Friday, 21 October 2016

மேற்கோள்களைக் கொண்ட எனது எழுத்து முறையைப் பற்றி..


     எனது எழுத்துமுறை பற்றிக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நான் வெளியிட்டுள்ள நூல்களைத் தொடர்ந்து படித்த, அல்லது ஒரு நூலையாவது முழுமையாகப் படித்த பெரும்பான்மையினருக்கு இந்தக் கேள்வி எழுவதற்கு வாய்பில்லை. மேலோட்டமாக நூல்களின் வடித்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு வெறும் மேற்கோள்களாக மட்டுமே கண்ணில் படும்.

பொதுவாக மேற்கோள்கள் இடம் பெறுவது, அதுவும் அதிகமாக இடப்படுவது படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் இந்த மேற்கோள்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை மேலேயும் கீழேயும் உள்ள பகுதிகளைச் சேர்த்துப் படித்தால் தான் நன்றாக அதனைப் புரிந்து கொள்ள முடியும். இந்தச் சிரமத்தை எந்நூல்கள் ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்தே செய்கிறேன். மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும். இதற்குப் பதில் முதலாசிரியர்களின் முழு நூலையும் படித்திடலாமே, மேற்கோள்களை மட்டும் படிப்பதில் புரிதல் முழுயடையாதே என்று கேள்வி எழுப்பலாம்.

நேரடியாக நூலைப் படிப்பவர்கள் சந்திக்கின்ற சிக்கல்களை மனதில் கொண்டே நான் எழுதுகிறேன். நான் 30 ஆண்டுகளாக மார்க்சிய நூல்களைப் படித்து வருகிறேன். தமிழில் தான் படிக்கிறேன். ஒப்பிட்டுக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன். சில தோழர்கள் படிப்பதற்கு உதவி இருந்தார்கள் என்பது உண்மையே, என்றாலும் எனது படிப்புச் சுயமானதே. அதனால் அதிகச் சிக்கல்களைச் சந்தித்திருக்கிறேன். அந்தச் சிக்கல்களைப் புதியதாகப் படிப்பவர்கள் மற்றும் இதுவரை படித்தவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு உதவிடும் வகையில் இந்த மேற்கோள் எழுத்து பாணியைக் கடைப்பிடிக்கிறேன். இந்த எழுத்து பாணி வெற்றியடைந்துள்ளதை எதார்த்தத்தில் சந்தித்துள்ளதால், தேவைப்படும் வரை இந்த முறையைப் பின்பற்றுவேன்.

"குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற எங்கெல்ஸ் எழுதிய நூல் படிப்பதற்குச் சிரமமானதே. ஆனால் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூல் அந்தளவிற்குச் சிரமமானது அல்ல. இருந்தாலும் 10 ஆண்டுகள் தொழிற் சங்கங்களில் மற்றும் கட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தோழர்களே “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை தவறாப் படித்து புரிந்துள்ளனர்.

தொழிலாளர்களின் தன்னியல்பை(Spontaneity) மறுதலிக்கிறார், அவர்களின் வர்க்க குணாம்சத்தை வெளியில் இருந்து வருகிற அறிவுத்துறையினரிடம் இருந்துதான் பெறமுடியும் என்று லெனின் கூறியிருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். லெனின் தன்னியல்பு வழிபாட்டையே மறுதலித்துள்ளார். தன்னியல்பு என்பது கருவடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப் போராட்டமாகவே லெனின் கூறுகிறார். இதற்கான மேற்கோளை “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற எனது நூலில் காட்டவில்லை. தன்னியல்பு வழிபாட்டை மேற்கொள்கிற வலது, இடது போக்கை சுட்டுகிற லெனினது எழுத்தையே மேற்கோளாக இட்டுள்ளேன். இதனைக் குறிப்பிடுவற்கு காரணம் நான் நினைக்கிற அனைத்து மேற்கோள்களையும் நூலில் இடாமல் தேவைப்படுகிற எழுத்தையே மேற்கோள்களாக இட்டுள்ளேன். இந்த மேற்கோள்களை இணைக்கும் எனது எழுத்துக்கள் லெனின் கருத்தை புரிந்து கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. எனது புரிதலை நான் நூலாக்குவதைவிட லெனினது கருத்தை நேரடியாகப் புரிந்து கொள்வதற்கு உதவிடுவதே எனது முதன்மை நோக்கமாக இருப்பதனால் மேற்கோள்கள் அதிகம் இடம் பெறுகிறது.

“பொருளாதாரவாதிகளும் பயங்கரவாதிகளும் (Terrorism) வேறுவேறு வகைப்பட்ட தன்னியல்பையே வழிபடுகின்றனர். மார்க்சியத்தில் இருந்து விலகுகிற வலது இடது இரண்டுமே தொழிலாளர்களின் வர்க்க உணர்வுக்கும், அரசியல் உணர்வுக்கும் தடையாகிறது.

லெனின்:-“”பொருளாதாரவாதிகளும்” பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். “பொருளாதாரவாதிகள்” “சுத்தமான தொழிலாளர் இயக்கத்தின்” தன்னியல்பை வழிபடுகிறார்கள், புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைந்த முழுமையாகத் தொடர்புபடுத்துவதற்கு ஆற்றலோ வாய்ப்போ இல்லாத அறிவாளிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பைப் பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர்.” (என்ன செய்ய வேண்டும்? – பக்கம்- 104)

இத்தகைய தன்னியல்பு வழிபாட்டைச் சமூக-ஜனநாயகம் (கம்யூனிசம்) மறுதலிக்கிறது. பொருளாதாரவாதிகளும், பங்கரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சமூக-ஜனநாயகவாதிகள் மக்களிடம் இருந்தே தமது அரசியல் வேலைகளைத் தொடங்குகின்றனர்.

மக்களின் அதிருப்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் பயன்படுத்துவதிலும், ஒவ்வொரு கண்டன நடவடிக்கையையும் சிறந்த பயனளிக்கும் வகையில் திரட்டிப் பயன்படுத்திக் கொள்வதிலுல் சமூக-ஜனநாயகவாதிகள் திறம்பெற்றவர்களாக வேண்டும்.” (லெனின் வாழ்வும் படைப்பும்- அ.கா.ஈஸ்வரன் - பக்கம்-70)

இந்த இருண்டு தன்னியல்பு வழிபாட்டை, எனது சொந்த எழுத்துக்களில் மட்டும் எடுத்துக் கூறினால் படிப்பவர்கள் ஏற்றுக் கொள்வதில் உள்ள தடையை, இந்த மேற்கோள்கள் நீக்குகிறது. நான் புரிந்த லெனினை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதைவிட, லெனின் கூறியதை நேரடியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று வாசகர்களுக்கு வழிவிடுகிறேன். இந்தப் புரிதலுக்குத் தேவைப்படுகிற இணைப்பு வேலையை மட்டுமே நான் செய்கிறேன்.

அப்படி என்றால் மார்க்சியத்தைப் புரிந்து கெள்வதற்கு எந்த உதவியும் எனது எழுத்து செய்திடவில்லையா? என்ற கேள்வி எழுவது நியாயமே. எனது எழுத்துக்கள் மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை புரிந்து கொள்வதற்கு உதவுவதோடு, தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் துணைபுரிகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை மேற்கட்டமைப்பின் செயற்பாட்டை அடித்தளமே அமைத்துக் கொள்கிறது என்றகிற நிர்ணயவாதமாகப் புரிந்து கொள்வதை மறுப்பதற்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது என்கிற பரஸ்பர நிர்ணயவாததையும் மறுப்பதற்கும் எனது முதல் நூல் எழுதப்பட்டது.

 “சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிக் கூறியதை ஆதாரத்தோடு வலியுறுத்துகிறது. ஆதாரத்திற்கு மேற்கோள்களை இடமாமல் நிறுவமுடியது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், அல்லது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று மார்க்சும், எங்கெல்சும் தனித்த நூல் எதையும் எழுதவில்லை. இதுபற்றித் தாங்கள் எழுதிய நூல்களின் முன்னுரை, பின்னுரை, உள்ளடக்கத்தில் சில பகுதிகளில் கூறியிருக்கின்றனர். இதனை ஒன்றிணைத்து நிறுவுவதற்கு அனைத்து மேற்கோள்களையும் படித்தேயாக வேண்டும். ஒரு மேற்கோளை மட்டும் நூலின் உள்ளடக்கத்தில் பதிந்து மற்ற மேற்கோளை அடிக்குறிப்பில் நூல்களையும், அதில் உள்ள பக்க எண்களையும் மட்டும் குறித்தாலே போதுமானதுதான், ஆனால் அதில் பல நூல்கள் தற்போது கிடைப்பதில்லை. அந்நூல்களை வைத்திருப்பவர்களும் அதனைத் தேடி படிப்பதில்லை என்பதை மனதில் கொண்டே, அதாவது நம் நாட்டு பெரும்பான்மையான வாசகர்களின் வாசிப்பு முறையை மனதில் கொண்டே நூலின் உள்ளடக்கத்திலேயே மேற்கோள்களை நான் அதிகம் இடுகிறேன்.

எங்கெல்ஸ் தமது இறுதிகாலக் கடிதங்களில் அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரத்தை மறுதலித்தார் என்று தவறாக விளக்கம் கொடுப்பதை மறுப்பதற்கு, ஷ்மிட், ஜோ.பிலோக், பி.மேரிங் ஆகியோர்களுக்கு எழுதிய கடிதங்களின் பகுதியை நேரடியாக மேற்கோளிடாமல் எங்கெல்சின் கருத்தை நிறுவமுடியுமா?

இதுவரை சமூகம் கண்ட பொருளாதார அமைப்பை மார்க்ஸ் எவ்வகையில் விவரிக்கிறார் என்பதைப் பதினேழு பக்கத்தில் மேற்கோளிடாமல் எழுதியிருக்கிறேன். அதே போல், சமூக உணர்வுநிலையின் வடிவங்களான, அரசியல் சித்தாந்தம், பண்பாடு, கலைகள், தத்துவம் ஆகியவை விவரிக்கும் பகுதியில் மேற்கோள் எதுவும் இடப்படவில்லை. இப்பகுதியில் மதம், அறநெறி அகிய இருபகுதியில் மட்டும் தேவை கருதி மேற்கோள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் இதனை விளக்குவதற்கு மட்டுமே எழுதப்பட்டுள்ளதால் மேற்கோள்கள் தேவைப்படவில்லை. நிறுவும் வகையில் எழுதினால் மேற்கோள்கள் இடம்பெறதான் செய்யும். இந்தப் பகுதி “மார்க்சிய தத்துவம்” நூலில் இடம்பெறும் போது மேற்கோள்கள் இடமாலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் நோக்கத்தோடே பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் புரியாதவர்கள் தவறாகவே பேசுவார்கள்.

மார்க்சின் பிரபலமான மேற்கோளை (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை) முதல் நூலில் முழுமையாகப் பதிவிட்டு, அதனைப் பொழிப்பாகவும், பொழிப்பிலிருந்து சுருக்கமான சாரத்தையும் எழுதியுள்ளேன். இப்பகுதிகள் நான் மார்க்சியத்தை எந்தளவிற்குப் புரிந்துள்ளேன் என்பதைப் படிப்பவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது. எனது நூலுக்கான வாசகர்களை இது போன்ற பகுதிகளே அதிகரிக்கச் செய்துள்ளது.

“சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற எனது முதல் நூல் தமது குறிப்பிட்ட கடமையை முடித்துவிட்டதால், அந்த வடிவிலேயே மறுப்பதிப்பு வெளியிட வேண்டாம் என்று முடிவுசெய்து, மறுஅச்சிடப்படவில்லை. இதில காணும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற பகுதியை, “மார்க்சிய தத்துவம்” நூலில் பயன்படுத்திக் கொண்டேன். இந்நூல் உள்ளடக்கத்தில் மேற்கோள் இல்லாமல் எழுதப்பட்டது. தலைப்புகளில் மட்டும் மேற்கோள் ஒன்று இடப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவத்தை எதனடிப்படையில் எழுதுகிறேன் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலே மேற்கோள்கள் இடப்பட்டுள்ளது. இதனைக்கூட நூல் அச்சுக்கு அனுப்பும் போது தான் சேர்த்தேன். எனது நூல்கள் மேற்கோள்களால் நிறப்பட்டுள்ளது என்று குறைபட்டுக் கொள்பவர்கள், “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் மேற்கோள்கள் இடாமல் எழுதினேன் என்பதைச் சுட்டிக்காடடவும் இல்லை, அதற்கான காரணத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. இந்த நூலை தொடக்கநிலையில் உள்ள வாசர்களையும், படித்தவர்களுக்குத் தொகுப்பாகவும் இருக்கும் வகையில் எழுதியது அதனால் மேற்கோள்களை இடவில்லை. மார்க்சிய தத்துவத்தைக் குழப்புபவர்களின் கருத்தை முறியடிக்கும் வகையில் எழுதும் போது மேற்கோள்கள் அதிகமாக இடம்பெறும். இவ்வகையிலும் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது முதல் நூலை மேற்கோளுக்காகவே தேடிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்துப் பயனடைந்தவர்களுக்குப் புரிந்தது, என்மீது வசைபொழிபவர்களுக்குப் புரியவில்லை.

எனது இரண்டாவது நூல் “மதத்தைப் பற்றி மார்க்சியம்”. மதமும் மார்க்சியமும் என்ற பெயரில் தான் இது பற்றி எழுதுவது வழக்கம், ஆனால், “…பற்றி மார்க்சியம்” என்று நான் தலைப்பிட்டதற்குக் காரணம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூறியதை தொகுத்துத் தருவதே இந்த நூலின் நோக்கம். இதனை எனது முன்னுரையிலும் கூறியுள்ளேன். அவ்வாறு தொகுப்பது மட்டுமே இந்நூல் செய்திருக்கிறதா? இல்லை, மதம் பற்றிய மார்க்சிய கருத்தாக்கத்தைத் திரித்து விளக்குவதை மறுதலித்து, மார்க்ஸ் கூறியதை நிலைநிறுத்தியிருக்கிறது மற்றும் பல்வேறு நூல்களில் கூறியதை வரிசையாகத் தொகுத்து விளக்கப்பட்டுள்ளது.

ந.இரவீந்திரன் “மதமும் மார்க்சியமும்” என்ற தலைப்பில் எழுதிய நூலில் கூறியுள்ளார், “எது குறித்தும் முடிந்த முடிவான கருத்துகளை முன்வைக்காததைப் போன்றே மதம் குறித்தும் கறாரான தீர்ப்புக்கள் எதனையும் மார்க்சியம் வழங்கவில்லை”. இதனை மறுத்து எனது முன்னுரையில் கூறியுள்ளேன். “..மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூன்று மார்க்சிய முதலாசிரியர்களின், மதத்தைப் பற்றிக் கூறிய கறாரான கருத்துகள் இந்தச் சிறு படைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.” மதத்தன் தோற்றம், இன்றைய இருப்பு, இறுதியில் மறைவு ஆகியவை பற்றிக் கூறியதை தொகுத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தொகுப்போடு இந்நூல் நின்றுவிடவில்லை. மதம் மக்களின் அபினி என்கிற மார்க்சின் கருத்தை, “தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது.” என்று திரித்து விளக்கப்படுத்துவதை மறுதலித்து மார்க்ஸ், லெனின் மேற்கோள்காளால் மார்க்சிய கருத்து நிலைநிறுத்தப்படுகிறது. இதனை எனது புரிதலில் இருந்து விளக்குவதைவிட, முதலாசிரியர்களின் மேற்கோள்களால் விளக்குவதே சரியாக இருக்கும். இதனை என்மீது வசைவாரி பொழிபவர்கள் அறிந்து கொள்வது சிரமமே.

இந்து மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பகுத்தறிவுவாத நாத்திகமும் மார்க்சிய நாத்திகமும் பற்றிய சிறுஒப்பீடும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய தத்துவத்தினை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகப்பட்டுள்ளது. இது ஒரு தொடக்க முயற்சியே, இதனை விரிவாக்கி தனிநூலாக வெளியிடப்படும் என்று முன்னுரையில் கூறியுள்ளேன். இதன் தயாரிப்பாகத் தான் உபநிடதம், பிரம்ம சூத்திரம் போன்றவற்றை மறுவாசிப்பு செய்ததை முகநூலில் பகிர்ந்தேன். மார்க்சியம் எனக்கு 30 ஆண்டுகளாகப் பரிச்சியம் என்றால், இந்தியத் தத்துவம் 35 ஆண்டுகளாகப் பரிச்சியம். இந்தியத் தத்துவங்களை மூன்று விதமான அணுகுமுறையில் வாசித்திருக்கிறேன். எனது பள்ளிக்காலத்தில் ஆன்மீகவாதிகவும், கல்லூரிக் காலத்தில சமூக அக்கறையுடனும், பிறகு மார்க்சிய அணுகுமுறையிலும் படித்துள்ளேன்.

2014ஆம் ஆண்டு எனது இரண்டு நூல்கள் வெளிவந்தன, 1, மார்க்சிய தத்துவம், 2,மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும். மார்க்சிய தத்துவம் என்ற நூலை மேற்கோளகள் இடையிடையே இடமால், அத்தியாயத்தின் தொடக்கத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இரண்டையும் விவரிக்கிறது. ஒவ்வொன்றும் 500 பக்கத்தில் பொதுவாக எழுதப்பட்டுள்ள நிலையில், எனது நூல் இரண்டையும் சேர்த்து 100 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சுருக்கம் அவ்வளவு எளிதானதல்ல என்பது எளிதாகப் புரியக் கூடியதே.

இந்நூலைப் பற்றிப் பெண்ணியம் இணையஇதழில் (http://www.penniyam.com/2015/04/blog-post_66.html) தோழர் கொற்றவை, “மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே பேசுவதாக விமர்சிப்பவர்களுக்கு அதன் தத்துவார்த்த சிறப்பையும் நுட்பமாக விளக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது. தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் பொருள்முதல்வாதத் தன்மையை வரலாற்றுபூர்வமாக விளக்கிச் செல்கிறது இந்நூல். மற்ற தத்துவங்களிலிருந்து மார்க்சியம் எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை அறியாதவர்களுக்கு, அல்லது அறிந்தும் அதனைத் திரிப்பவர்களுக்குக் கராரான பதிலளிக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது.” என்று கூறியுள்ளார். எனது எல்லா நூலும் இதனடிப்படையிலேயே எழுதப்படுகிறது. அறியாதவர்கள் அறிய வைப்பது, அறிந்து திரிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தெளிவுபடுத்துவது இதுவே எனது எழுத்து முறையாகக் கொண்டுள்ளதால் திரிபை அம்பலப்படுத்துவதற்கு மேற்கோள்கள் அதிகம் பயன்படுத்துகிறேன். ஆனால் இந்நூலில் மேற்கோள்கள் பயன்படுத்தாமைக்குக் காரணம், முதலில் தத்துவத்தை அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு மற்றொரு நூலில் மார்க்சிய தத்துவம் பற்றிய திரிபை அம்பலப்படுத்தும் வகையில் மேற்கோள்கள் இட்டு எழுதப்படும். அப்போது மேற்கோள்கள் இடுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு மேல் இதனைப் புரிய வைக்கப் போராடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

"மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்” என்ற நூல் மேற்கோள்களுடன் கூடிய படைப்புகளை அறிமுகப்படுத்துவதாக மட்டும் கொள்ளமுடியாது. மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு பொருள்முதல்வாதியாக உருபெற்றார்கள், மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டம் எவ்வாறு வளர்ச்சியுற்றது, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எதனடிப்படையில், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது. இதனை முழுமையாகப் படித்து அனுபவித்த வாசர்களை அதிகமாகவே சந்தித்துவருகிறேன். இந்த மேற்கோள் பாணி எழுத்து பயனுள்ளதாக இருப்பதால், இதனடிப்படையிலேயே அடுத்து, “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலை எழுதினேன். இந்நூலையும் படித்தவர்கள் பயனடைந்ததாகக் கூறியதை தொடர்ந்து கேட்டுவருகிறேன். லெனின் வாழ்வின் அடிப்படையில் அவரது படைப்புகளை அறிவதோடு லெனினியம் தோன்றிய சூழலையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவிடுகிறது.

இந்நூலில், லெனினது “என்ன செய்ய வேண்டும்”, “இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்ற இரண்டு நூல்களைப் பற்றிய எனது மேற்கோள்களோடு கொடுக்கப்பட்ட விளக்கம் அதிகம் பேரைக் கவர்ந்துள்ளது. அதனால் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி நான் கவலைப் படப்பேவதில்லை.

லெனின் “அரசும் புரட்சியும்” என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களில் இருந்து மேற்கோள்கள் போடுவதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாதவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையேனும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிரயத்திற்கு வந்தடைய முடியும், இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நீரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.”

நான் அவர்கள் கூறியதை விவரிப்பதோடு தற்போது நிறுத்திக் கொள்கிறேன். சில இடங்களில் மட்டுமே சற்று விளக்கம் கொடுப்பேன். நான் புதியதாக விளக்குவதைவிட முதலில் அவர்கள் எழுதியதை விளக்க வேண்டும் என்பதே இன்றைய பணியாக மேற்கொண்டுள்ளேன்.

மண்ணிற்கேற்ற மார்க்சியம் பேசுபவர்கள், ஒவ்வொரு நாட்டிற்கும், தனிதனிப் பிரதேசத்திற்கும் தனியான மார்க்சியம் என்பதாகக் கூறி, அந்தந்த நாட்டில் காணப்படும் மார்க்சியத்திற்கு முரணான தத்துவங்களை மார்க்சியத்தோடு இணைத்திடும் போக்கை, லெனின் கட்டுரைகளைக் கொண்டு இந்நூலில் மறுதலிக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பிற்கு லெனின் எழுதிய 1) பிரெடெரிக் எங்கெல்ஸ் (1895) 2) நமது திட்டம் (1899) 3) மார்க்சிமும் திருத்தல்வாதமும் (1908) 4) மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (1910) 5) மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் (1913) 6)மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் (1913) 7) காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்) (1914) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மார்க்சிய அடிப்படைகளின் திரிபுகளை அம்பலப்படுத்தி விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் தேவையான மேற்கோள்கள் இல்லாமல் இதனை நிறுவமுடியாது.

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல்களை முடித்துவிட்டு இரண்டு பொருளாதார நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். மார்க்சின் “மூலதனம்” முதல் தொகுதி (1867) வெளிவந்து 150வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்த இரண்டு நூல்களையும் எழுதிவிட வேண்டும். முதல் நூல் “அரசியல் பொருளாதாரம்- ஓர் எளிய அறிமுகம்”. இரண்டாவது “மார்க்சின் பொருளாதார நெருக்கடிக் கோட்பாடும் சோஷலிசப் புரட்சியும்”. இதில் முதல் நூல் எந்தவித மேற்கோள்களும் இல்லாமல் எழுத இருக்கிறேன். ஆனால் இரண்டாவது நூல் மேற்கோள்கள் அதிகம் இடம்பெறும். அதற்கான மேற்கோள்கள் 70 பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதில் நான் விவரிப்பது எவ்வளவு, அப்படியே மேற்கோளாய் இடம்பெறுவது எவ்வளவு என்பது நூல் முடிக்கும் போதே தெரியும். மேற்கோள்கள் அதிகம் இடுவதின் நோக்கமும், மேற்கோளில்லாமல் எழுதுவதின் நோக்கமும் புரியாதவர்களே எனது எழுத்து முறையைக் கேலிசெய்து வருகின்றனர்.

பலர், மார்க்சியத்தைப் பல்வேறு வகையில் திரித்த வகையிலேயே புரிந்தும் எழுதியும் வருகின்றனர். இந்தத் திரித்தல்களை அம்பலப்படுத்தி மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்கே நான் எழுதுகிறேன். நான் கொடுக்கின்ற விளக்கங்கள் மார்க்சிய அடிப்படையிலானது என்பதை வாசகர்களுக்குத் தெளிவு ஏற்படுவதற்கும், அவர்கள் அதனை முழுமையாக, சுயமாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கு உதவிடும் வகையிலும் மேற்கோள்களைப் பயன்படுத்துகிறேன். தொடக்க நிலை வாசகர்களுக்கு எழுதும் போது மேற்கோள்கள் இல்லாது நேரடியாக எழுதுவேன். இதுவே எனது எழுத்து முறை.

பிரபலமான மேற்கோள்களைவிட அதிகமான மேற்கோள்கள் எனது நூலில் இடம்பெறுவதற்குக் காரணம், முதலாசிரியர்களின் நூலை சொந்தமாக வாசிக்க முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில், அந்நூல்களில் காணப்படும் அந்தந்த அத்தியாயத்தின் சாரத்தை அந்த நூலில் இருந்தே எடுத்து மேற்கோளாக இடுகிறேன். இந்தச் சாரத்தின் மேற்கோள்களைப் படித்துவிட்டு, அந்நூலை முழுமையாகப் படிப்பது சிரமத்தைக் குறைக்கும். இதனை அனுபவித்த பலர் என்னிடம் கூறியிருப்பதை மனதில் கொண்டே, இந்த எழுத்து முறையைத் தொடர்ந்து பின்பற்றுகிறேன். அதனால் எனது எழுத்துமுறையைக் கேள்விக்குள்ளாகக்குவதற்கு எதிராக எனது பாணியிலேயே தொடர்ந்து எழுதுவேன். வெற்றிப் பயணம் தொடரும். பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்


தற்போது “மார்க்சியம் என்றால் என்ன” என்ற நூலை கேள்வி-பதில் வடிவில் எழுதியிருக்கிறேன். 130 கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தேவைப்படுகிற கலைச்சொற்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலில் மேற்கோள்கள் தேவைப்படாததால் இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் “மார்க்சிய அடிப்படைகள்” என்ற தலைப்பில் இந்நூல் விரிவாக எழுதப்படும் அதில் மேற்கோள்களிட்டே மார்க்சியம் விவரிக்கப்படும்.  எதனை எவ்வாறு எழுத வேண்டும் என்ற எனது எழுத்து உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.

Thursday, 20 October 2016

பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- மார்க்ஸ் (நூல் அறிமுகம்)

பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- மார்க்ஸ்

விலை.ரூ.95/-

வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை


தொலை பேசி- 044-24332424, 24356935       
விற்பனை 044-24332924
"பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்ற நூலின் முதல் திட்டப்படி நான்காவது கட்டுரை "இங்கிலாந்தில் இன்றைய நிலை". இந்தக் கட்டுரை "புதிய ரைனிஷ் பத்திரிகை"யில் வெளிவரவில்லை. 1849 ஆண்டு நிகழ்ச்சிகள் மாகண்டத்தின் மீது ஏற்படுத்திய செல்வாக்கு மற்றும் இங்கிலாந்தின் நிலைமை போன்ற பிரச்சினைகளைப் பற்றி "புதிய ரைனிஷ் பத்திரிகை"யில் வெளிவந்த இதர கட்டுரைகளின் அடிப்படைகளைக் கொண்டு, 1895ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலை வெளியிடும் போது நான்காம் அத்தியாயமாக "1850ல் அனைவருக்கும் வாக்குரிமை ஒழிப்பு" என்று தலைப்பிட்டு வெளியிட்டார். மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் இந்தப் பகுதியில் இடம் பெறுகிறது. இதனை எங்கெல்ஸ் தமது முன்னுரையில் கூறுகிற முறையில் அறியலாம். முதல் மூன்று அத்தியாயத்தைப் பற்றி தமது முன்னுரையில் எங்கெல்ஸ் கூறுகிறார்:-

"..1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் மெய்யான தாயாக இருந்து வந்துள்ளது என்பதும், 1848 நடுப் பகுதிக்குப் பின்னர் படிப்படியாகத் திரும்பிவந்து கொண்டிருந்ததும், 1849 மற்றும் 1850ல் முழு மலர்ச்சி அடைந்ததுமான தொழில்துறை செழிப்பு புதிதாக வலுவாக்கப்பட்ட ஐரோப்பிய பிற்போக்கு நிலைக்கு புத்துயிர்பெற்ற சக்தியாக இருந்தது என்பதும் தெட்டத்தெளிவாகியது. அது தீர்மானகரமானதாக இருந்தது. முதல் மூன்று கட்டுரையில் புரட்சிகர சக்தியின் புதிய எழுச்சி விரைவில் ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்பு இன்னமும் காணப்பெற்றது,.."1

நான்காம் அதியாயத்தைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"..ஆனால், 1850 முன்பனிக் காலத்தில் வெளியான கடைசி இதழான, இரட்டை இதழில் (மே முதல் அக்டோபர் வரை) மார்க்சும் நானும் எழுதிய வரலாற்று விமர்சனம் இந்த பிரமைகளில் இருந்து முற்றாக முடிவாக முறித்துக் கொள்கிறது: "ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம் ஆகும். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது." ஆனால், செய்யப்பட வேண்டியிருந்த முக்கியமான மாற்றம் அது மட்டுமே. முந்திய அத்தியாயங்களில், அல்லது அவ்விடத்தில் நிறுவப்பெற்றதான காரணகாரியத் தொடர்புகளிலும், கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல்விளக்கத்தில் மாற்றப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள 1850ஆம் ஆண்டு மார்ச் 10லிருந்து இலையுதிர் காலம் வரையிலுள்ள கட்டுரைகளின் தொடர்ச்சி இதை நிரூபிக்கிறது. ஆகவே, இந்தப் புதிய பதிப்பில் இத்தொடர்ச்சியை நான்காவது கட்டுரையாக நான் சேர்த்துள்ளேன்."2

ஜூன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளிவர்க்கத்துக்கு எதிராக திரும்பியதைப் பற்றி மார்க்ஸ் "அப்போது முதலாளித்துவ வர்க்கப் பாரிஸ் தீப அலங்கார வீழா நடத்தியது, அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கப் பாரிஸ் எரிந்தது, இரத்தம் சிந்தியது, மரண வேதனையில் அவதியுற்று அரற்றியது. முதலாளித்துவ வர்க்கத்துக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே பொதுவான நலன்கள் இருந்த காலம்வரை மட்டுமே இந்த சகோதரத்துவம் நீடித்தது."3

மேலும், மார்க்ஸ் அந்தப் புரட்சிகர எழுச்சி, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்குமான போராக இறுதியில் மாறிவிடும் என்று நினைத்தார். இது நிகழாமல் போய்விட்டது.

"1848 பிப்ரவரி 25 பிரான்சுக்கு குடியரசை வழங்கியது, ஜூன் 25 அதன் மீது புரட்சியைத் திணித்தது, ஜூனுக்குப் பிந்திய புரட்சி என்பதன் அர்த்தம் முதலாளித்துவ சமூகம் வீழ்த்தப்படுதல் என்பதாகும், அப்படியிருக்க பிப்ரவரிக்கு முன்னால் இதன் அர்த்தம் அரசாங்கத்தின் வடிவத்தை வீழ்த்துவது என்பதாகும்.

ஜூன்  போராட்டத்துக்கு முதலாளிவர்க்கத்தின் குடியரசுவாதிப் பிரிவு தலைமை தாங்கியது, அது வெற்றி பெற்றது அரசியல் அதிகாரம் தவிர்க்க முடியாதபடி அதன் வசம் கிட்டியது."4

ஆனால் நிலைமை மாறிவிட்டது. இதனை எங்கெல்ஸ் நான்காம் அத்தியாயத்திற்கு முகவுரையாக எழுதியுள்ளார்:-

""புதிய ரைனிஷ் பத்திரிகை"யின் இறுதியாக வெளிவந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது இரட்டை இதழின் விமர்சனத்தில் முதல் மூன்று அத்தியாயத்தின் தொடர்ச்சி காணப்படுகிறது. 1847ல் இங்கிலாந்தில் வெடித்தெழுந்த மாபெரும் வாணிக நெருக்கடி முதலில் வருணிக்கப்பட்ட பின்னர், 1848 பிப்ரவரி மார்ச் புரட்சிகளில் ஐரோப்பா மாகண்டத்தில் அரசியல் சிக்கல்கள் முன்னணிக்கு வந்தது. அங்கு அதன் எதிர்விளைவுகள் மூலம் விளக்கப்பட்ட பின் 1848ஆம் ஆண்டின் போது வாணிகம் மற்றும் தொழில் துறையின் செழிப்பு எவ்வாறு அங்கு மீண்டும் ஏற்பட்டு 1849ல் மேலும் கூடுதலாக அதிகரித்தது என்பதும், இது புரட்சிகர எழுச்சியை முடமாக்கி, உடன் இணைவாகப் பிற்போக்கின் வெற்றிகளை சாத்தியமாக்கியது என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது."5

பிற்போக்கின் வெற்றிக்குப் பிறகு புரட்சிகர எழுச்சி முடங்கிப் போனதைத் தொடர்ந்து, நான்காம் அத்தியாயத்தில், எதிர்காலத்தில் வரப்போகிற புரட்சிகர சூழ்நிலைக்கு,  புறநிலைக் காரணமான பொருளாதார நெருக்கடியின் அவசியத்தை, வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின்படி விவரித்துள்ளார்கள்:-
"முதலாளித்துவ உறவுகளின் அகத்தே ஆகச் சாத்தியமான அளவுக்கு செழுமையுற்று வளரும் முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகளைக் கொண்டு விளங்கும், இந்தப் பொதுவான செழுமை ஏற்பட்டதோடு மெய்யான புரட்சி பற்றிய பேச்சுக்கே இடமில்லை. நவீன உற்பத்தி சக்திகள் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி வடிவங்கள் எனும் இந்த காரணிகள் இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் காலப்பகுதிகளில் மட்டுமே இத்தகைய ஒரு புரட்சி சாத்தியமாகும்.

மாகண்டத்தின் முறைமைக் கட்சியின் தனிப்பட்ட பிரிவுகள் இப்போது ஈடுபட்டும் மற்றும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தும் வரும் பல்வேறு பூசல்கள் புதிய புரட்சிகளுக்கு எவ்வகையிலும் சந்தர்ப்பம் அளிப்பனவாக இல்லை. ஆனால் நேர்மாறாக, உறவுகளின் அடிப்படை தற்காலிகமாக மிகவும் பத்திரமாக இருப்பதாலும் மிகவும் முதலாளித்துத் தன்மை கொண்டதாக இருப்பதாலும் மட்டுமே இந்தப் பூசல்கள் சாத்தியமாகின்றன. இது பிற்போக்கு சக்திகளுக்குத் தெரியாது.

முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல பிற்போக்கு முயற்சிகளும், ஜனநாயகவாதிகளின் அனைத்து தார்மிக ஆக்ரோஷமும் எல்லா உற்சாகமான பிரகடனங்களுக்கும் ஏற்பட்டது போலவே அதே அளவு நிச்சயமாக எதிர் தாக்குதலுக்கு இலக்காகும். ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது."6 

பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறும் என்று தவறாக எதிர்பார்த்த மார்க்ஸ், தமது தவறுக்கான புறநிலைமைகள் மாறிவிட்டதை அறிந்த பின்பு, தமது கருத்தை மாற்றிக் கொண்டு, அடுத்த பணியில் இறங்கிவிட்டார். அப்பணி என்னவென்றால், நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், மற்றும் தொழிலாளர்களின் தன்னியல்பான கம்யூனிசம் ஆகியவற்றில் இருந்து தனியாக வேறுபடுத்தி, வளர்த்தெடுத்து, முறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான சோஷலிசத்தை பாட்டாளி வர்க்கத்துக்கு அளித்துள்ளார் என்பதாகும். ஆனால் மார்க்ஸ் மீது அவதூறு செய்பவர்கள் இதனை கண்டுகொள்ளாமல், அவர் கூறியவற்றில் பாதியை மட்டும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கூறிவருக்கின்றனர். "மார்க்ஸ் தவறிழைத்து விட்டார்" என்று கூறியதையே கூறும் நண்பர்களுக்கு மார்க்ஸ் வளர்த்தெடுத்ததில் அக்கறையில்லாமல், அவதூறை மட்டுமே இன்றுவரை தொடர்ந்து முன்வைக்கின்றனர்.

நூலின் உள்ளே காணப்படும் விளக்கங்களுக்கு மேல்விவரமாக எங்கெல்ஸ் இந்நூலின் முன்னுரையில் (1895) தெளிவுபடுத்தியவை இத்தகைய அவதூறை தவிடுபொடியாக்குகிறது.

எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் கூறப்பட்டவை:-

“உடன்நிகழ்கின்ற வரலாற்றின் ஒரு பகுதியை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்க எடுத்த முயற்சியில் மார்க்ஸ் எழுதிய "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை" என்னும் நூல் முதல் இடம் பெறுகிறது. "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்" மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் நவீனகால வரலாறு, இந்தக் கோட்பாட்டின்படி ஒரு பொதுவான பார்வையில் எழுதப்பட்டது. வரலாறு பற்றி பொருள்முதல்வாதம் என்பது, இறுதிப் பகுப்பாய்வில் பொருளாதாரக் காரணங்களின் விளைவாக அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதையே குறிக்கிறது.

நடப்புகால வரலாற்றின் நிகழ்ச்சிகளும் நிகழ்ச்சித் தொடர்களும் மதிப்பிடப்படும் போது இறுதியான பொருளாதாரக் காரணங்களை சென்றடைவது சாத்தியமல்ல. தொடர்ந்து மாறிவரும் காரணிகளில் மிகவும் முக்கியமான காரணிகள் மேல்மட்டத்தில் அவை வன்மையான முறையில் திடீரென்று தம்மை வெளிப்படுத்துவதற்கு முன்பாக பொதுவாக நீண்ட காலத்துக்கு ரகசியமாகவே செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்கான பொருளாதார வரலாற்றின் ஒரு தெளிவான மதிப்பீட்டை உடன்நிகழ்வான முறையில் பெறுவது கடினம். ஆதார விவரங்களைத் திரட்டி சலித்தாராய்ந்ததின் பின்னால் மட்டுமே இது சாத்தியப்படும். இதற்குப் புள்ளி விவரங்கள் அவசியமான துணை சாதனங்களாக இருக்கின்றன. மேலும் இவை எப்போதும் காலாகாலத்தில் கிட்டுவதில்லை.

ஆராயவேண்டிய எல்லாப் போக்குகளின் அடிப்படையான பொருளாதார நிலையின் சமகால மாற்றங்களைத் தவிர்க்க முடியாதபடி கவனிக்காமல் விட்டுவிடுவது, பிழைக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் சமகால வரலாற்றை ஆராய்வதற்கு இவை யாரையும் தடுத்துவிடவில்லை. மார்க்ஸ் இந்தப் படைப்பை எழுதும் போது மேலே குறிப்பிட்ட பிழையின் ஆதாரம் இன்னும் அதிகப்படியாகத் தவிர்க்க இயலாததாக இருந்தது. 1848-49ஆம் ஆணடுகளின் புரட்சிக் காலகட்டத்தில், நடைபெறும் பொருளாதார மாற்றங்களைக் கண்டுணர்வதோ அல்லது அவற்றைக் கருத்தில் வைத்திருப்பதோ அறவே சாத்தியம் அற்றதாக இருந்தது. 1849-50 ஆம் ஆண்டு வரையிலும் இதே நிலைமை தான் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில் தான் மார்க்ஸ் இந்த நூலை எழுதத் தொடங்கினார்.

பாதகமான சூழ்நிலையிலும், பிப்ரவரி புரட்சிக்கு முன்பு பிரான்சில் நிலவிய பொருளாதார நிலைமை மற்றும் பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தியதான அந்த நாட்டின் அரசியல் வரலாறு ஆகிய இரண்டையும் குறித்த மார்க்சின் துல்லியமான அறிவு நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு சித்திரத்தை வழங்குவதைச் சாத்தியமாக்கியது. இந்தச் சித்திரம் அன்று முதல் இன்று வரை எவரும் அடைய முடியாததோர் அளவுக்கு அவைகளின் உள்ளார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்திக் காட்டியது. இதற்கு பின்னால் மார்க்ஸ் தாமே பிரயோகித்த இரட்டைச் சோதனையில் வென்று தேறியது.

1850க்குப் பின்னர் மார்க்ஸ் மீண்டும் ஒருமுறை பொருளாதார ஆராய்ச்சிகள் செய்தவதற்கு ஓய்வு நேரம் கிடைத்தது. கடந்த பத்து ஆண்டு காலத்திய பொருளாதார வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார் என்பதில் அவரது முதல் சோதனை அமைந்தது. இதன் மூலம் தொடர்ச்சியில்லாத ஆதாரங்களின் மீதும், பாதி ஊகத்தின் மீதும் அனுமானித்தவைகள் இப்போது உண்மையான விவரங்களின் அடிப்படையில் தெள்ளத்தெளிவாக மார்க்சுக்கு விளங்கிற்று.

1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி-மார்ச் புரட்சிகளின் மெய்யான தாயாக இருந்து வந்துள்ளது, 1848ஆம் ஆணடின் நடுப்பகுதிக்குப் பின்னர் அது படிப்படியாக செழுமை நிலைக்கு திரும்பிவந்து கொண்டிருந்தது, 1849 மற்றும் 1850ஆம் ஆண்டுகளில் முழு மலர்ச்சி அடைந்ததுமான தொழிற்துறை புதிதாக வலுப்படுத்தப்பட்ட ஐரோப்பிய பிற்போக்கு சக்திகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் சக்தியாக இருந்தது என்பதும் இதன் மூலம் தெட்டத்தெளிவாகியது.

இந்நூலின் முதல் மூன்று கட்டுரைகளில் புரட்சிகர சக்திகளின் புதிய எழுச்சி விரைவில் ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்பு இன்னமும் காணப்பெற்றது. 1850ஆம் ஆணடில் இறுதி வெளியீடான இரட்டை இதழில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய விமர்சனம் இந்தப் பிரமைகளில் இருந்து தீர்மானகரமாக முறித்துக் கொள்கிறது.

நான்காம் அத்தியாயத்தில் "ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது." இது ஒன்றுமட்டுமே செய்யப்பட வேண்டிய பெரிய மாற்றமாக இருந்தது. முந்திய அதிகாரங்களிலும் அவைகளில் நிலைநிறுத்தப்பட்ட காரணகாரியத் தொடர்புகளிலும், கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிய விமர்சனத்திலும் மாற்றப்படுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை

அவர் எதிர்கொண்ட இரண்டாவது சோதனை மேலும் கடினமானதாகும். 1851 டிசம்பர் 2ஆம் தேதி லுயீ போனப்பார்ட் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் உடனடியாக, 1848 பிப்ரவரி முதல், தற்போதைக்கு புரட்சிகரக் காலகட்டத்தை முழுமையாக நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி வரையிலான பிரான்சின் வரலாற்றை மார்க்ஸ் புதியதாக "லுயீ போனப்பாட்டின் பதினெட்டாவது புரூமேர்" என்ற நூலில் எழுதினார்.

இந்தச் சிற்றேட்டில் மிகவும் சுருக்கமாகவே என்றாலும், நமது இந்தப் பிரசுரத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதி மீண்டும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்குப் பின்னால் நிகழ்ந்த தீர்மானகரமான சம்பவத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதான இந்த இரண்டாம் விளக்கத்தை நமது விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்றுவதற்கு என மிகச் சொற்பமே இருந்தது என்பது தெரியவரும்.”

மார்க்ஸ் எழுதிய இந்தப் படைப்புக்கு உள்ள சிறப்பியல்பு என்னவென்றால், உலகின் எல்லா நாடுகளது தொழிலாளர் கட்சிகள் பொருளாதார மாற்றத்துக்கான தமது கோரிக்கையை சுருக்கமாக தெரியப்படுத்திய வழிமுறையை முதன்முறையாக வெளியிட்டதேயாகும். சமூகம் உற்பத்தி சாதனங்களை தன்வயப்படுத்திக் கொள்வதாகும். அதாவது சமூக உடைமையாக்கப்படுதலைக் குறிப்பதே இந்த சிறப்பியல்பாகும். இதனை மார்க்ஸ் இரண்டாம் அத்தியாயத்தில் கூறுகிறார்:- "..வேலை செய்யும் உரிமையின் பின்னால் மூலதனத்தின் மீதான அதிகாரம் நிற்கிறது."

மூலதனத்தின் மீதான அதிகாரத்துக்குப் பின்னால் உற்பத்தி சாதனங்கள் தன்வயப்படுத்துவதும், அவை ஒன்றிணைந்த தொழிலாளி வர்க்கத்தின் கீழ் வைக்கப்படுவதும், எனவே கூலி உழைப்பும் மூலதனமும் மற்றும் அவற்றின் பரஸ்பர உறவுகளும் ஒழிக்கப்படுவதும் இதில் அடங்கியிருந்தன. இந்தக் கருத்துரையில்தான் நவீன தொழிலாளியான பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாடாக விஞ்ஞான சோஷலிசம் நிறுவப்படுகிறது. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், மற்றும் தொழிலாளர்களின் தன்னியல்பான கம்யூனிசம் ஆகியவற்றில் இருந்து தனியாக வேறுபடுத்தி, முதல்முறையாக விஞ்ஞான சோஷலிசம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் பாட்டாளி வர்க்கப் புரட்சி உடனடியாக ஏற்படப் போகிறது என்ற தவறான கணிப்புக்குப் பின்னணியில் அமைந்த காரணங்களை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துச்சொல்லி, அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்துக்கான செயல்தந்திரங்களையும் வகுத்துக் கொடுத்த பின்பும் மார்க்ஸ தவறு செய்துள்ளார் என்பதாக வரலாற்று நிகழ்வின் முதல்பாதியை மட்டும் ஒருதலைப்பட்சமாக முன்னிறுத்தி, மார்க்சையும் அவரது வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் தவறாக சிலர் சித்தரிக்கின்றனர். இந்த அவதூறு இன்றும் தொடர்கிறது.

அந்த அவதூறு இவ்வழியிலேயே அமைந்துள்ளது:-
'இறுதி உண்மையைக் கண்டுவிட்ட ஞானிகளாக மார்க்சும், எங்கெல்சும் தங்களை எப்போதுமே கருதிக் கொண்டதில்லை என்பது தெளிவு. உண்மையைக் கண்டடைவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிவியல் ஆய்வாளர்களாகவே அவர்கள் தங்களைக் கருதினார்கள். அந்தப் பொருளில்தான், மார்க்சிய வரலாற்று மாணவர்கள், இந்த நூலாசிரியர் உட்பட, வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையை ஏற்றுக் கொள்கின்றார்கள். வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் வரலாற்றைப் பயிலும், வரலாற்று ஆய்வில் ஈடுபடும் எவரொருவரும் இந்தக் கண்ணோட்டத்தைப் பின்பற்றாத மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக்கொணரும் வரலாற்று உண்மைகளை அலட்சியப்டுத்தக் கூடாது.'

மாறாத அந்த இறுதி உண்மையைக் கண்டுவிட்ட மகானாக தம்மைப் பற்றி அவர்கள் கூறிக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் சமூக வளர்ச்சி அடிப்படையினாலான மாற்றத்தின் விதியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். வரலாறை விஞ்ஞான பூர்வமாக அணுகுவதற்கான - அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாத- கண்ணோட்டத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட அவதூறு செய்பவர்களின் தொனி மார்க்சும் தவறு செய்வார் என்றும் எனவே வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் தவறு செய்யும் என்பதாகவும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிப் பற்றிய, அணுகுமுறையைப் பொறுத்தவரை அவர் தீர்க்கமுடியாத தவறெதும் செய்திடவில்லை, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஒன்றும் குறைப்பிரசவமில்லை.

எங்கெல்ஸ் தனது முன்னுரையில் கூறியது போல் இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்களில் 1847ஆம் ஆண்டின் உலக வாணிக நெருக்கடியே பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் தோற்றமாக இருந்தது. ஜூன் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்ஸ் எதிர்ப்பார்த்தபடி புரட்சி தொடரவில்லை, புரட்சியின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்த வாணிக நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது, என்று கூறியுள்ளார். நான்காம் அத்தியாயத்தில், ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது என்று கூறியுள்ளார். இதனைத் தனது முன்னுரையில் மிகத் தெளிவாக விவரித்தும் உள்ளார் எங்கெல்ஸ். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத பலர், இன்றும் கூட மார்க்ஸ் தவறு செய்துவிட்டார். வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் தவறு செய்யும் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

பயன்படுத்திய நூல்கள்

1.பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- முன்னுரை, மார்க்ஸ்
எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1- பக்கம் 96)
2.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- முன்னுரை, மார்க்ஸ்
                                                                                எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 1- பக்கம் 96-97)
3.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள்  தொகுதி 2- பக்கம் 169-170)
4,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள்  தொகுதி 2- பக்கம் 174)
5.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை- தேர்வு நூல்கள் தொகுதி 2- பக்கம் 288)
6.,பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை"- தேர்வு நூல்கள் தொகுதி 2- பக்கம் 293-294