Sunday 15 November 2020

வகுப்பு 2 :- “காரல் மார்க்ஸ்” தத்துவஞானப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் (-லெனின்)

     (“செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு) 

லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைப் பார்த்து வருகிறோம். 

முதல் வகுப்பில், மார்க்ஸ் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தோம். அதில் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறே, மார்க்சிய அடிப்படையின் வரலாறு என்று பார்த்தோம். 

இந்தத் தொடர் வகுப்பில், மார்க்சிய அடிப்படைகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானச் சோஷலிசம் ஆகியவற்றைப் பார்க்கப் போகிறோம். 

மார்க்சிய போதனையைப் பற்றிக் கூறுவதற்கு முன் லெனின் முதலில் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களைப் பற்றிக் கூறியுள்ளார். இன்று அதைப் பார்த்துவிட்டுப் பொருள்முதல்வாத தத்துவம் பற்றியும் இயக்கவியல் பற்றியும் பார்க்கலாம். 

மார்க்சினுடைய கருத்துக்கள், போதனைகள் ஆகிய அனைத்தையும் மார்க்சியம் என்று கூறலாம். 19ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான சித்தாந்தப் போக்குகள் தோன்றின. 1)தத்துவம், 2)அரசியல் பொருளாதாரம் 3)சோஷலிசம். 

இந்த மூன்றும் முன்னேறிய மூன்று நாடுகளில் உருவானது. ஜெர்மனியில் தத்துவம், இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சில் சோஷலிம். மார்க்ஸ், இந்த மூன்னேறிய மூன்று சித்தாந்தங்களையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை முழுநிறைவு அடையச் செய்தார். 

இந்த முழுநிறைவே நமக்கு மார்க்சியமாகும். 

இந்த மார்க்சியமே முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களுக்கு வழிகாட்டும் கோட்பாடாகவும், வேலைதிட்டமாகவும் அமைந்தது. 

இதற்கு அடுத்து லெனின் மார்க்சின் பொருளாதாரப் போதனையை விரித்துரைப்பதற்கு முன்பாக, அவரது உலகக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம் என்கிறார். அதாவது தத்துவத்தை முதலில் பார்ப்போம் என்கிறார்.

 இன்றைய வகுப்பில் தத்துவஞானப் பொருள்முதுல்வாதம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டையும் அறிந்து கொள்ளலாம். 

தத்துவஞானப் பொருள்முதல்வாதம் 

மார்க்ஸ் தத்துவ ஆய்வு செய்யும்வரை ஒரு கருத்துமுதல்வாதியாகவே இருந்தார். ஆனால் வலதுசாரி ஹெகல் போக்கினரை விமர்சிப்பதின் மூலம் படிப்படியாகப் பொருள்முதல்வாதியாக மாறிக் கொண்டிருந்தார். மார்க்ஸ் எந்த ஆண்டு ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாகிறார் என்பதைக் காலக்கணக்கோடு லெனின் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். 

1844-45 ஆம் ஆண்டு மார்க்ஸ் முழுமையான பொருள்முதல்வாதியாகிறார். 

ஃபாயர்பாக் எழுதிய “கிறித்துவ மதத்தின் சாரம்” என்ற நூல் இடதுசாரி ஹெகல்வாதிகள் பொருள்முதல்வாதத்தற்குச் செல்வதற்குத் துணைபுரிந்தது. ஹெகலின் கருத்துமுதல்வாதத்தில் இருந்து ஃபாயர்பாக் முற்றிலும் முறித்துக் கொண்டு பொருள்முதல்வாதத்தைப் பிரகடனம் செய்தார். 

இதை லெனின் ஒரு சகாப்தத்தை உருவாக்கும் செயலாகக் கருதுகிறார். ஆனால், ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம், முரண்களோடும், முழுமை பெறாமலும் இருந்தது. மார்க்ஸ் இதை அதன் பலவீனமாகக் கருதினார். 

ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் மதத்தையும் இறையியலையும் மட்டும் எதிர்த்திடவில்லை, அப்பாலைத் தத்துவத்துவம் அனைத்தையும், அதாவது கருத்துமுதல்வாத தத்துவம் அனைத்தையும் எதிர்த்துப் போர் புரிந்தது. 

ஜெர்மன் கருத்துமுதல்வாதம் ஹெகலிடம் உச்சத்தை அடைந்தது. 

உலகத்தைத் தோற்றுவித்தது “முழுமுதல் கருத்து” (Absolute Idea) என்று ஹெகல் கருதினார். பிரபஞ்சத்தின் அடிப்படையானது நமது உணர்வுகளுக்கு அப்பால் இருக்கிற கருத்துருவங்களே என்கிறார் ஹெகல். 

இந்திய தத்துவத்தில் கூறப்படுகிற பிரமம் என்பது இத்தகையதே. பிரபஞ்சத்தைப் படைத்து ஆள்வது அந்த “முழுமுதல் கருத்து” என்பது ஹெகலின் தத்துவம். இது புறநிலை கருத்துமுதல்வாதமாகும். 

கருத்துமுதல்வாதம் இரண்டு வகைப்படும், ஒன்று புறநிலைக் கருத்துமுதல்வாதம் மற்றொன்று அகநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி இந்த உலகுக்கு அப்பால் இருக்கிறது என்று கூறுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். மனமே உலகைப் படைத்தது, என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். புறநிலையில் காணப்படும் அனைத்தும் அகநிலையின் அதாவது மனதின் படைப்பே என்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். 

ஹெகல் ஒரு புறநிலைக் கருத்துமுதல்வாதி. அவர் பிரபஞ்சத்தின் படைப்பாளரை உலகுக்கு அப்பால் இருப்பதாகக் கருதுகிறார். அந்தப் படைக்கும் சக்தி உலகுக்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். 

இந்தியாவைப் பொருத்தளவில் ராமாநுஜரும், மத்துவரும் புறநிலைக் கருத்துமுதல்வாதிகள். இருவருமே உலகத்தைப் படைத்தது பிரம்மம் என்கிற உலகத்திற்கு அப்பால் இருக்கிற சக்தி என்கின்றனர். 

அந்தச் சக்தியை அகத்தில் அதாவது மனதில் பார்ப்பவர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதி. இந்தியாவைப் பொருத்தளவில் ஆதிசங்கரர், விவேகானந்தர், ரமண மகரிஷி போன்றோர்கள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகள். மேலைநாடுகளில் அகநிலைக் கருத்துமுதல்வாதம் மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. அதில் குறிப்பிடத் தக்கவர் பெர்க்லி, மாஹியவாதிகள். 

மார்க்ஸ், ஹெகலின் கருத்துமுதல்வாதத்தை மறுத்துப் பொருள்முதல்வாதத்தை விளக்குகிறார். மூலதன நூலில் மார்க்ஸ் கூறுகிறார், “கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை.” (மூலதனம் I) அதாவது சிந்தனை என்பது பொருளாயத உலகின் பிரதிபலிப்பாகும். சிந்தனை தானே தோன்றுவதில்லை, பொருளாத உலகோடு உறவாடும் போது ஏற்படுகிறது. 

கருத்துமுதல்வாதம் சிந்தனை- கருத்து என்பதை ஒரு சிறந்த தலைவரின், அல்லது ஞானியின் படைப்பாகக் கருதுகின்றது. மார்க்சின் பொருள்முதல்வாதமானது கருத்து என்பது பொருளாயத உலகத்துடன் மனிதன் உறவாடும்போது ஏற்படுகிறது என்கிறார். 

இதையே பொருள்முதல்வாதம் வேறுவகையிலும் விளக்குகிறது. “சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை, வாழ்நிலையே சிந்தனை தீர்மானிக்கிறது.” 

வாழ்நிலை என்றால் என்ன?, 

ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உறவுகளால் ஏற்படுகிற பொருளாதார நலன்களே அவர்களின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. 

   லெனின், இந்தக் கட்டுரையில் மார்க்சின் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு, “மூலதனம்” முதல் தொகுதியின் முன்னுரை, மற்றும் எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு”, “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” ஆகிய நூல்களில் இருந்து மேற்கோள்களின் மூலம் விளக்கியுள்ளார். லெனின் காலத்தில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய “ஜெர்மன் சித்தாந்தம்” வெளியாகவில்லை. இந்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்ற நூலையும், மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் சட்டம் பற்றிய தத்துவம் குறித்த விமர்சனத்துக்குப் பங்களிப்பு" என்ற நூலின் முன்னுரையையும் மார்க்சின் பொருள்முதல்வாத தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு உதவிடும். 

உலகில் காணப்படும் இயக்கம் அனைத்தும் பருப்பொருளின் நிலைநிற்பு பாங்காகும். இயக்கம் என்பது பருப்பொருள் இல்லாமல் நிகழாது, அதே போலப் பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இந்தப் பருப்பொருளின் இயக்கம் காலத்திலும் விசும்பிலும் நடைபெறுகிறது. 

“லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” என்கிற நூல் மார்க்சிய பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒரு முழுமையான நூல் என்று கூறலாம். இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தை லெனின் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார். 

கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

இதுதான் தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி. 

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போது தத்துவத்தில் இருபெரும் பிரிவுக்குள் ஏற்படுகிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். 

உலகம் படைக்கப்பட்டது என்று கூறுகிற அனைத்து தத்துவங்களும் கருத்துமுதல்வாத முகாமை சேர்ந்தது. 

இயற்கையே முதன்மையானது, அதாவது பிரபஞ்சம் என்றும் இருக்கிறது. அதில் மாற்றங்கள் மட்டுமே நிகழ்கிறது என்று கூறுபவர்கள் பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். 

முகாம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், கருத்துமுதல்வாதத்தில் பல போக்குகள் இருக்கின்றன, அனைத்தையும் சேர்த்து கருத்துமுதல்வாத முகாம் என்று கூறப்படுகிறது. அதே போல், பொருள்முதல்வாதத்திலும் பல போக்குகள் இருக்கின்றன. அனைத்தையும் சேர்த்து பொருள்முதல்வாத முகாம் என்று அழைக்கப்படுகிறது. 

   தத்துவத்தில் இரண்டு போக்கு தான் இருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். இதற்கு அப்பாற்பட்டோ, இடைப்பட்டோ எந்தத் தத்துவமும் கிடையாது. 

அடுத்து லெனின் சுதந்திரத்துக்கும் அவசியத்திற்கும் இடையே உள்ள உறவு பற்றிப் பேசுகிறார். எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் இருந்து ஒரு மேற்கோளின் மூலம் லெனின் இதனை விளக்குகிறார்.

 “அவசியத்தை அறிந்து ஏற்றுக் கொள்வதுதான் சுதந்திரம். அவசியம் என்பது நாம் புரிந்து கொள்ளாத வரை, கண்மூடித்தனமாக இருக்கும்”

(டூரிங்குக்கு மறுப்பு). 

வர்க்க சமூகத்தில் முழுச் சுதந்திரம் என்பது கிடையாது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அவசியமானது எது? என்பதை அறிந்து அதன் வழியில் செல்வதே சுதந்திரமானதாகவும் வெற்றி பெறக்கூடியதாகவும் இருக்கும். வர்க்க சமூகத்தில் நமது பயணம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அவசியத்தை அறிந்து அதன் வழியில் செயல்பட வேண்டும். 

இயற்கையிலும், சமூகத்திலும் “புறநிலை விதிகள்” செயற்படுகின்றன, அதனை மீறி எதையும் செய்திட முடியாது. 

அந்த விதியை அறிந்து கொண்டால், அதன் அடிப்படையில் பலவற்றைச் சாதிக்கலாம். 

புவி ஈர்ப்பு விசை என்பது புறநிலையானது. இந்தப் புவிஈர்ப்பு விசையை மீறி விண்ணிற்கு ராக்கெட் அனுப்படவில்லை. புவி ஈர்ப்பு விசையை அறிந்து கொண்டதினால் தான் சிறப்பாக ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப முடிகிறது. புவி ஈர்ப்பு விசையை எவ்வளவுக்கு எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றி கிட்டும். 

இதைத் தான் பொருள்முதல்வாதம் அவசியத்தை அறிந்து கொள்வதே சுதந்திரம் என்கிறது. 

புவி ஈர்ப்பு விசை என்பது இயற்கை பற்றியதாகும். சமூகமும் புறநிலை விதிக்குள் தான் செயற்படுகிறது. அதனை அறிந்து கொண்டால், சுதந்திரமாகச் செயற்பட்டாலாம். 

இயற்கைக்கும் சமூகத்திறகும் உள்ள புறநிலை விதியில் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. 

இயற்கை விதி மனிதனை சாராது இருக்கிறது. ஏன் மனித இனம் தோன்றாத காலத்திலும் இயற்கை செயற்பட்டது. ஆனால் சமூகம் என்பது உணர்வுள்ள மக்களின் செயற்பாடாகும், இந்தச் செயற்பாட்டைத் தீர்மானிப்பது புறநிலையாகும். 

சமூகத்தின் புறநிலை விதியானது, மனிதனின் மூலம் செயற்படுகிறது. புறநிலை விதி தானே செயற்படமுடியாது, மனிதனைக் கொண்டே செயற்படுகிறது. இதுதான் இயற்கைக்கும் சமூகத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. 

அடுத்து, லெனின் மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசுகிறார். மார்க்சுக்கு முன்பு காணப்பட்ட பொருள்முதல்வாதம், பெருமளவுக்கு எந்திரத்தனமாக இருந்தது. 

இயற்பியல், வேதியல், உயிரியல், மின்னியல் போன்ற நவீனமான முன்னேற்றத்தை பழைய பொருள்முதல்வாதம் கணக்கில் கொள்ளவில்லை. இது பழைய பொருள்முதல்வாதத்தின் முதல் குறைபாடு என்கிறார் லெனின். 

இரண்டாவது குறைபாடு, வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில், வரலாறுக்குப் புறம்பாகவும், இயக்கவியலுக்கு மாறாகவும் காணப்பட்டது. 

மூன்றாவது குறைபாடு, “மானித சாரம்” என்பதைச் சூட்சுமமாகவே பார்த்தது. 

சமூக உறவுகளின் ஒரு தொகுதியே இந்த “மானித சாரம்” என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. 

பொருள் உற்பத்தியின் போது ஏற்படுகிற உறவுகளில் தோன்றும் பொருளாதார நலன்களின் வெளிப்பாடே சிந்தனை - என்பதைப் பழைய பொருள்முதல்வாதம் அறிந்து கொள்ளவில்லை. அதாவது உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கைக்காக உழைக்கும் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகளே, உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகளின் நலன்களின் அடிப்படையில் தான், அவரவருக்கான சிந்தனைகள் தோன்றுகிறதன. 

இதனை மார்க்ஸ் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் தெளிவாக விளக்கி உள்ளார். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம். 

இயக்கவியல் 

அடுத்து இயக்கவியல். இது தொடக்கக் காலத்தில் தர்கவியல் என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பிய தத்துவவாதிகள் தொடக்கத்தில் இயக்கவியல்வாதிகளாகவே இருந்தனர். ஆனால் அது அவர்களுக்குப் பின் கைவிடப்பட்டது. வெகு காலத்திற்குப் பிறகு ஹெகல் என்கிற கருத்துமுதல்வாதத் தத்துவவாதி இயக்கவியலை மீண்டும் கொண்டு வருகிறார். 

மீண்டும் இயக்கவியலை ஹெகல் கொண்டு வந்ததை, மார்க்ஸ் பெரும் சாதனையாகக் கருதினார். 

இயக்கவியலானது வளாச்சியைப் பற்றியும், மாற்றத்தைப் பற்றியும் உள்ள விதியாகும். 

இயக்கவியலானது வளர்ச்சியைப் பற்றிய விதியாகும். இயக்கவியலுக்கும் பரிணாமவாதத்துக்கு வேறுபாடு இருக்கிறது. இந்தப் பரிணாமவாதத்தையும் டார்வினின் பரிணாமத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பக்கூடாது. 

பரிணாமவாதமானது வளர்ச்சியை ஒரு தொடர் நிகழ்வாகப் பார்க்கிறது. அதவாது தொடக்க நிலையில் இருந்த முதலாளித்துவம், பின்பு ஏகாதிபத்தியமாக, உலகமயமாக, நிதி மூலதனமாக மாறிக் கொண்டே இருக்கும். 

முதலாளித்துவத்துக்கு மாற்று உண்டு என்பதைப் பரிணாமவாதம் மறுக்கிறது. 

ஆனால் இயக்கவியலானது ஒன்று வளர்ச்சி அடையும் போது அதன் முரண் முற்றி அந்த நிலையை அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற நிலையை மறுத்து சோஷலிச உற்பத்தி முறை என்கிற புதிய சமூகத்திற்கு மாறுவதைப் பற்றிக் கூறுகிறது. 

பரிணாமவாதமானது ஒன்றுக்குள்ளே ஏற்படுகிற மாற்றத்தை மட்டுமே கூறுகிறது. அந்த ஒன்று மற்றொன்றால் நிலை மறுக்கப்படும் என்பதைப் பார்க்கவில்லை. 

இந்த இயக்கவியல் என்கிற பகுதியை லெனின், எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் சித்தாந்தத்தின் முடிவும்” என்ற நூலின் அடிப்படையில் விளக்கி உள்ளார். பல மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். 

இயக்கவியலுக்கு நீருபணம் இயற்கை தான். இயற்கையின் வளர்ச்சி இயக்கவியல் வகைப்பட்டதே, அப்பாலைத் தத்துவம் கையாள்கிற இயக்கமறுப்பியல் அணுகுமுறையானது தவறு என்பதை நவீன இயற்கை விஞ்ஞானம் தொடர்ந்து நிரூபித்துவருகிறது. 

அடுத்து, எங்கெல்சின் எழுத்துக்களின் மூலம் லெனின், உலகத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார். உலகமானது அப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. 

இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் காணும் பொருட்கள், மாற்றம் அடையாதவைப் போல வெளித் தோற்றத்தில் தெரிகிறது. ஆனால் அந்தப் பொருட்கள், உள்முரண்பாட்டில் மாறிக் கொண்டும் வளர்ச்சி அடைந்து கொண்டும் இருக்கிறது. இயக்கவியலின் விதி இதைத்தான் கூறுகிறது. 

அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி. (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes) 

உலகில் காணப்படும் பொருட்கள் தம்முள் மாறிக் கொண்டும், அடுத்தப் பொருளோடு இணைந்து மாறிக் கொண்டும் இருக்கிறது. எந்தப் பொருளும் தனித்துக் காணப்படுவதில்லை, ஒவ்வொரு பொருளோடும் இணைந்தும் பிணைந்தும் காணப்படுகிறது. 

ஒரு தனிப் பொருளில் அளவு மாறுபாடு எவ்வாறு பண்புநிலையில் மாறுபாடு அடைகிறது என்பதைப் பார்ப்போம். 

ஹெகல் காலத்தில் இருந்தே “நீர்” என்கிற எளிய உதாரணத்தையே முதலில் எடுத்துக் கொள்வது வழக்கம். 

இது ஒரு எளிய உதாரணமே. ஒவ்வொரு உதாரணமும் அந்த விதியின் சில பகுதியைத் தான் விளக்குகிறது. அதனால் குறிப்பிட்ட உதாரணத்தை முழுமையாகக் கொண்டு விதியைப் புரிந்து கொள்ளக்கூடாது. முதலில் எளிய உதாரணத்தின் மூலம் அறிந்து கொண்டு, பிறகு சிக்கலான மேம்பட்ட உதாரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். இங்கே நாம் எளிய உதாரணத்தை மட்டுமே பார்க்கப் போகிறோம். 

நீரானது திரவ நிலையில் இருக்கிறது. அது சூடேற்றப்படும் போது அது ஆவியாக மாறிவிடுகிறது. இதை அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் சூடேறத் தொடங்கிய உடன் நீர் ஆவியாகிவிடுவதில்லை. அதன் கொதிநிலை படிப்படியாக அளவு மாற்றம் நிகழ்கிறது. 

அதன் கொதி நிலை 100 டிகிரியை எட்டிய உடன் திரவ நிலையில் உள்ள நீரானது ஆவியாக மாறிவிடுகிறது. 

திரவம் என்கிற குணத்தில் இருந்து ஆவி என்கிற புதிய குணத்தைப் பெறுகிறது. நீரை கொதிக்க வைத்தவுடன் இந்த மாற்றம் நிகழ்வதில்லை. கொதிநிலை படிப்படியாக அளவு மாற்றம் ஏற்பட்டு 100 டிகிரி என்கிற அளவைத் தொட்டவுடன் ஆவியாக மாறுகிறது. 

அளவுநிலை மாற்றம் குறிப்பிட்ட அளவைத் தொட்டவுடன் பழைய குணத்தை விடுத்து புதிய குணத்தைப் பெறுகிறது. 

இயக்கவியல் விதிக்கு எதுவும் இறுதியானது கிடையாது, பரமமானது கிடையாது, புனிதமானது கிடையாது என்கிறது. புனிதம் என்றால் மாறாதது என்பது தான் பொருள். இயக்கவியல், ஒவ்வொன்றின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. 

ஹெகலின் இயக்கவியலை மார்க்ஸ் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதி ஆனதால் அவரது இயக்கவியலிலும் கருத்துமுதல்வாத மாயத் தன்மை காணப்படுகிறது. அந்த மாயத் தன்மையை நீக்கி இயக்கவியலை பொருள்முதல்வாதத் தன்மையினதாக வளர்த்து எடுக்கிறார் மார்க்ஸ். 

அறிவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை “அறிவுத் தோற்றவியல்” என்கிற தத்துவப் பிரிவு ஆராய்கிறது. 

இயக்கவியல் வளர்ச்சியை, ஒரு சுருள்வளர்ச்சியாக விளக்குகிறது. ஒரு கட்டத்தைக் கடந்து சென்றது பின் மீண்டும் வருவது போல் தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. 

ஆதிபொதுவுடைமை சமூகம் நிலை மறுக்கப்பட்டு அடிமை சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் அடிமைச் சமூகம் மறுக்கப்பட்டு நிலப்பிரத்துவச் சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் நிலப்பிரபுத்துவச் சமூகம் மறுக்கப்பட்டு முதலாளித்துவச் சமூகம் நிலைபெற்றது, அதன் வளர்ச்சிக் கட்டத்தில் முதலாளித்துவச் சமூகம் மறுக்கப்பட்டுப் பொதுவுடைமை சமூகம் நிலைபெற்றது. 

முதலில் காணப்பட்ட ஆதிபொதுவுடைமை சமூகமே மீண்டும் தோன்றியதாகக் கருதக்கூடாது. ஆதிபொதுவுடைமை சமூகத்தைவிட இந்த நவீன பொதுவுடைமை சமூகம் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகும். ஆதிபொதுவுடைமை சமூகத்தில் பற்றாக்குறையான நிலைமைகள் சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. நவீன பொதுவுடைமை சமூகத்தில் வளாச்சி அடைந்த உற்பத்திச் சாதனங்களால் சமூகத்திற்குப் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

முந்தியதைவிட உயர்ந்த நிலையை அடைந்துள்ளதைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

இந்த மாற்றத்தைத் தான் இயக்கவியலின் “நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி” (The Law of the Negation of the Negation) என்கிற விதி விளக்குகிறது. 

ஒவ்வொரு நிலைபெற்றதும் மற்றொன்றால் நிலை மறுக்கப்படும் என்பதே இந்த விதி விளக்குகிறது. அதனால் இந்த விதியில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. 

அடுத்து, எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி. (The Law of the Unity and Struggle of Opposites) 

இந்த விதி ஒன்றினுள் ஏற்படுகிற முரண்பாட்டில் காணப்படும் ஒற்றுமையையும் சேர்த்து விளக்குகிறது. ஒரு பொருளின் இருப்பு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. ஒன்று முரண்பாடு மற்றொன்று ஒற்றுமை. 

எதிர்நிலைகளின் ஒற்றுமை, அவற்றிடையேயான போராட்டம் என்ற இரண்டையும் பெற்றிருக்கின்றது. போராட்டம் என்பதை முரண்பாடு என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

முரண்பாடு என்னும்போது அவற்றில் ஒன்று இல்லாமல் ஒன்று இருக்க முடியாது என்ற வகையில் இணைந்தே காணப்படுகிறது. 

முதலாளித்துவச் சமூகத்தில் முரண்பாடு என்பது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே காணப்படுகிறது. முதலாளித்துவத்தில் தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை. அதே போல் முதலாளி இல்லாமல் தொழிலாளியும் இல்லை. 

இருவரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் உற்பத்தி நிகழாது, உற்பத்தி நிகழ்வதற்கான ஒற்றுமை இருந்தாக வேண்டும். 

ஒற்றுமை ஒப்பீட்டுத் (Relative) தன்மையானது, அவற்றிடையே நடைபெறும் போராட்டம் அறுதியானது (absolute). 

ஒற்றுமை ஒப்பீடானது அதாவது அது இறுதிவரை தொடர்வதில்லை, ஒற்றுமை பலவீனபட்டுக் கொண்டே சென்று மறைந்துவிடும், ஆனால் போராட்டமானது இறுதிவரை வளர்ச்சி அடைந்து கொண்டே முதலாளித்துவத்தை வீழ்த்தும் வரை செல்கிறது. 

இயற்கையைப் புரிந்து கொள்வதற்கும், சமூகத்தை-வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும் இயக்கவியலைப் அறிந்து கொள்வது அவசியமானதாகும். 

இயக்கவியல் விதி மூன்றையும் சுட்டிக்காட்டுவதோடு, இன்றைய வகுப்பை முடித்துக் கொள்வோம்.. 

1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.

      (The Law of the Transformation of Quantitative into Qualitative Changes) 

2. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி

    (The Law of the Negation of the Negation) 

3. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.

     (The Law of the Unity and Struggle of Opposites) Struggle of Opposites)

வகுப்பு 3 :- “காரல் மார்க்ஸ் – வரலாற்றியல் பொருள்முதல்வாதம் - வர்க்கப் போராட்டம் (-லெனின்)


No comments:

Post a Comment