(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட
54 வது வார வகுப்பு – 19-03-2022)
போன வகுப்பில் 1) கம்யூனிஸ்ட் கட்சி 2) வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் 3) சோஷலிசமும் கம்யூனிசமும் என்ற மூன்று தலைப்புகளைப் பார்த்தோம் இன்றைய வகுப்பில் 11 தலைப்புகளைப் பார்க்கப் போகிறோம்.
நான்காவது தலைப்பு “மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி”
கம்யூனிஸ்டுகள் இருண்டு வகையான முரண்பாடுகளை சந்திக்கின்றனர். ஒன்று சுரண்டல் வர்க்கத்துக்கும் உழைப்பாளி வர்க்கத்துக்கும் உள்ள முரண்பாடு, மற்றொன்று மக்கள் மத்தியில் காணும் முரண்பாடு. சுரண்டும் வர்க்கத்தின் மீது காணும் முரண்பாடு பகைமை முரண்பாடாகும். நமக்கும் மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு பகைமையற்ற முரண்பாடு. இரண்டிலும் முரண்பாடு என்று கூறியவுடன் எதிரியையும் உழைக்கும் மக்களையும் ஒன்றாக வைத்துப் பார்க்கக்கூடாது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதே போல இடதுசாரிகளிடையே உள்ள முரண்பாடு பகைமையற்ற நட்பு முரண்பாடாகும். ஆனால் நமது நாட்டில் இடதுசாரிகளிடையே காணப்படும் முரண்பாட்டை, எதிரி வர்க்கத்தைவிட மோசமாக கையாள்கின்றனர். பகைமை முரண்டாக கருதுகின்றனர். இடதுசாரிகளிடையே உள்ள முரண்பாட்டை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். நட்பு முரணாகக் கையாள வேண்டும்.
மக்களின் குறைபாடுகளை விமர்சிப்பது தேவையானது தான், ஆனால் அப்படி செய்யும் போது மக்களின் நிலைப்பாட்டின் உண்மையில் நின்று செய்ய வேண்டும். அதாவது மக்களிடம் காணும் குறைகள் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து அதனை அகற்றும் முறையில் அணுகவேண்டும்.
இடதுசாரி தோழர்களை எதிரிகளைப் போல் நடத்தக் கூடாது, அவ்வாறு நடந்து கொள்வது எதிரியின் நிலைப்பாட்டை எடுப்பதற்கு சமமாகும். அதாவது நட்பு முரண்பாட்டை பகை முரண்படாக அணுகுவது, எதிரியின் நலன்களை நிறைவேற்றுவதாக ஆகிவிடும்.
1937 ஆண்டு “முரண்பாடு பற்றி” என்ற நூலில் மாவோ எந்தெந்த முரண்பாடுகளை எப்படி கையாள வேண்டும் என்று கூறியுள்ளார். அதைப் பார்ப்போம்.
பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, சோசலிசப் புரட்சியின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் மூலம் தீர்க்க வேண்டும். காலனிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, தேசியப் புரட்சியின் மூலம் தீர்க்க வேண்டும். சோசலிச சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டை, விவசாயத்தில் கூட்டுமை மயமாக்கல் மற்றும் இயந்திர மயமாக்கல் மூலம் தீர்க்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தோன்றும் முரண்பாடுகளை, விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மூலம் தீர்க்க வேண்டும். சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாட்டை, உற்பத்தி சக்திகளை வளர்ப்பதின் மூலம் தீர்க்க வேண்டும்,
மாவோ இங்கே கூறியபடி வேறுபட்ட முரண்பாடுகளை வேறுபட்ட அணுகுமுறையால் தீர்க்கப்பட வேண்டும்.
மக்களிடையே சித்தாந்தம் சார்ந்த அல்லது சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி ஜனநாயக முறையே ஆகும். இதனைத் தீர்ப்பதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது. விவாதித்தல், விமர்சித்தல், இணக்கமான கலந்துரையாடல், பயிற்றுவித்தல் ஆகிய வழிமுறைகளே ஐனநாயக வழி முறைகளாகும்.
ஜனநாயக வழிமுறைகள் இல்லாமல் பொது ஒழுங்கைப் பராமரிப்பது சாத்தியமற்றது. அமைப்பு விதிமுறைகள் கூட வற்புறுத்தலுடனும் கல்வியுடனும் இணைந்து இருக்க வேண்டும், ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் விதிகளை பின்பற்றுவதில் கண்டிப்புகள் மட்டும் போதுமானதல்ல.
ஐந்தாவது தலைப்பு, “போரும் அமைதியும்”.
வர்க்கங்கள், நாடுகள், அரசுகள் அல்லது அரசியல் குழுக்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான போராட்டத்தின் மிக உயர்ந்த வடிவம் தான் போர்.
"போர் என்பது அரசியலின் தொடர்ச்சி." இந்த பொருளில், போர் என்பது அரசியலாகும், போரே ஒரு அரசியல் நடவடிக்கையாக இருக்கிறது; பழங்காலத்திலிருந்தே அரசியல் தன்மை இல்லாத ஒரு போர் இருந்ததில்லை என்று பொதுவாகக் கூறலாம். இருப்பினும், போருக்கு அதன் சொந்த தனித்தன்மைகள் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ச்சியடையும் போது அது வழக்கமான வழிகளில் செல்ல முடியாமல் தடைபடுகிறது, இந்தத் தடைகளை உடைத்திட போர் வெடிக்கிறது.
அரசியலை ரத்தம் சிந்தாதப் போர் என்றும், போரை ரத்தம் சிந்தும் அரசியல் என்றும் கூறலாம் என்கிறார் மாவோ. (நீண்டகால போர் பற்றி. மே, 1939)
நியாயமானப் போர், அநியாயமானப் போர் என்று போர் இருவகைப்படும். முற்போக்கான அனைத்தைப் போர்களையும் நியாயமானவை என்றும் முன்னேற்றத்தை தடுக்கும் அனைத்துப் போர்களும் நியாயமற்றவை அதாவது அநீதியாயமானவை என்றும் அழைக்கப்படுகிறது.
கம்யூனிஸ்டுகள் அநீதியாயமானப் போரை எதிர்க்கின்றனர். நியாயமானப் போரை நிகழ்து கின்றனர்.
மாவோவின் ஒரு மேற்கோள் இருக்கிறது, ““துப்பாக்கியில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்ற உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உள்வாங்க வேண்டும்” (போர் மற்றும் வியூகத்தின் சிக்கல்கள் -நவம்பர் 6, 1938). மாவோவின் இந்தக் கூற்றை பலர் தவறாகப் புரிந்து கொண்டு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அதிதீவிர இடதுசாரியாக மாறிவிடுகின்றனர்.
அதிதீவிர இடதுசாரிகள் மற்ற அரசியல் செயல்பாடுகளை மறந்துவிட்டு துப்பாக்கியில் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றனர். உண்மையில் மாவோவின் கருத்து இதுவல்ல. இதை எழுதிய நூலிலேயே மற்றோர் இடத்தில் மாவோ கூறியுள்ளார், “கட்சி துப்பாக்கி மீது கட்டளையிடுகிறது, கட்சியின் மீது துப்பாக்கி கட்டளையிடுவதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இதுவே நமது கோட்பாடு.”
கட்சியின் நடவடிக்கையே முதன்மையானது, கட்சியின் அரசியல் நடவடிக்கையின் தொடர்ச்சியே துப்பாக்கி எடுத்துப் போரிடுவதாகும்.
துப்பாக்கி தவிர்த்த மற்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அமைப்புகள் துப்பாக்கி தூக்க வேண்டிய நிலையினை சந்திக்க தெரியவில்லை.
கம்யூனிஸ்டுகள் போரை விரும்புவதில்லை, உலகத்தில் இருந்து போரை ஒழிப்பதற்கு வாதிடவே கம்யூனிஸ்டுகள் விரும்புகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டுகள் போர் சூழலின் போது அமைதியைப் பேசிக் கொண்டு, போரை தடுக்காமலோ, போரை எதிர் கொள்ளாமலோ ஓடி ஒளிபவர்கள் அல்ல.
கம்யூனிஸ்டுகளின் அமைதி விருப்பத்துக்கு மாறாக ஏகாதிபத்தியம் ஒரு போரை நடத்துவதில் விடாப்பிடியாக இருந்தால் கம்யூனிஸ்டுகள் வேறு வழியில்லாமல், உறுதியோடும் தீர்மானத்தோடும் போரை சந்திப்பர். போரை மறுக்கும் அமைதிவாதிகள், தீடிரென்று போர் ஏற்படும் போது என்ன செய்வார்கள், அவர்கள் போரை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பர். ஆனால் கம்யூனிஸ்டுகள் அப்போரில் ஈடுபடும் ஆதிக்கவாதிகளை வீழ்த்துவர். இரண்டாம் உலகப் போரில் நடந்ததை நாம் நினைவில் கொள்வோம்.
மேலே கம்யூனிஸ்டுகள் போரை விரும்புவதில்லை, ஒழிக்கவே வாதிடுகின்றனர் என்று பார்த்தோம். ஆனால் கம்யூனிஸ்டுகள் எதார்த்துக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டார்கள், அவர்களால் எதார்தத்துக்கு விரோதமாக இருக்க முடியாது என்பதே உண்மை ஆகும்.
“ஏகாதியத்திய நாடுகளைப் பொறுத்தவரையில், நாம் அந்நாட்டு மக்களுடன் ஐக்கியப்பட வேண்டும், அந்த நாட்டு மக்களுடன் சமாதானமாக வாழவும், அவர்களுடன் வணிகம் செய்யவும், சாத்தியமான வழியில் போரைத் தடுக்கவும் பாடுபட வேண்டும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவற்றைப் பற்றி எதார்த்தத்துக்கு பொருந்தாத எவ்வித கருத்தும் கொள்ளக்கூடாது.”
(மக்கள் மத்தியில் முரண்பாடுகளை சரியாகக்
கையாள்வது குறித்து - பிப்ரவரி 27, 1957)
கம்யூனிஸ்டுகள் எதார்த்திலிருந்தே தங்களது அனைத்து நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றனர். கம்யூனிஸ்டுகளின் வெற்றி இதில்தான் அடங்கி இருக்கிறது. எதார்த்தத்தை மக்களுக்கு உரக்கச் சொல்பவர்களே கம்யூனிஸ்ட்.
“உலகம் முன்னேறி வருகிறது, எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது, வரலாற்றின் இந்தப் பொதுவான போக்கை யாராலும் மாற்ற முடியாது. உலக முன்னேற்றம் மற்றும் ஒளிமயமான எதிர்காலம் குறித்த உண்மைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும், இதன் மூலம் அவர்கள் வெற்றியின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வர்..”
(சங்கிங் பேச்சுவார்த்தைகளில் - அக்டோபர் 17, 1945)
விஞ்ஞானக் கம்யூனிசத்தின் முடிவுகளை மக்களிடையே பரப்புரை செய்வதின் மூலம் அவர்களுக்கு புரிய வைத்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
ஆறாவது தலைப்பு “ஏகாதிபத்தியமும் அனைத்து பிற்போக்குவாதிகளும் காகிதப்புலிகள்”
மாவோவின் இந்தக் கூற்றையும் பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்தக்கூற்று இன்றைய நிலையை வைத்துக் கூறவில்லை, தொலை நோக்குப் பார்வையில் கூறியதாகும்.
“அனைத்து பிற்போக்குவாதிகளும் காகிதப்புலிகள். தோற்றத்தில், பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள், ஆனால் உண்மையில், அவர்கள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் அல்ல. நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால், உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல, மக்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள்.”
(அமெரிக்க நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்குடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட், 1946)
மாவோ இங்கே மிகவும் சரியாகவே கூறியுள்ளார். மேலும் கூறுகிறார், அனைத்திலும் எதிர்நிலைகளின் ஐக்கியமும் போராட்டமும் இருப்பது போல ஏகாதிபத்தியம் போன்ற பிற்போக்கு சக்திகளிலும்கூட இந்த இரட்டைத் தன்மை இருக்கிறது. ஒரு பொருளோ, நிகழ்வே அதனுள் ஒற்றுமையும் போராட்டமும் இணைந்து காணப்படுகிறது என்று இயக்கவியல் கூறுவதை மாவோ இங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏகாதிபத்தியம் ஒரு நேரத்தில் மெய்யான புலிகளாகவும், மற்றொரு நேரத்தில் காகிதப் புலிகளாகவும் இருக்கின்றன. தொலைநோக்குப் பார்வையில் ஏகாதிபத்தியமும் அனைத்துப் பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள் என்பதை அதன் உண்மையான இயல்புகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
தொடக்கத்தில் பலமுடையவர்களாகக் காணப்பட்ட பிற்போக்குவாதிகள் இறுதியில் காகிதப்புலிகளே. காரணம் அவர்கள் மக்களிடமிருந்து விலகி நிற்பவர்கள். இட்லர் ஒரு காகிதப் புலியே? இட்லர் வீழ்த்தப்படவில்லையா? ரஷ்யாவின் ஜார், சீனப் பேரரசர், ஜப்பானிய ஏகாதிபத்தியம் அனைத்தும் காகிதப் புலிகள் என்கிறார் மாவோ.
பலமானவையாக முதலில் காணப்பட்ட அனைத்தும் இறுதியில் தூக்கி எறியப்பட்டன என்பதே வரலாற்று உண்மையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் தூக்கியெறியப்படவில்லை, அதனிடம் அணுகுண்டு இருக்கிறது. அதுவும் முறியடிக்கப்படும் என்று நம்புகிறேன். அமெரிக்காவும் காகிதப் புலிதான் என்கிறார் மாவோ. (கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாஸ்கோ கூட்டத்தில் பேச்சு -நவம்பர் 18, 1957)
1958ஆம் ஆண்டில் உயர்நிலை அரசு மாநாட்டில் மாவோ உரையாற்றியதில் இருந்து ஒரு சிறு மேற்கோளைப் பார்ப்போம் (செப்டம்பர் 8,).
“அமெரிக்க ஏகபோக முதலாளித்துவக் குழுக்கள் தங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் போர்க் கொள்கைகளைத் தொடர்ந்து முன்வைத்தால், உலக மக்கள் அனைவரும் அவர்களைத் தூக்கிலிடும் நாள் கண்டிப்பாக வரும். அதே நிலை அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கும் காத்திருக்கிறது.”
மாவோ இதை மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதனை நிறைவேற்றுவது உலக உழைக்கும் மக்களின் கடமையாகும்
ஏழாவது தலைப்பு, “போராடத் துணியுங்கள் வெற்றி பெற துணியுங்கள்.”
வெற்றி பெற வேண்டுமானல் போராட வேண்டும். துணிந்துபோராடாமல் வெற்றி என்பதை அடைய முடியாது. துணிச்சலின் அவசியத்தை மாவோ வலியுறுத்தியுள்ளார்.
“சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய-லெனினியத்தினுடைய அறிவியலின் அடிப்படையில் சர்வதேச மற்றும் தேசிய நிலைமையை தெளிவாக மதிப்பிட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிற்போக்குவாதிகளின் அனைத்து தாக்குதல்களையும் தோற்கடிக்கப்பட வேண்டும்.”
"தற்போதைய சூழ்நிலை மற்றும் நமது பணிகள் – டிசம்பர் 25, 1947,
தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ எழுத்துகள், 2வது பதிப்பு)
பலமான ஏகாதிபத்தியத்தை காகிதப் புலி என்று மாவோ ஏன் கூறுகிறார். இன்றைய நிலையில் ஏகாதிபத்தியம் பலமானதாகக் காணுவதைப் பார்க்கும் போது, சில புரட்சியாளர்கள் அவர்களை வெல்ல முடியாது என்கிற சுணக்கத்தில் இருக்கின்றனர். தற்காலத்தை எடுத்துக் கொண்டால் ஏகாதிபத்தியத்திடம் காண்காணிக்கும் சாதனங்கள் அதிகம் இருக்கின்றன. இதனைப் பார்க்கும் நமது காகிதப் புலியான புரட்சியாளர்கள் மிரண்டு காணப்படுகின்றனர்.
அவர்களின் மிரட்சிக்குக் காரணம் ஏகாதிபத்தியத்தின் வெளி வடிவத்தை மட்டுமே கண்டதே ஆகும். ஏகாதியத்தியத்தியம் தன்னுள் உள்முரண்பாட்டுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு பல காரணங்களில் முக்கியமானக் காரணம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் சரியாக அவர்கள் புரிந்து கொள்ளாததே ஆகும்.
மார்க்சியத்தின் விஞ்ஞானப் பார்வை என்பது இந்த இரண்டில்தான் அடங்கி இருக்கிறது. இந்த இரண்டில் தெளிவு பெறாத கம்யூனிஸ்டுகள் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் மார்க்சிய கல்வியை முறையாக கற்க வேண்டும், இதைத் தவிர வேறுவழி ஏதும் கிடையாது.
வரலாற்று வழியாக, அழிவின் விளிம்பில் உள்ள அனைத்து பிற்போக்கு சக்திகளும் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக கடைசி அவநம்பிக்கையான போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றன, மேலும் சில புரட்சியாளர்கள் இந்த தோற்றத்தில் பலமாகவும் உள்ளுரப் பலவீனமாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடியாமல் ஏமாறுகின்றனர். எதிரிகளின் அழிவை நோக்கி நெருங்கும் அதே நேரத்தில் நாம் வெற்றியை நோக்கி முன்னேறுகிறோம் என்கிற உண்மையை அத்தகையப் புரட்சியார்கள் காணத் தவறிவிடுகின்றனர் என்று மாவோ கூறியுள்ளார். (இரண்டாம் உலகப் போரில் திருப்புமுனை - அக்டோபர் 12, 1942)
மேலும் இப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டு மாவோ,:- “நம்மிடையே உள்ள பலவீனமான அனைத்து சிந்தனைகளையும் நாம் நிக்க வேண்டும். எதிரியின் பலத்தை மிகைப்படுத்தி மதிப்பிடுவது, மக்களின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது போன்ற கருத்துக்கள் தவறானவை.” ("தற்போதைய சூழ்நிலை மற்றும் நமது பணிகள்" (டிசம்பர் 25, 1947)
பலவீனமானவர்கள் பலம் பெற வேண்டுமானால் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையில் அனைத்தையும் காண பயிற்சி பெற வேண்டும். இதற்கான கல்வியை இடைவிடாமல் தொடர்ந்து பெற வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் சமாதானத்தையே விரும்புகின்றனர். ஆனால் ஏகாதிபத்தியங்கள் தமது செருக்கான, அநியாயமான கோரிக்கைகளையும், ஆக்கிரமிப்பை விரிவாக்கும் சூழ்ச்சிகளையும் கைவிடாதவரையில் போரிடாமல் இருக்க முடியாது. இந்த இடத்தில் மாவோ “நாங்கள் போர் பிரியர் இல்லை” என்பதையும் பதிவு செய்துள்ளார். மேலும் மாவோ கூறிய ஒரு மேற்கோளை பார்ப்பதோடு இந்த தலைப்பை முடித்துக் கொள்வோம்.
“நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒரு நாளும் போரிட விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலைமைகள் நம்மைப் போரிடும்படி தூண்டுமானால், நாம் இறுதிவரை போரிட வேண்டிவரும்.”
(அமெரிக்க நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்குடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட், 1940)
எட்டாவது தலைப்பு, “மக்கள் ராணுவம்.”
“கூட்டரசாங்கம் பற்றி” என்ற நூலில், மாவோ மக்கள் ராணுவம் பற்றி மிக சிறப்பாக கூறியுள்ளார். மக்கள் ராணுவம் என்ற ஒன்று இல்லவிட்டால் மக்களுக்கு எதுவும் இல்லை. இந்த மக்கள் படை, பலம் உடையதாக இருப்பதற்குக் காரணம், இந்தப் படையில் உள்ள அனைவரும் உணர்வு பூர்வமாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர். இந்தப் படை ஒரு சில நபர்களின் அல்லது ஒரு குறுங்குழுவின் தனி நலன்களுக்காக போராடுவதில்லை. பரந்துப்பட்ட உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் முழு தேசத்தின் நலன்களுக்காகவும் மக்களில் பெரும்பான்மையினரின் நலன்களுக்காகவும் போராடுகின்றது. இந்தப் படை மக்களுடன் உறுதியாக நிற்கிறது. மேலும் முழு மனதுடன் அவர்களுக்கு பணி செய்கிறது.
மக்கள் ராணுவம் என்று சொல்லும் போது, இதற்கு தலைமைத்தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைத் தாங்கும் தகுதியினைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். இத்தகைய கட்டுப்பாடு இல்லாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை.
“சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் அறிக்கை”யில் (1947) மாவோ கூறுவதை அப்படியே பார்ப்போம்.
“நாம் மகத்தான மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், நாம் மகத்தான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலுள்ள படையினர்கள் என்பதை நமது அதிகாரிகள், படைவிரர்கள் எல்லோரும் எப்பொழுதும் மனதில் நிறுத்த வேண்டும். கட்சியின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடித்தால், நாம் வெற்றி பெறுவது உறுதி.”
கம்யூனிஸ்டுகளினுடைய வெற்றியின் உறுதி எதில் அடங்கி இருக்கிறது என்றால், மார்க்சிய லெனினிய அடிப்படையில் உறுதியாக நிற்கிற கட்டுப்பாடுடைய கட்சியில் தான் இருக்கிறது. அனைவரும் கட்டுப்பாடுடைய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்படுகிறோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். கட்சியின் கட்டளைகளை தவறாது பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ்தான் வெற்றி சாத்தியமாக முடியும்.
முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சி வலது-இடது திரிபுகளை எதிர்த்து மார்க்சிய வழியில் உறுதியாக செல்ல வேண்டும். அதாவது சட்டவழியிலான போராட்டத்துடன் முடங்கிப் போன வலது திரிபையும்; சட்ட வழியிலானப் போராட்டத்தைப் முற்றப் புறக்கணித்து, சட்ட வழியற்ற போராட்டத்திலேயே கவனம் செலுத்துகிற இடது திரிபையும், மார்க்சிய லெனினிய வழியில் விமர்சித்து மார்க்சிய அடிப்படையில் செயல்பட வேண்டும்.
“யுத்தமும் யுத்த தந்திரமும் பற்றிய பிரச்சினைகள்” (1938) என்ற நூலில் மாவோ கூறியதை மனதில் நிறுத்துவோம்.
“கட்சி துப்பாக்கி மீது கட்டளையிடுகிறது, கட்சியின் மீது துப்பாக்கி கட்டளையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை.”
மாவோவின் இந்தக் கூற்றை மனதில் நிறுத்தி இடது திரிபை நீக்க வேண்டும். அதே போல நாடாளுமன்றப் பாதையில் முடங்கிப் போன வலது திரிபையும் எதிர்க்க வேண்டும். வலது-இடது திரிபில் இருந்து நீங்காத கட்சி மார்க்சிய விஞ்ஞான வழியில் செயல்பட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பத்தாவது தலைப்பு, “கட்சிக் குழுக்களின் தலைமை.”
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை என்பது தனிநபர் அதிகார மையம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை என்பது கூட்டுத்தலைமையிலானது. அதனால்தான் கட்சியின் தலைவரை பொதுச் செயலாளர் என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைவர் அதிபராகவோ தனிநபராகவோ செயல்படக் கூடாது.
மாவோவின் ஒரு மேற்கோளுடன் இந்த தலைப்பை முடித்துக் கொள்வோம்.
"கட்சிக் கமிட்டியின் செயலாளர் ஒரு "குழுத் தலைவராக" இருக்க வேண்டும். ஒரு கட்சிக் குழுவில் பத்து முதல் இருபது உறுப்பினர்கள் உள்ளனர். இது இராணுவத்தில் உள்ள ஒரு குழுவைப் போன்றது, மற்றும் செயலாளர் "குழுவின் தலைவர்" போன்றவர். இந்த குழுவை சிறப்பாக வழிநடத்துவது எளிதல்ல. மத்திய குழுவின் ஒவ்வொரு பிராந்திய பணியகம் அல்லது துணை பிராந்திய பணியகம் இப்போது ஒரு பரந்த பகுதியை வழிநடத்துகிறது மற்றும் மிகவும் கடினமான பொறுப்புகளை சுமக்கிறது.
தலைமைத்துவம் என்பது பொதுவான மற்றும் குறிப்பிட்ட கொள்கைகளை தீர்மானிப்பது மட்டுமல்ல, சரியான வேலை முறைகளை உருவாக்குவதும் ஆகும். சரியான, பொதுவான மற்றும் குறிப்பிட்ட கொள்கைகளுடன் கூட, வேலை முறைகள் புறக்கணிக்கப்பட்டால் சிக்கல்கள் இன்னும் எழலாம். தலைமைப் பணியை நிறைவேற்றுவதற்கு, ஒரு கட்சிக் குழு அதன் "குழு உறுப்பினர்களை" சார்ந்து இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் தங்கள் பங்கை முழுமையாக வகிக்க அவர்களுக்கு துணைபுரிய வேண்டும்.
ஒரு சிறந்த "குழுத் தலைவராக" இருப்பதற்கு செயலாளர் நன்றாகப் படிக்கவும் முழுமையாக விசாரணை செய்யவும் வேண்டும். ஒரு செயலாளர் அல்லது துணைச் செயலாளர் தனது சொந்த "குழு உறுப்பினர்களிடையே" பிரச்சாரம் மற்றும் அமைப்பு பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்தாவிட்டாலோ, கமிட்டி உறுப்பினர்களுடன் தனது உறவைக் கையாள்வதில் சரியில்லை என்றாலோ, தனது "குழுவை" சிறப்பாக வழிநடத்துவது கடினமாக இருக்கும்.
"குழு உறுப்பினர்கள்" அடிக்கு அடி அணிவகுத்து செல்லாவிட்டால், போராட்டத்திலும் நிர்மாணத்திலும் கோடானு கோடி மக்களுக்கு அவர்கள் தலைமை தாங்குவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உண்மையில் செயலாளருக்கும் கமிட்டி உறுப்பினர்களுக்கும் உள்ள உறவு சிறுபான்மையினர் பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிய வேண்டும்".
("கட்சிக் குழுக்களின் வேலை முறைகள்" (மார்ச் 13, 1949)
மாவோவின் இந்தக் கூற்றுக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. இரண்டு மூன்று முறை படித்தாலே போதும்.
கட்டுப்பாடுடன் சரியாக செயல்படாத கட்சியினால் உழைக்கும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. கட்சியின் முழு வேலையை சரியாக செய்வதின் மூலமே விடுதலையை சாத்தியப்படுத்த முடியும்.
பதினோறாவது தலைப்பு “மக்கள் திரள் வழி.”
இது ஒரு முக்கியமானத் தலைப்பு, “கூட்டரசாங்கம் பற்றி” (1945) என்ற நூலில் மாவோ, மக்கள் மட்டுமே, உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் என்று கூறியுள்ளார். 1941 ஆம் ஆண்டு மாவோ (கிராமப்புற ஆய்வுகளுக்கான முன்னுரை மற்றும் பின்குறிப்பு - மார்ச் மற்றும் ஏப்ரல் 1941) மக்கள் தான் உண்மையான வீரர்கள், ஆனால் நாம் அடிக்கடி சிறுபிள்ளைத் தனமுடையவர்களாகவும், நகைக்கத் தக்கவர்களாவும் இருக்கின்றோம். இதை விளங்கிக் கொள்ளா விட்டால், மிக தொடக்க நிலை அறிவைக்கூட பெறுவது சாத்தியமாகாது என்று மாவோ கூறியுள்ளார்.
உழைக்கும் மக்கள்தான் படைப்பாளிகள், அவர்களே சமூகத்தை வளர்க்கின்றனர், மாற்றவும் செய்கின்றனர். கம்யூனிஸ்டுகள் அதற்கு தலைமைத் தாங்குகிறார்கள். இந்த பொறுப்பை உணர்ந்து அதற்கான அறிவை பெறவேண்டும். மக்கள் தான் படைப்பாளர்கள் என்று கூறினால் அதற்கு பொருள் மக்களின் நிலைக்கு தங்களை இறக்கி கொள்வதல்லை. சமூகத்தின் செல்வழியை அறிந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். தலைமை என்பதின் பொருள் இதுதான்.
மக்கள் தன்னெழுச்சியாக செயல்பவர், கம்யூனிஸ்டுகள்தான் மக்களுக்கு அந்த தன்னெழுச்சி ஏற்படுவதற்கான காரணத்தை விளக்குவதின் மூலம் அவர்களை அரசியல் படுத்த வேண்டும், அந்த அரசியல் வர்க்க அரசியலாக இருக்க வேண்டும்.
மக்களை அரசியல் படுத்துவது எப்படி? வர்க்கப்படுத்துவது எப்படி? என்ற கேள்வி நம்மிடையே பரவலாகக் கேட்கப்படுகிறது. இதற்கான பதிலாக மாவோ கூறுவதை பார்ப்போம்.
“மக்கள் திரளுடன் இணைய வேண்டுமானால், மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களின்படி செயல்பட வேண்டும். மக்களுக்காக செய்யும் வேலைகள் அனைத்தும், அவர்களின் தேவையிலிருந்து தொடங்க வேண்டும். எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்து தொடங்கக் கூடாது. பல சந்தர்ப்பங்களில், புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட்டமாற்றம் தேவைப்படுகின்றது. ஆனால் அக நிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமது வேலைகள் மூலம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதைச் செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்திற்கு வரும் வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லா விட்டால் நாம் மக்கள் திரளிடமிருந்து தனிமை படுத்தப்பட்டு விடுவோம். மக்கள் திரள் பங்கு பெற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணர்ந்து, செய்ய விரும்பா விட்டால், அது வெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வி அடைந்துவிடும்..........
இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு: ஒன்று:- மக்கள் திரளின் உண்மையான தேவைகள் அறிந்து செயல்படுத்தாமல், அவர்களின் தேவையை நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு:- மக்கள் திரளின் சுய விருப்பம்; நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதை தயார் செய்வதற்கு பதில் அவர்கள் தமது மனதை தாமே திடப்படுத்த உதவிட வேண்டும்.”
(கலாச்சார பணியில் ஐக்கிய முன்னணி - அக்டோபர் 30, 1944,
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி. III)
மிகவும் எளிமையாகவும் சரியாகவும் மாவோ கூறிவிட்டார் இதற்கு விளக்கம் தேவையில்லை. இருந்தாலும் அதன் சாரத்தை தொகுத்துப் பார்ப்போம்.
கம்யூனிஸ்டுகள் மக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமானால், மக்களின் தேவைகளை அறிந்து அதனை மக்களுக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும். மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதின் மூலம் தான் அவர்களை நம் பக்கம் ஈர்க்க முடியும். மக்களுக்குத் தேவையான ஒன்றை நாம் அறிந்து கொண்டோம் என்பதற்காக அதை அவர்களிடம் திணிக்கக்கூடாது. அவர்கள் அதனை உணரும்படி நாம் செயற்பட வேண்டும். அதனை அவர்கள் புரிந்து கொள்ளும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று முந்திரி கொட்டை போல் செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் மக்களிடம் இருந்து தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம்.
மக்களைப் புறக்கணித்து செய்யும் எந்த நல்லவையானாலும் அது தோல்வி அடையும். சமூகத்தின் தேவையை மக்கள் உணரச் செய்ய வேண்டும் என்றால் அதை அவர்களிடம் பரப்புரை செய்தால் மட்டும் போதாது, அதை அவர்களே உணரும்படி அரசியல் படுத்த வேண்டும். எதையுமே மக்களிடம் திணிக்காமல் அதை அவர்களே உணரும் வகையில் செயல்பட வேண்டும். மக்கள் நடைமுறையில் இருந்தே கற்கின்றனர், அவர்களுக்கு மார்க்சிய நூல்களில் இருந்து பாடம் நடத்தக்கூடாது. அனுபவமே அவர்களுக்கு சிறந்தப் பாடம். அதை சுட்டிக்காட்டினாலேயே போதும்.
“பொதுமக்கள் இன்னும் விழித்துக் கொள்ளாத நிலையில், நாம் தாக்குதலை நடத்த முயன்றால் அது சாகசவாதமாகும். மக்களின் விருப்பத்துக்கு எதிராக எதை செய்தாலும் அது தோல்வி அடையும். பொதுமக்கள் முன்னேற்றத்தைக் கோரும் போது நாம் முன்னேறா விட்டால் அது வலது சந்தர்ப்பவாதமாகும்.”
(ஷான்சி-சுயுவான் டெய்லியின் தலையங்கப்
பணியாளர்களுடன் ஒர் உரையாடல் - ஏப்ரல் 2, I948)
அதாவது, மக்களிடம் காணப்படும் வளர்ச்சியைவிட கட்சி பின்தங்கி இருந்தால் அது வலது சந்தர்ப்பமாக மாறிவிடும்.
கம்யூனிச இயக்கத்தில் இடது சாகசவாதத்திற்கும் வலது சந்தர்ப்பவாதத்துக்கும் இடமே கொடுக்கக்கூடாது. இந்த இரு போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
அனைத்து வேலைகளிலும் கட்டளைவாதம் (Commandism) தவறானது என்கிறார் மாவோ. பொது மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை கடந்து நமது செயல்களை அமைத்துக் கொள்ளக்கூடாது. கம்யூனிஸ்டுகளாகிய நாம் அறிந்து கொண்டவைகளை, பொதுமக்கள் அறிந்து கொண்டிருப்பர் என்று எண்ணிவிடமுடியாது. மக்களின் அறிவுமட்டத்துக்கு தாழ்ந்திடவும் கூடாது, அவர்களின் அறிவுமட்டத்தை வளர்க்காமலும் இருக்கவும் கூடாது.
மக்களிடம் சென்று அவர்களை ஆராய்ந்து அவர்களின் நிலைமைகளில் இருந்து நமது பணிகளைத் தொடங்க வேண்டும்.
மக்கள் நிலையினை அறிவதிலும், அதன் வழியில் அவர்களை தெளிவு பெறச் செய்வதும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமை ஆகும்.
இதனை செய்வதற்கு மார்க்சிய அடிப்படைகள் நமக்கு துணைபுரிகிறது. மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. மார்க்சியத்தில் உள்ள தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகிய மூன்று உள்ளடக்கத்தின் அடிப்படைகளின் புரிதல் அனைவருக்கும் அவசியமாகும். இந்த அடிப்படைப் புரிதலை வளர்ப்பதற்கே இந்த வகுப்பும் இது போன்ற வகுப்புகளும் நடைபெறுகிறது.
மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
“கட்சியின் கொள்கையை மக்களின் செயலாக மாற்றுவதில் சிறந்து விளங்குவது, நாம் நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு போராட்டத்தையும் பற்றி நமது முன்னணி தோழர்களை மட்டுமல்ல, பரந்துபட்ட மக்களும் புரிந்து கொண்டு தேர்ச்சி பெறச் செய்வதில் திறமை பெற்றவர்களாக இருப்பது-
இதுவே மார்க்சிய லெனினியம் தழுவிய தலைமைக் கலை ஆகும். நமது செயலில் தவறு இழைக்காமல் இருக்கின்றோமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஓர் எல்லைக் கோடு இது.”
("ஷான்சி-சுயுவான் டெய்லியின் தலையங்கப்
பணியாளர்களுடன் ஒர் உரையாடல்- ஏப்ரல் 2, 1948)
இங்கே மாவோ கூறியதை மனதில் கொண்டு திறமையான கம்யூனிஸ்ட்டாக செயல்படுவதற்கு மார்க்சிய லெனினியத்தை நன்றாகப் படிக்க வேண்டும். மார்க்சிய வழிகாட்டுதலின்படி செல்படுகிற கம்யூனிஸ்டே தவறிழைக்காமல் வெற்றி பெற முடியும்.
“முன்னணிக்குழு எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் அதன் நடவடிக்கை மக்களின் செயல்பாட்டுடன் இணையாவிட்டால், அது ஒரு சில நபர்களின் பயனற்ற முயற்சியாகவே போய்விடும். மறுபுறம் பரந்துபட்ட மக்கள் மட்டும் ஊக்கமாக இருந்து மக்களின் நடவடிக்கையைத் தகுதியான முறையில் ஒழுங்கு செய்ய ஒரு பலமான தலைக்குழு இல்லாவிட்டால், மக்களின் செயல்பாடு நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது. சரியான திசையில் முன்னோக்கி கொண்டு செலுத்த முடியாது, மேல் மட்டத்திற்கு உயர்த்தப்பட முடியாது.”
(தலைமைத்துவ முறைகள் தொடர்பான சில கேள்விகள் - ஜூன் 1, 1943)
மக்களும் கம்யூனிஸ்ட் கடசியும் இணைந்து செயல்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் ஊக்கம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். அதனை கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு படுத்த வேண்டும், அரசியல் படுத்த வேண்டும், வர்க்கப் படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் தாங்களாகவே வர்க்கமாக இணைந்து கொள்ள மாட்டர்கள். அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
“மக்கள் திரள் வழி.” என்கிற தலைப்பில் மாவோவின் கருத்துக்கள் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்போடு நின்றுவிடாமல் மாவோவின் நூலைகளை முழுமையாகப் படித்து பயனடைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பன்னிரண்டாவது தலைப்பு, “அரசியல் நடவடிக்கை.”
இதுவும் ஒரு முக்கியமான தொகுப்பாகும்.
1957ஆம் ஆண்டில் மாவோ, மார்க்சியத்தை படிப்பதன் அவசியத்தைப் பற்றி கூறியுள்ளார். மாணவர்களும், அறிவுத்துறையினர்களும், அரசு ஊழியர்களும், கட்சியின் இளைஞர் சங்கமும், பள்ளி ஆசிரியர்களும் மார்க்சியத்தைப் படிக்க வேண்டும் என்கிறார் மாவோர். இதற்கு விளக்கம் தேவைப்படாது அப்படியே மாவோ கூறியதை பார்ப்போம்.
"மாணவர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் அண்மையில் சொந்த அரசியல் வேலையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டு, சில ஆரோக்கியமற்ற போக்குகளும் தோன்றியுள்ளன. அரசியல் பற்றியோ அல்லது தாய்நாட்டின் எதிர்காலம் பற்றியோ, மனிதகுலத்தின் இலட்சியங்கள் பற்றியோ அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை என்று சிலர் எண்ணுவது போல் தோன்றுகின்றது.
ஒரு காலத்தில் பொது வேட்கையோடு படித்த மார்க்சியம் இன்று அவ்வளவு பேஷனாக இல்லாதது போல் தோன்றுகின்றது. இத்தகைய நிலைமையை எதிர்நோக்கும் போது, நாம் நமது சித்தாந்த அரசியல் வேலையைப் பலப்படுத்த வேண்டும். மாணவர்களாயினும் சரி, அறிவுத்துறையினராயினும் சரி விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். தங்களுக்கு உரிய சிறப்பான பாடங்களை படிக்கும் அதே வேளையில், அவர்கள் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதாவது, அவர்கள் மார்க்சியம், நடப்பு விவகாரங்கள், அரசியல் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். சரியான அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது. உயிரில்லாதிருப் பதற்குச் சமம்....... எல்லா துறைகளும் நிறுவனங்களும் சித்தாந்த, அரசியல் வேலையிலுள்ள தமது பொறுப்புகளுக்குத் தோள் கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி, இளைஞர் சங்கம், இவ்வேலைக்குப் பொறுப்பான அரசாங்க துறைகள் ஆகியவற்றிற்கும், குறிப்பாக
கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட இது பொருந்தும்"
(மக்கள் மத்தியில் உள்ள முரன்பாடுகளைச்
சரியாகக் கையாள்வது பற்றி - 27 பிப்ரவரி, 1957)
மாவோ, மார்க்சியக் கல்வியின் அவசியத்தை தெளிவாகப் புரிய வைத்துள்ளார்.
சீனக் கம்யூனிட் கட்சியில், ராணுவக் கண்ணோட்டம் மேலோங்கியுள்ளதை மாவோ கண்டிக்கிறார். ராணுவத்தை அரசியலே தலைமை தாங்க வேண்டும். ராணுவக் கண்ணோட்டம் அரசியல் செயல்பாட்டுக்கு தீங்கானதாகும். அரசியலற்ற ராணுவக் கண்ணோட்டம் எந்தப் பயனையும் பெற்றுத் தராது. ராணுவத்தை கட்சி வழிநடத்த வேண்டும்.
"செம்படையில் உள்ள பல தோழர்களிடையே முற்றிலும் இராணுவக் கண்ணோட்டம் மிகவும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது பின்வருமாறு வெளிப்படுகிறது. இந்த தோழர்கள் இராணுவ விவகாரங்களையும் அரசியலையும் ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கருதுகின்றனர் மற்றும் இராணுவ விவகாரங்கள் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒருவழிமுறை என்பதை அங்கீகரிக்க மறுக்கின்றனர். சிலர், "நீங்கள் இராணுவ ரீதியாக நல்லவராக இருந்தால், இயற்கையாகவே நீங்கள் அரசியல் ரீதியாக நல்லவர்; இராணுவ ரீதியாக நீங்கள் நன்றாக இல்லாவிட்டால், நீங்கள் அரசியல் ரீதியாக நல்லவராக இருக்க முடியாது"
-இது ஒரு படி மேலே சென்று அரசியலுக்கு, ராணுவ விவகாரங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று கருதுவதாகும்."
(கட்சியில் தவறான கருத்துக்களை சரிசெய்வது பற்றி - டிசம்பர் 1929)
அரசியலுக்கு, ராணுவம் தலைமை தாங்கினால் இடது சாகசாவதத்துக்கு கட்சி சென்றுவிடும். கட்சி தான் அனைத்தையும் தலைமை தாங்க வேண்டும்.
பதிமூன்றாவது தலைப்பு, “அதிகாரிகளுக்கும் படையினருக்கும் இடையிலுள்ள உறவு.”
கட்சிப் படையினரிடம் இரண்டு கொள்கைகள் இருப்பதாக மாவோ கூறுகிறார். முதலாவது, எதிரிகள் மீது ஈவிருக்கமற்றவர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும், அவர்களை அடக்கித் துடைத்தொழிக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள், நமது தோழர்கள், நமது உயர் அதிகாரிகள் ஆகியோர்களுடன் கம்யூனிஸ்டுகள் ஐக்கியப்பட வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களிடம் செயல்படும் போது இணக்கமாக இருக்க வேண்டும், பயிற்றுவிப்பது என்கிற ஜனநாயக முறையைக் கையாள வேண்டும். எந்தவிதமான கட்டளைவாதமாக இருக்கக்கூடாது.
எதிரிகளையும் தோழர்களையும் அணுகுவதில் வேறுபாடு இருக்க வேண்டும். தோழர்களிடம் எதிரிகளை போல் பகைமையாக அணுகக்கூடாது. நட்பு முரணையும் பகை முரணையும் நன்றாக பிரித்தறிய வேண்டும்.
பதினான்காவது தலைப்பு, “இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள்.”
கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மக்களிடம் நல்ல உறவுகளை பேண வேண்டும். மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எந்தளவுக்கு மக்கள் திரளுடன் ஐக்கியப்படுகிறார்களோ அந்தளவுக்கு வெற்றி சாத்தியப்படும்.
கம்யூனிஸ்டுகள் மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும். மக்களின் வற்றாத படைப்பாற்றலை உறுதியாக நம்ப வேண்டும். அவர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான் எதிரியை நம்மால் அழித்தொழிக்க முடியும் என்கிறார் மாவோ.
மக்களோடு இணக்கமாகவும் எதிரிகளோடு பிணக்கமாகவும் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment