(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
53 வது வார வகுப்பு – 12-03-2022)
மாவோவின் மேற்கோள்களைக் கொண்ட நூலான “செவ்வேடு” என்பதையே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம். இந்த நூலின் முழுப்பெயர் “மாசேதுங்கின் மேற்கோள்கள்” இதனை “செவ்வேடு” அல்லது “சிறிய செவ்வேடு” என்றும் அழைக்கப்படுகிறது.
1927 முதல் 1964வரை மாவோ பேசிய உரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள், 33 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மொத்த மேற்கோள்கள் 427.
இந்த செவ்வேடு என்கிற சிறிய நூல் சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியின் போது, 1964 முதல் 1976 வரை பரவலாக வினியோகிக்கப்பட்டது. அதன் பிறகு பல அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழில் “புதிய ஜனநாயகம்” 1987 ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டது. தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டது. புதியதாக மார்க்சியத்தைப் படிப்பவர்கள் இந்த நூலை தொடக்கத்தில் படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது இது ஒரு மேற்கோள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த மேற்கோள்கள் எந்த சூழ்நிலையில் எதற்காகக் கூறப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மேற்கோள் சுட்டும் நூலை எடுத்துப் படிக்க வேண்டும். ஒரு பொதுப் புரிதலுக்கு இந்த மேற்கோள்கள் போதுமானது, ஆனால் ஆழமான புரிதலுக்கு அந்தந் நூல்களை எடுத்து முழுமையாகப் படிக்க வேண்டும்.
ஏன் என்றால், மேற்கோள்களை மட்டும் படிப்பது பல தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், “"துப்பாக்கிக் குழலில் இருந்து அரசியல் அதிகாரம் வளர்கிறது." என்கிற உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் புரிந்துகொள்ள வேண்டும்.” இது மாவோவின் மிகவும் புகழ்பெற்ற மேற்கோள். ஆனால் இதை தவறாகவே பலரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அனைத்தையும் துப்பாக்கி தான் தீர்மானிக்கப்படுகிறது என்று புரிந்து கொண்டவர்களே அதிகம். இந்தத் தவறானப் புரிதல் அதிதீவிர இடதுபோக்கிற்கே இட்டுச் செல்லும். துப்பாக்கி தான் அனைத்தையும் தீர்மானிக்கப்படுகிறது என்பது மாவோவின் கருத்தல்ல.
“போரில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான காரணி, ஆனால் தீர்மானகரமான காரணி அல்ல; மக்களே தீர்மானகரமானவர்கள், பொருள் அல்ல” இதுவும் மாவோவின் மேற்கோள்தான். இதனை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களே, தவறாகப் புரிந்து கொள்கின்றனர். “துப்பாக்கி மீது, கட்சி கட்டளையிடுகிறது, கட்சியின் மீது துப்பாக்கி கட்டளையிடுவதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இதுவே நமது கோட்பாடு.”
இதுதான் மாவோவின் கருத்து. இதன் அடிப்படையில்தான் "துப்பாக்கிக் குழலில் இருந்து அரசியல் அதிகாரம் வளர்கிறது." என்கிற மேற்கோளைப் புரிந்து கொள்ள வேண்டும். தவறாகப் புரிந்து கொண்டதை மாவோவின் கருத்தாகப் பேசக்கூடாது. எச்சரிக்கையோடு படிக்க வேண்டும்.
இந்த மாவோவின் செவ்வேடு என்கிற நூல் 13 தலைப்புகளைக் கொண்டுள்ளது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதில், கம்யூனிஸ்ட் கட்சி, வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும், மக்கள் திரள் வழி, அரசியல் வேலை, கல்வியும் பயிற்சியும், தேசபக்தியும் சர்வதேசியமும், தவறான கருத்துக்களைத் திருத்துவது, கலையும் பண்பாடும் போன்ற தலைப்புகள் காணப்படுகிறது.
மொத்தமுள்ள 33 தலைப்புகளில் இன்றைய வகுப்பில் முதல் மூன்று தலைப்புகளை மட்டும் பார்க்கப் போகிறோம்.
சீனாவில் அக்டோபர் 1, 1949 ஆம் ஆண்டு புரட்சி நிறைவடைந்தது. இந்த புரட்சிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது.
“கம்யூனிஸ்ட் கட்சி” என்பது பற்றி தான் இந்த நூல் முதலில் பேசுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய மாவோவின் கருத்துக்களை முதலில் பார்ப்போம்.
“நமது நோக்கத்தை முன்னோக்கி வழிநடத்தும் முக்கிய சக்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியாகும். நமது சிந்தனையை வழிநடத்தும் கோட்பாட்டின் அடிப்படை மார்க்சிய-லெனினிசம்.”
(சீன மக்கள் குடியரசின் முதல் தேசிய மக்கள் காங்கிரஸின்
முதல் அமர்வின் தொடக்க உரை (செப்டம்பர் 15, 1954).)
கம்யூனிஸ்ட்களையும் தொழிலாளர்களையும் வழிநடத்துவது கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இந்த கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவது மார்க்சிய லெனினிய கோட்பாடு. இங்கே இரண்டு கருத்துக்கள் முக்கியமானதாக கூறப்பட்டுள்ளது. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று கட்சிக்கு வழிகாட்டும் கோட்பாடு.
நம் நாட்டில் கட்சிகள் நிறைய இருக்கின்றன, ஆனால் செயல்பாட்டில் சுணக்கம் காணப்படுகிறது. இந்த சுணக்கத்துக்குக் காரணம் நமக்கு வழியாட்டியாக உள்ள மார்க்சியக் கோட்பாட்டுப் புரிதலில் இருக்கிறது.
மாவோவின் செவ்வேடு என்கிற இந்த சிறிய நூல் மார்க்சிய அடிப்படைகளை விளக்கியுள்ளது. தவறானப் புரிதலில் இருப்பவர்கள் விடுபடுவதற்கு இந்த சிறிய நூல் உதவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு பலமான எதிரிவை வீழ்த்த வேண்டும் என்றால் தொழிலாளர்களுக்கு ஒரு பலமான கோட்பாடும், அந்த பலத்தைக் கொண்டு, மக்களை இணைத்து செயல்படுத்துகிற ஒரு கட்சியும் தேவை.
மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“மார்க்சிய லெனினிய கோட்பாட்டை ஆயுதமாகக் கொண்ட, சுயவிமர்சன முறையைப் பயன்படுத்தி, பொது மக்களுடன் இணைக்கப்பட்ட, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி. இத்தகைய ஒரு கட்சியின் தலையிலுள்ள ஓர் ராணுவம், புரட்சிகர வர்க்கங்கள், அனைத்து புரட்சிகர அமைப்புகளின் ஐக்கியம் இந்த மூன்றும், எதிரிகளை தோற்கடிக்க உதவிடும் முக்கிய ஆயுதங்கள் ஆகும்.”
("மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்" (ஜூன் 30, 1949),
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. IV, ப. 422.)
மாவோ குறிப்பிடுகிற இந்த மூன்றும், எதிரியை வீழ்த்துவற்கு மிகவும் முக்கியமானவை ஆகும். புரட்சிகரமான வர்க்கங்கள், புரட்சிகர அமைப்புகளின் ஐக்கியம், போர்படை ஆகிய மூன்றையும் அமைத்துக் கொள்வதே கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை வேலை ஆகும்.
இந்த அடிப்படையை உருவாக்குவதற்கு கட்சிக்குத் தேவையானதை மாவோ கூறுகிறார்.
“எந்த ஒர் அரசியல் கட்சியும், புரட்சிகரக் கோட்பாடு, வரலாறு பற்றிய அறிவு மற்றும் நடைமுறை இயக்கத்தின் ஆழமான பிடிப்பு ஆகிய மூன்றையும் கொண்டிருக்காத வரையில், ஒரு மாபெரும் புரட்சிகர இயக்கத்தால் வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாது.”
("தேசியப் போரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு"
(அக்டோபர் 1938), தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. II.)
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகரக் கோட்பாட்டின் அடிப்படையில் தம் நாட்டு வரலாற்றையும் குறிப்பாக அன்றைய வரலாற்று நிலைமைகளையும் கணிக்க வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. மார்க்சியத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதனடிப்படையில் தம் நாட்டை ஆய்வு செய்து எத்தகைய புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்கான கோட்பாட்டை உருவாக்க வேண்டும். மார்க்சியம் பொதுவான வழிகாட்டிதலையே கொடுக்கிறது, அனைத்து முடிவுகளையும் நம் கைகளில் மார்க்சியம் தந்துவிடவில்லை.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டுமா, அல்லது சோஷலிசப் புரட்சியை நடத்த வேண்டுமா என்பதை குறிப்பிட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆராயந்து, முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரியதாகும்.
சுயவிமர்சனம் சீர்செய்வது (Rectification) ஆகியவற்றின் மூலம் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திட முடியும். சிர்செய்தல் என்பது தமது தவறுகளை திருத்திக் கொள்வதாகும். தவறு செய்வது சகஜமானது ஆனால் அதை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. சுயவிமர்சனத்தால் தம்மை திருத்திக் கொள்ளும் கட்சியே சிறப்பாக செயல்பட முடியும். சீர்செய்வதை ஒர் இயக்கமாகவே செய்ய வேண்டும் என்று மாவோ கூறுகிறார்.
“நாம் வழக்கமாகக் கூறுவதுபோல, சீர்செய் இயக்கம் என்பது “விரிவான மார்க்சிய கல்வி இயக்கம்” சீர்செய்வது என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுய விமாசனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தை ஆய்வு செய்வதாகும். சீர்செய்யும் இயக்கத்தின் மூலம் நாம் நிச்சயமாக மார்க்சியத்தைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.”
பிரச்சாரப் பணிகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தேசிய மாநாட்டில் உரை (மார்ச் 12, l957)
சீர்செய் இயக்கத்தின் மூலம் தவறுகளை திருத்திக் கொள்வதோடு, கட்சியின் கொள்கையினையும் செயல்தந்திரங்களையும் கவனமாக செயல்படுத்த வேண்டும்.
“கொள்கையும் செயல்தந்திரங்களையும் நமது கட்சியின் உயிர் ஆகும்; அனைத்து மட்டங்களிலும் உள்ள முன்னணி தோழர்களும் அவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும், அத்தோடு எந்த காரணத்தைக் கொண்டும் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது.”
("சூழ்நிலை பற்றிய ஒரு சுற்றறிக்கை" (மார்ச் 20, 1948),
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. IV, ப. 220)
இரண்டாவது தலைப்பு, “வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும்.”
ஏடறிந்த சமூக வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும். சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது. சில வர்க்கங்கள் வெற்றி பெறுகிறது, சில வர்க்கங்கள் மறைந்து மடிகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளின் வரலாறு இத்தகையதாகவே இருக்கிறது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.
ஏடறிந்த வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். அதனால் எந்த ஒருவரை எடுத்துக் கொண்டாலும் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பினராக இருப்பர் அல்லது குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிப்பவராக இருப்பர்.
“வர்க்க சமூகத்தில், ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பினராக வாழ்கிறார்கள், மேலும் ஒவ்வொரு வகையான சிந்தனையும், விதிவிலக்கு இல்லாமல், ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றது.”
"நடைமுறையில்" (ஜூலை 1937), தேர்ந்தெடுக்கப்பட்ட
படைப்புகள், தொகுதி 1, ப. 296.
வர்க்கத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதப் புரிதலில் உள்ள தவறுகளே அனைத்து தவறுகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். அதனால் நாம் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை சிதைவின்றியும், திரிபின்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு தமிழில் நேரடி நூல்கள் போதுமான அளவுக்கு கிடைக்கிறது.
பொதுவாக மாவோ எளிமையாக எழுதி இருப்பார். இந்த எளிமை பலரை தவறானப் புரிதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த வகுப்பின் தொடக்கத்தில் பார்த்தது போல் மேற்கோள்கள் அடிப்படைப் புரிதலுக்கானதே, முழுமையானப் புரிதலுக்கு நேரடி நூலையே படிக்க வேண்டும். அதே போல மார்க்சிய கலைச்சொற்களை சரியாகப் புரிந்து கொள்ளாது போனால் முடிவுகள் தவறாக போய்விடும்.
“சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமாக சமுதாயத்தில் உள்ள உள்முரண்பாடுகளின் வளர்ச்சியே காரணமாகின்றன, அதாவது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு மற்றும் பழைய மற்றும் புதியவற்றுக்கு இடையிலான முரண்பாடு. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சியே சமூகத்தை முன்னோக்கி தள்ளுகிறது, பழைய சமூகத்தின் இடத்தில் புதிய சமூகத்தை தோற்றுவிக்கும் உந்து சக்தியாக விளங்குகிறது.”
("முரண்பாட்டில்" (ஆகஸ்ட் 1937),
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. I, ப. 314.)
உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடே சமூகம் வளர்வதற்கும் மாறுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. இதுவே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. புறநிலை விதிகளே சமூகத்தை இயக்குகின்றன. இந்த புறநிலை விதிகள் மனிதனைச் சாராது தோன்றுகிறது. ஆனால் சமூகப் புறநிலை விதிகளை மனிதனே நடத்திக் காட்டுகிறான். புறநிலை விதிகள் தானே இயங்குவதில்லை. இதுவே இயற்கைக்கும் சமூகத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடாகும்.
இயற்கை விதியும் சமூக விதியும் மனிதனைச் சாராது தோன்றுகிறது, அந்த விதிகள் செயல்படுவதற்கு, இயற்கைக்கு மனிதனது உதவி தேவைப்படவில்லை. ஆனால் சமூகத்தின் புறநிலை விதிகள் மனிதனின் மூலமே செயல்படுகிறது.
புரட்சிக்கான புறநிலைமைகள் இருந்தால் மட்டும் போதாது, அதனை செயல்படுத்துவற்கு அகநிலையான கம்யூனிஸ்ட் கட்சியும், உழைக்கும் மக்களும் தேவை. கம்யூனிஸ்ட் கட்சியும், உழைக்கும் மக்களும் புறநிலைமைகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டும் வெற்றி சாத்தியப்படும். புரட்சிக்கான புறநிலைமை மட்டும் போதாது என்று பார்த்தோம். அகநிலையானது, புறநிலைமைகளையும் அதற்கான செயல்பாட்டையும் புரிந்து செயல்பட வேண்டும்.
புறநிலைமைக்கு ஏற்பவே புரட்சி நடைபெறுகிறது என்று கூறுவதனால், புரட்சி என்பது எளிதானது என்று புரிந்து கொள்ளக்கூடாது. இதைப் பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“புரட்சி என்பது இரவு விருந்து போன்றதல்ல, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், பூந்தையல் போடுவது போன்றது அல்ல; அது மிகவும் பண்பானதாக இருக்க முடியாது, மிகவும் நிதானமாகவும், மென்மையாகவும், மிகவும் மிதமானதாகவும், இரக்கமாகவும், மரியாதையாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பெருந்தன்மையாகவும் இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி, ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை வீழ்த்தும் பலாத்கார நடவடிக்கை.”
("ஹுனானில் விவசாயிகள் இயக்கத்தின் விசாரணை பற்றிய
அறிக்கை" (மார்ச் 1927), தேர்ந்தெடுக்கப்பட்ட
படைப்புகள், தொகுதி. நான், ப. 28.)
புரட்சி இல்லாமல் சமூக மாற்றம் இல்லை என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். புரட்சிகர சமூக மாற்றத்தை, எதிரிகள் எதிர்ப்பின்றி ஒத்துக் கொள்ளமாட்டார்கள். புரட்சி பற்றி வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மிகத் தெளிவாக விளக்கி உள்ளது. இதனை அகிம்சைவாதிகளால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை. மார்க்சியத்தை வன்முறைப் போக்காகப் பார்க்கின்றனர்.
இன்று புதிய அமைதிவாதிகள் தோன்றியுள்ளனர், அவர்கள் தங்களை கம்யூனிஸ்ட் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்றால், பலாத்காரத்தை கம்யூனிசம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அதாவது கம்யூனிசத்தில் பலாத்காரம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களை பாதிக்கும் பலாத்காரம் கம்யூனிசமாக இருக்க முடியாது. இத்தகைய அமைதிவாதிகளின் கருத்து கம்யூனிசத்தைப் புரிந்து கொள்ளாததால் தோன்றியதாகும்.
பலாத்காரம், கம்யூனிசத்தில் இல்லை சமூக நிலைமைகளில்தான் இருக்கிறது. பலப்பிரயோகத்தை கம்யூனிஸ்டுகள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, சமூக மாற்றத்தை தடுக்கும் எதிர் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அமைதிவிரும்பிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமூக மாற்றத்தின் வரலாற்றை, இயக்கவில் பொருள்முதல்வாத வழியில் பார்க்கும் போது பலப்பிரயோகத்தை தவிர்க்க முடியாத நிலைமைகளில் மட்டுமே மக்கள் கையாண்டு இருக்கின்றனர் என்பதை அறிந்திட முடியும்.
1950 ஆம் ஆண்டியல் மாவோ நிகழ்த்திய ஒரு உரையில் (சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (ஜூன் 23, 1950) முதல் தேசியக் குழுவின் இரண்டாவது அமர்வில் நிறைவு உரை.) யார் புரட்சியாளர் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
யார்? புரட்சிகர மக்களின் பக்கத்தில் இருக்கிறாரோ அவர் ஒரு புரட்சியாளர் ஆவார். யார்? ஏகாதியத்தியம், நிலப்பிரபுத்துவம், அதிகார வர்க்க முதலாளித்துவம் ஆகியவற்றின் பக்கத்தில் இருக்கிறாரோ, அவர் ஒரு எதிர்புரட்சியாளர் ஆவார்.
யார்? சொல்லளவில் மட்டும் புரட்சிகர மக்களின் பக்கத்தில் இருந்து கொண்டு, செயலில் வேறாக இருக்கிறாரோ அவர் சொல்லளவில் மட்டுமே புரட்சியாளர், செயலில் எதிர்புரட்சியாளர். இவரை மொத்தத்தில் பார்க்கும் போது எதிர் புரட்சியாளரே ஆவார்.
யார்? சொல்லிலும் செயலிலும் புரட்சிகர மக்களின் பக்கத்தில் இருக்கிறாரோ அவர்தான் முழுமையான புரட்சியாளர். இதற்கு மேல் இதை எளிதாகக் கூறிடமுடியாது. மாவோ மிகவும் எளிமையாக விளக்கியுள்ளார்.
வறட்டுவாதமும் திருத்தல்வாதமும் மார்க்சியத்துக்கு எதிரானவை என்கிறார் மாவோ.
மார்க்சியம் புதிய சூழ்நிலைமைக்கு ஏற்ப வளரும் என்பதை வறட்டுவாதம் மறுக்கின்றனர். புதிய நிலைமைக்கு ஏற்ப மாறாமல் இருந்தால் அது உயிரற்று மறைந்து போய்விடும். இந்த கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்ட திருத்தல்வாதிகள் மார்க்சிய அடிப்படைகளை திருத்த முயல்கின்றனர். அதனால்தான் மாவோ, மார்க்சிய அடிப்படைகளை மீறக்கூடாது என்றும் சேர்த்துக் கூறியுள்ளார். இது ஒரு நீண்ட மேற்கோளாகும், இருந்தாலும் இது கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டியது என்பதனால் முழுமையாகப் பார்போம். விளக்கம் தேவைப்படாமல் எளிதாகவே இருக்கிறது.
“வறட்டுவாதம் திருத்தல்வாதம் இரண்டும் மார்க்சியத்திற்கு எதிரானவை. மார்க்சியம் நிச்சயமாக முன்னேறி வளரும். அது நடைமுறையின் வளர்ச்சியுடன் சேர்ந்து வளரும், தேங்கி நிற்க முடியாது. அது தேங்கி நின்று ஒரே மாதிரியாக இருந்தால் அது உயிரற்றதாகிவிடும். இருப்பினும், மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒருபோதும் மீறக்கூடாது, இல்லையெனில் தவறுகள் ஏற்படும். மார்க்சியத்தை ஒரு இயக்கமறுப்பியல் கண்ணோட்டத்தில் அணுகுவதும் அதை இறுக்கமான ஒன்றாகக் கருதுவதும் வறட்டுவாதமாகும்.
மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை மறுப்பதும் அதன் உலகளாவிய உண்மையை மறுப்பதும் திருத்தல்வாதம் ஆகும். திருத்தல்வாதம் என்பது முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவம் ஆகும். திருத்தல்வாதிகள் சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மறுக்கின்றனர். அவர்கள் வாதிடுவது முதலாளித்துவ வர்க்கத்துக்கே அன்றி சோஷலிசத்துக்கு அல்ல. தற்போதைய சூழ்நிலையில், வறட்டுவாதத்தைக் காட்டிலும் திருத்தல்வாதம் மிகவும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திருத்தல்வாதத்தின் மீதான விமர்சனத்தை வெளிக்கொணர வேண்டும்.”
(பிரச்சாரப் பணிகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசிய மாநாட்டில் உரை (மார்ச் 12, 1957)
வறட்டுவாதத்தைவிட திருத்தல்வாதம் மிகவும் ஆபத்தானது என்கிறார் மாவோ. திருத்தல்வாதிகள் வறட்டுவாதத்தை தாக்குகின்றனர், இதன் உள்நோக்கம் என்ன வென்றால் மார்க்சிய அடிப்படைகளை சிதைப்பதே ஆகும். சொல்லளவில் மார்க்சியத்துக்கு சேவை செய்யும் இந்தப் போக்கு உண்மையில் ஒரு முதலாளித்துவ சிந்தனைப் போக்கே ஆகும். திருத்தல்வாதமானது முதலாளிகளுக்கே சேவை செய்கிறது. உழைப்பாளர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்த திருத்தல்வாதிகளே புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ அமைப்பை மீட்டெக்க முயற்சிப்பர் என்று மாவோ மிகச் சரியாகவே கூறியுள்ளார்.
"திருத்தல்வாதம், அல்லது வலது சந்தர்ப்பவாதம், வறட்டுவாதத்தை விடவும் ஆபத்தான ஒரு முதலாளித்துவ சிந்தனைப் போக்கு ஆகும். திருத்தல்வாதிகள், வலது சந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்திற்கு சொல்லளவில் சேவை செய்கிறார்கள்; அவர்களும் "வறட்டு வாதத்தை" தாக்குகிறார்கள். இருப்பினும், அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் முக்கியத்துவத்தைத்தான். அவை வறட்டுவாதத்தையும் இயங்கியலையும் எதிர்க்கின்றன அல்லது சிதைக்கின்றன, மக்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கையும் எதிர்க்கின்றன அல்லது பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன, மேலும் சோசலிச மாற்றம் மற்றும் சோசலிச கட்டுமானத்தை எதிர்க்கின்றன அல்லது பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. நம் நாட்டில் சோசலிசப் புரட்சியின் அடிப்படை வெற்றிக்குப் பிறகு, முதலாளித்துவ அமைப்பை மீட்டெடுப்பதற்கும், சித்தாந்தம் உட்பட ஒவ்வொரு முனையிலும் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் வீண் நம்பிக்கை கொண்ட பலர் இன்னும் உள்ளனர். மேலும், இந்தப் போராட்டத்தில் அவர்களின் வலது கையாகவே திருத்தல்வாதிகள் விளங்குகின்றனர்."
(மக்கள் மத்தியில் முரண்பாடுகளை சரியாகக்
கையாள்வது குறித்து -பிப்ரவரி 27, 1957)
மூன்றாவது தலைப்பு, “சோஷலிசமும் கம்யூனிசமும்.”
சோவியத் புரட்சியின் 40ஆம் ஆண்டு நினைவாக மாவோ உரையாற்றும் போது, முதலாளித்துவத்தை சோஷலிசம் வென்றே தீரும் என்பதையும், இந்த புறநிலை விதியை எவராலும் தடுத்து நிறுத்திட முடிவாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.
“சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை மாற்றீடு செய்யும்; இது மனிதனின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றின் சக்கரத்தைத் தடுத்து நிறுத்த எவ்வளவு முயன்றாலும், இறுதியில் புரட்சி ஏற்பட்டு, தவிர்க்க முடியாமல் வெற்றி பெறும்.”
("மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சியின் 40 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சோவியத் ஒன்றியத்தின்
உயர்மட்ட சோவியத்தின் கூட்டத்தில் உரை" (நவம்பர் 6, 1957).)
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றே மாவோவும் முதலாளித்துவத்தை விழ்த்தி சோஷலிசம் தோன்றும் என்பது புறநிலை விதி (objective law) என்கிறார். பலபேர் நமது நாட்டில் புறநிலை விதி என்று கூறுவதை “விதிவாதமாக” கருதுகின்றனர். விதிவாதமானது சமூகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி விதியைப் படைத்தாக கூறுகிறது. மார்க்சியத்தின் புறநிலை விதி என்பது சமூகத்தில் உள்ளார்ந்து செயல்படுகிற வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து அதன் உண்மை விதியைக் கூறுகிறது. விதிவாதமும் புறநிலை விதியும் ஒன்றல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வளவுதான் சித்தாந்தத் தெளிவு இருந்தாலும் என்னதான் பலமான கம்யூனிஸ்ட் கட்சியை அமைந்துக் கொண்டிருந்தாலும் சமூகத்தை நாம் நினைக்கும்படி எல்லாம் அமைத்துக் கொள்ள முடியாது. யாராலும் உடனே கம்யூனிச சமூகத்தைப் படைத்திட முடியாது. முதலாளித்துவ சமூகம், சோஷலிச சமூகம் அதற்கு அடுத்துதான் கம்யூனிச சமூகம் என்கிற வளர்ச்சி கட்டங்களின் வழியில்தான் செல்ல முடியும்.
இதனை சீன நிலைமைகளைக் கொண்டு மாவோ விளக்குவதைப் பார்ப்போம்.
"ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சீனப் புரட்சிகர இயக்கம், ஜனநாயக மற்றும் சோசலிசப் புரட்சிகள் ஆகிய இரண்டு நிலைகளை உள்ளடக்கியது, இவை இரண்டும் அடிப்படையில் வேறுபட்ட புரட்சிகர செயல்முறைகள், முன்னதை நிறைவேற்றியப் பிறகுதான் பின்னதை நிறைவேற்ற முடியும். ஜனநாயகப் புரட்சி என்பது சோசலிசப் புரட்சிக்குத் தேவையான தயாரிப்பு, சோசலிசப் புரட்சி என்பது ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க முடியாத தொடர்ச்சி. கம்யூனிஸ்டுகள் அனைவரும் பாடுபடுவதின் இறுதி நோக்கம் ஒரு சோசலிச, கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்."
("சீனப் புரட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி"
(டிசம்பர் 1939), தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. II, பக். 330-31.)
உற்பத்தி சக்திகளின் விடுதலையே சோஷலிசப் புரட்சியின் நோக்கமாகும் என்கிறார் மாவோ. உற்பத்தி சக்திகளின் விடுதலையானது முதலாளித்துவ தனிவுடைமையில் இருந்து சோஷலிச பொதுவுடைமைக்கு மாற்றுவது தொழில்துறையிலும் விவசாய உற்பத்தியிலும் மிகப் பெரிய விரிவாக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைமைகளை உருவாக்குவதாகும்.
"சோசலிசப் புரட்சி, உற்பத்தி சக்திகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிமனிதனில் இருந்து சோசலிசமாகவும், விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களில் கூட்டு உரிமையாகவும், தனியார் தொழில் மற்றும் வணிகத்தில் முதலாளித்துவத்திலிருந்து சோசலிச உரிமையாகவும் மாறுவது இரண்டும் உற்பத்தி சக்திகளின் மகத்தான விடுதலையைக் கொண்டுவரும். இதனால், தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தியின் மிகப்பெரிய விரிவாக்கத்திற்கான சமூக நிலைமைகள் படைக்கப்படுகின்றன."
(உயர்நிலை மாநில மாநாட்டில் உரை (ஜனவரி 25, 1956).)
இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்கும், தொழிலாளி வர்க்கத்தைத் தலைமை தாங்குவதற்கும் அத்தகைய நாட்டில் தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தைக் கொண்ட ஒரு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்று கூறியவுடன் பலருக்கு இட்லரே நினைவுக்கு வருகின்றார், பாட்டாளி வர்கக சர்வாதிகாரம் என்பது தனிநபர் சர்வாதிகாரமோ, பாசிச சர்வாதிகாரமோ அல்ல. அது உழைக்கும் மக்களான பெருபான்மையினரின் ஜனநாயக அரசு. அரசு என்றாலே அது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம்தான். அரசு பற்றிய வர்க்கப் பார்வையில்லாதவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்றைய அரசு முதலாளித்துவ வர்க்கத்துக்கானது. இந்த வர்க்க நலனுக்காக ராணுவம், சட்டம், நீதித்துறை, காவல்துறை போன்ற சர்வாதிகார அமைப்பை வைத்துதான் முதலாளித்துவ அரசு செயல்படுகிறது. அதனால் இதை முதலாளித்துவ சர்வாதிகாரம் என்றே மார்க்சியம் அழைக்கிறது. அதே போல உழைப்பாளி வர்க்கத்தின் நலன்களைக் கொண்டது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு.
சிறுபான்மையாக உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிப்பது முதலாளித்துவ சர்வாதிகார அரசு. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிக்கிறது. அதாவது முதலாளித்து அரசானது, பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராகவும் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் நலன்களையும் முன்னிருத்துகிறது. பாட்டாளிகளின் அரசு பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை முன்னிருத்தி சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் முதலாளித்துவ போக்குடைய சிறுபான்மையினரை எதிர்க்கிறது.
மாவோ, 1957ம் ஆண்டில் “மக்கள் மத்திலுள்ள முரண்பாடுகளைச் சரியாக கையாள்வது பற்றி” என்ற கட்டுரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எதற்கு என்பதை விளக்கியுள்ளார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதின் முதலாவது பணி, நாட்டில் உள்ள பிற்போக்கு வர்க்கங்களையும், பிற்போக்குவாதிகளையும் சோஷிலிசப் புரட்சியை எதிர்க்கும் பழைய சுரண்டல்காரர்களை நசுக்குவதும், சோஷலிச நிர்மாணத்தைச் சீர்குலைப்பவர்களை நசுக்குவதும் ஆகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உள்நாட்டில் தொழிலாளி வர்க்கத்துக்கும் அதன் எதிரி வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாட்டை தீர்ப்பது அரசின் முதல் பணி.
பாட்டாளி வர்க்க அரசின் இரண்டாவது பணி என்னவென்றால், வெளிநாட்டு ஏகாதிபத்திய எதிரிகளின் சதிகளை முறியடிப்பது. வெளிநாட்டுக்கும் உள்நாட்டுக்கும் உள்ள முரண்பாட்டை தீர்ப்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் இரண்டாவது பணி.
ஒரு பாட்டாளி வர்க்க அரசின் உள்நாட்டு பணியாக மாவோ இரண்டைக் குறிப்பிடுகிறார். பாட்டாளிகளின் எதிரிகளைப் பொருத்தளவில் அரசானது சர்வாதிகார முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது தேவைப்படுகிற ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அரசியல் நடவடிக்கைகளில் பங்குபெற அவர்களை அனுமதிக்காது. உழைக்கும் மக்கள் அரசின் சட்டங்களுக்குப் பணிந்து பின்பற்றும்படியும், உழைப்பில் கலந்து கொள்ளும்படியும், உழைப்பின் மூலம் தங்களை மறுவுற்பத்தி செய்யும்படியும் அவர்களை நிர்பந்திக்கிறது. இதற்கு மாறாக உழைக்கும் மக்களைப் பொருத்தளவில், நிர்ப்பந்தம் என்ற முறையை அல்லாது, ஜனநாயக முறையில் அணுகுகிறது. அதாவது உழைக்கும் மக்களை பயிற்றுவித்தல், இணங்கச் செய்வித்தல் என்கிற ஜனநாயக முறையைப் பயன்படுத்துகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது யாரிடம் சர்வாதிகரத்தை செலுத்துகிறது யாரிடம் ஜனநாயகத்தை செலுத்துகிறது என்பதை மாவோ இங்கே சிறப்பாக விளக்கி உள்ளார்.
மூன்று தலைப்புகளைப் பற்றி இன்றைய வகுப்பில் பார்த்தோம். மீதமுள்ளதை தொடரும் வகுப்புகளில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment