(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
55 வது வார வகுப்பு – 26-03-2022)
மாவோ எழுதியதில் இருந்து திரட்டப்பட்ட மேற்கோள்களைக் கொண்ட நூல் “செவ்வேடு” இதனை “மாவேதுங்கின் மேற்கோள்கள்” என்றும் “சிறிய செவ்வேடு” என்றும் வழங்கப்படுகிறது என்பதை சென்ற வகுப்பினில் பார்த்தோம்.
இந்த நூலில் மொத்தம் 33 தலைப்புகள் இருக்கிறது நாம் இதுவரை 14 தலைப்புகளைப் பார்த்துவிட்டோம். இன்று 11 தலைப்புகளைப் பார்க்கப் போகிறோம்.
பதினைந்தாவது தலைப்பு, “மூன்று பெரும் ஜனநாயகம்.”
பல தோழர்களுக்கு ஜனநாயகம் என்றால் கட்டற்ற ஜனநாயகமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்டுகள் எதிலும் கட்டுப்பாடு உடையவர்கள், ஜனநாயகத்திலும் கட்டுப்பாடான ஜனநாயகத்தையே கடைபிடிக்கின்றனர்.
தீவிர ஜனநாயகம் அதாவது அதீத ஜனநாயகம் ஆபத்தையே தரும். மார்க்சியக் கோட்பாட்டிலோ, கட்சியிலோ தீவிர ஜனநாயகம் என்பது பெரும் தீங்கு என்கிறார் மாவோ. தீவிர ஜனநாயகம் எங்கு கடைப்பிடிக்கப்படுகிறதோ அங்கே பெரும் தீங்கே ஏற்படுகிறது. அந்த தீங்கானது முழுமையான அழிவுக்குக்கூட கொண்டு செல்லும்.
தீவிர ஜனநாயகம், கட்சி அமைப்பை சேதப்படுத்துகிறது அல்லது முற்றிலுமாக சிதைத்து விடுகிறது, கட்சியின் போராட்டத் திறனை பலவீனப்படுத்துகிறது. கட்சியின் போராட்டக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் செய்துவிடுகிறது (கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது பற்றி - 1929)
தீவிர ஜனநாயகம் கட்சியின் கட்டுக் கோப்பை குலைக்கும். கட்டுக்கோப்பே கட்சியின் செயல்திட்டத்தை செயல்படுவதற்கு துணை நிற்கும். அதீத ஜனநாயகம் என்பது கட்சியின் செயல்பாட்டுக்கு தடையாக இருக்கும்.
தீவிர ஜனநாயகக் கோரிக்கை எங்கிருந்து எழுகிறது?
கட்டுப்பாடற்ற குட்டி முதலாளித்துவ தனிநபர்வாதத்திருந்து தீவிர ஜனநாயகம் தோன்றுகிறது. குட்டி முதலாளித்துவ சிந்தனை உள்ளவர்களிடம் தான் தீவிர ஜனநாயகம் வேண்டும் என்றக் கோரிக்கை எழுகிறது.
எப்படி ஆதீத ஜனநாயகம் கட்சியை சிதைக்கிறதோ அதே போல ஜனநாயக அற்றப் போக்கும் கட்சியை சிதைக்கும்.
கட்சியின் ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். முக்கியமாக கொடுமைப்படுத்துதல் மற்றும் அடித்தல் போன்ற நிலப்பிரபுத்துவ நடைமுறையை ஒழிக்க வேண்டும். அதிகாரிகளும் படை வீரர்களும் தங்களது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே இருவர்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் மாவோ.
கம்யூனிஸ்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும், அதற்கு அனைவரையும் விரோதிகளாகப் பார்க்கக்கூடாது. யாராக இருந்தாலும்சரி அவர் கம்யூனிசத்துக்கு விரோதியாக செயல்படாதவரை, அவரை உரையாட அனுமதிக்க வேண்டும். யாருடனும் உரையாடாமல் அரசியல் செய்ய முடியாது.
வர்க்க சமூகத்தில் முழுமையான ஜனநாயகத்துக்கு இடம் கிடையாது. முழுமையான ஜனநாயகம் செயல்படும் சமூகத்தில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அங்கே ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கை ஏழாது. இதை நன்றாகப் புரிந்து, பயன்படும் அளவுக்கு ஜனநாயகத்தோடு செயல்பட வேண்டும். ஆதீத ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும். செயல்பாட்டுக்கு தடையாகவும் இருக்கும்.
பதினாறாவது தலைப்பு, “துருப்புகளின் கல்வியும் பயிற்சியும்.”
கட்சி ஊழியர்களின் கல்வியைப் பொறுத்தவரை, வேலையில் இருந்தாலும் சரி, பள்ளிகளில் இருந்தாலும் சரி, சீனப் புரட்சியின் நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்வதிலும், மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைகளை வழிகாட்டியாகப் பயன்படுத்துவதிலும் அத்தகைய கல்வியை மையமாகக் கொண்டு ஒரு கொள்கை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, மார்க்சிய-லெனினியத்தை இயக்கமறுப்பியலாகவும் வறட்டுத்தனமாகவும் படிப்பதை நிராகரிக்க வேண்டும் என்கிறார் மாவோ. மார்க்சியம் நமக்கு ஒரு பொது வழிகாட்டியாக இருக்கிறது, அதனால் அதனை இயந்திரத்தனமாக பயன்படுத்தக் கூடாது.
பதினேழாவது தலைப்பு, “மக்களுக்கு ஊழியம் செயதல்.”
மக்களுக்கு ஊழியம் செய்யும் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்க வேண்டிய பண்புகளாக மாவோ கூறுவதைப் பார்ப்போம். அடக்கமும் விவேகமும் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆணவமாகவும் அவசர புத்தியாகவும் செயல்படுவதை தடுக்க வேண்டும். உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் மக்களுக்கு ஊழியம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்கிறார் மாவோ.
மக்கள் பணியாளர்கள் அனைவரும், எந்த பதிவியை வகித்தாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஊழியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் பண்புகளை நிராகரிக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகளின் நோக்கம் உழைக்கும் மக்களுக்கு முழுமனதுடன் ஊழியம் செய்வதாகும். மக்களின் நலன்களை செயல்படுத்துவதில் ஊழியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாறாக ஒரு தனிநபரின் நலன், சிறு குழுக்களின் நலன் ஆகியவற்றுக்காக செயல்படக்கூடாது. மேலும் மக்கள் மீதான பொறுப்பையும் கட்சியின் தலைமை உறுப்புகள் மீதான் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பதினெட்டாவது தலைப்பு, “தேசபக்தியும் சர்வதேசியமும்.”
சர்வதேசியம் சிறப்பாக பேசி சொந்த தேசியத்தை மறந்தவர்களுக்கும், சொந்த தேசியத்தை மட்டும் பேசி சர்வதேசியத்தை மறந்தவர்களுக்கும் “தேசபக்தியும் சர்வதேசியமும்” என்ற தலைப்பு வியப்பை ஏற்படுத்தும். சர்வதேசியம் என்பது பொதுவானது, தனது தேசியம் என்பது குறிப்பானது. பொதுவானதை மட்டும் அல்லது குறிப்பானதை மட்டும் பார்க்கும் பார்வை குறைபாடுடையவை ஆகும். சர்வதேசியப் புரிதல் இல்லாமல் குறிப்பான தனது தேசத்தைப் பற்றிய சரியானப் முடிவுக்கு வர முடியாது. ஏன் என்றால் தேசியமானது சர்வதேசத்துடன் இணைந்து காணப்படுகிறது. சர்வதேசப் பிரச்சினையுடன் பிணைந்து காணப்படுகிறது. அதே போல பல்வேறு தேசியங்களின் அனுபவமே சர்வதேசியமாகும். தேசமின்றி சர்வதேசியம் இல்லை சர்வதேசியம் இன்றி தேசம் இல்லை.
தேசியவாதியாகவும் சர்வதேசியவாதியாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஒருவன் ஒரு குறிப்பிட்ட தேசத்தவனாக இருந்து கொண்டுதான் சர்வதேசியவாதியாக செயல்பட முடியும்.
மாவோ கூறுவதை அப்படியே பார்ப்போம்.
“ஒரு சர்வதேசியவாதியாக இருக்கும் ஒரு கம்யூனிஸ்ட்டு, அதே நேரத்தில் ஒரு தேசபக்தனாக இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியும் என்பது மட்டுமல்ல, இருக்கவும் வேண்டும் என்று நாம் கருதுகிறோம். தேசபக்தியின் குறிப்பிட்ட உள்ளடக்கம் வரலாற்று நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது”
(தேசியப் போரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு - அக்டோபர் 1938)
இங்கே பேசும் தேசபத்தியும் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தேசிய வெறியும் ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பத்தொன்பதாவது தலைப்பு, “புரட்சிகர சாகசவாதம்.”
வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. அப்படி இருக்க அரசியல் வாழ்வில் போராட்டமும் போரும் இல்லாமல் இருக்கா முடியுமா?. போராடுவதற்கு கம்யூனிஸ்டுகளிடையே “போராட்ட உணர்வு” இருக்க வேண்டும். இந்த உணர்வு இல்லாமல் போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.
முதலில் போராட்ட உணர்வு பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“இந்தப் படைக்கு வெற்றி கொள்ளப்பட முடியாத உணர்வு இருக்கிறது. அது அனைத்து எதிர்களையும் தோற்கடிக்குமே தவிர ஒரு போதும் எதிரிக்கு அடிபணியாது. எவ்விதமான துன்பங்கள் தொல்லைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இறுதியாக ஒரு மனிதன் இருக்கும் வரையில், அவன் போராடியே தீருவான்”
(கூட்டணி அரசாங்கம் - ஏப்ரல் 24, 1945)
இதற்கு விளக்கம் தேவைப்படாது. அடுத்து மாவோ போராட்ட உணர்வு செருக்காக மாறிடக்கூடாது என்பதைக் கூறியுள்ளார். அதாவது கர்வம் கொள்ளக்கூடாது என்கிறார்.
“உங்களிடம் பல நல்ல இயல்புகள் உண்டு, நீங்கள் மகத்தான தொண்டு ஆற்றியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் செருக்குடையவர்களாய் மாறக்கூடாது என்பதை எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிறீர்கள்; இது நியாயமானதே. ஆனால் இது செருக்குக்கு எளிதில் வழிகோலிவிடும். நீங்கள் செருக்குடையவராய் மாறினால், அடக்கமாயிருப்பதை விட்டு, முயற்சி செய்யத் தவறினால், பிறருக்கு மதிப்புக் கொடுக்கத் தவறினால், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் மதிப்புக் கொடுக்கத் தவறினால், பின்னர் நீங்கள் வீரர்களாகவோ, முன் மாதிரியாகவோ இருக்க மாட்டீர்கள். இத்தகைய நபர்கள் முன்பு இருந்தனர். நீங்கள் அவர்களுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றமாட்டீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.”
(பொருளாதார வேலை செய்ய நாம் கற்க வேண்டும் - 10 ஜனவரி, 1945)
செருக்கு எங்கிருந்து தோன்றுகிறது?
அனைவராலும் மதிக்கப்படும் போதும் அதனால் புகழ் கிடைக்கும் போதும் செருக்கு தோன்றுகிறது. புகழ் கிடைக்கும் போது அடக்கமாக இருக்க வேண்டும். புகழ் இல்லாதபோது அடக்கமாக இருப்பது எளிது, மேலும் மேலும் புகழ் உருவாகும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் மதிப்பும் புகழும் கூடும் போது அடக்கமாக இருப்பது அவசியமாகும்.
இருபதாவது தலைப்பு, “விடாமுயற்சி மற்றும் சிக்கனத்தின் மூலம் நாட்டை நிர்மாணித்தல்.”
இது புரட்சிக்கு பின்பானதைப் பற்றி பேசுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் அனைவரும், நாட்டு மக்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய விஷயமாக மாவோ கூறுகிறார்.
“நமது நாடு பிரமாண்டமான ஒரு சோஷலிச நாடு. ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியது, வறியது, இது மிகப்பெரிய ஒரு முரண்பாடாகும். சீனாவை செல்வம் கொழிக்கும் நாடாகவும், வலுவான நாடாகவும் ஆக்குவதற்கு பல பத்தாண்டுகள் தீவிரமான முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். இம்முயற்சி கண்டிப்பாக சிக்கனத்தைப் பயில்வது, விரையமாவதை எதிர்ப்பது ஆகியவற்றை, அதாவது விடாமுயற்சியுடனும் சிக்கனமாகவும் நமது நாட்டை நிர்மாணிக்கும் கொள்கையை உள்ளடங்கியது.”
(மக்கள் மத்தியில் முரண்பாடுகளை சரியாகக்
கையாள்வது குறித்து - பிப்ரவரி 27, 1957)
பின்தங்கிய சீனாவில் சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்கு விடாமுயற்சியும் சிக்கனமும் தேவை என்பதே மாவோவின் கருத்து.
இருபத்தோராவது தலைப்பு, “சுய-சார்பும் கடினமான போராட்டமும்.”
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தமது சொந்த பலத்தில்தான் நிற்க வேண்டும். பிற நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் நமது நண்பர்களே, அவர்கள் நமது துணை சக்தியே ஆகும். அவர்கள் துணை இருந்தாலும், சுய முயற்சியில்தான் நாம் செயல்பட வேண்டும்.
நமது கொள்கை எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? என்று கேள்வி கேட்டு மாவோ பதிலும் தருகிறார்.
“நமது கொள்கை எந்த அடிப்படையில் அமைய வேண்டும்?
நமது சொந்த பலத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், ஒருவர் தமது சொந்த முயற்சிகள் மூலம் புதுவாழ்வு பெறுவதாகும். நாம் தனிமைப்பட்டு நிற்கவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து உலக நாடுகளும் மக்களும் நமது நண்பர்கள். இருந்தாலும், நமது சுயமுயற்சிகள் மூலம் புதுவாழ்வு பெறுவதை நாம் வற்புறுத்துகிறோம். நாம் சுயமாக அணி திரட்டும் சக்திகளைச் சார்ந்து, உள்நாடு வெளிநாட்டுப் பிற்போக்குவாதிகள் அனைவரையும் எம்மால் தோற்கடிக்க முடியும்”
(ஜப்பானிய – எதிர்ப்பு போர் வெற்றிக்குப் பிந்திய
நிலைமையும் நமது கொள்கையும் – 13 ஆகஸ்ட் 1945)
மக்களிடையே ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி பரப்புரை செய்வதுடன் அதை அடைவதற்கான போராட்டமும் அதில் உள்ள கடினத் தன்மையையும் சேர்த்துக் கூற வேண்டும். ஒளிமயமான பக்கத்தை மட்டும் பேசுவதோடு நின்றுவிடக்கூடாது, அந்தப் பயணத்தில் உள்ள இன்னல்களை தவறாது பார்க்க வேண்டும். இரண்டையும் குறிப்பிட்டே நாம் மக்களையும் தோழர்களையும் தயார் செய்ய வேண்டும். ஒளிமயமான பக்கத்தை மட்டும் பார்ப்பவர்களால் கட்சியின் கடமைகளை சரியாக செய்ய முடியாது. உண்மையின் முழுமையை அறிந்தவர்களால் மட்டுமே சரியாகப் புரிந்து துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி நடை போட முடியும்.
மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“வெற்றி மீது மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக உலக முன்னேற்றம் பற்றியும் ஒளிமயமான எதிர்காலம் பற்றியும் அவர்களிடம் நாம் இடைவிடாமல் பரப்புரை செய்ய வேண்டும். அதே நேரத்தில், நமது பாதையில் வளைவுகளும் சுளிவுகளும் உண்டு என்பதையும் மக்களுக்கும் நமது தோழர்களுக்கும் சொல்ல வேண்டும். புரட்சிப் பாதையில் இன்னும் பல தடைகளும் இன்னல்களும் கிடைக்கின்றன”
(சுங்கிங் பேச்சு வார்த்தைகளைப் பற்றி- 17 அக்டோபர், 1945)
இருபத்தி இரண்டாவது தலைப்பு, “சிந்தனை முறையும் வேலை முறையும்.”
கம்யூனிஸ்டுகளின் சிந்தனை வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாகிறது. தத்துவத்துக்கு என்று வர்க்க சார்பு இருக்கிறது. உழைக்கும் தொழிலாளர்களின் நலன்களை இயக்கவியல் பொருள்முதல்வாதம் பிரதிபலிக்கிறது. நடைமுறையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவம் விழ்ச்சி அடைந்து முதலாளித்துவம் தோன்றியது எவ்வாறு என்பதை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விளக்கியது போலவே இந்த முதலாளித்துவ சமூகம் வீழ்ச்சி அடைந்து சோஷலிச சமூகம் தோன்றும் என்றும் கூறுகிறது. சோஷலிசத்தை அடையப் போராடுபவர்களுக்கு இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவமே வழிகாட்டியாகும்.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் இரண்டு சிறப்பியல்புகளாக மாவோ கூறுகிறார், அதைப் பார்ப்போம்.
"இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றிய மார்க்சிய தத்துவத்துக்கு இரண்டு சிறப்பியல்புகள் உண்டு. ஒன்று அதன் வர்க்க இயல்பு. இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்துக்குச் சேவை செய்கிறது என்பதை அது வெளிப்படையாக அறிவித்துள்ளது. இரண்டாவது அதன் நடைமுறை சாத்தியப்பாடு. தத்துவம் நடைமுறையில் கோட்பாட்டின் சார்புநிலையை வலியுறுத்துகிறது, கோட்பாடு நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்துகிறது, மீண்டும் நடைமுறைக்கே தத்துவம் சேவை செய்கின்றது என்று வலியுறுத்துகின்றது."
(நடைமுறை பற்றி - ஜூலை, 1937)
தத்துவத் தவறுகளே அனைத்துத் தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. இதனை நன்றாகப் புரிந்து கொண்டு, கம்யூனிஸ்டுகள் தத்துவத்தை பயில வேண்டும். பயின்றதை நடைமுறையில் செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளின் பார்வை விஞ்ஞானத் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிவற்றின் அடிப்படையில் அனைத்தையும் அணுகுவதால் தான் விஞ்ஞானப் பார்வை என்று கூறப்படுகிறது. இவை இரண்டும் சமூகத்தின் புறநிலை விதியின் செல்வழியில் சோஷலிசம் வருவதைக் குறிப்பிடுகிறது. இந்த இரண்டையும் அறிந்து கொள்ளாத கம்யூனிஸ்ட்டின் செயல்பாடு விஞ்ஞானத் தன்மை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
புறநிலைவிதி என்று கூறினாலேயே பலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. “சமூகம் விதிவழியில் செல்வதில்லை, அது மக்களின் விருப்பத்தின்படியே செல்கிறது” என்று கருதுகிறவர்கள் கம்யூனிஸ்ட் மத்தியிலும் இருக்கின்றனர். ஆனால் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் புறநிலை விதியே சமூகத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறகிறது. புறநிலை விதி மக்களின் விருப்பமாக வெளிப்படுகிறது என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது. ஆனால் சில தோழர்கள் மக்களின் விருப்பமானது அவர்களது மூளையில் தோன்றுகிறது, இதற்கு வெளியில் இருந்து எதுவும் பெறப்படுவதில்லை என்று கருதுகின்றனர். கருத்தின் தோற்றத்தை இவர்கள் மார்க்சிய வழியில் காணவில்லை.
மாவோ கூறுபதைப் பார்ப்போம்.
“புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து, அவற்றை விளக்குவதில் திறமை பெற்றிருப்பது மிக முக்கியமான பிரச்சினையல்ல. பதிலுக்கு, ஊக்கமாக உலகை மாற்றுவதற்கு அவ்விதிகள் பற்றிய அறிவைப் பிரயோகிப்பது தான் மிக முக்கியமான பிரச்சினை என்று மார்க்சியத் தத்துவம் கருதுகின்றது.”
(நடைமுறை பற்றி - ஜூலை, 1937)
மார்க்சியத் தத்துவத்தைபற்றி மவோ மிகவும் சரியாகவும் தெளிவாகவும் இங்கே கூறியுள்ளார். இதைப் புரிந்து கொள்வதற்கு தயாராக இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட்டு எந்தப் பயனும் இல்லை. இதையே மற்றோர் இடத்தில் பேசும் மொழியில் எளிமையாக விளக்கியுள்ளார்.
”மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன.”
(மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன – மே 1963)
சமூக நடைமுறையில் இருந்தே புறநிலை விதிகள் அறியப்படுகிறது, சமூக நடைமுறையின் வழியே அதனை நிறைவேற்றப்படுகிறது.
"நாம் எதை செய்யும் போதும், அதன் உண்மையான சூழ்நிலைகள், அதன் இயல்பு மற்றும் பிற விஷயங்களுடனான அதன் உறவுகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டாலொழிய அதை ஆளும் விதிகளை அறிய மாட்டோம், அல்லது அதை எப்படி செய்வதென அறிய மாட்டோம், அல்லது அதை நன்றாகச் செய்ய மாட்டோம் என்பது அனைவரும் அறிந்ததே"
(சீனாவின் புரட்சிகரப் போரில் உத்தியின் சிக்கல்கள் - டிசம்பர் 1936)
மாவோ “அனைவரும் அறிந்ததே” என்று இங்கே கூறியுள்ளார். நம் நாட்டில் பல தோழர்கள் அறிந்து கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய உண்மை ஆகும். அவர்கள் அறியாதது மட்டமல்லாது அறிந்த கொண்டவர்களை கேலிசெய்து வருகின்றனர். உணர்வற்ற பொருள் பேசாது, மக்களே உணர்வு உள்ளவர்கள் அவர்களே தங்களது வரலாற்றை நிர்ணயித்துக் கொள்கின்றனர். மேலும் புறநிலை விதி என்பது எந்திரத்தன்மையானது என்கின்றனர். இந்த இயக்கவியல் அற்ற, மார்க்சியம் அற்ற பார்வையை நாம் கடுமையாக விமர்சிக்க வேண்டும். இந்தக் கருத்துக்கள் உழைக்கம் மக்களிடம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி மார்க்சிய அடிப்படைகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மார்க்சிய அடிப்படைகளைவிட்டு விலகுவது தோல்வியை தரும்.
மாவோ கூறுபதைப் பார்ப்போம்.
“ஒருவர் தனது வேலையில் வெற்றியடைய விரும்பினால், அதாவது, எதிர்பார்த்த விளைவுகளைப் பெற விரும்பினால், தனது கருத்துகளைப் புற நிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடையவை ஆகச் செய்ய வேண்டும். அவை இசைவாகாவிட்டால் அவர் தனது நடைமுறையில் தோல்வியடைவார். தோல்வியடைந்த பின், அவர் தோல்வியிலிருந்து தனது படிப்பினைகளைப் பெற்று, புறநிலை உலகத்தின் விதிகளுக்கு இசைவாகத் தனது கருத்துகளைத் திருத்தித் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும்.”
(நடைமுறை பற்றி'' - ஜூலை, 1937)
கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கு பல காரணங்களில் முக்கியமானக் காரணம், தமது நடவடிக்கைகள் புறநிலைக்கு ஏற்றப்படி வகுத்துக்கொள்ளாததே ஆகும். தோல்வியோ, பின்னடைவோ ஒரு பிரச்சினை அல்ல, அதை கடப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் அவ்வளவுதான். அந்த முயற்சி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும் என்றால் புறநிலை விதிகளோடு இசைந்த வகையில் முடிவுகள் எடுக்க வேண்டும்.
தோல்வியைத் தந்த இந்தக் கருத்தை எங்கிருந்து அவர்கள் பெற்றார்கள். இது ஒரு முக்கியமானக் கேள்வியாகும். இதை சரியாக அறிந்து கொள்ளாமல் தவறை திருத்திக் கொள்ள முடியாது.
இத்தகையக் கருத்துக்கள் அகநிலையில் இருந்து எடுத்துள்ளனர். புறநிலைக்கு மாறாக அகநிலையில் எடுக்கப்படுகிற முடிவுகள் தோல்வியைத் தழுவுகின்றன. இது பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“கம்யூனிஸ்டுகள் எல்லாரும் மனதில் உறுதியாகப் பதித்துக் கொள்ள வேண்டிய, மிக அடிப்படையான வேலைமுறை யாதெனில் யதார்த்த நிலைமைகளுக்கேற்ப வேலைக் கொள்கைகளை நிர்ணயிப்பதாகும். நாம் இழைத்த தவறுகளின் காரணத்தை ஆராய்ந்தால், ஒரு குறிப்பிட்ட காலம், இடம் - இவற்றின் யதார்த்த நிலைமையிலிருந்து விலகி. நமது வேலைக் கொள்கைகளை அக ரீதியாக நிர்ணயித்த காரணத்தால் தான் அவை தோன்றின என்பதைக் காண்போம்.”
(ஷன் சி - சுய்யு வன் விடுதலைப்
பிரதேச ஊழியர்கள் மாநாட்டு உரை - ஏப்ரல், 1948)
மாவோவின் இந்தக் கூற்றுக்கு விளக்கம் ஏதுவும் தேவையில்லை. மேலும் அகநிலையைப் பற்றி மாவோ கூறியதை பார்ப்போம்.
“அகநிலையாகவும் ஒருதலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் பிரச்சினைகளை அணுகுபவர்கள், கட்சிக்கு வந்த அதே கணத்தில், சூழ்நிலைகளை ஆராயாமலும், விசயங்களை முழுமையாக (அவற்றின் வரலாற்றையும் அவற்றின் இன்றைய நிலைமையையும்) நோக்காமலும் விசயங்களின் சாராம்சத்தை (அவற்றின் இயல்பையும் ஒரு விசயத்துக்கும் இன்னொன்றுக்கும் இடையிலுள்ள அக உறவுகளையும்) ஊடுருவிப் பாராமலும், தாம் சரியென்று கருதி, கட்டளைகள் அல்லது உத்தரவுகள் இடுவர். இத்தகைய நபர்கள் தடுக்கி விழுவது திண்ணம்.”
(நடை முறை பற்றி - ஜூலை, 1937)
புதியதாக கட்சிக்கு வந்தவர்கள் பொதுகாக செய்கிற பிழைதான் அகநிலை போக்கு. அவர்கள் புதியதாக அறிந்து கொண்ட கம்யூனிசத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற துணிச்சலின் காரணமாக, புற சூழ்நிலைமைகளை ஆராயாமல், தமது கருத்துக்களை உடனே நடைமுறைப் படுத்த முனைகின்றனர். இந்தத் தவறையே இங்கு மாவோ குறிப்பிட்டுள்ளார்.
புறநிலையைப் புறக்கணித்து அகநிலையில் கட்சி செயல்படுமேயானால் கண்டிப்பாக தோல்வியே சந்திக்கும். பொருள்முதல்வாதத் தத்துவத்தைப் புறக்கணித்தலே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இது பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“ஒரு பிரச்சினையை ஆராயும் பொழுது, அகநிலை போக்கு, ஒருதலைப்பட்ச போக்கு, மேலோட்ட போக்கு ஆகியவற்றை விலக்க வேண்டும். அகநிலைப் போக்கு என்பது பிரச்சினைகளைப் புறநிலையாகப் பார்க்கத் தவறுவது ஆகும், அதாவது பிரச்சினைகளை நோக்கும் போது பெருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தத் தவறுவது ஆகும்.”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட், 1937)
பொருள்முதல்வாதத்தை பயன்படுத்தத் தவறுவதே கம்யூனிஸ்ட் கட்சியில் தவறானக் கருத்துக்கள் தோன்றுவதற்குக் காரணமாகும். இதனை நம் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும், முன்னணித் தோழர்களும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ம.ஜ.இ.க (சமரன்) போன்ற அமைப்புகள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை திரிபில்லாமல் வகுப்பெடுக்கின்றனர். திரிபை எதிர்த்து போராடுகின்றனர். வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டமாகும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அனைத்தையும் பார்க்க பழக வேண்டும். பார்வை மட்டுமே அனைத்தையும் புரிய வைத்திடாது.
தத்துவம் ஒரு பொது வழிகாட்டி தான் அதன் வழியில் நாம்தான் அனைத்தையும், தத்துவ வழியில் அணுகி முடிவெடுக்க வேண்டும். ஆனால் “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பது போல அணுகுமுறையிலேயே குழப்பம் இருந்தால் முடிவுகளிலும் அது வெளிப்படவே செய்யும்.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை புரிந்து கொள்வதற்கு பல தோழர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இதற்குக் காரணம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வழியில் அணுகுவற்கு முயற்சிகள் அதிகம் தேவைப்படுகிறது. அணுகுவதற்கு மட்டுமல்லாது அதைப் புரிந்து கொள்வதற்கும் கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் இறங்காவதவர்கள் கருத்துமுதல்வாத மயக்கத்தில் முடங்கிப் போகின்றனர்.
கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் பற்றி மாவோ கூறியதை பார்ப்போம்.
“கருத்துமுதல்வாதம், இயக்க மறுப்பியல் ஆகிய இரண்டும் உலகில் மிக எளிதானவை, ஏனென்றால் யதார்த்த உண்மையை அடிப்படையாகக் கொள்ளாமலோ அல்லது யதார்த்தத்தில் சோதித்தறியாமலோ ஒருவர் தான் விரும்புகின்ற அளவுக்கு பிதற்றலாம். மறு புறம் பொருள்முதல்வாதம், இயக்கவியல் ஆகிய இரண்டையும் அறிந்து கொள்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு யதார்த்தத்தில் சோதித்தறிப்பட வேண்டும். ஒருவர் முயற்சி செய்யாத போது, அவர் கருத்துமுதல்வாதம், இயக்கமறுப்பியல் ஆகியவற்றில் சறுக்கி விழுவதற்கான சாத்தியம் இருக்கிறது.”
(ஹீபுங் எதிர்புரட்சிக் கும்பல் பற்றிய
ஆதாரங்களின் அறிமுகக் குறிப்பு - மே, 1955)
பொருள்முதல்வாதம் என்றால் நாத்திகம் என்று சுருக்கமாகப் புரிந்து கொண்டவர்கள் நிறைய தோழர்கள் நம் நாட்டில் இருக்கின்றனர். பொருள்முதல்வாதம் நாத்திகம் தான். நாத்திகம் பொருள்முதல்வாதத்தில் அடங்கி இருக்கிறது, ஆனால் பொருள்முதல்வாதம் பேசுகிற அனைத்தையும் அறிந்து கொள்ளாமல் சமூகத்தை பொருள்முதல்வாதப் பார்வையில் அணுகமுடியாது. இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு நாத்திகம் ஓரளவுக்குப் போதுமானது ஆனால் சமூகத்தைப் புரிந்து கொள்தற்கு இதுமட்டும் போதுமானதாகாது.
வர்க்கங்களின் தோற்றமும் அதன் போராட்டமும், வரலாற்றைப் படைப்பது மக்களே, வரலாற்றியல் தனிநபர் பாத்திரம், உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள், உற்பத்தி முறைகள், அடித்தளம் மேற்கட்டமைப்புக் கோட்பாடு இது போன்ற பலவற்றைப் படித்தறிய வேண்டும். ஆனால் நம்நாட்டில் உள்ள கட்சிகள் அமைப்புகள் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதிலேயே காலத்தைக் கடத்துகிறது. “பண்பாட்டு மார்க்சியம்” பேசிக் கொண்டு, பின்நவீனத்துத்தை பின்பற்றி அடித்தளம் மேற்கட்மைப்பு என்கிற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது. கிராம்ஷ்கியின் மயக்கத்தில் அடித்தளத்தின் தீர்மானகரப் போக்கை கேள்விக்குள்ளாக்கி அடையாள அரசியலில் மயங்கிக் கிடக்கிறது.
சிபிஐ (எம்) கட்சி இன்றையநிலையில் பின்நவீனத்துவத்தை மறுதலிக்கிறது, ஆனால் பின்நவீனத்துவம் மார்க்சியத்தின் மேல் எழுப்பிய கேள்விகளுக்கு விமர்சன வழியில் பதிலளிக்காமல் இருக்கிறது. அதனால் அந்த கட்சியில் பல தோழர்கள் பின்நவீனத்துவ மயக்கத்தில் இருக்கின்றனர்.
இருபத்தி மூன்றாம் தலைப்பு, “பரிசீலனையும் படிப்பும்.”
பிரச்சினை இல்லாதது என்று எதுவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிரச்சினை எழத்தான் செய்யும், அதனை பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். பரிசீலையையும் தீர்வையும் ஒரு உதாரணத்தின் மூலம் மாவோ விளக்குகிறார்.
“பரிசீலனை என்பது பத்து மாதம் கர்ப்பம் தரித்திருப்பதற்குச் சமமானது. பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பிரசவ நாளுக்குச் சமம். ஒரு பிரச்சினையை பரிசீலனை செய்வது உண்மையில் அதை தீர்ப்பதற்குத்தான.”
(புத்தக வழிபாட்டை எதிர்த்து)
மாவோ என்ன கூறுகிறார் என்றால், கர்ப்பம் தரிப்பது பிரசவுத்துக்குத்தான். பரிசீனை செய்வது பிரச்சினைக்கு தீர்வு காணத்தான்.
ஒரு பிரச்சினை எழுந்துள்ளது என்றால் அதை தீர்ப்பதற்கு மூளையை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கக்கூடாது. ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குழுவை அமைத்தோ பிரச்சினைத் தீர்ப்பதற்கு ,ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்ககூடாது. பிரச்சினைக்கானத் திர்வு மூளைக்குள் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. பிரச்சினையின் பின்புலத்தில்தான் தீர்வை காண முடியும்.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறந்த வழி என்னவென்றால், முதலில் அந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்தப் பிரச்சினையின் வரலாற்றை பிரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் அப்போதுதான் பிரச்சினைக்கான சரியான தீர்வை கண்டடைய முடியும். எந்தவித பரிசீலனையில் இறங்காமல் தனது சொந்த மூளையை மட்டும் பயன்படுத்தி முடிவெடுப்பவன் மூட்டாளகத்தான் இருக்க முடியும் என்கிறார் மாவோ.
ஒரு பிரச்சினையைப் பற்றி பரிசீலிக்கும் போதுதான் அந்தப் பிரச்சினைக்கான காரணத்தை அறிய முடியும். காரணத்தை அறிந்து கொண்டாலே பிரச்சினைக்கு பாதி தீர்வு அடைந்ததாகக் கருதலாம். மீதித் தீர்வு பிரச்சினைக்கான காரணத்தை அழிப்பதில் இருக்கிறது.
பிரச்சினையின் காரணத்தை அறிந்து, தீர்வை முன்வைக்கும் போது, தீர்வு முழுமை அடைகிறது.
ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையை கண்டறியும் குழு பெரியதாக இருக்க வேண்டியதில்லை. மூன்று முதல் எட்டுப் பேர்களுக்குள் இருந்தால் போதுமானது. பிரச்சினைக்கு தீர்வு உருவாக்கும் அளவுக்கு கால அவகாசம் அந்தக் குழுவுக்கு வழங்க வேண்டும். பரிசீலனை செய்வதற்கு, கேள்விகளைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். குழுவில் உள்ளவர்கள் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்தவுடன் அதனை எவ்வாறு தீர்ப்பது என்று கலந்துரையாட வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிரச்சினைக்கான தீர்வை சரியாக வைக்க முடியும் என்று மாவோ ஆலோசனை வழங்கு உள்ளார்.
இருபத்தி நான்காவது தலைப்பு, “தவறான கருத்துக்களைத் திருத்துவது.”
ஒருவர் தவறு இழைப்பது இயல்பு, ஆனால் அதை நடைமுறையில் சோதிக்கும் போது தவறு உணரப்படும். உணரப்பட்டதை திருத்திக் கொள்ள வேண்டும்.
தவறு செய்வதவர் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு, அவர் நமதுநெருங்கிய நண்பர், அன்பிற்கு உரியவர், பழைய கூட்டாளி என்ற காரணத்தின் அடிப்படையில் அவருடன் கோட்பாட்டு வழியில் வாதிடுவதற்கு பதிலாக, சமாதானமாகவும் நட்புறவுகளை காப்பாற்றவும் பிரச்சினையில் இருந்து நழுவுவது அல்லது அதனை எளிதாகக் கருதுவது, தனிநபருக்கும் கட்சிக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தப் போக்கு தாராளவாதமாகும். இந்த தாராளவாதம் கடைப்பிடிக்கப்படும் தனிநபரையும் கட்சியையும் அழித்துவிடும்.
இந்த தாராளவாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுக் கோப்பை சிதைக்கும். மக்களிடம் இருந்து கட்சியை பிரிக்கும். இது ஒரு பெரும் தீங்கானப் போக்கு என்கிறார் மாவோ.
“ஒரு புரட்சிகரக் கூட்டுறவில் தாராளவாதம் என்பது பெருத் தீங்கு விளைவிக்கும் ஒன்று. இது ஐக்கியத்தை அரித்துத் தின்கிறது, ஒன்றிணைப்பைச் சீர்குலைக்கின்றது, வேலையில் பாராமுகத்தை உண்டாக்குகின்றது, வேற்றுமையை விதைக்கின்றது, இது ஒரு நச்சுத் திரவம். அது புரட்சிகர அணிகளிலுள்ள கட்டுக்கோப்பான நிறுவன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்து விடுகின்றது. கொள்கைகள் முழுமையாய் நடைமுறைப்படுத்துவதை இது தடுக்கின்றது. மக்களிடமிருந்து, கட்சி அமைப்புகளைப் பிரித்து விடுகின்றது. இது மிகத் தீமையான ஒரு போக்காகும்.”
(தாராள வாதத்தை எதிர்ப்போம் – 7 செப்டம்பர், 1937)
“தாராள வாதத்தை எதிர்த்து” என்று தலைப்பிட்டே மாவோ இதை எழுதியுள்ளார். தாரளவாதமானது மார்க்சியக் கோட்பாட்டை வறட்டுவாதமாக ஆக்குகிறது. மாவோ கூறியதை தொகுத்துப் பார்ப்போம்.
தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளை வெறும் வறட்டுத் தத்துவமாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர்; ஆனால் அதை நடைமுறைப்படுத்த தயங்குகின்றனர். தமது தாராளவாதத்துக்குப் பதிலாக, அதனிடத்தில் மார்க்சியத்தை வைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. இத்தகைய நபர்களிடம், மார்க்சியம் இருக்கும் அதே வேளையில், தாராளவாதமும் இருக்கின்றது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர். ஆனால் தாராளவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தமக்குத் தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர்.
தாராளவாதத்துக்கும் தவறுகளுக்கும் காரணமாக இருப்பது இறுமாப்பு, செருக்கு ஆகும்.
இறுமாப்பும் செருக்கும் இருப்பவர்களிடையே தான், தவறுகளும் தாராளவாதமும் தோன்றுகிறது. “தான்” என்கிற செருக்கு முன்னேற்றத்துக்கு தடையாகும். இறுமாப்பு பின்னடைவுக்குக் காரணமாகிறது. ஒருவர் வேலையில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றாலும் இறுமாப்பும் செருக்கும் கொள்ளக்கூடாது. இதனை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாவோ கூறியுள்ளார்.
இருபத்தி ஐந்தாவது தலைப்பு, “ஐக்கியம்.”
ஐக்கியம் என்பதை ஒற்றுமை என்றும் கூறலாம். ஒரு நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை, நாட்டில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமை ஆகியவையே, நமது நோக்கத்தை உறுதியாக வெற்றியடையச் செய்யும் என்கிறார் மாவோ. மேலும் கூறுகிறார், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஒற்றுமையின் மூலம் தான், முழு வர்க்கத்தினுடைய ஒற்றுமையையும், முழு தேசத்தினுடைய ஒற்றுமையையும் காப்பாற்ற முடியும். இந்த ஒற்றுமைகள் இருந்தால்தான் எதிரிவை விழ்த்த முடியும்.
ஒற்றுமை இருந்தால்தான் முரண்பாடுகளை தீர்க்க முடியும். 1942 ஆம் ஆண்டு “ஐக்கியம், விமர்சனம், ஐக்கியம்" என்கிற சூத்திரத்தைப் பயன்படுத்தியது பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் இந்த ஜனநாயக முறை, 1942-இல், “ஐக்கியம், விமர்சனம், ஐக்கியம்" என்ற சூத்திரத்தில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இதை விரித்துக் கூறினால், இதன் பொருள், ஐக்கியத்துக்கான ஆசையுடன் தொடங்கி, விமர்சனத்தின் அல்லது போராட்டத்தின் மூலம் முரண்பாடுகளைத் தீர்த்து, ஒரு புதிய அடிப்படையில் ஒரு புதிய ஐக்கியத்துக்கு வருவதாகும். நமது அனுபவத்தில், மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் சரியான முறை இதுவே.”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச்
சரியாகக் கையாள்வது பற்றி - 27 பிப்ரவரி, 1957)
ஒற்றுமையில் இருந்து தொடங்கி, விமர்சனங்களின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து புதிய ஒற்றுமைக்கு செல்வதை மாவோ இங்கே மிக சிறப்பாகக் கூறியுள்ளார்.
மாவோவின் இந்த “செவ்வேடு” என்கிற சிறிய நூல், சிறந்த கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பற்கு பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
நான்காம் பகுதிக்கு செல்ல
நான் கதிரவன் தோழர் வாசித்தேன் சிறப்பாக இருக்கிறது தோழர். மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சி
Delete