Saturday 13 March 2021

1) “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையின் சுருக்கமும் சாரமும்

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில்

எடுக்கப்பட்ட (13-03-2021) வகுப்பின் குறிப்பு)

 மார்க்ஸ் தமது அரசியல் பொருளாதார ஆய்வை சுமார் 40 ஆண்டுகளாகச் செய்தார். தமது பொருளாதாரத்தின் அடிப்படைகளை 1859ஆம் ஆண்டு நிறைவு செய்கிறார். அவ்வாறு நிறைவு செய்த போது ஒர் அரசியல் பொருளாதார நூலை வெளியிட்டார். அந்த நூலின் பெயர் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு”.

இந்த நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையை மட்டும் இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம்.

மார்க்ஸ், இந்த முன்னுரையில், தமது அரசியல் பொருளாதார ஆய்வின் வளர்ச்சி பற்றிய சுருக்கத்தைக் கொடுத்துள்ளார். அதற்கு அடுத்து இந்த அரசியல் பொருளாதார நூல் எந்தத் தத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளார்.

சமூகம் பற்றிய பொருள்முதல்வாத தத்துவத்தை இங்கே மிகவும் சுருக்கமாவும் தெளிவாகவும் மார்க்ஸ் பதிந்துள்ளார். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தச் சுருக்கமான பகுதியை கவனமாக நாம் படித்தறிய வேண்டும்.

இன்றைய வகுப்பில் நாம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பார்க்கப் போவதில்லை. அரசியல் பொருளாதாரத்தை அணுவதற்கு மார்க்ஸ் கண்டுபிடித்து, பயன்படுத்திய வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தையே பார்க்கப் போகிறோம்.

ஒரு சமூகத்தில் காணப்படும் பொருளாதார நிலைமைகளை அறிவதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய புரிதல் அவசியமாகும். அதே போல வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு, பொருளாதார அடிப்படைப் புரிதல் அவசியமாகும். கம்யூனிஸ்டுகளின் அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற்றுள்ளதற்கு இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், அரசியல் பொருளாதாரமும் காரணமாகும்.

கம்யூனிஸ்டுகள் தமது அரசியலை, மார்க்சிய வழியில் செயற்படுவதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றை நன்றாகக் கற்க வேண்டும். இந்த இரண்டு இல்லாமல், கம்யூனிஸ்டுகள் தங்களது பார்வையை விஞ்ஞானத் தன்மையினது என்று கூறிடமுடியாது.

சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதை மாற்றுவதற்கும் தத்துவம் அவசியமானது என்று தொடக்கக் காலத்தில் மார்க்ஸ் கருதினார். அதனால் தான் அவர் தமது டாக்டர் ஆய்வுப் பட்டத்தைத் தத்துவத்தில் நிகழ்த்தினார்.

1842-43ஆம் ஆண்டுகளில் பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டப் போது, “பொருளாயத நலன்கள்” என்பதை விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது இக்கட்டான நிலைக்கு மார்க்ஸ் ஆளானார். நீதி இயலை தத்துவத்திற்கு உட்பட்ட பாடமாகவே இதுவரை படித்துவந்தார். நீதி இயலை தத்துவத்திற்குள் அடக்கிப் பார்க்கும் போது ஏற்படுகிற போதாமையை இக்கட்டத்தில் மார்க்ஸ் உணர்ந்தார்.

காட்டு விறகுகள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வதையும், நிலச் சொத்துடைமை துண்டுதுண்டாகப் பிரிக்கப்படுவதையும் பற்றி அன்றைய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது தூய தத்துவப் பார்வையின் போதாமையை மார்க்ஸ் உணர்ந்தார். இதனை அடுத்து மார்க்ஸ் பொருளாதாரப் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தினார்.

ஹெகல் எழுதிய சட்டம் பற்றிய தத்துவங்களைப் பரிசீலிப்பதில் இருந்து மார்க்ஸ் தொடங்கினார். இதனை ஒரு நூலாக்கினார், இந்த நூலுக்கான முகவுரையை 1844 ஆம் ஆண்டு எழுதினார். அந்த முன்னுரையில் மார்க்ஸ், பொருள்முதல்வாதப் பார்வைக்கு முழுமையாக வந்தடைந்ததை அறிய முடிகிறது. அந்த முன்னுரையில் தான், மதம் மக்களின் அபின் என்று கூறியுள்ளார். அதுவே கம்யூனிஸ்டுகளின் மதம் பற்றிய பார்வைக்கு அடிப்படையாக அமைந்தது.

சட்ட உறவுகளையோ அல்லது அரசியல் வடிவங்களையோ, தனித்தனியாகவோ அல்லது மனித அறிவின் பொதுவான வளர்ச்சிப் போக்கு என்று சொல்லப்படுகிற அடிப்படையைக் கொண்டோ புரிந்துகொள்ள முடியாது என்ற முடிவுக்கு மார்க்ஸ் அப்போது வந்தார். அப்படி என்றால் எந்த அடிப்படையைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும், அன்றைய வளர்ச்சி அடைந்த பொருளாயத நிலைமைகளைக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்று மார்க்ஸ் பதில் அளிக்கிறார்.

பொருளாதார நிலைமைகளே அடிப்படை, அதன் வடிவங்களே அரசியல் போன்றவை என்ற முடிவுக்கு வந்தார்.

வடிவத்தின் முழுத் தொகுதியை, அன்றைய ஆங்கிலப் பிரெஞ்சு தத்துவவாதிகளைப் பின்பற்றி, ஹெகல் “குடிமைச் சமூகம்” (சிவில் சொசசைட்டி) என்று அழைத்தார். ஆனால் மார்க்ஸ் இந்தக் குடிமைச் சமுகத்தின் உள்ளமைப்பை, அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் என்கிறார். இதுவே தமது ஆராய்ச்சியின் முடிவாகவும் கூறுகிறார்.

இந்த “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்கிற ஆராய்ச்சியை மார்க்ஸ் பாரிசில் இருக்கும் போது தொடங்கிப் பெல்ஜியத்தில் நிறைவு செய்கிறார்.

 

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற அணுகுமுறைக்கு வந்தது முதல், மார்க்ஸ் தமது ஆராய்சிகளுக்கு இதையே வழிகாட்டும் கோட்பாடாக ஆனது என்கிறார்.

 

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சுருக்கத்தை நமக்கு இந்த முன்னுரையில் கொடுத்துள்ளார். இந்தப் பகுதியை பலமுறை படித்து உள்வாங்க வேண்டும். இதனைப் புரிந்து கொள்ளாதவர்களால் மார்க்சிய வழியில் எதனையும் அணுக முடியாது. அதனால் நாம் மிகவும் இதனைக் கவனமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் கூறியதை நேரடியாகப் பார்த்துவிட்டு அதன் விளக்கத்தை அடுத்தடுத்து காண்போம்.

மார்க்ஸ் கூறுகிறார்:-

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில், திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

 

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்த கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.

 

பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.

 

மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கைநிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்க்கைநிலைமைகளே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.”

மார்க்ஸ், இங்கே அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற தமது கோட்பாட்டை அறிமுகம் செய்துள்ளார். “வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை” என்பதே சமூகம் பற்றிய பொருள்முதல்வாதப் பார்வையாகும்.

மனிதனின் சிந்தனை அவனது வாழ்நிலையைத் தோற்றுவிப்பதில்லை. மனிதனின் வாழ்நிலையே அவனுடைய சிந்தனையை உருவாக்குகிறது.

இங்கே வாழ்நிலை என்று மார்க்ஸ் எதைக் குறிப்பிடுகிறார். குடும்ப வாழ்நிலையைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார வாழ்நிலையைப் பற்றியே குறிப்பிடுகிறார். அதாவது ஒரு மனிதன் உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற உறவுகளே “வாழ்நிலை” என்று அழைக்கிறார். இந்த உறவுகள் பொருளாதாரத் தொடர்புகளையே குறிப்பிடுகிறது. அதனால் தான் இதனை “உற்பத்தி உறவுகள்” என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகள் மனிதனைச் சாராது இயங்குகிறது.

உழைக்கும் மனிதர்கள் கையாள்கிற உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் உருவாகிறது.

இதனை மார்க்ஸ் தொடக்க வரிகளிலேயே தெளிவாகக் கூறியுள்ளார். மீண்டும் அதனைப் படித்துப் பார்ப்போம்.

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும்.” என்கிறார் மார்க்ஸ்.

இதனால் தான் சிந்தனை, வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை என்று கூறப்படுகிறது. சிந்தனையின் மூலமாக எந்தச் சமூகத்தையோ, சமூக உற்பத்தி முறையையோ உருவாக்கிட முடியாது. அது ஒரு வரலாற்றுக் கட்டத்தில் தோன்றுகிறது.

அந்த வரலாற்றில் பொருளாயத சக்திகள் மிகமுக்கியமானதாக இருக்கிறது. இதுவே அடித்தளமாகும்.

பொருளாதார சக்திகளும் அதன் அடிப்படையில் தோன்றுகிற உறவுகளும் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அடித்தளத்தினால் தான் மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கப்படுகிறது- நிர்ணயிக்கப்படுகிறது.

சட்டம், அரசியல், சிந்தனை, பொதுவாக அறிவு உலக வாழ்க்கை போன்றவையே மேற்கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இங்க குறிப்பிடுகிற அடித்தளத்தையே வாழ்நிலை என்று கூறப்படுகிறது. சிந்தனைகளையே மேற்கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

அடுத்து மார்க்ஸ் கூறுகிறார்:-

“வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்தி சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.”

 அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்று கூறும் போது இரண்டுக்கும் இடையே உள்ள இயக்கவியலையும் புரிந்து கொள்ள வேண்டும். அடித்தளத்தின் வளர்ச்சிக்கான மேற்கட்டமைப்பே உருவாக்கப்படுகிறது. இது தொடக்கநிலை, இதுவே என்றும் தொடர்வது இல்லை. வளர்ச்சிக் கட்டத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குத் தடையாகப் போகிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்ற போது, அந்த மேற்கட்டமைப்பு புதிய வளர்ச்சிக்குப் பொருந்தாமலும், தடையாகவும் மாறிவிடுகிறது. இதுதான் சமூகப் புரட்சிக்கான புறநிலை என்று மார்க்சியம் கூறுகிறது.

சமூகப் புரட்சிக்கு புறநிலை தான் அடிப்படை, ஆனால் இது மட்டும் போதாது அதற்கான அகநிலை தயாரிப்பும் அவசியம். புரட்சிக்குத் தலைமை தாங்குகிற கட்சியும், போராடுகிற உழைக்கும் மக்களும் அகநிலை சத்திகள் ஆகும்.

உற்பத்தி சக்தியினுடைய வளர்ச்சியில் ஏற்படுகிற, அளவு மாற்றமே சமூக மாற்றத்தைக் கோருகிறது. இதையே மார்க்ஸ் சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது என்று கூறுகிறார்.

அடுத்து மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:-

“பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றி அமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது, இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடிகிற, உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற, பொருள்வகை மாற்றங்களுக்கும், மனிதர் தம் உணர்நிலைக்குள் மோதல் உண்டாகி மாற்றியமைக்கப்படுகிற சட்டம், அரசியல், மதம், கலைத்துறை அல்லது தத்துவஞான - சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்து நிலை வடிவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

 

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது, அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.”

 அடித்தளம்தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது-நிர்ணயிக்கிறது என்று கூறுவதனால், அடித்தளத்தின் பிரதிபலிப்பு மேற்கட்டமைப்பில் உடனடியாக ஏற்பட்டுவிடுவதாகக் கருதக்கூடாது. சிக்கிரமாகவோ, சற்று தாமதமாகவோ ஏற்படலாம்.

அடித்தளமே மேற்கட்டமைப்பில் பிரதிபலிக்கிறது என்று கூறுவதனால் கைவிளக்கை (Torch Light) போட்டவுடன் ஒளி கிளம்புவதைப் போல உடனடியாகப் பிரதிபலிப்பதாகக் கொள்ளக்கூடாது. இருந்தாலும் இயற்கை அறிவியலைப் போலவே சமூகத்தின் மாற்றங்களைத் துல்லியமாகக் காணலாம். ஆனால் பல பேர் சமூக மாற்றத்தை அறிவியலாகக் கொள்ள முடியாது என்று கூறிவருகின்றனர். இது மார்க்சைப் புரிந்து கொள்ளாதவர்களின் கூற்றாகும்.

இயற்கை அறிவியலைப் போலத் துல்லியமாகச் சமூக மாற்றத்தையும் கணிக்க முடியும் என்று மார்க்ஸ் தெளிவாகக் கூறியுள்ளார்.

பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற மாற்றங்களே, மனிதர்களின் உணர்வுநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பொருளாதார நிலைமைகளில் எற்படுகிற பொருள்வகை மாற்றங்களே, மனிதனின் உணர்வுநிலைக்குள் மோதலை ஏற்படுத்தி, கருத்து நிலைகள் ஏற்படுகின்றன. சட்டம், அரசியல், மதம், கலைத்துறை, தத்துவம் ஆகிய கருத்துநிலைகள் அனைத்தும், அன்றைய பொருளாதார நிலைமையினால் உருவாக்கப்படுகிறது. இத்தகைய கருத்துநிலை மாற்றங்களுக்கான காரணத்தை, பொருளாதார நிலைமைகளினுடைய மாற்றங்களில் காண்பதே சமூகம் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும்.

அடித்தளம் காரணமாகும், மேற்கட்டமைப்பு அதற்கான காரியமாகும்.

வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று கூறினால் இது பொருள்முதல்வாதம்.

ஒரு சிறந்த அறிஞரின் சிந்தனையில் இருந்தே வாழ்நிலை அதாவது சமூகம் உருவாகிறது என்று கூறினால் இது கருத்துமுதல்வாதமாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்று கூறுவது பொருள்முதல்வாதம்.

மேற்கட்டமைப்பே அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறுவது கருத்துமுதல்வாதம்.

“அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு, எதோ கட்டிட அமைப்பைப் பற்றிக் கூறுவதாக நினைத்திடக் கூடாது, அது பொருள்முதல்வாதப் பார்வையையும் கருத்துமுதல்வாதப் பார்வையையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஒரு தனிநபரை கணிப்பதானது, அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கொண்டு முடிவெடுப்பது இல்லை, அவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதைக் கொண்டே முடிவெடுப்போம். அதே போல மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை, உணர்வுகள் அதாவது கருத்துக்களைக் கொண்டு முடிவு செய்யக் கூடாது. இதற்கு மாறாக, கருத்துக்களைத் தோற்றுவிக்கிற, பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற முரண்பாடுகளைக் கொண்டே முடிவெடுக்கப்படுகிறது. பொருளாதார நிலைமைகளின் முரண்பாடு என்பது அன்றைய உற்பத்தி முறையில் காணப்படும் சமூக சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் முரண்களே ஆகும். ஆகவே கருத்து முரண்பாடுகள், உற்பத்தியின் முரண்பாடுகளால் தான் ஏற்படுகிறது.

கருத்துக்களின் தோற்றத்தையும் வேறுபாட்டையும் காரணக் காரியத்தோடு மார்க்சியம் கூறுவதனால் தான், சமூகம் பற்றிய மார்க்சிய தத்துவம், விஞ்ஞானத் தன்மையானது என்று கூறப்படுகிறது.

அடுத்து மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:-

“எந்தச் சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், பழைய சமூகத்தின் சுற்று வட்டத்துக்குள், தாம் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம்பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.”

 மார்க்ஸ் தமது கோட்பாட்டை எந்தவித குழப்பம் இல்லாமல் நமக்குக் கொடுத்துள்ளார். இதனைக் குழப்புகிறார்கள் என்றால் அது அவர்களது பார்வையில் தான் இருக்கிறது.

ஆதி பொதுவுடைமை சமூகம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் என்று கூறப்படுகிறவைகளில், அந்த உற்பத்தி முறையில் போதுமான உற்பத்தி சக்திகளின் வளாச்சியை எட்டுவதற்கு முன், அந்த உற்பத்தி முறை ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் முக்கியமான பகுதியாகும்.

உற்பத்தி முறையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் அடையும் வரை, அந்த உற்பத்தி முறை அழிக்கப்படுவதில்லை.

பழைய உற்பத்தி உறவுகள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக, புதிய மேலான உற்பத்தி உறவுகள், பழையதை அகற்றுவதில்லை. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், மனித சமூகம் தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளை, உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியின் அடிப்படையில் இருந்துதான் அமைத்துக் கொள்கிறது.

முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் அமைப்பை தூக்கி எறிந்து தமது சுரண்டல் அமைப்பை உருவாக்கியது.

முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை அகற்ற வேண்டியதின் அவசியத்தைப் பாட்டாளி வர்க்கம் தொடக்கநிலையில் அறிந்து கொள்ளவில்லை. அதனால் தான் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் தங்களது தீர்வை தமது மூளையின் உதவியினால் உருவாக்கினர். ஆனால் மார்க்ஸ் காலத்தில் பாட்டாளி வர்க்கம் தெளிவு பெறும் வகையில் முதலாளித்துவ முரண்பாடு வளர்ச்சி அடைந்துவிட்டது.

கற்பனாவாத கம்யூனிஸ்டுகளின் கருத்திற்கும் மார்க்சின் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் கருத்துக்கும் உள்ள வேறுபாடு, இருவர்களின் மூளையினால் விளைந்தது அல்ல. இருவரும் வாழ்ந்த காலத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் முரணில் தான் அடங்கி இருக்கிறது.

கருத்துக்களின் முரணானது, அதற்கான பொருளாதார முரண் வளர்ச்சி அடைந்த போது அல்லது முரண் தோன்றும் போதுதான் உருவாகிறது என்பதை நுணுக்கமாக ஆராயும் போது இதனை அறிந்து கொள்ள முடிகிறது என்கிறார் மார்க்ஸ்.

அடுத்து மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:-

“விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளைச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான், உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம் - முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல', தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்தி சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைமைகளையும் உருவாக்குகின்றன, எனவே இந்தச் சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.”

 இந்தப் பகுதியோடு வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் சுருக்கம் முடிவடைகிறது.

மார்க்சியம் ஐரோப்பாவில் தோன்றியது அது ஆசியாவுக்குப் பொருந்தாது. குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறுகிற போக்கினர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் தங்களை மார்க்சிய அறிஞர் என்று கூறிக்கொள்ளவும் செய்கின்றனர். மார்க்சிய வழியைப் பின்பற்றதாத இவர்கள் எந்த வகையில் மார்க்சியவாதியாவார். மார்க்சியம் நம் நாட்டுக்கு பொருந்தாது என்று கருதுவது மார்க்சிய சிந்தனையா?

குறிப்பாக ஒருவரை இங்கே நான் சுட்டிக்காட்டுகிறேன். அவர் பெயர் ந.முத்துமோகன். அவர் எழுதிய “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்” என்ற நூலில் “மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் எப்போது ஆசிய உற்பத்தி முறை என்று ஒன்றைப் பற்றிப் பேசினாரோ, அப்போதிருந்தே வெறும் பொருளாதார வர்க்க அரசியல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்பது வெளிப்படையான ஓர் உண்மை” (பக்கம் 264).

அதாவது ஆசிய உற்பத்தி முறை ஐரோப்பிய உற்பத்தி முறைக்கு மாறானது என்று மார்க்ஸ் கூறியதால், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்பதே ந.முத்துமோகன் போன்றோரின் கருத்தாகும். ஆனால் மார்கஸ் ஆசிய உற்பத்தி முறையைப் பற்றிக் கூறும் போது எங்கேயும் தமது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆசிய உற்பத்தி முறைக்குச் செல்லத்தக்கது அல்ல என்று கூறிடவில்லை.

நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற முன்னுரையிலும், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைச் சுருக்கமாக முன்வைக்கின்ற இந்த இடத்திலும் ஆசிய உற்பத்தி முறையைப் பற்றிக் கூறியுள்ளார். ந.முத்துமோகன் போன்றோர்கள் கூறுவது போல் மார்க்ஸ் கூறவில்லை. மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது ஐரோப்பியக் கருத்துக்கிடையாது. அது சர்வதேசிய, வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகும்.

மேலே நாம் பார்த்தப் பகுதியில் மார்க்ஸ் சுரண்டல் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறை ஆகியவற்றை இணைத்தே கூறியுள்ளார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையே சமூக வளர்ச்சியில் இறுதியான சுரண்டல் அமைப்பாகும். முதலாளித்து உற்பத்தி முறைக்கு உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்தி சக்திகளின் முரணைத் தீர்ப்பதற்கு உரிய, பொருளாயத சக்தியினையும், பாட்டாளி வர்க்கத்தையும் அதுவே உருவாக்குகிறது. அதற்கான கட்சியை அமைப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை.

முதலாளித்துவச் சமூகத்தின் நெருக்கடிகளுக்கான தீர்வாக, தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதை அறிந்த பாட்டாளி வாக்கம் தமது போராட்டத்தினால் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி எறிகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பாட்டாளி வாக்கம் தனிச்சொத்துடைமையை முழுமையாக அழித்து, பொதுச் சொத்துடைமையை உருவாக்குகிறது. முதலாளித்துவ அமைப்போடு சுரண்டல் சமூகத்தின் காலம் முடிவடைகிறது.

மார்க்ஸ், இந்த முன்னுரையில் அரசியல் பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை, தாம் அறிந்து கொண்டதைப் பற்றிக் கூறியுள்ளார். ஆனால் மார்க்ஸ் இதனை அறிவதற்கு முன்பே எங்கெல்ஸ் “பொருளாதார வகையினங்களைப் பற்றிய விமர்சனம்” என்ற நூலை எழுதியுள்ளார். இதனைப் பாரிசில் மார்க்ஸ் இருக்கும் போது பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு கூறும் மார்க்ஸ், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எங்கெல்சும் வேறு வழியில் அறிந்து கொண்டதைச் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சியத்திற்கான எங்கெல்சின் பங்களிப்பை மார்க்சே சுட்டிக்காட்டிய போதும், மார்க்சியம் என்ற பெயருடன் ஏன் எங்கெல்ஸ் பெயரை சேர்க்கவில்லை என்ற கேள்வி பலருக்கு எழத்தான் செய்யும். இதற்கு எங்கெல்ஸ் பல இடங்களில் பதிலளித்துள்ளார்.

மார்க்சியத்தின் முதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத துறையில் மிகப் பெரும்பகுதியும், அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும் என்கிறார் எங்கெல்ஸ். இதனை ஒரு கோட்பாடாக மார்க்சே துல்லியமாக வரையறுத்துக் கொடுத்துள்ளார் அதனால் இது மார்க்சின் பெயர் தாங்கி வருவது சரியானது ஆகும் என்று எங்கெல்சே கூறிவிட்டார்.

“லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலில் இதைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியதை பார்ப்போம்.

“இங்கே சொந்த முறையில் ஒரு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும். அண்மை காலமாக, இந்தக் கோட்பாட்டில் என்னுடைய பங்கைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் இங்கே சில விவரங்களைச் சொல்லாமலிருக்க முடியாது. மார்க்சுடன் எனக்கிருந்த நாற்பது ஆண்டுகால ஒத்துழைப்பின் போதும், அதற்கு முன்னரும், இந்தக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும், மேலும் குறிப்பாக, அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் சற்றே சுதந்திரமான பங்கு எனக்கிருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் முதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும். ஒரு சில தனிச்சிறப்பான துறைகளில் என்னுடைய பணியைத் தவிர்த்து, ….தாராளமாக மார்க்ஸ் என் உதவியின்றியே செய்திருக்க முடியும். ஆனால் மார்க்ஸ் செய்து முடித்ததை நான் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. மற்ற எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயர்ந்து நின்றார், தொலைநோக்குடன் பார்த்தார், பரந்த விரைவான பார்வையைக் கொண்டிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதையாக விளங்கினார். மற்றவர்களாகிய நாங்கள், அதிகமாகச் சொல்லிக் கொள்வதென்றால், திறமைசாலிகளாக இருந்தோம். அவர்மட்டும் இல்லையென்றால், இந்தக் கோட்பாடு இன்று உள்ளதுபோல் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது பொருத்தமே.”

 மார்க்சியம் என்ற பெயரைப் பற்றி இந்தப் பிரச்சினைக்கு எங்கெல்சே போதுமான அளவுக்குப் பதிலளித்துவிட்டார்.

அடுத்து மார்க்சின் முன்னுரைக்குச் செல்வோம். மார்க்ஸ் எங்கெல்சோடு சேர்ந்து, ஜெர்மன் தத்துவச் சித்தாந்தத்துக்கு எதிராகத் தங்களுடைய கருதுகோளை எழுதுவது என்று முடிவெடுத்து ஒரு நூலை எழுதினார். அந்த நூலின் பெயர் “ஜெர்மன் சித்தாந்தம்” ஆகும். அதனைப் பதிப்பிப்பதற்கு அனுப்பினர், நீண்ட நாள் ஆகியும் பதிப்பகத்தார் அதனைவெளியிடவில்லை. சூழ்நிலை தற்போது மாறிவிட்டதால் அந்த நூலை வெளியிடவில்லை என்று பதிக்கத்தார் காரணம் கூறினர்.

இந்த நிலையை மார்க்ஸ் இங்கே கேலியாகக் கூறுகிறார். சுயவிளக்கம் பெறுவதற்கே அந்த நூல் எழுதப்பட்டது, அதனால் அந்த நூலின் கையெழுத்துப் படியை எலிகளின் கொறிக்கும் விமர்சனத்துக்கு நாங்கள் மகிழ்ச்சிசோடு கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த நூலின் பகுதி தமிழில் கிடைக்கிறது. அதைப் படிக்காமல் மார்க்சிய தத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது. முழுமையாக அந்த நூல் தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்கும். இப்போது தமிழில் கிடைக்கும் பகுதி மிகவும் முக்கியமானது. தற்போதைய நிலையில் இது போதுமானது.

மார்க்சியம் பற்றிப் பொதுமக்களுக்காக எழுதிய சில நூல்களையும் கட்டுரைகளையும் மார்க்ஸ் இங்கே குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, சுயேச்சை வணிகம் பற்றிய சொற்பொழிவு, தத்துவத்தின் வறுமை, கூலியுழைப்பும் மூலதனமும் என நூல்களைப் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளார். கூலி விலை லாபம் என்கிற மார்க்சின் நூல் இந்த முன்னுரை எழுதிய காலத்துக்குப் பிறகு எழுதியது. அதனால் மார்க்ஸ் பட்டியலில் இந்த நூல் இடம்பெறவில்லை.

மார்க்ஸ் தமது பொருளாதார ஆய்வை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது பற்றி அடுத்தக் குறிப்பிடுகிறார். 1850 ஆம் ஆண்டில் லண்டன் நகரத்திற்குச் சென்றபிறகு அவரது ஆய்வு பிரிட்டிஷ் மியூசியத்தில் தொடர்ந்தது. இங்கிலாந்து முதலாளித்துவத்தில் வளர்ச்சி அடைந்த நாடு என்பதனால் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கு லண்டன் பொருதமாக அமைந்தது.

தமது பழைய திட்டத்துக்கு மாறாக, மூலதனத்தை மூன்று தொகுதிகளாகவும் அரசியல் பொருளாதார வரலாற்றை நான்காவது தொகுதியாகவும் எழுதி மார்க்ஸ் தமது பொருளாதார ஆய்வை நிறைவு செய்தார். இந்த அரசியல் பொருளாதார ஆய்வை வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் மார்க்ஸ் எழுதினார். அதனால் தான் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் இந்த முன்னுரையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளார். இந்தப் பகுதியானது, உலக அளவில் மிகவும் பிரபலமானது. மிக அதிகமாக மேற்கோளாகக் கொடுக்கப்பட்டது. அதனால் இந்த முன்னுரையில் உள்ள குறிப்பிட்ட இந்தப் பகுதியை நாம் பலமுறை படித்து நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனைச் சுயமாகப் புரிந்து கொண்டால் தான், நாம் வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அனைத்தையும் அணுகுவதற்குத் தயாராவோம்.

************************************************************

2) “அடித்தளமும் மேற்கட்டமைப்பும்” என்கிற கோட்பாடே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை  

3) அடித்தளம் மேற்கட்டமைப்பு கோட்பாடு பற்றிய புரிதல் சிக்கலும் – மார்க்சிய விலகலும்  

No comments:

Post a Comment