Saturday 27 March 2021

3) அடித்தளம் மேற்கட்டமைப்பு கோட்பாடு பற்றிய புரிதல் சிக்கலும் – மார்க்சிய விலகலும்

 (“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட (27-03-2021) வகுப்பின் குறிப்பு)

நாம் இரண்டு வகுப்புகளாக, “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றிப் பார்த்துவருகிறோம். குறிப்பாக மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறியதையே பார்த்தோம். இன்று லெனின், ஸ்டாலின், மாவேதுங் இது பற்றிக் கூறியதை முதலில் பார்த்துவிட்டு, அடித்தளம் மேற்கட்டமைப்புக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால், இந்தக் கோட்பாட்டை அவர்கள் எவ்வாறு திரித்து விளக்கம் கொடுக்கின்றனர் என்பதையும் அது எவ்வாறு மார்க்சியத்தை விட்டு விலகுகிறது என்பதையும் பார்ப்போம்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடே, சமூக மாற்றத்துக்கு, உந்து சக்தியாக இருக்கிறது என்பதை மாசேதுங் கூறியதை முதலில் பார்ப்போம்.

மாவேதுங்”-

“சமூக மாற்றங்கள், பிரதானமாகச் சமூகத்தில் காணும் உள்முரண்பாடுகளின் (internal contradictions) வளர்ச்சியால் அதாவது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையிலுள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிதான் சமூகத்தின் முன்னேறச் செய்கின்றது, பழைய சமூகத்தின் இடத்தில் புதிய சமூகத்தைத் தோற்றுவிக்கும் உந்து சக்தியாக விளங்குகின்றது”

(பிரமைகளை வீசிஎரிந்து போராட்டத் தயாராகுங்கள்- 14 ஆகஸ்ட் 1949) 

அடுத்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

லெனின்:-

“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையில் இருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும், முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்று முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே”

(பிரெடெரிக் எங்கெல்ஸ்)

இங்கே லெனின் கூறுவது பாட்டாளி வர்க்கத்தினை அணி திரளுவதற்கான புறநிலைமைப் பற்றியே ஆகும். இதனைச் செய்து காட்ட வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். கட்சியின் செயற்பாட்டையே அகநிலை என்று கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியானது சமூகத்தில் காணப்படும் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மாயான நிலைமைகளில் இருந்தே தமது வேலைத்திட்டத்தை உருவாக்குகிறது, என்று ஸ்டாலின் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.

ஸ்டாலின்:-

“மார்க்ஸ் கூறுவதாவது: "மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வுநிலை அல்ல; அதற்கு மாறாக, மனிதர்களின் சமூக வாழ்நிலைதான் அவர்களின் உணர்வைநிலையை நிர்ணயிக்கிறது.'' (அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)

ஆக, கொள்கையில் தவறாமலிருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால் - பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்? புறநிலைக்கப்பால் நிற்கும் ''மனிதப் பகுத்தறிவுக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யக் கூடாது.

சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது? சமூகத்தின் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மையான நிலைமைகள்தாம் அந்தச் சக்தி.

எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும். ''பெரிய மனிதர்களின்'' நல்லெண்ணங்களை ஆதாரமாகக் கொள்ளவும் கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.”

(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்

வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் -பக்கம் 25)

ஆக, நாம் இதுவரை வகுப்பில் பார்த்த “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற மார்க்சின் கோட்பாடானது, கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலைத்திட்டதை அமைத்துக் கொள்வதற்கு உதவிடுகிற அடிப்படைக் கோட்பாடாகும். அப்படிப்பட்ட கோட்பாட்டைத் தவறாக விளக்கப்படுத்தினால், அது கட்சியின் போக்கை தவறான திசைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

அனைத்து தரப்பினரிடமும் தவறான விளக்கம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். அதனைத் தான் இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம்.

நாம் இங்கே பார்க்கப் போகிறவர்கள், பெரிய மேதைகளும், தலைவர்களும், எழுத்தாளர்களும் ஆவர். இங்கே சுட்டிக்காட்டப்படுவது “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றிய அவர்களின் கருத்தை மட்டும் தான். அவர்களின் மற்ற விஷயங்களை விமர்சிக்கப்படவில்லை என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் கோவை ஞானி, இவர் மார்க்சியத்தின் அடிப்படைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிட்டுத் தன்னை ஒரு மார்க்சியவாதி என்று கூறிக் கொள்வார். மார்க்சிய அடிப்படைகளில் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால் மார்க்சியத்தின் பேரால் பல நூல்களை எழுதி தள்ளுவார். அதில் எங்கேயும் மார்க்சிய அடிப்படையை ஏற்று விளக்கி இருக்க மாட்டார். அனைத்தையும் கேள்விக்கேட்டு குழப்பிவிடுவார்.

“மார்க்சியத்திற்கு அழிவில்லை” “மார்க்சியத்தின் எதிர்காலம்” என்பது போன்ற கவர்சிகரனமான தலைப்பில் தான் நூல் வெளியிடுவார்.

கோவை ஞானி:- "மார்க்சியத்தின் அடிப்படைகள் என்று அறியப்பட்டனவற்றினுள்ளும் கேள்விகள் எழுந்துள்ளன. அடித்தளம், மேல்கட்டுமானம் என்பனவற்றில் எப்பொழுதும் அடித்தளத்திற்கே அழுத்தம் என்பது தொடக்கம் முதலே கேள்விக்குள்ளாகியிருக்கிறது."

ஆக, சமூகம் பற்றிய மார்க்சிய பார்வையை ஏற்கவோ, மறுக்கவோ மாட்டார் ஆனால் அதைக் கேள்விகேட்டுத் திரிப்பார், அவ்வாறு திரிக்கப்படவில்லை என்றால் அந்தக் கேள்விக்குள்ளான மார்க்சியம் அழிந்துவிடும் என்பார். இந்தத் திரிபை ஏற்றால் “சிதைக்கப்பட்ட இந்த மார்க்சியத்திற்கு அழிவில்லை” என்பார்.

தத்துவத்தின் அடிப்படைக் கேள்விக்குப் பொருள்முதல்வாதம் அளிக்கிற பதிலை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் மார்க்சியத்தை ஏற்றது போல் நடித்து, இன்றைய நிலைக்கான மார்க்சியம் படைப்பதாகக்கூறி, மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பார். இதுதான் நோக்கம். அவரது எந்த நூலைப் படித்தாலும் நான் கூறியது போலவே இருப்பதைப் படிப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

கோவை ஞானி:- “வரலாறு குறித்த மார்க்சியப் பார்வையின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புறக்கணிக்க இயலாது, இயங்கியலை மேலும் ஆழமாகக் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வர்க்கப் போராட்டம் என்பது மார்க்சியத்தின் மிக முக்கியமான ஆதாரக் கோட்பாடு, பொருளா? கருத்தா? எது முதல் என்ற ஆய்வில் பொருள்முதல்வாதம் அடங்குவதில்லை. பொருளும் கருத்தும் ஒன்றையொன்று ஊடுருவக் கூடியவை.

மதம் மக்களுக்கு அபின் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மதம் குறித்த மார்க்சிய ஆய்வு முற்றுப் பெறுவதில்லை. வர்க்கப் போராட்டங்களின் வழியே - வர்க்கப் போராட்டத்தைக் கடந்து செல்வதுதான் மார்க்சியம்.”

மதம் குறித்த மார்க்சிய ஆய்வு மட்டுமல்ல, மார்க்சிய அடிப்படைகள் எதனையும் தோழர் கோவை ஞானி ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால் அவரை நாம் மார்க்சியர் என்று அழைக்க வேண்டும்!!!!.

இயக்கவியலை மேலும் ஆழப்படுத்தி, மார்க்சியத்தைக் கொண்டே மார்க்சியத்தை வீழ்த்தப் பார்க்கிறார். இந்தச் சதி வேலை என்றும் சாத்தியமாகாது. குழப்பத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அதையும் நம்மால் முறியடிக்க முடியும்.

“மார்க்சியத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் கோவை ஞானி பலபேரிடம் கட்டுரை பெற்று வெளியிட்டுள்ளார். அதில் தோழர் தியாகு, தோழர் பொன்னீலன் ஆகியோர்களின் கருத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

"மார்க்சியத்தின் எதிர்காலம் அரசியல் சிக்கல்" என்ற தலைப்பிலான கட்டுரையில் தோழர் தியாகு கூறுகிறார்:-

"அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்குமான உறவுகள் பொருளாதாரத்துக்கு நேர் பொருத்தமாக அரசியல், கலை இலக்கியம் என்றெல்லாம் வருவது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் சுயேச்சையான தனி வரலாறு உண்டு. இவற்றிடையே செயற்கையாக முடிச்சுப் போடும் முயற்சிகள் உண்டு. அதேபோல இவை ஒன்றின் மீதொன்று செலுத்துகிற தாக்கத்தைக் காணாதிருப்பதும் தவறு"

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் இயக்கவியல் தொடர்வை தோழர் தியாகு அறுத்துவிடுகிறார். நாம் இரண்டு வகுப்புகளில் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூறியதைப் பார்த்தோம். அதில் அடித்தள மாற்றங்களே அதாவது பொருளாதா நிலைமைகளில் ஏற்படுகிற மாற்றங்களே மேற்கட்டமைப்பில் கருத்துக்களாகப் பிரதிபலிக்கிறது என்று பார்த்தோம். ஆனால் இதைச் செயற்கையான முடிச்சு என்கிறார் தோழர் தியாகு. அதாவது அடித்தளத்தமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்பதைச் செயற்கையான முடிச்சு என்கிறார்.

தோழர் பொன்னீலன் “மார்க்சியத்தின் எதிர்காலம் பண்பாட்டுச் சிக்கல்” என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.

“மார்க்சியத்தில் மிக அடிப்படையான ஒரு கூறு அடித்தளத்துக்கும் மேற்கோப்புக்கும் இடையிலான உறவு. அடித்தளமும் மேற்கோப்பும் ஒன்றை ஒன்று பாதிப்பது. ஒன்றோடொன்று முரண்படுவது.”

இதில் தோழர் பொன்னீலன் அடித்தளத்திற்கும் மேற்கோப்புக்கும் இடைத்தொடர்பை மட்டும் தெரிவிக்கிறார், ஆனால் இடைதொடர்பில் அடித்தளம் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது, மேற்கட்டமைப்புத் தாக்கம் செலுத்துகிறது என்பதை வேறுபடுத்தி விளக்காமல் விட்டுவிடுகிறார். அடுத்து என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

“.. சமகாலத்தில் மனிதனைப் பற்றியோ, மனிதகுலம் பற்றியோ பார்க்கும் பொழுது இந்தப் பார்வை மட்டும் போதாது என்று தோன்றுகிறது”.

ஆக இவரும் மார்க்சியத்தின் பொருள்முதல்வாத கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது வெளிப்படுகிறது. மார்க்சியம் ஒரு பற்றாக்குறையான முழுமை அடையாத கோட்பாடாகவே பார்க்கிறார். ஆனால் லெனின் போன்ற மார்க்சியவாதிகளுக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வளர்க்கப்பட்ட நிறைவு செய்யப்பட்டதாகப் படுகிறது.

“தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமூகம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது”

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக்கூறுகளும்)

லெனின் குறிப்பிடுகிற இந்த வெற்றி தான் தோழர் பொன்னீலன் போன்றோர்களுக்குப் போதாமையாகப்படுகிறது. மார்க்சியம் இன்றைக்கும், சரி என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது. வர்க்க சமூகம் முழுமையாக வீழும்வரை இது போன்ற கூச்சல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

அடுத்து ஒரு பெரிய ஆய்வாளர். பெயர் தோழர் இர்பான் அபீப். இவர் சிறந்த ஆய்வாளர், மேதை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் பலதரப்பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளார், அவைகளை இங்கே விமர்சிக்கவில்லை. மார்க்சின் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றிய அவரது புரிதல், அல்லது அவரது எழுத்துக்களை மட்டுமே விமர்சிக்கப்படுகிறது.

“இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்” என்ற நூலில் தோழர் இர்பான் அபீப் கூறுகிறார்:-

“முதலாளித்துவமும், பிற சுரண்டல் அமைப்புகளும் சொந்தச் சுமை காரணமாக அல்லது “முதலாளித்துவப் பொது நெருக்கடி”காரணமாகத் தாமாகவே வீழ்ந்துவிடாது. கருத்துப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்று இல்லை. பொருளாதாரச் செயல்பாடு ஒரு உதவிதான். ஆனால் அது வர்க்க உணர்வுக்கு மாற்றாகாது.”

(இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்)

புறநிலை விதிகள் தாமாகவே செயற்பாடாது என்பது உண்மை தான். தானே வீழும் என்று மார்க்சியம் கூறவில்லை. ஆனால் தோழர் இர்பான் அபீப் உற்பத்தியில் ஏற்படுகிற முரண்பாடே வர்க்கப் போராட்டமாக வெளிப்படுகிறது என்பதை மறுத்து. பொருளாதாரச் செயல்பாடு “ஒரு உதவி” என்று கூறிவிடுகிறார்.

மேலே மாசேதுங் பொருளாதார உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடுகளே சமூக மாற்றத்துக்கான உந்து சக்தி என்று கூறியதை தோழர் இர்பான் அபீப் போன்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

காரணம் தானே காரியமாகாது. பொருளாதார நிலைமைகள் புறநிலைமையானது, அதனைச் செயற்படுத்துவது அகநிலையானது. உழைக்கும் மக்களும் அவர்களைத் தலைமைத் தாங்கும் கட்சியுமே அகநிலை என்று கூறப்படுகிறது. காரணத்தில் இருந்தான் காரியம் நடைபெறுகிறது. முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தியின் உள்முரண்பாடே வர்க்க வேறுபாடாக வெளிப்படுகிறது என்று கூறுகிற மார்க்சியத்தை விடுத்து, பொருளாதாரச் செயற்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தையும் பிரித்துவிடுகிறார்.

இதன் மூலம் வர்க்கப் போராட்டத்தின் விஞ்ஞானத் தன்மையிலான புரிதல் மறுக்கப்படுகிறது.

“வெல்வதற்கோர் பொன்னுலகம்” என்கிற கட்டுரைத் திரட்டில் தோழர் இர்பான் அபீப் எழுதியிருப்பதை அப்படியே வாசிப்போம்.

“வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள சூழல்களின் பின்னணியில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய செயல்முறைகள் எவ்வாறு வரம்புகளுக்கு உட்பட்டவையாக இருக்கும் என்பது பற்றி மார்க்சும் ஏங்கல்சும் முழுக் கவனம் செலுத்தினார்கள். என்றபோதிலும் வரலாற்றின் தன்னியல்பான ஆற்றல் மீதோ, அதன் கண்மூடித்தனமான ஆற்றல் மீதோ அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

சிந்தனைகளைப் பரப்புவதன் மூலமும், அவற்றைப் புரட்சிகரமான செயல்பாடுகள் நிலைக்கு உயர்த்துவதன் மூலம்தான் உலகையே மாற்றி அமைக்கும் பணியை நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் கருதினார்கள். 1845-46 ஆம் ஆண்டுகளில் அவர்கள் எட்டிய தத்துவார்த்த முடிவுகளின் உட்கிடக்கையாக அமைந்துள்ள ஒன்றுதான் அவர்கள் வெளியிட்ட புரட்சிக்கான அறைகூவல். அதனைத்தான் அவர்கள் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் முக்கியக் குறிக்கோளாக வெளிப்படுத்தினார்கள். "புறவுலகில் நிலவிவரும் சமூக அமைப்பைச் சிந்திக்கும் மனிதர்கள்தான் கிளர்ந்தெழுந்து தூக்கி எறிவார்கள். கண்பார்வையற்ற பருப்பொருள் இதனைச் செய்யாது” என்பதே மார்க்சிய மூலவர்களின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.”

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது இது போன்ற விபரீத விளக்கங்கள் கொடுக்க வேண்டி வருகிறது. கண்பார்வையற்ற பருப்பொருளாம்.

இதுபோன்ற விளக்கங்களின் முடிவு எவ்வாறு இருக்கும்?, “பருப்பொருளுக்குச் சிந்திக்கத் தெரியாது, மனிதன், தானே சிந்திக்கிறான், மனிதனின் சிந்தனையே.. மனிதனின் லட்சியமே சமூகத்தை உருவாக்குகிறது.” இப்படித்தான்ன முடியும்.

எதை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மறுக்கிறதோ, அதுவே சரியானது என்று இத்தகையினர் கூறிவருகின்றனர்.

தோழர் இர்பான் அபீப் இத்தகைய கருத்துக்களைக் கிராம்ஷ்கியை முன்வைத்தே கூறியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டு அடுத்ததற்குச் செல்வோம்.

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி” என்ற நூலை தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். இவர் பல்வேறு கள ஆய்வுகளைச் செய்தவர். இவரது பணியினை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு பற்றிய இவரது கருத்து அபத்தமாகவே இருக்கிறது.

“ஒரு சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் உற்பத்தி முறை அமைய, அதன் மேற்கட்டுமானமாக, கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஒழுக்கநெறிகள் ஆகியன அமைகின்றன. ஒரு சமூகத்தில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அதன் மேற்கட்டுமான அம்சங்களைப் பாதிக்கிறது. சில நேரங்களில் அதைத் தீர்மானிக்கிறது. ஆயினும் மேற்கட்டுமானம் பிடித்து வைத்த பிள்ளையார் என்பது போல் வாளாயிருப்பதில்லை. பல நேரங்களில் அதுவும் தன் பங்கிற்கு அடித்தளமான பொருள் உற்பத்தி முறையைப் பாதிக்கிறது.”

இவ்வாறு அந்நூலில் எழுதியுள்ளார். அடித்தளம் மேற்கட்டுமான அம்சத்தைப் பாதிப்பதாகவும், சில நேரங்களில் அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்று விளக்கம் கொடுக்கிறார். இவரது குழப்பமான விளக்கத்திற்குக் கிராம்ஷ்கியே காரணமாகும்.

கிராம்ஷ்கியைப் பற்றித் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறியதை சற்று பெரிய மேற்காளாய் பார்ப்போம்:-

"அடித்தளம் - மேற்கட்டுமானம் குறித்த கிராம்ஷ்கியின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவையாக இன்றும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்க மதம் செல்வாக்குப் பெற்றுள்ள இத்தாலியில் கத்தோலிக்கம் குறித்தும். இத்தாலியப் பண்பாடு குறித்தும் தமது ஆய்வுகளையும் விமர்சனங்களையும் அவர் எழுதியுள்ளார். வரலாற்றுப்பொருள்முதல்வாதம் தொடர்பான அவரது சிந்தனைகள் இந்தியச் சூழலுக்குத் தேவைப்படுவதால் மிகச் சுருக்கமான முறையிலாவது அதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

...நிலவுடைமைச் சமூக அரசானாலும் சரி, முதலாளித்துவச் சமூக அரசானாலும் சரி, அவை தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை என்ற அடக்குமுறை எந்திரங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன.

பொருளாதார வலிமை, அரசியல் வலிமை என்பன அரசிற்கு இருந்தாலும் அவற்றின் துணையுடன் மட்டுமே தன் சமூக மேலாண்மையை அது நிறுவவில்லை என்பது கிராம்ஷ்கியின் கருத்தாகும்.

இவற்றுடன் கூட, சமூகப் பண்பாட்டு நிறுவனம் ஒன்றையும் அவை உருவாக்கி வைத்திருந்தன. அதன் துணையுடன்தான், சுரண்டுதலுக்கான சமூக ஒப்புதலையும் அவை பெற்றிருந்தன என்பது கிராம்ஷ்கியின் கணிப்பு. கிராம்ஷ்கி பயன்படுத்திய பின்வரும் கலைச் சொற்களை அறிந்து கொள்வதன் வாயிலாக இதைப் புரிந்து கொள்ள முடியும்.

குடிமைச் சமூகம்

அரசியல் மேற்கட்டுமானம் என்பது அரசு, அரசின் ஆட்சிக் கருவிகளான இராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, வருவாய்த்துறை என இன்னபிற அரசு எந்திரங்களை உள்ளடக்கியது.

குடிமைச் சமூக மேற்கட்டுமானம் என்பது, சமயம், கலை, இலக்கியம், பண்பாடு என்ற கூறுகளை உள்ளடக்கியது. இவற்றின் வாயிலாக எவ்வித வன்முறையும் இல்லாமல் தனக்கு (ஆளும் வர்க்கத்திற்கு) ஆதரவான சமூக ஒப்புதலை அரசு உருவாக்கிக் கொள்கிறது.

....இதன் அடிப்படையில் பார்க்கும்போது அரசுக்கு எதிரான போராட்டம் என்பது, அதிகாரத்தை அதனிடமிருந்து கைப்பற்றும் அரசியல் போராட்டமாக மட்டும் அமையாமல், குடிமைச் சமூகத்தின் வாயிலாக அது பெற்றுள்ள பண்பாடு மேலாண்மைக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்"

இதன் மூலம் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படும் பண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு அப்பாற்பட்ட போராட்டமாகப் பிரிக்கிறார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோர்களின் கண்ணோட்டமான பொருளாதார வாழ்வே, பண்பாட்டைப் படைக்கிறது என்பதை மறுத்துவிடுகிறார். பண்பாடானது அந்தரத்தில் இருந்து தோன்றுவதில்லை. அதற்கான வேர்கள் பொருளாய உற்பத்தில் தான் இருக்கிறது. அதனால் தான் கம்யூனிஸ்டுகள் பண்பாட்டிற்கான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்துகின்றனர்.

குடிமைச் சமூகத்தை மேற்கட்டுமானம் என்று கூறிவிடுகிறார். அதற்கான போராட்டத்தை மேற்கட்டுனாத்திலேயே முடிச்சுப் போடுகிறார். குடிமைச் சமூகம் என்ற கலைச்சொல் மார்க்சுக்கு முன்பே பயன்படுத்திய சொல்தான், ஹெகலும் பயன்படுத்தியுள்ளார்.

    மார்க்ஸ் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலுக்கான முன்னுரையில் கூறியதை நாம் போன வகுப்புக்கு முன்பான வகுப்பில் பார்த்தோம்.

அதில், ஹெகல் கூறுகிற குடிமைச் சமூகத்தின் உள்ளமைப்பு அரசியல் பொருளாதாரத்தில் தேட வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் இதுவே தமது ஆய்வின் முடிபு என்று கூறி அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றி விளக்கியுள்ளார். சுரண்டும் வர்க்க சார்பான பண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்துதான் நடத்த வேண்டும். இதை விடுத்து பண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தனியாகவும், வர்க்கப் போராட்டத்தைத் தனியாகவும் நடத்த முடியாது.

நாம் பேசிவருகிற தோழர்கள் யாரும் சாதாரணமானவர்கள் கிடையாது, ஆனால் அவர்களால் சமூகம் பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்தோடு அவர்கள் நின்றுவிட்டால் பரவாயில்லை, மார்க்சிய கண்ணோட்டத்தைத் தவறாகவும், சிதைக்கும் வகையிலும் விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு பெரும் ஆபத்தாகும்.

கிராம்ஷ்கியை முன்வைத்தே இது போன்ற போக்குகள் நடைபெறுவதால் அவரின் கருத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

கிராம்ஷ்கி:- “..பொருளாதார சக்திகள் உள்ளடக்கமாவும் கருத்துநிலைகள் வடிவமாகவும் அமைகின்றன. ஆனால் உள்ளடக்கம் என்றும் வடிவம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது விஷயத்தைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் பாகுபாடே அன்றி வேறல்ல.”

(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம் எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

மார்க்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பதை, வெறும் புரிந்து கொள்வதற்கு வகுத்துக்கொண்ட பாகுபாடாக மட்டுமே பார்க்கிறார். அதில் காணப்படும் வர்க்கப் போராட்டத்திற்கான காரணத்தையும், சிந்தனைகளின் வர்க்க சார்ப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.

“..வரலாற்று ரீதியாக, பொருளாயத சக்திகளை அவற்றுக்குள்ள வடிவங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதுபோலப் பொருளாயத சக்திகளிலிருந்து கருத்துநிலை வடிவங்களைப் பிரித்துப் பார்த்தால் அவை தனிமனிதர்களின் வெறும் கற்பனையாகவே காட்சியளிக்கும்.

(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம் எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 466)

அடித்தளம் மேற்கட்டமைபு என்ற இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்க்கிறார். இந்தச் சமநிலை பரஸ்பர வினைபுரிதலையே குறிக்கிறது. பரஸ்பர வினைபுரிதல் என்பது வர்க்கப் பார்வையற்ற போக்காகும்.

கிராம்சி கூறுகிறார்:

“..அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே பாட்டாளி வர்க்கம் தனது மேலாண்மையை வளர்த்துக் கொள்வதும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு உருவாக்கும் எதிர்காலச் சோசலிச அரசின் கூறுகளை இப்போதே உருவாக்கத் தொடங்குவதும் அவசியம். இங்குதான் அறிவாளிகளின் பங்கு முக்கியமாகிறது”

(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம் எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 470)

எதிர்காலச் சோஷலிச அரசிற்குத் தேவைப்படும் வடிவத்தை, இப்போதே உருவாக்க தொடங்கவும், அதற்கான அறிவாளிகளின் பங்கையும் முதன்மை படுத்துகிறார். மேலே கூறிய கிராம்க்சியின் கூற்றின்படி, அரவரது பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை என்பது அறிவாளிகளின் கற்பனையாகவே முடியும் என்பது சந்தேகம் இல்லை. சோஷலிசத்துக்கான அரசு தோன்றுவதற்கு உரிய புறநிலை வேண்டும், புறநிலையை மறுத்து அறிவாளிகளின் பங்கை முன்னிருத்துகிறார்

கிராம்சி கூறுகிறார்:

“பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் அமைப்புக்கும் இடையில் எளிமையான, நேரடியான உறவுகள் இல்லை. மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை. அரசியல் அமைப்புக்கான காரணகாரியங்களைக் கண்டிறிவது சிக்கலானது கடினமானதுமாகும். இக்காரணக் காரியங்களைப் பிரித்துப் பார்ப்பதற்குப் பல்வேறு வகையான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் ஆழமாகவும் பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து அறிவது இன்றியமையாதது.. வரலாறு என்பது கணிதம் அல்ல”

(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம் எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக். 13)

கிராம்ஷ்கி மக்களின் வரலாறு என்பது பொருளாதார விவரங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்படவில்லை என்று அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரத்தை வெளிப்படையாகவே ஒதுக்கிவிடுகிறார். அடித்தளத்தை அவ்வளவு எளிதாக அறிந்து கொள்ள முடியாதுதான், ஆனால் அடித்தளம்தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்பதை இதனால் மறுத்துவிடவா முடியும்.

வரலாறு என்பது கணிதம் அல்ல என்கிறார். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரமே, வரலாற்றின் வளர்ச்சியைக் கணித்துக் கண்டறிவதுதானே. இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடியும் என்று மார்க்ஸ் கூறியதை முதல் வகுப்பில் நாம் பார்த்தோம்.

பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் உள்ள விஞ்ஞானத் தன்மையை இத்தகைய போக்கினர் முற்றப் புறக்கணித்துவிட்டனர்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வறட்டுத்தனமாக, இயந்திரத்தனமாகப் புரிந்து கொண்டவர்களும் சரி, தவறாகப் புரிந்தவர்களும் சரி, விபரீதியான முடிவுக்குத் தான் வருவார்கள். கிராம்ஷ்கி 1917 ஆம் ஆண்டு “மூலதனத்திற்கு எதிரான புரட்சி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் எந்தப் புரட்சியை இவ்வாறு கூறுகிறார் என்பது தெரியுமா? 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியைத்தான், மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” நூலுக்கு எதிரானதாகக் கூறுகிறார்.

அதில், போல்ஷ்விக்குகள் மார்க்சை மறுதலித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கூறுகிறார், இதுவரை நம்பப்பட்டுவந்தது போல வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளதாக முடிக்கிறார். லெனினியத்தையோ, லெனின் எழுதிய ஏப்ரல் ஆய்வுரைகளையோ இவர் புரிந்து கொள்ளக்கூடியவராகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட கிராம்ஷ்கியே இந்தியாவில் பல இடதுசாரி தலைவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.

கிராம்சி கூறுகிறார்:

“போல்ஷ்விக் புரட்சி, மார்க்ஸின் 'மூலதன’த்திற்கு எதிரான புரட்சி ஆகும். ரஷியாவில் பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலம் பூர்ஷ்வாக்களின் மத்தியில்தான் 'மூலதனம்' அதிகத் தாக்கம் ஏற்படுக்கியது. பாட்டாளிவர்க்கம் தனது விடுதலை, தனது வர்க்க நலன்கள், தனது புரட்சி ஆகியன பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தவிர்க்கமுடியாத விதியின் பயனாக, ரஷியாவில் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கப்படும், அங்கு முதலாளிய சகாப்தம் தொடங்கும், மேற்கத்திய பாணி நாகரிகம் அங்குத் தழைக்கும் என்பதை 'மூலதனம்' விமர்சனரீதியாக விளக்கியது.


ஆனால், எந்தவொரு சட்டகத்திற்குள் ரஷிய வரலாறு வளர வேண்டும் என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வரையறுத்ததோ, அந்தச் சட்டகத்தை வரலாற்று நிகழ்வுகள் உடைத்தெறிந்தன. போல்ஷ்விக்குகள் கார்ல் மார்க்ஸை மறுதலித்துள்ளனர். அவர்கள் தங்கள் செயல்கள் மூலமும் வெற்றிகள் மூலமும், இதுகாறும் நம்பப்பட்டு வந்தது போல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர்.”

(கிராம்ஷி புரட்சியின் இலக்கணம் எஸ்.வி.ராஜதுரை வ.கீதா பக்.86-87)

கிராம்ஷி தமது தவறான புரிதலின் காரணமாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை நீர்த்துப் போகச் செய்யப் பார்க்கிறார். ஆனால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இன்றும், சரி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

அவ்வப்போது எழுகிற முதலாளித்துப் பொருளாதார நெருக்கடிகள், மார்க்சியம் சரி என்பதை முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு மட்டுமல்ல சந்தேகப்படுகிற கம்யூனிஸ்டுகளுக்கும் நிரூபித்துவருகிறது. ஏகாதிபத்தியத்தில் இன்றைய நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்று கூறிய இடதுசாரி மேதாவிகள்!!! உலகெங்கும் இருக்கின்றனர்.

வர்க்க சமூகம் முடிவுக்கு வரும்வரை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டமே நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இறுதியாகத் தோழர் ந.முத்துமோகன், தோழர் கோ.கேசவன் ஆகியோர்களின் கூற்றைப் பார்ப்பதோடு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம். தோழர் ந.முத்துமோகன் அவர்களின் கருத்தை ஒரு தனி வகுப்பாக எடுக்காலம், அந்தளவுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்

ந.முத்துமோகன் “இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்”என்ற நூலில், “மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில், மார்க்ஸ் எப்போது ஆசிய உற்பத்தி முறை என்று ஒன்றைப் பற்றிப் பேசினாரோ, அப்போதிருந்தே வெறும் பொருளாதார வர்க்க அரசியல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்பது வெளிப்படையான ஓர் உண்மை” (பக்கம் 264).

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கும் என்கிற கருதுகோளை “வெறும் பொருளாதார வர்க்க அரசியல்" என்று கூறியுள்ளார். இந்த “வெறும்" என்ற சொல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் விஞ்ஞானத் தன்மையைக் கொச்சப்படுத்துகிறது. மார்க்சால் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாட்டையே இழிவுபடுத்துகிறது.

மார்க்ஸ் இறுதிக் காலம்வரை, ஆசிய உற்பத்தி முறையைப் பற்றிப் பேசி உள்ளார். மார்க்ஸ் மறைவுக்குப் பின்பும் எங்கெல்ஸ் ஆசிய உற்பத்தி முறையைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் எங்கேயும் அவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மூன்றாம் உலக நாடுகளுக்குப் போதாது என்று கூறவில்லை. மார்க்சியமானது ஒரு சர்வதேசப் பார்வையாகும்.

ஐயோப்பிய உற்பத்தி முறையும் ஆசிய உற்பத்தி முறையும் ஒன்றல்ல என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால் வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறை ஆசியாவுக்குப் போதாது.... பொருந்தாது என்பதை இவரைப் போன்றோர்களால் மட்டுமே கூறமுடியும்.

“பொருளுற்பத்தி வாழ்க்கையை மார்க்சியர்கள் சமூக அடிப்படை என்றும், கலை, கலாசாரம், தத்துவம், கல்வி, குடும்ப உறவுகள் போன்றவற்றை மேற்கட்டுமானம் என்றும் வகைப்படுத்துவர். இந்த வகைப்படுத்தல் இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது….

 

அடிப்படையைக் காரணமாகவும் மேற்கட்டுமானத்தைப் பிரதிபலிப்பாகவும், ஒன்றை நிஜமாகவும் மற்றொன்றை நிழலாகவும் அணுகும் முறையியல் பொருத்தமற்றது என்ற முடிவு இப்போது பெறப்படுகிறது.” (பக்கம் 109).

மார்க்ஸ் நிஜம், நிழல் என்றெல்லாம் விஞ்ஞானத் தன்மையற்று எதையும் கூறியதில்லை. ஆனால் தோழர். ந.முத்துமோகன் பிரம்மம் நிஜம் பிரபஞ்சம் நிழல் - மாயை என்பது போல் மாயவாதமாகப் பேசுகிறார்.

“அடித்தளம் மேற்கட்டமைப்பு” கோட்பாட்டைப் பற்றி இப்படி விளக்கம் கொடுப்பதை ஏன் முன்னுரிமைக் கொடுத்து விமர்சிக்க வேண்டும் என்ற கேள்வி, சிலருக்கு எழுவது இயற்கையே. அதற்கான பதிலை அளிப்பது அவசியமாகும்.

மார்க்சியத்தை வளர்ப்பதாகக் கூறிச் செல்லும் இத்தகைய போக்கு இறுதியில் இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது, இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியத்தால் முடியாது என்ற முடிவை நோக்கியே செல்கிறது. அதனால் இதன் ஆபத்தை உணர்ந்து விமர்சிப்பது கட்டாயமாகிறது, கடமையாகிறது.

தோழர். ந.முத்துமோகன்:- “..இந்தியத் தத்துவப் பிரச்சனைகள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டில் ஒன்றாக உள்ளடக்கி விடமுடியும் என்று என்னால் கருதமுடியவில்லை. இன்னும் பலப்பலப் பிரச்சனைகள்… பலபடித்தானவை. ஒன்று, பொருள் – கருத்து என்ற எல்லைகள் மிகவும் குறுகியவையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியத் தத்துவங்களின் பரப்பு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும்.” (பக்கம் VI.)

இறுதியில் தோழர் ந.முத்துமோகன், தத்துவத்தின் அடிப்படைக் கேள்விக்குப் பதிலளிப்பதின் மூலம், கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்படுவதையே மறுப்பதோடு, இந்தியத் தத்துவங்களைப் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரண்டில் ஒன்றாக உள்ளடக்கி விடமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயப் போன்ற இந்திய மார்க்சிய அறிஞர்கள் இந்தியத் தத்துவங்களைக் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்று பிரித்து விளக்கம் கொடுத்துள்ளனர். இது பற்றி நா.வானமாமலை போன்றோர்களும் தமிழில் எழுதி வந்துள்ளனர். அத்தகைய போக்குகளைக் கணக்கில் கொள்ளாது தோழர் ந.முத்துமோகன் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.

கருத்துமுதல்வாதத்தைப் பின்பற்றுகிற பத்மன் அவர்கள் தாம் எழுதிய, “தத்துவத் தரிசனங்கள்” என்ற நூலில், இந்தியாவில் காணப்படும் உலகாயதம் போன்ற தத்துவங்கள், மார்க்சியம் பேசுகிற பொருள்முதல்வாதத் தத்துவதின் முன்னோடி என்று எழுதியுள்ளார். கருத்துமுதல்வாதிகளைவிடத் தோழர் ந.முத்துமோகன் போன்றோர்கள் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற சோவியத் தத்துவ அறிஞர்களால் எழுதப்பட்ட நூல் தமிழில் 1982ஆம் ஆண்டுத் தோழர் தா.பாண்டின் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது. இதன் மறுபதிப்பு 2013ஆம் ஆண்டு என்.சி.பி.எச் வெளிட்டுள்ளது. இந்தப் பதிப்புக்கு தோழர் ந.முத்துமோகன் அணிந்துரை எழுதியுள்ளார். அதற்கு “வித்தியாசமான ஒரு நூல்” என்று தலைப்பிட்டுள்ளார். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி இந்நூல் வெளிவருவதற்கு முன்பும் பின்பும் பல நூல்கள் வெளிவந்துள்ளது, அப்படியிருக்க இந்நூலை ஏன் வித்தியாசமானது என்று கூறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம்.

“வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனில் சமூகச் சூழல்களைக் கொண்டு ஒரு நிகழ்வினை விளக்குவது என்ற ஓர் எளிதான புரிதல் நம்மில் பலரிடையில் வழக்கில் உள்ளது” என்று ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, இந்நூல் அவ்வாறு எழுதப்படவில்லை என்று எழுதியுள்ளார். சமூகச் சூழல்களில் இருந்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தொடங்கவில்லை, மார்க்சுக்கு முந்திய பொருளமுதல்வாதிகள் தான் அப்படித் தொடங்கினர், இதற்கு மாறாக “இந்நூல் மனிதரின் ஊடுசெயல்கள் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்துகிறது.”என்கிறார்

அதாவது மனிதனை சாராத புறநிலையை மறுத்து, புறநிலையைச் சாராத மனிதனின் உழைப்பை முதன்மையானது என்கிறார். ஆனால் அந்த நூல் அவ்வாறு எழுதப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயமும் தோழர் ந.முத்துமோகன் அவர்களின் கூற்றை மறுப்பதாகவே இருக்கிறது. ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம்.


"உற்பத்தி உறவுகள் மனிதர்களின் எண்ணங்கள், விருப்பங்களின்படி அல்லாமல், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தின் தன்மைக்கேற்பவே அமைகின்றன. இறுதியில் உழைப்பைச் செலுத்தும் சாதனங்களே இந்த உறவை தீர்மானிக்கின்றன. மார்க்ஸ் “உழைப்புக் கருவிகள் அல்லது சாதனங்கள், மனித உழைப்பு சக்தி வளர்ந்து அடைந்திருக்கிற மட்டத்தினைக் காட்ட உதவும் தர நிர்ணயிப்புக்கும் உதவுவதோடு, அந்த உழைப்பு எந்தச் சமூகச் சூழ்நிலையின் (பக்கம் - 83)

நூலில் ஒவ்வொரு அத்தியாயமும் தோழர் ந.முத்துமோகன் அவர்களின் கூற்றை மறுப்பதாகவே இருக்கிறது. இதனைத் தொகுத்து எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன்.(வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன் https://abouttamilbooks.blogspot.com/2018/01/blog-post.html). எந்தளவுக்கு அவர் ஒரு நூலைப் பற்றி அந்த நூலின் முன்னுரையிலேயே பொய்யுரைக்கிறார் என்பதை அதைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

இறுதியாகத் தோழர் கோ.கேசவன் அவர்களின் “பரஸ்பர நிர்ணயம்” என்கிற கண்ணோட்டத்தைப் பார்ப்போம்

கோ.கேசவன்:-

“சமூக அமைப்பு அடித்தளம், மேற்கட்டுமானம் என இரண்டாக உள்ளது. அடித்தளமாகச் சமூகத்தின் உற்பத்தி முறை அமைகின்றது. அரசியல், சட்டம், கலாச்சாரம் என்பன போன்ற அம்சங்கள் மேற்கட்டுமானமாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தை இறுதியில் நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் பெற்றதாக அடித்தளமான உற்பத்திமுறை அமைகின்றது. இவ்வாறு மார்க்சியம் குறிப்பிடுகிறது, மேற்கட்டுமான அம்சங்களுக்கு ஒப்பீட்டு அளவிலான சுயேச்சை இயங்குதிறம் உள்ளதென்றும் மார்க்சியம் விளக்குகின்றது. அதே நேரத்தில் மேற்கட்டுமானம், அடித்தள உற்பத்திமுறையின் மீது தன் இயல்பான செல்வாக்கையும் பயன்படுத்துகிறது என்றும் அது விளக்குகின்றது. மேற்கட்டுமானத்தின் ஓர் அம்சம் அதன் இன்னொரு அம்சத்தையும் பாதிக்கலாம். இப்படி மேற்கட்டுமான அம்சங்களுக்கு இடையிலான பரஸ்பரம் பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும், மேற்கட்டுமானத்தின் அம்சங்கள் அடித்தள உற்பத்தி முறைமீது பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும் மேற்கட்டுமான அம்சத்தை இறுதியில் நிர்ணயம் செய்யும் ஆற்றலை உற்பத்திமுறையே பெற்றிருக்கிறது. இது இறுதி நிர்ணயவாதம் எனப்படும்.

 

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியத்தைத் தம் வர்க்கப் போராட்ட அனுபவங்களைக் கொண்டு செழுமைப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த தோழர் மாசேதுங் மார்க்சியத்தின் இந்தக் கூற்றை விளக்கினார். இயங்கியல் அடிப்படையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கண்டறிந்த மாசேதுங், அடித்தள உற்பத்திமுறை, மேற்கட்டுமான அம்சங்களை நிர்ணயிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார். இருப்பினும் மேற்கட்டுமான அம்சங்களைச் செயலூக்கம் அற்றதாகவோ அடித்தளத்தால் நிர்ணயிக்கப்படுவதாகவோ மட்டும் கண்டறியாமல் சில குறிப்பிட்ட நேர்வுகளில் மேற்கட்டுமான அம்சங்களும் அடித்தள உற்பத்தி முறையை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன எனக் குறிப்பிடுகின்றார். (முரண்பாடு பற்றி) இது மார்க்சிய வரம்புகுட்பட்டே மார்க்சியக் கருத்தாக்கத்தைச் செழுமை படுத்துவதாக இருப்பினும் அடித்தள இறுதி நிர்ணயவாதம் என்பதை இயங்கியல் மாற்றத்துக்கு உட்படுத்துகிறது.

 

குறிப்பிட்ட கட்டத்தில் மேல்தள நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தை மாவோ சிந்தனை முன்மொழிவதன் மூலம் அடித்தளம் - மேல்தளம் - பரஸ்பர நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தையும் தொட்டுவிடுகிறது.”

(சாதியம்- பக்-73-74)

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் என்று கூறினால், வாழ்நிலையே உணர்வுநிலையைத் தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு பொருள்முதல்வாதமாக விளங்குகிறது.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார், உணர்வுநிலையே வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு கருத்துமுதல்வாதமாக விளங்குகிறது.

“பரஸ்பர நிர்ணயம்” என்பது பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்ற பிரிவுக்கு மாறாக, இடைப்பட்ட கண்ணோட்டமாகக் காட்சித் தந்து, இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்குச் சேவை செய்கிறது.

மார்க்சியத்தின் வளர்ச்சி என்ற பெயரால் கூறுகிற இந்த “பரஸ்பர வினைபுரிதல்” என்ற கோட்பாடு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் விஞ்ஞானத் தன்மையை மறுத்துவிடுகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு வர்க்க சார்பான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது. அடித்தளம் மேற்கட்டமைப்பு பரஸ்பர வினைபுரிகிறது என்பது வர்க்கமற்ற சமூகத்திற்கு உரிய கணோட்டம் ஆகும்.

வர்க்கம் முற்ற ஒழிக்கப்பட்ட வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து விழும் என்று மார்க்சியம் கூறுவதை நாம் அறிவோம். அந்தச் சமூகத்திற்கு உரிய கோட்பாடே பரஸ்பர வினைபுரிதல். அந்த வளர்ச்சி அடைந்த நிலையில், மனிதன் நினைப்பது மட்டுமின்றிச் செயற்படவும் முடியும். மனிதன் நினைப்பதை தடைப்படுத்தும் இன்றைய வர்க்க சமூகத்திற்கு உரியதல்ல இந்தப் பரஸ்பரவினை புரிதல் என்கிற கோட்பாடு.

வர்க்கமற்ற. வளர்ச்சி அடைந்த சமூகத்துக்கு உரிய பரஸ்பர வினைபுரிதல் என்கிற கோட்பாட்டை, வர்க்க சமூகத்திற்குப் பயன்படுத்தினால் என்ன விளைவை ஏற்படுத்தும்?.

தொழிலாளர்களின் விடுதலைக்குக் கெடுதலை ஏற்படுத்தும். பரஸ்பர வினைபுரிதல் என்கிற வர்க்கமற்ற பார்வை தொழிலாளர்களின் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும்.

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதம் ஒன்றை லெனின் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனின் உழைப்பு தான் சமூகத்தை மாற்றுகிறது. இதற்குக் கருவிகளை மார்க்ஸ் முதன்மைப்படுத்தவில்லை என்று கூறிவருபவர்களுக்கு மாறாக, மார்க்ஸ் கூறியிருப்பதை இந்தக் கடிதத்தைப் பார்ப்போம்.

லெனின்:-

“உழைப்பின் ஒழுங்கமைப்பை உற்பத்திச் சாதனங்களே நிர்ணயிக்கின்றன என்பதே நமது கோட்பாடு” (Our theory that the organization of labor is determined by the means of production.) (மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதம்-07-07-1866) (காரல் மார்க்ஸ் என்ற கட்டுரையில்)

பேச முடியாத உற்பத்திச் சாதனங்கள் எப்படி மனித உழைப்பை ஒழுங்குபடுத்தும் என்கிற கேள்வி பொருள்முதல்வாதிகளுக்கு எழாது. எங்கெல்ஸ் குறிப்பிடுவது போலக் கருத்துமுதல்வாதத்தின் மயக்கத்தில் உள்ளவர்களுக்குத் தான், பொருளுக்குக் கண் இல்லை, காது இல்லை, மூச்சுவிடாது என்று கூறமுடியும்.

உழைப்புக் கருவிகளைப் புறக்கணித்து, உழைப்பை தனித்து முதன்மைப்படுத்துவது மார்க்சியக் கோட்பாடு கிடையாது என்கிற புரிதல் இந்த வகுப்பு அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

கடைசியாக நடைபெற்ற மூன்று வகுப்புகளும், மார்க்சிய புரிதல் ஒரளவுக்கு உள்ள தோழர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்டது. புதிய தோழர்களை மனதில் கொண்டு எளிமையாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வகுப்பி எடுக்க வேண்டும். இயக்கவியல் பொருள்முதல்வாத வகுப்பு எடுத்துவிட்டு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வகுப்பெடுப்பதே சரியாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் பார்க்கலாம்.

மூன்று வகுப்புகளில் கூறப்பட்ட “அடித்தளம் மேற்கட்டமைப்பு” கோட்பாட்டைச் சுருக்கமாகக் கூறுவதோடு மூன்றாம் வகுப்பை முடித்துக் கொள்வோம்.

 

சமூக உற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்தப் பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

 

தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றிய மேற்கட்டமைப்பாகும்.

 

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்று விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நீர்ணயிக்கிறது என்று தான் மார்க்சியம் கூறுகிறது. அதன் அடிப்படையில் மேற்கட்டமைப்புத் தோற்றுவிக்கப்படுகிறது.

 

அதே நேரத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இத்தகைய தாக்கம் அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரத்தை குறைத்திடவில்லை. அதனால்தான் இறுதியில் அடித்தளம் தீர்மானகரமான பாத்திரத்தை வெளிப்படுத்துகிறது என்று மார்க்சியம் கூறுகிறது. இறுதி முடிவு அடித்தளத்திடம் தான் இருக்கிறது.

நமது செயற்பாடு, அதாவது உழைக்கும் மக்களின் செற்பாடாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்டுகளின் செயற்பாடாக இருந்தாலும் சரி, அது அடித்தளத்திலா, அல்லது மேற்கட்டமைப்பிலா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

எடுத்த மூன்று வகுப்பினில் முதல் வகுப்பிலேயே மார்க்ஸ் கூறியது சுட்டிக்காட்டப்பட்டது. (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை). அது என்னவென்றால், மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகின்றனர். இந்த உற்பத்தி உறவுகள் அவர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது புறநிலையினதாகும். உழைப்பின் செய்பாட்டை நிர்ணயிப்பது இந்தப் புறநிலையே ஆகும், புறநிலைமைகளை நாம் படைத்திட முடியாது, அதனால் தான் அது நமது சித்தங்களில் இருந்து தனித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி உறவுகள் ஒரு புறநிலை விதிக்குள் செயற்படுகிறது. அந்த விதியின் அடிப்படையில் தான் நாம் செயற்படுகிறோம்.

விதி புறநிலையிலானது செயற்பாடு அகநிலையிலானது. நமது செயற்பாடு, மேற்கட்டமைப்பில் தான் நடைபெறுகிறது.

அந்த விதியைப் புரிந்து கொண்டு செயற்படுபவர்கள் அந்த விதியை ஒட்டி வளர்ச்சியை விரைவுபடுத்தலாம், அந்த விதியைப் புரிந்து கொள்ளாது, அதற்கு எதிராகச் செயற்படுபவர்கள் அந்த விதிக்கு எதிராக வளர்ச்சியைத் தாமதப்படுத்தலாம்.

புறநிலை விதியை புறக்கணித்து அதற்கு மாற்றாக வேறெதையும் நாம் படைத்திட முடியாது. அதனால் தான் நிலைமைகளைக் கணக்கில் கொண்டு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு அல்லது சோஷலிசப் புரட்சிக்கு உரிய கட்டம் என்று வேறுபடுத்திக் கணிக்கப்படுகிறது.

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்தவன், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் மேதை என்ற நினைப்போடு அடித்தளத்தை விருப்பப்படி எல்லாம் மாற்றிட முடியாது. அப்படி மாற்ற முடியும் என்றால் இப்போதே கம்யூனிச சமூகத்தைப் படைதிடலாமே.

புறநிலைமைகள் தானே மாற்றிக் கொள்ளும் என்று இயந்திரத்தனமாகக் கருதுவது எப்படித் தவறானதோ, அதே போல அடித்தளத்தளம் மேற்கட்டமைப்புக் கோட்பாட்டைப் புரிந்து கொண்டேன், அதனால் நான் அடித்தளத்தையே மாற்றுகிறேன் என்று கூறுவதும் தவறானப் புரிதலாகும்.

மார்க்ஸ் அந்த முன்னுரையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார், எந்தச் சமூக அமைப்பும். அதற்கு உரிய உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சி அடைவதற்கு முன்பாக அழிக்க முடியாது. ஆகவே மனிதர்கள் தம்மால் சாதிக்கக்கூடிய கடமைகளைப் புறநிலை விதியை முன்வைத்தே விதித்துக் கொள்கின்றனர்.

நாம் மார்க்சியத்தைப் படிப்பது எதற்கு என்றால், நம்மால் சாதிக்கக்கூடிய கடமைகளை வகுத்துக் கொள்வதற்கே ஆகும். மார்க்சியம் என்பது எதோ அறிவுதுறை சார்ந்த மேதமைப் படிப்பல்ல. அது சமூகத்தின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

நாளை நமதே, நாளைய உலகம் தொழிலாளர்களுக்கே. அதற்காகவே கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர். மார்க்சியத்தின் விஞ்ஞான வழிப்பட்ட கோட்பாட்டைப் பின்பற்றித் தொழிலாளர்களுக்கான விடுதலைக்காப் போராடுவோம், வெற்றி பெறுவோம்.

******************************************************************************

1) “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையின் சுருக்கமும் சாரமும்  

2) “அடித்தளமும் மேற்கட்டமைப்பும்” என்கிற கோட்பாடே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை 

No comments:

Post a Comment