Saturday 26 June 2021

மாசேதுங் எழுதிய “நடைமுறை பற்றி” சுருக்கமும் சாரமும்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

23 வது வார வகுப்பு - 26-06-2021) வகுப்பு) 

மாசேதுங் எழுதிய “நடைமுறை பற்றி” (ON PRACTICE) என்ற நூலை இன்று நாம் பார்க்கப் போகிறோம். இதை நூல் என்று சொல்வதைவிட, கட்டுரை என்று கூறுவதே சரியாக இருக்கும். இருபது பக்கத்திற்குள் உள்ள ஒரு சிறப்பான கட்டுரை. இந்தக் கட்டுரையைச் சரியாகப் புரிந்து கொண்டால், பிற தத்துவ நூல்களைப் படிப்பது எளிதாக இருக்கும். 

1931-34ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வறட்டுவாத தவறுகள் மேலோங்கி இருந்து. சீனப்புரட்சியின் அனுபவங்களை நிராகரித்து, மார்க்சியப் படைப்புகளில் காணப்படும் கருத்துக்களை எந்தச் சூழ்நிலைக்குக் கூறப்பட்டது என்பதை மறந்து அதனை அப்படியே பின்பற்றுகின்ற வறட்டுச்சூத்திரவாதப் போக்குக் காணப்பட்டது. மார்க்சியம் என்பது ஒரு வறட்டுக்கோட்பாடு அல்ல, அது நடைமுறைக்கு ஒரு வழிகாட்டி. அந்த வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நிலைமைகளையும் அணுக வேண்டும். அனைத்து முடிவுகளையும் மார்க்சியம் தயாராகத் தன்கைவில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளை எதிர்கொள்ள மார்க்சியம் தயாராகவே இருக்கிறது. 

இந்த வறட்டுசூத்தரத்தை எதிர்த்து மாசேதுங் யெனானில் உள்ள ஜப்பானிய-எதிர்ப்பு ராணுவ அரசியல் கல்லூரியில் சொற்பொழியாக இரண்டு தலைப்புகளில் நிகழ்த்தினார். முதலாவது “நடைமுறை பற்றி”, இரண்டாவதாக நிகழ்த்தியது “முரண்பாடு பற்றி”, நமது செங்கொடி மையத்தில், தோழர் கதிரவன் அவர்கள் முரண்பாடு பற்றி ஏற்கெனவே வகுப்பெடுத்துள்ளார். இன்று நாம் நடைமுறை பற்றி நிகழ்த்திய உரையின் நூலை சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

இந்த நூலின் துணைத் தலைப்பாக உள்ளதை பார்த்திடும் போதே, இந்த நூலின் பேசு பொருள் என்னவென்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

அறிவிற்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு, அறிவதற்கும் செயல்படுவதற்கும் இடையிலான உறவு பற்றியே இந்த நூல் பேசுகிறது. 

அறிவு-செயல்-அறிவது-செயல் என்கிற தொடர்ச்சி நடைபெறுகிறது. அதாவது இதுவரையிலான அனுபவத்தைக் கொண்டு அறியப்பட்ட அறிவு, அந்த அறிவைக் கொண்டு செயல்படுவது, செயல்படும் போது ஏற்படுகின்ற புதிய அனுபவங்களைக் கொண்டு பெறப்பட்ட அறிவு, என்று அறிவானது தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

அறிதலுக்கும் அறிவுக்கும் ஒரு முடிவு கிடையாது. புறநிலையில் இருக்கின்ற அனைத்தும் அறியக்கூடியதே. அறிதல் ஒரு தொடர் நிகழ்வாகும். 

இதுவரையிலான அனுபவத்தைக் கொண்டு உருவாக்கிய அறிவைப் பயன்படுத்தாமல், தற்போதைய நடைமுறைக்குச் செல்ல முடியாது. நடைமுறைக்குச் செல்லாமல், அனுபவத்தின் மூலம் கிடைக்கப் போகிற புதிய அறிவு கிட்டாது. 

நூலின் தொடக்கத்தில் உள்ள பகுதியை அப்படியே படிக்கிறேன். அப்படிப் படிக்கும் போது புரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், பின்னால் புரியும்படி பிரித்துப் படிப்போம். நாம் தமிழில் படிக்கும் போது இங்கே உள்ள மொழியாக்க சிக்கலைக் கடந்துதான் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

“மார்க்சுக்கு முன்பு, மனிதனது சமூக இயல்பிற்கு அப்பாற்பட்டு அவனது வரலாற்று வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு பொருள்முதலியலானது அறிவின் சிக்கலை கூர்ந்தாராய்ந்ததால், உற்பத்தி மற்றும் வர்க்கப் போராட்டம் மீதான அறிவின் சார்பு என்ற சமூக நடைமுறை மீதான அறிவின் சார்பை புரிந்துகொள்ளத் திறமை யற்றிருந்தது.” 

ஆங்கிலத்தில் உள்ள Complex sentenceயை அதாவது சிக்கலான தொடர் வாக்கியத்தை அப்படியே தமிழ்படுத்தி உள்ளனர். தமிழ் இலக்கணத்தில் சிக்கலான தொடர் வாக்கியம் என்பது கிடையாது. அதனால் ஆங்கிலத்தில் உள்ளதை, பிரித்து மொழிபெயர்க்க வேண்டும். இந்த நூலில் அவ்வாறு பிரிக்காமல் அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அனைத்தும் இவ்வாறுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. 

நாம் இதனைப் பிரித்துப் படித்துப் புரிந்து கொள்வோம்.     

புதிய தொகுப்பு நூலில் உள்ள மொழியாக்கத்தை முதலில் படித்தேன். பிறகுதான் பழைய மொழியாக்கம் கிடைத்து. அந்தப் பழைய மொழியக்கத்தை அப்படியே தருகிறேன். 

“மார்க்சுக்கு முன், பொருள்முதல்வாதம், மனிதனின் சமுதாய இயல்புக்கு புறம்பானதாகவும் அவனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சிக்குப் புறம்பானதாகவும் அறிவைப் பற்றிய பிரச்சனைகளை ஆய்வு செய்தது. ஆதலால் அறிவு சமுதாய நடைமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதை, அதாவது அறிவு, உற்பத்தியையும், வர்க்கப் போராட்டங்களையும் சார்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலாததாக இருந்தது.” 

இந்தப் பழைய மொழியாக்கமும் நீண்ட ஆங்கில ஒரே வாக்கியத்தை. இரண்டு வாக்கியமாகத்தான் பிரித்துள்ளது. இதனை இன்னும் பிரித்தால் தான் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். பிரித்துப் பார்ப்போம். 

மார்க்சுக்கு முன்பு, பொருள்முதல்வாதமானது, மனிதனின் சமூக இயல்புக்குப் புறம்பானதாக இருந்தது. அதே போல அவனுடைய வரலாற்று வழியிலான வளர்ச்சிக்கும் புறம்பானதாக இருந்து. இந்த அடிப்படையிலேயே பழைய பொருள்முதல்வாதமானது அறிவு பற்றிய பிரச்சனைகளை ஆய்வு செய்தது. ஆதலால் அறிவானது, சமூக நடைமுறையைச் சார்ந்து இருக்கிறது. அதாவது அறிவானது, உற்பத்தியையும், வர்க்கப் போராட்டங்களையும் சார்ந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், மார்க்சுக்கு முன்பான பழைய பொருள்முதல்வாதம் இருந்தது. 

இன்னும் குற்றிப்பாகச சொல்ல வேண்டும் என்றால், மார்க்சுக்கு முன்புவரை உள்ள பொருள்முதல்வாதமனது சமூகம் பற்றிய அறிதலில் கருத்துமுதல்வாதமாகவே இருந்தது. மார்க்ஸ் தான், சமூகத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் ஆராய்ந்தார். மனிதனின் அறிவு என்பது, பொருள் உற்பத்தியின் செயல்பாட்டினை முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. அவனுடைய பிற அனைத்து நடிவடிக்கைகளைத் தீர்மானிக்கக்கூடியதாக அது இருக்கிறது. இதனையே மார்க்சியம் அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்கிறது. 

உற்பத்தியின் போது மனிதர்களுக்கு இடையே தவிர்க்க முடியாத வகையில், சில உறவுகளை ஏற்படுகிறது. அந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இங்கே நாம் பொருளாதார உறவுகளையே குறிப்பிடுகிறோம். 

உற்பத்தி செயல்பாட்டுக்கு அப்பாற்பட்டு அறிவைப் பெற முடியாது என்பது நமக்கு இப்போது தெளிவாகிறது. ஆனால் இதனை வறட்டுவாதமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதவாது அடித்தளமே மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது என்றவுடன், அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டால், மேற்கட்டமைப்பில் தானே மாற்றம் நடைபெறும் என்று வறட்டுத்தனமாக - இயந்திரத்தனமாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அப்படி அடித்தள நடவடிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்வதினால், நடத்திட வேண்டிய அரசியல் நடவடிக்கையினையும், அதற்கான வர்க்கப் போராட்டதையும் புறக்கணிக்கப்படுகிறது. வறட்டுசூத்திரவாதம் நடைமுறைக்கு எதிரான முடக்குவாதமே ஆகும். 

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தீன் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தத் தாக்கத்தைத் தீர்மானிக்கிற சக்தியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அடித்தளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மேற்கட்டமைப் புறக்கணிக்கிற போக்கும், மேற்கட்டமைப்பின் தாக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகப் புரிந்து கொள்வதும் தவறான போக்காகவும், அது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கிறது. 

கோட்பாடு, நடைமுறையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அந்தக் கோட்பாடு புதிய நடைமுறைக்கு உதவிடுகிறது. புதிய நடைமுறையில் இருந்து கோட்பாடு செழுமை பெறுகிறது. எந்த ஒரு கோட்பாடும், மனித மனதின் அகநிலை உணர்வால் உருவாவதில்லை. சமூகப்பொருளாதார நிகழ்வு என்கிற புறநிலைமைகளினால்தான் கோட்பாடுகள் தோன்றுகிறது. 

நம்மைச் சுற்றி நிகழ்வதைப் புலன்களின் மூலம் அறிகிறோம். புலனுணர்ச்சியால் (Sensation) கிடைப்பது, அறிதலில் முதல்கட்டம், இரண்டாவது கட்டம் புலனறிவு (Perception). 

புலனுணர்ச்சிகளால் கிடைக்கப்பெற்ற தனித்தனியான தரவுகளை ஒருமுகப்படுத்தித் தர்கவழியிலான முடிவுகள் எடுக்கப்படுகிறது. மனிதனின் அறிதல் உணர்வுக்கட்டத்திலேயே நின்றுபோவதில்லை. இந்த உணர்வுக்கட்டத்தில் இருந்து எண்ணம், சிந்தனை, கருத்தாக்கங்கள் ஆகிய கட்டங்கள் தொடர்கிறது. 

புலன்களால் அறியப்பட்டவைகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அது எண்ணங்களாக உருபெறுகிறது. இந்த எண்ணங்களால் சிந்தனை தோன்றுகிறது. புலனறிவு, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் அடிப்படையில் கருத்தாக்கம் தோன்றுகிறது. 

மார்க்சிய பொருள்முதல்வாதமே அறிவுத்தோற்றத்தைப் பற்றிய சிக்கலை முதன்முறையாகச் சரியாகத் தீர்த்தது. 

நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. அதே போல முதலாளித்துவம் இன்னமும் தோன்றியராததால் அதன் உற்பத்தி முறையின் விதிகளை அறிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மார்க்சியம் தோன்றும் போது முதலாளித்துவம் தன் உள்ளடக்கத்தில் வளர்ச்சி பெற்றிருந்தது, அதன் முரண்பாடுகள் வெளிபடத் தொடங்கியது. அதனால் தான் மார்க்சியம் முதலாளி சமூக உற்பத்தியின் விளைபொருள் என்று கூறப்படுகிறது. 

அதே போல, சுதந்திர வணிக முதலாளித்துவக் கட்டத்தில், ஏகாதிபத்திய காலகட்டத்துக்கு உரிய விதிகளை மார்க்சால் முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியவில்லை. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்டமான ஏகாதிபத்தியம் இன்னமும் தோன்றாமல் இருந்தது, அதனால் மார்க்சால் அதைப் பற்றி அறய முடியவில்லை. 

ஏகாதிபத்திய உற்பத்தியின் தொடக்கத்தை லெனினே கண்டறிந்து கூறினார் ,லெனினுடன் ஸ்டாலினும் ஏகாதிபத்திய உற்பத்தி முறையினை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயற்பட்டனர். உற்பத்தி முறையின் மாற்றத்தை அது தோன்றுவதற்கு முன்பே கண்டறிய முடியாது. ஒன்றின் தோற்றத்தையோ அதன் மறைவையோ நிகழத்தொடங்கிய பின்பே அறிந்து கொள்ள முடியும். யதார்த்தத்தில் இல்லாதது அறியப்பட முடியாது. எதார்த்தத்தில் இல்லாதது பற்றிய கருத்துக்கள் கற்பனையானதே. அது நடைமுறைக்கு உதவிடாது. 

எதார்த்தத்தை மாற்றுகின்ற நடைமுறையின் அறிவை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. புறநிலை விதியின்படியே அனைத்தும் நடைபெறுகிறது என்று கூறுவதனால், மனிதனின் தலையீடு இல்லாமல், அந்த விதி செயல்படுகிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. அந்த விதி புறநிலையில் உள்ளது, அதனைச் செயல்படுத்துவது மனிதர்களின் நடவடிக்கையே ஆகும். புறநிலைக்கு ஏற்பவே மனிதனின் நடவடிக்கை அமைகிறது என்பதே இதன் பொருளாகும். 

பாட்டாளி வர்க்கம் தொடக்கக் காலத்தில், தனது பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவம் பயன்படுத்துகிற இயந்திரமே காரணமாக நினைத்தது. அன்றைய பாட்டாளி வர்க்கம் இயந்திரதை உடைப்பது மூலம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்தப் போராட்டம் எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. இது தன்னெழுச்சியின் விளைவாகும். இது ஒரு புலனுணர்ச்சிக் கட்டமே. 

முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் விளைவாகவே வெளியில் புலப்படுகிற பிரச்சினை நடக்கிறது என்கிற புரிதல் தொடக்கக் காலத்தில் ஏற்படவில்லை. உள்முரண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் அன்றைய வளர்ச்சி இல்லை. 

இரண்டாவது கட்டத்தில், முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டின் விளைவே வர்க்கப் போராட்டம் என்பதைப் பாட்டாளி வர்க்கம் அறிந்து கொண்டது. பாட்டாளி வர்க்கம் இரண்டாம் கட்டத்தில் பொருளாதாரப் போராட்டத்தினாலும், அரசியல் போராட்டத்தினாலும் வளர்ச்சி பெற்றது. இந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவச் சமூகத்தின் சாராம்சத்தையும், அதன் வர்க்க போக்கையும், அதன் சுரண்டல் உறவுகளையும் கண்டறிந்து, தனது வரலாற்றுக் கடமையைப் புரிந்து கொண்டது. இது புலனுணர்வைத் தொடர்ந்து பெற்ற புலனறிவாகும். 

பாட்டாளிகளின் தன்னெழுச்சிப் போராட்டம், வர்க்கப் போராட்டமாக மாறியதற்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல் பெரும் காரணமாகும். 

எந்த நிகழ்விலும் இதனைக் காணலாம், முதலில் புலக்காட்சியின் அடிப்படையில் ஏற்படுகிற தன்னெழுச்சி, அடுத்து புலனறிவாக, தர்க்க வழியிலான முடிவின் அடிப்படையில் ஏற்படுகிறது. அதாவது வடிவத்தில் காணப்படும் பிரச்சினை, அதன் உள்ளடக்கத்தின் விளைவே என்கிற புரிதலாக வளர்ச்சி அடைகிறது. இதன் மூலம் தனது முடிவுகளை அகநிலையாக, ஒரு தலைபட்சமாக, மேலோட்டமானதாகப் பார்க்காமல் ஒவ்வொன்றையும் இயக்கவியல் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டது. 

புறநிலையிலான தரவுகளின் அடிப்படையில் பகுத்தறிந்து முடிவெடுப்பது எதார்த்தத்தை அறிந்து எடுக்கப்பட்டதாக உள்ளது. 

பகுத்தறிவானது, புலனறிவில் இருந்து பெறப்படத் தேவையில்லை என்று கூறுகிற “பகுத்தறிவாத”மானது கருத்துமுதல்வாதவாதமே என்கிறார் மாசேதுங். பகுத்தறிவு வேறு பகுத்தறிவுவாதம் வேறு. அடுத்துப் பகுத்தறிவுவாதத்தைப் பற்றி மாசேதுங் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார். 

தத்துவ வரலாற்றில் பகுத்தறிவு மட்டுமே நம்பத்தக்கது எனவும், புலக்காட்சியினால் ஏற்படுகிற அனுபவத்தினால் அறிவுப் பெறப்படுவதில்லை என்றும் பகுத்தறிவுவாதம் கருதியது. பகுத்தறிவுவாதம், விஷயங்களைத் தலைகீழாக மாற்றித் தவறு செய்கிறது. 

ஆனால் பகுத்து அறிதல் என்கிற பகுத்தறிவானது, தன்னுடைய ஆதாரத்தைப் புலக்காட்சி உணர்வுகளில் இருந்து பெறுகிறது. அதனால்தான் பகுத்து அறிவின் மூலம் கிடைக்கின்ற முடிவுகள் துல்லியமாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. 

சமூக நடைமுறையின் வழியில்தான், மனிதனுக்கு அறிவு கிட்டுகிறது. கண்களை மூடிக்கொண்டும், காதுகளை அடைத்துக் கொண்டும், புறநிலை உலகத்தில் இருந்து முற்றிலும் துண்டித்தும் கொண்டுள்ள மனிதனுக்கு அறிவு என்ற ஒன்று இருக்க முடியாது. அவன் பெற்றது எதுவும் இல்லை, தன்னைத் தனிமையிலும், தன்னிலையிலும் சுருங்கி சுண்டிப் போவான். 

அறிவானது எதார்த்த உலகின் நடைமுறையில் இருந்துதான் கிடைக்கிறது, இதுவே அறிவு பற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாடாகும். 

அடுத்து, அறிவை ஆழப்படுத்த வேண்டும், இது அறிவின் புலனுணர்வு கட்டத்தை, பகுத்தறிவு நிலைக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இது அறிவுக் கோட்பாட்டின் இயக்கவியல் ஆகும். 

பகுத்தறிவு என்பது புலக்காட்சி அறிவைச் சார்ந்து இருக்கிறது, புலக்காட்சி அறிவு பகுத்தறிவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவு கோட்பாடாகும். 

தத்துவத்தில், பகுத்தறிவுவாதமும் அனுபவவாதமும், அறிவின் வரலாறு, இயக்கவியல் ஆகியவற்றின் இயல்பினை புரிந்து கொள்ளவில்லை. இந்த இரு சிந்தனைப் போக்கும் உண்மையை அறிவதற்கான இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டு, மற்றொன்றை மறுக்கின்றனது. இதனால், இரண்டும் அறிவுக் கோட்பாட்டில் தவறானவை ஆகும். அதாவது பகுத்தறிவுவாதம் அனுபவத்தைப் புறக்கணிக்கிறது, அனுபவவாதம் பகுத்தறிவைப் புறக்கணிக்கிறது இதன்மூலம் உண்மையான அறிவை பெற முடியாமல் இரண்டும் தவறு செய்கிறது. 

புலக்காட்சி அறிவில் இருந்து பகுத்தறிவாக வளரும் இயக்கவியல் பொருள்முதல்வாதம், அறிவின் இயக்கமானது, அறிதலில் சிறிய நிகழ்வாக இருந்தாலும் சரி, பெரிய நிகழ்வாக இருந்தாலும் சரி, இரண்டு போக்கிலும் உண்மைக்குப் பொருந்துகிறது. ஆனால் அறிவின் இயக்கப் போக்கு இத்துடன் நின்றுவிடுவதில்லை. பகுத்தறிவோடு நின்றுபோவது பிரச்சினையின். பாதி அளவுக்குத் தீர்வை மட்டுமே எட்டியிருக்கும். 

புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து கொள்வதும், அதன் மூலம் உலகை விளக்குவதற்கும் திறமை உடையவராய் இருப்பது முக்கியமானதே, ஆனால் அத்துடன் நின்றுவிடுவது பாதிக் கிணறு தாண்டியதாகவே இருக்கும். முழுக் கிணறு தாண்ட வேண்டுமானால் செயலூக்கமான இவ்விதியை, உலகை மாற்றுவதில் இணைக்க வேண்டும் என்றே மார்க்சியம் வலியுறுத்துகிறது. புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இல்லை என்று லெனின் குறிப்பிடுவதை மாசேதுங் இங்கே சுட்டிக்காட்டுகிறார். 

உலகைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதனை மாற்றுவதற்கான கோட்பாட்டை, வரலாற்று வளர்ச்சியின் விதியில் இருந்து பெறவேண்டும். இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையையும், எதார்த்த உலகையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதன் அடிப்படையில் சமூகத்தை மாற்றுவதற்கான கோட்பாட்டை உருவாக்க வேண்டும். 

நடைமுறையோடு அறிவு தொடங்குகிறது, பெறப்பட்ட அறிவை நடைமுறையோடு இணைக்க வேண்டும். இதன் மூலமே புதியபுதிய அறிவுகள் திறக்கப்படுகிறன. 

புறநிலைக்கு ஏற்ப கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை, கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் போது, அதாவது செயற்படுத்தும் போது, சரி பார்க்கப்படுகிறது. நடைமுறையில் தவறு திருத்தப்படுகிறது. 

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர்களின் விஞ்ஞான வழிப்பட்ட கருத்துக்கள், வர்க்கப் போராட்டத்துடன் நடைமுறையில் சரி பார்க்கப்பட்டதின் மூலமே உண்மை என்று நிலைநாட்டப்பட்டது. 

பல கோட்பாடுகள் நடைமுறையில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது, மார்க்சிய லெனினியம் சரியானது என்பதை நடைமுறையே நிரூபித்துக் கொண்டிருக்கிறது. "தத்துவம், புரட்சிகரமான நடைமுறையுடன் இணைக்காவிட்டால் அது இலக்கற்றதாகிவிடும். அதேபோல் நடைமுறையின் பாதையில் புரட்சிகரத் தத்துவம் ஒளிவீசாவிட்டால் நடைமுறை இருளில் தடுமாறும்". என்கின்ற ஸ்டாலின் கூற்றை மாசேதுங் இங்கே நமக்கு நினைவுப்படுத்துகிறார். 

அதாவது தத்துவம், நடைமுறையோடு இணைக்கவில்லை என்றால் அந்தத் தத்துவம் இலக்கு அற்றதாகவிடும். அதே போலப் புரட்சிகரத் தத்துவத்தால் நடைமுறை ஒளியூட்டப்பட வேண்டும், அதாவது இணைக்கப்பட வேண்டும், அவ்வாறு இணைக்கப்படவில்லை என்றல் நடைமுறை இருளில் தள்ளாடும். 

மனிதர்கள், இயற்கையையோ சமூகத்தையோ மாற்றும் நடவடிவக்கையில், முதலில் கொண்டிருந்த கருத்துக்கள், கோட்பாடுகள், திட்டங்கள் மாறுதல் அடையாமல் அப்படியே இருப்பதில்லை. ஏனென்றால் எதார்த்தத்தினை மாற்றுவிதில் ஈடுபட்ட மனிதர்கள் எண்ணற்ற வரம்புகளால் கட்டுப்பட்டுள்ளனர். புறநிலையின் மாறுதலுக்கு ஏற்ப தங்களின் கருத்தை வளர்த்துக் கொண்டால் அன்றி மனிதர்களின் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்காது. 

மனித அறிவின் இயக்கமானது, நிகழ்வுப்போக்கின் முன்னேற்றத்தைப் பொருத்தவரை நிறைவடைவது இல்லை. புதியபுதிய மாற்றத்தில் இருந்து, அறிவு பெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொன்றும் அதன் உள்முரண்பாட்டினால் மாறிக் கொண்டே இருக்கிறது, இந்த மாற்றத்தை அறிந்து கொண்டு, அறிவு மாற்றம் பெறுகிறது அதன் அடிப்படையும், வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. 

புறநிலைமைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாத தலைவர்கள் தவறிழைப்பர். தவறுகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் புறநிலையினைப் பற்றிய தவறான புரிதலாகவே இருக்கிறது. புறநிலை மாற்றத்துக்கு ஏற்ப தன்னுடைய அகநிலையை அமைத்துக் கொள்ளாத தலைவர் வெற்றி பெறுவதில்லை. புறநிலையினைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தமது கோட்பாடுகளையும் செயல்பாட்டையும் மாற்றிக் கொண்டவர்களே வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். 

மாசேதுங் கூறியதை அவரது வார்த்தைகளில் பார்ப்போம். “ஒரு புரட்சிகரக் காலத்தில் நிலைமை மிக வேகமாக மாறுகிறது; மாற்றப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப புரட்சியாளர்களின் அறிவு வேகமாக மாற்றிக் கொள்ளாது போனால், அவர்களால் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் திறமை அற்றவராக இருப்பர்.” 

இது எதைக் காட்டுகிறது என்றால், எதார்த்த நிலைமையைவிடச் சிந்தனையானது பின்தங்கி இருப்பதையே காட்டுகிறது. எதார்த்த நிலைமையின் மாற்றத்துக்கு ஏற்ப சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். புறநிலையின் போக்கிற்கு மாறாகச் செல்பவர்கள் வலது சந்தர்ப்பமாகவும் இடது விலகலாகவும் திசை மாறுவிடுகின்றனர். 

புறநிலைமைகளின் மாற்றத்தோடு முன்னேற தவறுபவர்கள், வரலாற்றில் வலது சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர், அப்படிப்பட்டவர்கள் புறநிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை, மாற்றத்தை காணாமல் பின்தங்கிவிடுகின்றனர். 

புறநிலைமை முன்னேறி மாறியிருப்பதைக் காணத் தவறுவதின் மூலம் பழைய கட்டத்திலேயே பின்தங்கிவிடுகின்றனர். அவர்களால் சமூகத்தின் தேரை முன்னே செல்வதற்கு வழிகாட்ட முடியாததுடன், எதிர்திசையில் அதைப் பின்னுக்கு இழுக்கின்றனர். இந்த வலது சந்தர்ப்பவாதித்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துப் போராட வேண்டும். 

இடது சொல்ஜாலம் புரிபவர்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இந்த இடதுசிந்தனையானது, நிலவுகின்ற புறநிலைமைப் போக்கை கடந்து செல்கின்றனர். சிலர் தங்கள் கற்பனைகளை உண்மையாகக் கருதுகின்றனர், எதிர்காலத்தில் மட்டுமே அடைய கூடியதை லட்சியத்தை நிகழ்காலத்தில் அடைய முயற்சிக்கின்றனர். மேலும் தங்களைச் சாகசக்காரர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட இடதுபோக்கினர் அன்றாட நடவடிக்கையில் இருந்து அந்நியப்பட்டுக் கிடக்கின்றனர். அன்றாட நடவடிக்கையில் அந்நியப்பட்டவர்கள் மக்களிடமும் அன்னியப்பட்டே காணப்படுவர். 

இடது-வலது ஆகியவற்றின் தவறான போக்கை எதிர்த்தும், கடந்து செல்லாமல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற முடியாது. 

கருத்துமுதல்வாதம், இயந்திரகதி பொருள்முதல்வாதம், சந்தர்ப்பவாதம், சாகசவாதம், மற்றும் அகநிலைவாதம் ஆகியவை புறநிலையுடனான தொடர்பை முறித்துக் கொண்டுள்ளன, அறிவை, நடைமுறையிலிருந்து பிரிக்கின்றன. இத்தகைய போக்கை மார்க்சிய லெனினியம் கடுமையாக எதிர்க்கிறது. 

உண்மை என்பது சார்புநிலையானது. இறுதியான உண்மை என்பதை மார்க்சியம் மறுக்கின்றது. புறநிலை எதார்த்தத்தின் மாற்றம் என்பது முடிவற்றது, அதனால் மனிதனது அறிவும் முடிவற்றது. மார்க்சிய லெனினியம் புறநிலை மாற்றத்தை, அறிந்து கொள்வதற்கான கதவை, திறந்தே வைத்துள்ளது, அறிவதை மார்க்சிய லெனினியம் நிறுத்துவதில்லை, புதிய மாற்றங்களையும், புதிய நிலைமைகளையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது. 

மார்க்சியத்தின் முடிவாக மாசேதுங் கூறியதை நேரடியாகக் பார்ப்போம்:- 

“அகநிலை மற்றும் புறநிலை, கோட்பாடு மற்றும் நடைமுறை, அறிதல் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் பருண்மையான வரலாற்று ஒற்றுமைதான் எங்கள் முடிவு, மேலும் பருண்மையான வரலாற்றில் விலக்கிச் செல்லும் இடது மற்றும் வலது சித்தாந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” 

மார்க்சிய லெனினிய சித்தாந்தத்திற்கு எதிரான போக்கு, இந்த “வலதும்” “இடதும்”. 

இதனை எதிர்த்துப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை மாசேதுங் கூறுவதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 

சமுதாயத்தின் வளர்ச்சியின் இன்றைய சகாப்தத்தில், உலகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, மாற்றும் பொறுப்பை, வரலாறு பாட்டாளி வர்க்கத்தினதும் அதனுடைய கட்சியினதும் தோள்களின்மீது சுமத்தியிருக்கிறது என்கிறார் மாசேதுங். 

உலகை மாற்றுவதற்கான பாட்டாளி வர்க்கம் மற்றும் புரட்சிகர மக்களின் போராட்டம் ஆகிவற்றின் கடமையாக மாசேதுங் கூறுவதைப் பார்ப்போம். 

புறவுலகை மாற்றும் போது அதே நேரத்தில் அகநிலையும் மாற்றப்படுகிறது. தங்களின் அறிவுத் திறமையை மாற்றுதல் என்பது புறநிலை மற்றும் அகநிலை உலகுக்கு இடையிலான உறவுகளை மாற்றுவதாகும். இதனையே பாட்டாளி வர்க்கமும் அதன் புரச்சிகர இயக்கமும் தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும். கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மனிதயினம் தன்னையும், உலகையும் தன்னுணர்வோடும், உணர்வுவழியிலும் மாற்றும் பொழுது உலகில் கம்யூனிச சகாப்தம் அடையப்படும். 

நடைமுறையின் மூலமே உண்மை கண்டறியப்படுகிறது, மீண்டும் நடைமுறையின் மூலமே கண்டறிந்த உண்மை சரி பார்த்து வளர்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இதே சுற்றில் செல்கிறது, ஒவ்வொரு சுற்றிலும் முன்னதைவிட உயர்மட்டத்திற்கு வளர்ச்சி பெறுகிறது. இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக் கோட்பாடு ஆகும். மேலும், அறிதலுக்கும் செயல்படுவதற்கும் உள்ள ஐக்கியமே இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்டாகும். 

மாசேதுங் எழுதிய இந்த “நடைமுறை பற்றி” என்கிற சிறுநூல் மிகவும் முக்கியமானது ஆகும். இதனை நான்றாகப் படித்த பின்பு. பிற தத்துவ நூல்களைப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். 

இந்த நூலை இப்படிச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். புறநிலையின் விதிகளை நடைமுறையில் தான் அறிகிறோம், அதனை நடைமுறையில் தான் மாற்றுகிறோம். புறநிலை தானே மாற்றத்தை நிகழ்த்துவதில்லை. ஆக, அறிவு நடைமுறையில் இருந்தே பெறப்படுகிறது. கிடைக்கப்பபெற்ற அறிவை நடைமுறைப்படுத்தும் போதே புதியதான அறிவு கிடைக்கப்பெறுகிறது. அறிவு தொடர்கிறது, அறிவு வளர்கிறது. இந்த நூலை நன்றாகப் படித்துப் புரிந்துவிட்டு, அடுத்தத் தத்துவ நூல்களைப் படிக்கலாம். குறிப்பாக இதற்கு அடுத்து முரண்பாடு பற்றிய நூலைப் படிக்கலாம். 

கம்யூனிஸ்டுகளின் நடைமுறை அரசியலுக்கு, தத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கே மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் சேர்த்துக் கூறலாம். மார்க்சியத் தத்துவமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் மார்க்சிய வழிப்பட்ட அரசியலுக்கு அடிப்படை ஆகும். மார்க்சிய அரசியலின் விஞ்ஞானத் தன்மை இந்த இரண்டிலும் தான் இருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு மார்க்சியம் பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம்.

No comments:

Post a Comment