Sunday 21 March 2021

2) “அடித்தளமும் மேற்கட்டமைப்பும்” என்கிற கோட்பாடே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை

(“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில்

எடுக்கப்பட்ட (20-03-2021) வகுப்பின் குறிப்பு)

போனவார வகுப்பில் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையில் கூறப்பட்ட “அடித்தளமும் மேற்கட்டமைப்பும்” என்கிற கோட்பாடைப் பார்த்தோம். இந்தக் கோட்பாட்டை மாற்ற இடங்களில் மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு கூறியுள்ளனர் என்பதை இன்றைய வகுப்பில் பார்க்கப்போகிறோம்.

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவை மார்க்சியத்தின் மூன்று கூறுகள் என்பது நமக்குத் தெரியும். அரசியல் பொருளாதாரம் பற்றி மார்க்ஸ் நிறைய நூல்களை எழுதி உள்ளார், “கூலியுழைப்பும் மூலதனமும்”, “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு”, “கூலி விலை லாபம்”, “மூலதனம்” மூன்று தொகுதிகள், நான்காம் தொகுதியான “உபரி மதிப்பின் கோட்பாடு”. இவைகள் எல்லாம் அரசியல் பொருளாதாரம் பற்றி மார்க்ஸ் எழுதிய நேரடி நூல்கள். விஞ்ஞானக் கம்யூனிசத்துக்கு எங்கெல்ஸ் எழுதிய “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும்” என்ற நூல். தத்துவத்துக்கு மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு- முன்னுரை”. மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய “ஜெர்மன் சித்தாந்தம்”, எங்கெல்ஸ் எழுதிய “இயற்கையின் இயக்கவியல்”, “லுத்விக் ஃயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்”.

அரசியல் பொருளாதாரம் பற்றிப் பேசும் “மூலதனம்” நூலைப் போல, மார்க்சிய தத்துவம் பற்றிய நேரடி நூலை மார்க்ஸ் எழுதவில்லை. ஆனால் “மார்க்சிய தத்துவத்தை” மார்க்ஸ் தான் படைத்தார். அப்போது அது எங்கு இருக்கிறது.

மார்க்ஸ் எழுதிய நூல்களின் முன்னுரையிலும் நூல்களுக்கு இடையிலும் இருக்கிறது. கிடைப்பதில் இருந்து எடுத்து மார்க்சிய தத்துவத்தைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தில் இருந்தும், திரட்டி எடுக்க வேண்டும். இந்தப் பணியினைச் சோவியத் தத்துவ அறிஞர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இன்றைய வகுப்பில் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய பல நூல்களில் இருந்து எடுத்துப் பார்க்கப் போகிறோம்.

வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவு பற்றிய பிரச்சினையே தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி ஆகும்.

சிந்தனையில் இருந்தே வாழ்நிலை தோன்றுகிறது என்று கருத்துமுதல்வாதம் கூறுகிறது. ஆட்சியாளர், தளபதி, தலைசிறந்த மாமேதை போன்றோர்களின் விருப்பப்படி சமூகம் அமைகிறது என்பதே இவர்களின் கருத்து. இதற்கு மாறாக வாழ்நிலையில் இருந்துதான் சிந்தனை தோன்றுகிறது என்கிறது பொருள்முதல்வாதம்.

சிந்தனை என்பது தனிப்பட்ட நபரினுடைய மூளையின் செயற்பாடு அல்ல, மூளை என்பது சிந்தனையின் களம். இந்தக் களத்திற்குத் தேவைப்படுகிற தரவுகள் சமூகப் பொருளாதார வாழ்நிலையில் இருந்தே எடுக்கப்படுகிறது. உற்பத்தி உறவுகளில் இருந்தே தரவுகள் கிடைக்கிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் மூளை சிந்தித்து முடிவெடுக்கிறது.

சமூகத் தொடர்வு அற்ற ஒருவர், தனியே காட்டில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவருக்கு இன்றைய சமூகம் பற்றிய எந்தப் புரிதலும் இருக்காது. அவர் சார்ந்துள்ள காட்டின் நிலைமைகளே அவரது சிந்தனையில் பிரதிபலிக்கும். இந்த எதார்த்த உண்மையைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானது அல்ல.

இதனால் தான் எங்கெல்ஸ், “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” நூலுக்கு எழுதிய அறிமுகவுரையில், “”மனிதர்களுடைய உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலைமைகளே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது” இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று எழுதியுள்ளார்.

Humbug என்கிற சொல்லுக்கு இங்கே மோசடி என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கருத்துமுதல்வாத நம்பிக்கையில் மூழ்க்கிப் போனவர்களால் மேலே கூறப்பட்ட வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்று எளிமையாகக் கூறப்பட்ட முன்மொழிவை புரிந்து கொள்ள முடியவில்லை. சுரண்டல் சமூகத்தில் வாழ்க்கிறவர்கள் கருத்துமுதல்வாதத்தில் இருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

தத்துவத்தின் அடிப்படை கேள்விகள் இரண்டு இருக்கின்றன.

முதல் கேள்வி, பிரபஞ்சம் படைக்கட்டதா? என்றும் உள்ளதா?

இரண்டாம் கேள்வி, இருத்தலுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவு என்ன? இந்த இரண்டாம் கேள்வியை வாழ்நிலைக்கும் சிந்தனைக்கு உள்ள உறவு என்ன? என்றும் கேட்கலாம்.

முதல் கேள்விக்கான பதிலை மார்க்சியத் தத்துவத்தில் உள்ள “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்கிற பிரிவில் பதிலளிக்கப்படுகிறது. இரண்டாவது கேள்விக்கு “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்ற பிரிவில் பதிலளிக்கப்படுகிறது. இயற்கையின் இருப்பு, மாற்றம் பற்றிப் பேசுவது இயக்கவியல் பொருள்முதல்வாதம், சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் பற்றிப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

கடவுளை மறுக்கின்ற வேலையை மட்டும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் செய்யவில்லை. தத்துவத்தின் பல விஷயங்களையும் சேர்த்தே பேசுகிறது. பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பு, காலம், உலகின் பொருளாயத ஒருமை, உணர்வுநிலை, அறிவுத் தோற்றுவாய் போன்றவைகளைப் பற்றி இயக்கவியல் பொருள்முதல்வாதம் பேசுகிறது. பொதுவாக இதில் உள்ள கடவுள் மறுப்பை மட்டுமே புரிந்து கொண்டவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். மற்ற விஷயங்களைப் புரிந்து கொள்வதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.

அதே போல வரலாற்றியல் பொருள்முதல்வாததில் பேசப்படுகிற, வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதை விளக்குகிற “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டைப் புரிந்து கொள்வதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. இதற்குக் காரணம் கருத்துமுதல்வாதத்தின் மீதுள்ள அவர்களது மயக்கமே ஆகும்.

இந்த மயக்கத்தில் உள்ளவர்கள் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றி எவ்வாறு திரிக்கின்றனர் என்பதை அடுத்த வகுப்பில் பார்ப்போம். இன்றைய வகுப்பில் மார்க்சியம் இது பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

மார்க்சியத்துக்கு அடிப்படை ஆவணம் என்றால் அது “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” தான். நாம் அதில் இருந்து தொடங்குவோம்.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வுநிலையானது- அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த அறிவு வேண்டுமா, என்ன?

 

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது – கருத்துக்களின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?”

(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)

இதைப் புரிந்து கொள்வதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டுமா என்ன? என்று அறிக்கை கேட்கிறது. ஆனால் இங்குள்ள பல அறிஞர்களுக்கு இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருக்கின்றனர்.

மார்க்ஸ் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்று கூறியதை பலர், இது எதோ கட்டிட தொடர்பானதாகக் கருதிவிட்டனர். மேற்கட்டமைப்பு இல்லாமல் அடித்தளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். உண்மையில் இந்த “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடானது, வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையைச் சுட்டிக்காட்டுகிறது. மார்க்ஸ் மறைந்த பிறகு வெளியிட்ட அறிக்கையின் முன்னுரையில் எங்கெல்ஸ் இதனைத் தெளிவாக விளக்கிவுள்ளார்.

 

“அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து:- வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும், தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்கு உரிய அடித்தளமாய் அமைகின்றன, ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்துபோன காலம் முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் அதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது….”

(1883ஆம் ஆணடு ஜெர்மன் பதிப்பின் முகவுரை)

சமூகத்தில் காணப்படும் வர்க்கப் போராட்டத்தை இந்த “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டின் மூலம் மார்க்சியம் விளக்குகிறது. வர்க்கப் போராட்டம் ஏற்படுவதின் காரணத்தை – அடிப்படையை- அடித்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு வழிகாட்டுகிறது. இந்த வழிகாட்டுதல் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமாகும். இந்தக் கண்ணோட்டம் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இதனை மறுப்பவர்கள், வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான, மார்க்சிய பொருள்முதல்வாத வழியினை மறுக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

வர்க்கப் போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் நடத்துவதற்கு “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டு வழிகாட்டுகிறது. அதனால் கம்யூனிச செயற்பாட்டாளர்கள் இந்தக் கோட்பாட்டை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

1844-45ஆம் ஆண்டுகளில் மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத்தை முழுநிறைவு செய்கிறார். “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு” என்ற நூலுக்கு 1844 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரையில் மார்க்ஸ் பொருள்முதல்வாதத்திற்கு வந்தடைந்ததைக் காண முடிகிறது. அந்த முன்னுரையில்,

“தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது.”

-என்று மார்க்ஸ் எழுதியுள்ளார். இங்கே தத்துவம் என்று கூறப்படுவது பொருள்முதல்வாதமாகும். பொருள்முதல்வாதத் தத்துவத்துக்கு உரிய பொருளாயாத சக்தி பாட்டாளி வர்க்கமாகும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம் ஆகும்.

இங்கே கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும், நடைமுறைக்கும் கோட்பாட்டுக்கும் உள்ள உறவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆக, பாட்டாளி வர்க்க விடுதலைக்கான ஆயுதம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமே ஆகும்.

பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்பது எதோ மார்க்ஸ் மூளையில் உதித்த கோட்பாடு அல்ல, அது போராடுகிற பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து பெறப்பட்டதாகும்.

மார்க்ஸ் தமது பொருளமுதல்வாத கண்ணோட்டத்தை வறட்டுத்தனமாக உருவாக்க வில்லை. நடைமுறையின் வெளிப்பாடாக – எதார்த்த சமூகத்தின் பிரதிபலிப்பாக அது காணப்படுகிறது. மேலும் கருத்துக்களின் தோற்றத்தை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும், சமூக உறவுகளின் அழிவிலும் உள்ள இடையறாத இயக்கத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது.

இப்படிக் கருவிகள் என்று கூறப்படுவதைப் பல பேர் ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதோடு, மார்க்ஸ் அவ்வாறு கூறவில்லை என்றும் கூறிவருகின்றனா. ஆனால் “தத்துவத்தின் வறுமை” என்கிற தொடக்கக் கால நூல்களிலேயே மார்க்ஸ் கருவிகளின் முதன்மைத் தன்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சமுக உறவுகள், உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே, தங்களுடைய சமுக உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள்.

 

கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுகத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுகத்தைக் கொடுக்கிறது.

 

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுக உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுக உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

 

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”

(தத்துவத்தின் வறுமை)

உற்பத்தி சக்திகளில், கருவிகளின் முதன்மைத் தன்மையை மார்க்ஸ் வலியுறுத்தியதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே போல வரலாறு ஒரு விதிக்குள் இயங்குகிறது, அந்த விதி மனிதனைச் சாராது இருக்கிறது என்று கூறுவதையும் ஏற்றுக் கொள்ளாமல், மார்க்சியத்தை விதிவாதமாகச் சுருக்கிக் கொள்கின்றனர்.

மார்க்சியம் விதிவாதம் கிடையாது. அது பொதுவான விதியையே நமக்குக் கொடுக்கிறது. அந்தப் பொதுவிதி, அனைத்து புதிய நிலைமைகளையும் அணுகுவதற்கு வழிகாட்டுகிறது. மார்க்சியம் பொதுவிதியைத் தான் நமக்குக் கொடுத்துள்ளது, அனைத்து முடிவுகளையும் நம் கையில் கொடுத்துவிடவில்லை.

பொதுவிதியைப் பற்றி எங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம் :-

“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாகச் சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே.

 

இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினாலும், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும்.

 

இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”

(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இங்கே மார்க்ஸ் கண்டுபிடித்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை, எங்கெல்ஸ் உந்து விசை, மாபெரும் விதி என்றுதான் கூறியுள்ளார். மேலும் இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றத்தைப் பற்றிய விதிக்கு உள்ள அதே முதன்மைத் தன்மை வரலாற்றில் காணப்படும் இந்த விதிக்கும் உண்டு என்கிறார்.

இருந்தாலும் இயற்கை விஞ்ஞானத்துக்கும் சமூக விஞ்ஞானத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதனை எங்கெல்சே, “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

இயற்கையின் விதி, மனிதனின் துணையின்றிச் செயற்படுகிறது. அதாவது இயற்கையில் தன்னுணர்வற்ற சக்திகளே செயற்படுகின்றன. ஆனால் சமூகத்தில் செயல்படுவோர் உணர்வுபூர்வமாகவும், திட்டமிட்ட குறிக்கோளுடனும் செயல்படுகிற மனிதர்களாவர். எங்கெல்ஸ் கூறுகிற இந்த ஒரு பகுதியைத் துண்டாகப் பிளந்து, எங்கெல்ஸ் உணவற்ற புறநிலையை மறுத்து மனித உணர்வுக்கே முதன்மை இடம் தந்துள்ளார் என்று சிலர் திரித்துரைக்கின்றனர்.

அத்தகையவர்களின் கூற்று தவறானாது என்பது எங்கெல்சை தொடர்ந்து படிக்கும் போது அறிய முடிகிறது. வரலாற்றின் உள்ளார்ந்த பொது விதிகளே வரலாற்றுப் போக்கின் மீது, ஆட்சி செலுத்துகின்றன என்னும் உண்மையை மாற்ற இயலாது என்று எங்கெல்ஸ் கூறுவதை இத்தகையோர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. வரலாற்றில் செயல்படுகிற பொதுவான விதியின் உண்மைத் தன்மையை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,

எங்கெல்ஸ்:-

“ஒரு விஷயத்தில் சமுதாய வளர்ச்சி பற்றிய வரலாறு, இயற்கையின் வரலாற்றிலிருந்து முக்கியமாக வேறுபட்டிருப்பதைக் காட்டிக்கொள்கிறது. இயற்கை மீதான மனிதனின் எதிர்வினையை நாம் புறக்கணிக்கின்ற அளவுக்கு, ஒன்றின் மீது ஒன்று செயல்புரியும் குருட்டுப் போக்கான, தன்னுணர்வற்ற சக்திகள் மட்டுமே இயற்கையில் உள்ளன. அவற்றின் பரஸ்பர வினையிலிருந்து பொதுவிதி செயல்பாட்டுக்கு வருகிறது. மேற்பரப்பில் காணப்படுகின்ற தற்செயல் எனத் தோற்றமளிக்கிற எண்ணற்ற நிகழ்வுகளிலும் சரி, இந்தத் தற்செயல் நிகழ்வுகளில் உள்ளார்ந்திருக்கும் ஒழுங்குமுறைமையை உறுதிப்படுத்துகின்ற முடிவான விளைவுகளிலும் சரி, நிகழ்வது அனைத்திலும் எதுவுமே உணர்வு பூர்வமாக விரும்பப்பட்ட ஒரு குறிக்கோளாக நிகழ்வதில்லை.

 

இதற்கு மாறாக, சமுfத்தின் வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும் தன்னுணர்வு கைவரப்பெற்ற, ஆழ்ந்த சிந்தனை அல்லது மனவெழுச்சியுடன் திட்டடவட்டமான       குறிக்கோள்களை நோக்கிச் செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வு பூர்வமான ஒரு நோக்கம் இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில் எதுவும் நிகழ்வதில்லை.

 

ஆனால், இந்த வேறுபாடு, வரலாற்று ஆய்வுக்கு, குறிப்பாகத் தனித்தனி சகாப்தங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய வரலாற்று ஆய்வுக்கு, எவ்வளவுதான் முக்கியமாக இருந்த போதிலும், வரலாற்றின் உள்ளார்ந்த பொது விதிகளே வரலாற்றுப் போக்கின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்னும் உண்மையை மாற்ற இயலாது .”

(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

இத்தகைய வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மனிதர்களின் செயற்பாட்டைப் புறக்கணிக்கிறது என்று மார்க்சியத்தின் மீது சிலர் குறை கூறுகின்றனர். இதில் தங்களை மார்க்சியர் என்றும் மார்க்சிய அறிஞர் என்றும் கூறிக் கொள்வோரும் அடங்குவர்.

மனிதர்களின் செயற்பாட்டை மார்க்சியம் மறுக்கவேயில்லை, ஆனால் மனிதர்களின் செயற்பாடு எதனடிப்படையில் அமைகிறது என்பதையும் சேர்த்துச் சொல்கிறது.

இந்தச் சேர்ப்பின் காரணமாகவே சமூகம் பற்றிய மார்க்சியத் தத்துவம் பொருள்முதல்வாதமாகிறது.

மார்க்ஸ் கூறுகிறார்:-

"மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கும், தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கும் ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

                                       (லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)

"சமூக விதிக்கு” உட்பட்டே மனிதர்கள் செயற்படுகின்றனர். அந்த விதியை அறிந்து கொண்டு செயற்படும் மனிதனே வரலாற்றில் தலை சிறந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.

இங்கே நாம் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையான “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டை மட்டுமே பார்க்கிறோம். வரலாற்றியல் தனிநபர் பாத்திரம் பற்றிப் பிறிதொரு வகுப்பில் பார்க்கலாம்.

போன வகுப்பில் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு”என்கிற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் “அடித்தளம் மேற்கட்மைப்பு” என்கிற கோட்பாட்டைப் பார்த்தோம். அதனால் இங்கே அதனைத் தவிர்த்து மற்றதை அறிந்து கொள்வோம்.

சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்கும் ஆன இறுதிக் காரணங்களைத் தத்துவங்களில் கண்டிறிய கூடாது, பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். போன வகுப்பில் பார்த்தோம், மார்க்ஸ் தொடக்கக் காலத்தில் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதை மாற்றுவதற்கும் தத்துவம் போதுமானதாகக் கருதியிருந்தார், ஆனால் பிற்காலத்தில் “பொருளாயத நலன்கள்” என்பதை விவாதிக்க வேண்டிய வந்த போது அரசியல் பொருளாதாரத்தின் அவசியத்தை மார்க்ஸ் புரிந்து அதனைப் படித்து ஆய்வு செய்தார்.

சமூக மாற்றத்திற்கான அடிப்படையைத் தத்துவத்தில் தேடாமல் பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டும் என்று எங்கெல்ஸ் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்

எங்கெல்ஸ்:-

"வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது.

 

இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுக மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவவியலில் அல்ல."

(டூரிங்குக்கு மறுப்பு)

புரட்சிக்கான இறுதிக் காரணங்களைத் தத்துவத்தில் அல்லாது பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டும் என்று எங்கெல்ஸ் கூறியதனால், எங்கெல்ஸ் தத்துவத்திற்கு மதிப்பளிக்கவில்லை என்று சிலர் கிளம்பக்கூடும், உண்மையில் அவர் தத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துக் கூறவில்லை, தத்துவம் தோன்றியதற்கான அடிப்படைக் காரணத்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.

புதியதாக வந்த ஒன்றை, அதன் உண்மைத் தன்மையை அறியாது, அதன் பிரபலத்தின் மீது ஏற்பட்ட கவர்ச்சினால் தவறாகப் புரிந்து கொள்வது சகஜமானதே. அப்படித்தான் சில இளைஞர்கள் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” கோட்பாட்டில் காணப்படும் இயக்கவியல் தன்மையைப் புரிந்து கொள்ளாது, பொருளாதார நிலைமைகள் தானாகவே செயற்பட்டு விளைவை ஏற்படுத்துவதாகக் கருதிக் கொண்டனர். இத்தகைய இயந்திரத்தனமான போக்கிற்கும் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

இத்தகைய குறைபாட்டைச் சுட்டிக்காட்டி எங்கெல்ஸ் தமது இறுதிக்காலங்களில் சில கடிதங்களில் விளக்கம் கொடுத்துள்ளார். அத்தகைய கடிதங்களில் சில பகுதிகளைப் பார்ப்போம்.

இந்தக் கடிதங்களை முன்வைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எங்கெல்ஸ் இறுதிகாலத்தில் கைவிட்டார். தவறை உணர்ந்து கொண்டார் என்பதாகச் சில திரிபுவாதிகள் கூறிவருகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கின்றனர். உறவு பாலா, காலன்துரை போன்றோர்கள் இந்தத் திரிபை தொடர்ந்து முகநூலில் செய்து வருகின்றனர்.

".. .. .. சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை. மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குக் கிறார்கள்-ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது), ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில்; இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்-அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்-எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன; அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடி இருக்கின்றன; அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்கின்றன."

(-எங்கெல்ஸ் வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

பொருளாதார உறவின் அடிப்படையை இங்கே எங்கெல்ஸ் மறுக்கவில்லை, அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, தீர்மானிப்பது அடித்தளமே ஆனால் அடித்தளத்தின் மீது மேற்கட்டமைப்புத் தாக்கம் செலுத்துவதையும், ஆனால் இறுதியில் பொருளாதாரமே இன்னும் தீர்மானகரமானதாக இருக்கிறது என்பதையுமே எங்கெல்ஸ் இங்கே வலியுறுத்துகிறார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது- நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தத் தாக்கததைத் திரிபுவாதிகள் தீர்மானிக்கிறது என்று கூறிவிடுகின்றனர். இது மார்க்சுக்கு எங்கெல்ஸ் கொடுத்த திருத்தம் என்றும் கூறுகின்றனர். இந்தத் திருத்தமே மார்க்சியத்தின் வளர்ச்சியாகவும் காட்டுகின்றனர். உண்மையில் மார்க்சையும் எங்கெல்சையும் இந்தத் திரிபுவாதிகள்தான் திரிக்கின்றனார்.

மனிதனது செயற்பாட்டையோ, மேற்கட்டமைப்பின் தாக்கத்தையோ எங்கெல்ஸ் மறுத்திடவில்லை. தாக்கம் செலுத்துவதைத் தீர்மானிப்பதாகக் கூறிட முடியாது என்பதையே எங்கெல்ஸ் கூறுகிறார்.

“நமது வரலாற்றை நாமே உருவாக்குகிறோம்; ஆனால், முதலாவதாக, மிகவும் திட்டவட்டமான அனுமானங்கள் மற்றும் நிலைமைகளின் கீழ் உருவாக்குகிறோம். இவற்றில் பொருளாதார ரீதியானவை முடிவில் தீர்மானகரமானவை. ஆனால் அரசியல் நிலைமைகள், இதரவை, மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற மரபுகளும் கூட ஒரு பாத்திரத்தை-அது தீர்மானகரமானதல்ல என்றாலும்-வகிக் கின்றன”

(பிலோஹுக்கு எழுதிய கடிதம். செப்டெம்பர் 21(22), 1890)

மேற்கட்டமைப்பின் பாத்திரம் தீர்மானகரமானதல்ல என்பதை இங்கே நேரடியாகக் கூறியப்பின்பும் எங்கெல்ஸ், மார்க்சின் கண்ணோட்டத்தைத் திருத்தினார் என்று பொய்யுரைக்கின்றனர். இதனை விளைவாக மார்க்சின் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு திரிக்கப்படுகிறது. அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

விதிவிலக்குகளை விதியாகவும், விதியை வறட்டுத் தனமாகவும் பார்ப்பதே சிக்கலுக்குக் காரணம் ஆகும். வறட்டுத் தனமில்லாது பொது விதியை புரிந்து கொள்வதற்கு எங்கெல்சின் கடிதங்கள் போதுமானதாக இருக்கிறது.

“அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றி எங்கெல்ஸ் எழுதிய ஒரு கடிதத்தின் பகுதியோடு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம்.

 

“... வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரேகூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றி விடுகிறார்.

பொருளாதார நிலைமைதான் அடிப்படை ஆனால் மேற்கட்டுமானத்தின் பல்வேறு கூறுகள்-வர்க்கப் போராட்டத் தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைவுகளும் வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக்கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன. இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன;

அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை யென்றும், அற்பமானதென்றும் நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.”

(ஜோ. பிலோஹ"க்கு எழுதிய கடிதம் 21 (22) 1890)

உற்பத்தியிலும் மறுவுற்பதியிலும் ஏற்படுகின்ற மாற்றங்களே உற்பத்தி உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்களே கருத்து மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. அடித்தளத்தின் மீது மேற்கட்டமைப்பின் தாக்கம் எந்த அளவுக்கானதாக இருந்தாலும் இறுதியில் பொருளாதார இயக்கமே இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. இதற்கு மாறாக எங்கெல்ஸ் எங்கேயும் கருத்துரைக்கவில்லை.

இன்று நாம் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டைச் சுருக்கமாகவும் அதன் சாரத்தையும் பார்த்தோம். அடுத்த வகுப்பில் இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு விளக்கம் கொடுக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

*******************************************************

1) “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையின் சுருக்கமும் சாரமும்  

 3) அடித்தளம் மேற்கட்டமைப்பு கோட்பாடு பற்றிய புரிதல் சிக்கலும் – மார்க்சிய விலகலும்

No comments:

Post a Comment