Saturday, 19 June 2021

2) லெனின் எழுதிய “மதத்தின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை” என்ற கட்டுரையின் சுருக்கமும் சாரமும்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

30 வது வார வகுப்பு - 01-05-2021) வகுப்பு)

 லெனின் எழுதிய “மதத்தின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை என்ற கட்டுரையை இன்று பார்க்கப் போகிறோம். இந்தக் கட்டுரை 1909 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 

கம்யூனிசத்தின் உலகக் கண்ணோட்டம் முழுவதும் விஞ்ஞானச் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இந்த விஞ்ஞானச் சோஷலிசமானது, இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சும் எங்கெல்சும் இதை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளனர். 

இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதமானது 18ஆம் ஆண்டுப் பிரெஞ்சு நாட்டில் காணப்பட்ட பொருள்முதல்வாதம் மற்றும் ஜெர்மனியில் காணப்பட்ட ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் என்கிற மரபுத் தொடர்ச்சியில் விளைந்ததாகும். இத்தகைய இயக்கவியல் பொருள்முதல்வாதமானது நாத்திகத் தன்மை கொண்டது, மேலும் இது அனைத்து மதத்திற்கும் உறுதிமிக்க எதிரியாகும். 

இதற்கு அடுத்து எங்கெல்ஸ் எழுதிய இரண்டு நூல்களை லெனின் குறிப்பிடுகிறார். ஒன்று “டூரிங்குக்கு மறுப்பு மற்றொன்று “லுத்விக் ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும். இதில் உள்ள முதல் நூல் மார்க்ஸ் இருக்கும் போது எழுதியது, இரண்டாவது நூல் மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எழுதியது. 

இந்த இடத்தில் ஒன்றை லெனின் குறிப்பிடுகிறார், “டூரிங்குக்கு மறுப்பு என்ற நூல் மார்க்ஸ் கையெழுத்து படியிலேயே படித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அன்று இதை எந்த நோக்கத்திற்குப் பதிவு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் இன்று இந்தப் பதிவு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மார்க்ஸ் மிகவும் மென்மையானவர், எங்கெல்ஸ் தான் பொருள்முதல்வாதத்தைக் கறாராகக் கடைபிடிக்கும் வறட்டுவாதி என்ற ஒரு கருத்து இன்றும் உலவுகிறது. ஆனால் எங்கெல்சின் “டூரிங்குக்கு மறுப்பு என்ற நூல் மார்க்ஸ் பார்வைபட்டே வெளிவந்துள்ளது என்பதை லெனினது இந்தக் கூற்றும், எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எங்கெல்ஸ் எழுத்துக்கள் மார்க்சின் பார்வைபடாமல் வெளிவந்ததில்லை, மார்க்ஸ் எழுத்துகள் எங்கெல்சின் பார்வைபடாமல் வெளிவந்ததில்லை. இவர்களின் வாழ்க்கை வரலாற்றி அறிந்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். 

மார்க்சியத்தை, தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்ற பிரிவை லெனின் தான் பிரித்தார். இதைத் தொடர்ந்து சோவியத் அறிஞர்களை இப்படிப் பிரித்து விளக்கி வருகின்றனர் என்ற கருத்தை இன்றும் கூறுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் பார்வைபட்ட “டூரிங்குக்கு மறுப்பு என்ற எங்கெல்சின் நூல் மூன்று பிரிவையும் பிரித்து, தனித் தனியாகப் பெயரிட்டு எழுதப்பட்டுள்ளது. ஆக லெனினுக்கு முன்பே, மார்க்சியத்தைத் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் என்று பிரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 

டூரிங்கை எங்கெல்ஸ் விமர்சிப்பதற்குப் பல காரணம் இருக்கிறது. அதில் ஒன்றை லெனின் இங்கே குறிப்பிடுகிறார். டூரிங் தன்னை ஒரு பொருள்முதல்வாதியாகவும் நாத்திகராகவும் கூறிக் கொள்கிறார். ஆனால் டூரிங் உறுதியான பொருள்முதல்வாதியாக இல்லை என்றும், மதத்திற்கும், மதக் கோட்பாட்டிற்கும் இடம் அளிக்கும் வகையில் பல ஓட்டைகளைத் தமது படைப்புகளில் இடம் கொடுத்தார் என்று எங்கெல்ஸ் அவரை விமர்சிக்கிறார். 

அதே போல ஃபாயர்பாக் என்பவரும் ஒரு பொருள்முதல்வாதி தான். மார்க்சும் எங்கெல்சும் ஹெகலின் கருத்துமுதல்வாதத்தில் இருந்து விடுபடுவதற்கு உதவியர் தான், ஆனால் ஃபாயர்பாக் மதத்தை எதிர்த்துப் போராடுவது மதத்தை ஒழிப்பதற்கு அல்ல, அதனைப் புதிப்பிப்பதற்கே. அந்தப் புதிபிக்கப்பட்ட மதம் ஒரு சிறந்த மதமாக இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. இதனையும் எங்கெல்ஸ் விமர்சிக்கிறார். 

மதம் மக்களுக்கு அபின் என்கிற மார்க்சின் கூற்றே, மதத்தைப் பற்றி மார்க்சியக் கண்ணோட்டம் முழுவதுக்கும் அடிப்படையாகும். இதற்கு அடுத்து லெனின் கூறுவதே மதம் பற்றி மார்க்சியர்களின் கருத்தாகும். 

      அனைத்து நவீன மதங்களும், சர்ச்சுகளையும், அனைத்து மத    நிறுவனங்களும்,       முதலாளித்துவப் பிற்போக்கின் கருவிகளாகும்.       சுரண்டலைப் பாதுகாப்பதற்கும்     தொழிலாளி வர்க்கத்தை வெறி மயக்கமுறச் செய்வதற்குமான கருவிகளாகும் என்றே     மார்க்சியம் எபோதும் கருதுகிறது.” 

மதத்தைப் பற்றி மார்க்சியம் இவ்வாறு கூறுகிறது என்றால், தொழிலாளர் கட்சியின் வேலைத்திட்டத்தில் நாத்திகத்தைப் பற்றித் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஏன் தெரிவிக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் நில்லாது மதத்தின் மீது ஏன் போர் பிரகடனம் (declaring war on religion) செய்யவில்லை என்றும் கேட்கின்றனர். இப்படிக் கேள்வி கேட்பவர்கள் தங்களைக் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் தீவிர இடதுசாரிகள், தீவிர புரட்சியாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர். 

இப்படி மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை எங்கெல்ஸ் கண்டித்ததை லெனின் இங்கே நினைவு கூறுகிறார். மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுவது முட்டாள் தனமானது என்கிறார் எங்கெல்ஸ். அவ்வாறு போர் தொடுப்போமாயின், அது மதத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டி புத்துயிர் பெறச்செய்துவிடும் என்கிறார். உண்மையில் இந்தப் போர் பிரகடனம் மதத்தை அழிப்பதை தடுப்பதற்கே உதவிடும் என்று எங்கெல்ஸ் வெளிப்படையாகக் கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

அப்படி என்றால் மத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும். 

உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகத்தான், உணர்வுபூவர்வமான புரட்சிகரமான சமூக நடைமுறையின் அனுபவத்தின் பயிற்சியினால் மட்டுமே பாட்டாளி மக்களின் பெரும் பகுதியினரை மதத்தின் நுகத்தடியில் இருந்து விடுவிக்க முடியும் என்கிறது மார்க்சியம். 

மதத்தின் மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கூறுவது, அராஜமான சொல் அலங்காரம் தவிர வேறொன்றும் இல்லை என்கிறார் எங்கெல்ஸ். சோஷலிச சமூகத்தில் மதம் சட்ட விரோதமாகப்பட வேண்டம் என்று கூறுகிற டூரிங்கை கண்டித்து, இது போலியான புரட்சிக் கருத்து என்கிறார். 

மதத் தலைவர்களின் மீது பிஸ்மார்க் மடத்தனமாக நடத்திய போராட்டமானது, குருமார்களைத் தெம்பூட்டவே செய்தது என்று எங்கெல்ஸ் கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய போக்கு அரசியலுக்கு முதன்மை இடம் தராமல் மதத்திற்கு முதன்மை இடம் தரப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் சில பகுதிகள், புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தின், மிக அவசிய கடமையான முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்ப்பதற்குப் பதில், முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் குருமார்களின் மிதான எதிர்ப்பாகத் திசை திருப்பப்படுகிறது. 

நம் நாட்டிலும் உள்ள இத்தகைய ஆபத்தான நாத்திகப் போக்கை நாம் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே லெனின் கூற்று நமக்குத் தெரிவிக்கிறது. 

பாட்டாளி வர்க்கத்தை நிறுவன வழியில் பயிற்சி கொடுத்து, பக்குவம் அடையச் செய்வதின் மூலம் மட்டுமே மதத்தை ஒழிக்க முடியும், மதத்தின் மீதான போராட்டம் என்கிற சூதாட்டத்தில் இறங்கக்கூடாது என்று எங்கெல்ஸ் எச்சரிக்கிறார். 

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த, அரசைப் பொறுத்தளவில் “மதம் தனிப்பட்டவரின் விவகாரம் என்கிற கூற்று சரியானது ஆகும். இதனைச் சில திருத்தல்வாதிகள் அரசுக்கு மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மதம் ஒரு தனிப்பட்ட விவகாரமாக விளக்கப்படுத்தினர். இதனை எங்கெல்ஸ் மறுத்து அறிக்கைவிடுத்தார். அதில் கம்யூனிஸ்டுகள், அரசு தொடர்பாக மட்டுமே மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாகக் கருதுகிறார்கள், ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் மதம் ஒரு தனிப்பட்டவரின் விவகாரமாகக் கருதப்படவில்லை என்பதைத் தெளிவாக்கினார். 

இதுவே மார்க்சும் எங்கெல்சும் மதம் பற்றிய பிரச்சினைக்குக் கூறிய வரலாறு ஆகும். 

மார்க்சியத்தின் இந்தக் கூற்றைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், இதில் முரண்பாடு உள்ளதாகவும், ஊசலாட்டம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர். ஆனால், மார்க்சியத்தை அக்கறையோடு அணுகியவர்களும், சர்வதேச கம்யூனிசத்தின் அனுபவங்களை அறிந்தவர்களும், மதத்தின் மீதான மார்க்சிய அணுகுமுறையில் காணப்படும் ஒருங்கிணைந்த தன்மையையும் அதன் உறுதிப்பாட்டையும் அறிந்து கொள்வர். மார்க்சும் எங்கெல்சும் மதத்தின் மீது கொண்ட அணுகுமுறையானது மிகவும் கவனமாக ஆராய்ந்து, சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதை மார்க்சிய அரசியல் கோட்பாட்டையும், மார்க்சிய தத்துவத்தையும் அறிந்தவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வர். 

மார்க்சியத்தின் இந்தக் கூற்றை முன்வைத்து பல இடதுசாரிகள், மதத்தை எதிர்க்கக் கூடாது. மத எதிர்ப்பை செயற்படுத்தினால் மக்களின் மனம் புண்படும், மக்களிடம் நெருங்க முடியாது என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்டவர்கள், லெனின் இங்கே கூறுவதைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

      மார்க்சியம் பொருள்முதல்வாதமாகும். அந்த வகையில் இது பதினெட்டாம்    நூற்றாண்டின் பல்பொருள் அறிவுவாதிகளின் பொருள்முதல்வாதம் அல்லது      ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தைப் போலவே மதத்தின்பால் தணியாத     எதிப்பைக் கொண்டிருக்கிறது. இதில் சந்தேகத்திற்கு இடமேயில்லை. ஆனால்      மார்க்ஸ் எங்கெல்சினுடைய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பல்பொருள்      அறிவொளிவாதிகள், மற்றும் ஃபாயர்பாக் ஆகியோரைக் காட்டிலும் மேலும் முன் செல்கிறது. அது வரலாற்றுத் துறையிலும் சமூக விஞ்ஞானங்களின்       துறையிலும் பொருள்முதல்வாத தத்துவத்தைப் பயன்படுத்துகிறது. 

      நாம் கட்டாயம் மதத்தை எதிர்த்து போராட வேண்டும். அதுதான் அனைத்து       பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். எனவே மார்க்சியத்தின்      அரிச்சுவடியும் அதுதான். ஆனால் மார்க்சியம் வெறும் அரிச்சுவடியுடன் நின்று    விடும் பொருள்முதல்வாதமல்ல. 

      மார்க்சியம் மேலும் செல்கிறது. 

      அது கூறுவது:- மதத்தை எப்படி எதிர்த்துச் சமாளிப்பது என்பதை நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்காகக் கடவுள் நம்பிக்கை, மதம் ஆகியவற்றின்   மூலாதாரத்தைப் பற்றி ஒரு பொருள்முதல்வாத வழியில் நாம் விளக்கிக்கூற     வேண்டும். மதத்தை எதிர்ப்பது என்பது வெறும் அருவமான சித்தாந்தப்    பிரச்சாரத்துடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அந்த அளவிலான       பிரச்சாரத்திற்கு மட்டும் தாழ்ந்துவிடக் கூடாது. மதத்தின் சமூக வேர்களை     அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் உறுதியான     நடைமுறையுடன் இந்தப் பிரச்சாரத்தை இணைக்கப்பட வேண்டும் 

மேலே லெனின் கூறியதை புரிந்து கொள்வதற்கு விளக்கம் தேவையில்லை. அதன் சாரத்தை மட்டும் தொகுத்துக் கொள்வோம். மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதமானது, மதத்தின் மீது எதிர்ப்பைக் கொண்டுள்ளது. இயற்கையை அணுகுவதில் பயன்படுத்திய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை வரலாற்றுத் துறைக்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்துகிறது. 

மதத்தைக் கட்டாயம் எதிர்த்துக் கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும். இதுவே பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் இந்த அரிச்சுவடியுடன் நின்றுவிடுவதில்லை. மதத்தை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைக்கிறது. மத எதிர்ப்பு என்பது வெறும் ஆருவமான சித்தாந்தப் பிரச்சாரத்துடன் சுருக்கிக் கொள்ளக்கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க போராட்ட இயக்கத்தின் உறுதியான நடைமுறையுடன் மத எதிர்ப்புப் பிரச்சாரத்தை இணைக்கப்பட வேண்டும். 

மார்க்சியத்தின் மத எதிர்ப்பென்பது மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ நாத்திகம் மதத்தை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாகச் சுருக்குகிறது. அதற்கான சமூக வேர்களை அது கணக்கில் கொள்வதில்லை. 

நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கியவர்களிடமும், அரைப் பாட்டாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிலும், விவசாயிகளில் பெரும்பாலார்களிடமும் மதம் ஏன் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது? 

முதலாளித்துவ முற்போக்காளர் இந்தக் கேள்விக்கு “அறியாமை என்று பதிலளிக்கிறார். அத்தகையவர் இத்தோடு நில்லாமல், “மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துககளைப் பரப்புவதே நமது முதன்மை பணி என்று முழக்கம் இடுகின்றனர். 

இது சரியானதல்ல என்று மார்க்சியம் கூறுகிறது. இது குறுகிய முதலாளித்துவ மேம்பட்டவர்களின் மேலோட்டமான பார்வை என்றே இதை மார்க்சியம் கருதுகிறது. இது மதத்தின் தோற்றத்திற்கும் இருப்புக்கும் காரணமான வேர்களைப் புரிந்து கொள்ளாமல் கூறியதாகும். இந்த முதலாளித்துவ முற்போக்காளரின் கூற்றுப் பொருள்முதல்வாதம் வழியில் அல்லாமல் கருத்துமுதல்வாதம் வகையில் விளக்குகிறது. 

வேறொரு இடத்தில் லெனின் கூறியுள்ளார், “மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், “இல்லாமையும் “கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளைத்தாம், நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்(உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை) 

கல்லாமை என்பது இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாமையினாலும், இயற்கை சீற்றத்திற்குக் காரணத்தை அறியாத போதும் ஏற்படுவது. நவீன முதலாளித்துவத்தில் விஞ்ஞானப் புரிதல் அதிகரித்துள்ளது. அதனால் கல்லாமை என்கிற அறியாமை அல்லது இயற்கை பற்றிய அச்சம் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது வளர்ச்சி அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் இல்லாமை என்கிற பொருளாதாரக் காரணங்களே அதாவது சமூகப் பிரச்சினைகளே மதத்துக்குக் காரணமாகிறது. இந்தக் காரணமே நவீன முதலாளித்துவத்தில் மதத்தின் வேராக உள்ளது. 

சமூகத் தன்மையான மதத்தின் வேரை லெனின் தொகுத்துத் தருகிறார். 

உழைக்கும் மக்களின் சமூக வீழ்ச்சியடைந்த நிலை, 

முதலாளித்துவத்தின் குருட்டு சக்திகளுக்கு முகங்கொடுப்பதில் தொழிலாளர்களின் முழுயாகக் கிடைக்காத உதவியற்ற தன்மை, 

இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் சாதாரண உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான துன்பத்தையும், மிகக் கொடூரமான வேதனையையும் ஏற்படுத்துதல், 

போர்கள், பூகம்பங்கள் போன்றவற்றைவிட ஆயிரம் மடங்கு அதிகக் கொடுமைகளை, முதலாளித்துவம் மக்கள் மீது செலுத்துகிறது. இதுவே சமூகத் தன்மையிலான பயத்தைத் தோற்றுவிக்கும் நவீன மதத்தின் வேர்கள். 

பயமே கடவுளை உண்டாக்குகிறது இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாமையினால் உருவான அச்சமாக இருந்தாலும் சரி, சமூகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத அச்சமாக இருந்தாலும் சரி பயமே கடவுளைத் தோற்றுவிக்கிறது. 

இயற்கைச் சீற்றத்தில் இருந்து விடுபடக் கற்றுக் கொண்ட நவீன மக்கள், சமூகப் பொருளாதாரச் சீற்றத்தை அறிந்து கொள்ள முடியாமையினால் ஏற்படும் அச்சமே அந்தச் சமூகத்தின் ஆன்மீக உணர்வுக்கு அடிப்படையாக இருக்கிறது. 

சமூக அச்சத்தைப் பற்றி லெனின் மேலும் கூறுகிறார், முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்தியைக் கண்டு பயம், பொருளாதார வீழ்ச்சியை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாத, குருட்டுத் தனமே நவீன சமூகத்தின் மத இருப்புக்கான வேர்களாகும். 

கண்மூடித்தனமான முதலாளித்துவ சக்திகளினால், பாட்டாளிகளின் வாழ்க்கையிலும் சிறு உற்பத்தியாளர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுகிற “திடீரென்று, “எதிர்பாராத வகையில், “தற்செயலாகவும் அழிவையும், நாசத்தையும், ஓட்டாண்டி நிலையையும், விபச்சாரத்தையும், பட்டினிச் சாவையும் ஏற்படுத்துகின்ற சூழல் ஆகியவை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது நவீன சமூகத்தின் மதத்தின் மூலவேராகும். 

இதைத் தொடக்கநிலை பொருள்முதல்வாதியாக இல்லாத, வளர்ச்சி அடைந்த பொருள்முதல்வாதிகள் இதைக் கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ முற்போக்காளர்களைப் போல் மதத்தை வெறும் கல்வி புகட்டுவதின் மூலமாகவும், புத்தகங்களின் மூலமாகவும் மட்டுமே மதத்தை ஒழித்திட முடியும் என்று ஒரு பொருள்முதல்வாதி கருதமாட்டார். 

      (உழைக்கும்) இந்த மக்களே எழுச்சியுற்று மதத்தின் மூலவேர்களை எதிர்த்துப்       போராடக் கற்றுக் கொள்ளும் போதுதான், ஒன்றுபட்ட அமைப்பு வழியில்     திட்டமிட்ட உணர்வுபூர்வமான முறையில் முதலாளித்துவ ஆட்சியின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக் கொள்ளும்   பொழுது தான் மக்களுடைய உள்ளங்களில் இருந்து மதத்தைத் துடைத்தெறிய முடியும்.” 

மதத்தை வெறும் சித்தாந்தப் போராட்டமாக நடத்தாமல், அதை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து நடத்தும் போதுதான் உழைக்கும் மக்கள் எழுச்சியுற்று, உணர்வு பெற்று தங்களது உள்ளங்களில் குடிகொண்டுள்ள மதத்தைத் தூக்கி எறிவர். 

இவ்வாறு கூறுவதனால், மதத்திற்கு எதிரான கல்வி புகட்டும் நூல்கள் தேவையற்றவையோ, கேடுவிளைவிப்பவையோ அல்ல என்கிறார் லெனின். கம்யூனிசத்தின், நாத்திகப் பிரச்சாரம் வர்க்கப் போராட்டத்தை வளர்த்திடும் கடமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 

இந்தக் கூற்றை மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மறுத்திடலாம். மறுத்திடுபவர்கள், ஆயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டு முன்னேற்றத்திற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரியாக இருக்கும் மதத்தை எப்படி வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டு நடத்துவது என்று கேள்வி கேட்பர். 

இது மார்க்சியத்தின் மீது தற்காலத்திலுள்ள ஆட்சேபணைகளில் முக்கியமான ஒன்றாகும். நம் நாட்டில் உள்ள பகுத்தறிவுவாதிகளும் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர். இதற்கு லெனின் கூறுகிற பதிலே அவர்களுக்கும் பதிலாக இருக்கிறது. 

மதத்தை, வர்க்கப் போராட்டதுக்கு உட்பட்டு எப்படி நடத்துவது என்று கேட்பதானது மார்க்சிய இயக்கவியலைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஆட்சேகணைக்காரர்களைக் குழப்பிவிடும் இத்தகைய முரண்பாடு, மெய்யான வாழ்க்கையிலுள்ள ஓர் உண்மையான முரண்பாடாகும். இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். 

நாத்திகத்தைப் பற்றிய சித்தாந்தப் பிரச்சாரத்திற்கும் அதாவது பாட்டாளிகளின் சில பகுதிகளுக்கு இடையில் உள்ள மத நம்பிக்கையை ஒழிப்பதற்கும், இந்தப் பகுதிகளின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இடையில் ஒரு திட்டவட்டமான கண்டிப்பான எல்லைக் கோட்டைப் போடுவது என்பது இயக்கவியல் அற்ற முறையில் காரணக் காரியத்தை ஆராய்வதாகும். மதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள இணப்பை மறுப்பதாகும். 

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் லெனின் விளக்குகிறார். 

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் உள்ள பாட்டாளிகள் இரண்டு பிரிவாக இருக்கிறார்கள். ஒரு பிரிவில் உள்ள தொழிலாளர்கள், முன்னேறிய, வர்க்க உணர்வு பெற்றுள்ள கம்யூனிஸ்ட்டாக உள்ளனர். அவர்கள் நாத்திகர்கள் என்று வைத்துக் கொள்வோம். 

மற்றொரு பிரிவினர், பின்தங்கிய தொழிலாளர்கள், இன்றும் கிராமத்துடன் தொடர்பில் இருப்பவர்கள், அவர்கள் சர்ச்சுக்கும் போகிறார்கள், மேலும் அந்த இடத்தில் உள்ள பாதிரியாரின் நேரடியான செல்வாக்கின் கீழும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கிறித்துவத் தொழிலாளர் சங்கம் என்றும் ஒரு நிறுவத்தை அமைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

இந்த நிலையில் அந்த இடத்தில், பொருளாதாரப் போராட்டத்தின் விளைவாக ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒரு மார்க்சியவாதியின் கடமை, வேலை நிறுத்த இயக்கத்தின் வெற்றியை அனைத்துக்கும் மேலாக வைப்பதாகும். இத்தகைய போராட்ட நேரத்தில் நாத்திகத்தை முன்வைத்து, பிளவுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு எதிரான எத்தகைய பிளவையும் தவிர்ப்பது அவசியமானதாகும். 

இத்தகைய வேலை நிறுத்த போராட்ட நேரத்தில், நாத்திகப் பிரச்சாரம் செய்வது தேவையற்றதாகும், மேலும் கேடு விளைவிக்கக் கூடியதாகும் என்கிறார் லெனின். 

மதத்தைச் சித்தாந்தப் போராட்டத்தினால் வெல்ல துடிக்கும் முதலாளித்துவ முற்போக்காளர்கள், இந்தக் கூற்றைக் கேட்டவுடன் என்ன கருவார்கள் என்பதை லெனின் அடுத்துக் கூறுகிறார். 

பின்தங்கி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை விட்டு ஓடி விடுவார்கள். தேர்தல்களில் ஒரு இடத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் கம்யூனிஸ்டுகள் மத எதிர்ப்பை பொருளாதாரப் போராட்டத்துக்கு அடுத்து வைத்தள்ளனர் என்று கருதுகிறார்கள். 

ஆனால் உண்மை இதுவல்ல. வர்க்கப் போராட்டத்தில் உண்மையான முன்னேற்றம் கிட்ட வேண்டும் என்பதற்கே கம்யூனிஸ்டுகள் இவ்வாறு கருதுகின்றனர். பொருளாதாரப் போராட்டம் நடைபெறும் களத்தில், மொட்டையான நாத்திகப் பிரச்சாரம் பாதிரியாரின் வலைக்குள் தொழிலாளர்களைச் சிக்கவைத்திடும். 

வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதில் தொழிலார்களிடையே பிரிவு ஏற்படுவதைக் காட்டிலும், கடவுள் நம்பிக்கை அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதையே பாதிரிமார்கள் விரும்புகின்றனர். மொட்டையான நாத்திகப் பிரச்சாரம், பாதிரிமார்கள் விரும்புவதையே நிறைவேற்றும். 

எந்த நிலையிலும் கடவுளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கருதுகிற அராஜகவாதிகள், அந்தப் பாதரிமார்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தான் உண்மையில் சேவை செய்பவரா ஆகிறார்கள். பாதரிமார்களின் கண்ணோட்டம் முதலாளித்துவ வர்க்கத்தின் நலனையே பிரதிபலிக்கிறது என்பதை அறியாத அராஜவாதிகள் எப்போதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உதவி செய்கிறார்கள். 

ஒரு மார்க்சியவாதி ஒரு பொருள்முதல்வாதியாகத்தான் இருப்பர். அதாவது மதத்தின் எதிரியாகத்தான் பொருள்முதல்வாதி இருப்பார். ஆனால் அவர் ஒர் இயக்கவியல் பொருள்முதல்வாதியாகத்தான் இருக்க முடியும். அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒரு வறட்டுத்தனமாக அணுகமாட்டார். 

வர்க்கப் போராட்ட வழியில் உழைக்கும் மக்களை விழிப்படைய செய்வதுடன் இணைத்தே மதத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனர் இயக்கவியல் பொருள்முதல்வாதியான மார்க்சியவாதி. 

மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதினால், மக்கள் வர்க்கப் போராட்டத்தை ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் மார்க்சியவாதிகள் இவ்வாறு கூறவில்லை, வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடக்கியே மத எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துகின்றனர். 

ஆனால், குட்டி முதலாளித்துவவாதிகள் மற்றும் மிதவாதப் படிப்பாளர்கள் மதத்துக்கு எதிரான போராட்டத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களது கடமைகளை மறந்து, கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கின்றனர். யார் மனமும் புண்படக் கூடாது, யாரையும் பயமுறுத்தி விரட்டக் கூடாது “வாழு, வாழவிடு என்னும் சாமியார்களின் மந்திரத்தை கூறுவது போன்று மிகக்குறுகிய மனப்போக்குடன், மார்க்சிய அணுகுமுறையை இணைத்துக்கூறிட முடியாது. 

அனைத்துப் பிரச்சினையையும் மார்க்சியவாதிகள் வர்க்கப் போராட்டத்துக்கு உள்ளடக்கியே நடத்துகின்றனர். 

அடுத்து ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றி லெனின் கூறுகிறார். 

ஒரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருக்கமுடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்விக்கு நிபந்தனையற்ற முறையில் ஆம் என்றே பதிலளிக்கப்படுகிறது. ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவம் இதையே எடுத்துக்காட்டுகிறது. ரஷ்யாவின் நிலைமைகள் இவ்வாறு இல்லை என்பதை லெனின் பதிவு செய்கிறார். ரஷ்யாவைப் பொறுத்தளவில் எந்தவித நிபந்தனையுமற்ற முறையில் இதற்கு “ஆம் என்று விடை அளிப்பது சரியாக இருக்காது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் மதக் குருக்கள் எப்போதுமே உறுப்பினராக ஆக முடியாது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அதற்கு எதிரிடையான விதியையும் நடைமுறைப்படுத்த முடியாது. 

ஒரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானால், கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைகளில் பங்குகொள்ள வேண்டும். கட்சியின் கடமைகளை உணர்வுபுர்வமாக நிறைவேற்ற வேண்டும். 

கட்சியின் வேலைத்திட்டத்தை எதிர்க்காமல் இருந்தால், ஒரு மதகுருவை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்துக்கும் மறுபக்கமாக அந்த மதகுருவின் மத உணர்வுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது என்பதை மறக்கக்கூடாது. அதனால் அந்த மதகுருவின் போக்குகளைக் கண்காணிக்க வேண்டும். 

அந்த மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தபின், மதக்கருத்துக்களைக் கட்சிக்குள் பிரச்சாரம் செய்தால், அவரைக் கட்சியில் இருந்து கேள்விக்கு இடமில்லாத வகையில் நீக்க வேண்டும். 

அதே போல மத நம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் அனுமதிக்க வேண்டும். அந்தத் தொழிலாளர்களின் மத உணர்வுகளைக் கொஞ்சம்கூடப் புண்படுத்தக்கூடாது. ஆனால் அவர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்தது, கட்சியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கே ஆகும். அத்தகைய தொழிலாளி கட்சி திட்டத்துக்கு எதிராகப் போராடுவதை அனுமதிக்க முடியாது. கட்சிக்குள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும், ஆனால் அதற்கு ஓர் எல்லையுண்டு. கட்சியில் உள்ள பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட மதக் கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது. அவருடன் சேர்ந்து செயற்பட முடியாது. கட்சிக்கு விரோதமாகச் செயற்பட்டால் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இதற்கு அடுத்து லெனின் மற்றொரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். 

சோஷலிசமே எனது மதம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்தால், அதனை ஒரேவிதமாக அனைத்து சூழ்நிலைகளிலும் கண்டிக்கப்படக் கூடாது என்கிறார் லெனின். இந்தக் கருத்து மார்க்சியத்தில் இருந்து விலகிச் செல்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பின்தங்கிய மக்களுக்குப் பழக்கமான மொழியில் பேசுவதாக இருந்தால் அது வேறு விஷயம். ஒரு எழுத்தாளர் சிறந்த கடவுளை உருவாக்குதல் என்பதையும், கடவுள் கருத்தைத் தோற்றுவிக்கும் சோஷலிசத்தைப் பற்றிக் கூறினால் அது வேறுவிஷயம். 

முதலானவர் மீதான கண்டனம் வெறும் கடிந்துரையாக மட்டுமே இருக்கும். இரண்டாதவர் மீதான கண்டனம் மிகவும் அவசியமாகவும் அத்தியாவசியமாகவும் இருக்கும். முதலானவரின் “சோஷலிசமே எனது மதம் என்கிற கூற்று மதத்தில் இருந்து சோஷலிசத்துக்கு வருவதற்காகக் கூறப்பட்டதாகும். ஆனால் மற்றவரின் கூற்றுச் சோஷலிசத்தில் இருந்து மதத்திற்கு மாறிச் செல்வதற்கான கூற்றாகும். இரண்டையும் ஒரே விதமாகக் கண்டிக்க முடியாது. இரண்டாதவரின் கூற்று மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும். 

அரசை முன்வைத்து “மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று கூறப்பட்டதைச் சந்தர்ப்பவாதிகள் கட்சியைப் பொறுத்தளவிலும் “மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று திரித்துரைக்கின்றனர். இதனை லெனின் மறுத்துரைக்கிறார். 

மக்களுக்கு அபினியாக உள்ள மதத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை, மத மூடத்தனத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை, ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கம்யூனிஸ்ட் கட்சி கருதமுடியாது. அவ்வாறு கருதுவது சந்தர்ப்பவாதமாகும். சில தற்காலிக நலன்களுக்காகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படையான நலவுரிமைகளைப் பலி கொடுக்க முடியாது. 

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்கிற நூலில் லெனின் இப்படிப்பட்டவர்களைத் திருத்தல்வாதி என்கிறார். 

மதத்துக்கு எதிரான போராட்டம் புரட்சிகர முதலாளிகளால் நடத்தப்பட்டது. மேற்கு ஐரோப்பாவில் நிலப்பிரபுவுக்கு எதிரான போராட்டத்தில் அவ்வாறுதான் நடைபெற்றது. ரஷ்யாவில் இந்தப் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் விழுந்தது என்பதை விளக்குகிறார். 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தேசிய முதலாளித்துவப் புரட்சி முடிந்தப் பின்பு, அதன் அரசுகள் மதகுருவாதத்திற்கு எதிராக, வேண்டும் என்று மிதமான தாக்குதல்கள் கொடுத்தது. இதன் மூலம் சோஷலிசத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்தது. 

இதன் தொடர்ச்சியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளிடையே மதத்திற்கு எதிரான போராட்டத்தில் “அக்கறையின்மை என்கிற போக்கு தோன்றியது. இந்த அக்கறையின்மை நம் நாட்டு இடதுசாரிகளிடமும் பரவி இருக்கிறது. இந்த நிலைமைகளை நன்றாகப் புரிந்து கொண்டு கம்யூனிஸ்டுகள் மதத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் எதிர்த்து விமர்சிக்க வேண்டும். 

ஐரோப்பிய நிலைமைக்கு மாறாக ரஷ்ய நிலைமை இருந்தது. பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியினை நடத்த வேண்டியதாயிற்று. ரஷ்ய நாடாளுமன்ற வடிவமான டூமாவில் “மதம் மக்களுக்கு அபின் என்று அறிவித்ததை லெனின் வரவேற்கிறார். இதுவே மதம் பற்றிய ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படை ஆகும். 

அவர்கள் டூமாவில் மேலும் சற்று அதிகமாக நாத்திகத்தை விரிவாகப் பேசியிருக்க வேண்டும் என்று தான் நினைக்கவில்லை என்கிறார் லெனின். அவ்வாறு விரிவாக்கினால், அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்கு, மதத்திற்கு எதிரான போராட்டத்தை மிகைப்படுத்தும் அபாயத்தைக் கொண்டு வந்திடும். மதத்திற்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ முற்போக்காளர்களின் அணுகுமுறைக்கும் கம்யூனிஸ்டுகள் அணுகுமுறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய முடியாமல் செய்துவிடும். 

கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன வென்றால், சர்ச்சுகள், மதகுருமார்களின் வர்க்கப் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஆகும். 

மதம் தனிப்பட்டவரின் விவகாரம் என்கிற கூற்றைச் சரியான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜெர்மன் சந்தர்ப்வாதிகள் இதனைத் திரித்துக்கூறினர். அரசை முன்வைத்துக் கூறப்பட்டது “மதம் தனிப்பட்டவரின் விவகாரம். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் தனிப்பட்ட விவகாரம் கிடையாது. 

மக்களுக்கு அபினியாக உள்ள மதத்தை எதிர்த்து, நடத்த வேண்டிய போராட்டத்தை, மத மூடத்தனத்தை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கம்யூனிஸ்ட் கட்சி கருதவில்லை. சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக எங்கெல்ஸ் விமர்சித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று லெனின் இங்கே வலியுறுத்துகிறார். 

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில், மதம் தனிப்பட்டவரின் விவகாரம் அல்ல. மதத்தில் காணப்படும் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். வர்க்க சிந்தனைக்கு எதிராக உள்ள ஆன்மீக சிந்தனையை விமர்சிப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். கடமை தவறியவர்களால் கம்யூனிசக் குறிக்கோளை அடைய முடியாது. இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்வர்களால் தான் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்ற முடியும். 

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் மதம் பற்றி இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் சிக்கல்கள் இருக்கின்றன. அண்மையில் “ஜனசக்தி இதழில் அனில் ரஜீம்வாலே அவர்களின் கருத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். இது போன்ற கருத்தே இங்குள்ள பல கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. 

      இறை நம்பிக்கையாளராக இருப்பது அல்லது இறை மறுப்பாளராக இருப்பது என்பது மக்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை; அந்த உரிமையைப் பாதுகாக்கும் கட்சி, அவர்களின் தனிப்பட்ட சொந்த கருத்தோட்டத்தில் தலையிடுவதில்லை.”(ஜனசக்தி – 2021 ஏப்ரல் 18-24, பக்கம் 8-9) 

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையேயும் மதம் ஒரு தனிப்பட்ட விவகரமாக அனில் ரஜீம்வாலே அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. அனில் ரஜீம்வாலே அவர்களின் கூற்றை ஒத்த கருத்துடைய அனைவர்களின் கூற்றும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு முரணானது என்பதை இன்றைய வகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

மதவுணர்வை புண்படுத்தக்கூடாது என்கிற எச்சரிக்கை மட்டுமே நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றுகின்றன, இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் மதத்தை எதிர்ப்பதற்கான திறமையை வெளிப்படுத்தாமலேயே இதுவரை உள்ளது. இதனை முறியடிக்க வேண்டுமானால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். 

பெரியாரும், அம்பேத்கரும் மார்க்சின் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் பெரியாரின் பகுத்தறிவுவாதமும், அம்பேத்கரின் கருத்துக்களும் இந்தியாவுக்கான கம்யூனிசம் என்று கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு இந்திய மதங்களை, இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வையில் விமர்சிக்க வேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, நா.வானமாமலை போன்றோர்களின் தொடக்க முயற்சி சிறப்பாக இருந்தாலும் அதனைத் தொடர்கின்ற பயிற்சி இல்லாமல், இடதுசாரிகளான நாம் இருக்கின்றோம். இந்த நிலைமையை நன்றாகப் புரிந்து கொண்டு செயற்பாட்டால் தான் பெரியாரியவாதிகளையும் அம்பேத்கரிஸ்டுகளையும் மார்க்சிய வழியில் எதிர்கொள்ள முடியும். 

மார்க்சியம், வர்க்க சார்பான மதத்தை விமர்சிப்பதற்குப் போதுமான வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளது. அதனைப் பின்பற்றுவதே இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

No comments:

Post a Comment