Saturday 16 January 2021

லெனின் எழுதிய “அரசு” – சுருக்கமும் சாரமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் (16-01-2021& 23-01-2021) எடுக்கப்பட்ட வகுப்புகளின் குறிப்பு) 

ருஷ்யாவின் நவம்பர் புரட்சிக்குப் பிறகு, லெனின் ஒரு பல்கலைக்கழகத்தில் 1919 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் அற்றிய உரையே, இந்த “அரசு” என்ற சிறு நூலாகும். இதனை ஒட்டி இரண்டாவது ஒர் உரையையும் நிகழ்த்தினார் அதன் படிகள் கிடைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் இந்தச் சொற்பொழிவில் “அரசு” பற்றிய சாரத்தை முழுமையான விளக்கம் காணப்படுகிறது. 

இந்தச் சிறு நூல் தமிழில் சுமார் 32 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. இருந்தாலும் மார்க்சிய வழிப்பட்ட அரசு பற்றிய புரிதலுக்கு இது போதுமான அளவுக்குக் கூறப்பட்டுள்ளது. 

மார்க்சிய வழியில் அரசு பற்றிய அணுகுமுறையை முதன்முறையாகக் கேட்கப்படும் போது கண்டிப்பாக, கூறப்படுகிற அனைதையும் புரிந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். அது பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று லெனின் தொடக்கத்திலேயே கூறுகிறார். 

முதலாளித்துவ அறிஞர்களின் அரசு பற்றிய கூற்று மிகவும் குழப்பிவிடப்பட்டவை ஆகும். அதனால் அதில் இருந்து விடுபட்டு, மார்க்சிய புரிதலுக்கு வருவது சற்றுச் சிரமமானதே ஆகும். 

அரசு பற்றிய சுருக்கமான பேச்சை முதன்முறையாகக் கேட்பதின் மூலம் அனைத்தையும் அறிந்து கொள்வது சாத்தியம் இல்லை என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசு பற்றிய மார்க்சியக் கருத்துக்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்துப் பார்ப்போம். 

அரசு பற்றி இங்குக் கூறப்படுபவைகளில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும், மேலும் இது பற்றிய விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றின் உதவியை நாடும்போது கண்டிப்பாகப் புரியத் தொடங்கும். 

இந்த இடத்தில் லெனின், மார்க்ஸ். எங்கெல்ஸ் அரசு பற்றி எழுதியவற்றைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதைப் பற்றி என்றாலும் அதைப் பற்றி மார்க்சும் எங்கெல்சும் கூறியவைகளைத் தொகுத்து முதலில் படிக்க வேண்டும். 

அரசு பற்றி லெனின் எழுதிய இந்தக் கட்டுரை மிகவும் சுருக்கமானது, ஆனால் “அரசும் புரட்சியும்” என்ற லெனின் எழுதிய நூல் விரிவானது. இங்கே புரியாத பல விஷயங்கள் “அரசும் புரட்சியும்” நூலைப் படிக்கும் போது புரிவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 

“அரசும் புரட்சியும்” என்ற நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு பற்றிக் கூறியுள்ள அனைத்துப் பகுதிகள் அல்லது அத்தியாவசியமான அனைத்துப் பகுதிகளை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர்களின் அரசு பற்றிக் கூறிய அனைத்தையும் அறிந்து கொள்வதற்கு “அரசும் புரட்சியும்” என்ற நூலைப் படிப்பது அவசியமாகும். 

“அரசு” என்ற இந்த நூலை அடுத்து “அரசும் புரட்சியும்” என்ற நூலைப் படிப்பது அரசு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்குத் துணைபுரியும். இவ்விரண்டு நூல்களைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பின்பு எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலைப் படித்தால் அரசு பற்றிய, மார்க்சிய கருத்தாக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 

மார்க்சிய அணுகுமுறையில் அரசு பற்றிய கருத்தை முதன்முறையாகப் படிக்கும் போது வாசகர்களுக்கு என்ன ஏற்படும் என்று லெனின் தொகுத்துத் தருகிறார். அதனை அப்படியே பார்ப்போம். 

“இவற்றில் உள்ள விளக்க உரையின் கடுமை காரணமாக, உங்களில் சிலருக்கு முதலில் திகில் உண்டாகலாம், இருந்தாலும், அதனால் நீங்கள் ஏதும் கலக்கம் அடையக் கூடாது என்று மறுபடியும் எச்சரிக்கிறேன், முதல் முறை படிக்கும் போது தெளிவில்லாதது இரண்டாம் முறை படிக்கும் போது அல்லது பின்னர் அந்தப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட ஒரு கோணத்தில் இருந்து அணுகும் போது தெளிவாகிவிடும்” 

இது அரசு பற்றிய விஷயத்திற்கு மட்டுமல்ல அனைத்தையும் இதே போல்தான் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அரசை எதிர்த்துப் போராடி, புதிய அரசைப் படிடைக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள், அரசு பற்றிய புரிதலில், சொந்த முயற்சியாகத் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக அரசு பற்றிய மார்க்சிய எழுத்துக்களைப் பலகாலும் முனைந்து படிக்க வேண்டும். 

பொருளாதாரப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அரசியல் பிரச்சினையாக இருந்தாலும் சரி இதனைப் புரிந்து கொள்வதற்கு அரசு பற்றிய புரிதல் அடிப்படையாக இருக்கிறது. அதனால் அரசு பற்றிய மார்க்சிய அணுகுமுறையில் கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. 

அது மட்டும் அல்லாது, ஒரு கம்யூனிஸ்ட் எதிரிகளோடு நடத்தும் விவாதங்களில், அரசு பற்றிய பிரச்சினை எதிர்கொள்ள வேண்டிவரும். அந்த நேரத்தில் பிறர் உதவி இல்லாமல், அரசு பற்றிய மார்க்சிய அணுமுறையில் விளக்கம் கொடுக்க வேண்டிவரும். அதனால் அரசு பற்றிய தெளிவு அவசியமாகிறது 

      அரசு என்பது என்ன? அதன் தன்மை யாது? அதன் முக்கியத்துவம் என்ன? நமது கட்சி, முதலாளித்துவத்தைத் தூக்கி எறியப் போராடும் கட்சி, அதாவது கம்யூனிஸ்ட் கட்சி, அரசு விஷயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? என்பதை மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள வேண்டிடும். 

அரசு பற்றிய பிரச்சினையில் முதலாளித்துவ அறிஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ மிகவும் குழப்பிவிட்டுள்ளனர். அரசு என்பதை மதத்தோடு இணைத்தே விளக்குகின்றனர். அரசு என்பதை ஏதோ தெய்வீகமானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது, மனித இனம் வாழ்வதற்குக் காரணமான ஏதோ ஒரு வகையான அற்றலாக அவர்கள் பார்த்தனர். 

ஆனால் மார்க்சியக் கண்ணோட்டம் வேறுவகையானது, அரசு என்பது அனைவருக்கும் பொது என்பதை மார்க்சியம் மறுதலிக்கிறது. நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகிய சுரண்டும் வர்க்கங்களின் நலன்களோடு அரசு பிணைக்கப்பட்டுள்ளது, சுரண்டும் வர்க்கத்தின் நலன்களுக்கு அரசு, மிக நன்றாகப் பணி புரிவதை மார்க்சியம் எடுத்துக்காட்டுகிறது. 

முதலாளி வர்க்கத்தினுடைய அறிஞர்களின் பழக்க வழக்கங்கள், கருத்துக்கள், விஞ்ஞானங்கள் அனைத்திலும், அரசு என்பது தெய்வத்தன்மை பெற்றுள்ளதாகக் கருதுகிற கூற்று மிகவும் ஆழமாகக் கலந்து காணப்படுகிறது. ஆகவே அத்தகைய போதனையின் மிச்சசொச்சங்கள் எங்கும் இருப்பதை நாம் காணலாம். 

தாங்கள் மதக் காழ்ப்புகளுக்கு அடிமைப்பட்டவர்கள் அல்ல என்று கூறுகிறவர்கள், அரசு என்பதை நிதானப் பார்வையுடன் பார்க்கக் கூடியவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மென்ஷிவிக்குகள், சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள் ஆகியோர் அரசு பற்றிக் கொண்டுள்ள கருத்தில்கூட அந்தப் போதனையின் மிச்சசொச்சங்களைக் காணமுடிகிறது. இது லெனின் காட்டுகிற ருஷ்ய நிலைமைகள். நமது நாட்டிலும் இது போன்ற நிலை இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

அரசின் வர்க்கத் தன்மையை மார்க்சியம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது. அரசு பற்றிய வர்க்க சார்பைப் புரிந்து கொள்ளாமல், அதை அனைவருக்குமானதாகக் கருதுவது மாபெரும் தவறாகும். 

அரசின் வர்க்க சார்பை லெனின் எழுத்துக்களிலேயே பார்ப்போம்:-

“சமூகச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் நிகழ்வதை நியாயப்படும் வகையில், முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், அரசு பற்றிய போதனை பணிபுரிகிறது” 

அரசு பற்றிய மார்க்சிய புரிதல் நமக்கு ஏற்பட்டவுடன், அரசு பற்றிய பிரச்சினையில், அரசு பற்றிய போதனையில், அரசு பற்றிய கோட்பாட்டில் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையில் ஒவ்வொரு நாளும் நிகழும் போராட்டத்தைக் காண்போம். 

அரசு பற்றிய புரிதலுக்கு, நாம் விஞ்ஞான முறையிலான அணுமுறையைக் கையாள வேண்டும். நமது விஞ்ஞான வழியிலான அணுகுமுறை என்பது வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். ஒவ்வொரு பிரச்சினைகளையும், வரலாற்றில் எவ்வாறு தோன்றியது, அது தன் வளர்ச்சிப் போக்கில் என்னென்ன முக்கியமான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்ற நிலைகளில் நின்று ஆராயவதும், அவ்வாறு ஏற்பட்ட வளர்ச்சி நிலையில் இருந்து குறிப்பிட்ட பொருள் இன்று என்னவாக ஆகியிருக்கிறது என்று ஆராய்வதும், வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகும். அதாவது ஒவ்வொன்றையும் அடிப்படையான வரலாற்றுத் தொடர்பில் ஆராய வேண்டும். 

கம்யூனிஸ்டுகள் அரசு பற்றிய புரிதலுக்கு எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து அர’சு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்கிறார் லெனின். நவீன சோஷலிசத்தின் அடிப்படை நூல்களில் இது முக்கியமானது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் நம்பிக்கையோடு ஏற்காலாம் என்று லெனின் கூறுகிறார். 

இந்த நூலில் உள்ளவை அனைத்தையும் எல்லோரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்பதில் ஐயமில்லை. வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவுடைய வாசகரை மனதில் கொண்டே, இந்நூலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் இந்த நூலைப் படித்தும், அதை உடனேயே புரிந்து கொள்ள முடிவவில்லை என்றால்,. நீங்கள் கலக்கம் அடையக் கூடாது என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். எங்கெல்சின் இந்த நூலைப் படிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை லெனின் இங்கே வெளிப்படையாகக் கூறியுள்ளார். இருந்தாலும், அரசு பற்றிய மார்க்சிய அணுகுமுறைக்கு எங்கெல்சின் நூல் சரியான வழியைக் காட்டுவதால், லெனின் இந்நூலை கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்கிறார். 

அனைத்துப் பிரச்சினையையும் அதன் வரலாறு முழுவதன் மீதும் பார்வை செலுத்துவது இன்றியமையாததாகும். அதே போல அரசு பற்றியும் அதன் வரலாற்று வழியில் வளர்ச்சி அடைந்துள்ளதை காண வேண்டும். 

அரசு இல்லாத காலம் ஒன்று இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதி மனிதன் பழங்குடிகளாக வாழும் நிலையில் அங்F, அரசு காணப்படவில்லை. 

எந்தச் சமூகத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றியதோ அங்கெல்லாம் சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்கள், இந்த வர்க்க முரணில், சுரண்டலுக்கு ஆளானவர்களை ஒடுக்குவதற்குத் தான் அரசு தோன்றியது. 

வர்க்கங்கள் தோன்றாத பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆதிகாலக் கம்யூனிசமாக இருந்தது. அங்கே அரசு தோன்றவில்லை. இன்று காணப்படுகிற பழங்குடி மக்களிடம் வர்க்க வேறுபாடுகள் இல்லை, அதனால் அங்கே அரசு தேவைப்படவும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட பழங்குடி சமூகத்தில் வழக்கம், மரபு ஆகிவற்றின் ஆதிக்கத்தையும், குலத்தலைவர்களின் செல்வாக்கையும் காணமுடிகிறது. 

குல அதிகாரம் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இன்றைய வர்க்க சமூகத்தில் பொண்கள் ஒடுக்கப்படுகின்றனர். வர்க்க அற்ற சமூகத்தில் பெண்கள் ஒடுக்கப்படவில்லை. பெண் அடிமைத்தனமும் வர்க்கத்தைப் போலச் சொத்துடைமையின் அடிப்படையில் தோன்றியதே ஆகும். 

பழக்கவழக்கம், சம்பிரதாயம், குலத்தின் மூத்தோர்கள் அல்லது பெண்கள் அன்றைய சமூகத்தை நிர்வகித்தனர். வர்க்க மற்ற அந்தச் சமூகத்தில் தேவைப்படுகிற ஒழுங்குமுறை இவ்வாறு நிறுவகிக்கப்பட்டது. அன்றைய நிலையில் ஆண்களுக்கு இணையான நிலையினையே பெண்கள் பெற்றிருந்தனர். பல நேரங்களில் ஆண்களைவிடப் பெண்களே தலைமையிடத்தைப் பிடித்திருந்தனர். 

தேவைப்படுவதைவிடக் கூடுதலான உபரி கிடைத்த போது அந்தப் பழங்குடி சமூக நிலைமை சிதைந்தது. பழங்குடிகளிடையே பயன்படுத்திய கருவிகளின் வளர்ச்சியின் விளைவே இந்த உபரிக்குக் காரணம் ஆகும். இந்த உபரியை முன்புபோலச் சமமாகப் பகிர்ந்து கொள்ளாமல் வேறுபடும் போது அந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம், வர்க்க சமூகமாக மாறுகிறது. 

லெனின் கூறுவதை நேரடியாகப் பார்ப்போம்:-

“எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்கள் இடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிற, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு, அப்போது அரசு என்பது மக்களை நிர்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது” 

அரசு பற்றிய உண்மையான சாரம் இதுதான், ஒடுக்கத்துக்கு ஆளான உழைக்கும் மக்களின் எதிர்ப்பை வலுவந்தமாக அடக்குவதற்குத் தேவைப்பட்ட இயந்திரமே அரசு. 

விதிவிலக்கில்லாமல் அனைத்து நாட்டிலும் அரசு இவ்வாறுதான் தோன்றியது. அரசின் தோற்றம் இறுதியில் முழுமை பெறுவது, வர்க்க சார்பின் அடிப்படையில்தான் என்பதை உலக வரலாறு உறுதிபடுத்துகிறது. 

அடுத்து ஐரோப்பாவில் தோன்றிய வர்க்க சமூகத்தைப் பற்றி லெனின் கூறுகிறார். 

ஆதி பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பிறகு, ஆண்டான் அடிமை சமூகம் தோன்றியது. நாகரீகம் படைத்த இன்றைய ஐரோப்பா முழுவதும், இந்தக் கட்டத்தைக் கடந்து தான் வந்திருக்கின்றது. ஆண்டைகள் அடிமைகளைத் தங்கள் உடைமையாகவே பார்த்தனர். அன்றைய அரசின் சட்டம் இதனை உறுதிப்படுத்தியதோடு, அடிமையை முழுக்கவும் ஆண்டைக்கே உரிமையாக்கப்பட்ட ஒரு பொருளாகக் கருதியது. 

குறைந்த வளர்ச்சி பெற்ற மக்களிடம் இன்றைக்கும், அடிமை முறையின் அடையாளங்கள் நீடித்திருப்பதைக் காண முடிகிறது. ஆப்பிரிக்காவில் இன்றைக்கும் இதனைக் காணலாம். இந்தியாவில் காணப்படும் சாதிய முறையும் இந்த அடிமை முறையோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்பதையும் இங்குச் சேர்த்துக் கூறப்பட வேண்டும். 

அடுத்துப் பண்ணை அடிமை முறை, அதாவது நிலப்பிரபுத்துவ முறை. மிகவும் பெரும்பாலான நாடுகளில் அடிமை முறையின் வளர்ச்சிப் போக்கில் நிலப்புரபுத்துவ முறை உருவானது. நிலப்பிரபுத்துவத்தில் வர்க்க முரணானது, பண்ணை நிலப்பிரபுவுக்கும், பண்ணை அடிமைகளுக்கும் இடையே நிலவியது. அடிமை சமூகத்தில் அடிமைகளை ஆண்டைகள் தன்னுடைய உடைமைப் பொருளாகப் பார்த்தனர். ஆனால் நிலப்பிரபுத்துவத்தில் விவசாயிகளை நிலப்பிரபுவின் உடைமைப் பொருளாகக் கருதப்படவில்லை. சில வேலைகளைக் கட்டாயப்படுத்திச் செய்ய உரிமையை நிலப்பிரபு பெற்றிருந்தார். 

நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் வளர்ச்சி கட்டத்தில், வாணிபம் விரிவடைந்தது, உலகச் சந்தை உருவானது, பணப் புழக்கம் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியில் ஒரு புதிய வர்க்கம் தோன்றியது. அந்தப் புதிய வாக்கம் தான் முதலாளித்துவ வர்க்கம். 

முதலாளித்துவத்தின் மூலதன ஆதிக்கம், சரக்கில் இருந்தும், சரக்கு மாற்றத்தில் இருந்தும், பணத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் தோன்றியது. முதலாளித்துவப் புரட்சி மேற்கு ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டது. 

ரஷ்யாவில் 1861ஆம் ஆண்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவம் அகற்றப்பட்டு முதலாளித்துவம் தோன்றியது. இருந்தாலும் ரஷ்யாவில் பண்ணையடிமையின் பல்வேறு அடையாளங்களும் மிச்சசொச்சங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. என்றாலும் வார்க்கப் பிரிவினை அடிப்படையில் ஒரு புதிய உருவத்தை ஏற்படுத்தியது. 

நிலப்பிரபுத்துவச் சமூத்தின் வளர்ச்சியில், வாணிபம் வளர்ச்சி அடைந்தது, உலகச் சந்தை விரிவடைந்தது, பணப் புழக்கம் அதிகரித்தது, இதனை ஒட்டி முதலாளித்துவ வர்க்கம் தோன்றியது. 

முதலாளித்துவச் சமூகத்தில், மூலதனத்தை உடைமையாகக் கொண்டவர்கள், நிலத்தை உடைமையாகக் கொண்டவர்கள், தொழிற்சாலையை உடைமையாகக் கொண்டவர்கள், மக்கள் தொகையில் மிகமிகச் சிறுபான்மையினராகவே இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் மக்கள் அனைவரின் உழைப்பின் விளை பொருட்களை, முழுக்க முழுக்க முதலாளிகள் தங்களது வசத்தில் வைத்துக் கொண்டனர். உழைத்தும் வாழ்வுக்கு வழியில்லாத தொழிலாளர்களின் எழுச்சியினால் உருவாகும் எதிர்ப்பை மட்டுப் படுத்துவதற்கு அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தினர். 

புதுவகையான உழைப்பாளர்கள் முதலாளித்துவச் சமூகத்தில் தோன்றினர். அவர்களைப் பாட்டாளிகள் என்று அழைக்கப்படுகப்பட்டனர். பணம் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் மூலதனமாக மாறுவது போல், உழைப்பாளர்கள் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் பாட்டாளிகளாகப் பரிணமித்தினர். 

பாட்டாளிகளின் உழைப்பு ஒரு சரக்காக மாறுகிறது. தங்களது உழைப்பு சக்தி என்கிற சரக்கை விற்பதின் மூலம் மட்டுமே, தமது வாழ்க்கையை நடத்துவம் வகையில், கிராமங்களில் இருந்து, ஓட்டாண்டியாகக்ப்பட்டு நகர்புறத்துக்குத் தள்ளப்பட்டனர். 

சுரண்டல் சமூகம், முதலில் அடிமை சமூகமாக இருந்தது, அடுத்து நிலப்பிரபுத்துவச் சமூகமாக மாறி இறுதியில் முதலாளித்துவச் சமூகமாகப் பரிணமித்துள்ளது. இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். 

எல்லா அரசியல் போதனைகளையும், அரசு பற்றிய மார்க்சிய கருத்தின் அடிப்படையில் வைத்துப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைச் சரியான வகையில் மதிப்பிட்டு அறிந்து கொள்ளமுடியும். 

சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிவதற்கு முன்பு, அரசு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமூகத்தில் வர்க்க பிரிவினை ஏற்பட்டு உறுதியாக வேரூன்றிய பிறகு, அதன் கூடவே அரசு தோன்றி நிலைபெற்றது. 

வர்க்க வேறுபாட்டைக் கொண்ட, சமூகத்தினின்று தனித்துப் பிரிந்த, ஒர் இயந்திரமாக அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதில் முழுதும் அல்லது பெரும்பாலும் அளுகை செய்வது ஆதிக்க மக்களின் குழுவே ஆகும். சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோர், அரசின் பிரதிநிதிகள் என்று அழைக்கப்பட்டனர். 

இந்த அரசு என்கிற இயந்திரம், பௌதீக பலம் கொண்ட ஒரு குறிப்பிட்ட கருவியை எப்போதும் தன்னிடத்தில் வைத்துள்ளது. ஆதிகாலக் குண்டாந்தடி மூலமோ, அடிமை முறையில் சற்று மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ, மத்திய காலத்தில் சுடு கருவிகள் மூலமோ, இறுதியில் இன்றைய தொழில்நுட்பத்தில் புதிய சாதனங்களை ஆதாரமாகக் கொண்ட நவீனக் கருவிகள் மூலம், பலாத்காரததை உழைக்கும் மக்கள் மீது செலுத்துகிறது. 

இந்த விளக்கங்களின் மூலம், வர்க்கங்கள் இல்லாத காலத்தில், சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் இல்லாத காலத்தில் அரசு என்பது இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

ஏன் அரசு அங்கு இல்லை? என்று கேள்வி எழுப்பிச் சிந்தித்தோமானால் நமக்குக் கிடைக்கும் பதில், வர்க்கங்கள் அங்கே இல்லாத காரணத்தால், வர்க்க சார்பான ஒடுக்கும் இயந்திரமான அரசு என்பது அங்குத் தேவைப்படவில்லை. 

இதன் மூலம் நமக்குத் தெளிவாவது என்னவென்றால், வர்க்கங்கள் உருவான போதே அரசு தோன்றியது. 

அரசு ஏன் தோன்றியது?, அரசு ஏன் தேவைப்பட்டது?, அரசு யாருக்கானது? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்பதின் மூலமே, அரசின் கருபொருள் என்ன, அதன் பாத்திரம் என்ன என்பது பற்றி ஒரு திட்டமான பதிலைப் பெற முடியும். 

அரசு பற்றியும், வரலாற்றில் அதன் தோற்றம் பற்றியும் அறிந்த பின்பு. நமக்குத் தெளிவாகப் புரிவது என்னவென்றால், “அரசு என்பது, ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வாக்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்.” 

அரசு தோன்றியதின் வரலாற்றின் தொடக்கத்தை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். 

சமூகம் வர்க்கங்களாகப் பிரிவதின் முதல் வடிவம் தோன்றிய போதுதான், மக்களின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் உழவுத் தொழிலில் சற்றும் பண்படாத முறைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் தேவைக்கு மேல் ஓரளவு உபரிப் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட போது, அதனை ஆண்டைகள் அபகரிக்கும் போது, இந்த அபகரிப்புக்கு எதிராக உழைப்பவர்களின் எழுச்சியை அடங்குவதற்கு, பலாத்கார இயந்திரமாக அரசு தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

சுரண்டும் ஆதிக்க வர்க்கமும், சுரண்டலுக்கு ஆளான உழைக்கும் வர்க்கமும் தனித்தனியாகப் பிரிந்த போது, அவ்விருவர்களின் நலன்களும் மோதுகின்றன. சுரண்டலுக்கு எதிராகப் போராடும், உழைக்கும் வர்க்கத்தின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும், சமூகத்தில் பெரும்பாலான உழைக்கும் வர்க்கம், உழைப்பில் இருந்து விடுபட்ட வர்க்கத்திற்கு முறையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்துவதற்கும் அரசு தேவைப்பட்டது. 

வர்க்கப் பிரிவுகள் தோன்றாதவரை அரசு என்கிற ஒடுக்கும் இயந்திரம் தேவைப்படவில்லை, வர்க்கப் பிரிவு ஏற்பட்டு உறுதி பெற்றவுடன், உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதற்கு, அரசு என்கிற உறுதியான இயந்திரம் உருவானது. 

அரசின் வடிவங்கள் வேறுபட்டிருந்தாலும், அதன் சாரம் ஒன்றே ஆகும். 

பின்தங்கிய நாடுகளிலும், முன்னேறிய நாடுகளிலும் அரசு இயந்திரம் வேறுபட்ட வடிவத்தையே கொண்டுள்ளது. ஆனால் அதன் சாரம் மாறவில்லை. 

அடிமை சமூகத்தில் அடிமைகளை மனிதப் பிறவியாகக் கருதப்படவில்லை. அதுமட்டும் அல்லாது அவர்களைக் குடிமக்களாகவே மதிக்கப்படவில்லை. ஆண்டையின் உடைமைப் பொருளாக அடிமைகள் காணப்பட்டனர். 

அடிமைகள் வெறும் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலக் கருதப்பட்டனர். அந்த அரசு ஆண்டைகளின் நலன்களையே பிரதிபிலித்தது. அவர்கள் மட்டுமே குடிவுரிமை பெற்ற குடிமக்களாக மதிக்கப்பட்டனர். 

அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கு உருவான இயந்திரமே ஆகும். முடியரசாக இருந்தாலும்சரி, குடியரசாக இருந்தாலும்சரி இந்த வடிவ வேறுபாடுகளால் அரசின் சாராம்சம் மாறுவது இல்லை. 

அடிமை சமூகத்திற்குப் பிறகு நிலப்பிரபுத்துவச் சமூகம் தோன்றியது, இங்கே அடிமைச் சமூகத்தைப் போல உழைப்பாளிகளை உடைமைப் பொருளாகக் கருதவில்லை. நிலப்பிரபுத்துவத்தில் உழைப்பாளி தனக்கு உரிய நிலத்தில் பகுதி நேரம் வேலை செய்துவிட்டு, மற்ற நேரத்தில் நிலப்புரபுவின் நிலத்தில் உழைத்தார்கள். 

நிலப்பிரபுத்துவத்தின், குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் வாணிபம் பெரு வளர்ச்சி அடைந்தது, சரக்கு பரிமாற்றத்தின் வளர்ச்சி கண்ட போது நிலப்பிரபுத்துவச் சமூகம் சிதைந்தது, முதலாளித்துவச் சமூகம் தோன்றியது. அதன் விளைவாக நிலப்பிரபுத்துவ அரசு வீழ்ச்சிக் கண்டு, முதலாளித்துவ அரசு தோன்றியது. முடியரசு விழ்ச்சி கண்டு குடியரசு தோன்றியது. 

மன்னன் முடிசூட்டிக் கொண்டு ஆள்வது முடியரசு, குடிமக்கள் தேர்ந்தெடுப்பதின் மூலம் ஆளப்படுவது குடியரசு. முடியரசோ குடியரசோ எதுவாக இருந்தாலும் அரசின் வர்க்கச் சார்ப்பு மாறுவது இல்லை. முன்பு நிலப்பிரபுவின் நலன்களை அரசு பிரதிபலித்தது, இப்போது முதலாளிகளின் நலன்களை இந்த அரசு பிரதிபலிக்கிறது. 

இந்த முதலாளிதுவக் குடியரசின் சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம் என்று கூறுகின்றனர். சொத்துக்களை உடையவர்களாக இருந்தாலும்சரி, தமது உழைப்பு சக்தியைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லாத ஏழை உழைப்பாளர்களும்சரி, சட்டத்தின்படி சரி நிகரானவர் என்று கருதப்பட்டனர். ஆனால் அந்த அரசு சொத்துடையவர்களின் சொத்துக்களை, சொத்தில்லாத பெருவாரியான மக்கள் திரள் தாக்குவதில் இருந்து காக்கிறது. 

முதலாளித்துவ அறிஞர்களும், முதலாளிகளும், இந்த முதலாளித்துவ அரசு அனைத்து மக்களுக்கும் விடுதலை தருவதாக முழுக்கம் இட்டனர். அனைத்து மக்கள்களின் நலன்களை அரசு தீர்ப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் உண்மை இவ்வாறு இருக்கவில்லை. முதலாளித்துவ அரசு முதலாளிக்கான அரசாகவே இருக்கிறது. 

உழைப்பாளர்கள் தங்களது விடுதலைக்காக முதலாளித்துவ உற்பத்தி முறையையும், அதன் அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்னர் என்பதே யதார்த்தம் உண்மையாகும். 

நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் போது அனைவருக்கும் விடுதலை என்ற முழக்கத்தைத் தான் முதலாளித்துவம் முன்வைத்தது. ஆனால் உண்மையில் அது முதலாளிகளுக்கு மட்டுமே விடுதலையாக அமைந்தது. 

இதுவரை கண்டுள்ள அரசு மாற்றம் எல்லாம், அந்தந்த உற்பத்தி முறையில் காணப்படும் சுரண்டல் ஆதிக்க வர்க்கத்திற்கே சேவை செய்தது. ஏன் என்றால் அரசு என்பது தனியுடைமையைப் பாதுகாப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. 


ஒரு முதலாளித்துவ நாட்டில், அது மிகமிகச் சுதந்திரமான ஜனநாயகக் குடியரசாக இருந்தாலும், அந்த அரசு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் இயந்திரமாக இருந்ததா?

 

அரசு என்பது, நாட்டில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது, விவசாயி மக்களின் மீது முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் அரசு இயந்திரம் இருக்கிறதா? 

இது ஓர் அடிப்படையான பிரச்சினை ஆகும். 

உலகம் முழுதும் இதைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. 

ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடைபெற்ற பிறகு, அதன்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. 

முதலாளித்துவ அரசே ஜனநாயகமான அரசு, சோஷலிச அரசானது கொள்ளைக்காரர்களுடையது. 

போல்ஷிவிக்குகள் அனைத்து மக்களின் அரசான அரசியல் நிர்ணய சபையைக் கலைத்துவிட்டனர். சோஷலிச அரசின் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் திரும்பத்திரும்பத் தொடர்ந்து கூறப்படுகின்றன. 

சோஷலிச அரசின் மீதான இத்தகைய குற்றசாட்டுகளைப் புரிந்து கொண்டு, அதற்குக் கம்யூனிசத்தின் கொள்கை வழிபட்ட பதிலை அளிக்க வேண்டுமானால், அரசு பற்றி இதுவரை காதால் கேட்டதைக் கொண்டு அல்லாமல், கம்யூனிஸ்டுகளுக்கு உரிய உறுதியான கருத்தைக் கொண்டு, அரசைப் பற்றி ஆராய வேண்டும், அரசு என்றால் என்ன என்பது பற்றி நாம் தெளிவான கருத்தைப் பெற வேண்டும். 

விதம்விதமான முதலாளித்துவ அரசுகளும் இவற்றின் ஆதரவாக வாதிடுகிறவர்களின் கருத்துக்களும் நம்முன் இருக்கின்றன. இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டுமானால், முதலாளித்துவப் போதனைகளையும் கண்ணோட்டங்களையும் நாம் விமர்சனக் கண்கொண்டு ஆராய வேண்டும். 

இதற்கு, எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை படிப்பது அவசியம் என்கிறார் லெனின். அந்த நூலில் உள்ள சாரத்தை லெனின் இங்கே தொகுத்துத் தந்துள்ளார். அதனை அப்படியே பார்ப்போம்.

 

“நிலத்திலும் உற்பத்திச் சாதனங்களிலும் தனிச்சொத்து நிலவும் ஒவ்வோர் அரசும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வோர் அரசும், எவ்வளவுதான் ஜனநாயகத் தன்மை உடையதாக இருப்பினும், அது முதலாளித்துவ அரசேயாகும், தொழிலாளி வர்க்கத்தையும் ஏழைக் குடியானவர்களையும் அடிபணிய வைப்பதற்காக முதலாளிகளால் பயன்படுத்தப்படும் இயந்திரமாகும் என்று அந்த நூல் கூறுகிறது. அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை, அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்றம் என்பனவெல்லாம் வெறும் வெளித்தோற்றமே, ஒரு விதமான கடன்பத்திரமே ஆகும், உண்மை நிலைமையை இது மாற்றுவதில்லை என்றும் அது கூறுகிறது.” 

இதுதான் அரசின் சாராம்சம் ஆகும். 

இதனைப் பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் காண வேண்டும். அப்போதுதான் அரசு மீதுள்ள வர்க்க சார்பைப் புரிந்து கொண்டு, அதனை எதிர்கொள்ள முடியும். 

அரசு செலுத்துகிற ஆதிக்கத்தின் வடிவங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மூலதனத்தின் கரங்களில்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. குடியரசு எவ்வளவு ஜனநாயகத் தன்மை பெற்றதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும், முதலாளிகளின் நலன்ககைளை வெளிப்படுத்தும் இழிந்த தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. 

அடுத்து அமெரிக்காவைப் பற்றி லெனின் கூறுகிறார். 

அமெரிக்க அரசை இன்றும் மிகச் சிறப்பான ஜனநாயகத் தன்மை கொண்டதாகப் பலபேர் கருதுகின்றர். ஆனால் அன்று லெனின் கூறியபடியே இன்றைய அமெரிக்காவும் காட்சி அளிக்கிறது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை, அதன் ஜனநாயகத் தன்மையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அமெரிக்காவைப் பற்றி அன்று லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம். 

உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தன்மை உடைய குடியசரசுகளில் ஒன்றான அமெரிக்க ஐக்கிய நாட்டில், பண்பற்ற வகையில், பட்டவர்த்தனமாக ஊழல் மிகுந்த வகையில், சமூகம் முழுவதின் மீதும் மூலதனத்தின் அதிகாரமும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கோடீர்ஸ்வரர்களின் ஆதிக்கமும் செலுத்துகிறது. 

எந்த ஜனநாயகக் குடியரசாக இருந்தாலும், அங்கும் மூலதனத்தின் ஆதிக்கம் மேலோங்கியே இருக்கும். அரசின் அடிப்படைச் சாரம் மாறவே மாறாது. 

நிலப்பிரபுத்துவ அரசான முடியரசை ஒப்பிடும் போது, முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு அளித்துள்ள, அனைத்து மக்களுக்கு உரிய வாக்குரிமை என்பது பிரம்மாண்டமான முன்னேற்றமாகும். 

பாட்டாளி வர்க்கம் இன்று பெற்றுள்ள ஒற்றுமையும், ஒருமைப்பாட்டை அடைவதற்கும். மூலதனத்தை எதிர்த்து முறையாகப் போராடுகின்ற உறுதியும் கட்டுப்பாடும் பெற்ற அணிகளாக உருவாவதற்கு முதலாளித்துவ ஜனநாயகமே வாய்ப்பு அளித்தது. 

உழைப்பாளர்களுக்கு, இதுவரை இல்லாத வாய்ப்பாக, முதலாளித்துவக் குடியரசு வாக்குரிமை என்பதை அளித்துள்ளது. இதனைப் பயன்படுத்துவதைப் பற்றியே லெனின் இங்கே கூறியுள்ளார். இந்த வாய்ப்போடு அதாவது சீர்திருத்த போராட்டத்தோடு நின்று போவதையே மார்க்சியம் எதிர்க்கிறது. 

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் உழைப்பாளர்களை அணிகளாகத் திரட்ட முடியாது என்று லெனின் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்தச் சீர்திருத்தத்தோடு நின்ற போகிறவர்கள் வலதுதிரிபுவாதிகளாவர், அதே போல முதலாளித்துவம் அளிக்கிற ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதை மறுப்பவர்கள் அராஜகவாதிகளாவர். மார்க்சியம் என்பது இந்த இரண்டு திரிபுக்கும் மாறானது. 

முதலாளித்துவத்தில் கிடைக்கின்ற இந்த வாய்ப்பு நிலப்பிரபுத்துவதில் இல்லை. அடிமைச் சமூகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

அடிமைகள் கிளர்ந்து எழுந்தனர், கலகம் செய்தனர், உள்நாட்டுப் போர்களைத் தொடங்கினர், ஆனால் அந்தப் போராட்டத்தால், வர்க்க உணர்வுள்ள பெரும்பான்மையினைரையும், போராட்டத்தை நடத்துவதற்கு வேண்டிய கட்சியையும் அடிமைகளால் ஒருபோதும் உருவாக்க முடியவில்லை. 

அடிமைகள் எந்தக் குறிக்கோளுக்காகப் போராடுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் ஆளும் வர்க்கங்களின் கைப்பாவையாகவே இருந்தனர். 

இவைகளைக் காணும் போது, முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை போன்றவை மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. 

முதலாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், தன்னைத்தானே உணரும்படி செய்தது. உலகத் தொழிலாளி இயக்கத்தை உருவாக்க வாய்ப்பளித்தது. திரளான மக்களின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திச் செல்லும் கம்யூனிசக் கட்சிகளாக அமையும்படி செய்தது. 

நாடாளுமன்ற முறை இல்லையேல், தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிலாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது. 

ஆனால் இதைத் தவறாகப் புரிந்து கொண்ட பெரும்திரளான மக்களின் பார்வைக்கு, அரசு சுதந்திரமானது என்றும், அனைவருடைய நலன்களையும் அரசு பாதுகாப்பது அதன் கடமை என்று முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் கூறும் தப்பெண்ணங்களுக்கு அவர்கள் அட்பட்டனர். 

உண்மையில் முதலாளித்துவக் குடியரசில் உள்ள நாடாளுமன்றத்தில் மூலதனத்தின் செல்வாக்கு வலுவுடன் காணப்படுகிறது. நாடாளுமன்றமும் தேர்தல்களும் வெறும் கைப்பாவை தான். 

இதனைக் கண்ணுற்ற உழைக்கும் மக்களின் பார்வை மாறுகிறது. ருஷ்ய நவம்பர் புரட்சியின் ரத்தக்களரிக்கு பிறகு மேலும் தெளிவு பெறப்படுகிறது. இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தால் விடுதலை கிடைக்காது என்ற தெளிவு தொழிலாளர்களின் மத்தியில் ஏற்படுகிறது. முதலாளித்துவத்துக்கு எதராக இடைவிடாத போரை நடத்த வேண்டியதின் அவசியத்தைத் தொழிலாளி வர்க்கம் ருஷ்யப் புரட்சிக்குப் பிறகு தெளிவு ஏற்படுகிறது. 

முதலாளித்துவ அரசு, மிகுந்த ஜனநாயகத் தன்மையுடன் செயற்பட்டாலும், முதலாளித்துவ நலன்களை வெளிப்படுத்தும் குடியரசு தான் அது. இந்த அரசால் உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடைக்காது. 

தனிவுடைமை நிலவுகிற வரை, மூலதனமும் கூலியடிமை முறையும் இருக்கும்வரை, சிறுபான்மையான ஆதிக்க வர்க்கத்தின் நலனையே அரசு பிரதிபலிக்கும், அந்தச் சுரண்டல் வர்க்கத்தினரால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான இயந்திரமாகவே அரசு செயற்படும். 

கூலி அமைப்புமுறை இருக்கும்வரை அரசின் தன்மை மாறாது. 

கூலி அமைப்புமுறையில் இருந்து தொழிலாளர்கள் விடுதலை பெற வேண்டுமானால், மூலதனத்தின் ஆதிக்கம் தூக்கி எறியப்பட வேண்டும், அந்த அரசு இயந்திரத்தை தொழிலாளர்கள் தங்களுக்கானதாக மாற்ற வேண்டும். இதைச் சாதிப்பதற்கு, அரசு என்பது அனைத்து மக்களுக்கான சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது என்கிற பழைய தப்பெண்ணகளை விட்டுவெளியேற வேண்டும். 

சுரண்டல் நீடிக்கும்வரை சமத்துவத்திற்கு இடமில்லை. 

சுரண்டுபவனும் சுரண்டப்படுபவனும் ஒன்று என்று கூறிவிட முடியாது, நாள் முழுதும் உழைத்தும், அடிப்படைத் தேவைக்கு அல்லாடுபவனும், உண்டு கொழுத்த சுரண்டும் மனிதனும் எப்படிச் சமம் என்று கூறிடமுடியும். 

அரசு என்பது அனைத்து மக்களுக்குமான ஆட்சி என்று கூறுகிற பழங்கதைகளை இனி நம்பிக் கொண்டிருக்க முடியாது. 

அரசானது உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவியே என்பதை அறிந்து கொண்ட பாட்டாளிகள், அரசு பற்றிய முதலாளித்துவத் தப்பெண்ணங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். 

அரசு என்பது ஒடுக்கும் கருவியே என்பதை அறிந்து கொண்ட பாட்டாளிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மூலதன ஆதிக்கத்தையும், ஜனநாயகக் குடியசரசு என்று கூறப்படுகிற முதலாளிகளின் சர்வாதிகாரத்தையும் தூக்கி எறிந்து, சோஷலிச அரசு என்கிற பாட்டாளி வர்க்க சார்வாதிகாரத்தை நிறுவுவர். 

இதுவரையில், அரசானது சிறுபான்மையினருக்கு உடையதாக இருந்தது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் உழைக்கும் மக்களின் அரசாக, பெரும்பான்மையினரின் அரசாகச் செயற்படும்.     

சோஷலிச வளர்ச்சியின் அடுத்தக் கட்டமான கம்யூனிச நிர்மாணத்தில், சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமலும், நிலச் சொந்தக்காரர்கள், ஆலைச் சொந்தக்காரர்கள் என்கிற சிந்தனையே இல்லாமலும், சிலர் மட்டும் உழைப்பின் விளைவை வாரிவாரி அனுபவிப்பதும், உழைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு கிட்டாத நிலை இல்லாலும் உள்ள வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அரசு என்கிற இயந்திரம் தேவையில்லாது குப்பையில் தூக்கி வீசப்படும். 

அப்போது அரசு என்கிற இயந்திரம் தேவைப்படாது, ஏன் என்றால் அந்தச் சமூகம் வர்க்க அற்ற சமூகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். 

அரசு என்பது தேவையற்று உலர்ந்து போகும். அதற்குப் பிறகு வர்க்க சார்பற்ற நிர்வாகம் மட்டுமே தொடரும். அன்றைய வளர்ச்சி அடைந்த சமூகத்திற்குத் தேவையான திட்டமிடலையும், அதனை நடைமுறை படுத்துவதையும் அந்த நிர்வாகம் விரிவான வகையில் செயல்படும். 

இதுவே நம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு பற்றிய பார்வை ஆகும். 

லெனின் எழுதிய “அரசு” என்கிற நூலில் கூறப்பட்டதைப் பலமுறை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இதற்கு அடுத்து, லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலையும், எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலையும் படிக்க வேண்டும். 

அரசு பற்றிய இத்தகைய நூல்களைப் படித்து, அரசு பற்றிய கம்யூனிசப் பார்வையில் சுயமாகத் தெளிவு பெற்று, அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் இதன் அடிப்படையில் புரிந்து கொண்டு சிறந்த கம்யூனிஸ்ட்டாகச் செயற்பட வேண்டும். 

இதுதான் அரசு பற்றிய இந்த வகுப்பின் நோக்கமாகும். இந்தச் செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தின் நோக்கமும் அதுவே ஆகும்.

No comments:

Post a Comment