப்பைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து, (8) உபரி மதிப்பின் உற்பத்தி என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் இந்த இடத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலுக்கு இது ஒரு கூடுதல் சிறப்பாகும். அதுவும் மிகவும் குறைவான பக்கத்தில் விளக்கி உள்ளார். இதனைக் கவனமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். உபரி மதிப்பின் மூலமாகத்தான் முதலாளித்துவ உற்பத்தி முறையின் சுரண்டலை மார்க்ஸ் அம்பலப்படுத்துகிறார். அதனால் முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடுகிற அனைத்துப் போராளிகளும் உபரி மதிப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பாட்டாளி தமது முதலாளியிடம் விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியைத் தான் என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த உழைப்புச் சக்திக்குத் தான் முதலாளி கூலி கொடுக்கிறார். இது எந்த வகையில் சுரண்டலாக அமைகிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.
ஒரு தொழிலாளி ஒரு நாள் உழைப்பில் தமது அத்தியாவசியப் பொருட்களின் சராசரி அளவை (கூலிக்கு ஈடாக) பெறுவதற்காக அந்தத் தொழிலின் பொருட்களை உற்பத்தி செய்ய இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது தொழிலாளிக்கு ஒரு நாள் கூலியாகக் கொடுக்கப்பட்ட ரூபாய் 1,000/- மதிப்பிலான உழைப்பைச் செலுத்த இரண்டு மணி நேரம் ஆகிறது என்று கணக்கிடுவோம். அந்தத் தொழிலாளியின் ஒரு நாள் கூலியின் பண மதிப்பு ரூபாய் 1,000/- ஆகும். இந்தத் தொழிலாளி தன்னைப் பராமரிப்பதற்குத் தேவையான மதிப்பை ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்கிறார்.
நமது தொழிலாளியோ கூலி உழைப்பாளி, எனவே தனது உழைப்புச் சக்தியை ஒரு முதலாளிக்கு விற்க வேண்டும். அதை அந்தத் தொழிலாளி ரூ.1,000/-க்கு விற்றால், அவர் தன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புக்கே விற்றவர் ஆகிறார். இங்கே அந்தத் தொழிலாளி ஒரு நூற்பாளர் என்று வைத்துக்கொள்வோம். இந்த நூற்பாளர் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் வேலைச் செய்தால், பஞ்சின் மீது, ஒவ்வொரு நாளும் ரூபாய் 1,000/- மதிப்பைச் சேர்க்கிறார். அவரால் நாள்தோறும் சேர்க்கப்படும் இந்த மதிப்பு, அவருக்குக் கொடுக்கப்படுகிற கூலிக்குச் சமமானதாக இருக்கும். அதாவது அது அவரது உழைப்புச் சக்திக்குக் கொடுக்கப்பட்ட விலையாகும். இந்த நிலையில், உபரி உற்பத்தியோ அல்லது உபரி மதிப்போ எதுவும் முதலாளிக்குக் கிடைக்காது.
முதலாளி தாம் வாங்கும் சரக்கைப் பயன்படுத்துவதற்கு முழு உரிமை பெற்று இருப்பது போல, தொழிலாளியின் உழைப்புச் சக்தி எனும் சரக்கை அதன் மதிப்பைக் கொடுத்து வாங்கி விடுவதின் மூலம் முதலாளியானவர் அதனைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றவர் ஆகிறார். தொழிலாளியின் உழைப்புச் சக்திக்கான ஒரு நாள் கூலியை முதலாளி கொடுத்துவிட்டு, நாள் முழுவதும் தொழிலாளியை வேலை வாங்குகிறார். இதன் மூலம் தெரிவது என்னவென்றால், தொழிலாளியின் உடைய உழைக்கும் சக்தியின் மதிப்பை வரையறுக்கும் உழைப்பின் அளவு அவருடைய உழைக்கும் சக்தி ஆற்றக்கூடிய உழைப்பின் அளவுக்கு எவ்வகையிலும் வரம்பு கட்டுவதில்லை.
நமது நூற்பாளரை எடுத்துக் கொள்வோம். இவர் தன்னுடைய உழைக்கும் சக்தியை நாள்தோறும் மீண்டும் உற்பத்தி செய்துகொள்வதற்கு, அவர் நாள்தோறும் ரூ.1,000/- மதிப்பை மீண்டும் உற்பத்தி செய்ய வேண்டும். நாள்தோறும் இரண்டு மணி நேரம் உழைப்பதின் மூலம் இதனை அவர் நிறைவேற்றுகிறார் என்று பார்த்தோம். எனினும் இந்தத் தொழிலாளி ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வேலைச் செய்வதற்குத் திறனற்றவராக ஆகிவிடுவதில்லை. மேலும் நூற்பாளரின் உழைக்கும் சக்திக்கான மதிப்பை நாள்தோறும் கொடுத்துவிடுவதன் மூலம், முதலாளி, அவருடைய உழைப்பை முழு நாளைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறார். அதனால், முதலாளியானவர், நெசவாளரை நாள்தோறும் பத்து மணி நேரம் வேலை வாங்குகிறார். ஆகவே தனக்குக் கொடுக்கப்படும் உழைப்புச் சக்திக்கான கூலிக்காக இரண்டு மணி நேரத்தைத் தவிர, கூடுதலாக எட்டு மணி நேரம் நெசவாளர் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் கூடுதல் உழைப்பு மணி நேரத்தை உபரி உழைப்பு மணி நேரம் என்று மார்க்ஸ் அழைக்கிறார். இந்த உபரி மணி நேரத்தில் செய்திடும் உபரி உழைப்பு தான் உபரி உற்பத்திப் பொருளாக, உபரி மதிப்பாகப் பரிணமிக்கிறது.
மேலே பார்த்த நமது எடுத்துக்காட்டில், நூற்பாளர் நாள்தோறும் இரண்டு மணி நேரம் உழைப்பதன் மூலம் ரூ.1,000/- மதிப்பை, தமது கூலிக்குத் துல்லியமாகச் சமமான மதிப்பைப் பஞ்சின் மீது சேர்க்கிறார். இது நூற்பாளருடைய கூலிக்குச் சரிசமம் ஆகும். பத்து மணிநேரத்தில் ரூ.1,000/- மதிப்பைப் பஞ்சில் சேர்ப்பதுடன், மேலும் ரூ.4,000/-யும் உபரியாக உற்பத்தி செய்கிறார். நெசவாளர் தமது உழைப்புச்சக்தியை முதலாளிக்கு விற்பனை செய்துவிட்டதால், அவரால் படைக்கப்படும் முழு மதிப்பும் முதலாளிக்கே சொந்தமாகிறது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் முதலாளி அவரது உழைப்புச் சக்தியின் சொந்தக்காரராக உள்ளார். ஆகவே ரூ.1,000/-யை முன்பணமாகக் கொடுப்பதின் மூலம், முதலாளி ரூ.5,000/-யைப் பெறுகிறார்.
இதையே நாள்தோறும் செய்வதின் மூலம், ரூ.1,000/- கொடுத்து நாள்தோறும் ரூ.5,000/-யை தமது பையில் போட்டுக் கொள்கிறார். இந்த மதிப்பில் இருந்து ஒரு பகுதி கூலி கொடுக்கப்படும், மீதமுள்ள பகுதி உபரி மதிப்பாக உருவாகும். இதற்கு முதலாளியானவர் தொழிலாளிக்கு எதையும் கொடுப்பதில்லை.
மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே நிலவும் இத்தகைய பரிவர்த்தனை மீதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறை அல்லது கூலி அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பரிவர்த்தனை தொடர்ச்சியாகத் தொழிலாளியைத் தொழிலாளியாக மறுவுற்பத்தி செய்யவும், முதலாளியை முதலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் காரணமாக இருக்கிறது.
உபரி மதிப்பின் விகிதமானது, ஒரு தொழிலாளி தமது உழைப்புச் சக்தியின் மதிப்பை மறுவுற்பத்தி செய்வதற்கு, அதாவது கொடுக்கப்பட்ட கூலியை ஈடு செய்வதற்கு மட்டும் எவ்வளவு மணி நேரம் உழைத்தால் போதுமோ அதற்கு மேலாகவும், கூடுதலாகவும் வேலை நாள் நீடிக்கப்படுவதன் விகிதத்தைப் பொறுத்திருக்கிறது.
அடுத்து, (9) உழைப்பின் மதிப்பு என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
உழைப்புச் சக்தி என்ற பகுதியில் பேசிய உழைப்பு மதிப்பைப் பற்றி மார்க்ஸ் இங்கே கூடுதல் விளக்கம் கொடுக்கிறார். உழைப்பின் மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கூறுவதைப் பல பேரால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனால், இங்கே அடிமை, பண்ணை அடிமை ஆகியோர்களை ஆலைத் தொழிலாளியுடன் ஒப்பிட்டு விளக்கி உள்ளார்.
உண்மையில் உழைப்பின் கூலி என்பது உழைக்கும் சக்தியின் மதிப்புதான் என்பதையும், அந்த உழைக்கும் சக்தியைப் பராமரிப்பதற்குத் தேவையான சரக்குகளின் மதிப்புகளைக் கொண்டே அது அளவிடப்படுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் தொழிலாளி தமது உழைப்பைச் செய்து முடித்த பிறகே தனக்கான கூலியை வாங்குகிறான் என்பதனாலும், மேலும் தாம் முதலாளிக்குக் கொடுப்பது உழைப்பு என்றே நினைப்பதனால், உழைக்கும் சக்தியின் விலை, தமது உழைப்பின் விலையாகவே தோன்றுகிறது.
தொழிலாளியின் நாள்தோறும் செலுத்திய உழைப்பின் ஒரு பகுதிக்கே கூலி தரப்படுகிறது, மற்றொரு பகுதிக்குக் கூலி தரப்படுவதில்லை. கூலி தராத அந்த உழைப்பின் பகுதியில் இருந்தே உபரி மதிப்பு அல்லது லாபம் முதலாளிக்குக் கிடைக்கிறது. இந்த உண்மைக்கு மாறாக முழு நாள் உழைப்புக்குக் கூலி தரப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. அதாவது கூலி தரப்பட்டுவிட்டதாகத் தோற்றம் தருகிறது.
இந்த மாயத் தோற்றம் கூலி உழைப்பை, உழைப்பின் பிற வரலாற்று வடிவங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. முதலாளித்துவக் கூலி அமைப்பு முறையில் கூலி தரப்படாத உழைப்புக்கும்கூடக் கூலி கொடுக்கப்பட்டதாகத் தோற்றம் அளிக்கிறது. இதற்கு மாறாக, அடிமைச் சமூகத்தில், அடிமையின் உழைப்பின் கூலி தரப்பட்ட அப்பகுதியும்கூடக் கூலி தரப்படாத உழைப்பாகவே காட்சி அளிக்கிறது. அடிமை தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமானால் உயிர் வாழ்ந்தாக வேண்டும். தமது பராமரிப்புக்கு உழைப்பின் ஒரு பகுதியிலேயே ஈடுகட்டப்படுகிறது. அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையே எத்தகைய ஒப்பந்தமும் போடப்படவில்லை. அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையே விற்றல் வாங்கல் என்கிற செயற்பாடு எதுவும் நடைபெறவில்லை. அதனால் அடிமையின் உழைப்பானது கூலியின்றி இலவசமாகத் தரப்பட்டதாகத் தோன்றுகிறது.
நிலப்பிரபுத்துவத்தில் எடுத்துக் கொண்டால், இதில் உள்ள தொழிலாளி ஒரு விவசாயி ஆவார். இவர் தன் சொந்த நிலத்தில் வாரத்தின் மூன்று நாட்களுக்குத் தனக்காகவே உழைக்கிறார். அடுத்துவரும் மூன்று நாட்களுக்குத் தன்னுடைய நிலப்பிரபுவின் பண்ணையில் கட்டாய, இலவச உழைப்பைச் செலுத்துகிறார். ஆக, இங்கே தரப்பட்ட கூலி, தரப்படாத கூலி உழைப்பின் பகுதிகள் காலத்தாலும், இடத்தாலும் தெளிவாகப் பிரித்து அறியப்பட்டிருக்கின்றன.
பண்ணை அடிமை வாரத்தின் மூன்று நாட்கள் தனக்காகத் தனது நிலத்தில் வேலை செய்துவிட்டு அடுத்த மூன்று நாள் தமது நிலப்பிரபுவின் பண்ணையில் இலவசமாக வேலை செய்கிறான் என்பதைப் பார்த்தோம். அதே போலத் தொழிலாளி தொழிற்சாலையில் தனக்கு இரண்டு மணி நேரமும், தமது முதலாளிக்கு எட்டு மணி நேரமும் வேலை செய்வதும் ஒன்றே தான். என்றாலும் தொழிற்சாலையில் கூலி கொடுக்கப்பட்ட பகுதியும், கூலி கொடுக்கப்படாத பகுதியும் பிரிக்க முடியாதபடி ஒன்றொடுவொன்று பிணைக்கப்பட்டிருக்கின்றன.
நிலப்பிரபுத்துவத்தில் இலவச உழைப்பு மனம் ஒத்து தரப்படுவது போலவும், தொழிற்சாலையில் அந்த இலவச உழைப்பு பலவந்தமாக்கப்பட்டிருப்பது போலவும் தோன்றுகிறது. இதுதான் அந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.
மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தளவில், “உழைப்பின் மதிப்பு” என்று கூறப்படுகிற இடத்தில் எல்லாம் ”உழைப்புச் சக்தியின் மதிப்பு” என்ற பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, (10) சரக்கை அதன் மதிப்புக்கே விற்பதால் லாபம் பெறப்படுகிறது என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
பொதுவாக லாபம் என்பதை, விளை பொருளின் அடக்கவிலைக்கு மேலே கூட்டுவதால் கிடைப்பதாகப் பலர் தவறாக நினைக்கின்றனர். இதைத்தான் இங்கே மார்க்ஸ் மறுக்கிறார்.
ஒரு சரக்கில் பயன்படுத்தப்பட்ட கச்சாப்பொருள், இயந்திரத் தேய்மானம் முதலியவற்றின் மதிப்பு ரூ.5,000/-, முதலாளியால் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளி பத்து மணி நேரம் உழைத்து ரூ.5,000/-, மதிப்பைச் சேர்க்கிறார். அந்த விளைபொருளின் மதிப்பு ரூ,10,000/-. தொழிலாளியால் உருவாக்கப்பட்ட ரூ.5,000/-, மதிப்பில் தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டது ரூ.1,000/- தான். ரூ.4,000/-க்கான மதிப்பைத் தொழிலாளிக்கு முதலாளி கொடுத்திடவில்லை. அதனால் அந்த விளைபொருள் அதன் மதிப்பான ரூ,10,000/-.க்குத் தான் விற்கப்படுகிறது. தொழிலாளியால் எட்டு மணி நேரம் வேலை செய்து உருவாக்கின மதிப்பான ரூ.4,000/-க்கு முதலாளி அதிகப்படியான கூலி எதுவும் கொடுத்திடாமல் எடுத்துக் கொள்கிறார். இதுவே உபரி மதிப்பாக அல்லது இலாபமாக முதலாளியின் பைக்குள் செல்கிறது.
இவ்வாறு, முதலாளி தமது சரக்கை அதன் மதிப்புக்கு மேல் அதிகமாக விற்காமல் அதன் உண்மையான மதிப்புக்கே விற்பதன் மூலமே லாபம் பெறுகிறார்.
இதன் மூலம் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், சரக்குகளை அவற்றின் மதிப்புக்கும் மேலாக விற்பனை செய்வதின் மூலமாக இல்லாமல், சரக்கின் உண்மையான மதிப்புக்கு விற்பதன் மூலமே லாபம் கிடைக்கின்றது.
அடுத்து, (11) உபரி மதிப்பின் பகுதிகளைப் பலவகையில் பிரித்தல் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
உபரி மதிப்பைப் பற்றி இதுவரை பார்த்தோம். தொழிலாளிக்குக் கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தில் தோற்றுவிக்கப்பட்ட மதிப்பே முதலாளிக்கு உபரி மதிப்பாகக் கிடைக்கிறது. இந்த உபரி மதிப்பு அப்படியே முதலாளிக்கு லாபமாகக் கிடைப்பதில்லை. இந்த உபரி மதிப்பில் இருந்து பலருக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதமுள்ளதே முதலாளிக்கு லாபமாகும். இந்த உபரி மதிப்பு யாருக்கெல்லாம் பிரித்துத் தரப்படுகிறது என்பதைப் பற்றி தான் இங்கே மார்க்ஸ் பேசுகிறார்.
விவசாயம், கட்டிடங்கள், ரயில் தடங்கள் இதைப் போன்று உற்பத்தி செயற்பாட்டிற்குப் பயன்படுத்திய நிலங்களின் உரிமையாளர், உபரி மதிப்பின் ஒரு பகுதியை வாடகை என்ற பெயரால் பறித்துக் கொள்கிறார்.
உழைப்புச் சாதனங்களை உடைமையாகக் கொண்டுள்ள முதலாளிக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட வட்டியாக உபரி மதிப்பின் ஒரு பகுதி கொடுக்கப்படுகிறது.
பிரித்துக் கொடுக்கப்படுவது எந்தப் பெயரில் நிகழ்ந்தாலும், அவை தொழிலாளிக்குக் கூலி தரப்படாத பகுதியில் இருந்து பெறப்பட்டதுதான். ஆனால், உபரி மதிப்பில் இறுதியாகத் தனக்கென வைத்துக்கொள்ளும் முதலாளிதான் தொழிலாளியிடம் இருந்து நேரடியாக உழைப்பைப் பிழிந்து எடுக்கிறார். வேலைக்கு அமர்த்தும் முதலாளிக்கும், கூலித் தொழிலாளிக்கும் இடையேயான இந்த உறவின் அடிப்படையில் தான் கூலி அமைப்பு முறையில் தான் முதலாளித்துவ முழு உற்பத்தி முறையும் நிலைபெற்றுள்ளது.
சரக்கின் மதிப்பில், கச்சாப் பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்திய மதிப்புகள் எத்தகைய வருவாயையும் ஈட்டித் தரவில்லை. செலவழிக்கப்பட்ட மூலதனத்தை மட்டுமே மீட்டெடுத்து உள்ளது. இது ஒருபுறமிருக்க, சரக்கின் மதிப்பில் உள்ளடங்கி உள்ள வருவாயை உருவாக்கும், கூலி, லாபம், வாடகை, வட்டி போன்றவை மதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இதில் கூலியை ஒதுக்கி விட்டு லாபங்கள், வாடகை, வட்டி இவற்றைப் பற்றி முதலில் மார்க்ஸ் பரிசீலிக்கிறார்.
தொழிலாளியின் உழைப்பில் கூலி தரப்படாத நேரமே, உபரி நேரமாகும், இந்த உபரி நேரத்தில் விளைவித்த மதிப்பே உபரி மதிப்பாகும். இந்த உபரி மதிப்பில் இருந்தே முதலாளியானவர் நில உடைமையாளருக்கு வாடகையாகவும், கடன் கொடுத்தவர்களுக்கு வட்டியாகவும் பிரித்துக் கொடுக்கிறார். ஆனால் முதலாளி தானே தனது லாபத்துக்கு என்று சரக்கின் மதிப்போடு எதேச்சதிகாரமான மதிப்பைக் கூட்டுவதால் மதிப்பு ஏற்படுவதில்லை.
லாபம் என்கிற சொல்லை, முதலாளி பிழிந்தெடுக்கும் உபரி மதிப்பின் மொத்தத் தொகைக்கே மார்க்ஸ் பயன்படுத்துகிறார். பல்வேறு தரப்பினர் இடையே, உபரி மதிப்பில் இருந்து பகிர்ந்து கொள்ளப்படுவதை எவ்வகையிலும் கணக்கில் கொள்ளாமலேயே மார்க்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். அதே போல, லாப விகிதம் என்னும் சொல்லைக் கூலியாக ஈடுபடுத்தப்படும் மூலதனத்தின் மதிப்பின் விகிதமாகவே எப்போதும் அளவிடப் போவதாக மார்க்ஸ் கூறியுள்ளார்.
அடுத்து, (12) லாபம், கூலி, விலை ஆகியவற்றின் பொது உறவுகள் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கின் மதிப்பில் இருந்து அதில் பயன்படுத்திய கச்சாப்பொருள், மற்றும் பிற உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளைக் கழித்துவிட்டால், மீதமுள்ள மதிப்பானது, முதலாளியால் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளி கூட்டிய உழைப்பின் அளவு ஆகும். அதாவது சரக்கில் அடங்கியுள்ள பழையதைக் கழித்துவிட்டால் கடைசியில் இருக்கும் மதிப்பானது தொழிலாளியின் உழைப்பே ஆகும். குறிப்பிட்ட இந்தத் தொழிலாளியின் உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் இந்த மதிப்பானது, தொழிலாளியும், முதலாளியும்; தங்களுக்கு இடையே கூலியாகவும், லாபமாகவும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரே மதிப்பாகும்.
தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இந்த மதிப்பில் இருந்து எத்தகைய விகிதங்களில் பிரித்தாலும் அதன் மொத்த அளவு மாறாது என்பதை அனைவராலும் அறிந்து கொள்ள முடிகிறது. தொழிலாளியின் மொத்த உழைப்பால் உருவான வரையறுக்கப்பட்ட, இந்த மதிப்பில் இருந்தே தொழிலாளியும் முதலாளியும் தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். இதில் ஒருவர் அதிகம் பெறுகிறார் என்றால் அந்தளவுக்கு அடுத்தவர் குறைவாகப் பெறுவார். அதைப்போலவே ஒருவர் குறைவாகப் பெற்றால் அடுத்தவர் அந்தளவுக்கு அதிகமா பெறுவார். கூலி குறைந்தால் லாபம் அதிகரிக்கும், லாபம் குறைந்தால் கூலி அதிகரிக்கும். கூலி, லாபம் வேறுபாடுகளால் சரக்கின் மதிப்புகள் எந்த வகையிலும் பாதிக்கப்படுவது இல்லை.
சரக்குகளின் சந்தை விலைகளை அவற்றின் மதிப்புகளே ஒழுங்கு படுத்துகின்றன. அம்மதிப்புகள் சரக்குகளில் பொதிந்துள்ள உழைப்பின் மொத்த அளவினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த மதிப்பை அளவிடும் போது உழைப்புக்குக் கொடுக்கப்பட்ட கூலி, உழைப்புக்குக் கொடுக்கப்படாத கூலி என்று பிரிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த மதிப்பை உழைப்பின் கால அளவைக் கொண்டு அளவிடுவது இல்லை. ஏன் என்றால் அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளியின் உழைப்பும், குறைந்த திறன் கொண்ட தொழிலாளியின் உழைப்பு ஒரே மதிப்பைப் படைப்பதாகக் கொள்ள முடியாது. அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளி குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களைவிட அதிகமான சரக்கு உற்பத்தி செய்வார். அதனால் இவரால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கின் மதிப்பு அதிகமாகவே இருக்கும். அதாவது நேரப்பரப்பு எல்லை கொண்டோ, கால நீட்டிப்பைக் கொண்டோ சரக்கின் மதிப்பு அளவிடப்படுவதில்லை.
இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் மார்க்ஸ் விளக்குகிறார்.
உற்பத்தி திறன் அதிகம் கொண்ட தொழிலாளி, பத்து மணி நேரம் வேலை செய்து பத்துப் பவுண்டு நூலை உற்பத்தி செய்கிறார். அதே பத்து மணி நேரம் திறன்குறைந்த உழைப்பாளி இரண்டு பவுண்டு நூலை மட்டுமே உற்பத்தி செய்கிறார்.
பத்து மணி மணிநேரச் சராசரி உழைப்பு 1000 ரூபாய் மதிப்பில் செலுத்தப்பட்டுள்ளது என்றால், ஒரு நிகழ்வில் உற்பத்தியான பத்துப் பவுண்டு நூலின் விலை 1000 ரூபாயாக இருக்கும், மற்றொரு நிகழ்வில் உற்பத்தியான இரண்டு பவுண்டு நூலின் விலையும் 1000 ரூபாயாக இருக்கும். உற்பத்தி திறன் கொண்ட உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட நூலின் விலை ஒருவிதமாகவும், உற்பத்தி திறனற்ற உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட நூலின் விலை வேறுவிதமாகவும் இருக்கும். இந்த விலை வேறுபாடு ஈடுபடுத்தப்பட்ட உழைப்பின் உற்பத்தித் திறன்களின் வேறுபாட்டினால் உருவானதாகும்.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம், ஒரு பவுண்டு நூலின் விலை அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் மொத்த அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, அந்த மொத்த அளவின் கூலி கொடுக்கப்பட்ட உழைப்பு, கூலி கொடுக்கப்படாத உழைப்பு என்கிற வேறுபாட்டைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. உற்பத்தித் திறனில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கு ஏற்ப உழைப்பின் அளவும் மாறும் என்கிற பொது விதியையே இது குறிக்கிறது.
அடுத்து, லாபம், கூலியை உயர்த்துவதற்கோ அல்லது அவை குறைக்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற முயற்சிகளின் முக்கிய நிகழ்வுகள் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
இங்கே மார்க்ஸ், கூலியின் உயர்வுக்கான முயற்சிகள் மற்றும் கூலி குறைப்பை எதிர்த்து நடைபெற்ற முயற்சிகளின் முக்கிய நிகழ்வுகளைப் ஆய்ந்துபார்க்கிறார்.
1) உழைப்பு சக்தியின் மதிப்பு அத்தியாவசியப் பொருட்களின் மதிப்பை அதாவது அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம்.
இங்கே மார்க்ஸ் ஷில்லிங்கில் கூறிய பணத் தொகையை நாம் இங்கே ரூபாயாக வைத்துக் கணக்கிடுவோம். அதே போல விழுக்காடுகள் மார்க்ஸ் கூறியதை அப்படியே புரிந்து கொள்வதற்குக் கால அளவை அவர் குறிப்பிடுகிறபடியே வைத்துக் கணக்கிடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு தொழிலாளிக்குச் சராசரியாக ஒரு நாளுக்குத் தேவைப்படுகிற அத்தியாவசியப் பொருட்களின் மதிப்பை உற்பத்தி செய்ய ஆறு மணி நேரம் ஆகிறது. இது ரூ.1,000/-த்துக்கு சமம் என்று வைத்துக் கொள்வோம்.. அப்படி என்றால் அந்தத் தொழிலாளி தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு ஈடான மதிப்பை உற்பத்தி செய்வதற்கு ஆறு மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் தொழிலாளி முழு வேலை நாள் 12 மணி நேரம் கொண்டதாக இருந்தால், முதலாளி தொழிலாளிக்கு உழைப்பின் மதிப்பாக ரூ.1,000/-ம் கொடுப்பார். இந்த வேலை நாளில் பாதி கூலி கொடுக்காத உழைப்பாக இருக்கிறது. ஆகவே லாபமானது 100% கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் உற்பத்தித் திறன் குறைந்து போனதால் அதே அளவு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்ய அதிக உழைப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அன்றாட சராசரி அத்தியாவசியப் பொருட்களின் விலை 1,000/- ரூபாயாக இருந்தது 1,200/- ரூபாயாக உயர்ந்துவிடுகிறது என்று கணக்கில் வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் உழைப்பின் மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 331/3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொழிலாளியின் பழைய வாழ்க்கை தரத்தின்படி நாளென்றுக்கு பாராமரிப்புக்கு ஈடானதை உற்பத்தி செய்ய வேலை நாளில் எட்டு மணி நேரம் தேவைப்படும்.
ஆகவே உபரி உழைப்பு ஆறு மணியில் இருந்து நான்கு மணியாகக் குறையும், லாப விகிதம் 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும். தொழிலாளி கூலியை உயர்த்துவதற்குப் போராடும் போது தமது சரக்கின் அடக்கவிலை கூடிவிடுகையில் அதன் கூடுதல் மதிப்பைப் பெற முயலும் மற்ற எந்தச் சரக்கு விற்பனையாளனையும் போலவே, தமது உழைப்பின் கூடுதல் மதிப்பு தனக்கு அளிக்க வேண்டும் என்று போராடுவார். அப்படிக் கூலி உயர்வுக்காகப் போராடாமல் போனால் அவரது வாழ்க்கைத் தரம் சீரழிந்துவிடும்.
2) அத்தியாவசியப் பொருட்களின் மதிப்புகளும் அவற்றைத் தொடர்ந்து உழைப்பின் மதிப்பும் மாறாமல் அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே பணத்தின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, அவற்றின் பணவிலைகளில் ஒரு மாறுதல் ஏற்படக்கூடும்.
இதனை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் மார்க்ஸ் விளக்குகிறார். மிகுந்த வளமான தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், இரண்டு அவுன்ஸ் தங்கத்தினை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்பட்ட உழைப்பைவிட அதிகமான உழைப்பு தேவைப்படாத நிலையில் தங்கத்தின் மதிப்பு பாதியாகக் குறையும். அதனால் மற்ற எல்லாச் சரக்குகளின் மதிப்புகளும், அவற்றின் முந்தைய பணவிலைகளின் இரட்டிப்பு மடங்கு விலையில் தெரிவிக்கப்படுவதுபோல் உழைப்பின் மதிப்பும் இருமடங்காகும். முன்பு 1,000/- ரூபாயாகத் தெரிவிக்கப்பட்ட பன்னிரண்டு மணிநேர உழைப்பு, தற்போது 2,000/- ரூபாயாகத் தெரிவிக்கப்படும். தொழிலாளியின் கூலி 2,000/- ரூபாயாக உயர்வதற்குப் பதில் முன்பிருந்த 1,000/- ரூபாயாகவே இருக்குமாயின் அவருடைய உழைப்பின் பணவிலை அவருடைய உழைப்பின் பாதி மதிப்புக்குச் சமமாக இருக்கும். இதன் காரணமாக அந்தத் தொழிலாளியின் வாழ்க்கைத் தரம் படுமோசமாக வீழ்ச்சி அடையும்.
3) வேலைநாள் என்பதைக் குறிப்பிட்ட வரம்புகளைக் கொண்டது என்பதாகவே இதுவரையில் அனுமானித்துக் கொண்டோம். என்றாலும் வேலை நாளுக்கு, அதற்கென்று நிரந்தரமான வரம்புகள் கிடையாது. வேலை நாளை உழைப்பவரின் உடல்வலிமை இடம் கொடுக்கும் எல்லைவரை நீட்டிப்பது மூலதனத்தின் நிரந்தரமான போக்காகும். ஏனென்றால் அப்போதுதான் அந்த அளவுக்கு உபரி மதிப்பும், லாபமும் அதிகரிக்கும். வேலை நாளை நீட்டுவதில் எவ்வளவு அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக மூலதனம் பிறரின் உழைப்பை அபகரிக்கும்.
4) முதலாளித்துவ உற்பத்தியானது குறிப்பிட்ட காலவட்டச் சுழற்சிக்குள் இயங்குகிறது. அமைதி, வளரும் உயிரியக்கம், செழிப்பு, மிகை உற்பத்தி, நெருக்கடி, தேக்கநிலை ஆகிய கட்டங்களில் தான் முதலாளித்துவ உற்பத்தி இயங்கிவருகிறது. சரக்குகளின் சந்தை விலைகளும், சந்தையின் லாப வீதமும், சில வேலைகளில் சராசரிக்குக் கீழே வீழ்ந்தும், சில வேளைகளில் சராசரிக்கு மேலே உயர்ந்தும், மேலே கூறப்பட்ட கட்டங்களைப் பின்தொடர்கின்றன.
மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்தச் சுழற்சியைப் பரிசீலித்தால், சந்தை விலையின் ஒரு விலகல் மற்றொரு விலகலால் சமன்செய்யப்படுவதையும், சுழற்சியின் சராசரியை எடுத்துக் கொண்டால், சரக்குகளின் சந்தை விலைகள் அவற்றின் மதிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் தொழிலாளியின் கூலி குறைக்கப்படுகிறது. மொத்தத்தில் தொழிலாளி ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்றால் முதலாளித்துவத்தின் இத்தகைய சுழற்சியைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியின் போது எந்த விகிதாச்சார அளவுக்குக் கூலியைக் குறைப்பது அவசியமாகிறது என்பதை முன்வைத்துத் தொழிலாளி தமது சங்கத்தின் மூலம் முதலாளியுடன் விவாதிக்க வேண்டும். முதலாளித்துவச் செழிப்புக் கட்டத்தில் தொழிலாளி கூலி உயர்வுக்குப் போராடவில்லை என்றால் ஒரு தொழில் வட்டம் முழுவதும் சராசரியாக எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தொழிலாளி தமது சராசரிக் கூலியை அதாவது உழைப்பின் மதிப்பைப் பெறமுடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நெருக்கடி நேரத்தில் கூலியைக் குறைப்பது அவசியமானால், அதே போலச் செழிப்புக் காலத்தில் கூலியை உயர்த்த வேண்டும் என்று போராடுவது அவசியமாகிறது. ஏனைய சரக்குகளைப் போலவே உழைப்பும் ஒரு சரக்கு தான். ஆகையினால் தன் மதிப்புக்கு ஒத்ததான ஒரு சராசரி விலையைப் பெற உழைப்பும் அதே போன்று ஏற்ற இறக்கங்களைக் கடந்தாக வேண்டும். உழைப்பை ஒரு புறத்தில் சரக்காகக் கருதுவதும், இன்னொரு புறத்தில் சரக்குகளின் விலைகளைத் தீர்மானிக்கும் விதிகளில் இருந்து விலக்க முயற்சிப்பது அபத்தமாகும். அதனால் தொழிலாளியானவர் ஒரு நேரத்தில் ஏற்படும் கூலி வீழ்ச்சியைச் சரிக்கட்டுவதற்கு இன்னொரு நேரத்தில் கூலி உயர்வுக்காகப் போராடிப் பெற வேண்டும். அதாவது தொழில் நெருக்கடி நேரத்தில் தொழிலாளியின் கூலி குறைக்கப்படுமானால், தொழில் செழிப்பு காலத்தில் தொழிலாளியின் கூலி உயர்த்தப்பட வேண்டும், உயர்த்தாத போது போராடிக் கூலியை உயர்த்த வேண்டும்.
5) இங்குப் பரிசீலித்த அனைத்து நிகழ்விலும், கூலி உயர்வுக்கான போராட்டம் முன்நிகழ்ந்த மாற்றங்களின் பாதையைப் பின்பற்றியே நடைபெற்றுள்ளது.
மூலதனத்தின் முந்தைய நடவடிக்கைக்கு எதிரான உழைப்பின் எதிர் நடவடிக்கைகளே இந்தக் கூலி உயர்வுக்கான போராட்டம் ஆகும். இந்தப் போராட்டம் முதலாளித்துவ உற்பத்தியில் தவிர்க்க முடியாததாகும்.
அடுத்து, மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டமும் அதன் இறுதி முடிவும் என்பது பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.
கூலிக் குறைப்புக்கு எதிராகத் தொழிலாளர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டமானது கூலி அமைப்பு முறையில் இருந்து பிரிக்க முடியாததாகும். ஏன் இவ்வாறு கூறப்படுகிறது என்றால், உழைப்புச் சக்தி என்பது முதலாளித்துவச் சமூகத்தில் ஒரு சரக்காகப் பரிணமித்துள்ளது. ஒரு சரக்கின் விலை எந்த விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறதோ, அதே விதிக்கு உட்பட்டே உழைப்புச் சக்தி என்கிற சரக்கின் விலையும் அமைந்துள்ளது. பொதுவான கூலி உயர்வு பொதுவான லாப விகிதம் குறைவதற்கு இட்டுச் செல்லும், ஆனால் அது சரக்குகளின் விலைகளைப் பாதிக்காது என்பதை இதுவரை பார்த்தோம்.
இப்போது எழுகின்ற கேள்வி, இந்தப் போக்குகளின் இறுதி விளைவு என்ன?. அதாவது மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே நடைபெறும் இந்தத் தொடர் போராட்டத்தில், உழைப்பு அடையப் போகிற வெற்றி எத்தகையது என்பதே ஆகும்.
உழைப்பாளர்களின் இறுதி லட்சியத்தைப் பற்றி மார்க்ஸ் இங்கே பேசுகிறார். உழைப்பாளர்கள் அன்றாட பிரச்சினைக்கான போராட்டத்தை இறுதிக் குறிக்கோளுடன் இணைக்க வேண்டும்.
முதலாளித்துவத்தில் ஏற்படும் தொழில்களின் வளர்ச்சியால் கிட்டக்கூடிய பலன்களின் வினியோகம் முதலாளிக்குச் சாதகமாகவும் தொழிலாளிக்குப் பாதகமாகவும் இருக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் பொதுவான போக்கு கூலியின் சராசரி அளவைக் குறைப்பதாகவோ அல்லது உழைப்பின் மதிப்பைக் கிட்டத்தட்ட அதன் குறைந்தபட்ச எல்லைக்குத் தள்ளுவதாகவோ இருக்கிறது, கூலியை உயர்த்துவதாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அதனால் கூலி உயர்வுக்கான போராட்டம் முதலாளித்துவச் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தத் தொழிலாளர்களின் போராட்டமானது விளைவுகளை எதிர்த்து நடத்துகின்ற போராட்டமே தவிர, அந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் காரணங்களை எதிர்த்து நடத்தும் போராட்டமாக இல்லை. வெறும் கூலி உயர்வுக்கான போராட்டம் என்பது தொழிலாளர்களது நிலைமையை, மோசமாக்கும் போக்கைத் தடுக்கப் போராடுகிறார்களே தவிர, அதன் திசை வழியை மாற்றுவதற்கான போராட்டமாக இல்லை.
இது நோயின் கடுமையைத் தணிக்கும் போக்கே தவிர, நோயை முற்றிலும் குணப்படுத்தும் போக்கல்ல. இதனைத் தொழிலாளி வர்க்கம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளி வர்க்கம் கூலி உயர்வுப் போராட்டத்துடன் தங்களைச் சுருக்கிக் கொள்ளக்கூடாது.
தொழிலாளி வர்க்கம் இன்று சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம் கூலி குறைவாக இருப்பதல்ல, குறைந்த கூலியை அளிக்கும் “கூலி அமைப்பு முறையே” என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கூலி உயர்வுக்கான பொருளாதாரப் போராட்டம் கூலி அமைப்பு முறையை எதிர்த்து நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும்.
“நியாயமான வேலை நாளுக்கு நியாயமான கூலி” என்னும் பழைய முழக்கத்துக்கு மாறாக “கூலி அமைப்பு முறை ஒழிக” என்னும் புரட்சிகரமான முழக்கத்தைத் தொழிலாளிகள் தங்களது பதாகையில் பொறிக்க வேண்டும் என்கிறார் மார்க்ஸ்.
மார்க்ஸ் கூறுவதை அப்படியே பார்ப்போம்:-
“இன்றுள்ள அமைப்பு முறை, சகலத் துன்பத் துயரங்களையும் விளைவிக்கும் அதே நேரத்தில், சமூகத்தின் பொருளாதார மறுநிர்மாணத்துக்குத் தேவையான பொருளாயத நிலைமைகளையும் சமூக வடிவங்களையும் அது உண்டு பண்ணுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். “நியாயமான வேலை நாளுக்கு நியாயமான கூலி” என்னும் பழைய குறிக்கோளுக்குப் பதிலாக “கூலி அமைப்பு முறை ஒழிக!” என்னும் புரட்சிகரமான முழக்கத்தைத் தொழிலாளிகள் தங்கள் பதாகையில் பொறித்துக் கொள்ள வேண்டும்.”
தொழிற்சங்கங்கள் மூலதனத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான எதிர்ப்பின் மையங்களாகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தொழிற்சங்கப் பணிகளில் தோல்வி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் தொழிலாளர்கள் தங்களது சக்தியைச் சரியாகப் பயன்படுத்தாததே ஆகும். கூலி அமைப்புமுறையை ஒழிப்பதற்கான வர்க்கப் போராட்டத்தை மறந்துவிட்டுக் கூலி உயர்வுக்கான பொருளாதாரப் போராட்டத்துடன் தங்களைக் குறுக்கிக் கொள்வதினால் தான் தொழிலாளர்கள் பொதுவாகத் தோல்வி காண்கின்றனர்.
மார்க்ஸ் மேலும் கூறுகிறார், “தொழிலாளர்கள் மூலதனத்திற்கு எதிரான தங்களது அன்றாட போராட்டத்தில் கோழைத்தனமாக விட்டுக் கொடுப்பதன் மூலம், எந்த ஒரு பெரிய இயக்கத்தையும் நடத்துவதற்குத் தங்களைத் தகுதியற்றவர்களாக மாற்றிக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.”
மார்க்சிய இயக்கத்தில் இரண்டு பெரும் பிரச்சினை இருக்கிறது. ஒன்று கூலி உயர்வுப் போராட்டத்துடன் மட்டும் நின்று போகிற வலதுதிரிபு, மற்றொன்று கூலி உயர்வு போராட்டத்தில் இறங்காமல் துப்பாக்கி தூக்கிக் கொரில்லா போருக்கு மட்டும் கிளம்புகிற இடதுதிரிபு. இந்த இரண்டு திரிபுகளுமே கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பெரும் தீங்காகும்.
இந்த இரண்டும், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக, அதாவது கூலி அமைப்பு முறையை முடிவாக ஒழித்துக்கட்டுவதற்காகத் தங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகளை நெம்புகோலாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நிலவும் அமைப்பின் விளைவுகளுக்கு எதிராகப் போராடுகிறது. இதனால் தொழிலாளர்களின் இறுதி குறிக்கோளை அடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தொழிலாளி வர்க்கம், தொழிற்சங்கம் ஆகிய இரண்டுக்கும் தலைமை ஏற்கும் முன்னணிப்படையான கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் மார்க்ஸ் காட்டுகிற பாதையில் சென்றால், தொழிலாளர்களுக்கு விடுதலை நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டுமானால், முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப் போராடுவது அவசியம் என்று மார்க்சின் பொருளாதாரக் கோட்பாடும், வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் வலியுறுத்திக் கூறுகிறது. தொழிலாளி வர்க்கம் அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும் விடுபட மார்க்சியம் வழிகாட்டுகிறது.
மார்க்சியம் இன்று பொருந்துமா என்கிற கேள்வியை மார்க்சியத்தின் பெயராலேயே கேட்பவர்கள் இருக்கின்றனர். மார்க்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்று வளர்ச்சி அடைந்துள்ள முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மார்க்சியம் பொருந்துமா? என்று சந்தேகத்தை எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். மார்க்சியம் அறிந்தவர்கள் இந்தக் கேள்வியை எழுப்ப மாட்டார்கள். ஏன் என்றால் அதற்கான பதில் அவர்களுக்குத் தெரியும்.
இயந்திரமனிதன் (Robot) உற்பத்தியில் ஈடுபடுகின்ற காலத்தில், தொழிலாளர்கள் உற்பத்தியில் இருந்து தூக்கி எறியும் காலத்தில், உபரி மதிப்பு எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தங்களைக் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்களே இந்தக் கேள்வியை அதிகமாகக் கேட்கின்றனர். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தெளிவு இல்லாதவர்களால் தான் இப்படிப்பட்ட கேள்வி எழுப்பப்படுகிறது. இதில் கட்சியின் பொறுப்பாளர்களும் அடங்குவர். கட்சியில் உள்ள பொறுப்பாளர்களுக்கு இதைப் போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொறுப்பறிந்து அரசியல் பொருளாதார அடிப்படைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment