Saturday, 28 January 2017

மார்க்சியமும் மொழியியலும்

-லெனின், ஜே.வி.ஸ்டாலின்
தமிழில்: பாரதி

விலை- ரூ.70/-

புதுமைப் பதிப்பகம்,
61.2, பாரதி சாலை,
ஜாம் பஜார் சாலை, திருவல்லிக்கேணி,

சென்னை- 600 005
புதிமை பதிப்பகத்தின் புதிய வெளியீடாக “மார்க்சியமும் மொழியியலும்” என்ற நூல் வந்துள்ளது. இந்நூல் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட பேட்டிகள், கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக லெனினது இரண்டு சிறு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளன. மொழி மீதான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்நூலைப் படித்தறிந்து கொள்ளத் துணைபுரிகிறது.

ஸ்டாலின் தன்னடக்கத்துடன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். தான் மொழியியல் வல்லுணர் இல்லை எனினும் மொழியியலைப் பற்றிய மார்க்சிய நிலைப்பாடு என்பது, மற்ற சமூக விஞ்ஞானங்களைப் போன்று எமது துறையுடன் ஓரளவு நேரடியான தொடர்புடையதே என்கிறார்.

மொழியை மேற்கட்டமைப்புக்கு உரியதாகக் கருதுகிற போக்கை மிக மோசமான தவறு என்கிறார் ஸ்டாலின். இதனை விளக்குவதற்கு ருஷ்ய சோஷலிசப் புரட்சியோடு அதற்கு 30ஆண்டுக்கு முந்திய முதலாளித்துவ அடித்தள அமைப்பை ஒப்பிட்டுக் காட்டுகிறார். புரட்சியின் போது முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தோடு அதன் மேற்கட்டமைபும் தூக்கி எறியப்பட்டுச் சோஷலிச அடித்தள அமைப்பிற்குப் பொருத்தக்கூடிய ஒரு புதிய மேற்கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ அரசியல், நீதி மற்றும் இதர நிறுவனங்கள் இருந்த இடத்தில், சோஷலிசத்துக்குப் பொருத்தமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் ருஷ்ய மொழியானது சோஷலிசப் புரட்சிக்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மொழியை உற்பத்திக் கருவிகளுடன் ஒப்பிட்டு இரண்டும் முதலாளித்துவ அமைப்பிற்கும் சோஷலிச அமைப்பிற்கும் சமமாகவே சேவை செய்கின்றதை எடுத்துக் காட்டியுள்ளார். புஷ்கின் படைப்புகள் எழுதிய பின்பு, நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் தூக்கி எறியப்பட்டு மூனறாவதாக ஒரு சோஷலிச அமைப்பும் உருவாகிவிட்டப்பிறகும் ருஷ்ய மொழியில் எந்தவொரு அடிப்படையான மாற்றமும் அடையவில்லை என்பதை ஸ்டாலின் கூறுகிறார்.

“எல்லா இடங்களிலும் கணங்களின் மொழியிலிருந்து பழங்குடிகளின் மொழியாகவும், பழங்குடிகளின் மொழியிலிருந்து தேசிய இனங்களின் மொழியாகவும், தேசிய இனங்களின் மொழியிலிருந்து தேசிய மொழியாகவும் மாறிய இந்தவளர்ச்சிப் போக்கின் எல்லாக் கட்டங்களிலும், ஒரு சமூகத்தில் உள்ள மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துகின்ற சாதனம் என்ற வகையில் மொழியானது, அந்தந்தச் சமூகத்தின் ஒரே பொதுவான மொழியாகவே விளங்கி வந்திருக்கிறது. சமூகத்தின் உறுப்பினர் அனைவருக்கும் அவர்களின் சமூக அந்தஸ்தைப் பற்றிக் கவலைப்படாமல் சமமாகவே பணியாற்றி வந்திருக்கிறது” (பக்கம்- 31-32)

மொழி வர்க்க சார்புடையது கிடையாது அதனால் அடித்தள மாற்றத்தோடு மொழி மாற்றம் பெறுவதில்லை. குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மொழி உருவாக்கப்படவில்லை. சமூகத்தில் காணப்படும் அனைத்து வர்க்கங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மொழியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஏதாவது ஒரு பழைய அல்லது புதிய அடித்தள அமைப்பின் படைப்பல்ல. அதற்கு மாறாக, சமூகத்தின் வரலாறு முழுவதாலும், பல நூற்றாண்டுகளாக இருந்து வந்து பல அடித்தள அமைப்புகளின் வரலாறு முழுவதாலும் உருவாக்கப்பட்டதாகும் என்கிறார் ஸ்டாலின்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின் ருஷ்ய சொற்தொகுதியில் குறிப்பிட்ட அளவு மாற்றம் பெற்றது. பல பழைய சொற்களின் பொருள் மாறி புதிய முக்கியத்துவம் அடைந்தது. தேவையற்ற சொற்கள் மறைந்துபோயின. புதிய சோஷலிச உற்பத்தி முறையினால் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டது. முதலாளித்துவ அமைப்பு தூக்கி எறியப்பட்ட பிறகு, ஒரு புதிய அடிப்படை சொற்தொகுதியாலும், புதிய இலக்கண அமைப்பாலும் முற்றிலும் அகற்றப்படுவதற்கு மாறாக ருஷ்ய மொழியில் முழுமையாகப் பேணப்பட்டதோடு, கடுமையான மாற்றங்களுக்கு உட்படவில்லை என்கிறார் ஸ்டாலின்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கருத்துக்களை நூலின் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அது எந்தக் காலத்தில், எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதையும் அதற்கு மேலேயும் கீழேயும் என்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பாராது “மேற்கோள்களுக்கு” தவறான விளக்கம் கொடுப்பதை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி மறுக்கிறார் ஸ்டாலின்.

மார்க்சியத்தை வறட்டுச்சூத்திரமாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதைப் பலநேரங்களில் அறிவுறுத்தப்பட்ட ஒன்றே. இங்கே ஸ்டாலினும் வலியுறுத்துகிறார்.

“மூல நூலை ஒப்புவிப்போரும், பாராயணம் செய்வோரும் சமூக வளர்ச்சி நிலைமைகளில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் மார்க்சியமும், மார்க்சியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளும் கருதுகோள்களும் எப்போதும் மாறாதவை என்று கருதுகிறார்கள். இந்தக் கருதுகோள்களையும் முடிவுகளையும் மனப்பாடம் செய்துவிட்டு அவ்வப்போது மேற்கோள் காட்டிவிட்டாலே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம். அந்த முடிவுகளும் கருத்துகளும் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் வாழ்க்கையின் எல்லாச் சந்தப்பங்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் என்று கருதுகிறார்கள், மார்க்சியத்தின் சாராத்தைப் பாராமல் அதன் சொற்களை மட்டுமே பார்க்கின்ற மார்க்சியத்தின் முடிவுகளையும் கருதுகோள்களையும் அதன் பொருளை உணராமல் மனப்பாடம் செய்பவர்களே இவ்வாறு கருதுவார்கள்,” (பக்கம் - 81)

பூர்ஷ்வாக்கள் ‘அவர்களுக்குச் சொந்தமான மொழியைக்’ கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மொழி பூர்ஷ்வாக்களால் உருவாக்கப்பட்டது என்றும் மார்க்ஸ் கூறிய மேற்கோளைப் பிடித்துக் கொண்டு, மொழியின் வர்க்க இயல்பை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டது போல் புரிந்து கொள்கின்றனர். இதனை ஸ்டாலின் மறுத்து இதே கட்டுரையில் மற்றொரு இடத்தில் அரசியல், பொருளாதாரப் பிடிப்பின் காரணமாகக் கிளைமொழிகள் ஒரு தேசிய மொழியின் பிடிக்குள் வருவதைப் பற்றிக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையே ஸ்டாலின் வேறொரு இடத்தில், வர்க்கங்கள் மொழியைப் பாதிக்கின்றன, அவற்றிற்கே உரிய சொற்களையும் வெளிப்பாடுகளையும் மொழியில் புகுத்துகின்றன. சில நேரங்களில் ஒரே சொல் வெவ்வேறு விதமான பொருளைக் கொள்கின்றன என்பதில் ஐயமில்லை. இதனால் அனைத்து மக்களுக்கு உரிய ஒரு பொது மொழியின் வளர்ச்சிக்கு தடையாகவோ, அல்லது அதன் சிறப்புத் தன்மையை மாற்றி விடுமென்றோ பொருள் கொள்ள முடியாது என்கிறார். இதுபோன்ற தவறான புரிதல்களை இந்நூலில் ஸ்டாலின் சரிபடுத்துகிறார்.

பக்கம் 74-75ல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்றுபட்டு கூட்டாகத் தாக்கினால் சோஷலிசப் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் கூறியதற்கும், தனிநாட்டில் சோஷலிசப் புரட்சி தோன்றுவது பற்றிய லெனினது கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஸ்டாலின் இந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற மார்க்சிய அறிஞர்கள் கூறுவதைப் போல மொழியானது ஒரு சமூகத்தின் மக்களிடையே தொடர்பு கொள்ளக்கூடிய கருவியாகவே இருக்கிறது, அந்தச் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் சமமாகவே பயன்படுகிறது என்று இந்நூலில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை மட்டும் அறிந்த தமிழ்நாட்டில் பலர், மார்க்சியம் மொழியை வெறும் ஊடகசாதனமாக மட்டுமே பார்க்கிறது என்று விமர்சிக்கின்றனர். ஊடக சாதனம் என்பதை இவர்கள் தான் மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். மொழி, மனிதகுல வரலாற்றில் எவ்வகையில் எல்லாம் ஊடகமாகப் பயன்பட்டுள்ளதை ஸ்டாலின் எடுத்துக்காட்டியுள்ளார்.

“மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் விலங்கு உலகத்திலிருந்து தோன்றுவதற்கும், சமூகங்களாக இணைவதற்கும், அவர்கள் சிந்தனையை வளர்ப்பதற்கும், சமூக உற்பத்தியை ஒழுங்கமைப்பதற்கும், இயற்கை சக்திகளை எதிர்த்து ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கும், நாம் இப்போதுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கும் உதவி செய்த சக்திகளுள் பேசும் மொழியும் ஒன்றாகும்.” (பக்கம்- 71-72)

மேலும், உற்பத்தியிலும், பொருளாதார உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும் மொழி இணைந்து செயல்படுவதற்கு ஒன்று திரட்டும் சாதனமாக இருப்பதையும் இந்தச் சிறப்பியல்பு மொழிக்கு மட்டும் இருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மற்ற சமூக அம்சங்களிலிருந்து மொழியை வேறுபடுத்துகின்ற மொழிக்குரிய சிறப்பியல்புகள் யாவை?

மக்களுக்கிடையே தொடர்பு கொள்ளும் சாதனமாகவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மனிதச் செயல்பாட்டின் அனைத்துத் துறைகளிலும், உற்பத்தியிலும், பொருளாதர உறவுகளிலும், அரசியலிலும், கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், அன்றாட வாழ்விலும் இணைந்து செயல்படுவதற்காக ஒன்று திரட்டும் சாதனமாகவும் மொழி விளங்குகிறது. இந்தச் சிறப்பியல்புகள் மொழிக்கு மட்டுமே உண்டு.” (பக்கம்- 60)

“தேசிய கலாச்சாரம்” என்பது முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையாகும். இதனைப் பல கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளாமல், தேசிய கலாச்சாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். “பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் முழுக்கம் ‘தேசியவாத கலாச்சாரம்’ அல்ல, மாறாக அது சர்வதேசிய ஜனநாயகக் கலாச்சாரமும், உலகு தழுவிய பாட்டாளி வர்க்க இயக்கமும் ஆகும்.” (பக்கம் 88)

இந்தப் பாட்டாளி வர்க்க சர்வதேச சிந்தனையோடு ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 காங்கிரசில், எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஒரே உலக மொழியைப் பற்றிக் கூறியுள்ளார். சோஷலிசம் நிலைபெற்ற பிறகு தேசிய மொழிகள் தவிர்க்க முடியாமல் ஒரு பொது மொழியாக இணையும். தேசிய மொழிகளில் இருந்து வளம்மிக்க, ஒன்றுபட்ட மண்டல மொழிகள் முதலில் உருவாகும். அதன் பிறகு மண்டல மொழிகள் (zonal languages) அனைத்தும் ஒரு சர்வதேச மொழியாக இணைந்துவிடும். ஆனால் இந்தச் சர்வதேச மொழி ருஷ்ய மொழியாகவோ, ஜெர்மன் மொழியாகவோ, ஆங்கில மொழியாகவோ இருக்காது. மாறாக, இந்தப் புதுமொழியானது. தேசிய, மண்டல மொழிகளின் சிறப்பான கூறுகள் அனைத்தையும் கொண்ட ஒரு புதுமொழியாக விளங்கும்.

இந்த ஸ்டாலினது கூற்றுச் சர்வதேசியவாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்காது, ஆனால் “தேசிய கலாச்சாரம்” என்பதை முன்வைக்கிற தோழர்களுக்கு எற்படும் அச்சரியத்தைத் தவிர்க்க முடியாது.

லெனினது இரண்டு சிறு கட்டுரைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் மொழியைப் பற்றி மார்க்சியவாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை இருக்கின்றன. “கட்டாய அலுவல் மொழி அவசியமா?” என்ற கட்டுரையில் லெனின், “ருஷ்ய மார்க்சியவாதிகள் கட்டாய அலுவல் மொழி கண்டிப்பாக இருக்கக் கூடாது எனவும், அனைத்து உள்ளூர் மொழிகளிலும் கல்வி போதிக்கப்படும் பள்ளிகளை மக்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் ஏதேனும் ஒரு குறிப்பிட்டதொரு தேசத்தின் அனைத்துச் சிறப்புரிமைகளையும் மற்றும் சிறுபான்மை தேசத்தாரின் உரிமை மீறல்கள் அனைத்தையும், இரத்து செய்யும் ஓர் அடிப்படைச் சட்டம் ஒன்று அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர்” (பக்கம்94-95)

“மொழிப் பிரச்சினை குறித்துத் தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள்” என்ற கட்டுரையில் பாட்டாளி வர்க்க ஜனாயகத்தின் தேசியஇனத் திட்டத்தில், எந்தவொரு தனிப்பட்ட தேசத்திற்கும், மொழிக்கும் சிறப்புரிமை மறுக்கப்படும் என்று லெனின் தெளிவாகக் கூறியுள்ளார். சிறிய நாடான ஸ்விட்சர்லாந்தை முன்வைத்து மூன்று மொழிகளை அலுவல் மொழியாகக் கொண்டுள்ளதால் அந்நாடு எதையும் இழக்கவில்லை என்று லெனின் கூறுகிறார்.

எந்த ஒரு மாற்றமும் அந்நாட்டில் வளர்ச்சிப் பெற்றுள்ள ஜனநாயத்தின் அடிப்படையில் நிலைமைக்கு ஏற்றப்படியான மாற்றங்கள் உண்டாகும்.
“பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள், ஒரு அரசின்கீழ் வாழும் தேசிய இன மக்களை (அவர்கள் அந்த அரசுடன் வாழ விரும்பும் காலம்வரை) பெரும்பான்மையினரின் மொழியைக் கற்றுக்கொள்ள எப்போதும் நிர்ப்பந்திக்கும். ரஷ்யாவில் அரசியல் அமைப்பு மேலும் ஜனநாயகத்தன்மை அடையும் போது, மேலும் வலிமையாக, விரைவாக, தீவிரமாக முதலாளித்துவம் வளரும், இது மேலும் அவசரமாக, பொருளாதாரப் பரிவர்த்தனையின் தேவைகள் காரணமாக. பல்வேறு தேசிய இனங்களை, பொது வர்த்தக உறவுகளுக்காக ருஷ்ய மொழியை மிகவும் இசைவுடன் கற்றுக்கொள்ளத் தூண்டும்” (பக்கம் – 86)

மொத்தத்தில் இந்த நூல் மொழியை முன்வைத்து எழுதப்பட்டாலும், மார்க்சிய அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள விரும்பும், அரசியல் போராளிகள், இன்றைய, நாளைய அதாவது எதிர்காலத்திய போக்குகளை அறிந்து கொள்வதற்கு இந்நூலை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். 

Sunday, 6 November 2016

சோவியத் அரசாங்கத்தின் உடடினப் பணிகள்- லெனின் (நூல் அறிமுகம்)

லெனின் “சோவியத் அரசாங்கத்தின் உடடினப் பணிகள்” என்ற நூலை 1918ஆம் ஆண்டு ஏப்ரல் 13க்கும் 26க்கும் இடையே எழுதினார். கையெழுத்துப்படிகளில் இன்றைய நிலைமையில் சோவியத் அரசாங்கத்தின் பணிகள் மீதான ஆராய்ச்சியுரைகள் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுரைகள் கட்சியின் மையக் கமிட்டிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரித்து பிராவ்தா, இஸ்வோஸ்தியா பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

                சோஷலிசப் புரட்சியை ருஷ்ய மக்கள் திடமான நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டுவிட்டனர், சுரண்டுவோரை ஆயுத பலத்தால் நசுக்கியாகிவிட்டது, அடுத்து நிர்வாகம் என்கிற மேலான பணியினை செய்திட வேண்டும் என்ற நிலை அடைந்துவிட்டதை, லெனின் தமது சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“மனித வரலாற்றிலேயே முதன்முதலாய் ஒரு சோஷலிஸ்டுக் கட்சி ஆட்சியதிகாரத்தை வெற்றி கொள்வதும், சுரண்டுவோரை நசுக்குவதுமாகிய பணியினைப் பிரதானமாய் நிறைவேற்றி முடித்துவிட்டு, நிர்வாகம் எனும் பணியினை நேரடியாக அணுக முற்பட்டிருக்கிறது. சோஷலிசப் புரட்சியின் இந்த மெத்தக் கடினமான (மிகவும் மனநிறைவு தருவதான) பணியினை நாம் சிறப்புடன் நிறைவேற்றி முடிப்பவர்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றிகரமாய் நிர்வகிக்கும் பொருட்டு நாம் மக்களுக்கு திடநம்பிக்கை அளிக்க வல்லோராய் இருப்பதோடு அன்னியில், உள்நாட்டுப் போரில் வெற்றி பெற வல்லோராய் இருப்பதோடு அன்னியில், நடைமுறை ஒழுங்கமைப்பு வேலையைச் செய்ய வல்லோராயும் இருக்க வேண்டும் என்பதை நாம் முழுமையாய் உணர்ந்து கொண்டாக வேண்டும். இது மிகமிகக் கடினமான பணி, ஏனெனில் கோடானுகோடி மக்களது வாழ்க்கையின் மிகமிக ஆழ வேரூன்றியுள்ள அடிப்படைகளை, பொருளாதார அடிப்படைகளை ஒரு புதிய வழியில் ஒழுங்கமைத்திடும் பணியிது. அதேபோது இது மிகவும் மனநிறைவுதரும் பணி, ஏனெனில் இந்தப் பணி (முதன்மையான, பிரதான உருவரைகளில்) நிறைவேற்றி முடிக்கப் பெற்றதன் பிறகுதான் ருஷ்யாவானது ஒரு சோவியத் குடியரசு மட்டுமின்றி, ஒரு சோஷலிசக் குடியரசும் ஆகிவிட்டது என்று கூற முடியும்.”1

       சோஷலிசத்தை நிலைநாட்ட இருக்கும் ருஷ்ய நிலைமையினை தெளிவாக படம்பிடித்துக்காட்டுகிறார் லெனின்:-
“முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்தவராய் இருப்போரைக் காட்டிலும் சிறு உடைமையாளராய் இருப்போர் வெகுவாய் மிகுதியாயுள்ள நாட்டில், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளருக்கும், குட்டி முதலாளித்துவப் புரட்சியாளருக்கும் இடையிலுள்ள வேறுபாடு தவிர்க்க ஒண்ணாதவாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, அவ்வப்போது மிகவும் கடுமையாகவே வெளிப்படுத்திக் கொள்கிறது”2

                மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும் போதும் ருஷ்யா பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதனால் ருஷ்யா மேலைநாடுகளில் முதிர்ச்சியுற்று வரும் புரட்சியினை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைமையில் தமது சோஷலிசத்தை நிர்மாணிக்கிறது.

“மேற்கில் சோஷலிசப் புரட்சியானது மிகப் பல காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு விட்டது. நம்மை எதிர் நோக்கும் ஒழுங்கமைப்புப் பணியினை எந்த அளவுக்கு நாம் நிறைவேற்றுகிறோமோ, அந்த அளவுக்குத்தான் மேற்கில் சோஷலிசப் புரட்சிக்கு நாம் பயனுள்ள உதவி அளிக்கக் கூடியோராய் இருக்க முடியும் என்பது கூறாமலே விளங்கும்.”2

“சர்வதேச விவகாரங்களில் அசாதாரணமாய்க் கடினமான, சிக்கலான, அபாயகரமான நிலைமை, சாமர்த்திய உபாயங்களும் பின்வாங்குதலும் இன்றியமையாதன ஆகிவிடுதல், வேதனை வாய்ந்த மந்த கதியில் மேலைய நாடுகளில் முதிர்ச்சியுற்று வரும் புரட்சியின் புதிய திடீர் வெடிப்புக்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ள ஒரு காலகட்டம், உள்நாட்டில் மந்தகதியிலான கட்டுமானத்துக்கும்- குட்டிமுதலாளித்துவக் கண்டிப்பின்மையும் அராஜகமுமாகிய அபாயகரமான கூறினை எதிர்த்து கடுமையான பாட்டாளி வர்க்கக் கட்டுப்பாடு புரிந்திடும் விடாப்பிடியான போராட்டத்தை தயவு தாட்சண்யமின்றி இறுக்கமாக்குவதற்குமான காலகட்டம்- சுருக்கமாய்ச் சொல்லுமிடத்து, இவைதான் சோஷலிசப் புரட்சியில் இப்போது நாம் இருந்து வரும் இந்த விசேஷக் கட்டத்தின் சிறப்பியல்புகள்.

வரலாற்று நிகழ்ச்சிகளின் சங்கிலியில் இந்த இணைப்பைத்தான் தற்போது நமது முழு பலத்தையும் கொண்டு பற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அடுத்த இணைப்புக்கு மாறிச் செல்லுமுன் நம்மை எதிர்நோக்கும் பணிகளைச் செய்து முடிக்கும் ஆற்றலுடையோராக நாம் இருக்க முடியும், தனிப்பெரும் சுடரொளியால், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிகளது சுடரொளியால் நாம் இந்த அடுத்த இணைப்பை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகிறோம்.”3

                இந்தவகையிலான சிக்கல் மிகுந்த சூழ்நிலைமைகளைப் புரிந்துகொள்ளாத சில புரட்சியாளார்கள் பின்வாங்குதல் என்பதை முன்வைத்து அக்டோபர் புரட்சியின் பாரம்பரியங்களை மறந்து விட்டதாக, புனித ஆவேசத்துடன் சீற்றம் கொண்டு போல்ஷிவிக்கட்சிக்கு எதிராக செயல்பட்டனர்.

“பரிதாபத்துக்குரிய இந்த “புரட்சியாளர்களது” துரதிருஷ்ட நிலை என்னவெனில், இவர்கள் உலகிலேயே உன்னதமான அடிநோக்கங்களால் உந்தப்படுவோராகவும் சோஷலிச குறிக்கோளுக்கு முழு விசுவாசம் செலுத்துவோராகவும் இருப்போருங்கூட, தனி நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்- பெரு நாசம் விளைவித்த பிற்போக்கு போரினால் குதறிக் குலைக்கப்பட்டிருப்பதும் அதிகமாய் முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் நெடுங் காலம் முன்னதாகவே சோஷலிசப் புரட்சியை ஆரம்பித்துவிட்டதுமாகிய, ஒரு பிற்பட்ட நாடு தவிர்க்க முடியாதவாறு கடக்க வேண்டியிருக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் “கசப்பான” நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள், கடினமான ஒரு மாற்றத்தின் கடினமான தருணங்களில் தக்க மனவுரம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இயற்கையாகவே இடதுசாரி சோஷலிஸ்டுப் புரட்சியாளர்கள்தான் நமது கட்சிக்கு எதிரான இந்த வகைப்பட்ட “அதிகாரபூர்வ” எதிர்தரப்பினராகச் செயல்படுகிறார்கள்.”4

                இச்சிக்கல்களை இளம் சோவியத்தும், இதுவரை ஒடுக்கத்துக்கு ஆளான தொழிலாளி விவசாயி வர்க்கம் இந்தப் புதிய நிலைமைகளை பழகிக் கொண்டும், சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டும் செயற்பட வேண்டும்.

“ஒரு புதிய சமூக வர்க்கமானது, அதுவும் இதுகாறும் ஒடுக்கப்பட்டும், வறுமையாலும் அறியாமையாலும் நசுக்கப்பட்டு வந்திருக்கும் ஒரு வர்க்கமானது,     தனது புதிய நிலையில் பழக்கம் பெற்று, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, தனது வேலையை ஒழுங்கமைக்கவும், தனது சொந்த ஒழுங்கமைப்பாளர்களை வளர்த்து முன்கொண்டு வரவும், வராங்களல்ல நீண்ட பல மாதங்களும் ஆண்டுகளும் தேவைப்படவே செய்யும்.

புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் கட்சியானது, பத்து லட்சக் கணக்கிலும், கோடிக் கணக்கிலுமான குடிமக்களைக் கொண்ட பெரிய நிறுவன ஒழுங்கமைப்பும் முயற்சிகளுக்கு வேண்டிய அனுபவத்தையும் பழக்கங்களையும் பெறாதிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே, அனேகமாய் முற்றிலும் கிளர்ச்சியாளர்களுக்கு உரித்தான பழைய பழக்கங்களை உருமாற்றித் திருத்தியமைத்துக் கொள்வது மிக நீண்டதொரு நிகழ்ச்சிப் போக்கு. ஆனால் இது முடியாத காரியமன்று, மாறுதல் அவசியமென்று தெளிவாக உணர்ந்து ஏற்கப்பட்டதும், மாறுதலை உண்டாக்க வேண்டுமென்ற உறுதியான வைராக்கியமும் கடினமான பெரியதொரு குறிக்கோளுக்காகப் பாடுபடுவதில் விடாமுயற்சியும் பெறப்பட்டதும் நாம் நிச்சயம் இந்த காரியத்தைச் செய்யத்தான் போகிறோம்.”5

                                சோஷலிசப் புரட்சியின் வெற்றி என்பது தொழிலாளர்களின் வர்க்க உணர்விலும், கோட்பாட்டு பற்றுறுதியிலும் அடங்கியிருக்கிறது.

“மக்களில் பெருவாரியானோரும், யாவருக்கும் முதலாய் உழைப்பாளி மக்களில் பெருவாரியானோரும், வரலாற்றின் படைப்பாளர்களாய் சுயேச்சையான ஆக்க வேலையில் ஈடுபடும் போது மட்டும்தான் இத்தகைய ஒரு புரட்சி வெற்றிகரமாக நடத்தப்பட முடியும். பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் போதிய அளவில் வர்க்க உணர்வும், கோட்பாட்டில் பற்றுறுதியும், தன்னலங்கருதாத் தியாக உணர்ச்சியும், விடா முயற்சியும் வெளிப்படுத்தும் போது மட்டும்தான் சோஷலிசப் புரட்சியின் வெற்றி திண்ணமாக முடியும்.”6

சோவியத் அரசின் உடனடிப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை பொருளாதாரத் துறையில் அடங்கியிருக்கிறது.

“சோவியத் வடிவிலான ஒரு புது வகை அரசை உருவாக்கியதன் மூலம் நாம் இந்த கடினமான பிரச்சினையில் ஒரு பகுதிக்கு மட்டுமே தீர்வு கண்டுள்ளோம். பிரதான இடர்ப்பாடு பொருளாதாரத் துறையில் அடங்கியிருக்கிறது, அதாவது பண்டங்களது உற்பத்தியிலும் விநியோகத்திலும் மிகவும் கண்டிப்பான, சர்வவியாபகமான கணக்குப் பதிவையும் கண்காணிப்பையும் புகுத்தி, உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதிலும் பொருளுற்பத்தியை நடைமுறையில் சமூகமயமாக்குவதிலும் அடங்கியிருக்கிறது.”12

லெனின் மேலும் கூறுகிறார்:- “தொழிலாளர்கள் கண்காணிப்பு நடைமுறை உண்மையாகும் வரை, முன்னேறிய தொழிலார்கள் இந்தக் கண்காணிப்பை மீறுவோருக்கும், கண்காணிப்பு விவகாரங்களில் கருத்தில்லாதோருக்கும் எதிராய் வெற்றிகரமான, ஈவிரக்கமில்லாத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து இதனை நடத்திமுடிக்கும் வரை, சோஷலிசத்தை நோக்கி முதலாவது படியிலிருந்து (தொழிலாளர்கள் கண்காணிப்பிலிருந்து) இரண்டாவது படிக்குச் செல்வது, அதாவது உற்பத்தியைத் தொழிலாளர்கள் ஒழுங்கமைத்திடுவதற்குச் செல்வது, முடியாத காரியம்.”7

                சோஷலிசப் புரட்சியை நிலைநிறுத்துவதற்கு தேவைப்படுகிறவைகளை புறநிலைகளில் இருந்தே லெனின் வகுத்துக்கொள்கிறார்.  உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொள்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதையும், அதற்கான பெருவீதத் தொழில் துறையின் பொருளாயத அடிப்படைகள் உறுதியாக்கப்பட வேண்டும் என்பதையும், பின்தங்கிய மக்களின் உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கு கல்வி, கலாச்சார நிலைமைகளை உயர்த்திட வேண்டும் என்பதையும் லெனின் வலியுறுத்துகிறார்.

“மைய அரசு அதிகாரத்தை சில நாட்களில் எடுத்துக் கொண்டு விடுவதும், சுரண்டுவோரது ராணுவ எதிர்ப்பை (மற்றும் நாசவேலை) ஒரு பெரிய நாட்டின் பற்பல பகுதிகளிலுங்கூட சில வாரங்களில் நசுக்குவதும் சாத்தியமாய் இருக்கையில், உழைப்பின் உற்பத்தித் திறனை உணர்த்தும் பிரச்சினைக்குத் தலையாய தீர்வு காண்பதற்கு எப்படியும் (முக்கியமாய் மிகவும் கொடூரமான படு நாசப் போருக்குப் பிற்பாடு) சில ஆண்டுகள் தேவையாய் இருக்குமென்பது உடனே இப்போது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் பணி நீடித்து நடைபெற வேண்டிய ஒன்றாய் இருப்பதற்கு நிச்சயமாய் எதார்த்தப் புறநிலைமைகளே காரணம்.

உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு யாவற்றுக்கும் முதலாய் தேவைப்படுவது என்னவெனில், பெருவீதத் தொழில்துறையின் பொருளாயத அடிப்படை உறுதியாக்கப்பட வேண்டும் என்பதுதான், அதாவது எரிபொருள், இரும்பு, பொறியியல், வேதியல் தொழில்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான்.
உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு அவசியமான இன்னொரு நிபந்தனை, முதலாவதாக மக்கட் பெருந்திரளினரது கல்வி, கலாச்சார நிலையை உயர்த்துவதாகும். தற்போது இது மிகவும் விரைவாய் நடந்தேறி வருகிறது. முதலாளித்துவ மாறா நடைமுறையால் கண்ணவிந்து போனவர்களால் இந்த உண்மையைப் பார்க்க முடியவில்லை, சோவியத் ஒழுங்கமைப்பு வடிவத்தின் விளைவாய் மக்களது “கீழ் மட்டங்களில்” அறிவொளிக்கும் முன்முயற்சிக்குமான ஊக்கம் தற்போது எப்படி ஓங்கி வருகிறதென்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக உழைப்பாளி மக்களது கட்டுப்பாட்டையும் அவர்களது தேர்ச்சித் திறனையும், உழைப்பின் பயன் திறனையும், வேகத்தையும் அதன் சிறந்த ஒழுங்கமைப்பையும் உயர்த்துவது பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற்றெழச் செய்வதற்குரிய ஒரு நிபந்தனையாகும்”8

                ருஷ்யாவின் பின்தங்கிய நிலைமையினை கணக்கில் கொண்டு, முதலாளித்துத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறுகின்ற போது இடையேயுள்ள இடைக்காலத்தின் பிரத்யேக இயல்புகளை புரிந்து செயற்பட வேண்டும்.  இந்த இடைக்கட்டத்தை கடப்பதற்கு, சோஷலிஸ்டு சோவியத் அரசாட்சி ஒரடி பின்னோக்கி எடுத்து வைக்கிறது என்பது தெளிவான ஒன்றாகும். இந்த பின்னோக்கிய பயணம் என்பதைக் கண்டு சோஷலிசப் புரட்சியின் எதிர்ப்பாளர்கள் கொக்கரிப்பார்கள் என்பது உண்மையே.

“முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடிகள், முக்கியமாய் மென்ஷிவிக்குகளையும், நோவா ஷீஸ்ன் ஆட்களையும், வலதுசாரி சோஷலிஸ்டுப் புரட்சியார்களையும் போன்ற சில்லரைப் பேர்வழிகள், ஓரடி பின்னோக்கி எடுத்து வைக்கிறோம் என்ற நமது குறை ஏற்புக் குறித்தக் கொக்கரிப்புப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

நமது தவறுகளையும் பலவீனங்களையும் மூடிமறைக்காமல் நாம் சோஷலிசத்தை அடைவதற்கான மிகமிகக் கடினமான புதிய பாதையின் பிரத்தியேக இயல்புகளை ஆராய்ந்தாக வேண்டும். செய்யாமல்விட்டு வைக்கப்பட்டவற்றைத் தாமதமின்றி செய்து முடிக்க முயல வேண்டும். மிதமிஞ்சிய உயர்ந்த சம்பளங்கள் மூலம் முதலாளித்துவ நிபுணர்களை ஈடுபடுத்திக் கொள்வது பாரிஸ் கம்யூனின் கோட்பாடுகளிலிருந்து பின்வாங்கிச் செல்லுதலாகும் என்பதை மக்களிடம் இருந்து மூடிமறைப்பது, முதலாளித்துவ அரசியலாளர்களது இழிநிலைக்குச் சரிந்துவிடுவதும் மக்களை ஏமாற்றுவதுமே ஆகும்.

எதற்காக, ஏன் நாம் ஓரடி பின்னோக்கி எடுத்து வைக்கிறோம் என்பதை ஒளிவுமறைவின்றி விளக்கிச் சொல்லி, இழந்த நேரத்தைச் சரிசெய்வதற்கு கிடைக்கக் கூடிய வழிமுறைகள் என்னவென்று இதன் பிறகு பகிரங்கமாய் விவாதிப்போமாயின், அதன் பொருள் மக்களுக்குப் போதனையளிக்கிறோம், அனுபவத்திலிருந்து கற்றறிந்து கொள்கிறோம், சோஷலிசத்தை எப்படிக் கட்டியமைப்பதென்று மக்களுடன் சேர்ந்து பயின்று கொள்கிறோம் என்பதாகும்.”9

                இந்த பின்வாங்குதல், தடுமாற்றம், ஊசலாட்டம் என்ற தற்போதைய நிலை விபரீதமானதாய் இடதுசாரி சோஷலிசவாதிகளுக்குத் தோன்றுவதற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் கருத்தியலாகவே முதலாளித்துவத்தை சோஷலிசத்திடம் இருந்து வேறுபடுத்திப் பார்த்திருக்க பழக்கப்பட்டுவிட்டனர். இந்த இடைக்காலத்தின் பாய்ச்சலை மனதிற்கொண்டு அவக்கேடுற்ற அறிவுத்துறையினர் இவ்வாறு பேசுகின்றனர்.

“சோஷலிஸ்டுகள் எனப்படுவோரான இவர்களில் பெரும்பான்மையோர் சோஷலிசத்தைப் பற்றி “புத்தகங்களில் படித்திருக்கிறார்கள்”, ஆனால் இது குறித்து கருத்தாழமுள்ள முறையில் சிந்தித்தவர்கள் அல்ல. சோஷலிசத்தின் போதனாசிரியர்கள் “பாய்ச்சல்” என்று கூறியபோது உலக வரலாற்று அளவிலான திருப்பங்களையே, பத்தாண்டுகளுக்கும் அதற்கும் அதிகமான காலங்களுக்கும் நீடிப்பவை என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவக்கேடுற்ற “அறிவுத்துறையினர்” மத்தியிலிருந்து ஒப்பாரி பாடுவோர் இயற்கையாகவே இக்காலங்களில் எண்ணற்றவர்கள் தோன்றுகின்றனர்.”10

                இந்தப் பின்னோக்கிய பயணத்தில், முதலாளித்துவ வல்லுனர்களின் சேவையை உயர்ந்த விலை கொடுத்து வாங்க உடன்படுவது, விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோருக்கு உயர் ஊதியம் வழங்குதல் ஆகியவை அடங்கும். மேலும் முன்னேறிய நாடுகளில் காணப்படுவது போல் ருஷ்யாவில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லை, அதனால் இன்னமும் முதலாளித்துவக் கண்ணோட்டத்தை அனுசரித்து வரும் தொழிலாளர்களது கூட்டுறவுச் சங்கங்களோடு செய்து கொண்ட சமசர உடன்பாடு, முன்னேற்றம் ஏற்படுவதற்கான நிலைமைகள் தோற்றுவிப்பதற்காக முதலாளித்துவ நபர்களுக்கு சிற்சில வழிகளில் ஒரளவு சலுகைகள் தருவது போன்றவை அடங்கும்.

                இது மட்டுமல்லாது, ருஷ்ய தொழிலாளர்களின் நிலைமைகள், முன்னேறிய நாடுகளில் காணப்படும் தொழிலாளர்களைக் காட்டிலும் மோசமாக இருப்பதையும் லெனின் சுட்டிக் காட்டுகிறார். மேலும் முதலாளித்துவத்தின் மிக நவீன சாதனைகளுடன் விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சோவியத் அரசு பெற்றாக வேண்டும்.

“முன்னேறிய நாடுகளைச் சேர்ந்தோருடன் ஒப்பிடுகையில் ருஷ்யத் தொழிலாளி மோசமான தொழிலாளி. ஜார் ஆட்சியின் கீழ், பண்ணையடிமை முறையின் எச்சங்கள் விடாப்பிடியாக இருந்த நிலையில் இது வேறு எவ்வாறும் இருப்பதற்கில்லை. வேலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்- இதுதான், இதன் முழு வீச்சிலும், சோவியத் அரசாங்கம் மக்களுக்கு வகுத்து முன்வைக்க வேண்டிய பணி.
.. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கண்டிருக்கும் சாதனைகளின் மதிப்பு வாய்ந்தவை யாவற்றையும் சோவியத் குடியரசு எப்பாடுபட்டேனும் தெரிந்தெடுத்துக் கையாண்டாக வேண்டும். சோஷலிசத்தைக் கட்டியமைப்பதற்கான சாத்தியப்பாடு, சோவியத் ஆட்சியதிகாரத்தையும், சோவியத் நிர்வாக ஒழுங்கமைப்பையும், முதலாளித்துவத்தின் மிக நவீன சாதனைகளுடன் சேர்த்து இணைத்துக் கொள்வதில் நாம் காணும் வெற்றியையே பொறுத்திருக்கிறது.”11

                இந்நூலில் லெனின், ருஷ்யாவில் சோஷலிச மாற்றத்துக்குத் தேவைப்படுகிற பொருளாதாரத்தின் அடிப்படைகளை வகுத்தளித்தார். எந்த ஒரு நாடும் சோஷலிச மாற்றத்தின்போது அதன் பொருளாதார நிலைமைக்கு எற்றபடி அதாவது அந்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ள முதலாளித்துவ நிலைமைகளின் அடிப்படையில்தான் சோஷலிச மாற்றத்தை கொண்டுவரமுடியும். அதன்படி ருஷ்யாவில் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறுகிறபோது தேவைப்படுகிற இடைக்கட்டத்தை கணக்கில் கொண்டு லெனின் திட்டமிட்டார். இந்தத் திட்டம் பின்தங்கிய பொருளாதார நிலைமைகளைக் கொண்ட ருஷ்யாவை, சோஷலிச மாற்றத்துக்கு இட்டுச் செல்வதற்கான பாதையாகும்.

1.சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் - தேர்வு நூல்கள் 8 - பக்கம்- 55-56
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 52
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 111
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 112
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 88-89
6. மேற்கண்ட நூல் - பக்கம்- 53
7. மேற்கண்ட நூல் - பக்கம்- 53
8. மேற்கண்ட நூல் - பக்கம்- 76
9. மேற்கண்ட நூல்பக்கம் 80 & 81
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 67
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 108

12. மேற்கண்ட நூல் - பக்கம்- 83

Thursday, 27 October 2016

ரங்கநாயகம்மாவின் அணுகுமுறை பொருள்முதல்வாதமல்ல...

ரங்கநாயகம்மா எழுதிய “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!” என்ற நூல் பொருளமுதல்வாத முறையில் எழுதப்படவில்லை என்று ஒரு பக்கமும், பொருள்முதல்வாத முறையில் தான் எழுதப்பட்டுள்ளது என்று மற்றொரு பக்கமும் பேசப்படுகிறது. நமது நாட்டில் கம்யூனிசம் அறிமுகமாகி நூறு ஆண்டுகள் நெருங்கப் போகிறது. பொருள்முதல்வாதம் என்பது என்ன? என்பதிலேயே இன்னும் குழப்பம் நீடிக்கிறது என்பது மிகவும் பரிதாபத்துக்குரியது.

மார்க்சிய பொருள்முதல்வாதத்தைப் பகுத்தறிவுவாதமாகவும், தொடுபொருட்களை அல்லது புலனறிபொருள்களை மட்டுமே பொருள்முதல்வாதமாகக் கருதுகின்ற போக்கு நீடிக்கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சியைப் புரியாதவர்கள் அதிகமாக இன்றும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த கவலைக்குரியதே.

மார்க்சிய தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது இயக்கவியல் பொருள்முதல்வாதம் இது முதலாவது, சமூகம் வரலாறு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இது இரண்டாவது.

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா? இதுவே தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி. இதற்கு ஆன்மா தான் படைத்தது என்கிறவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கை தான் முதன்மையானதாகக் கொண்டவர்கள் பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த இரு முகாமிலும் பல உட்பிரிவுகள் உண்டு. மார்க்சியம் பொருள்முதல்வாத முகாமை சேர்ந்தது. பொருள்முதல்வாதிகள் தமது கண்ணோட்டத்திற்கு வெளிச்சேர்க்கை எதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. கருத்துமுதல்வாதிகள் தமது கண்ணோட்டத்தை உலகத்திற்கு அப்பால் உள்ளவற்றிலிருந்து அமைத்துக்கொள்கிறார்கள்

       மதம் பற்றிய பகுத்தறிவுவாதத்தின் கண்ணோட்டம் ஆன்மீகவாதத்திற்கு எதிரானது, ஆனால் அதன் விளக்கம் கருத்துமுதல்வாத அடிப்படையிலானது. இந்த விளக்கம் பலருக்கு ஆச்சரியத்தையே தருகிறது. இந்த ஆச்சரியத்திற்குக் காரணம், மார்க்சிய விளக்கங்கள் இவர்களிடம் சென்றடையவில்லை என்பதேயாகும்.

       மதம் என்பது மூட நம்பிக்கை, இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் இதன் மீதான நம்பிக்கைவிடப் பகுத்தறிவு வேண்டும். நம்பிக்கை ஊட்டியவகளின் கருத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது மக்களிடம் காணப்படும் ஆன்மீக நம்பிக்கைகள் ஊட்டப்பட்டதாகவே பகுத்தறிவுவாதம் கருதுகிறது.

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டும் மனிதயினத்திற்கு முன் பேரழிவாற்றல் பெற்றதாக இருப்பது மதயிருப்பிற்கான காரணங்களாக மார்க்சியம் கருதுகிறது. இதனை மிகச் சுருக்கமாக லெனின் மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும்.” (உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை)

இதனையே சற்று விரிவாக எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின் சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத் தோற்றங்களை மேற்கொண்டன...

ஆனால் விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாய சக்திகளும் செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்தச் சக்திகள் மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும் எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற அதே இயற்கை அவசியத்துடன் அவன்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் இயற்கையின் விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில் சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன. (டூரிங்குக்கு மறுப்பு)

ரங்கநாயகம்மா நூலின் முதல் அத்தியாத்தின் தொடக்கத்திலேயே கடவுளைப் படைத்தது யார்? என்கிற ஒற்றைக் கேள்வின் மூலம் அந்தக் கடவுளும் மத நூல்களும் தகர்ந்து நொறுங்கிவிடும் என்கிறார். இது அப்பட்டமான பகுத்தறிவுவாதமாகும். மார்க்சிய பொருள்முதல்வாதம் இதற்கு நேரெதிரானது. இது பற்றி “மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை” என்ற கட்டுரையில் லெனின் கூறுகிறார். மதத்தை எதிர்ப்பது பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும், மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிடுவதில்லை. மதத்தை எப்படி எதிர்க்க வேண்டும் என்று பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது. மதத்தின் தோற்றுவாயை பொருள்முதல்வாத முறையில் விளக்க வேண்டும்.
பெருந்திரளான மக்களிடம், மதம் தம்பிடிப்பை வைத்திருப்பதற்கு மக்களின் அறியாமை காரணம் என்று முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி கருதுகிறார். மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க” என்று நாத்திகத்தைப் பரப்புவதே தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளார். மதத்தின் மீதான எதிர்ப்பை சித்தாந்த போதனையாகச் சுருக்குவது, குறுகிய முதலாளித்துவ மேம்படுத்துவோரின் கருத்தாகும். மதத்தின் மூலவேர்களைப் போதுமான தெளிவுடன் விளக்கிக் கூறவில்லை. பொருள்முதல்வாத வழியில் அல்லாது கருத்துமுதல்வாத வழியில் விளக்குகிறது என்று லெனின் கூறுகிறார்.
லெனின் ;-
நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் அனைத்துப் பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது.

மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம் இணைக்கப்பட வேண்டும். நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினரிடமும் அரைப் பாட்டாளி வர்க்கத்தின் விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான விவசாயிகளிடமும் மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்குக் காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளி வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே, மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாயக் கடமை. இது உண்மை அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை. அவற்றைப் பொருள்முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாகச் சமூகத் தன்மையானவை. (மதத்தைப் பற்றித் தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை)

       மதம் பற்றிய ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் பொருள்முதல்வாத வழிப்பட்டதல்ல என்பதைப் பார்த்தோம், அடுத்து அம்பேத்கரின் மார்க்சியத்தின் மீதான் விமர்சனத்தை எந்தக் அவர் கண்ணோட்டத்தில் அணுகுகிறார் என்பதைப் பார்ப்போம். 1. சோஷலிசம் தவிர்க்கவியலாதது 2. மார்க்சியம் வன்முறையானது, 3. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், 4. அரசு உலர்ந்து உதிரும் இவைகளே விமசர்னத்தின் முதன்மையானதாகக் கொள்ளலாம். இதற்குப் பதிலாக ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் எவ்வகையில் அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

1. சோஷலிசம் தவிர்க்கவியலாதது
சோஷலிசம் தவிர்க்கவியலாதது என்பதை அம்பேத்கர் மனித நடவடிக்கை இல்லாமல் தானே நடந்துவிடுவதைப் போல் புரிந்துள்ளார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண் தவிர்க்கவியலாமல் சோஷலிசத்தை நோக்கி செல்லும் என்பதே இதன் பொருள். ரங்கநாயகம்மா இதற்குப் பதிலாக, கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குகள், வர்க்கப் போராட்டத்தை நடத்துங்கள் என்று மார்க்ஸ் கூறியதாகக் கூறுகிறார்.

சுரண்டல் சமூகத்தை மார்க்சுக்குப் பிடிக்காமல், கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவது என்பது கருத்தியல் கண்ணோட்டமே ஆகும். சுரண்டல் சமூகத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாமல் சோஷலிச சமூகத்தை நோக்கி பயணிப்பதையே மார்க்ஸ் கூறியுள்ளார்.

       சோஷலிசம் என்பது கற்பனையான ஒரு கனவு அல்ல, நவீன முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க முடியாத  விளைவாகும் என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் தங்களது விஞ்ஞான நூல்களில் விளக்கியதாக லெனின் கூறுகிறார்:-
“தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள்.

சோஷலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.” (பிடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிற பொருளாயத காரணங்களின் அடிப்படையில் விளக்குவதனால் தான் மார்க்சின் கருத்து விஞ்ஞான வகைப்பட்டதாக, லெனின் கூறுகிறார்:-

“வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாயத காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால் உற்பத்தி சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.” (பிரடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)

ரங்கநாயகம்மாவிடம் இந்த விஞ்ஞானப் பார்வை கிடையாது. சுரண்டல் முறைக்கு மாற்றாக மார்க்ஸ் இவ்வாறு கூறுவதாகவே இவரது  கருத்து இருக்கிறது. “சுரண்டல் மீது எழுப்பப்பட்ட சமுதாயம் என்பதால் அதைமாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்”.(300) சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போர் என்பது எந்த வகையிலும் மார்க்சின் மனவிருப்பத்தைச் சார்ந்ததல்ல, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் ஏற்படுகிற முரண்பாட்டு என்கிற புறநிலையைச் சார்ந்தது.

அம்பேத்கருக்கு விஞ்ஞான வழியில் அல்லாமல், ரங்கநாயகம்மா கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குகள், வர்க்கப் போராட்டத்தை நடத்துங்கள் என்று மார்க்ஸ் கூறியதாகக் கருத்தியல் முறையில் பதிலளித்துள்ளார்.

2. வன்முறை
       கம்யூனிசத்தை வன்முறையானதாகக் கருதும் அம்பேத்கருக்கு, ரங்கநாயகம்மா அளிக்கும் பதில், “வன்முறையை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் வன்முறையாகாது! அது உழைக்கும் வர்க்கத்தின் தற்காப்பு நடவடிக்கை!....” என்று கருத்தியல் விளக்கமாகத் தான் இருக்கிறது. தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே வன்முறை என்பது தான் விஞ்ஞான வழிப்பட்ட பதிலாகும்.

இதனை எங்கெல்ஸ் விளக்குகிறார்:-
“தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.” (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)

3. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
அம்பேத்கர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முழுமையான ஜனாயகத்திற்கு விரோதமானதாகப் பார்க்கிறார். இதற்குப் பதிலாக ரங்கநாயகம்மா கூறுகிறார்:-“தொழிலாளர் வாக்கம் போராட்டத்தின மூலம் “அரசு அதிகாரத்தை” எடுத்துக் கொள்ளும் போதும்கூடச் சமூகம் பழைய நிலைமையிலேயே இருக்கும். அதாவது முதலாளி-தொழிலாளர் உறவுகள்“ என்னும் அதே நிலைமையே நீடிக்கும். தொழிலாளர் வர்க்கம் அத்தகையதொரு சமூகத்தை ஒரு “புதிய”  சமூகமாக மாற்ற வேண்டும். நிலவும் உற்பத்தி உறவுகள் மீது புரட்சிகரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும. நிலம் மற்றும் மூலதனம் மீதான தனியுடைமை படிப்படியாக ஒழிக்கப்படும். ஒவ்வொரு நபரும் கட்டாயமாக உழைத்தாக வேண்டும். மூளை உழைப்பு மட்டுமலல, மிகமிகக் கீழான கடைக்கோடி உடல் உழைப்பு வரை அவர்களுடைய கடமையாக மாறும்.” (பக்கம் -318)

உற்பத்தி சக்திகளோடு ஏற்படுகிற மாற்றங்களாக உற்பத்தி உறவை காணாமல், “புதிய”  சமூகம், உற்பத்தி உறவுகள் மீது புரட்சிகரக் கட்டுப்பாடுகள் என்று கருத்தியல் முறையிலேயே அணுகுகிறார். புதிய சிந்தனை, புரட்சிகர உறவு என்று கருத்தியில் ரீதியாகவே சிந்திக்கிறார். “தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய சிந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத் தனது போராட்டத்தின் மூலம் மாற்ற வேண்டும்.”(325), “புரட்சிகர உறவுகளை”(343) அதே போல் “சமத்துவ உறவு” என்று கூறுகிறார். அந்தச் சமத்துவ உறவுகளுக்குத் தேவைப்படுகிற பொருளாயத (material) நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை, “ஏற்றத்தாழ்வு மிக்க உறவுகள் தகர்க்கப்பட்டு, வாழ்வின் எல்லா மட்டத்திலும் சமத்துவ உறவுகள் நிலைநாட்டப்பட வேண்டும்”(318) என்று கருத்தியில் முறையில் உறவுகளைப் படைக்கிறார்.

       உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே உற்பத்தி உறவை மார்க்ஸ் காண்கிறார், இந்தப் பொருளாயத கண்ணோட்டம் ரங்கநாயகம்மாவிற்குக் கிடையாது.

மார்க்ஸ்:-
“சமுதாய உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.” (தத்துவத்தின் வறுமை)

“புதிய உற்பத்தி சக்திகள் கைவரப் பெற்றதும் மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், மற்றும் உற்பத்தி முறையுடன் அந்தக் குறிப்பிட்ட உற்பத்தி முறைக்கு அவசியகரமான உறவுகளாக மட்டுமே இருக்கிற எல்லாப் பொருளாதார உறவுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்” (மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதம் 28/12/1846)

மேற்கட்டமைப்பை மாற்றுகின்ற உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே தான் அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ் தெளிவாகவே எழுதியுள்ளார். உற்பத்தி உறவுகளை நிலைநிறுத்துவதில் கருவிகளே பெரும்பங்காற்றுகிறது. சுரண்டலை ஒரு அறநெறிக் கண்ணோட்டத்தில் தான் ரங்கநாயகம்மா அணுகியிருக்கிறார் இது மார்க்சிய பார்வைக்கு மாறானதாகும்.

“மாக்ஸியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஓட்டுமொத்த இலாபமும் உழைப்பாளர்களிடமிருந்தே வருகிறது. முதலாளிகள் மூலதனத்தை 1) உற்பத்தி சாதனங்கள் மீதும் 2) தொழிலாளர்களின் கூலி மீதும் முதலீடு செய்கின்றனர். இந்த இரண்டில், உற்பத்தி சாதனங்கள் அதற்குரிய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக எதையும் திரும்பத் தரப்போவதில்லை. “கூலி”க்கு அவர்கள் ஒதுககும் பணமே மேலும மதிப்பை திருமபத்தருகிறது. உழைப்பாளிகள் தங்கள் உழைப்பிற்கு ஈடாகக் கூலி பெறுகிறார்கள் என்பது உண்மையே, ஆனால், கூலி மட்டுமே உழைப்பின் மதிப்பில்லை. அது உழைப்பு மதிப்பின் ஒரு பகுதி மட்டுமே. மீதமிருக்கும் பகுதி இலாபம் (உபரிமதிப்பு). அதில் தொழிலாளர்களுக்கு மட்டுமே பங்கிருக்கிதே ஒழிய, தொடக்கத்தில் முதலீடு செய்த மூலதனத்தின் மதிப்பிலிருந்து மேலும மதிப்பை உயர்த்த உற்பத்தி சாதனம் எந்தப் பங்கையும் ஆற்றுவதில்லை. இது தான் மார்க்ஸி விளக்கம்.” (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: 345-346)

ரிக்கார்டோவைப் போலவே ரங்கநாயகம்மா தொழிலாளர்களுக்கே விளைபொருள் முழுவதும் சொந்தம் என்கிறார். இத்தகைய கருத்தாக்கத்தை “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் மறுத்துரைக்கிறார்:-
“சமுதாய விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தாகும். ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள், என்னும்படியான ரிக்காடோ தத்துவத்தின் மேற்கூறி செயற்பாடு நேராகக் கம்யூனிசத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் மார்க்சும் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவு வகையிலே அது பொருளாதார ரீதியிலே தவறாகும். ஏனெனில் அது வெறுமே நீதிநெறி முறைமையை அரசியல் பொருளாதாரத்தில் செயல்படுத்துவதாகும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருளின் மிகப் பெரும் பகுதி அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடிச் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. இந்தப் பொருளாதார உண்மை நமது நீதிநெறி உணர்ச்சிக்கு முரண்படாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறோம். எனவே தான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டார்- அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது, கூலி கொடுபடாத உழைப்பு அடங்கியதே உபரி மதிப்பு ஆகும் என்று மட்டுமே அவர் சொல்கிறார். அது ஒரு எளிய உண்மையாகும். ஆனால், புறவடிவு வகையிலே பொருளாதாரீதியிலே தவறாயிருக்கக் கூடியது உலக வரலாற்றின் பார்வை நிலையிலே சரியாயிருக்கக்கூடும்.”

அறநெறிமுறையிலேயே உற்பத்தி உறவை ராங்கநாயகம்மா கணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தை அறநெறி வழியிலேயே முன்வைக்கிறார்.

“எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும். உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்புப் பிரிவினை, ஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்புப் பிரிவினை- இவையாவுமே இதன் கீழ் வருகின்றன. சமூகத்தில் நிலவும் “தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்) மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராகச் சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்.” (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:பக்கம் 410)

ரங்கநாயகம்மாவின் அணுகுமுறையில் அறநெறிக் கண்ணோட்டம் மேலோங்கிக் கிடக்கிறது.

லெனின் கூறுகிறார்:-
“மிகச் சொற்பமான சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில் நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின், வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும், நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும் ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத் தான் காண்கிறோம். ஏழைகளுக்கு இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தடங்கல்களும் அற்பசொற்பமாகவே தோன்றும்,

முக்கியமாய் இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள் வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில் நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும்)

லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தில், ஜனநாயகம் பெருவாரியான மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள் அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன், பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின் சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.

மனிதகுலத்தைக் கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும். இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை, பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.

பெபெலுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச் சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும் அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது” என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். . (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)

4. அரசு உலர்ந்து உதிரும்
       அரசு உலர்ந்து விழும் என்பது பற்றிய அம்பேத்கரின் கேள்விக்கு ரங்கநாகம்மா அறித்த பதில், “உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றத்தையே அது சார்ந்து இருக்கிறது. தொழிலார் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய  சிந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத் தனது போராட்டத்தின் மூலும் மாற்ற வேண்டும். மாற்றம் நடந்தவுடன் அரசு உலர்ந்து உதிரும்”. (பக்கம் - 325). இந்த மாற்றத்திற்குத் தேவையான பொருளாயத காரணங்களைச் சுட்டிக்காட்டாமல், அதன் விளைவுகளான புதிய சிந்தனை, உற்பத்தி உறவு என்பதாக மட்டுமே பேசுகிறார்.

       அரசு உலர்ந்து உதிர்வதற்கான காரணங்களாக உற்பத்திச் சாதனங்களுடன் உற்பத்தி உறவுகளை இணைத்து லெனின் விளக்குகிறார்.

“கம்யூனிச சமூகத்தில்தான் – முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள் இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களிடையே சமூக உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் “அரசு… இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகிறது.”

அப்பொழுதுதான் மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக் கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும் மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில் இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அறியப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப் பற்றியொழுகச் சிறிதுசிறிதாய் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே. கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)

கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள் இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருந்து விடுபட்டவர்களாவர். அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச் சமூகத்தில் காணப்படுவதும் இல்லை. ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் பொருள்முதல்வாத வழிப்பட்டதல்ல என்பதற்கு இவைகளே போதுமானது.