Saturday 30 January 2021

லெனின் எழுதிய “மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்” சுருக்கமும் சாரமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் (30-01-2021) எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்” என்ற சிறு கட்டுரையை இன்று பார்க்கப் போகிறோம். மொத்தம் 6 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறு கட்டுரை 1913ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இது மிகவும் சிறியதாக இருந்தாலும் இன்றும் தொழிலாளர் இயக்கங்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கிறது. 

இந்தக் கட்டுரையில் அராஜகவாதிகளான இடது தீவிரவாதிகளைப் பற்றிய கருத்தோடு லெனின் தொடங்குகிறார். ஆனால் இந்தக் கட்டுரையில் அதிகமாக வலதுதிரிபான சீர்திருத்தவாதத்தைப் பற்றியே எழுதியுள்ளார். 

சீர்திருத்தம் என்று லெனின் எதைக்குறிப்பிடுகிறார்? என்பதை முதலில் பார்ப்போம். 

சுரண்டல் சமூகத்தில் அதன் ஆட்சி அதிகாரத்தை அழிக்காமலேயே உழைப்பாளி மக்களுடைய நிலமைகளை மேம்படச் செய்வதற்கான போராட்டமாகும். 

கூலியுர்வு போன்ற பொருளாதாரத்திற்கான போராட்டத்தைச் சீர்திருத்த போராட்டம் என்று கூறலாம். இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சட்டவழிப்பட்ட போராட்டம் என்று கூறலாம். அதாவது இன்றைய ஆதிக்கச் சமூகம் அனுமதிக்கின்ற போராட்டங்களைச் சீர்திருத்த போராட்டம் ஆகும். 

அராஜகவாதிகள் எனப்படுகின்ற இடதுதீவிரவாதிகள் சீர்திருத்த போராட்டத்தை ஏற்பதில்லை. லெனின் இந்தச் சிறு கட்டுரையின் தொடக்கத்திலேயே, அராஜகவாதிகளைப் போல் அல்லாது மார்க்சியவாதிகள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர் என்பதைச்.சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கு அடுத்து லெனின் சீர்திருத்தவாதிகளை விமர்சிக்கிறார். 

சீர்திருத்த நடவடிக்கை வேறு, சீர்திருத்தவாதிகளின் நடவடிக்கை வேறு. 

சீர்திருத்தத்தைப் பற்றி நாம் தொடக்கத்திலேயே பார்த்தோம். ஆளும்வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலே உழைக்கும் மக்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்தவற்கான போராட்டம் சீர்திருத்தம் என்று பார்த்தோம். மேலும் இந்தச் சீர்திருத்ததை அராஜகவாதிகளைப் போல் அல்லாது மார்க்சியவாதிகள் மறுப்பதில்லை என்பதையும் பார்த்தோம்.

இங்கே அராஜகவாதிகளிக்கு அப்படியே எதிர் முனையான சீர்திருத்தவாதிகளை லெனின் மறுதலிக்கிறார். 

சீர்திருத்தவாதிகள் என்று யாரை லெனின் குறிப்பிடுகிறார்? 

தொழிலாளி வர்க்கத்தின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதுடன் நின்றுவிடுபவர்கள் சீர்திருத்தவாதிகளாவர். அதாவது இறுதி குறிக்கோளை மறந்துவிட்டு இன்றைய போராட்டத்துடன் தங்களின் செயற்பாட்டைச் சுருக்கிக் கொண்டவர்கள் சீர்திருத்தவாதிகள். 

இறுதிக்குறிக்கோளை மறந்துவிட்டு, சீர்திருத்தத்தோடு முடங்கிப்போன சீர்திருத்தவாதிகள், அறியாதது என்னவென்றால், மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கிறவரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்பட்டாலும், கூலி அடிமை அமைப்புக்கு முன்பாகத் தொழிலாளர்கள் கூலி அடிமைகளாகவே இருப்பர். இந்த அமைப்புக்குள் இதில் இருந்து விடுதலை கிடைக்காது. 

இதை அறியாது சீர்திருத்த போராட்டத்துடன் நின்று போகிற சீர்திருத்தவாதிகளின் சீர்திருத்தமானது, முதலாளித்துவ வழியில் தொழிலாளர்களை ஏமாற்றுவதுதான் இதன் விளைவாகும் என்று லெனின் கூறுகிறார். 

லெனின் “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலில் இதை விரிவாகவே கூறியுள்ளார். தொழிற்சங்கப் போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டம் தான், அந்தப் போராட்டமானது தொழிற்சங்கவாதப் போராட்டமாகச் சுருக்கிவிடும் போது அது முதலாளித்துவ அரசியல் போராட்டமாக மாறிவிடுகிறது. 

இந்த அரசியல் போராட்டம் இறுதி குறிக்கோளுடன் இணையும் போதுதான் கம்யூனிச அரசியலாக ஆகிறது. கூலி உயர்வுக்கான போராட்டம் கூலி அமைப்பு முறை ஒழிப்புக்கான போராட்டமாக மாற்றப்பட வேண்டும். 

கூலி உயர்வு என்கிற பொருளாதாரத்திற்கான போராட்டத்தைக் கூலி அமைப்பு முறை ஒழிப்புக்கான வர்க்கப் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். 

இந்தச் சீர்திருத்தவாதிகள் ஒன்றை முழுமையாக மறந்துவிடுகின்றனர். மிதவாத முதலாளிகள் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கிவிட்டு, மறுகையால் அதனை வேறுவழிகளில் திரும்ப எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் இந்த மிதவாத முதலாளிகள், பெறப்பட்ட சீர்திருத்தத்தை, பயன் அற்றனவாக ஆக்கிவிடுகின்றனர். 

சீர்திருத்தவாதமானது, தொழிலாளர்களைத் தொடர்ந்து அடிமைப்படுத்தவும், தனித்தனி குழுக்களாகப் பிளவுறச் செய்யவும், கூலி அடிமை முறையை நிரந்தரமாக நீடிக்கவும் செய்கின்றது. இந்தக் காரணத்தினால் சீர்திருத்தவாதமானது, தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கம் சீர்கெடுக்கப்பதற்கும் பலவீனப்படுத்துவதற்குமான ஓர் ஆயுதமாய் நடைமுறையில் ஆகிவிடுகிறது. 

சீர்திருத்தவாதிகளின் செயல்களால், தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைப்பதற்குப் பதில், சீர்கெடும் பலவீனமும் ஏற்படுகிறது. 

சீர்திருத்தவாதிகளை நம்புகிற தொழிலாளர்கள் எப்பொழுதும் ஏய்க்கப் படுகிறார்கள் என்பதை அனைத்து நாடுகளின் அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகிறது. 

மார்க்சியத்தை ஒருங்கிணைந்து புரிந்து கொண்ட தொழிலாளர்கள், மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரை கூலியடிமை முறையைத் தவிர்க்க முடியாததாகும் என்பதை உணர்ந்து கொண்டதால், சீர்திருத்தவாதத்தால் ஏமாறாம் அடையாமல் காக்கப்படுகின்றனர். 

தொழிலாளர்கள் தங்களது கட்சி சீர்திருத்தவாதத்தின் வழியில் செல்கிறதா? என்பது சுயமாக அறிந்து கொள்வதற்கு, மார்க்சியத்தை ஒருங்கிணைந்த முறையில் படித்து அறிந்து கொள்ள வேண்டும். 

முதலாளித்துவம் தொடர்ந்து நீடித்திருக்கிறவரை, சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்கவோ, அதிகப் பயன் அளிப்பதாகவோ இருக்காது என்பதை மார்க்சியம் அறிந்த தொழிலாளர்கள் தெளிவோடு இருக்கின்றனர். மார்க்சிய புரிதலுக்கு வந்த தொழிலாளர்கள், கூலியடிமை முறைக்கு எதிரான போராட்டத்தை மும்முரமாக்குவதற்காக இத்தகைய மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 

இது மார்க்சியத்தால் விழிப்படைந்தவர்களின் நிலை. 

இத்தகைய மேம்பாட்டில் முடங்கிப் போன சீர்திருத்தவாதிகளின் போக்குகள் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் வேலையையே செய்கிறது. 

சீர்த்திருத்தவாதிகளின் செய்கைகள் தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்தில் இருந்து திசைதிருப்பிவிடுகிறது. 

மார்க்சியப் புரிதலுடன் இருக்கிற தொழிலார்கள் இதனைப் புரிந்து கொண்டு, தங்களது வர்க்கப் போராட்டத்தை வளர்த்துக் கொள்வதற்கும், விரிவாக்கிக் கொள்வதற்கும் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

இந்தச் சீர்திருத்தவாதிகளின் போக்கால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீங்கை மிகச் சரியாகவும் நேரடியாகவும் லெனின் கூறியுள்ளார். 

தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் ஏற்படுகிறதோ, அந்தளவுக்குத் தொழிலார்கள் பலம் இழந்தவர்களாகிவிடுகிறார்கள். தொழிலாளர்கள் முதலாளியை அண்டி வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிறார் லெனின். 

கிடைக்கின்ற சீர்திருத்த மேம்பாட்டை மனதில் வைத்து சீர்திருத்தவாதிகளின் இத்தகைய ஆபத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. 

தொழிலாளி வர்க்கத்தின் இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாய் இருக்கிறதோ, தமது இறுதிக் குறிக்கோளில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாகவும் விரிந்து இருக்கிறதோ, சீர்திருத்தவாதக் குறுகிய நோக்கில் இருந்து எவ்வளவு விடுபட்டு இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்களின் மேம்பாடுகளை பெற்றுக் கொள்வதுடன், இறுதிக் குறிக்கோளுக்காகவும் போராடுகிறது. 

அனைத்து நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கின்றனர். ஏன் என்றால் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏதேனும் ஒரு வழியில் தொழிலாளர்களைச் சீரழிக்கவே முயற்சிக்கின்றனர். தொழிலாளர்கள் அடிமைமுறையை ஒழித்திட வேண்டும் என்கிற நினைப்பில் இருந்து விடுபட்டு, மனநிறைவோடு அடிமைகளாய் மாற்ற முயற்சிக்கின்றனர் இந்த முதலாளிகள். சீர்திருத்தவாதம் இதற்கே பயன்படுகிறது. 

இதனை ஒட்டி லெனின் ருஷ்ய நிலைமைகளைச் சுட்டிக்காட்டுகிறார், ருஷ்ய சீர்திருத்தவாதிகள், சட்டவழியிலான கட்சி பற்றிய கனவுகளை விதைத்து, தொழிலாளர்களை எழுச்சி கொள்ளாமல் உறங்க வைத்தனர். 

அடுத்து, ருஷ்யக் கலைப்புவாதிகளின் போக்கை லெனின் விமர்சிக்கிறர். அதன் இறுதியில் கூறுகிறார், கலைப்புவாதிகள் கோட்பாட்டளவில் சீர்திருத்தவாதத்தை நிராகின்றனர், ஆனால் நடைமுறையில் அதனையே பின்பற்றுகின்றனர். 

கலைப்புவாதிகள் ஒருபுறம் சீர்திருத்த செயல்பாடுகள் இறுதிக் குறிகோளுக்குப் போதுமானது அல்ல என்று உறுதி கூறுகின்றனர், ஆனால் மறுபுறத்தில், சீர்திருத்த போராட்டத்துக்கு அப்பால் மார்க்சிய வழியில் செல்கிற ஒவ்வொரு நிகழ்வையும் தாக்குகின்றனர். 

எந்தக் குழப்பத்தையும் ஏற்படாமல் இருக்க லெனின் தமது கருத்து தெளிவாக முன்வைத்துள்ளார்.

 

“சீர்திருத்தங்களை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வதிலும், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதிலும் மார்க்சியவாதிகள் பின்னிலையில் தங்கிவிடவில்லை, மாறாக நிச்சயமாய் முன்னிலையில்தான் இருக்கின்றனர் என்பதைத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு அரங்கிலும் நிகழ்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன.”

என்று லெனின் தமது கருத்து தெளிவாக முன்வைத்துள்ளார். 

இதற்கு அடுத்து லெனின், ருஷ்ய நாடாளுமன்ற வடிவமான டூமாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். டூமாவின் உள்ளேயும் வெளியேயும் போல்ஷிவிக்குகளின் பிரதிநிதிகள் சொற்பொழிவு நிகழ்த்தினர். பத்திரிகை, இன்சூரன்ஸ் போன்ற சீர்திருத்தத்தையும் பயன்படத்திக் கொண்டனர். உண்மையில் சீரிதிருத்தவாதிகளான கலைப்புவாதிகளைவிட மார்க்சியர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னிலையிலே இருக்கின்றனர். 

அராஜகவாதிகள், இந்தச் சீர்திருத்தவாதிகளின் தவறுகளைக் சுட்டிகாட்டி குறைகூறுகின்றனர், அத்துடன் சீர்திருத்த போராட்டத்தை முற்றப் புறக்கணிக்கின்றனர். 

இந்தச் சிறு கட்டுரையில் மார்க்சியவாதிகள் சீர்திருத்த போராட்டத்தை இறுதிக்குறிக்கோளுடன் எவ்வாறு இணைந்து செய்ய வேண்டும் என்பது பற்றி லெனின் கூறியுள்ளார். 

சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியப்பாடுகள் ஒவ்வொன்றையும் தவறாது பயன்படுத்திக் கொள்ள மார்க்சியவாதிகள் அயராது வேலை செய்கின்றனர். பொருளாதாரப் போராட்டம் போன்ற சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் முன்னேற்றம் அடையவும் மார்க்சியவாதிகள் அரும்பாடுபடுகின்றனர். 

இதற்கு மாறாகச் சீர்திருத்தவாதிகள், இறுதிக்குறிக்கோளை மறந்துவிட்டு, சீர்திருத்த போராட்டத்துடன் தங்களை முடக்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தைச் சீர்குலைக்கின்றனர், பிளவுபடுத்துகின்றனர். 

அடுத்து லெனின், ஐரோப்பாவில் காணப்படும் சீர்திருத்தவாதத்திற்கும், ருஷ்யாவில் காணப்படும் சீர்திருத்தவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பதிவு செய்வதோடு இந்தச் சிறு கட்டுரையை முடிக்கிறார். 

ஐரோப்பிய சீர்திருத்தவாதமானது மார்க்சியத்தைத் துறந்துவிட்டு அதற்குப் பதிலாக முதலாளித்துவச் சமூகக் கொள்கையை மேற்கொள்கிறது. ருஷ்யாவில் காணப்படும் சீர்திருத்தவாதமானது, ஐரோப்பிய சீர்திருத்தவாதிகளின் போக்குடன், மார்க்சிய நிறுவனம் அழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கடமைகளைத் துறக்கவும் செய்து, அவற்றக்குப் பதிலாய் மிதவாதத் தொழிலாளர் கொள்கைகைப் பின்பற்றுகிறது. 

இங்கே லெனின் என்ன கூறுகிறார்?, தொழிலாளர்களின் புரட்சிகர நோக்கத்தைக் கைவிட்டு, மிதவாத போக்கை ஏற்பதைச் சுட்டிக்காட்டுகிறர். 

லெனினது இந்தக் கட்டுரை மிகவும் சிறியனவாக இருந்தாலும் தொழிலாளர் இயக்கத்தின் செயற்பாட்டுக்கான தடைகளைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் கட்டுரை மிகவும் எளிதானதுதான், ஆனால் இதைப் பின்பற்றுவதுதான் சிரமமானதாக இருக்கிறது. 

இந்தச் சிறுகட்டுரையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், சீர்திருத்த போராட்டத்தைப் புறக்கணிப்பது இடதுதிரிபான அராஜகவாதிகளின் செயல் ஆகும், அதே போலக் கூலி உயர்வு போன்ற சீர்திருத்த போராட்டத்துடன், தமது செயற்பாட்டை முடக்குவதுடன் தொழிலாளர்களின் இறுதிக்குறிக்கோளான கூலி அமைப்பு முறையை ஒழிப்பதை மறுப்பவர்கள் சீர்திருத்தவாதிகளான வலதுதிரிபுவாதிகளாவர். 

இந்த இரண்டு திரிபுகளையும் விமர்சிக்கும் மார்க்சியமானது, கூலி உயர்வுப் போராட்டம் போன்ற சீர்திருத்த போராட்டத்தைப் பயன்படுத்தி இறுதிக்குறிக்கோளான கூலி அமைப்பு முறையை ஒழிப்பதற்கும் சோஷலிச சமூகத்தைப் படைப்பதற்கும் போராடுகிறது. 

நமது நாட்டில் உள்ள இடதுதிரிபையும் வலதுதிரிபையும் பின்பற்றுகிற இயக்கத்தை இனம் கண்டு விமர்சித்து, சரியான மார்க்சிய வழியில் செல்ல வேண்டும். அப்போதுதான் சீர்திருத்த போராட்டத்திலும் வெற்றி கிடைக்கும், சமூக மாற்றம் என்கிற இறுதி குறிக்கோளுக்கான போராட்டத்திலும் வெற்றி கிட்டும். 

ருஷ்யப் புரட்சியின் அனுபவம் நமக்கு என்ன கூறுகிறது என்றால், சட்டவழியிலான போராட்டத்துடன் சட்டவழியற்றப் போராட்டத்தையும் இணைக்க வேண்டும். இந்த இணைப்பில் தான் போல்ஷிவிக் கட்சியின் வெற்றி அடங்கி இருக்கிறது. 

நமது நாட்டில் இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டுமானால் போல்ஷிவிக் போக்கை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். வலது-இடது போக்குகளில் இருந்து விடுபட வேண்டும். அப்போதுதான் மார்க்சிய வழிப்பட்ட பாதையில் பயணிக்க முடியும். வெற்றி பெற முடியும்.

No comments:

Post a Comment