(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு)
லெனின் எழுதிய “காரல் மார்க்ஸ்” (மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்) என்ற கட்டுரையைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
போன வகுப்பில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டையும் பார்த்தோம். அதில் பருப்பொருள் என்பது மனிதனை சாராது புறத்தே இருக்கிறது. உலகில் நடைபெறும் அனைத்து இயக்கமும் பருப்பொருளைச் சார்ந்தே நடைபெறுகிறது. பருப்பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை, இயக்கம் இல்லாமல் பருப்பொருள் இல்லை என்பதைப் போன வகுப்பில் பார்த்தோம்.
இன்றைய வகுப்பில் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம் - வர்க்கப் போராட்டம்” ஆகிய இரண்டையும் பார்க்கப் போகிறோம்.
மார்க்ஸ் பழைய பொருள்முதல்வாதத்தில் உள்ள குறைபாட்டை அறிந்து கொண்டவுடன், சமூகத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கம் கொடுத்தார்.
வாழ்நிலையில் இருந்து உணர்வு தோன்றுகிறதே அன்றி, உணர்வில் இருந்து வாழ்நிலை தோன்றுவது இல்லை.
இது தான் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்நிலை என்பது பற்றி, போன வகுப்பில் பார்த்தோம். அதை மீண்டும் ஒரு முறை நினைவில் பதிய வைத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு மனிதனும் தமது வாழ்வாதரத்துக்காக வேலை செய்யும் போது பொருளாதார உறவுகள் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளே உற்பத்தி உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி உறவுகளே வாழ்நிலை எனப்படுகிறது.
இந்த வாழ்நிலை என்கிற உற்பத்தி உறவுகளில் இருந்து தான் சிந்தனை தோன்றுகிறது, அதாவது உணர்வு தோன்றுகிறது. சிந்தனையில் இருந்து வாழ்நிலை அதாவது உணர்வு தோன்றுவது இல்லை.
வாழ்நிலையில் இருந்து சிந்தனை தோன்றுகிறது என்பது பொருள்முதல்வாத கண்ணோட்டம்.
சிந்தனையில் இருந்து வாழ்நிலை
தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாத கண்ணோட்டம்.
தனி மனிதனது உணர்வுநிலை அவனது வாழ்நிலையில் இருந்து தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. அதே போலத்தான் சமூக உணர்வு என்பதும் சமூக வாழ்நிலையில் இருந்தே தோன்றுகிறது என்று பொருள்முதல்வாதம் விளக்குகிறது.
முதலாளிகளின் வர்க்க உணர்வும், தொழிலாளர்களின் வாக்க உணர்வும் இந்தச் சமூக வாழ்நிலையில் இருந்து தான் தோன்றுகிறது. இதனை மார்க்சின் “மூலதனம்” நூல் தொகுதி ஒன்றில் இருந்து மேற்கோள்களின் மூலம் லெனின் விளக்குகிறார்.
மனிதன் உயிர்வாழ்வதற்கு உரிய உற்பத்தி முறையின் போது ஏற்படுகிற உற்பத்தி உறவுகளில் இருந்து தான் கருத்துக்கள் சிந்தனைகள் ஏற்படுகிறது.
அடுத்து லெனின், மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலின் முன்னுரையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளைக் கொடுத்துள்ளார். இதுதான வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை.
இந்த அடிப்படையில் தான் அரசியல் பொருளாதாரமும் அணுகப்பட்டுள்ளது. அதனால் கம்யூனிஸ்டுகள் இந்த மார்க்சின் மேற்கோளை பல முறை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் அதன் சுருக்கத்தையும்-சாரத்தையும் தருகிறேன். இதனைப் புரிந்து கொண்டு, இந்த மார்க்சின் நேரடியான எழுத்துக்களைப் படித்துச் சொந்தமாகப் புரிந்து கொள்ள வேண்டியது. ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும்.
மார்க்ஸ் தன்னுடைய முன்னுரையில், கூறுகிறார் தாம் உருவாக்கிய இந்தப் பொதுவான முடிவு, தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கோட்பாடாக ஆனது என்று கூறியுள்ளார். மார்க்சுக்கு வழிகாட்டும் கோட்பாடே நமக்கும் அதாவது மார்க்சியவாதிகளுக்கும் கோட்பாடாகும். அதனால் இதனை ஆழ்ந்து படித்துப் புரிந்து செயற்பட வேண்டும்.
வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தைச் சுருக்கமாக நமக்கு இந்த முன்னுரையில் மார்க்ஸ் தந்துள்ளார்.
மனிதர்கள் தங்களது வாழ்க்கைக்காக உழைத்திடும் போது, சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதனது மனதைச் சாராமல் புறநிலையில் இருக்கிறது.
ஏன் மனிதனை சாராமல் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது என்றால், மனிதனது விருப்பபடி உற்பத்தி உறவுகள் உருவாவது இல்லை.
உழைப்பவர்கள் பயன்படுத்துகிற, உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் தான் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகள் தோன்றுகிறது.
மார்க்ஸ் இங்கே உற்பத்தி சக்திகள் என்று கூறுவது கருவிகள், இயந்திரங்கள் போன்றவையே. உற்பத்தி உறவுகள் மனிதர்களிடையே தான் நடைபெறுகிறது, ஆனால் அதனை உற்பத்திக் கருவிகளே மனிதர்களது உழைப்பை நிர்ணயிக்கின்றன.
உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே, சமூகத்தின் பொருளாதார அமைப்பாகவும், சமூகத்தின் உண்மையான அடித்தளமாகவும் அமைகிறது. இந்த அடித்தளத்துக்குப் பொருந்தக்கூடிய சமூக உணர்வுகள் குறிப்பிட்ட வடிவங்களாக மேற்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது.
உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே அடித்தளம், இதன் மீது சட்டம், மதம், கலை, தத்துவம், அரசியல் போன்ற மேற்கட்டமைப்பு ஏற்படுகிறது.
அடித்தளமே மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. தாக்கம் என்பது அடித்தளத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம், அல்லது தாமதப்படுத்தலாம். மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு இதைத்தான் கூறுகிறது. இதற்கு மாறாக அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்வரம் வினைவுரிகிறது என்று கூறுவது மார்க்சின் கோட்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளததின் விளைவாகும்.
அடித்தளம் தான் தீர்மானிக்கிறது என்றால், வாழ்நிலை தான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று பொருள், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் சிந்தனை வாழ்நிலை தீர்மானிக்கிறது என்று பொருள். அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாத கண்ணோட்டம், மேற்கட்டமைப்புத் தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாத கண்ணோட்டம். இதனை மறுத்து இரண்டும் தீர்மானிக்கிறது- பரஸ்பரம் வினைபுரிகிறது என்பது கதம்பவாதக் கண்ணோட்டமாகும். இந்தக் கதம்பவாத கண்ணோட்டம் எத்தகைய முற்போக்கான வேடம் போட்டாலும் இது இறுதியில் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தையே சென்று சேரும்.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டமைப்பு முழுவதையும் விரைவாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றி அமைக்கின்றன.
சமூக உற்பத்தி சக்திகளுக்கும். உற்பத்தி உறவுகளுக்கும் இடையே தோன்றுகிற மோதலைக் கொண்டு தான் சமூக உணர்வை விளக்க வேண்டும். அதாவது அன்றைய சமூக உற்பத்தி சக்திகளுக்கும் அதனால் தோன்றுகிற உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் தான் சமூக உணர்வு தோன்றுகிறது.
அடித்தளத்தின் மேம்பட்ட
வளர்ச்சிக்கு ஏற்ப, மேற்கட்டமைப்பு வளர்ச்சி பெற முடியாத போது, சமூகப் புரட்சிக்கான சகாப்தம் தொடங்குகிறது.
அடித்தளத்தின் வளர்ச்சிக்கு
மேற்கட்டமைப்புத் தடையாகப் போகும் போது அது தூக்கி எறியப்படுகிறது. ஏன் என்றால் அடித்தளம்
தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது.
இது தான் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் சுருக்கமும் சாரமும் ஆகும்.
இதற்கு அடுத்து, மார்க்சுக்கு முன்பு காணப்பட்ட வரலாறு பற்றிய கண்ணோட்டத்தின் இரண்டு குறைபாட்டை லெனின் எடுத்துரைக்கிறார்.
முதலாவது குறைபாடு, மனிதர்களின் வரலாற்று நடவடிக்கைகளின் சித்தாந்த நோக்கை மட்டுமே ஆராய்ந்தது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கவில்லை. சமூகத்தில் காணப்படும் புறநிலை விதிகளைப் பழைய கண்ணோட்டம் புரிந்து கொள்ளவே இல்லை.
மனிதனிடத்தில் இந்தச் சிந்தனை ஏன் தோன்றியது என்பதை நோக்காமல், சிந்தனையில் இருந்தே தமது ஆராய்ச்சியைத் தொடங்கியது. மனிதனிடத்தில் குறிப்பிட்ட சிந்தனை ஏன் தோன்றியது என்பதைப் பழைய தத்துவங்கள் கணக்கில் கொள்ளவே இல்லை.
இரண்டாவது குறைபாடு, பழைய கண்ணோட்டங்கள் மக்கள் திரளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவே இல்லை.
வரலாற்றியல் பொருள்முதல்வாதமானது பழைய கண்ணோட்டத்தில் காணப்பட்ட அகநிலைப் பார்வை கைவிட்டு, சமூகத்தில் காணப்படும் கருத்துக்கள் பொருளாயத உற்பத்தி சக்திகளின் நிலைமையிலேதான் வேர் கொண்டுள்ளது என்று விளக்கியது.
மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு முன்னுள்ள சமூக உற்பத்தி சக்திகளுக்கும் அதனால் உருவான உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் தான் மக்கள் தங்களது வரலாற்றை உருவாக்குகின்றனர். இதனை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தை நமக்குச் சுட்டிக்காட்டுவதின் மூலம் லெனின் நமக்கு விளக்குகிறார்.
உற்பத்திச் சாதனங்களே, உழைப்பின் ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கிறது என்பதே தமது கோட்பாடு என்று மார்க்ஸ் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். இதுவோ மார்க்சியத்தின் விஞ்ஞானவழிப்பட்ட வழிமுறையாகும்.
இதற்கு மாறாக நமது நாட்டில் பல மார்க்சிய மேதாவிகள்!!! உழைப்புக்கு மட்டுமே தனித்த முன்னுரிமை கொடுக்கின்றனர். இந்தப் போக்கு மார்க்சுக்கு எதிரானதாகும். தங்களது போக்கிற்கு ஏற்ப மார்க்சியத்தைத் திரித்துரைக்கின்றனர் அந்த மேதாவிகள். அந்த மேதாவித்தனங்கள் எல்லாம் மார்க்சிய எழுத்திற்கு முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது.
உழைக்கும் மக்களுக்கு மார்க்சினுடைய விஞ்ஞான வழிபட்ட கண்ணோட்டமே வழிகாட்டி ஆகும்.
வர்க்கப் போராட்டம்
சமூகத்தில் சிலருடைய விருப்பங்கள் பலருடைய விருப்பங்களுடன் மோதுகின்றன. அதற்கு அந்தச் சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளே காரணம் ஆகும். இந்த வேறுபாடுகள் மனிதர்களைச் சாராமல் அந்தச் சமூகத்தின் உற்பத்தி முறையில் காணப்படுகிறது.
அதுவே சமூகத்தில் விருப்பங்களாகவும் மோதல்களாகவும் வடிவம் எடுக்கிறது.
சமூகத்தில் ஏற்றக் காலங்களும் இறக்கக் காலங்களும் மாறிமாறி வருவதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
சமூகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்குக்
காரணம் இருக்கின்றன, என்றும் அதற்கான ஆளும் விதிகள் உள்ளன என்பதை மார்க்சியம் கண்டுபிடித்துத்
தந்துள்ளது, அது தான் வர்க்கப் போராட்டம்.
வர்க்கப் போராட்டமானது
தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. அந்தந்தக் கால உற்பத்தி
முறையில் காணப்படும் முரண்பாடுகளே வாக்கப் பிரிவாக – வர்க்க மோதலாக வெளிப்படுகிறது.
சொத்துடைமை சமூகம் தோன்றியது முதல், அதாவது இந்தப் பழங்குடி சமூகத்தின் சிதைவின் போது வர்க்கங்கள் தோன்றின.
நவீன சமூகத்தில் உள்ள ஒவ்வொரு வர்க்கத்தின் நிலைமைகளைப் பற்றிய புறநிலையிலான ஆராய்வு விஷயமாகச் சமூக விஞ்ஞானம் என்ன செய்ய வேண்டும் என்பதை மார்க்ஸ் தமது “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யின் வாயிலாகச் சுட்டிக்காட்டுகிறார். இங்கே லெனின் அறிக்கையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளை தருகிறார். அதை அப்படியே பார்த்துவிட்டு அதில் கூறப்பட்டதை அடுத்துப் பார்க்கலாம்.
“இன்று
முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம்
மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீனத் தொழிலினது
வளர்ச்சிக்கு முன்னால் நலிவுற்றுச் சிதைந்து, முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீனத் தொழிலுக்கே
உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது.
மத்தியதரப் படிநிலைகளின் கீழ் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி - இவர்கள் எல்லோரும் தொடர்ந்து தாம் மத்தியதரப் படி நிலைகளின் கூறுகளாய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆகவே, இவர்கள் பழமைப் பற்றாளர்களே அன்றிப் புரட்சித்தன்மை பெற்றவர்கள் அல்லர். அது மட்டுமல்ல, இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட; ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள். சந்தர்ப்பவசமாய் இவர்கள் புரட்சிகரமாய் இருப்பார்களாயின், இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குப் போய்விடும் தறுவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம்; இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல; பாட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையை ஏற்கும் பொருட்டு, தமது சொந்த நோக்கு நிலையைக் கைவிடுகிறார்கள்.''
சிறுதொழில் புரிபவர்கள் பிரமாண்டமான முதலாளித்துவ உற்பத்திக்கு ஈடுகொடுக்க முடியாமல் போராடுகின்றனர். உண்மையாக முதலாளித்துவ உற்பத்திக்கு முன்பாக இவர்களால் வெற்றி பெற முடியாது, அதுமட்டுமல்லாது, அவர்கள் முதலாளித்துவ உற்பத்தியை எதிர்ப்பது, சிறுதொழில் நடத்துவதற்கே முனைகின்றனர். இவர்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னோக்கி இழுக்குகிறார்கள். அதனால் இவர்கள் பிற்போக்கானவர்களே.
சந்தர்ப்ப சூழ்நிலைமைகளால் இவர்கள் புரட்சிகரமாக- முற்போக்கு உடையவர்களாகப் பேசத் தொடங்குகிறார்கள் என்றால், இவர்கள் முதலாளித்துவத்தால் வீழ்த்தப்பட்டுப் பாட்டாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருளாகும்.
நவீன முதலாளித்துவ உற்பத்தியின் முன், மற்ற வர்க்கங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில், அனைத்து வர்க்கத்தைக் காட்டிலும் புரட்சிகரமான வர்க்கமாகப் பாட்டாளி வர்க்கம் காணப்படுகிறது. இதற்குக்குக் காரணம் பிற வர்க்கங்கள் நவீனத் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போகின்றது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே நவீன தொழிலில் நேரடியாக ஈடுபடுவதனாலும், அந்த உற்பத்தியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பாதிக்கப்படுவதினாலும், பாட்டாளி வாக்கம் புரட்சிகரமாக முதலாளித்துவத்துடன் மோதுகிறது.
அதனால் தான், முதலாளித்துவ உற்பத்தில் காணும் முரண்பாட்டின் நேரடி விளைவாகப் பாட்டாளிகள் இருப்பதனால், அவர்கள் புரட்சிகரமாகச் செயற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பிற வர்க்கங்கள் முதலாளித்துவ நவீன உற்பத்தி முறைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போகிறது, ஆனால் பாட்டாளி வர்க்கம் மட்டுமே முதலாளித்துவ முரண்பாட்டை எதிர்த்துப் போராடுகிறது.
வரலாற்றுத் துறையைப் பற்றி மார்க்ஸ் எழுதிய பலநூல்களை லெனின் பிற்சேர்க்கையாக, பட்டியல் இட்டிருந்தார். ஆனால் இதனை முதன்முறையாகப் பதிப்பிக்கும் போது அந்தப் பட்டியல் விடுபட்டுள்ளது. பின்னாலில் அது கிடைக்காமலே போய்விட்டது. இருந்தாலும் அதில் உள்ள நூல்களை அறிய முடிகிறது, கடிதங்கள் மட்டும் எவை என்று ஒரளவுக்குத் தான் சரியாகக் காண முடிகிறது.
ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டம் தான். தொழிலாளர்களின் வாக்கப் போராட்டம் வெறும் பொருளாதாரப் போராட்டமாகவோ, சித்தாந்தப் போராட்டமாகவோ நின்று போவதில்லை. அது அரசியல் போராட்டமாக வலுப்பெறுகிறது. அதனால் தான் பாட்டாளி வர்க்கமானது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்குப் போராடுகிறது.
இந்தப் பகுதியின் இறுதியில் லெனின், மார்க்சின் கோட்பாடு மிகவும் ஆழ்ந்த முழுமையான வகையிலும், விவரமாகவும் உறுதிப்படுத்திச் செயல்படுத்த வழிக்காட்டுவது மார்க்சின் பொருளாதாரப் போதனையே என்று கூறியுள்ளார்.
அடுத்த வகுப்பில் மார்க்சின்
பொருளாதாரப் போதனையைப் பற்றிப் பார்ப்போம். மார்க்சின் பொருளாதாரத்தை அறிந்து கொள்வதற்கு,
பொருளாதாரத்தின் வர்க்க சார்பை அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு மார்க்சின் வரலாற்றியல்
பொருள்முதல்வாதப் புரிதல் அவசியமாகிறது. இன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பார்த்தோம்.
அடுத்த வகுப்பில் மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வோம்.
வகுப்பு 4 :- “காரல் மார்க்ஸ்” – மார்க்சின் பொருளாதாரப் போதனை (-லெனின்)
No comments:
Post a Comment