Sunday 20 June 2021

3) மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு- முன்னுரை" சுருக்கம்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

21 வது வார வகுப்பு - 19-06-2021) வகுப்பு) 

தவிர்க்க முடியாத காரணத்தால் சில வாரங்கள் நமது செங்கொடி மையத்தின் வகுப்பு நடத்த முடியாமல் போனது. மீண்டும் இன்று முதல், வகுப்பைத் தொடர்ந்து நடத்துவோம். 

கடந்த இரண்டு வகுப்புகளில் லெனின் மதத்தைப் பற்றி எழுதியதைப் பார்த்தோம். லெனின் எழுதியதைப் பார்த்துவிட்டு, மார்க்ஸ் எழுதிய இந்த முன்னுரையைப் படித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். அதனால் தான் லெனின் எழுதியதை பார்த்துவிட்டு மார்க்சுக்குச் செல்கிறோம். 

இன்று, “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு" என்ற நூலுக்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையை மட்டும் பார்க்கப் போகிறோம். இந்த முன்னுரை 1844ஆம் ஆண்டு எழுதப்பட்டது. மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத தத்துவத்தை 1843-1844 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளார். அந்த நிறைவை இந்த முன்னுரையில் நாம் காணலாம். 

ஜெர்மனியைப் பொறுத்தவரை, மதத்தின் மீதான விமர்சனம் அடிப்படையில் நிறைவடைந்துள்ளது. மேலும் மதத்தை விமர்சனம் செய்வது அனைத்து விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனை ஆகும்.” 

இந்த முன்னுரை இப்படிதான் தொடங்குகிறது. 

ஜெர்மனியில், மதத்தின் மீதான விமர்சனம் சாராம்சத்தில் முழுமை பெற்றுள்ளது. மதத்தின் மீதான விமர்சனமே அனைத்து விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனை ஆகும் என்கிறார் மார்க்ஸ். அனைத்தையும் விமர்சிப்பதற்கு மதத்தின் மீதான விமர்சனம் அவசியமாகும் என்பது இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். 

நம் நாட்டில் இத்தகைய மதத்தின் மீதான விமர்சனத்தை முடித்துவிட்டோமா? என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. மதத்தின் மீதான தொடக்கநிலை விமர்சனத்தையே செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து அதனை நிறைவு செய்தோமா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இதனை மனதில் கொண்டே இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

அடுத்து மார்க்ஸ் மதத்தைப் பற்றிய விமர்சனத்தை முழுமையாக வைக்கிறார். அதனை அப்படியே நேரடியாகக் காண்போம். 

பரலோகத்தின் வினோத அர்த்தமான எதார்த்தத்தில் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன், தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையும் அங்குக் காணவில்லை. தான் தேடுகின்ற இடத்தில் அந்த அமானுஷ்யம், தன்னையே ஒத்திருக்கும் ஒன்றைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த முடியாது. மனிதன் தனது உண்மையான எதார்த்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.” 

பரலோகத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்டவனை, மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அங்கே காண்பது, தனது சொந்த தலைகீழ் பிம்பத்தையே தவிர வேறெதுவும் இல்லை. இது பற்றிய விளக்கம் அடுத்து வருகிறது. பரலோகத்தில் தேடுவதை நிறுத்திவிட்டு, மனிதன் அதனை உண்மையான எதார்த்தத்தில் கண்டறிய வேண்டும், அதாவது உலகில் கண்டறிய வேண்டும் என்கிறார் மார்க்ஸ். 

மதத்துக்கு எதிரான விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது எது? என்பதைத் அடுத்து, தொகுத்துத் தருகிறார் மார்க்ஸ். 

மனிதனே மதத்தைப் படைக்கிறான். மதம், மனிதனை உண்டாக்கவில்லை. இதை வேறுவிதமாகவும் கூறலாம். தன்னை ஏற்கெனவே இழந்துவிட்ட மனிதனின் சுயவுணர்வும், சுயமரியாதையும் தான் மதம் ஆகும். ஆனால் மனிதன் என்பவன் உலகுக்கு வெளியே அமர்ந்திருக்கும் சூட்சுமப் பொருள் அல்ல. மனிதன் என்பவன் இந்த உலகின் எதார்த்தம். இந்த எதார்த்த உலகின் தலைகீழான பிரதிபலிப்பாக மதம் காட்சிதருகிறது. மனித சாரம்சத்துக்கு எந்தவிதமான உண்மையான எதார்த்தமும் இல்லை. ஆகவே மதத்துக்கு எதிரான போராட்டம் என்பது ஆன்மீக மணம் வீசும் மறுவுலகை எதிர்த்து நடத்தும் போராட்டத்துடன் தொடர்புடையதே ஆகும். இங்கே மார்க்ஸ் என்ன கூறுகிறார் என்றால், மதத்துக்கு எதிரான போராட்டமானது மதம் கற்பிக்கிற பரலோகம், மறுவுலகம், சொர்கம் போன்ற உண்மைக்கு மாறானதை எதிர்த்து நடத்துகின்ற போராட்டமாகும். 

மார்க்சின் இந்த முன்னுரையானது, பிற்காலத்தில் அவர் எழுதியது போல் எளிமையானதா இல்லை. முற்போக்கான தொழிலாளர்களும் மூலதனம் நூலைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மார்க்ஸ் அதை எளிமையாக எழுதியுள்ளார். 

ஆனால், இந்த முன்னுரை, ஒரு தத்துவ முனைவர் பட்டம் பெற்றவர், அறிவார்ந்த சபையில், அறிவுடையோர் முன் சமர்பிப்பது போல் உள்ளது. இந்தக் கடினமான எழுத்து நடையை மார்க்ஸ் பின்னாட்களில் கையாளவில்லை. இந்த முன்னுரை கடினமானதுதான், இருந்தாலும் இதன் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

நான் கூறுகிற விளக்கம் சரியானதா என்பதை அறிந்து கொள்வதற்கு, மார்க்சின் எழுத்தை மேற்கோள்களாக, இதில் அதிகம் பயன்படுத்தி உள்ளேன். 

அடுத்து மார்ஸ் கூறியதை நேரடியாகப் பார்த்துவிட்டு, அதன் விளக்கத்திற்குச் செல்வோம். 

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.” 

இங்கே மார்க்ஸ் மதத்தை அபின் என்கிறார். இந்தக் கூற்று எவ்வளவு பிரபலமோ அந்தளவுக்கு இதனைத் தவறாக விளக்கம் கொடுப்பவர்களின் கூற்றும் பிரபலமாகும். 

மதம் மக்களின் அபினி என்பதைத் திருத்தல்வாதிகள் தவறாக விளக்கம் கொடுக்கின்றனர். துயரங்களைத் தாங்குவதற்கு மயக்க மருந்து போல் மதம் மக்களுக்கு உதவிடுகிறது என்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுப்பது போல், கம்யூனிச சமூகம் உருவாகும்வரை மக்கள் இந்தச் சமூகத்தின் துன்பங்களை மறப்பதற்கு மதம் மயக்க மருந்தாக - அபினியாகப் பயன்படுகிறது. 

இது அபத்தமான கூற்றாகும். மார்க்சின் இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து படித்துப் புரிந்து கொள்ளும் போது இந்த அபத்தம் முழுமையாக வெளிப்படும்.. 

எதார்த்த உலகில் காணும் துயரத்தின் தலைகீழ் வெளிப்பாடே மதம், இதனை விமர்சனப் பூர்வமாகப் பார்க்கும் போது இதற்கு எதிரான விமர்சனமாக மாறுகிறது. உலகின் துயரத்தின் தலைகீழ் பிரதிபலிப்பு என்பதையே ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் மதம் இருப்பதாக முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தலைகீழ் பிரதிபலிப்பு உண்மையாகத் தெரிவதனால் தான் மதத்தை மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். 

மதம் மக்களின் அபின் என்கிற ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு மதத்தைப் பற்றி விமர்சிப்பது வீண் காலவிரம் என்று சிலரும், மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு, மதம் மக்களின் துயரத்தை போக்கும் மயக்க மருந்து, அதனால் மக்களின் துயரங்கள் அழியும்வரை மதத்தை எதிர்க்கக்கூடாது என்று சிலரும், மேலே கூறிய மார்க்சின் கருத்துக்கு மாறாக விளக்கம் கொடுக்கின்றனர். 

மதத்தை மயக்க மருந்தாகக் கருதிக் கொள்பவர்கள், மார்க்ஸ் கூறியதில் ஒன்றை மட்டும் பிடித்து, அதன் சாரத்தைத் திரித்துரைக்கின்றனர். மதத்தின் துயரம் உண்மையான துயத்தின் வெளிப்பாடு என்று மார்க்ஸ் கூறியுள்ளார் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அதனுடன் சேர்த்துக் கூறியதை, தங்கள் வசதிக்காகத் திருத்தல்வாதிகள் விட்டுவிடுகின்றனர். 

மார்க்ஸ் என்ன கூறியுள்ளார், "மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது." 

அடுத்து மார்க்ஸ் கூறியதை நேரடியாகப் பார்ப்போம்:-

மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மதத்தை ஒழிப்பது அவர்களின் உண்மையான மகிழ்ச்சிக்கான கோரிக்கையாகும். தங்களது நிலைமைகளைக் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படி கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படி கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது." 

மார்க்சின் இந்த எழுத்தை எவராலும் திரிக்க முடியாது. மிகமிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

முன்னுரையின் எந்த இடத்திலும், மார்க்ஸ் மதத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று அனில் ரஜீம்வாலேவின் கருத்தாக, அண்மைய ஜனசத்தி பத்திரிகை கூறுகிறது. இதே கருத்துடையவர்கள் இடதுசாரிகளிடையே நிறையப் பேர் உள்ளனர். ஆனால் மேலே உள்ள மார்க்ஸ் எழுதிய பகுதியைப் படிக்கும் போது அனில்ரஜீம்வாலே போன்றோரின் கருத்துத் தவறு என்பது தெரிந்துவிடுகிறது. மார்க்ஸ் மதத்தை ஒழிப்பது பற்றியே பேசியுள்ளார். 

மக்களின் மாயையான மகிழ்ச்சியாக உள்ள மத்தை ஒழிப்பதே, மக்களின் உண்மையான மகிழ்ச்சிக்கான கோரிக்கையாக உள்ளதை முன்னுரை குறிப்பிடுகிறது. உண்மையான மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், மாயையான மகிழ்ச்சி தருகிற மதத்தை ஒழிக்க வேண்டும். இந்த மாயையான மகிழ்ச்சியை மதம் கொடுப்பதனால் தான் மதத்தை மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். 

மேலும், மதத்தின் தோற்றத்துக்குக் காரணமான சூழ்நிலைமைகளை ஒழிப்பது பற்றியும் மார்க்ஸ் கூறியுள்ளார். அதாவது மத இருப்பிற்கான வேர்களை ஒழிப்பதை குறிப்பிடுகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையினால் உருவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதன் அராஜக உற்பத்தியையும் ஒழிக்க வேண்டும் என்கிறார் மார்க்ஸ். 

அடுத்து மார்க்ஸ் கூறுகிறார், மதத்தின் மீதான விமர்சனமானது, மதத்தின் மாயையான ஒளிவட்டத்தை விமர்சிப்பதாகும். 

மதத்தின் ஒளிவட்டத்தை மார்க்ஸ் விமர்சிக்கிறார் என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாத இடதுசாரி தலைவர்கள் நமது நாட்டில் இன்னும் இருக்கின்றனர் என்பது மிகவும் அவலமான நிலைமை ஆகும். மதத்தை எப்படிப் பொருள்முதல்வாத வழியில் விமர்சிக்க வேண்டும் என்பதையே இந்த முன்னுரை நமக்கு வழிகாட்டுகிறது. 

மதத்தின் கற்பிதமான மலரை, விமர்சனத்தின் மூலம் உதறித் தள்ள வேண்டும் என்கிறார் மார்க்ஸ். கற்பிதமான, மாயையான சூரியனை சுற்றுவதை விடுத்து, உண்மையான சூரியனை சுற்ற வேண்டும். அதாவது மனிதன் கற்பனையில் இருந்து விடுபட வேண்டும். தான் நினைத்த உலகத்தைச் சொர்கத்தில் காணாமல், இந்த உலகில் எதார்த்தமாகக் காண வேண்டும். அதனை இங்கேயே நிலைநாட்ட வேண்டும் 

மதத்தின் மீதான விமர்சனமானது, மாயையைக் கடந்து, மனிதனைச் சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது. எதார்த்த உலகின் சிக்கல்களுக்கு விடையாக, மதம் கற்பிக்கிற பரலோத்தை விடுத்து, இங்கேயே எதார்த்த உலகிலேயே தீர்வை உருவாக்க வேண்டும். அது மட்டுமல்லாது அதை உழைக்கும் மக்களே உருவாக்க வேண்டும் என்கிறார். 

மதத்தின் மீதான விமர்சனத்தின் மூலம் அமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கடமை என்ன என்பதை அடுத்து மார்க்ஸ் கூறுகிறார்.     

மதத்தின் மாயையான உலகத்தை விமர்சனம் செய்வதின் மூலம் ஒழித்தவுடன், இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே தத்துவத்தின் உடனடிப் பணியாகும். மனிதனுக்கு அந்நியமாக்கிக் காட்டும் மதத்தின் அதிமானுட உருவை திரைகிழிந்து காட்டிய உடனே, அதன் மாயையான உருவங்களில் தன்னைத் தானே அந்நியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்ட வேண்டும். 

மதத்தின் மீதான விமர்சனம் என்பது தொடக்க நிலையானது தான். அதனைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்தையும் விமர்சிக்கப்பட வேண்டும். அவை என்ன என்பதை அடுத்து மார்க்ஸ் கூறுகிறார். 

மதம் சுட்டுகிற பரலோகத்தின் மீதான விமர்சனம், பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமை பற்றிய விமர்சனமாக மாறுகிறது, இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. 

மதத்தின் மீதான விமர்சனத்தின் தொடர்க்சியாகவே அனைத்தின் மீதான விமர்சனமும் செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிரதான மதங்களையாவது இடதுசாரிகள் விமர்சித்துள்ளோமா என்று கேட்டால் அது தொடக்க நிலையில் தான் இருக்கிறது. அதுவும் பல காலத்துக்கு முன் தொடங்கியதாக உள்ளது.

இந்து மதம் என்று கூறப்படுவதற்கு ஆதாரமாகச் சுட்டப்படும், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றை மார்க்சிய வழியில் நாம் விமர்சனம் செய்துள்ளோமா? என்ற கேள்வி முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் மதத்தை விமர்சிப்பதில் நம் நாட்டு இடதுசாரிகளிடையே அக்கறையின்மை காணப்படுகிறது. இந்தத் தொடக்கப் புள்ளியே சிக்கலாக இருப்பதே, நம் நாட்டு இடதுசாரிகளின் பின்னடைவுக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறலாம். பின்னடைவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன, அதில் இது ஒன்று. 

மார்க்சிய வழிப்பட்ட விமர்சனத்தை, இந்திய மதங்களின் மீது வைப்பதின் மூலமே நாம் அனைத்தையும் விமசிக்க முடியும் என்ற அடிப்படைப் புரிதல் இந்த மார்க்சின் முன்னுரையைப் படிக்கும் போது நமக்கு ஏற்படுகிறது. 

இந்த முன்னுரையில் காணப்படும் அனைத்தையும் நாம் இந்த வகுப்பில் பார்க்கப் போவதில்லை. குறிப்பாக அன்றைய ஜெர்மன் நிலைமைகளைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கப் போவதில்லை. முன்னுரையில் காணப்படும் மதம் மற்றும் தத்துவம் பற்றிய விவரங்களை மட்டுமே இங்கே தொகுத்துப் பார்க்கிறோம். 

ஆயுதத்தின் மூலம் விமர்சிக்கப்படும் போது விமர்சனத்தை ஆயுதமாகக் கொள்ள முடியாது. ஆயுதத்தின் மூலம் தாக்கும் பாது, அதற்கு எதிராக எழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது. அதாவது ஆயுதக் கருவிக்கு எதிராக, கோட்பாட்டை ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது. ஆயுதத்தைப் பயன்படுத்தும் போது ஆயுதத்தின் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும். பொருளாயத சக்தியை பொருளாயத சக்தியின் மூலம்தான் தூக்கி எறியமுடியும். ஆனால் கோட்பாடு மக்களின் மனதைப் பற்றிய உடனே அது பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. 

மார்க்சின் இந்தக் கூற்றையும் மிகவும் எளிமையாகப் பலர் புரிந்து கொள்கின்றனர். கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாகிறது. இந்தக் கூற்று கருத்து திணிபையே கூறுகிறது. இந்த முன்னுரை இவ்வாறு கூறவில்லை. 

மக்களின் தேவைகளைக் கோட்பாடு நிறைவு செய்யும் போது, கோட்பாடு பொருளாயத சக்தியாக உருவெடுக்கிறது. மனிதத் தேவையைகளைக் கோட்பாடு நிறைவு செய்யும் போது, அது மக்களின் உணர்ச்சியைத் தொடுகிறது. அவ்வாறு மக்களின் தேவைகளை நிறைவு செய்து, சாதிக்கும் போது அந்தக் கோட்பாடு மக்களிடம் சென்றடைகிறது. அப்படி நிறைவேற்றும் போதே அந்தக் கோட்பாடு மக்களிடையே பொருளாயத சக்தியாக மாறுகிறது. 

கருத்து மக்களிடம் சென்றடைவது என்பது எதோ உளவியல் பிரச்சினையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. கோட்பாடு மக்களிடையே பொருளாயத சக்தியாக மாறுவதற்கு, கம்யூனிஸ்டுகள் அதற்கான செயலை செய்வது பற்றியே இந்த முன்னுரை நமக்குக் கூறுகிறது. 

இந்த முன்னுரையின் இறுதிப் பகுதியில் மார்க்ஸ் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்குப் பதிலையும் தருகிறார். 

ஜெர்மன் விடுதலையின் உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கே உள்ளது? என்பதே அந்தக் கேள்வியாகும். 

இந்தக் கேள்வியை நாம் இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்வதற்காக மாற்றிக் கொள்வோம். 

ஜெர்மன் விடுதலையின் உறுதிப்பாடான சாத்தியப்பாடு எந்த வர்க்கத்திடம் உள்ளது? 

அந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகும் என்கிறார் மார்க்ஸ். 

பாட்டாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் தொழிலாளர்கள் தான், ஆனால் தொழிலாளர்களில் பாட்டாளிகள் என்று யாரை வகைப்படுத்துகிறோம் என்ற தெளிவு வேண்டும். 

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் தொழிற்சாலையில் உழைக்கும் உழைப்பாளர்களையே பாட்டாளி என்று மார்க்சியம் கூறுகிறது. பாட்டாளிகளின் உழைப்பு, குறிப்பிட்ட வரலாற்று வளர்ச்சி கட்டத்தில், உழைப்பு, உழைப்பு சக்தியாகவும், அந்த உழைப்பு சக்தி ஒரு சரக்காகப் பரிணமித்துள்ளது. இத்தகைய உழைப்பைக் கொண்ட உழைப்பாளிகளையே பாட்டாளிகள் என்று கூறப்படுகிறது. 

எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற கேள்வி-பதில் பகுதியில் தொழிலார்களுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்றாகப் விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விபதில் பகுதிகள் நமது செங்கொடி மையத்தில் ஏற்கெனவே வகுப்பெடுக்கப்பட்டுள்ளது.

பாட்டாளிகளின் நிலைமைகளை மார்க்ஸ் அடுத்து விளக்குகிறார். 

சமூகத்தில் ஏனைய அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாத ஒன்று தான் பாட்டாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம் தன்னை முழுமையாக விடுத்துக் கொள்ள வேண்டுமானால், முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும். அப்படி ஒழித்தால் தான் பாட்டாளிகளைச் சுரண்டுகிற போக்கு முடிவுக்கு வரும். 

அதாவது பாட்டாளிகள் தங்களை ஒடுக்குகின்ற சக்தியைப் புரிந்து கொண்டு, அந்தச் சக்தியை ஒழிப்பதற்கான போராட்டத்தை நடத்துகிறது. 

ஜெர்மனியில் வளர்ச்சி அடைந்து வரும் எந்திரத் தொழிற் உற்பத்தியோடு பாட்டாளி என்கிற புதிய தொழிலாளி வர்க்கம் தோன்றி வளர்ச்சி அடைந்தது. இந்தப் பாட்டாளி வர்க்கமே ஜெர்மனியை விடுவிக்கப் போகிறது. இதனை ஒரு சோதிடனின் கூற்றைப் போல மார்க்ஸ் கூறவில்லை. அதற்கான தயாரிப்பைப் பற்றியும் கூறியுள்ளார். இயக்கவியல்-வரலாறியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருள்முதல்வாதம் ஆகியவை நம்மைத் தயார்படுத்துவதற்கு உதவிடுகிறது. 

இதற்கு அடுத்து மார்க்ஸ் கூறியது ஒரு பிரபலமான கூற்றாகும். 

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிகளிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது." 


(As philosophy finds its material weapon in the proletariat, so the proletariat finds its spiritual weapon in philosophy) 

இன்றைய நவீன உலகத்தைப் பாட்டாளி வார்க்கம்தான் விடுவிக்கப் போகிறது. நவீன உற்பத்தியில் காணப்படு ஏற்றமும் இறக்கமும் எந்த வர்க்கத்தைப் பாதிக்கிறதோ அந்த வர்க்கமே பாதிப்பை எதிர்த்துப் போராடும். அதனால் தான் பாட்டாளி வர்க்கத்தைப் புரட்சிகரமான வர்க்கமாகக் கூறப்படுகிறது. 

நவீன உலகத்தைப் பாட்டாளி வர்ககம், விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தத்துவக் கண்ணோட்டம் தேவை. அந்தத் தத்துவம், இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும். இந்தத் தத்துவம் பாட்டாளி வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இருந்து தோன்றவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலைமைகளில் இருந்துதான் தோன்றியது. 

முதலாளி வர்கத்துக்கான தத்துவப்பணியை முதலாளிகளே உருவாக்கிக் கொள்வது இல்லை. அதற்கான அறிவுத்துறையினர் வேலை செய்கின்றனர். அதே போலப் பாட்டாளிகளின் தத்துவத்தைப் பாட்டாளி வர்க்க நிலைமைகளை நன்றாகப் புரிந்து கொண்ட அறிவுத்துறையினரால் தோற்றுவிக்கப்படுகிறது. 

பொருள்முதல்வாத தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளிகளிடம் இருந்து பெறுகிறது, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைப் பொருள்முதல்வாத தத்துவத்திடம் பெறுகிறது. 

ஜெர்மனியை விடுவிக்க வேண்டுமானால், அடித்தளத்தையே புரட்சிகரமாக ஆக்க வேண்டும். இங்கே ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலையையே குறிப்பிடப்படுகிறது. 

இந்த விடுதலைக்குத் தலையாகச் செயற்படுவது தத்துவமே. இதயம் பாட்டாளி வர்க்கமாகும். 

இதற்கு அடுத்து மார்க்ஸ் கூறியதை நேரடியாகப் பார்ப்போம்.

பாட்டாளி வர்க்கத்தை ஒழிக்காமல், தத்துவத்தை ஒரு எதார்த்தமாக ஆக்க முடியாது, தத்துவத்தை ஒரு எதார்த்தமாக ஆக்கமாமல் பாட்டாளி வர்க்கத்தையும் அழிக்க முடியாது 

இந்த மொழியாக்கம் தோழர் ரகுநாதன் அவர்களால் 1963 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தது. 

(Philosophy cannot realize itself without the transcendence [Aufhebung] of the proletariat, and the proletariat cannot transcend itself without the realization [Verwirklichung] of philosophy.) 

ஒழித்தல், அழித்தல் என்பதாக இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இன்றைய அகரமுதலி என்ன கூறுகிறது என்றால், மீறுதல் என்கிறது. எதை மீற வேண்டும். தொடர்ந்து பார்ப்போம் 

பாட்டாளி வர்க்கத்தின் ஒழித்தல்-அழித்தல்-மீறல் பற்றி மார்க்ஸ் ஏன் இங்கே பேசுகிறார் என்று குழப்பம் அடைய வேண்டாம். நான் முன்பே கூறியது போல் மார்க்ஸ் இந்த முன்னுரை, ஒரு சாதாரண வாசகனுக்கு எழுதுவது போல் எழுதவில்லை, தத்துவ மாணவர்களுக்கும் தத்துவ ஆசிரியர்களுக்கும் எழுதியது போல் எழுதியுள்ளார். இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்துப் பார்ப்போம். 

பாட்டாளி வர்க்கம் தன்னிடம் உள்ள தடையை ஒழிக்காமல் தத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியாது, தத்துவத்தை உணராமல் பாட்டாளி வர்க்கம் தன்னிடம் உள்ள தடையை ஒழிக்க முடியாது. 

இதுதான் அதன் உள்ளார்ந்த பொருளாகும். 

பாட்டாளி வர்க்கம் தனக்கு உரிய எழுச்சியைப் பெற வேண்டுமானால், பாட்டாளி வர்க்கம் எழுச்சி பெறுவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும், தடையை நீக்குவதற்குப் பொருள்முதல்வாத தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். தத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கம் தன் முன்னுள்ள தடைகளை ஒழிக்க முடியாது. ஆக மொத்தம் என்ன கூறப்படுகிறது என்றால், பாட்டாளி வர்க்கம் தன்னை விடுத்துக் கொள்வதற்குத் தனக்கான தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உணர்வைப் பெறாமல் பாட்டாளிகள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. 

பாட்டாளி வர்க்கத்துக்கான தத்துவத்தின் அவசியத்தைப் பற்றியே இங்குப் பேசப்பட்டுள்ளது. 

பாட்டாளி வர்க்கம் தனக்கான தத்துவத்தையும், தனக்கான அரசியல் பொருளாதாரத்தையும் அறிந்து கொள்ளாமல் முழுமையான விடுதலையை அடையமுடியாது. இந்த முன்னுரை தத்துவத்தைப் பற்றியே பேசுகிறது. இருந்தாலும் இந்த இடத்தில் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

கம்யூனிஸ்டுகளின் அரசியல், விஞ்ஞானத் தன்மை பெற வேண்டுமானால், பொருள்முதல்வாதத்தையும், அரசியல் பொருளாதாரத்தையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு நாம் பாடுபடுவோம் என்று கூறுவதோடு இன்றைய வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment