Saturday 7 November 2020

வகுப்பு 1 :- “காரல் மார்க்ஸ்” - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் (லெனின்)

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு)

இன்று நவம்பர் 7. ருஷ்யப் புரட்சி நடைபெற்ற நாள். இந்த நாளில் நாம் லெனின் 1914 ஆம் ஆண்டு எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற நூலின் சுருக்கத்தையும் அதன் சாரத்தையும் பார்க்கப் போகிறோம். 

ருஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டிய கோட்பாடான மார்க்சியத்தையும், அதனைப் படைத்த மார்க்சின் வரலாற்றுச் சுருக்கத்தையும் இந்தத் தொடர் வகுப்பில் பார்க்கப் போகிறோம். 

லெனின் மார்க்சிய அடிப்படைகளைப் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில் “காரல் மார்க்ஸ்” என்ற கட்டுரை குறிப்பிடத்தக்கவையாகும். இது ஒரு கலைக்களஞ்சியத்திற்கு லெனின் எழுதியது. 

இதில் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், மார்க்சிய அடிப்படைகளையும் தொகுக்கப்பட்டுள்ளது. 

செங்கொடி மையம் என்கிற இந்த வாசகர் வட்டத்தில், முதலாக லெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” என்ற நூல் வாசிக்கப்பட்டது. அப்போது மார்க்சியத்தின் அடிப்படைகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானச் சோஷலிசம் ஆகியவற்றைச் சுருக்கமாகப் பார்க்கப்பட்டது. 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” என்கிற இந்த நூலும் மார்க்சிய அடிப்படைகளைச் சற்று விரிவாகக் கூறுவதுடன், மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும் லெனின் கொடுத்துள்ளார். 

மார்க்சின் வரலாறு என்பதே மார்க்சியத்தின் வரலாறு தான். மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சியை, மார்க்சின் வாழ்க்கையோடு அறிந்து கொள்ளலாம். அதாவது, மார்க்ஸ் வாழ்க்கையை அறியும் போதே மார்க்சியம் எவ்வாறு வளாச்சி அடைந்தது என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

இந்த வகுப்பு ஒரு தொடர் வகுப்பாகும். லெனின் எழுதிய இந்தக் கட்டுரையை ஐந்து வகுப்புகளாக எடுக்கப்படும். ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு இடம் பெறும். 

முதல் வகுப்பு: மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், 

இரண்டாம் வகுப்பு: இயக்கவியல் பொருள்முதல்வாதம். 

மூன்றாம் வகுப்பு: வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

நான்காவது வகுப்பு: மார்க்சியப் பொருளாதாரம்.

ஐந்தாவது வகுப்பு: விஞ்ஞானச் சோஷலிசம். 

ஆக இந்த வகுப்பு மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

இன்று முதல் வகுப்பு. மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம். 

காரல் மார்க்ஸ், ஜெர்மனியில் உள்ள டிரியர் என்ற நகரில் 1818 ஆம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி பிறந்தார். அவருடைய தகப்பனார் வழக்குரைஞராக இருந்தார். மார்க்சின் குடும்பம் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான். நாகரீகப் பண்பாடு கொண்ட குடும்பமாக இருந்தாலும் முற்போக்கான குடும்பம் என்று கூறிடமுடியாது. 

அதே நகரில் மார்க்ஸ் பள்ளிப் படிப்படை முடித்தார். அடுத்து கல்லூரிக்கு சென்ற மார்க்ஸ் முதலில் சட்டப் படிப்பில் சேர்ந்தார். பிறகு முன்னேறுவதற்குத் தத்துவப் படிப்பு அவசியம் என்று அவருக்குப் பட்டது. அதனால் அவர் தத்துவப் படிப்பில் சேர்ந்தார். 

பிறகு எபிக்யூரஸ் தத்துவத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். எபிக்யூரஸ் ஒரு நாத்திகவாதி. எபிக்யூரிசின் நாத்திகத்தை ஹெகல் கண்டித்திருந்தார். மார்க்ஸ் தமது ஆய்வுரையில், மதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து எகிக்யூரஸ் நடத்திய போராட்டத்தின் வீரத்தை போற்றி எழுதினார். இந்தக் காலகட்டத்தில் மார்க்ஸ் முழுமையான ஒரு பொருள்முதல்வாதியாக வளர்ச்சி அடையவில்லை என்பதை நினையில் கொள்ள வேண்டும். ஆனால் அந்த ஆய்வில் வலதுசாரி ஹெகலியவாதிகள் என்றழைக்கப்பட்ட ஹெகலின் சீடர்களை விமர்சித்திருந்தார். 

அனறு ஹெகல் ஒரு பிரபலமான தத்துவவாதியாக இருந்தார். ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதியாக இருந்தாலும் அனைத்தையும் வளர்ச்சிப் போக்காகப் பார்த்தார். ஹெகலிடம் இருந்து வலது-இடது என இரு பிரிவுகள் தோன்றியது. வலதுசாரி பிரிவினர் ஹெகலின் கருத்துமுதல்வாத்தில் சிக்கிக் கிடந்தனர். இடதுசாரி பிரிவினர் கருத்துமுதல்வாததில் இருந்து விடுபட்டுப் பொருள்முதல்வாதத்தை நோக்கி பயணித்தனர். 

இந்தப் பயணத்திற்கு ஃபாயர்பாக் எழுதிய “கிறித்துவ மதத்தின் சாரம்” என்கிற நூல் பெரும் பங்கு வகித்தது. மார்க்சும் எங்கெல்சும் இந்த இடதுசாரி ஹெகல் பிரிவில் ஈடுபாடோடு செயற்பட்டனர். 

தமது படிப்பை முடித்தவுடன், மார்க்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றவே விரும்பினார் ஆனால் அன்று நிலவிய பிற்போக்கான நிலைமைகளினால் விருப்பத்தைக் கைவிட்டார். 

இடதுசாரி ஹெகல்வாதியான ஒரு முதலாளி வார்க்கத்தைச் சேர்ந்தவர் “ரைனிஷ் பத்திரிகை” நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பத்திரிகையில் மார்க்ஸ் தொடர்ந்து எழுதிவந்தார். பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஆனார். 

மார்க்ஸ், பொறுப்பை ஏற்றவுடன் அந்தப் பத்திரிகை புரட்சிகரமான ஜனநாயப் போக்கிற்கு மாறியது. 

அன்றைய பிற்போக்கு அரசு, பத்திரிகையை, கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியது. பத்திரிகை தடை செய்யும் நிலைக்குச் செல்வதை அறிந்த மார்க்ஸ், ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகி, பத்திரிகையைக் காப்பாற்ற நினைத்தார். ஆனால் இறுதியில் பத்திரிகை தடை செய்யப்பட்டது. 

இந்தக் குறுகிய காலப் பத்திரிகை அனுபவமே மார்க்சை மேம்படுத்தியது என்பது ஒரு பெரிய உண்மையாகும். 

அதுவரை மார்க்ஸ் சமூகத்தைத் தத்துவ வழியிலே அணுகிக் கொண்டிருந்தார். ஆனால் பிரச்சினையின் அடிப்படைக்குச் செல்வதற்குப் பொருளாதார நலன்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அது முதல் மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்தைக் கற்கத் தொடங்கினார். 

மாணவப் பருவத்திலேயே மார்க்ஸ், ஜென்னி என்கிற பெண்ணைக் காதலித்து வந்தார். அவரையே 1844ஆம் ஆண்டு மணம் புரிந்தார். 

ஜென்னி பிரபுத்துவ வம்சத்தில் ஒரு பிற்போக்கான குடும்பத்தில் பிறந்தவர். ஜென்னியின் தமையனார் மிகவும் பிற்போக்கான சூழ்நிலையில் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். இருந்தாலும் ஜென்னி, மார்க்சின் முற்போக்குடன் இணைந்து கொண்டார். 

பத்திரிகை நடத்துவதற்காக மார்க்ஸ் பாரிஸ் சென்றார். முதல் இதழிலேயே பிரச்சினை ஏற்பட்டுப் பத்திரிகை நின்றுபோனது. அந்த இதழில் மார்க்ஸ் நடப்பில் உள்ள அனைத்தையும் ஈவிரக்கம் இன்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

மார்க்ஸ் பாரிசில் இருக்கும் போது எங்கெல்ஸ் அங்குச் சென்றார். இருவர்கள் இடையே நட்பு வளரத் தொடங்கியது. இந்த நட்பு இறுதிவரை தொடர்ந்தது. புராணங்களில் காணப்படும் நட்பை விட இந்த இருவரின் நட்பு ஆச்சரியப்படும் வகையில் பிணைந்து காணப்பட்டது. 

பாரிசில் மார்க்ஸ் இருக்கும் போது, குட்டி முதலாளித்துவப் போக்குடைய புரூதோனை விமர்சித்தார். புரூத்தோன் எழுதிய “வறுமையின் தத்துவத்திற்கு” எதிராக “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலை மார்க்ஸ் எழுதினார். இந்த நூலில், மார்க்ஸ் தமது அரசியல் பொருளாதார ஆய்வைத் தொடங்கிவிட்டதை அறிந்து கொள்ள முடிகிறது. 

பாரிசில் இருந்த மார்க்ஸ் பெல்ஜீயத்திற்கு நாடுகடத்தப்பட்டார். அங்கு “கம்யூனிஸ்டுகளின் லீக்” என்கிற ரகசியமான பிரச்சாரச் சங்கத்தில் மார்க்ஸ் இணைந்து கொண்டார். இச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு ஏற்பவே மார்க்சும் எங்கெல்சும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை எழுதினர். 

1848 ஆம் ஆண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆவணத்தில் மார்க்சின் மேதமை முழுமையாக வெளிப்பட்டது. மார்க்சின் மேதமையும் சரி, மார்க்சின் எழுத்துக்களும் சரி எங்கெல்ஸ் என்கிற பெயருடன் இணைந்தே காணப்படுகிறது. 

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற ஆவணம் இன்றுவரை கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதில் உள்ள தகவல்கள், அணுகுமுறைகள் பழையதாக இருக்கலாம், ஆனால் அதில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகள் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. 

இந்த அறிக்கையில் தொழிலாளர்களின் கடமைகள் வலியுறுத்தப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்டுகளின் கடமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கையில் கூறப்பட்ட கம்யுனிஸ்டுகளின் கடமையை அறியாமல் எந்தக் கம்யூனிஸ்டும் மார்க்சிய வழியில் செயற்பட முடியாது என்று அடித்துக் கூறலாம். மேலும் வர்க்கப் போராட்டம் பற்றியும், கம்யூனிச சமூகத்தின், படைப்பாளியான பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றியும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதே கம்யூனிஸ்டுகளின் கடமை. 

இந்த ஆவணத்தின் விஞ்ஞானத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு, கம்யூனிஸ்டுகள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அதாவது இந்த இரண்டைப் பற்றியும் குறைந்த அளவு புரிதலுக்கு நாம் வந்தாக வேண்டும். 

மார்க்சின் தொடக்கால வாழ்க்கை நாடுகடத்தலாகவே இருந்தது. பெல்ஜியத்தில் இருந்தும் மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டார். பெல்ஜியத்தில் இருந்து ஜெர்மனியில் உள்ள கொலோன் நகருக்கு மார்க்ஸ் சென்றார். அந்த நகரில் “புதிய ரைனிஷ் பத்திரிகை”யை 1849ல் தொடங்கினார். 

ஜெர்மனியில் இருந்த மார்க்ஸ் நாடு கடத்தப்பட்டார். பாரிஸ் சென்று அங்கிருந்து லண்டன் அடைந்தார். தமது இறுதி காலம் வரை மார்க்ஸ் லண்டனிலேயே வசித்து வந்தார். 

நாடுகடத்தலுக்கு ஆளான மார்க்ஸ் மற்றும் அவரது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. உழைப்பாளர்களின் விடுதலைக்காகப் போராடிய மார்க்ஸ் இறுதிவரை மிகவும் வறுமையில் வாடினார். அதனால் உருவான உடல் சோர்வு, மற்றும் நோயினாலும் மிகவும் வருந்தினார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையில் தான் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் பாடுபட்டார். 

மார்க்ஸ் தம் குடும்பத்துடன் பட்ட கஷ்டங்களை நினைவு கூறுவதைவிட, அவர் எந்த நோக்கத்திற்காக இந்தக் கஷ்டங்களை அனுபவித்தாரோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதற்காகப் பாடுபடுவோம். இவ்வாறு தான் எப்போதும் நான் கூறுவது வழக்கம். இருந்தாலும் அவரது வாழ்வின் சிலகட்டங்களைப் படிக்கும் போது என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். 

இது பற்றி நான் எழுதிய “மார்க்ஸ் – எங்கெல்ஸ் வாழ்வும் வடைப்பும்” என்கிற நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது கண்டிப்பாகப் பெரும்பான்மையினருக்கு எனது அனுபவமே ஏற்படும் என்று நினைக்கிறேன். 

மார்க்ஸ் அனுபவித்த வறுமையைப் பற்றி லெனின் எழுதும் போது, எங்கெல்ஸ் தன்னலம் கருதாமல் மார்க்சுக்கு பண உதவி செய்யாது போயிருந்தால், “மூலதனம்” என்கிற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி மார்க்ஸ் வறுமையால் மடிந்திருப்பார். 

இவ்வளவு நேரடியாக லெனினைப் போல யாரும் எழுதியதில்லை என்பது உண்மை. ஆனால் லெனினால் இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

மார்க்ஸ்-எங்கெல்ஸ் நட்பை முழுமையாக அறிந்து கொள்வதற்கு மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படிக்க வேண்டும். 

எங்கெல்ஸ் இல்லாமல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாது. 

மார்க்ஸ் இல்லாமல் எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாது. 

இந்த இணைபிரியாத தோழர்களின் படைப்புகள் இன்றும் நமக்கு வழிகாட்டிகளே. வர்க்கப் போர் முடியும்வரை மார்க்சியமே நமக்கு வழிகாட்டி. 

அடுத்து, மார்க்சியம் எதை எதிர்த்துத் தம்மை நிலைநிறுத்தியது என்பதைப் பற்றி லெனின் கூறுகிறார். 

பாட்டாளி வர்க்க சார்பற்ற, குட்டி முதலாளித்துவச் சோஷலிசத்தை எதிர்த்தே மார்க்சியம் வளர்ந்தது. தொழிலாளர்கள் மத்தியிலும், சில இடங்களில் குட்டி முதலாளித்துவப் புரூத்தோன் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்தியது. இதனை எதிர்த்துத்தான் மார்க்சியம் தமது முதற்கட்டத்தை வென்றது. 

மார்க்ஸ் தமது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை 1844-1845ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்கிறார், அரசியல் பொருளாதாரத்தை 1859 ஆண்டு நிறைவு செய்கிறார். இந்த அடிப்படையில் தான் மார்க்ஸ் நூல்களைப் படிக்க வேண்டும். 

“கூலியுழைப்பும் மூலதனமும்” என்கிற மார்க்சின் நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் இது பற்றி விளக்கம் காணப்படுகிறது. இந்த விளக்கம் மார்க்ஸ் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியவை. 

1859க்கு முன்பு மார்க்ஸ் எழுதிய அரசியல் பொருளாதார நூல்கள், பிற்காலத்தில் எழுதிய நூல்களில் இருந்து விரும்பத் தகாதனவும் தவறானதும் தொடர்களாகவும் முழு வாக்கியங்களாகவும் இடம் பெற்றிருக்கும். அதனை 1859 ஆண்டுகளுக்குப் பிறகான மார்க்ஸ் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். 

“அரசியல் பொருளாதரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூல் 1859ஆம் ஆண்டில் வெளிவந்தது. “மூலதனம்” முதல் தொகுதி 1867 ஆம் ஆண்டில் வெளிவந்தது. “மூலதனம்” இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்சால் வெளியிடப்பட்டது.

புரட்சிகரமான நிலைமைகளில் மார்க்ஸ் நடைமுறை வேலைக்குக் கவனம் செலுத்துவார். பிற்போக்கான காலங்களில் தமது “மூலதனம்” என்கிற நூலை எழுதுவதில் கவனம் செலுத்துவார். அதாவது முதலாளித்துவப் பொருளாதார மேம்பாட்டுடன் காணப்பட்ட கட்டத்தைப் பிற்போக்கு என்றும், முதலாளித்துவ நெருக்கடிக் கட்டத்தை முற்போக்கு என்று கருதப்பட்டது. 

முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி காலத்தில் மார்க்ஸ் நடைமுறை வேலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். நெருக்கடி நீங்கிய போது தமது ஆராய்ச்சுக்கு அதிக நேரம் ஒதுக்குவார். 

1864ஆம் ஆண்டில் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. இது தான் முதல் அகிலம். 

இந்த முதலாவது ஆகிலம், மார்க்சியத்துக்கு எதிரான, பல்வேறு குட்டி முதலாளித்துவச் சோஷலிசத்தை எதிர்த்து மார்க்சியம் நிலைநிறுத்தப்பட்டது. 

சில ஆண்டுகள் சென்ற பின்பு பக்கூன்வாதிகளால் அகிலம் பிளவுபடுத்தியதை அடுத்து, அகிலம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. அகிலம் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 

முதல் அகிலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 

அகிலத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நாடுகளில் தொழிலாளர் இயக்கம் வளர்ச்சி பெற்றது. 

இந்த நேரத்தில் மார்க்சின் உடல் மிகவும் மோசமாக நலிவுற்றது. மோசமான உடல்நிலையினால் “மூலதனம்” என்கிற நூலை முழுமை செய்ய முடியாதபடி தடுத்துவிட்டது. இங்கே “மூலதனம்” நூல் முழுமை செய்யப்படவில்லை என்று லெனின் கூறியுள்ளர். 

இதே கட்டுரையில் ‘எங்கெல்ஸ் மார்சுக்கு பண உதவி செய்திராவிட்டால் “மூலதனம்” என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது’ என்றும் கூறியுள்ளார். இது ஒரு முரணைப் போல் பலருக்குத் தோன்றலாம். உண்மையில் எந்த முரணும் இல்லை. 

கோட்பாடு ரீதியாக முலதனம் நூல் முழுமையாகப்பட்டுவிட்டது, சில இடங்களில் விளக்கங்கள் போதுமான அளவுக்குக் கொடுக்கப்படவில்லை, முதல் தொகுதியைப் போல் அச்சுக்கு தயார் செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும். 

மார்க்ஸ் தமது அரசியல் பொருளாதார ஆய்வை நமக்கு முழுமையாகக் கொடுத்துள்ளார். சில இடங்களில் விளக்கங்களும் அச்சுக்குத் தாயார்ப்படுத்த வேண்டிய பணியும் தான் தடை பட்டுள்ளது. இந்த உண்மையை மனதில் கொண்டு அடுத்துச் செல்வோம். 

மார்க்சின் உடல் நிலை மிகவும் மோசமாக நலிவுற்றிருந்தது. இதனை மார்க்ஸ் நன்றாக உணர்ந்து, தமது இளைய மகள் எலினோராவிடம், இந்த “மூலதனம்” கையெழுத்துப்படிகளை எங்கெல்சிடம் கொடுத்திட வேண்டியதுதான், அவர் எதாவது செய்யட்டும் என்று கூறியுள்ளார். இதனை எங்கெல்ஸ் “மூலதனம்” இரண்டாம் தொகுதிக்கான முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மார்க்சின் மனைவியான ஜென்னி 1881ஆம் ஆண்டு மறைந்தார். இந்த இழப்பு மார்க்சை மிகவும் பாதித்தது. ஜென்னி இல்லாது இருந்தால் மார்க்ஸ் எத்தகையவராக இருந்தாரோ அத்தகையவராக இருந்திருக்க முடியாது என்று மார்க்சின் இளைய மகள் எலியனோர் கூறியது மிகப் பெரிய உண்மையாகும். இன்று நாம் பார்க்கிற மார்க்சை ஜென்னி இல்லாது இருந்தால் பார்த்திருக்க முடியாது. 

மார்க்சைப் பற்றிப் பல குற்றச்சாட்டுகள் இன்றும் வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மார்க்சின் குடும்பத்தினரிடம் ஆதாரம் இல்லை. 

மார்க்சின் குடும்பத்தினர் வறுமையிலும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். தங்களது நிலைமைகளைப் பற்றி அவர்கள் பெரியதாகக் கவலைக் கொள்ளவில்லை. மிகவும் மோசமான சில நிலையில் மட்டுமே தங்களது கஷ்டங்களை வெளிப்படுத்தி உள்ளனர். 

ஜென்னி ஒரு முறை தாம் எழுதிய கடிதத்தில், "எங்கள் நிலை குறித்துப் பொது மக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை” என்று கூறியுள்ளார். அதனால் மார்க்சின் வறுமையான வாழ்க்கையை முன்வைத்து, மார்க்சின் குடும்ப வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துபவர்களின் கூற்றை நாம் அக்கறை கொள்ளத் தேவையில்லை. 

1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள், தமது இல்லத்தில் மார்க்ஸ் நாற்காலியில் சாய்ந்தவாறே காலமானார். 

லண்டனில் உள்ள ஹைகேட் இடுகாட்டில் ஜென்னியின் கல்லரைக்கு அருகில் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார். 

மார்க்ஸ் இறப்பதற்கு முன்பே வறுமையின் கொடுமையினால் சில குழந்தைகள் இறந்து போயின. மற்ற மூன்று மகள்கள் ஆங்கிலேயே, பிரெஞ்சு சோஷலிஸ்டுகளைத் திருமணம் செய்து கொண்டனர். 

மார்க்ஸ் கல்லறையில் எங்கெல்ஸ் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறியதோடு இந்த முதல் வகுப்பை முடித்துக் கொள்வோம்.

“அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல், மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.

மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அந்த உற்பத்தி முறை தோற்றுவித்துள்ள முதலாளித்துவச் சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு விதியையும் கண்டுபிடித்தார். உபரி மதிப்புக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது…”

இதையே எங்கெல்ஸ் வேறொரு இடத்தில் மாக்சின் மாபெரும் இரு கண்டுபிடிப்புகளாக, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும், உபரி மதிப்பபையும் குறிப்பிடுகிறார். 

நாம் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றோடு மார்க்சின் போதனையும் படித்தறிவோம். 

இந்த வகுப்பில் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தோம், அடுத்த வகுப்புகளில் மார்க்சின் போதனையை அறிந்து கொள்வோம்.

வகுப்பு 2 :- “காரல் மார்க்ஸ்தத்துவஞானப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் (-லெனின்)

3 comments: